“சித்திரம் மளிகைக்கடை” என்றால், 1970களில், மேல சித்திரை வீதியில், கனப்ரஸித்தம். நான்கு தலைமுறையாக அந்த கடை இயங்கி வருவதால் அனைவர்க்கும் பழக்கமான கடை. அதுமட்டுமன்றி அங்கு துடைப்பம் முதல் எலிபாஷாணம் வரை அனைத்தும் கிடைக்கும். இல்லாத பொருளே கிடையாது என்றால் பார்த்துக்கோங்களேன் !!
ராமானுஜம் ஐயங்கார்தான் தற்போதைய ஆல் இன் ஆல் நிர்வாகி. தங்கமான மனிதர், ஒரு வெளியூர்காரன் ‘கம்பி ஆணி’ வேண்டும் என்று கேட்டதால், பஜார் வரைக்கும் ஆள் அனுப்பி, வாங்கி கொடுத்து அனுப்பியவர்.!பரோபகாரி! அனைவரிடமும் அன்புடன் பேசி பழகுபவர். மணமாகி 25ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு இல்லாதது ஒன்றுதான், அவருக்கு பெரிய வருத்தம்!
அவர் கடையில் பொட்டலம் கட்டும், எடுபிடி பையன்(18 வயசு வாலிபன்) “திரு.அண்டா” அவர்கள் தான் நம் கதாநாயகன். கருப்பா, பல்லெடுப்பா, ஒல்லியா, உயரமா நாகேஷ் கணக்கில் இருப்பான் என்று வைத்து கொள்ளுங்களேன்!! வெள்ளந்தியான பையன், கல்லாவில் இலட்சம் இருந்தாலும் தொடமாட்டான். கடும் உழைப்பாளி. என்ன, கொஞ்சம் மந்த புத்தி கொண்ட மண்டூக பேர்வழி.
நம்ம ஐயங்காருக்கு, அவன் மேல கொள்ளை பிரியம். சாப்பாட்டுக்கே வழியின்றி, காலனி வாசியான அவனை ஏழு வயது முதல் பரிதாபப்பட்டு ஏற்று கொண்ட ஐயங்கார், இன்று வரை அவனை தன் மகனைப்போல பாவித்தார். பெயருக்கேற்றார் போல் பரந்த மனம் கொண்ட ஐயங்கார், ஒரு நண்பனை போல், ஊர் விஷயமெல்லாம் அவனிடம் கேட்டுவாங்கி, ரசித்து சிரிப்பார். அவன் பெயர் என்னவென்று, இன்றுவரை யாருக்குமே தெரியாது., சிறுவயது முதலே ஓரு அண்டா நிறைய சோறு தின்பதால் “அண்டா” என்று, அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டான்.!
இரவில் கடைதான் அவன் பள்ளியறை. அய்யங்காரும், மாமியும், எவ்ளோ சொல்லியும், அவன் வீட்டில் உறங்குவதில்லை. அந்த அக்ரஹாரத்து, ஆச்சார்யர்கள் எவ்ளோ கண்டித்தும், அதை ஐயங்கார் சிறிதும் சட்டை பண்ணாமல், அலட்சியப்படுத்தி, அவனை தன் தோழனாகவே, பாசத்துடன் நடத்தினார்.
ஒருநாள் மதிய வேளையில், சற்று ஓய்வாக இருந்த நேரத்தில், ஐயங்கார் வழக்கம் போல் அவனிடம் ஊர் வம்பு பேசியபடி “அட இவனே (இப்படித்தான் செல்லமாக அண்டாவை கூப்பிடுவார்), நம்ம லட்சுமி அம்மாளோட ஒரே மகள் ஆண்டாள, நேத்துல இருந்து காணோமாமே!,… அதாண்டா சிவப்பா அழகா,, பாவாடசட்ட போட்டுண்டு, சாமான் வாங்க நம்ம கடைக்கு அடிக்கடி வந்து, உன்ன திட்டிண்டே இருப்பாளே அவதாண்டா ! பாவண்டா லஷ்மி அம்மா!,
‘புருஷன் இல்லாம, காசுப்பணமும் இல்லாம, எப்படிதான் எம்பொண்ண புக்காத்துக்கு அனுப்ப போறனோன்னு? ‘ என்கிட்டே கூட அடிக்கடி பொலம்பின்றிப்பா .!.. என்னடா நான் பாட்டுக்கு பேசிண்டே இருக்கேன் , நீ ஒரு பதிலும் சொல்ல மாட்டேங்கிறே? ” என்று அவனை பார்க்க… அவனோ எங்கோ பார்த்தபடி, “ஐயா(இப்படித்தான் அவரை, அன்பா கூப்பிடுவான்), சாப்பாட்டுக்கு நேரமாவுது இல்ல, வீட்டுக்கு கிளம்புங்க, அம்மா தேடுவாங்க உங்கள.. “என கூற, “ஆமாண்டா, நாழியானது தெரியாம நான் பாட்டுண்டு பேசின்றிக்கேன்!.. சரி சரி நான் போய் சாப்டுட்டு வந்துர்ரேன். அப்புறம் நீ போய் சாப்டு” என்றபடி வீட்டுக்கு கிளம்பினார்..
வெகு நேரம் ஆகியும் அவன் சாப்பிட வராததால், என்ன ஆச்சோ என்ற பதட்டத்துடன், கடைக்கு வந்து பார்த்த, அய்யங்காருக்கு, தூக்கி வாரி போட்டது.
அவனை கடையில் காணாததால் கலரவரப்பட்டார். கல்லா வேறு காலியாக இருந்தது., அவருக்கு மேலும் அதிர்ச்சியூட்டியது.
அவனை தேடி கண்டு பிடிக்க , போலீசில் புகார் கொடுக்கலாமா? என யோசித்த ஐயங்கார், பிறகு அவனை போலீஸ் துன்புறுத்துவார்களோ? என பரிதாபப்பட்டு, யாரிடமும் எதுவும் சொல்லாமல் அடங்கிப்போனார்.ஆனால் அண்டாவை, தன் நண்பர்கள் மூலம் தேடிகொண்டேதான் இருந்தார். அவன் பிரிவை அவரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. சில நாள், அவனை நினைத்து தனிமையில் அழுவார். நாட்கள் ஓடின. பாவம் ஏழை லக்ஷ்மி அம்மாள், சில பல நாட்கள் மகளை தேடி, பிறகு ஓய்ந்து போனாள் . ஐயங்காரும், அவனை தேடித்தேடி, அவன் நினைவாகவே மிகவும் வருந்தி, கொண்டிருந்தார். கடவுளிடம் “அவன் எங்கிருந்தாலும் ஷேமமா இருக்கணும்னு”தினம் தினம் பிரார்த்தனை செய்வார்!
மூன்றாண்டுகளுக்கு பிறகு,
ஒரு நாள்…..
அவருக்கு, ஒரு மணி ஆடர் வந்தது.அதனுடன் ஒரு கடிதமும் வந்தது.
அந்த கடிதத்தில் , “ஐயா! என்னை மன்னிச்சிருங்க. நான்தான் ஆண்டாளோட ஓடிட்டேன். இப்ப மெட்ராஸ்ல மளிகை கடை போட்டு வசதியா இருக்கோம். ஓரு பொன் கொழந்த பொறந்து இருக்கு. நீங்க ஒரு நட எங்கள வந்து பார்த்து ஆசிர்வாதம் செய்யணும். இத்த்துடன், நான் கொண்டு சென்ற கல்லா காசு நானூத்தி ஐம்பதை, மணிஆடர் செய்துள்ளேன். பெற்று கொண்டு, என்னை மீண்டும் மன்னிக்குமாறு கேட்டு கொள்கிறேன்!” என, ஆண்டாளை எழுத சொல்லி(அவனுக்கு படிப்பு பூஜ்ஜியம்) கடிதம் போட்டிருந்தான்.
ஐயங்கார் மனம் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தது. கடிதத்தை பற்றி யாரிடமும் மூச்சு விடாமல், அடுத்த நாளே, மனைவியிடம், வியாபாரம் விஷயமா மெட்ராஸ் போவதாக கூறி, பத்தாயிரம் ரூபாய் பணக்கட்டுடன், தன் மகன், மருமகள், பேத்தியை காண ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் புறப்பட்டார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.