ரங்கநாயகம்மாவின் “அம்மா” சிறுகதை
– தமிழில்: கௌரி கிருபானந்தன்
நீல நிறத்தில் சில்க் சட்டையும், சுங்குடி புடவையும் பேக் செய்ய வைத்து, அன்று சந்தோஷமாகக் கிளம்பினான் ஆனந்தன். வீட்டிற்கு யமுனா மகனைத் தூக்கிக்கொண்டு வந்து ஒரு வாரம் ஆகிறது. மகன் பூசிய உடலுடன், பெரிய கண்களுடன் யமுனா போலவே இருந்தான். கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தால் கலகலவென்று பொக்கை வாயுடன் சிரிப்பான். அவனை மார்போடு அணைத்துக் கொண்டால், “அடடா! தந்தையின் பாசம் போலும்!” என்று கிண்டல் செய்வாள் யமுனா. தொடக்கத்தில் கூச்சமாக இருந்தாலும், இந்த ஒரு வாரத்தில் அவனைத் தூக்கிக்கொண்டு செல்லம் கொஞ்சுவது பழகி விட்டது ஆனந்தனுக்கு.
யமுனாவிடம் ஒரு முறை, “நிலவு இவனைவிட அழகாக இருக்குமா என்ன?” என்றான்.
“இருக்காது. அவன் தந்தையை விடக் கூட அழகாக இருக்காது” என்றாள் யமுனா.
“அப்படி என்றால் உனக்கு என்ன வேண்டுமோ கேள். வாங்கித் தருகிறேன்.” பெருமையுடன் பார்த்தான் ஆனந்தன்.
“போதுமே. தினப்படி உடுத்த புடவை வேண்டுமென்று எத்தனை முறை சொல்லி இருக்கிறேன். மேலும் ஏதோ வரம் அளிப்பதுபோல் பேச்சைப் பார்?” என்றாள் லேசாகக் கடிந்துகொண்டே.
அன்று யமுனாவுகாகத்தான் புடவை வாங்கினான். மகனுக்கு ஸ்வெட்டர் கூட வாங்கினான். மகன் பிறந்தபிறகு தான் ரொம்ப மாறிவிட்டான். தான் தந்தை ஆகி விட்டான். குழந்தை, குடும்பப் பொறுப்புகள்! நினைத்துப் பார்க்கும்போது இனிமையாக இருந்தது. கடமைகள் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வம் பெறுகியது. மகனைப் படிக்க வைக்க வேண்டும். தன்னை விட நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். அவனை எப்படி வளர்ப்பது என்ற யோசனைதான் எப்போதும்!
யமுனா எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொல்வாள். “புடவை நன்றாக இருக்கிறது” என்றாள் சந்தோஷமாக. ஆனந்தனுக்கு நிம்மதியாக இருந்தது.
யமுனா காபி கொடுத்து விட்டு, “ஸ்வெட்டர் கூட நன்றாக இருக்கிறது” என்றாள்.
“நன்றாக இருப்பது மட்டுமே இல்லை. அதைப் போட்டுவிட்டு அவனைத் தனியாகப் படுக்க வைத்தால் குளிராது இல்லையா?”
“உங்களுக்கும் ஒரு ஸ்வெட்டர் வாங்கி இருந்தால் உங்களுக்கும் குளிராக இருக்காது.”
“நீ இதுபோல் சண்டித்தனம் செய்தால் சும்மா இருக்க மாட்டேன்.”
“மூன்று மாதங்கள் கூட நிரம்பாத குழந்தையின் மீது உங்களுக்கு ஏன் இந்தப் பொறாமை? அவன் அம்மாவிடம் படுத்துக் கொள்வான். ஸ்வெட்டர் எதுவும் தேவை இல்லாமல் அம்மாவின் நெஞ்சில் கதகதப்பாக உறங்குவான். இருபத்தி ஐந்து வயது நிரம்பிய பிறகும் உங்க அம்மா இன்றைக்கும் உங்களைக் கைக்குழந்தை போல் பார்த்துக் கொள்ளும்போது, நான் மட்டும் என் குழந்தையைப் பிரிந்து இருக்க வேண்டுமா? நான் மாட்டேன்.”
ஆனந்தன் சிரித்தான். சூடாக காபி அருந்திக்கொண்டிருந்தான். யமுனா ஸ்வெட்டரை பிரித்து மகனுக்கு அணிவித்தாள்.
“யமுனா! எங்க அம்மா நல்லவளா, மகனின் தாய் நல்லவளா?”
“உங்க அம்மாதான் நல்லவள்.”
“எதற்காகவாம்?”
“இதுநாள் வரையில் உங்களை வளர்த்து வருகிறாள் இல்லையா? என்னைப் பற்றி இப்பொழுதே எப்படி சொல்ல முடியும்?”
யமுனாவின் கண்களில் தாய்மை தளும்பிக் கொண்டிருதது. யமுனா மகனை மார்போடு அணைத்துக்கொண்டு நின்றிருந்தாள். ஆனந்தன் கண்ணிமைக்காமல் அந்தக் காட்சியைப் பார்த்தான். தன்னையும் அறியாமல் அருகில் சென்றான்.
“நானும் ஒரு பெண்ணாகப் பிறந்து தாயாக முடிந்தால்? அந்தச் சந்தோஷத்தை அம்மாக்கள் மட்டும்தான் உணரமுடியும்.” என்றான்.
யமுனா சிரித்தாள். மகனைத் தொட்டிலில் படுக்க வைத்துத் தட்டிக்கொண்டே சொன்னாள். “உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்கிறேன். வியந்து போகப் போறீங்க” என்றாள்.
‘அப்படியா!’ என்பதுபோல் பார்த்தான்.
“என் பேச்சை நம்பமாட்டீர்களோ என்னவோ.”
“சட்டென்று சொல்லு. வேடிக்கையான செய்தியா? சந்தோஷமா? கவலைதரும் செய்தியா?”
“வேடிக்கையான செய்தி இல்லை. ஆனால் அதிசயம்தான். கவலை தரும் செய்தி இல்லை, சந்தோஷம் தரக் கூடியதுதான்.”
“அப்படி என்னதான் செய்தி?”
“யோசித்துப் பாருங்களேன்?”
நெற்றியைச் சுளித்தான். “நீ எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. சினிமாவுக்கு போகலாம் வா. புதுப் புடவையை உடுத்திக்கொள்.”
“அம்மாடி! குழந்தையுடன் சினிமாவுக்கா? இன்னும் சமையல் கூட முடியவில்லை. நிறைய வேலை இருக்கிறது.”
“ஏன்? அம்மா என்னவாகி விட்டாள்? எல்லாம் அம்மா பார்த்துக் கொள்வாள்.”
யமுனா மெலிதாகச் சிரித்தாள். “படுத்துக் கொண்டு இருக்கிறாள்.”
“உடல்நலம் சரியாக இல்லையா?” அவசரமாகக் கேட்டான்.
“உடல் நலம் இல்லை, மனம்தான் சரியாக இல்லையோ என்னவோ.”
“என்னது யமுனா? சொல்வதை நேராகச் சொல்லக் கூடாதா?”
“அப்படி என்றால் சொல்லிவிடுகிறேன். இன்னும் ஆறு மாதங்களில்… கேட்கிறீங்க இல்லையா. சொல்லி விடுகிறேன். உங்களுக்குக் தம்பி பாப்பாவோ தங்கச்சி பாப்பாவோ பிறக்கப் போகிறது.” பக்கென்று சிரித்து விட்டாள் யமுனா.
“போதும் நிறுத்து. இதென்ன வேண்டாத பரிகாசம்?” தீவிரமாகப் பார்த்தான்.
“நல்லா இருக்கு. நடுவில் என் பரிகாசம் என்ன? நாளை முதல் தம்பியைத் தூக்கிக்கொண்டு ஊரைச் சுற்றப் போவது நீங்கதானே?” யமுனாவுக்கு லேசாகக் கோபம் வந்து விட்டது. வேகமாகப் பதிலளித்தாள். “இருக்கிற விஷயம்தான் சொன்னேன். நம்பினால் நம்புங்கள். இல்லா விட்டால் விடுங்கள். எதற்காக அனாவசியமாக என்மீது எரிந்து விழறீங்க?”
“என்னதான் ஆச்சு அம்மாவுக்கு?”
“யாருக்குத் தெரியும்? நீங்களே போய்க் கேளுங்களேன்?”
“யார் சொன்னாங்க உன்னிடம்?” அவசரமாகக் கேட்டான்.
ஒரு நிமிடம் தயங்கி விட்டு சொன்னாள். “என் பேச்சை நம்பாததுபோல் பேசினால் நான் என்ன செய்வது? உங்க அம்மாவுக்கு இரண்டு மூன்று மாதங்களாகவே சந்தேகம் இருந்து வந்ததாம்.” குரலைத் தாழ்த்திக்கொண்டாள். “தூரம் நின்றுபோகும் போலிருக்கு என்று சமாதானப் படுத்திக் கொண்டாள். அப்படியும் சமதானம் ஆகாமல் போனதால் இன்று காலையில் காமாட்சி மாமியை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்ரிக்கு போனாள். போவதற்கு முன்னால் என்னிடம் சொல்லவும் இல்லை. வந்தபிறகும் சொன்னாங்களா? காமாட்சி மாமிதான் சொன்னாள். லேடி டாக்டர் பரிசோதித்து விட்டு, மூன்றாம் மாதம் என்று சொன்னாளாம். வயதாகி விட்டதால் கவனமாக இருக்க வேண்டும் என்றும், நல்ல உணவு சாப்பிட வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் வந்து செக்கப் செய்துகொள்ள வேண்டும் என்றும் சொன்னாளாம்.”
வாயடைத்து விட்டதுபோல் கண்கள் நிலைகுத்த அப்படியே நின்றுவிட்டான் ஆனந்தன். யமுனா மேலும் சொன்னாள். “அத்தை கண்ணீர் விட்டபோது, டாக்டர் தோள்மீது கையை வைத்துத் தைரியம் சொன்னாளாம். ‘வயதாகி விட்டது என்று நீங்கள் பயப்பட வேண்டியது இல்லை. உங்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் நான் பிரசவம் பார்த்து அனுப்பி வைக்கிறேன்’ என்று சொன்னாளாம். மருந்து மாத்திரை கூட எழுதிக் கொடுத்து இருக்க்கிறாள். ஆஸ்பத்திரியை தாண்டியதும் உங்க அம்மா அந்தச் சீட்டைக் கிழித்துப் போட்டு விட்டாளாம். தொய்ந்து போன முகத்துடன் திரும்பி வந்தபோது என்னவோ என்று நினைத்தேன். வந்ததுமே அறைக்குள் சென்று தரையில் படுத்துக்கொண்டு விட்டாள். எத்தனை முறை பேச்சு கொடுத்தாலும் பதில் பேசவில்லை. உடல்நலம் சரியில்லை போலும் என்று நினைத்துவிட்டேன். காமாட்சி மாமி எல்லாம் விவரமாகச் சொன்னாள். முதலில் உங்களைப் போலவே நானும் ஆச்சரியப்பட்டேன். மாமியார் முகத்தைப் பார்ப்பதற்கு கூச்சமாக இருந்தது. எதுவும் தெரியாதவள் போல், “சாப்பிட வாங்க அத்தை” என்று அழைத்தேன்.
“நான் சாப்பிடப் போவதில்லை. நீ சாப்பிட்டுவிடு” என்று சொன்னாள்.
அப்பொழுதுதான் பார்த்தேன். கண்கள் வீங்கி இருந்தன. அழுதுகொண்டு இருந்தாள். எழுந்து வரவே இல்லை. தனியாகச் சாப்பிட பிடிக்காமல் சும்மாயிருந்து விட்டேன். காமாட்சி மாமியை அழைத்து அத்தை சாப்பிடவில்லை என்று சொன்னேன்.
காமாட்சி மாமி வந்து அத்தையை கடிந்துகொண்டாள். “உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? எதற்காக மனம் தளர்ந்து போகிறாய்? கடவுள் கொடுத்தால் பேய் கூடக் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும். எல்லாம் அவன் செயல். நம் கையில் என்ன இருக்கிறது? உன்னைவிட வயதில் பெரியவர்கள் பிள்ளையைப் பெற்றுக்கொண்டவர்களை எத்தனை பேர் இல்லை? நீ என்ன தவறு செய்து விட்டாய்? எழுந்து வந்து சாப்பிடு. உனக்காக யமுனாவும் காத்திருக்கிறாள். கைக்குழதைக்காரி! எழுந்து வா” என்று சாதம் பிசைந்து ஊட்டிவிடாத குறையாக வற்புறுத்தினாள். வேறு வழி இல்லாமல் அத்தை சாப்பிட்டு விட்டு மறுபடியும் முடங்கிப் படுத்து விட்டாள்.” யமுனா புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு கணவன் பக்கம் பார்த்தாள்.
ஆனந்தன் எதுவும் காதில் விழாததுபோல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தான்.
யமுனா மேலும் சொன்னாள். “பாவம் அத்தை! பயப்படுகிறாளோ என்னவோ. குன்றி விட்டதுபோல் அழுதுக் கொண்டு இருக்கிறாள். இந்த விஷயம் உங்க அப்பாவுக்கும் தெரிந்து விட்டது. காமாட்சி மாமி சிரித்துக்கொண்டே பேச்சோடு பேச்சாகச் சொல்லி விட்டாள். எல்லோரையும் போல் அவர் முதலில் வியப்பு அடைந்தாலும், பிறகு சிரித்துக்கொண்டே அங்கிருந்து போய் விட்டார்.”
சட்டென்று தலையைத் திருப்பிப் பார்த்தான்.
“அதென்னது? அப்படி பார்க்கிறீங்க? நான் சொன்னது பொய் என்று நினைத்தீங்களா? வேண்டுமனால் காமாட்சி மாமியை கூப்பிடுகிறேன். கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அடடா! மறந்து போய் விட்டேன். அடுப்பில் உலை கொதிக்கிறது.” உள்பக்கம் ஓட்டமெடுத்தாள் யமுனா.
ஆனந்தன் திடீரென்று ஸ்டாண்ட் மேல் இருந்த உடைகளை மாற்றிக்கொண்டு, வராண்டாவில் இருந்த செருப்பை மாட்டிக்கொண்டு படியிறங்கி சாலைமீது வந்தான். வேகமாக மூச்சை எடுத்துக்கொண்டே நடக்கத் தொடங்கினான். அன்றும் வழக்கம்போல் பூங்காவனத்திற்கு சென்று தனியாக உட்கார்ந்தான்.
அம்மா பற்றிய செய்தியை நினைத்துப் பார்க்கப் பார்க்க வியப்பாக இருந்தது. யமுனா சொன்னது உண்மையா, இல்லையா என்ற சந்தேகம் எழவில்லை. யமுனா மட்டுமே இல்லை. யாருமே இந்த விஷயத்தில் கற்பித்து சொல்லமாட்டார்கள். தனக்கு தம்பியோ, தங்கையோ! எவ்வளவு வெட்கப்பட வேண்டிய விஷயம்! தான் வளர்ந்து தந்தை கூட ஆகிவிட்டான். இன்னும் தன் பெற்றோர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதாவது! விஷயம் தெரிந்து தந்தை சிரித்துக் கொண்டாரா? ஆனந்தனுக்கு அருவருப்பான உணர்வு ஏதோ சூழ்ந்துகொண்டது. உடல் சிலிர்த்தது. பேரக் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு காலத்தைக் கழிக்க வேண்டிய பெற்றோர்! அம்மாவுக்கு நாற்பத்தி ஐந்து வயது தாண்டி விட்டது. அப்பாவுக்கு ஐந்பத்தி ஏழோ எட்டோ இருக்கும். இருவரும் நடுத்தர வயத்தை கடந்து விட்டார்கள்.
மகன் மருமகள், மகள் மாப்பிள்ளை… இரண்டு பக்கமும் பேரன் பேத்தி. இப்பொழுது அவர்களுக்குக் குழந்தையா? திடீரென்று ஆனந்தனுக்கு பெற்றோர்மீது அருவருப்பு ஏற்பட்டது. இந்த வயதில் குழந்தையைப் பெற்றுக் கொள்வதாவது! குழந்தை நல்லபடியாகப் பிறக்குமா? தாயின் உயிருக்கு எவ்வளவு ஆபத்து?
இருட்டிய பிறகும் எழுந்து வீட்டிற்கு போக மனம் வரவில்லை. அம்மா கண்ணில் பட்டுவிட்டால்? வளர்ந்து விட்ட மகனின் முகத்தைப் பார்ப்பதற்கு அம்மாவுக்கு வெட்கமாக இருக்காதா? அப்பா மட்டும் எப்படி தெருவில் தைரியமாக நடமாடுவார்?
ஆனந்தன் ரொம்ப நேரம் அங்கேயே உட்கார்ந்து இருந்தான். இனி எழுந்துக் கொள்ளாமல் முடியாது. வீட்டிற்கு போகாமலும் இருக்க முடியாது. வாசலில் கால் வைக்கும்போது இதயம் வேகமாகத் துடிப்பதுபோல் இருந்தது. தந்தையின் குரல் காதில் விழுந்தது. எப்போதும்போல் மாணவர்களுக்கு ட்யூஷன் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் குரல் எப்போதும் போல் இருந்தது. ஆனந்தன் வேகமாக நடந்து உள்ளே சென்று விட்டான்.
தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்த யமுனா எதிரே வந்தாள். ஒரு நிமிடம் பார்த்தான். மாலையில் வாங்கி வந்த புதுப் புடவையை உடுத்தி இருந்தாள். சட்டென்று தலையைத் திருப்பிக் கொண்டான். சட்டையைக் கழட்டிக்கொண்டே ஸ்டாண்ட் அருகில் சென்றாள்.
யமுனா சிறிது வியப்புடன் கேட்டாள். “நீங்க சரியாகக் கவனிக்க வில்லையா? மாலையில் வாங்கி வந்த புதுப் புடவையை உடுத்தி இருக்கிறேன்.”
“தென்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது. பார்க்காமல் போவதாவது?” சுருக்கமாகச் சொன்னான்.
“எப்படியோ இருக்கீங்கள்ளே? சற்று முன் கூடச் சொல்லாமலே வெளியில் போய் விட்டீங்க.”
“வந்ததும் வராததுமா உன்னுடைய கேள்விகள் என்ன?” மாற்று உடைகளை எடுத்துக்கொண்டே ஒரே எட்டில் பாத்ரூமுக்குள் புகுந்தான்.
யமுனா மேற்கொண்டு எதுவும் பேசாமல் உணவு பரிமாறினாள். ஆனந்தன் குனிந்த தலை நிமிராமல் வேகமாக இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு, யாரோ துரத்து வருவது போல் அறைக்குள் வந்து விழுந்தான். அம்மா கண்ணில் படவில்லை. எந்த நிமிடத்தில் அம்மா வெளியே வந்து விடுவாளோ என்ற பதற்றம் அவனுக்கு.
தந்தையின் குரல் கேட்கவில்லை. ட்யூஷன் குழந்தைகள் சென்று விட்டார்கள் போலும். தனக்கு நினைவு தெரிந்த வரையில் தந்தையை இந்த அளவுக்கு ஒருநாளும் வெறுத்தது இல்லை. அம்மா என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும். அப்பா என்றாலும் கூட. தான் படிக்கும் நாட்களில் பணத்திற்காகக் கஷ்டப்படும் நாட்களில் அப்பாவைப் பார்த்துகண்ணீர் வடித்த நாட்கள் கூட இருந்தன. தனக்கு வேலை கிடைத்தபிறகு எத்தனையோ முறை தந்தையிடம் சொல்லி இருக்கிறான். “இன்னும் ட்யூஷன் சொல்லிக் கொடுப்பானேன் அப்பா! அந்த வருமானம் இல்லை என்றால் நம்மால் வாழ முடியாதா என்ன? நிம்மதியாக ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்” என்று.
“நாள் முழுவதும் ஓய்வுதானே! நான்கு பேர் வாழணும் என்றால் வெறும் பேச்சா?” என்பார் அப்பா. “அறுபது வயது கூட நிரம்பாதபோது வயதாகி விட்டதாவது? ஓய்வு எடுத்துக் கொள்வதாவது?” என்பார். தொடக்கத்திலிருந்தே உழைக்கும் குணம்.
“அம்மா யமுனா! கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்துகொடும்மா.” தந்தையின் குரல் கேட்டது. திரும்பவும் பழைய எண்ணங்கள் சூழ்ந்துகொண்டன.
அறைக்குள் வந்துகொண்டிருந்த யமுனா, “இதோ கொண்டு வருகிறேன்” என்று சமையலறைக்குள் சென்றாள். தினமும் அம்மா இரவில் அப்பாவின் கட்டிலுக்கு பக்கத்தில் தண்ணீர் சொம்பு வைத்து விட்டுப் படுக்கை தட்டி போடுவாள். அம்மா இன்று வழக்கம் போல் இல்லை.
‘அம்மா!’ நினைக்கும்போதே மனதில் ஏதோ நிம்மதி பரவும். சமையல் எல்லாம் அம்மாதான் பார்த்துக் கொல்வாள். என்றாவது யமுனா செய்தால் அவளுக்கே அது ருசிக்காது.
“யமுனாவிற்கு சமையல் கற்றுக்கொடும்மா! நீ எங்கேயாவது போனால் தன்னுடைய சமையல் திறமையால் எங்கள் உயிரை எடுக்கிறாள்.” ஆனந்தன் சொல்வான்.
அம்மா சிரித்துவிடுவாள். “உன் மனைவிக்குச் சமையல் கற்றுக்கொடுத்து, நான் எங்கேயாவது போய் விட வேண்டும் என்று நினைக்கிறாயா?” என்று செல்லமாகக் கோபம் கொள்வாள்.
யமுனாவுக்கு வீட்டு வேலைகளைப் பற்றி எந்தக் கவலையும் இருந்தது இல்லை. ஆனந்தன் நினைத்த நாழிகையில் சினிமாவுக்கோ, பீச்சுக்கோ அழைத்துப் போவான். அம்மா எல்லாற்றக்கும் சந்தோஷமாக அனுமதி கொடுப்பாள். எரிச்சல் படமாட்டாள். அம்மாவுக்குப் பெற்ற மகளும், யமுனாவும் ஒன்றுதான். அந்த விஷயம் ஆனந்தனை விட யமுனாவுக்குத்தான் நன்றாகத் தெரியும்.
யமுனா அறைக்குள் வந்து கதவைச் சாத்தினாள். தொட்டிலில் இருந்த மகனைத் தூக்கி கட்டில்மீது படுக்க வைத்தாள். “விளக்கை அணைத்து விடட்டுமா? நீங்க ஏதாவது படிக்கப் போகிறீர்களா?” என்று கேட்டாள்.
ஆனந்தன் பதில் சொல்லவில்லை. யமுனா அருகில் வந்தாள். “உடல்நிலை சரியாக இல்லையா? பதில் சொல்லவில்லையே?”
அப்பொழுதும் மௌனமாக இருந்தான்.
“நன்றாக இருக்கிறது. சொல்லவில்லை என்றால் எனக்கு எப்படி தெரியும்?” என்றாள் சிறிது கோபத்துடன்.
ஆனந்தன் சிரித்தான். “தெரியாமல் போவது என்ன? உனக்கு எல்லாம் தெரிந்துவிடும்.”
“எனக்குத் திவ்ய திருஷ்டி ஒன்றும் இல்லை.”
ஆனந்தன் மெதுவாகக் கேட்டான். “அம்மா சாப்பிட்டாளா?”
“இல்லை. வெறும் மோர் குடித்து விட்டுப் படுத்துக் கொண்டு விட்டாள்.”
சிறிது நேரம் கழித்து கேட்டான். “சாப்பிடச் சொல்லி வற்புறுத்தாமல் போனாயா?”
“சொல்லாமல் இருப்பேனா? காலை முதல் சோர்ந்து போய் இருக்கிறாள். அடிக்கடி கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறாள். ஏனோ எனக்குப் பயமாக இருக்கிறது. அப்படியும் சொன்னேன், ‘டாக்டரம்மா கவனமாகப் பார்த்துக் கொள்வதாகச் சொன்னாள் இல்லையா? ஏன் பயப்படுறீங்க அத்தை?’ என்று.”
“என் உயர் போய்விடுமோ என்று நான் பயப்படுகிறேனா?” என்றாள்.
“பின்னே எதற்காகவாம்?” தன்னையறியாமல் கேட்டு விட்டான் ஆனந்தன்.
“பாவம்! அத்தைக்கு மட்டும் தலைகுனிவு இல்லையா, இந்த வயதில்…”
“அம்மாவைப் பற்றி இப்படி நான் பேசுவது தவறாக இருக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்லணும் என்றால், இப்போ அழுது என்ன பிரயோஜனம்? இதில் அம்மாவின் பொறுப்பு எதுவும் இல்லையா?”
“நன்றாகத்தான் இருக்கிறது. அத்தையை குற்றம் சொல்லுவதாவது?” வியப்புடன் பார்த்தாள்.
ஆனந்தன் பதில் பேசவில்லை.
யமுனா மேலும் சொன்னாள். “சற்று முன் காமாட்சி மாமி மறுபடியும் வந்தாள். அத்தையை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? ‘சும்மா அழுதுகிட்டு இருப்பதை விட ஏதாவது மருந்து சாப்பிட்டால் இந்தப் பிடுங்கல் விட்டுப் போய் விடுமே?’ என்றாள்.
“அம்மா என்ன சொன்னாள்?” பதற்றத்துடன் கேட்டான் ஆனந்தன்.
“பாவம்! எதுவும் சொல்லவில்லை. பைத்தியம் போல் வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள். அதற்குள் மாமி சிரித்து விட்டு, ‘நம்பி விட்டா என்ன? விளையாட்டுக்குச் சொன்னேன். எதற்காக இவ்வளவு வருத்தப் படுகிறாய்?’ என்று ஏதேதோ பேசிச் சமாதானப் படுத்த முயன்றாள்.”
“ச்ச… ச்ச! அதுபோல் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லு. பெரிய உயிருக்கு ஆபத்தாகி விடும் என்பார்கள்.”
“ஏன்? சின்ன உயிர் வேண்டாம் போலும். எனக்கு மட்டும் குட்டி நாத்தனாரோ, குட்டி மச்சினனோ பிறக்கப் போகிறார்கள் என்றால் ஜாலியாக இருக்கிறது. உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு தங்கை பிறக்கப் போகிறாள் என்றால் சந்தோஷமாக இல்லையா?”
ஆனந்தன் கையைக் கண்களுக்குக் குறுக்கே வைத்துக்கொண்டான். இந்த வயதில் அம்மா ஒன்பது மாதம் சுமக்க வேண்டுமா? பெற்று பாலூட்டி வளர்க்க வேண்டுமா?
மாமியார் வீட்டிலிருந்து சுசீலா வந்தாள், அம்மாவைப் பார்ப்பதற்காக. சுசீலா யமுனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது ஆனந்தனும் கேட்டான்.
“உன் கடிதத்தைப் பார்த்து என்னால் நம்பமுடியவில்லை அண்ணி! வீட்டில் இருப்பவர்களுக்கு எப்படிச் சொல்வது என்று புரியாமல், படித்துப் பார்க்கச் சொல்லி நாத்தனாரின் கையில் கடிதம் கொடுத்தேன். அவள் படித்து விட்டு என்னைக் கிண்டல் செய்யத் தொடங்கினாள். எனக்குத் தலைகுனிவாக இருந்தது. மாமியார் மட்டும் மகளைக் கடிந்து கொண்டாள். ‘இந்த வயதில் அந்தம்மாளுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதோ என்னவோ’ என்று சொன்னாள்.” சுசீலா அதைப் பற்றியே ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தாள், சிரிப்பும் கொண்டாட்டமாக.
தனக்குத் தோன்றியதுபோல் சுசீலாவும் ஏன் தோன்றவில்லை? மகளுக்குச் சமமாகத் தாயும் குழந்தையைப் பெற்றுக்கொண்டால்! ஆனந்தனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. இந்தப் பெண்களே இப்படித்தானோ! உலகஞானம் கொஞ்சம் கூட இருக்காது.
சுசீலா நான்கு நாட்கள் தங்கி இருந்தாள். எங்கே அம்மாவை பற்றிய பேச்சு வருமோ என்று ஆனந்தன் இல்லாத வேலைகளை ஏற்படுத்திக்கொண்டு தங்கையிடம் அதிகம் பேசவில்லை. “அண்ணா!” என்று சுசீலா ஏதாவது பேச முற்பட்டாலும், அவசர வேலை இருப்பதுபோல் உரையாடல் நீடிக்காமல் பார்த்துக் கொண்டான்.
கிளம்பும் நாளன்று சுசீலா சொன்னாள். “அண்ணி! நீ தான் அம்மாவைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறுபிள்ளை போல் கவலைப் பட்டுக்கொண்டு இருக்கிறாள். பிரசவம் ஆகும் சமயத்திற்கு நான் வருகிறேன். நான் மாமியார் வீட்டுக்குப் போய் விட்டாலும், குட்டி நாத்தனார் இருப்பாள் உன்மீது நாட்டாமை செய்வதற்கு. அதை மறந்து விடாதே” என்று பரிகாசம் செய்தாள்.
“யார் எத்தனை விதமாகச் சொன்னாலும் அத்தைக்கு தைரியம் போதவில்லை. அந்தக் கவலை எதற்கென்று புரியவில்லை” என்றாள் யமுனா அறைக்குள் வந்ததுமே.
*****

அலுவலகத்தை விட்டுக் கிளம்பினால் உடனே வீட்டிக்கு போக மனம் ஒப்பவில்லை. கேட்காவிட்டாலும் தாயைப் பற்றி யமுனா ஏதாவது சொல்வாள். அந்தப் பேச்சுகளைக் கேட்பதில் ஆனந்தனுக்கு விருப்பம் இருக்கவில்லை.
யமுனா அவ்வப்பொழுது சொல்லிக்கொண்டுதான் இருந்தாள், “நீங்கள் முன்னை போல் இல்லை” என்று.
“ஏன், இல்லாமல் என்ன?” ஆனந்தன் பேச்சை மாற்றி விடுவான்.
அந்தச் செய்தி தெரிந்தது முதல் ஆனந்தன் தாயிடம் பேசவில்லை. நிமிர்ந்து தாயை பார்க்கவும் இல்லை. தாயின் சுற்றுவட்டாரத்தில் இருப்பதில்லை. அந்தச் செய்தியை கேட்டபோது சங்கடமாக இருந்தது. நாட்கள் கழிந்தாலும் மனம் சமாதானம் ஆகவில்லை. தான் ஏதோ தவறு செய்வதாக வேதனை மனதை துளைத்துக் கொண்டிருந்தது.
“அம்மா! உடல்நலம் இப்போ எப்படி இருக்கிறது?” மமவை விசாரிக்க வேண்டும் என்று சிலசமயம் தோன்றும். ஆனால் உடனே, ‘எதற்காக விசாரிப்பது? தந்தை இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்ளமாட்டாரா?’ என்று தோன்றும்.
அம்மாவும் மகன் கண்ணில் பட்டுவிடாமல் நாட்களைக் கடத்தி வந்தாள்.
அன்று மதிய நேரம். தலைவலியாக இருந்ததால் அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக வந்து விட்டான் ஆனந்தன். அம்மா வாசற்படியில் அமர்ந்து அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள். ஒரு முறை பார்வையை உயர்த்தி பார்த்து விட்டுச் சட்டென்று தலை குனிந்து கொண்டாள். புடவை தலைப்பைத் தோளைச் சுற்றிலும் போர்த்திக்கொண்டு அரிசியை விரல்களால் அளைந்து கொண்டிருந்தாள்.
எதிர்பாராமல் அம்மாவைப் பார்த்துவிட்டான். ரொம்ப நாட்கள் கழித்து அம்மாவைப் பார்க்கும்போது ஏனோ சந்தோஷமாக இருந்தது. தடுமாறிக்கொண்டே தன் அறைக்குள் போய் விட்டான்.
யமுனா புத்தகம் வாசித்தபடி ஓய்வாகக் கட்டிலில் படுத்திருந்தாள். “இதென்னது? இந்த நேரத்தில்?” என்றபடி எழுந்துகொண்டாள்.
“தலைவலியாக இருக்கிறது என்று வந்து விட்டேன்.” உடைகளை மாற்றிக்கொண்டு கட்டில் மீது அமர்ந்துகொண்டான். “கொஞ்சம் டீ போட்டு எடுத்து வருகிறாயா?”
“ஆகட்டும்.” யமுனா எழுந்து போனாள்.
அம்மாவின் குரல் கேட்டது ரொம்பநாட்கள் கழித்து. “ஜுரம் ஏதாவது இருக்கிறாதா என்று பார்க்காமல் போனாயா? தலைவலி மாத்திரை கொடு. நீ போய் அருகில் உட்கார்ந்துகொள்.”
யமுனா உள்ளே வந்துவிட்டாள். “அத்தை டீ போடுவதாகச் சொன்னாள்.”
“அம்மாபெண்ணே!” அம்மா குரல் கொடுத்தும் யமுனா போய் டீ டம்பளர் எடுத்துக்கொண்டு வந்தாள்.
ஆனந்தன் ரொம்ப பிரியத்துடன் டம்பளரை பிடித்துக்கொண்டு குடித்தான். யமுனா ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். ஆனந்தனுக்கு தூக்கம் வந்து விட்டது. மறுபடியும் விழித்துக்கொள்ளும்போது உடம்பு கதகதப்பாக இருந்தது.
யமுனா போய் அம்மாவிடம் என்ன சொன்னாளோ என்னவோ. அம்மா மிகவும் பதற்றத்துடன் பேசியது கேட்டது. “ஜுரம் வந்து விட்டதாம? எதனால் வந்தது? நீ அருகில் உட்கார்ந்து கவனித்துக்கொள்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
‘சாதாரண ஜுரத்திற்கு இவ்வளவு பதற்றம் அடைவானேன்?’ நினைத்துக்கொண்டே போர்வையை போர்த்திக் கொண்டான்.
திரும்பவும்ம் விழிப்பு வந்தபோது எங்கும் இருட்டாக இருந்தது. உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியதில் வெக்கையாக இருந்தது. போர்வையை நீக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்துகொண்டான். தாகத்தால் நாக்கு உலர்ந்து விட்டதுபோல் இருந்தது.
“யமுனா!” மெல்லிய குரலில் அழைத்தான்.
அவன் பார்வை இருளுக்கு பழகி விட்டது. யமுனா குழந்தையை அணைத்துக்கொண்டு ஆழமான உறக்கத்தில் இருந்தாள். மெதுவாக எழுந்து நாலா பக்கமும் பார்த்தான். அறையின் கதவுகளைத் திறந்துகொண்டு வராண்டாவுக்குள் வந்தான்.
“யாரது?” அம்மாவின் குரல் மெலிதாகக் கேட்டது.
சட்டென்று அறைக்குள் திரும்பி விட்டான். “யமுனா! யமுனா!” தட்டி எழுப்பினான்.
தூக்காதில் உச் கொட்டியபடி அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள் யமுனா.
“குடிக்க கொஞ்சம் தண்ணீர் எடுத்துகிட்டு வாயேன்” என்றான் வேண்டுவதுபோல்.
யமுனா எழுந்து உட்கார்ந்துகொண்டு சோம்பல் முறித்துவிட்டு கண்களைக் கசக்கிக் கொண்டாள்.
“குடிக்க தண்ணீர் கொண்டு வா யமுனா. தாகமாக இருக்கும்.”
“சொம்பில் இல்லையா?”
“தண்ணீர் சொம்பு இங்கே இல்லை.”
“மறந்து விட்டேன் போலும்” என்றபடி எழுந்து போனாள். உடனே வெந்நீர் எடுத்து வந்தவள் க்ளுகோஸ் கலந்து கொடுத்தாள்.
“எழுந்துக் கொள்வதற்கு நான் ஏதாவது சலித்துக் கொண்டேனா?” யமுனா கேட்டாள்.
“தூக்கத்தில் எழுப்பினால் யாராக இருந்தாலும் சலித்துக் கொள்வார்கள். இதென்னது> வெந்நீர் எங்கிருந்து வந்தது?” என்றான் டம்பரை வாங்கிக்கொண்டே.
“நான் சமையலறைக்குள் போனபோது அத்தை வெந்நீர் போட்டு வைத்திருந்தாள். நீங்க என்னை எழுப்பியதை கேட்டாளாம். வெந்நீர் போட்டுப் பிளாஸ்கில் வைக்கச் சொல்லி அத்தை மாலையிலேயே சொல்லி இருந்தாள். நான்தான் மறந்து விட்டேன்.” யமுனா மறுபடியும் படுக்கையில் சாய்ந்தாள்.
ஆனந்தன் வியப்படைந்துகொண்டே தண்ணீர் குடித்தான். உடம்பில் கொஞ்சம் தெம்பு வந்து சேர்ந்து விட்டதுபோல் இருந்தது.
நள்ளிரவு நேரத்தில் அம்மா தனாக்கா வெந்நீர் போட்டுக் கொடுத்திருக்கிறாள், சோம்பல் படாமல்… கருவுற்று இருக்கும் மனுஷி! இந்த வயதில் இதெல்லாம் என்ன? எவ்வளவு கஷ்டம்!
அம்மா அவ்வப்பொழுது கண்ணில் பட்டுக்கொண்டுதான் இருந்தாள். எப்போதைக்கப்போது மகன் தப்பித்துக் கொண்டு வந்தான். அன்று காலையில் தன்னையும் அறியாமல் அம்மாவைப் பார்த்து விட்டான். விருப்பம் இல்லாமலேயே கண் நிறைய பார்த்தான்.
மனம் உருகி விட்டதுபோல் இருந்தது. இருட்டில் தலைக்குக் குளித்து விட்டு வந்த அம்மா, புடவையைச் சுற்றிக்கொண்டு வீட்டுக்குள் வந்துகொண்டிருந்தாள். வாசல் பக்கம் போகப் போன ஆனந்தன் அம்மாவைப் பார்த்து விட்டு நகர்ந்து வழி விட்டான். அம்மா பாரமாக, தடுமாறும் நடையுடன் வீட்டுக்குள் போனாள். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் அம்மா மேலும் ஒடுங்கி வத்திப் போய் விட்டாள். மேடிட்ட வயிறு தவிர அம்மா உடலில் சதைப் பற்று இருக்கவில்லை.
தன் எதிரில் வருவதற்கு அம்மா கூச்சப்படுகிறாள் என்று தெரிந்தாலும் அனந்தன் ஆனந்தனால் பின்னால் திரும்ப முடியவில்லை. நிறைமாதமாக இருக்கும் அம்மாவைப் பார்க்கும்போது தன்னை யாரோ மந்திரத்தால் கட்டிபோட்டு விட்டதுபோல் இருந்தது. அம்மாவைப் பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது என்று தோன்றியது. அம்மாவின் வயிற்றில் தான் இருக்கும்போது அம்மா இப்படித்தான் இருந்தாளா? அந்த நிமிடம் அம்மாவின் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும் என்று தோன்றியது.
அறைக்குள் போனதும் யமுனாவை அழைத்தான். “அம்மா மருந்து ஏதாவது சாப்பிட்டு வருகிறாளா?” காஷுவலாக கேட்டான்.
“இப்பொழுது நினைவுக்கு வந்ததா உங்களுக்கு? நாளையோ மறுநாளோ பிரசவம் ஆகும் நிலையில் இருக்கும்போது, அம்மாவின் உடல்நலன் பற்றிய அக்கறை வந்ததா?”
“சரிதான். அவ்வப்பொழுது ஆஸ்பத்திற்கு போய் வருகிறாளா?”
“எதுவும் இல்லை. நான் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன். எதுவும் வேண்டாமென்று சொல்லிவிட்டாள். உங்களிடம் சொல்லலாம் என்றால் முகம் கொடுத்துப் பேசுவதையே நிறுத்தி விட்டீர்கள். என்னவோப்பா! இவ்வளவு பலவீனமாக… அத்தை எப்படி பிரசவத்தை தாங்கிக் கொள்வாள் என்று எனக்குப் பயமாகத்தான் இருக்கிறது.”
ஆனந்தன் பதில் பேசவில்லை.
போகட்டும் அப்பா! அப்பா கொஞ்சமாவது அக்கறை எடுத்துக் கொள்கிறாரா? தான் கூடப் பொருட்படுத்தவில்லை என்றால் மனைவி என்னவாகி விடுவாள் என்று நினைத்துப் பார்த்தாரா? எப்படி அக்கறை காட்டுவார்? முதல் தேதி ஆனதும் ட்யூஷன் வருமானம் முழுவதும் தன்னிடம் கொடுத்து விடுகிறார். அதாவது இத்தனை நாளாக அம்மாவை யாரும் பொருட்படுத்தவில்லையா? தான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?
உணவு சாப்பிட மதியம் வந்தபோது வீடு முழுவதும் சந்தடியாக இருந்தது. உள்ளேயிருந்து பெண்களின் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. சுசீலாவும் வந்து விட்டாள் போலும். ஆனந்தனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. பின்னால் திரும்பிப் போய் விடலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தபோது, யமுனா தென்பட்டாள்.
“வாசல் அறையில் உட்கார்ந்துகொள்ளுங்கள். சாப்பாடு கொண்டு வருகிறேன்.” பதற்றத்துடன் சொன்னாள்.
“என்ன? என்னவாச்சு அம்மாவுக்கு?”
“ஒன்றும் ஆகவில்லை. இதோ கொண்டு வருகிறேன்.”
“யமுனா! ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகக்கூடாதா?”
“யாரு? நானா?” தீவிரமாகப் பார்த்தாள் யமுனா.
“அதாவது… அப்பா…”
“அவர் மருத்துவச்சியை அழைத்து வரப் போயிருக்கிறார். அத்தை ஆஸ்பத்திரிக்கு போக மாட்டேன் என்று சொல்லி விட்டாள். எது என்னவானாலும் சரி, உயிர் போனாலும் சரி, ஆஸ்பத்திற்கு போகமாட்டாளாம்.
யமுனா பதற்றத்துடன் உள்ளே போனாள்.
ஆனந்தன் ஒரு நிமிஷம் கூட அங்கே நிற்கவில்லை. உடனே வெளியேறி விட்டான். பசி குடலைப் பிடுங்கி எடுத்தாலும், வழியில் ஹோட்டல்களை தாண்டிக்கொண்டு நேராக அலுவலகம் சென்று இருக்கையில் அமர்ந்து விட்டான்.
அம்மாவுக்குச் சாதாரண பிரசவம் ஆகுமா? அம்மாவுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால்? அதற்குப் பொறுப்பு யாருடையது? அம்மா இல்லாமல் அப்பாவால் எப்படி காலம் தள்ள முடியும்? தான் மட்டும்? அம்மாவுக்கு எதாவும் ஆகி விட்டால் தான் மட்டும் பொறுப்பாளி இல்லையா? இத்தனை நாளாக அம்மாவின் உடல்நலனை பற்றி ஏன் யோசிக்காமல் இருந்து விட்டான்? அம்மாவுக்கு மருந்துகள் ஏன் வாங்கித் தரவில்ல? குறைந்தபட்சம் கடைசி நிமிடத்தில்… பிரசவ வலி எடுத்து விட்டது என்று தெரிந்தபிறகும் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகும் ஏற்பாடுகள் ஏன் செய்யவில்லை?
ஆனந்தனின் மனம் தத்தளித்தது. அம்மா இந்த வயதில் குழந்தையைப் பெற்றுக் கொள்வதா? வயதான காலத்தில் அம்மாவுக்கு இப்பொழுது பிரசவமா? ஆனந்தனின் முகம் கன்றி சிவந்து விட்டது. ஆண் பெண் உறவு எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது! தாய்மையின் மதிப்பையே அழித்து விட்டது.
அலுவலகம் முடிந்தபிறகு எல்லோரையும் விடக் கடைசியாக எழுந்து வெளியே வந்தான். வீட்டை நோக்கி நடப்பதற்கு கால்கள் மறுத்தன. மனம் ஒப்பவில்லை. அம்மாவின் விஷயம்… என்னவென்று கேட்பான்? கேட்காமல் எத்தனைனாட்கள் தப்பிக்க முடியும்?
பார்க் ஆளரவமற்று இருந்தது. மின்சார விளக்கு வெளிச்சத்திற்கு பயந்து மரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது இருட்டு. ரொம்ப நேரம் கழித்து எழுந்து கொண்டு வீட்டுக்குப் போனான். வாசற்கதவு வெறுமே சாத்தி இருந்தது. அப்பா தூங்கிக் கொண்டிருந்தாரோ இல்லையோ தெரியாது. திண்ணையின் மீது கட்டிலில் படுத்திருந்தார். அம்மாவின் அறையில் விளக்கு வெளிச்சம் தென்பட்டது. சுசீலா ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். யமுனா ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். ஆனந்தன் எதையும் பொருட்படுத்தாதவன் போல் உடைகளை மாற்றிக்கொண்டான். ஏதோ சத்தம் கேட்பதற்காக ஆனந்தின் காதுகள் கூர்மையாக இருந்தன.
“நல்ல ஆள்தான் போங்க! உங்களை நம்பிக்கொண்டு இருந்தால் வேலைகள் நடந்தாற்போல்தான்” என்றாள் யமுனா புத்தகத்தை மூடி வைத்துக்கொண்டே. “கடவுள் கிருபையால் எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது. ஆனால்…”
பரபரப்புடன் பார்த்தான். உடனே, “நீங்க எல்லோரும் இருக்கீங்க. மருத்துவச்சி வந்திருப்பாள் இல்லையா? இனி நான் இருந்து என்ன செய்வது?” என்றான். அவன் குரல் அவனுக்கே வித்தியாசமாக ஒலித்தது.
“யாரும் எதுவும் செய்திருக்க வேண்டியது இல்லை. எல்லாம் நல்லபடியாக முடிந்தது. போகட்டும், தம்பியா தங்கையா என்று கேட்கவில்லையே?”
“கேட்கவில்லை என்றாலும், நீ சொல்லத்தான் போகிறாய். யாராக இருந்தாலும் ஒன்றுதான் எனக்கு.”
“ஒன்று எப்படி ஆகும்? உங்களுடன் போட்டி போடுவதற்கு தம்பிதான் பிறந்து இருக்கிறான்.
“உண்மையாக… வா?”
“நன்றாக இருக்கிறது. எப்போதும் பரிகாசம்தானா? உண்மையிலேயே எனக்கு மைத்துனன் தான் வேண்டும் என்று நினைத்தேன். இப்பொழுதுதான் அம்மாவுக்குக் கடிதம் எழுத உட்கார்ந்தேன். உண்மையில்லேயே தம்பி உங்களைப் போலவே இருக்கிறான். கண்கள், மூக்கு… அந்தக் கோபம்…”
“போதுமே. சும்மா இரு.”
“நான் சொன்னதில் நம்பிக்கை இல்லை என்றால் நீங்களே போய்ப் பாருங்கள். அடடா! உங்கள் முகத்தில் என்ன பெருமை! அண்ணன் தம்பி இருவரும் ஒன்றுபோல் நடந்து கொள்வீர்களா?”
ஆனந்தனின் இதழ்களில் முறுவல் மலர்ந்தது. தம்பி… தம்பி… ஆமாம். முன்னொரு காலத்தில், தான் சிறுவனாக இருதபோது தனக்கு அந்த விருப்பம் இருந்தது.
“அம்மா! நம் வீட்டில் ஒரு தம்பி இருந்தால் நன்றாக இருக்கும்” என்றான்.
சுசீலாவும் அண்ணாவை சப்போர்ட் செய்தாள். “ஆமாம் அம்மா! தம்பி இருந்தால் விளையாடுவதற்கு நன்றாக இருக்கும்” என்றாள் செல்லம் கொஞ்சுவதுபோல்.
அம்மா சிரித்து விட்டாள். சுசீலாவின் கன்னத்தில் முத்தம் பதித்தாள். தன்னுடைய தலைமுடியை கோதி விட்டாள். “தம்பி இருந்தால், அவனுடன் விளையாடுவதற்கு இன்னொரு பாப்பா வேண்டும் என்று அவன் கேட்கமாட்டானா? நீங்க இருவரும்தான் இருக்கீங்களே ஒருத்தருடன் ஒருத்தர் விளையாடுவதற்கு” என்றாள்.
தனக்கு இப்பொழுது தம்பி இருக்கிறான்! அவனை ஒரு முறை பார்த்தால்! சுசீலாவிடம், “நமக்குத் தம்பி இருக்கிறான் பார்” என்று சொன்னால்!
“அதென்ன ஜாடையோ! அச்சு வார்த்தாற்போல் அப்படியே உங்களைக் கொண்டிருக்கிறான்.”
“என் தம்பி என்னைப் போல் இல்லாமல் உன்னைப் போல் இருப்பானா?” சிடுசிடுத்தான். அண்ணன் தம்பி என்றால் எப்படி இருப்பார்கள்? தன்னைப் போல் இல்லாமல் வேறு எப்படி இருப்பான்?
வீலென்று குழந்தை அழுகை சத்தம் கேட்டது பக்கத்து அறையிலிருந்து. ஆனந்தனின் இதயம் திடுக்கிட்டது. சட்டென்று வாசல்பக்கம் பார்த்தான்.
“மௌனவிரதம் போதும். எழுந்து குளித்து விட்டு வாங்க.” யமுனா அங்கிருந்து போய் விட்டாள்.
இரவு முழுவதும் அரைகுறை தூக்கம்தான். தம்பியின் அழு குரல் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. யமுனா அம்மாவின் அறைக்குள் போய் வந்த வண்ணம் இருந்தாள்.
காலையில் விடியும் போதே சுசீலா அறைக்குள் வந்தாள். “அண்ணா! எழுந்து விட்டாயா? தம்பியைப் பார்த்தாயா?”
ஆனந்தன் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு அந்தப் பக்கம் திரும்பினான்.
சுசீலா போர்வையை பிடுங்கி விட்டாள். “இன்னும் தூக்கமாவது! அப்படியே என்னைப் போல் இருக்கிறான்.”
‘என்னது?’ என்பதுபோல் கண்களைத் திறந்தான். “உன்னைப் போல் இருக்கிறானா? யார் சொன்னது? என்னைப் போல் இருக்கிறான் என்று “சொன்னாளே?”
“உன்னைப் போலவா? யார் சொன்னது?”
“யமுனா வார்த்தைக்கு வார்த்தை சொன்னாள், என்னுடைய ஜாடைதான் என்று.”
“போதுமே! வேண்டுமென்றால் வேறு யாரிடமாவது கேட்டுக்கொள். அப்படியே என் ஜாடை. பெண்பிள்ளை போலவே இருக்கிறான். வந்து பாரேன்.”
“தூக்கம் வருகிறது. அப்புறமாகப் பார்க்கிறேன்.” போர்வையால் முகத்தை மூடிக் கொண்டான்.
சுசீலா சென்று விட்டாள். பிற்பாடு சுசீலா கேட்டபோது, “சற்று முன் வாசற்படியில் நின்றுகொண்டு பார்த்தேன். தூங்கிக்கொண்டு இருந்தான்” என்றான்.
மூன்றாவது நாள் சுசீலாவின் மாமியார் வந்தாள். அம்மாவுக்குப் பத்தியச் சாப்பாடு, குளிமுறை எல்லாம் அந்தம்மாளின் மேற்பார்வையில் நடந்தன. அந்தம்மாள் தேவையான தனியா போடி, மிளகு சீரகத் தூள் எல்லாம் தயாரித்து வைத்தாள்.
ஐந்தாவதுநாள்… ஆனந்தன் அலுவலகத்திற்கு விடுமுறை. மதிய உணவு முடிந்ததும், புத்தகம் படித்துக்கொண்டே உறங்கி விட்டான்.
யமுனா பதற்றத்துடன் தட்டி எழுப்பியதும் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். அம்மாவின் அறையில் எல்லோரும் ஏதோ பதற்றத்தில் இருப்பது போல் தோன்றியது.
“சீக்கிரம் போய் யாராவது டாக்டரை அழைத்துகிட்டு வாங்க. உங்க தம்பி திடீரென்று விரைத்துப் போனாற்போல் ஆகிவிட்டான். மாந்தம் என்று சொல்கிறார்கள்.”
யமுனா சொன்னது என்னவென்று ஆனந்தனுக்கு புரியவில்லை.
“உங்க அப்பா வெளியே எங்கேயோ போயிருக்கிறார். நீங்களும் போகவில்லை என்றால் எப்படி?” பயந்துகொண்டே பார்த்தாள்.
“என்ன ஆச்சு?” பதற்றத்துடன் எழுந்துகொண்டான்.
“இப்படி ஆகும் என்று அவர் கனவு கண்டாரா? ஐயோ! சீக்கிரமாகப் போங்களேன். உங்க அம்மா அழுதுகிட்டு இருக்காங்க.” நிலை கொள்ளாததுபோல் அந்த அறைக்குள் ஓடினாள் யமுனா.
“அம்மா அழுதுகிட்டு இருக்கிறாளா? என்ன ஆகி விட்டது தம்பிக்கு?” வேகமாக உடைகளை மாற்றிக்கொள்ள தொடங்கினான்.
“பயப்படவேண்டியதில்லை. வெங்காயச் சாறு வாசனை காண்பித்தால் தேறிக் கொண்டு விடுவான். சுசீலா! வெங்காயத்தை நறுக்கி எடுத்துகிட்டு வா.” சுசீலாவின் மாமியார் சொல்லிக்கொண்டிருந்தாள். அந்தம்மாளுக்கு கைவைத்தியம் தெரியும்.
அம்மாவின் விசும்பல் சத்தம் கேட்டது. “கடவுளே! நீ எது கொடுத்தாலும் பிரசாதம் என்று தாங்கிக்கொண்டேன். வீட்டிலும் வெளியிலும் எள்ளலுக்கு ஆளானபோதும், கைக்குழந்தைக்கக் மனதை கல்லாக்கிக் கொண்டேன். இந்த வயதில் எனக்கு அவமானத்துடன் புத்திர சோகத்தையும் கொடுத்து விடாதே!” துக்கத்தால் தொண்டை அடைத்து விட்டது அம்மாவுக்கு.
ஆனந்தனுக்கு இதயத்தை ரம்பத்தால் அறுப்பது போல் இருந்தது.
அம்மா எள்ளலுக்கு ஆளானாள்… குழந்தைக்காக!
அம்மா அவமானத்தைத் தாங்கிக்கொண்டாள்… குழந்தைக்காக!
அம்மா அழுதுகொண்டு இருக்கிறாள்… குழந்தைக்காக!
அம்மா! உன்னை யார் அவமானப் படுத்தினார்க்கள்? எதற்காக? நீ என்ன தவறு செய்து விட்டாய்?
வீலென்று கத்தியது குழந்தை. மூச்சு விடாமல் அழத் தொடங்கியது.
மனம் பூரித்து விட்டது அண்ணனுக்கு.
“கொஞ்சம் வெந்நீர் எடுத்துகிட்டு வாம்மா! விளக்கெண்ணெயும் கொண்டுவா. ஒத்தடம் கொடுக்கிறேன்.” சுசீலாவின் மாமியார் சொல்லிக்கொண்டிருந்தாள்.
ஆனந்தன் வேரறுந்த மரம்போல் சரிந்து விட்டான். தான் அரக்கனாகி விட்டானா!
இல்லை என்றால் உடனே டாக்டரிடம் ஏன் ஓடவில்லை? ஆனந்தனுக்கு தன்மீதே வெறுப்பு ஏற்பட்டது.
“யார் என்ன சொன்னாலும் என் குழந்தையை நான் வளர்ப்பேன்.” அழுகையினூடே அம்மா சொல்லிக்கொண்டு இருந்தாள்.
விடியும்போதே வீட்டில் பரபரப்பு தோன்றிவிட்டது. அம்மாவின் குளியலுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
ஆனந்தனும் சீக்கிரமாக எழுந்துகொண்டு கையோடு குளித்து விட்டான். யமுனா காபி கொண்டு வந்து கொடுத்தாள். முறுவலுடன் யமுனாவை பார்த்தான்.
“யமுனா! சின்ன வயதில் பண்டிகை வந்தால் இப்படித்தால் காலையிலேயே எழுந்து…”
“உங்கள் தங்கையை வரச் சொல்கிறேன். உங்கள் சிறுவயது கதைகளை அவளிடம் சொல்லுங்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது.” யமுனா போகப் போனாள்.
புடவைத் தலைப்பைப் பிடித்து நிறுத்தினான். “உனக்குச் சிறுவயது கதைகள் இல்லையா?”
“என் சிறுவயதில் இவ்வளவு சீக்கிரமாக எழுந்து கொண்டதில்லை. நிம்மதியாக எட்டுமணி வரையில் தூங்குவேன்.”
“அதுதான் இப்பொழுதும் தூங்கு மூஞ்சியாக இருக்கிறாய்.”
யமுனா வியப்புடன் பார்த்தாள். “என்ன விஷயம்? இன்றைக்கு இவ்வளவு சந்தோஷமாக இருக்கீங்க?”
“யாம் சந்தோஷமாக இருக்கிறோம். அவ்வளவுதான். நிலவு ஏன் காய்கிறது? குயில் ஏன் கூவுகிறது?” என்றபடி மகன் கன்னத்தில் முத்தமாறி பொழிந்தான்.
“அடடா! கவிதை வேறு வருகிறதே? எனக்கு வேலை இருக்கிறது சாமி!” என்று யமுனா போய் விட்டாள்.
தம்பி அழுது கொண்டிருந்தான் வீல் வீல் என்று. சுசீலா அவனைக் கொஞ்சி கொண்டிருந்தாள்.
ஆனந்தனின் மனம் எதற்காகவோ துடித்துக் கொண்டிருந்தது, எப்போதிலிருந்தோ.
எழுந்து நின்று கொண்டான். தம்பியைப் போய்ப் பார்த்தால்? அம்மாவின் முகத்தை எப்படி பார்ப்பது?
ஒன்பது மாதங்களாக அம்மாவிடம் ஒரு வார்த்தை கூட மனம் விட்டுப் பேசவில்லை. ‘அம்மா! உன் உடல்நலம் எப்படி இருக்கிறது?’ என்று விசாரிக்கவில்லை. இந்த வயதில், இவ்வளவு பலஹீனமாக இருக்கும் நிலையில் கூட ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்றால் அது இயற்கையின் மகிமை. தான் எந்த உதவியும் செய்யவில்லை.
தான் ஏன் இவ்வளவு மனிதநேயமில்லாமில் மாறிவிட்டான்! இதயத்தை இவ்வளவு கடினமாக எப்படி மாற்றிக்கொண்டான்?
விடியும் நேரம். சூரிய வெளிச்சம் நேராக அறைக்குள் வந்து விழுந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் பறந்து கொண்டிருந்த தூசியை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்.
தன்னையும் அறியாமல் அறையை விட்டு வெளியே வந்தான். அம்மாவின் அறையின் முன் நின்றான். அம்மா தம்பியை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். லேசாகத் திறந்திருந்த கதவு வழியாகத் தென்பட்ட அந்தக் காட்சி ஆனந்தனை கட்டிப்போட்டு விட்டது. கண்ணிமைக்காமல் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான். தலைக்குக் குளித்திருந்த அம்மாவின் தலைமுடி விரிந்து பறந்து கொண்டிருந்தது. கன்னங்கள் வெளிறிப் போய்க் குழி வ்ழுந்திருந்தன. சொர்ந்துபோனாற்போல் இருந்த அவள் கண்களில் ஏதோ திருப்தி. மஞ்சள் மூசியிருந்த அம்மாவின் முகத்தில் என்றும் பார்த்திராத அழகு தென்பட்டது. கைக்குழதையை மார்போடு தணித்துக்கொண்டு உச்சி முகர்ந்து கொண்டிருந்த அம்மாவின் பரவசநிலை!
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தானும் இதுபோலவே அம்மா மடியில் படுத்திருபானா? ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த அம்மாவுக்கு எல்லைகள் என்ன? இயற்கையின் தர்மத்தை பரிகாசம் செய்வது எவ்வளவு முட்டாள்தனம்! இத்தனை நாளும் தான் அம்மாவை எதற்காக மனதில் வெறுத்து வந்தான்? இந்த வயதில் அம்மா எவ்வளவு பொறுப்புகளை ஏற்க வேண்டும்? எவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும்? எவ்வளவு கஷ்டப்பட்டு கைக்குழந்தையை வளர்க்க வேண்டும்!
கதவைத் திறந்துகொண்டு அம்மாவின் அறைக்குள் வேகமாக நுழைந்தான் அனந்தன். அம்மா திகைத்துப் போய் விட்டாள். புடவைத் தலைப்பை இழுத்து போர்த்திக்கொண்டு தலை குனிந்துகொண்டாள்.
“அம்மா!” ஆனந்தன் குரல் நடுங்கியது. “ஒருமுறை தம்பியை இப்படி தாம்மா.”
குனிந்து அவனே தம்பியைக் கையில் எடுத்துக்கொண்டான். ஆசைதீர அவன் முகத்தைப் பார்த்தான். மென்மையாக அவன் கன்னத்தில் முத்தம் பதித்தான்.
ஆனந்தனின் இதயம் பஞ்சைவிட இலேசாகி விட்டது. கண்களில் நீர் திரையிட்டது. “அம்மா! உன் உடல்நிலை நன்றாக இருக்கிறதா?”
வியப்புடன் பார்த்தாள் அம்மா. அம்மாவின் கண்களில் நீர் தளும்பிக் கன்னத்தில் வழிந்தது.
அம்மாவின் முன் குற்றவாளியாக நின்றான் மகன்.
அம்மா சட்டென்று கன்னத்தைத் துடைத்துக்கொண்டாள். “உட்கார்” என்றாள் பரிவுடன்.
மகன் அம்மாவுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டான். தம்பியை மடியில் வைத்துக்கொண்டான்.
“அம்மா! தம்பி என் ஜாடைதானே?”
சிரித்தாள் அம்மா.
சுசீலா பதற்றத்துடன் வந்தாள். “அண்ணா! குழந்தையைக் கவனமாக பிடித்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும் நீ இங்கே எதற்காக வந்தாய்?”
ஆனந்தன் அவள் சொன்னதை காதில் வாங்கவில்லை. “சுசீலா! தம்பி என் ஜாடைதானே?”
“அதெல்லாம் ஒன்றுமில்லை. என்னைப் போல்தான் இருக்கிறான்.”
“சரிதான். நீயும் உன் சப்பை மூக்கும்! அப்படியே என்னைப் போல் இருக்கிறான். வேண்டுமானால் அம்மாவிடம் கேட்போம். அம்மா! தம்பி யார் ஜாடை?”
“உண்மையைச் சொல்லும்மா! என் ஜாடைதானே?” சுசீலா செல்லம் கொஞ்சனாள்.
அம்மா மறுபடியும் சிரித்தாள். கண்களில் எஞ்சி இருந்த இரண்டு கண்ணீர்த்துளிகள் சரிந்தன.
யமுனா மகனைத் தூக்கிக்கொண்டு அங்கே வந்தாள். கணவன் மடியில் குழந்தையைப் பார்த்து வியப்படைந்தாள். மகனைத் தந்தை அருகில் இறக்கி விட்டாள்.
“கண்ணா! இது உன் சித்தப்பாடா. சித்தப்பாவை தூக்கிக்கொள். நீ தான் சித்தப்பாவுக்கு விளையாட்டு காட்ட வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே குழந்தையை மகன் மடியில் படுக்க வைத்தான் ஆனந்தன். எல்லோரும் சிரித்தபடி இருந்தார்கள்.
அம்மா கூட!
(1965 ஜனவரி)
எழுதியவர்:
தெலுங்கில் : ரங்கநாயகம்மா
மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

