ரானா அயூப்! ‘தெஹல்கா’ பத்திரிகையில் சுமார் 7 ஆண்டுகள் ‘சீனியர் எடிட்டர்’ ஆகப் பணியாற்றியவர். இவரின் செய்திக் கட்டுரைகளால் அன்று குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, குஜராத் கலவரம் தொடர்பாக 2010 முதல் 2011 வரை சுமார் எட்டு மாதங்கள், மைதிலி தியாகி என்ற பெயரில் ‘அண்டர்கவர் இன்வெஸ்டிகேஷன்’ மூலம் இவர் பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்தார். ‘குஜராத் ஃபைல்ஸ்: அனாடமி ஆஃப் எ கவர் அப்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியான அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு தமிழில் ‘குஜராத் கோப்புகள்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. புத்தக வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தவரிடம் பேசியதிலிருந்து…

குஜராத் கலவரங்கள் குறித்து சித்தார்த் வரதராஜன், மனோஜ் மிட்டா போன்ற பத்திரிகையாளர்கள் ஏற்கெனவே புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். உங்களின் புத்தகம், இவற்றிலிருந்து எவ்வாறு தனித்திருக்கிறது?

நீங்கள் சொன்ன பத்திரிகையாளர்கள் இந்தப் பிரச்சினையை ஆழமாகக் கையாண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் புத்தகங்கள், விசாரணையின்போது தங்களுக்குக் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் உருவானவை.

அதாவது, இந்தக் கலவரத்தில் நேரடியாகத் தொடர்புடைய அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்களின் குடும்பங்கள் ஆகியோர் என்னிடம் வாய்மொழியாகக் கூறிய உண்மைகளின் அடிப்படையில் உருவானது என் புத்தகம். அவர்கள் சொன்ன தகவல்களெல்லாம் ரெக்கார்டரில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளோ வழக்கறிஞர்களோ என்னை அணுகினால் அந்த ‘டேப்’புகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் ஆர்வம் காட்ட யாரும் தயாராக இல்லை!

உங்களின் ‘ஆபரேஷன்’ ஏன் ‘தெஹல்கா’வால் வெளியிடப் படவில்லை?

தன் ஆரம்ப காலங்களில் பாஜக முன்னாள் அமைச்சர் பங்காரு லக்ஷ்மண் தொடர்பான ஒரு புலனாய்வை வெளியிட்டது ‘தெஹல்கா’. அதைத் தொடர்ந்து அன்று அதிகார மையத்தைச் சேர்ந்தவர்களால் ‘தெஹல்கா’ மூடுவிழா கண்டது. அதுபோல இப்போதும் நடைபெறலாம் என்ற அச்ச உணர்வு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

உங்கள் கட்டுரைகளில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன என்பதாலேயே அவற்றை வெளியிடவில்லை என்று ‘தெஹல்கா’ நிறுவனர் தருண் தேஜ்பால் கூறியிருக்கிறாரே?

தருண் தேஜ்பாலிடமும், அப்போதைய நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரியிடமும் நான் இப்படி ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் என்று சொன்னபோது, உடனே அனுமதி கொடுத்தார்கள். அவ்வப்போது நான் அனுப்பிவைத்த ‘டேப்’புகளைப் பார்த்து மிகுந்த ஆச்சர்யத்துடன் என்னைப் பாராட்டியவர்களும் அவர்கள்தான். இப்போது வரை அந்த ‘டேப்’புகளின் ஒரு பிரதி அவர்களிடம் உள்ளது. என்னுடைய ‘ரிப்போர்டிங்’கில் அவர்கள் சொல்வதுபோல ஓட்டைகள் இருந்தால், அதை அவர்கள் என்னிடமே தெரிவித்திருக்கலாமே. நான் இதற்காகச் செலவிட்ட எட்டு மாதங்களில் ஒவ்வொரு நிமிடமும் நான் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருப்பதற்கான அனைத்துச் சாத்தியங்களும் இருந்தன. அப்படி என் உயிரைப் பணயம் வைத்து இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். இத்தனை நாட்களுக்குப் பிறகு, அதுவும் புத்தகம் வெளிவந்த பிறகு அவர்கள் இப்படி ஒரு காரணம் சொல்வது நியாயமற்றது. தவிர, இவற்றை வெளியிடலாமா, வேண்டாமா என்பது பற்றி அமித் ஷாவின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியிடம் ஒரு முறை கருத்து கேட்டார் தருண் தேஜ்பால். இதை என்னவென்று சொல்வது?

Why are journalists in India not generally respected on social ...

இந்தப் புத்தகம் வெளியானவுடன், உங்களுக்கு ஏதேனும் மிரட்டல்கள் வந்தனவா?

இந்தப் புத்தகம் வெளியான பிறகு குஜராத் அரசிடமிருந்து எந்த ஒரு மறுப்பும் வரவில்லை. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் குறைந்தபட்சம் என் மீது அவதூறு வழக்காவது தொடர்ந்திருக்கலாம். அப்படியும் எதுவும் செய்யவில்லை. எனில், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பவை உண்மையானவை என்பதற்கான சான்றுகள்தானே!

இதுபோன்ற அண்டர்கவர் ஆபரேஷன்களில் ஈடுபடுபவர்களுக்கு ‘செல்ஃப் பப்ளிஷிங்’ மட்டும்தான் தீர்வா?

இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்காக என்னுடைய சொந்தச் சேமிப்பு, தங்க நகைகளை அடமானம் வைத்தது, வங்கியிலிருந்து பெற்ற கடன் என மொத்தம் 7 லட்ச ரூபாயைச் செலவழித்திருக்கிறேன். தவிர, இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தும் கூட்டங்களுக்காக நான் பல இடங்களுக்கும் போக வேண்டியிருக்கிறது. அதற்கான செலவுகளுக்காகத் தெரிந்த சில நண்பர்களிடம் கடன் கேட்டிருக்கிறேன். இன்றைய ‘செஃல்ப் பப்ளிஷிங்’ இப்படித்தான் இருக்கிறது!

– ந.வினோத் குமார், தொடர்புக்கு: [email protected]

குஜராத் கோப்புகள் – ரானா அயூப்

தமிழில்: ச. வீரமணி

விலை: ரூ. 170

வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை-18

தொலைபேசி: 044-24332924

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *