கவிதை: காத்திருந்த தருணங்கள் — கி.ரமேஷ்

கவிதை: காத்திருந்த தருணங்கள் — கி.ரமேஷ்

காத்திருந்த தருணங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காத்திருந்த ஒவ்வொரு தருணமும்
வாழ்க்கையில் கடந்துதான் போய்விடுகிறது!
அலுவலகத்திலிருந்து அப்பா வரும்போது
பையிலிருந்த இனிப்புக்காய்க் காத்திருந்த
தருணங்கள்
பள்ளி ஆண்டு தொடங்குகையில்
புதிய நட்பு பூக்குமென்று
பறந்து சென்ற தருணங்கள்
பாஸாகி விடுவோம் என்று தெரிந்தும்
தபால்காரர் கொண்டு வந்த கார்டுக்காகக்
காத்திருந்த தருணங்கள்
உளம்கவர்ந்த முதல் காதலி
தெருவில் செல்லும்போது திரும்ப  மாட்டாளா என்று
ஏங்கித் தவித்த தருணங்கள்
கைத்தலம் பற்றவிருந்த பெண்ணின்
முதல் ஸ்பரிசத்துக்காய்
ஏங்கியிருந்த தருணங்கள்
அன்பு மகன் அவதரிக்க
ஆவலாய் ஆஸ்பத்திரி வாசலில்
அலைபாய்ந்த தருணங்கள்
ஆசை மகனின் சிரிப்பில் சொக்கி
அப்பா என்று எப்போது அழைப்பான் என்று
காத்திருந்த தருணங்கள்
ஆண்டு விழாவில் ஆடப் போகும் மகன்
அரங்கில் எப்போது வருவான் என்று
காத்திருந்த தருணங்கள்
இப்படி ஏங்கித் தவித்த தருணங்கள்
எத்தனையோ வாழ்வில் வந்து
கடந்துதான் போய்விட்டன!
மீண்டும் ஒருமுறை அந்தத் தருணம்
வராதா எனக் காத்திருக்கும் தருணம் இது.
என் நினைவில் மீண்டும் மீண்டும் எனக்காக
வந்து செல்லும் இத்தருணங்கள்!
               — கி.ரமேஷ்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *