நூல் அறிமுகம்: ’திசையறியாப்புள்’ – ரமேஷ் கல்யாண் சிறுகதைகளில் விடை தேடும் கேள்விகள்… — கமலாலயன்  நூல்: திசையறியாப் புள் 
ஆசிரியர்: ரமேஷ் கல்யாண்
பவித்ரா பதிப்பகம் 
வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம், கோவை

“நான் வாழும், காணும், அறியும் வாழ்க்கையின் அனுபவிப்பு இழைகளால் புனைந்த யதார்த்த வகை கதைகளே” ரமேஷ் கல்யாணின் கதைகள். இது அவரே தன் கதைகள் குறித்து முன்வைக்கும் அறிமுகக்குறிப்பு. பசி, தூக்கம், கோபம், காமம், ஏமாற்றம், விரக்தி, துரோகம், ஆச்சரியம், பிறப்பு, மரணம் – இவற்றில் எது எதார்த்தம் மீறியது ? எது வாழ்க்கைக்கு அப்பாலுள்ளது? இந்தக் கேள்விக்கு விடை தேடும் முயற்சியின் வெளிப்பாடாகவே ரமேஷ் கல்யாணின் கதைகள் அமைந்திருக்கின்றன எனத்தோன்றுகிறது. 

சிறுவாணி நீரின் சுவை எப்படிப்பட்டது என கோயமுத்தூர்க்காரர்கள் நன்கு அறிவார்கள். அந்தப்பெயரிலேயே இயங்கும் வாசகர் வ்மையம், நல்ல நூல்களின் நயங்களைக் கண்டறிந்து தாம் கண்ட சுவையை அனைவரும் உணர வேண்டுமென விரும்புகிறது. அதற்கு ஏதுவாக, ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய நூலை ‘சிறுவாணி வாசகர் மையம்’ வெளியீடாகப் பதிப்பித்துக் கொண்டு வருகிறது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இப்படி மாதா மாதம் புதியதொரு நூல் – சிறுகதை, கட்டுரை இப்படி வெவ்வேறு வகைமையில் – இந்த மையத்தின் மூலம் வெளிவந்து கொண்டிருப்பதை அறியும் போது பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது. வாசிப்பதற்கு என ஒரு குழுவாக இணைவதே பெரிய விஷயம். வாசித்தவற்றின் நயங்களை பிறருக்குக் கூறுவதும், அவற்றைப் பரவலாக அறியச் செய்வதும் இன்னும் சிறப்பான அம்சம். அத்தகைய படைப்புகளைத் தமது குழுவின் மூலமே மாதமொரு நூலாக வெளிக்கொணர்வது எல்லாவற்றைக் காட்டிலும் சிறப்பு. 

சிறுவாணி வாசகர் மைய வெளியீடுகளில் ரமேஷ் கல்யாணின் சிறுகதைத் தொகுப்பு, மூன்றாமாண்டின் மூன்றாவது நூலாக வந்திருக்கிறது. பதிப்புரையில் சிறுவாணி வாசகர் மையம் பின்வருமாறு கூறியிருப்பது கவனத்திற்குரியது: “ எளிமையும், எதார்த்தமும் கொண்ட இவரது கதைகள் வாழ்வில் சந்திக்கும் பல்வேறு மனிதர்களை நமக்கு அறிமுகம் செய்கின்றன. இவற்றின் நுணுக்கமான உணர்வுகளை வாசகர்கள் அறிய முடியும்…” 

ஆம்; இக்கதைகளில் வரும் மாணவர்கள் யாரும் அதிமானுடப்பிறவிகள் அல்லர். அன்றாட வாழ்க்கையில், தெருக்களிலோ, பயணங்களின் போதோ, அண்டை அயலிலோ நாம் அடிக்கடி சந்திக்கக்கூடிய இயல்பான மனிதர்களே அவர்கள். எனில், இவர்கள் எந்த அடிப்படையில் கதை வடிவம் பெறுகின்றனர்? 

நாமறியாத வண்ணங்களைக் கொண்டு ஓர் ஓவியம் தீட்டுதல் என்பது நமக்கு உடன்பாடற்றதாகவும், சாத்தியமற்றதாகவுமே அமையும் என்ற தெளிவு ரமேஷ் கல்யாணுக்கு இருக்கிறது. நிறையோ, குறையோ, இவரைத் தனக்குள் வாங்கிக்கொண்டதும் தன்னை உருவாக்கியதுமான தன் குடும்பத்தை அன்புடன் நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியடைகிறார் இவர். அவர்களுக்கு எதைக் கொடுத்தாலும் ஈடாகாது தான் – அன்பு ஒன்றைத்தவிர! இந்தக் குறிப்பைப் படிக்கும் எவர் ஒருவரும், தமது சொந்த அனுபவங்களையும் உரசிப்பார்த்து மனம் நெகிழாமல் இருக்க முடியாது. தொகுப்பில் பதினேழு கதைகள் இருக்கின்றன. லா.ச.ரா.சப்தரிஷி அவர்கள், தமது வாசிப்பு அனுபவத்தில் ஆறு கதைகளின் மைய இழைகளைச் சரடாக்கி கோடிகாட்டி விட்டு, ’மிச்சத்தை அச்சுத்திரையில் காண்க…’என்று வாசகர்களை ஆற்றுப்படுத்தி விட்டு வேடிக்கை பார்க்கிறார். மனோதர்மமிக்க ஒரு கலைஞன்  தான் மிக ரசித்து, இலயித்துப் போகும் இராகங்களை முணுமுணுப்பான குரலில் கோடி காட்டிவிட்டுப்போவது போலத்தான் இதுவும்.

 ‘விடுதலை’ கதையின் கிளி, விடுவிக்கப்பட்ட பின்பு, தான் உணர்ந்ததைத் தத்துவார்த்தமாகச் சொல்லுவதைக் கேளுங்கள் :” இது பிரிவா? விடுதலையா? இரண்டும் வெவ்வேறா? எதிலிருந்து யாருக்கு? எஜமானரைத் தவிர, ரங்காவைத் தவிர எனக்கு யாரையுமே தெரியாது. இப்போது என்னால் பறக்கவும் முடியவில்லை; பறக்கத் தெரியவுமில்லை !” –பாவம், அது அறிந்த உலகம் ஒரு சதுர வடிவத் திறப்பு மட்டும்தானே? சதுர வடிவ வானம், சதுர வடிவ பூமி, சதுர வடிவ வெய்யில், சதுர வடிவ மழை… சதுர மூலைகளில் அது திரும்பும்போதெல்லாம் வால் இடித்துக்கொள்கிறது; ஒரு முறை வலம் வந்தால் நான்கு முறை இடிக்கிறது… 

இந்தக்கதையின் முடிவில் கிளியின் அனுபவத்தைப் படிக்கையில் எப்போதோ படித்த ஒரு நவீன கவிதைதான் நினைவுக்கு வந்தது : “மேற்கே நடந்தேன், இடித்தது ஒரு சுவர். கிழக்கே நடந்தேன், இடித்தது ஒரு சுவர். வடக்கே நடந்தேன், இடித்தது ஒரு சுவர். தெற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர். எழும்பிக் குதித்தேன் – இடித்தது – மேலே கூரை.” போகும் திசையெல்லாம் தடுப்புச்சுவர்களும், தலைக்கு மேலே கூரையும் மனிதர்களை முடக்கும் நிலையைக் குறியீடுகளாகக் காட்டும் கவிதை அது. ரமேஷ் கல்யாணின் கதையில் ஒரு கிளி இந்தக்கருத்தைச் சொல்லுவது ஆழ்ந்த சிந்தனைகளைக் கிளறுகிறது. 

‘போன்சாய் மனங்கள்’-சிறு சிறு தொட்டிகளுக்குள் குறுக்கி வளர்க்கப்படும் செடிகள் போன்றவர்களாக மனிதர்களும் ஆகிப்போனால் என்னாகும்? ரமேஷ் கல்யாணின் கதையாக வடிவம் பெறுமோ? இது ஒரு வடிவம்; வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு மனித மனங்கள் வெவ்வேறு விதங்களில் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இந்தக்கதையின் மோகனும், மாலினியும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதை. ’சுதந்திரத்தின் விளிம்பை அறியாத மாலினிக்கும், அதன் பரப்பை விரிக்க முடியாத மாமனார்-மாமியாருக்கும் இடையே விழுந்த பள்ளத்தின் கதையும் கூட.’ பெற்றோரோடு சேர்ந்து இருக்க வேண்டும்’ என்று சொல்லுகிற மோகனிடம், ”ஏன், என் அப்பா, அம்மாவ விட்டுட்டு நா இல்லியா?” என்று கேட்கும் மாலினியின் கேள்வி ஒருவகையில் மிக நியாயமான ஒரு கேள்வி தானே? நிஜத்தின் சுடர்கள் மனதைப் பொசுக்குகையில் தப்பித்துத் தூர ஓட முயல்வதோ, அழுவதோ, பிரச்சினைகளைத் தள்ளிப்போடுவதோ தீர்வாகாது என்பதை எதிர்மறை நிலைப்பாட்டிலிருந்து உணர்த்துவதாக கதை முடிகிறது என நான் புரிந்து கொள்கிறேன். 

“விருந்தினர்கள் = தொலைக்காட்சித் தொடர்கள் – என்றாலே கதையின் மையம் பிடிபட்டுவிடும். குணசேகர் – ராதிகா தம்பதிகளும், அத்தையும் எதிர்கொள்ளும் உண்மையான விருந்தினர்களின் பண்பு நலன்களைப்பற்றி வேண்டுமென்றே பொய்யான தகவல்களைச் சொல்லி, அதைக்கொண்டே நிழல் விருந்தினர்களாகத் தொலைக்காட்சி மூலம் வீட்டு ஹாலில் இருபத்தி நான்கு மணி நேரமும் நிரம்பி வழியும் வேண்டாத, விரும்பத்தகாத ஆட்களை அம்பலப்படுத்துகிறது இக்கதை. பையனின் கூச்சம் போர்த்திய அமைதியைக் குலைத்து அர்த்தமுள்ள உரையாடலை நிகழ்த்துகிற சுமதி நமது கவனத்தைப் போகிற போக்கில் ஈர்த்து விடுகிறாள்: “மரங்களில் இலைகள் தாம் அசைகின்றன. வேர்கள் அசைவதில்லை” என்பதைக் கண்டறியவும் கூட ஒரு பக்குவமான அணுகு முறையும், பார்வையும் தேவையல்லவா? ‘நியூரான் கொலைகள்’ –கதையின் ராஜா ராமன், மாறுதலற்ற – நேர்த்தியான நேர்க்கோட்டு வாழ்க்கை வாழ்கிறவர். அவர் சிரிக்கையில் கூட முகம் தான் சிரிக்கும்; குரல் இருக்காது. அப்படிப்பட்டவருக்கு மறதி நோய் – நியூரான்களின் படிப்படியான சாவு நேர்கிறது. ”குடும்ப அமைப்பின் சிதைவில், வாழ்க்கை முறைகள் மாற மாற, முதியவர்களுக்குத் தேவை ஓய்வு ஒன்றே என்பதாகக் கற்பிதம் நிரம்பி, சும்மா இருந்தாலே போதும் என்று சொல்லிச் சொல்லி வசதிங்கற பேர்ல தனிமைல வச்சு, எப்பவோ சாகப்போற நியூரானை நாமளே மெதுமெதுவாக் கொன்னுடறோம்…” என்றொரு விளக்கம் கதையில் வருகிறது.. வாசுவுக்கு அது ஏனோ இம்சையாக இருக்கிறது. ஆனால், இப்படி விளக்குவதற்கு ஒரு கனிந்து, பக்குவமான மனம் வாய்க்க வேண்டும். சிவகுருவின் குரலில் ரமேஷ் கல்யானின் மனமே வெளிப்படுகிறது எனத் தோன்றுகிறது. அவருக்கு இந்த மனம் எப்போதும் வாய்த்திருக்க விரும்புகிறேன். தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த சில கதைகளுள் இதுவும் ஒன்று (நானும் முதுமை அடைந்து விட்டேன் என்பதாலோ?).

கல்லுப்பிள்ளையார் – “ தப்பா எடுத்துக்காதீங்க. ஒரு பத்து ரூபா தந்தீங்கன்னா பாப்பாவுக்குப் பால் வாங்கீட்டுப் போயிருவேன்…” என்று கையேந்துகிற முத்தலீஃப் பாயிடம் தான் தனது மகளின் வளைகாப்புக்காகக் கடன் வாங்கிக் கொண்டு வரும் பணத்தை அப்படியே தூக்கிக்கொடுத்துவிட்டு வீட்டுக்கு வெறுங்கையுடன் திரும்புகிறார் அப்பா. ’கல்லுக்குள் ஈரம்’ பெருவெள்ளமெனக் கரையுடைத்துப் பாய்கிற பேரோசையை அவருடைய உடைந்து அழும் குரலில் கேட்டு உறைந்து போகிறோம் நாம். 

‘காற்றின் விதைகள்’ மற்றொரு முதுமை வாழ்க்கையின் சித்திரம். 

’விலகாத திரை’யின் கண்கட்டு வித்தைக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டே இருக்கையில், கதையின் கடைசிப்பத்தியில் பையன் எழுப்புகிற கேள்வி, திரையைக் கிழிக்க முற்படும் இளம்குரலாய் எழுகிறது.வழக்கம் போல், ”வாய மூடிட்டு உள்ள போடா கடங்காரா !” என்று அந்தக்குரலை அடக்கி விடுகிறோம். அதிலும் கூட, ‘கால அலம்பிட்டு உள்ள போடா’ என்று ஒரு பஞ்ச் வேறு ! 

‘அபேதம்’ கதையில் சில விலங்குகள் வருகின்றன.’தேவர் ஃபில்ம்ஸ்’ பாட்டியின் கதைகளில் வரும் விலங்குகள் அவை.அவற்றைப்பற்றி குழந்தைகளின் மனங்களில் பதிந்து போகிற உணர்வுகளின் உச்சனிலை வெளிப்பாடு – மோட்டார் ரூமில் குட்டி போட்டிருக்கும் பூனையின் குட்டிகளுக்குப் பிறந்தனாள் கொண்டாட்டம்தான். 

தொகுப்பின் தலைப்புக்கதை ‘திசையறியாப்புள்’. பெற்றோருக்கு இடையே நிகழும் உறவுச்சிக்கல்களின் மோதல்களால் படிப்பு தடைப்பட்டுப் போகும் நினைவின் கண்ணீரைப் பதிவு செய்கிறது.” எங்க அம்மா சாவல்ல டீச்சர்…!” என்று உண்மையைச் சொல்லி விட்டு வெடித்து அழுகிற அந்தப்பெண் குழந்தைக்கு யாரால், என்ன ஆறுதலைச் சொல்லிவிட முடியும் ? அம்மா – அப்பா இருவருமே அவரவர் சுகமே பெரிதெனத் தடம் மாறிப்போன பின்னும், உயிரோடிருக்கும் அம்மாவைச் செத்துவிட்டதாகக் கூறி உதவித்தொகை வாங்க முடியாது என மறுத்து விடுகிற நீலாக்களை, நாம் தான் திசை தெரியாப் பறவைகளாக்கி திக்கற்றுப் போகச் செய்து விடுகிறோம். மனதில் வலியை நிரப்பி விடும் கதை/வாழ்க்கை இது ! 

இக்கதைகளைப் படித்து நீண்ட நாள்களாகி விட்ட பின்னும், இவற்றில் வரும் கதைமாந்தர்களை மறக்கவே முடியவில்லை. மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்த அந்த நினைவுகளை ஏனைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் இன்னும் பலரின் வாசிப்புக்கு ஒரு வாசல் திறக்குமே எனத் தோன்றியது. நல்ல நூல்கள் செய்யும் மாயம் இதுதானே?                                  

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)