தெலுங்கில் ரங்கநாயகம்மா எழுதிய சிறுகதை – முரளியின் தாயார்
விடியும் போதே போன் மணி கணகணவென்று! பொழுது விடிகிறதே என்று பயம்! திரும்பவும் அதனிடம் தொங்கிக் கொண்டு இருக்க வேண்டும். அதுபோல் தொங்கும் நபர் வீட்டில் இருக்கவில்லையே? பின்னே யாருக்காக? சற்று ஓய்ந்தது… திரும்பவும் ஒலித்தது.
“ரஜனி! கொஞ்சம் பாரும்மா? முரளியாக இருக்குமோ என்னவோ. சீக்கிரம் பார்.”
“எடுக்கிறேன் அத்தை.”
போன் நின்று விட்டது.
ரஜனி சமையலறைக்குள் வந்ததுமே ருக்மிணி கேட்டாள்: “இவ்வளவு காலை நேரத்ததில் யார்? முரளிதானா?”
“இல்லை. ஸ்ரீலதா… கோவாலிருந்து.”
“முரளி பேசவில்லையா?”
“அவள்தான் பேசினாள்.”
“அந்தப் பெண்ணுக்கு உன்னுடன் என்ன வேலை? என்னதான் பேசினாள்?” வியப்படைந்தவளாய்க் கேட்டாள் மாமியார்.
ரஜனி சற்று தயங்கிவிட்டு, “ஹோட்டலிலிருந்து செய்தாள். கடற்கரைக்கு போய்க்கிட்டு இருக்கிறார்களாம். இப்பொழுதுதான் கிளம்பப் போகிறார்களாம். ‘ரொம்ப என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கிறோம் ரஜனி. நீயும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என்றாள்”.
பாடத்தை ஒப்புவிப்பது போல் சொன்னாள் ரஜனி.
ருக்மிணி மேலும் வியப்படைந்து போனாள். “முரளி இல்லையா அங்கே?” இரட்டிப்பது போல் கேட்டாள்.
“பக்கத்திலேயே இருக்கிறான் போலிருந்தது. ‘என்ன முரளி?’ என்று பக்கத்தில் யாருடனோ பேசியது போல் தோன்றியது. ‘பேசுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று நினைத்தானோ என்னவோ!”
“அதென்ன பேச்சு? போய் இரண்டு நாட்களாகி விட்டது. வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரிக்க வேண்டாமா?” ருக்மிணி நெற்றியைச் சுளித்தாள்.
திரும்பவும் போன்.
ரஜனி வேகமாகப் போனாள்.
இந்த முறை முரளிதான்.
“ஒன்றும் இல்லை சற்று முன் லதா சட்டென்று போனை வைத்து விட்டாள். என்ன செய்துகிட்டு இருக்கீங்க? அம்மா என்ன செய்கிறாள்?”
“இப்பொழுதுதான் எழுந்து கொண்டோம். அத்தை சமயலறையில் இருக்காங்க. கூப்பிடட்டும்மா?’
“வேண்டாம் விடு. ஜுரம் குறைந்து விட்டதா உனக்கு?”
ரஜனி சிரித்தாள். “அது ஜுரமா என்ன? ஏதோ லேசாக வந்தது. எப்பொழுதோ குறைந்து விட்டது.”
“நீயும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ரஜனி.”
“அடிக்கடி போய்க்கிட்டே இருப்பாய் இல்லையா? இன்னொரு தடவை எப்பொழுதாவது வருகிறேன்.”
“திரும்பவும் அடுத்த மாதமே வரவேண்டி இருக்கும். ஆனால் அப்பொழுது முழுவதும் டைரக்டர்களுடன் மீட்டிங், அது இது என்று பிசியாக இருக்கும். இப்பொழுது ஓய்வாக இருக்கிறோம். சரிதான். இப்பொழுது என்ன செய்ய முடியும்? அவ்வளவுதானே. வைத்து விடட்டுமா?”
“எப்பொழுது வருகிறாய்?”
“சொல்ல மறந்து விட்டேன். நாளை இரவு திரும்புகிறோம். பத்து மணியாகி விடுமோ என்னவோ. அது இருக்கட்டும், நேற்று உனக்காக ஒரு புடவை லதா செலக்ட் செய்து இருக்கிறாள்.”
“எதற்கு? ஏற்கனவே நிறைய இருக்கு. வேண்டாம்.”
“வாங்கிய பிறகு என்ன செய்வது? லதாவுக்குக் கொடுத்து விட்டுமா?”
“உன் விருப்பம்.”
“சும்மா சொன்னேன். சரி, வைத்து விடட்டுமா?”
“சரி.”
கொஞ்சம் மலர்ந்த முகத்துடன் சமையலறைக்குச் சென்றாள் ரஜனி.
“முரளிதான் பேசினான் அத்தை.”
“அப்படித்தான் நினைத்தேன். இப்பொழுதாவது புத்தி வந்து விட்டது போலும். என்னதான் சொன்னான்?”
“நாளை இரவு வருகிறானாம்” என்று சொன்னவள் மௌனமாக இருந்து விட்டாள். பிறகு மேலும் சொன்னாள்: “புடவை வாங்கி இருக்கிறானாம். லதாதான் செலக்ட் செய்தாளாம். நிறைய புடவை இருக்கு என்று சொன்ன போது, அப்படி என்றால் லதாவுக்குக் கொடுத்து விடட்டுமா என்றான்.”
அதுபோன்ற மூன்றாம் தரமான பேச்சுக்கள் என்றால் மாமியாருக்குக் கோபம் வரும் என்று ரஜனிக்கு தெரியும். சில வார்த்தைகளை மாமியார் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள மாட்டாள் என்றும் தெரியும்.
“நாளைக்கு வருகிறானாம்.”
திரும்பவும் அந்த இரண்டு வார்த்தைகளைச் சொல்லி விட்டு வேலையில் ஆழ்ந்து போனாள் ரஜனி.
பகல் முழுவதும் பத்து முறை போன் அழைப்புகள்.
“மிஸ்டர் முரளிமோகன் இருக்கிறாரா?” சென்னையிலிருந்து, சேலத்திலிருந்து, பெங்களூரிலிருந்து, ஏதேதோ ஊர்களிலிருந்து அழைப்புகள்.
“இல்லை. கோவா போயிருக்கிறார். நாளை வருவார்.”
ஒரே பாட்டைப் பாட வேண்டியிருந்தது ருக்மிணிக்கு. ரஜனி இருந்தால் அவளே பார்த்துக் கொள்வாள். ரஜனி ஆபீசுக்கு சென்று இருந்தாள்.
இரவு படுக்கப் போகும் முன் கோவாவிலிருந்து போன். திரும்பவும் ஸ்ரீலதா!
“ஹாய் ரஜனி!”
“நீங்களா?” ஏமாற்றமடைந்தாள் ரஜனி.
“ரஜனி! இன்று முழுவதும் நன்றாக என்ஜாய் செய்தோம். ஊர் சுற்றினோம். ஒரே கால்வலி. தலைவலியும் சேர்ந்து விட்டது. முரளி மட்டும் இல்லை என்றாள் இந்நேரம் செத்து விட்டிருப்பேன். நன்றாக மசாஜ் செய்யத் தெரியும் முரளிக்கு! ‘குறைந்து விட்டது. போதும் சாமி!’ என்று சொன்னாலும் கேட்காமல்… அடாடா, மேலே விழுந்து எப்படி கிள்ளுகிறான் பார். சற்று முன் இது போலவே கையைப் பிடித்து இழுத்ததில் கையே உடைந்து விட்டது போல் இருந்தது. ஐயோ சாமி! அப்படி கிள்ளுகிறாயே?” என்று லதா போனில் கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாள்.
ரஜனி வியந்து போனவளாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
முரளி போனை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக சொன்னான். “எல்லாம் பொய்! நம்பாதே. உன்னிடமிருந்து எனக்கு வெசவுகள் வாங்கித் தரவேண்டும் என்று இப்படி பேசுகிறாள். சற்று முன் தண்ணீருக்குள் போய் விடப் போகிறாளே என்று கையைப் பிடித்து இழுத்தேன், அவ்வளவுதான். அலைகள் உள்ளே இழுத்துக்கொண்டு போனால் எங்களில் யாருக்கும் நீச்சல் தெரியாது. அவள் பாடு திண்டாட்டமாகி இருக்கும் இந்நேரம். காப்பாற்றி இருக்கிறேன் என்ற நன்றி கூட இல்லாமல் எப்படி சொல்கிறாள் பார் உன்னிடம்.”
ரிசீவரை லதா பிடுங்கிக் கொண்டாள் மறுபடியும். “முரளிதான் பொய் சொல்கிறான் ரஜனி. வேண்டுமானால் ஸ்ரீனிவாசிடம் கேள். கையை முறிக்காத குறையாக செய்து விட்டு, திரும்பவும் அவனே மசாஜ் செய்தான் என்று வை, இதோ பார் முரளி! திரும்பவும் கையை இழுக்கிறாயே? இந்த முறை உண்மையாகவே கை முறிந்து விடும். இனி வாழ்நாள் முழுவதும் நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டியிருக்கும்.”
போனுக்காக இருவருக்கும் இடையே இழுபறி நடப்பது போல் தோன்றியது ரஜனிக்கு,
மறுபடியும் ஸ்ரீலதாதான்.
“ஆபீசில் என்னுடைய ஏலக்காய் எல்லாம் சாப்பிட்டு விடுவான். ஜீன்ஸ் வாங்கித் தரச் சொன்னால், ‘ உன் ஏலக்காய் விலை அவ்வளவு ரூபாயா ?’ என்கிறான். பார் ரஜனி! இப்படிப் பட்டவனை என்னதான் செய்வது?”
திரும்பவும் போன் முரளியின் கைக்கு மாறியது.
“லதாவின் பேச்சுக்கு என்ன வந்தது? என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? சாப்பிட்டு விட்டீர்களா? அம்மா தூங்கி விட்டாளா?”
ரஜனிக்கு குரல் எழும்பவில்லை.
“ரஜனி! ஹலோ ரஜனி!”
“ஊம்… இருக்கிறேன். இப்பொழுதுதான் சாப்பிட்டோம். அத்தை புத்தகம் படித்துகிட்டு இருக்காங்க போலிருக்கு.”
“நாங்கள் இனிமேல் தான் சாப்பிடுவதற்கு கிளம்ப வேண்டும். தினமும் அந்த புல் பூண்டு சாப்பிட்டுக்கிட்டுதான் இருக்கிறோம். வைத்து விடட்டுமா?”
“சரி…”
“அம்மாவுக்கு ஜுரம் முழுவதுமாக குறைந்து விட்டதா?”
“ஜுரம் அத்தைக்கு இல்லை. எனக்குத்தான். குறைந்து விட்டது என்று காலையிலேயே சொன்னேனே?”
“ஆமாம். மறந்து விட்டேன். போனை வைத்து விடுகிறேன்.”
“சரி.”
ரஜனி மெதுவாக அடிமேல் அடி வைத்து மாமியாரின் அறைக்கு வந்தாள்.
“முரளிதான் அத்தை.”
“அதுதான் நினைத்தேன், இத்தனை நேரம் பேசிக்கிட்டு இருந்ததைப் பார்த்து…” மருமகளின் முகத்தைப் பார்த்தால் ருக்மிணிக்கு வியப்பாக இருந்தது.
“என்னவோ போல் இருக்கிறாயே? நாளைக்கு வரவில்லையா முரளி?”
“அப்படி எதுவும் இல்லை.”
“ஏதாவது சொன்னானா?”
“அதொன்றும் இல்லை.”
“எரிச்சல் கிளப்பாதே ரஜனி. ஒன்றும் இல்லை என்று சொன்னால் நம்புவதற்கு நான் என்ன சின்ன குழந்தையா? எதுவும் இல்லை என்றால் என்னவோபோல் இருப்பானேன்? சொல்லணும் என்று நினைத்தால் சொல்லு. இல்லை என்றால் போய் படுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு ருக்மிணி பார்வையை புத்தகத்தின் மீது பதித்தாள்.
ரஜனி வெட்கியவளாய் தலையைத் தொங்கப் போட்டபடி நின்றாள். “அது இல்லை அத்தை. ஸ்ரீலதா நன்றாகப் படித்திருக்கிறாள். பெரிய வேலையில் இருக்கிறாள். எப்படி பேசுவதென்று கூட தெரியாதா? நாள் முழுவதும் ஊர் சுற்றினார்களாம். தலைவலி வந்து விட்டதாம். முரளிக்கு மசாஜ் பண்ண நன்றாகத் தெரிகிறது என்றாள். இதோ பார் எப்படி கிள்ளுகிறான் பார் என்று கத்தவும் செய்தாள். பைத்தியம் போல் ஏதேதோ பேசினாள்.”
ருக்மிணி திகைத்துப் போனவளாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நீ என்ன சொன்னாய்?”
“எதுவும் சொல்லவில்லை. எனக்கு எதுவும் தோன்றவும் இல்லை. இருந்தாலும் ஏதாவது சொன்னால் முரளியை நான் சந்தேகப் படுவது போல் நினைத்துக்கொள்ள மாட்டாளா?”
ருக்மிணி கோபமாக, “ஏன் ? சந்தேகப் பட்டால் என்ன தவறு? அநாகரீகமாய் நடந்து கொண்டால் சந்தேகப் படாமல் என்ன செய்வார்களாம்?” என்றாள்.
“ச்சீ… எனக்கு அதுபோன்ற சந்தேகம் எதுவும் இல்லை அத்தை, உண்மையிலேயே. அந்தப் பெண் என்னிடம் அதுபோல் சொல்வது நன்றாக இல்லை என்று சொல்கிறேன் அவ்வளவுதான்.”
“செய்த காரியம் தவறு இல்லை என்றால் சொன்னால் நன்றாக இல்லாமல் போவானேன்?”
“ஆமாம் என்று வையுங்கள்.” ரஜனி லேசாக சிரித்தாள். ஸ்ரீலதாவின் பேச்சுக்கு மாமியாருக்குக் கோபம் வந்து விட்டது என்று ரஜனிக்கு புரிந்து விட்டது.
“பின்னே முரளி என்னதான் சொன்னான்?”
“என்ன சொல்லப் போகிறான்? அது வந்து… ‘தண்ணீர் அருகில் போய்க்கிட்டு இருந்தபோது விழுந்து விடப் போகிறாள் என்று கையைப் பிடித்தேன். அவ்வளவுதான்’ என்று ஏதேதோ சொன்னான்.” அதற்கு மேல் சொல்வதற்கு பயமாக இருந்தது ரஜனிக்கு.
“நன்றாகத்தான் இருக்கிறது. உதவி சேய்வது, தலைவலிக்கு மசாஜ் செய்வது. ஆபத்திலிருந்து காப்பாற்றுவது! பேஷாக இருக்கிறது.” ருக்மிணி முகத்தை சுளித்துக் கொண்டாள்.
“தூங்கப் போகிறேன் அத்தை. தூக்கம் வருகிறது” என்று வெளியேறப் போனாள் ரஜனி.
‘மனதை கலங்கடித்துக் கொள்ளாதே’ என்று சொல்லவில்லை மாமியார். மேலும், “அசடு அத்தனை நேரம் அவர்களுடைய பேச்சை எப்படிக் கேட்டுக்கொண்டு இருந்தாய்? ‘உங்கள் இருவருக்கும் கொஞ்சம் கூட புத்தி இல்லை போலும்’ என்று சொல்லி விட்டு போனை வைத்து விடாமல், அவர்கள் உளறிக்கொண்டு இருந்ததை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தாயா?” என்றாள் கோபமாக பார்த்துக்கொண்டே.
மாமியாரின் சுபாவம் ரஜனிக்கு தெரியும். லேசாக சிரித்துவிட்டு மெதுவாக போய் விட்டாள். முரளியைப் பற்றி ரஜனிக்கு உண்மையிலேயே கவலை இல்லை. கொஞ்சம் வியப்புதானே தவிர, மனத்தைப் பாழடித்துக் கொள்ளும் அளவுக்கு வியப்பு இல்லை.
மனத்தைப் பாழடிக்கும் அளவுக்கு கவலை எல்லாம் ருக்மணியை பிடித்துக் கொண்டு விட்டது. ஏதோ சிறிசுகள். கொஞ்சம் ஜாலியாக இருக்கிறார்கள். ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்கள், அந்த அளவுக்கு உரிமையாகப் பழக மாட்டார்களா என்று இதற்கு முன்பு தோன்றியது போல் இன்று தோன்றவில்லை. இது சிறிசுகள் செய்யும் காரியமா? ஜாலியாக இருப்பது என்றால் இதுவா? எல்லாவற்றையும் சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டு இருந்தால் எதுவும் தவறாகத் தெரியாது.
ஒரு முறையா இரண்டு முறையா? எப்போதும் ஏதோ ஒரு கோணல்மாணல் காரியம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்பொழுது ‘கம்பெனி வேலையாக சுற்றிக்கொண்டு ஜாலியாக இருக்கிறார்கள் போலும்’ என்று நினைக்க வழியில்லை.
வீட்டில் இருக்கும் போது கூட போன் வருவதுதான் தாமதம் ஓட்டமெடுப்பான். பெரும்பாலும் அந்தப் பெண்தான்.
“ஹலோ ஸ்வீட்டீ! சொல்லு” என்பான்.
“அதென்ன அழைப்பு?” என்று கேட்டால், “எங்கள் கம்பெனி மொழி அதுதான் அம்மா” என்பான்.
தொடக்கத்தில் ஆபீஸ் விவகாரங்கள் பேசப்படும். இவன் குழு ஆலோசகன்! அவளுக்கு ஏதோ அறிவுரைகள் தேவைப்படும். அது முடிந்த பிறகு ஏதேதோ பேச்சுக்கள்! யார் கேட்டுக்கொண்டு இருப்பார்கள் ஒவ்வொரு முறையும்? அரைமணி நேரமானால் தவிர போனை வைக்க மாட்டான்.
கம்பெனியிலிருந்து வரும்போதே இரவு பத்து மணி ஆகி விடும். வந்தது முதல் திரும்பவும் போன் அழைப்புகள்தான். ஞாயிறு என்றால் நாள் முழுவதும் அதே பேச்சு! வீட்டில் இருக்கிறான் என்று பெயர்தானே தவிர இருப்பது போன் அருகில்தான். ஏதாவது சொன்னால், கம்பெனி விவகாரங்கள், அவசர காரியங்கள். எங்கிருந்ததெல்லாமோ இவனிடம் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.
போகட்டும், கம்பெனி விஷயமாக இருந்தால் அது ஒரு வழி. நடுவில் ஸ்ரீலதாவின் விவகாரம் ஒன்று! ஆபீசில் எப்படியும் சந்தித்துக்கொண்டு தான் இருப்பார்கள். வீட்டிற்கு வந்த பிறகும் பேச்சுதான். இரவு நேரத்தில் கூட அந்த பெண்ணுடன் பேசிப் பொழுது போக்க வேண்டியதுதான்.
தனக்குப் பிடித்த பெண்ணை தேர்ந்தெடுத்து, தன்னுடைய விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டான். தொடக்கத்தில் ஏதோ கொஞ்சம் சந்தோஷமாக இருந்தானோ என்னவோ. அதன் பிறகு அந்த நினைப்பே இருப்பது போல் தெரியவில்லை.
தன் வாழ்க்கையில் வந்த நபருடன் பேசுவதற்கு நாளில் பத்து நிமிஷம் கூட ஒய்வு இல்லை. ஆபீசில் இருப்பவர்களுக்காக மணிக்கணக்காக நேரத்தை ஒதுக்குவான், அதுவும் கொண்டாட்டமாக.
அதெல்லாம் ஜாலிக்காகவா, பொழுது போக்காகவா?
அந்நியப் பெண்பிள்ளையின் கையைப் பிடித்து இழுப்பது, தலைக்கு மசாஜ் பண்ணி விடுவது!
எவனாவது பைத்தியக்காரனிடம் சொல்லச் சொல். அவர்கள்தான் நம்புவார்கள். யாரை நம்ப வைக்கப் பார்க்கிறான், இது போன்ற வார்தைகளை சொல்லி?
ரஜனிக்கு சந்தேகம் வரவில்லை என்றால் அது அந்தப் பெண்ணின் முட்டாள்தனம் அல்லது வெட்கங்கெட்டதனம். எதுவாக இருந்தால் என்ன?
பாயின் கீழே பரவும் நீர் போல் விவகாரம் முற்றிக்கொண்டுதான் வருகிறது.
இன்னும் சந்தேகம் என்ன?
முரளியின் உண்மை சொரூபம் இன்று இப்படி வெளிப்பட்டு இருக்கிறதா? இந்த நபர் முரளிதானா?
கடைந்தெடுத்த இலட்சியவாதியாக, அக்னிப் பிழம்பாக இருந்தவன்! எப்படிப்பட்ட மகன் எப்படி மாறிவிட்டான், அந்த கணினி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபிறகு!
ருக்மிணியின் கண்களில் நீர் சுழன்றது.
நினைவலைகளில் காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன.
பதினேழு வருடங்களுக்கு முன்…
நள்ளிரவு இருட்டில் தாய் மகன் இருவரும் வீட்டு வாசலில் அமர்ந்து, கண்ணீரும் கம்பலையுமாக அழுது கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது முரளிக்கு பதிமூன்று வயது.
மனைவியை, மகனை நேசிக்கும் இதயம் இல்லாத நபருடன் அந்தத் தாய், மகன் இருவருக்கும் ஒருநாளும் அமைதியாக காலம் கழிந்ததில்லை. ஒரு நாளும் சந்தோஷமாக இருந்ததில்லை. ஆனாலும் காலம் நிசப்தமாக போய்க்கொண்டுதான் இருந்தது.
அதுநாள் வரையில் கணவனிடம் அவ்வளவு தரக்குறைவான சுபாவத்தை ருக்மிணி ஊகித்தது இல்லை.
அன்று… நினைக்கவும் கூட மனம் ஒப்பவில்லை. ரகசியம் வெளியே வந்து விட்டது.
அப்பொழுதும் அந்த கணவன், கொஞ்சம் கூடத் தடுமாறவில்லை. மனைவிக்குத் தெரிந்து விட்டதென்ற லட்சியம் கூட இல்லை. “இப்பொழுது உங்களுக்கு என்ன குறை வைத்தேன்?” என்றான், கொஞ்சமும் தடுமாறாமல். திரும்பத் திரும்ப அதையே சொல்லவும் செய்தான்.
“சொல்லு! இப்போ உங்களுக்கு என்ன குறை வைத்தேன் என்று சொல்லு. உங்களுக்கு சோறு போடவில்லையா? மகனை படிக்க வைக்கவில்லையா? சொல்லு!” என்றான்.
என்ன பதில் இருக்க முடியும் ஒரு மனைவியிடம்?
மனைவி மக்களுக்கு என்ன குறை வைத்தான் என்று உணரமுடியாதவனுக்கு, அவன் போடும் சோற்றால் நாட்கள் கழிந்துகொண்டிருக்கும் மனைவி, ‘என்ன குறை வைத்தான்’ என்று சொல்லணும் என்றால் … என்ன பதில் இருக்க முடியும் மனைவிடம்?
மறுபேச்சு பேசாமல் அங்கிருந்து போய் விட்டாள் ருக்மிணி.
அவன் உறங்கி விட்டான். முரளி தூங்கி விட்டான்.
ருக்மிணி உணவையும், தூக்கத்தையும் துறந்து விட்டு வாசலில் இருட்டில் உட்கார்ந்து அழுதாள். அழுதுகொண்டே இருந்தாள்.
முரளி தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்து தாய் அருகில் அமர்ந்து தோளில் சாய்ந்து கொண்டான். “அம்மா! எதற்காக அழுகிறாய்?” கலவரமடைந்தான்.
ரொம்ப நேரம் வரையில் அவளால் சொல்ல முடியவில்லை.
அம்மாவுடன் முரளியும் சேர்ந்து அழுதான். எதற்காக என்று தெரியாமலேயே தாயுடன் சேர்ந்து அழுதான்.
“வேண்டாமடா வேண்டாம்” என்று தாய் தடுத்ததாள். மகனின் அழுகையை நிறுத்துவதற்காக தன்னுடைய அழுகையை விழுங்கிவிட்டு சொன்னாள். “உன் அப்பா… இன்னொரு குடித்தனம் வைத்திருக்கிறார் வேறு வீட்டில்” என்று சொல்லிவிட்டுத் தன்னிடம் பேசியதை எல்லாம் சொன்னாள்.
என்னதான் புரிந்ததோ தெரியாது, முரளிக்கு எவ்வளவு கோபம் வந்து விட்டது! எவ்வளவு கொதித்துப் போனான்!
இருவரும் அப்படியே உட்கார்ந்து இருந்தார்கள், இயலாமையுடன்.
“அம்மா! என்ன செய்யலாம்?” என்றான் திடீரென்று.
அந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தால் ருக்மிணிக்கு இன்றும் உடல் புல்லரிக்கும்.
“ஏதோ ஒன்று செய்யவேண்டும். அழுவது மட்டும் இல்லை. இன்னும் வேறு எதையோ செய்ய வேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
தானே வழியையும் காண்பித்தான்.
“ச்சீ… ச்சீ… இங்கே இனி இருக்க வேண்டாம்.”
‘எங்கே போவோம்? எப்படி வாழ்வோம்?’ சொல்ல நினைத்த வார்த்தைகளை தடுத்து நிறுத்தி விட்டாள்.
எப்படியாவது வாழவேண்டும். வாழ முடியவில்லையா, சாக வேண்டும்.
“பின்னே உன்னுடைய படிப்பு?”
“விட்டு விடுகிறேன்.” கொஞ்சமும் தயங்காமல் சொன்னான். “இவனுடைய படிப்பும், உணவும் யாருக்கு வேண்டும்?”
மகன் மீது நம்பிக்கை ஏற்பட்டது ருக்மிணிக்கு.
ஒரு மாதம் போவதற்குள் அவர்களின் ‘கனவு’ நினைவாகி விட்டது. அவர்களுடையது அல்லாத வீட்டிலிருந்து கட்டிய ஆடையுடன் வெளியேறினார்கள். அவர்களுடைய கூட்டை அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள்.
நண்பர்கள் உதவி செய்தார்கள்.
பாட்டு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு இசை ஞானம் ருக்மிணிக்கு இருந்தது. ஆனால், அதனை நம்பிகொண்டு வாழ முடியாது என்று சிறு குழந்தைகளின் பள்ளியில் ஆயாவாக சேர்ந்தாள்.
கணவானாகப் பட்டவன் வந்து, “உனக்கு என்ன குறை வைத்தேன்” என்றான் திரும்பத்திரும்ப.
“என் மகனை நான் அழைத்துக்கொண்டு போகிறேன்” என்று எல்லோர் முன்னாலும் குதித்துப் பாடினான்.
முரளி கோபத்தால் சிவந்த கண்களுடன், “யாருடா உனக்கு மகன்? தாய் இல்லாமல் மகன் எங்கிருந்து வந்தான் என்று நினைத்தாய்? இனிமேல் நான் அம்மாவின் மகன்தான். போடா போ” என்று தந்தையை துச்சமாய் பார்த்தான்.
பதிமூன்று வயதில், இளம் பருவத்தில் தாய்க்கு ஆதரவாக அவள் பக்கத்தில் நின்றான்.
மனைவி மக்களின் தொல்லை விடுபட்டதற்கு தந்தை உள்ளூர சந்தோஷப் பட்டுக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் போய் விட்டான்.
“அவனை அவ்வளவு சுலபமாக விட்டு விடக் கூடாது. கோர்டுக்கு இழுத்து ஜீவனாம்சம் கக்க வைக்க வேண்டும். இல்லா விட்டால் முரளி எப்படி படிக்க முடியும்?” என்றார்கள் நண்பர்கள்.
“ச்சீ சீ… அவனுடைய பணத்தில் படிப்பதை விடக் கூலி வேலை செய்வேன்” என்றான் முரளி. இரண்டாவது மாதம் மணியார்டர் அனுப்பி வைத்தான் தந்தை.
ருக்மிணி தயங்கினாள்.
“அவன் பணமா? பெற்றுக்கொள்ள வேண்டாம்” என்று தாயை எச்சரித்தான் முரளி.
“நாம் கேட்கவில்லை. தானாகவே அனுப்பி வைத்திருக்கிறான். பெற்றுக்கொள்ளவில்லை என்றால், உன் படிப்பு தடைபட்டு விடாதா?” என்றாள் தாய்.
முரளி சம்மதிக்கவில்லை. “நம்மிடம் கொஞ்சம் கூட அன்பு இல்லாதவன் கொடுக்கும் பணத்தில் நான் படிக்க வேண்டுமா? எனக்கு விருப்பம் இல்லை. உனக்கு எதற்கு? நான் கட்டாயம் படிப்பேன். அந்தப் பணம் இல்லா விட்டாலும் படிப்பைத் தொடருவேன்” என்றான் துணிச்சலுடன்.
“பெரிய படிப்புக்கு போனால் நிறைய செலவாகும் என்று சொல்வார்களே?” என்றாள் தாய்.
“பரவாயில்லை அம்மா. பெரிய படிப்பு படிக்கவில்லை என்றால் என்னவாகி விடும்? வேலை பார்த்துக்கொண்டே படிப்பேன்” என்றான் திரும்பவும்.
தந்தை இழைத்தத அநியாயத்திற்கு, மகன் அவ்வளவு பிடிவாதமாக இருப்பதைப் பார்த்து ருக்மணி பூரித்துப் போனாள். நான்கு நாட்கள் கழித்து மனியார்டரை திருப்பி அனுப்பி விட்டார்கள்.
அன்று முதல் தாய்க்கு மகன், மகனுக்கு தாய் ஆதாரம்!
அந்த இருவருக்கும் ஆதரவு ஓரிரு உறவினரும், நண்பர்களும்.
ருக்மிணி ஆயா வேலை பார்த்துக்கொண்டே தையல் வேலை கற்றுக்கொண்டாள். இரண்டு மூன்று குழந்தைகளுக்குப் பாட்டு கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டாள்.
முரளி தாயின் சொல்லை வேதம் போல் பின்பற்றினான். போட்ட உணவை சாப்பிட்டான். கொடுத்த துணியை உடுத்தினான். கால்களுக்குச் செருப்பு இல்லாவிட்டாலும் பொருட்படுத்தாமல் பள்ளியில் நடமாடினான். புத்தகங்கள் இல்லாவிட்டாலும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று படித்தான். ‘அது வேண்டும், இது வேண்டும்’ என்று தாயை ஒருநாளும் தொந்தரவு செய்தது இல்லை.
சிறுவனைப் பார்த்து பூரித்துப் போகாதவர்கள் இல்லை.
ஆனால் அந்த தாயும் மகனும் நண்பர்களிடமிருந்து பண உதவியை மட்டும் ஒரு நாளும் ஏற்றுக்கொண்டது இல்லை. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், எத்தனை தேவைகள் இருந்தாலும் அவ்வப்பொழுது சமாளித்து, தங்கள் வாழ்க்கைதான் தங்கள் லட்சியம் என்பது போல் எல்லா இடைஞ்சல்களையும் பொறுத்துக்கொண்டு காலத்தைக் கழித்தார்கள்.
முரளி எப்போதும் படிப்பில் மூழ்கி உற்சாகமாக இருந்து வந்தான். கல்லூரி பத்திரிகையிலும், அங்கே இங்கேயும் கவிதைகள் எழுதி வந்தான். செடிகொடிகளைப் பற்றி, பறவைகளைப் பற்றி மாணவர் சங்கங்களில் சொற்பொழிவு ஆற்றி வந்தான். மாணவர்களின் உரிமைகளைப் பற்றி, தேவைகளைப் பற்றி எங்கேயாவது கூட்டம் நடந்தால் அங்கே ஓட்டமெடுப்பான். ஒருநாளும் ஆடம்பரங்கள் பக்கம் திரும்பிக் கூட பார்த்தது இல்லை. அந்த நாட்களில் சலவை செய்த சட்டை என்றால் என்னவென்றால் தெரியாது.
ஒருவருக்கு ஒருவராக வாழ்ந்து கொண்டிருந்த அந்த தாய் மகன் இருவருக்கும் பத்து பன்னிரண்டு ஆண்டுகள் கண்ணிமைப்பதற்குள் கழிந்து விட்டது போல் இருந்தது. தொட்டதெல்லாம் பொன்னாகத் துலங்கியது போல், எழுதிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வந்தான் முரளி. இருபத்தி இரண்டு வயதில் சிறிய கணினி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டான். முதல் ஆண்டு முடிவதற்குள் இரண்டு கம்பெனிகள் மாறினான்.
வேலை பாட்டுக்கு வேலை. படிப்பு பாட்டுக்கு படிப்பு. எப்போதும் ஏதோ ஒரு தேர்வுக்குப் படித்துக்கொண்டே விளையாட்டுபோல் பொழுது போக்கி வந்தான்.
வேலை இருந்தாலும், தேர்வுகள் இருந்தாலும் உற்சாகத்துடன் கூட்டங்களுக்குப் போய்க்கொண்டுதான் இருந்தான். புத்தகங்கள் வாங்கி வருவான். நாளிதழ்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து வைத்து தனக்குப் பிடித்த கட்டுரைகளை எல்லாம் கத்தரித்து பத்திரப்படுத்தி வந்தான். டேப்ரிகார்டரில் மணிக்கணக்காக பாடல்களைக் கேட்டு வந்தான். கொஞ்சம் சமயம் கிடைத்தாலும் நூலகத்தில் உட்கார்ந்து கொள்வான். தன்னிடம் வந்த புத்தகங்களை எல்லாம் தாய்க்குப் படித்துக் காட்டுவான். அந்த நாட்களில் வீட்டிலும், வெளியிலும் எல்லாமே தானாக அலைந்து திரிந்து வந்தான்.
மூன்று வருடங்கள் போவதற்குள் நான்கு கம்பெனிகள் மாறிவிட்டான். மேனேஜ்மென்ட் தேர்வுகள் எழுதி வேலையிலும் முன்னேறினான். இன்னும் முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறான்.
“அம்மா! இப்பொழுது எனக்கு சம்பளம் எவ்வளவு என்று நினைக்கிறாய்?” என்றான் ஒரு நாள் திடீரென்று.
“என்னவோப்பா. எவ்வளவாக இருந்தால் என்ன?” என்றாள் தாய் முறுவலித்துக்கொண்டே.
“அப்படி எடுத்தெறிந்து விடாதே. பன்னிரெண்டாயிரம்.”
“ச்சா!”
“ச்சா என்ன? சந்தோஷப் படுவார்களா? அல்லது இச் கொட்டுவார்ளா?”
“சந்தோஷப்படாமல் என்ன?”
திரும்பவும் ஒருநாள் திடீரென்று, “அம்மா! எனக்கு பிரமோஷன் கிடைத்திருக்கிறது” என்பான்.
இல்லாவிட்டால், “எங்கள் கம்பெனியில் எனக்கு அவார்ட் கிடைத்திருக்கிறது” என்பான். இல்லையா வேறேதோ சொல்வான்.
“இந்த வருடம் எங்கள் கம்பெனியின் டார்கெட் எவ்வளவு என்று தெரியுமா? நூறு கோடி!”
“அப்படி என்றால்?”
“அதாவது அவ்வளவு ரூபாய்க்கு பிசினெஸ் பண்ண வேண்டும் என்று எங்கள் டைரக்டர்ஸ் போர்ட் முடிவு செய்திருக்கிறது.”
‘கோடி ரூபாய்’ என்றால் எவ்வளவு என்று கற்பனைக்குக்கூட எட்டாது. அப்படி இருக்கும்போது ‘நூறு கோடி ரூபாய் நூறு பைசாக்கள்’ என்பது போல் சொல்லுவான்.
“எப்படி செய்வீர்கள் அந்த அளவுக்கு பிசினெஸ்?”
“செய்து முடிப்போம். பார்த்துக்கிட்டே இரு,”
கால்களுக்கு செருப்பு இல்லா விட்டாலும் பொருட்படுத்தாமல் சுற்றிய முரளிதானா இந்த முரளி! திகைத்துப் போவது தாயின் பங்காயிற்று.
ஆனால் ‘இந்த முரளி சிறுவயது முரளிதான்’ என்று ரஜனியைத் தேர்ந்து எடுத்துக் கொண்டதில் நிரூபித்துவிட்டான்.
நண்பர்கள் எத்தனையோ வரன்களைப் பற்றி சொன்னார்கள். வரதட்சிணை, சீர் வரிசை என்று ஆசை காட்டினார்கள். எதையும் லட்சியப்படுத்தவில்லை முரளி. வேண்டவே வேண்டாம் என்றான். பெண்பார்க்கும் படலத்திற்குக் கூட வரமாட்டேன் என்றான். ஆபீசு வேலையில் வேறு கம்பெனிகளுக்கு போனபோது அறிமுகமான ரஜனியைத் தேர்ந்தெடுத்தான்.
அவளை அழைத்து வந்து தாயிடம் அறிமுகப் படுத்தினான்.
“உன் விருப்பம்தான் என்னுடைய விருப்பம் கண்ணா” என்று மகிழ்ந்து போனாள் ருக்மிணி.
அந்தப் பெண்ணுடையது வேறு ஜாதி என்று தெரிந்தபோது மேலும் சந்தோஷப்பட்டாள்.
“பையன் கை நிறைய சம்பாதிக்கிறான். ஆர்ப்பாட்டமாக கல்யாணம் நடத்துவோம். தந்தையையும் அழைப்போம். வெட்கத்தால் தலை குனிந்து கொள்ளட்டும்.” நண்பர்கள் சொன்னார்கள்.
முரளி இதற்கு சம்மதித்து விடப் போகிறான் என்று ருக்மிணி பயந்தாள். ஆனால் தாயை முந்திகொண்டு முரளி அந்த எண்ணத்தை மறுத்து விட்டான்.
முரளி, ரஜனி மேலும் நான்கு நண்பர்கள் சேர்ந்து பதிவுத் திருமண அலுவலகத்திற்கு சென்றார்கள். இரண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். பிறகு வீட்டுக்கு வந்து எல்லோரும் சாப்பிட்டுவிட்டு சிரிப்பும் கும்மாளமுமாக பொழுது போக்கினார்கள். அவ்வளவுதான்! திருமணம் முடிந்து விட்டது.
திருமணம் நடக்கும்போது ரஜனியின் சம்பளம் ஆயிரம் என்றால், முரளிக்கு பதினைந்தாயிரம்.
“என்னுடைய சம்பளத்துடன் ஒப்பிட்டால் உன்னுடையது பதினைந்தில் ஒரு பங்குதான்.” விளையாட்டாக முரளி சொன்னான் என்று ரஜனி பேச்சுவாக்கீல் சொன்னபோது, ருக்மிணி நெற்றியைச் சுளித்தாள்.
முரளி அப்படிச் சொன்னதற்கும், அதை ரஜனி சிரித்துக் கொண்டே தன்னிடம் சொன்னதற்கும் ருக்மிணிக்குக் கொஞ்சம் கோபம் கூட வந்தது.
“இதென்ன பேச்சு முரளி? அப்படிச் சொன்னால் அந்தப் பெண்ணின் மனம் காயப்படாதா?” என்றாள்.
“சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். அவ்வளவுதான்.”
“அதென்ன விளையாட்டு? அவரவர் வேலை அவரவர்களுக்கு உசத்தி. சிறுவயது விஷயங்களை எல்லாம் மறந்து விட்டாய் போலும். நான் ஆயா வேலையில் சேர்ந்தபோது மாதம் நூறு ரூபாய் கொடுத்தார்கள். அதையே ‘ஆயிரம் கட்டி வராகன்’ என்று நினைத்து வாழ்ந்து வந்தோம். நினைவு இல்லையா?’
முரளி உண்மையிலேயே வெட்கமடைந்தான். “உண்மையிலேயே விளையாட்டுக்குத்தான் சொன்னேன்.” திரும்பத் திரும்பச் சொன்னான்.
அன்று அப்படிச் சொன்னவன், திரும்பவும் ஒரு நாள் ரஜனியின் முன்னிலையில் தாயிடம், “ரஜனிக்கு அந்த வேலைதான் எதற்கு? வீட்டில் நமக்கு என்னதான் குறைவு?” என்றான்.
ரஜனி நொந்து கொள்ளப் போகிறாள் என்று ருக்மிணி கலவரமடைந்தாள். ஆனால் ரஜனி முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ருக்மிணி கோபமாக பார்த்தாள். “என்ன பேசுகிறாய் முரளி? மூளை இருந்துதான் பேசுகிறாயா? உனக்கு கை நிறைய சம்பளம் வருகிறது என்று அந்தப் பெண் வேலையை விட்டுவிட்டு வீட்டில் உட்கார்ந்து இருக்க வேண்டுமா? எந்தக் குறையும் இல்லாமல் மனைவியை நீ பார்த்துக் கொள்வாயா? நீ பேச வேண்டிய வார்த்தைகள்தானா இவை?”
அதற்குப் பிறகு ரஜனியின் வேலையைப் பற்றி பேசுவதை விட்டு விட்டான்.
எப்போதும் கம்பெனி! கம்பெனி! வீட்டிலும் வெளியிலும் கம்பெனி பற்றிய ஜபம் தவிர வேறு பேச்சு இல்லை. காலை ஒன்பது மணிக்குப் போனால் இரவு திரும்புவதற்கு பத்தோ பதினொன்றோ. சில சமயம் பன்னிரண்டு மணியும் ஆகி விடும். நாளில் பதினான்கு அல்லது பதினாறு மணி நேரம் கம்பெனிக்காகத்தான்!
சில நாட்கள் குதித்து கும்மாளம் போட்டபடி வருவான். “அரசாங்கத்திலிருந்து எங்களுக்கு ஐம்பது லட்சத்திற்கு ஆர்டர் வந்திருக்கிறது” என்று பூரித்துப் போவான்,
மறுநாளோ மூன்றாவது நாளோ முகத்தைத் தொங்கபோட்டுக் கொண்டு வருவான். “வேறு கம்பெனி அந்த ஆர்டரை தட்டிக்கொண்டு போய் விட்டது. போனால் போகட்டும். இதை மிஞ்சிய ஆர்டர் ஒன்று ஒரு கோடிக்கு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிறோம்” என்பான்.
“அது போகட்டும். இவ்வளவு தாமதம் ஏன்?
“எம்.டி.யுடன் மீட்டிங். அதனால் தங்க வேண்டியதாயிற்று. அவர் கோவாலிருந்து வரணும். பிளயிட் தாமதமாகி விட்டது.”
குளித்து விட்டு வருவான். “எங்க எம்.டி. லால்வாணி, ரொம்ப புத்திசாலி. ஜாலியாக பேசுவார்” என்பான். ‘டைரக்டர்கள் எல்லோரும் திருட்டுப் பசங்கள்’ என்று தானே பலமுறை சொல்லியிருக்கிறான். பின்னே லால்வாணி நல்லவர் எப்படி ஆனார் என்று தெரியவில்லை.
“நல்லவர் என்று சொன்னேனா? புத்திசாலி என்று சொன்னேன். உண்மையிலேயே புத்திசாலிதான்.”
“போகட்டும் விடு. நீ விட்டில் இருக்கும் போது கம்பெனி விஷயங்கள் பேசாதே.” சில சமயம் ரஜனி கூட சலித்துக் கொள்வாள்.
“இன்றைய நாளேட்டை பார்த்தாயா?” என்று கேட்டால்…
“நாளேட்டை பார்த்து ஒரு வாரமாகி விட்டது” என்பான்.
‘இதென்ன வேலை? இவ்வளவு மோசமாக இருக்கிறது! எல்லோரும் இப்படித்தான் நடந்துக் கொள்கிறார்களா இந்த கம்பெனியில்?’ ருக்மணி வியப்படைந்து போவாள்.
முரளி குழுத்தலைவர் ஆனபிறகு வீட்டிற்கு போன் கூட வந்து விட்டது. இனி நள்ளிரவு வரையில் எங்கிருந்தெல்லாமோ யாரோ ஒருத்தர், எதையாவது கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
சாப்பிடும் போது கூட போனில் பேசிக்கொண்டே இருப்பான். பிசினெஸ் ஜர்னல்ஸ் படித்துக்கொண்டே போனில் உரையாடுவான்.
நாளில் மொத்தமாக வீட்டில் கழிப்பது ஏழெட்டு மணி நேரம்தான்! ஏழு மணி நேரம் தூக்கத்திற்கு. மிச்சம் ஒரு மணி நேரம் குளியல், சாப்பாடு மற்ற கடமைகளுக்கு.
“கார் வாங்க லோன் தருவார்களாம். வாங்குவோமா?” என்று கேட்டான் ஒருநாள்.
ஸ்கூட்டர் வாங்கும்போதே தாய் மறுப்பு சொன்னாள். “ஸ்கூட்டரில் போனால் விபத்துகள் நடக்கும். பேருந்தில் போனால் காரியம் ஆகாதா?” என்றாள்.
ஸ்கூட்டரை தவிர்க்க முடியவில்லை. இப்போது கார்!
“நீங்கள் இருவரும் ஸ்கூட்டரில் போய்கிட்டு தானே இருக்கீங்க? இப்போ கார் எதற்கு?” மறுபடியும் மறுப்பு சொன்னாள் தாய்.
“நாம் மூவரும் போகணும் என்றால்?”
“அதற்காக கார் வாங்க வேண்டுமா? இல்லை என்றால் போக முடியாதா?”
“கம்பெனி லோன் கொடுக்கிறது இல்லையா.”
“யானை வாங்குவதற்கு லோன் கொடுப்பார்களா என்று விசாரித்துப் பார்.”
அந்த சமயத்திற்கு கார் பற்றிய பேச்சு நின்று விட்டது.
அது என்ன கம்பெனியோ! எப்போது பார்த்தாலும் விழாக்கள்தான். பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு அடிக்கடி டின்னர்கள்! பரிசுகள்!
முரளி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பொருளை வீட்டுக்கு கொண்டு வருவான். “இன்று எங்கள் ‘கம்பெனி டே’ என்று பூதம் போன்று ஒரு கருப்பு கோட்டு கொண்டு வந்தான் ஒரு முறை. அதன் மீது கம்பெனியின் பெயர்.
இன்னொரு முறை அரை டஜன் காபி கோப்பைகள். அவற்றின் மீது கூட கம்பெனியின் பெயர். ஒரு முறை உணவு பரிமாறும் கிண்ணங்கள். அவற்றுக்கு நீண்ட காதுகள். அதன் மீதும் கம்பெனியின் பெயர்! ஒருமுறை தண்ணீர் கூஜா, இன்னொரு முறை சூட்கேஸ். ஒரு முறை கேஸரோல்.
பார்த்துப் பார்த்து ரஜனி சலித்துக் கொண்டாள். “பணமாக கொடுக்கக் கூடாதா? பணம் கொடுத்தால் நமக்கு வேண்டியதை வாங்கிக் கொள்வோம் இல்லையா? நமக்கு என்ன வேண்டுமென்று அவர்களுக்கு எப்படி தெரியும்? இந்த கோப்பைகளை பார், பெரிய அளவில் லோட்டா போல் இருக்கு. கோப்பைகள் என்றால் சிறிய அளவில் பார்க்க அழகாக இருக்கணும். இந்த சாமான்களை எடுத்து வைக்க முடியாமல் திண்டாடுகிறேன்.” பலமுறை சொல்லியிருக்கிறாள்.
“நமக்கு தேவையில்லை என்றால் யாரிடமாவது கொடுத்து விடுங்கள்” என்றான் முரளி.
ஒரு நாள் வீட்டுக்கு வந்ததுமே, “அம்மா! உன்னிடம் நல்ல புடவை இருக்கா?” என்று கேட்டான்.
“அதென்னது? எதற்காக கேட்கிறாய்?”
“அடுத்த வாரம் எங்கள் கம்பெனியில் ஃபேமிலி டே. நீயும் வரணும். நாளைக்கு உனக்காக பட்டுப் புடவை ஒன்று வாங்கி வரட்டுமா?”
“உங்கள் கம்பெனி பஜனையை நாங்களும் தொடங்க வேண்டுமா? எங்களை இதுபோல் வாழ விடு” என்றாள் ருக்மிணி.
ஃபேமிலி டே அன்று முரளி கோட், டை அணிந்துகொண்டு தயாரானான். ரஜனி என்ன புடவை கட்ட வேண்டும் என்றும், எப்படி தலையை வாரிக்கொள்ள வேண்டும் என்றும் தானே ஆணையிட்டு, அதன்படி அழைத்துப் போனான்,
விரைவிலேயே இரயிலில் முதல் வகுப்பு பயணத்தைத் தாண்டி விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டான். கம்பெனி வேலையாக எங்கே போக வேண்டுமென்றாலும் விமானப் பயணம்தான்.
“கோவாவில் மீட்டிங் இருக்கு” என்பான். காலையில் போய் மாலையில் வந்து விடுவான். அது இல்லை என்றால் கல்கத்தா கிளையில் இன்டர்வ்யூக்கள்! டில்லியிலோ, பெங்களூரிலோ பயிற்சி முகாம்கள்!
ஊரில் இருந்தால் நள்ளிரவிலாவது வீட்டுக்கு வருவான். வேறு ஊர்களுக்கு போனால் (விமானப் பயணமாகவே இருக்கட்டும்) இருபத்திநான்கு மணி நேரமும் கம்பெனிதான். ஹோட்டட்லில்தான் உணவும், தூக்கமும்.
இன்னும் குழந்தைகள் இல்லாததால் பரவாயில்லை. குழந்தைகள் இருந்தால் இதுபோல் எப்போதும் வெளியே போய்க் கொண்டு இருந்தால் எப்படி சமாளிப்பது?
“முரளி எங்கே போனாலும் விமானப் பயணம் தானாமே?”
அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அதேதோ பெரும் பாக்கியம் என்பதுபோல் கேட்பார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் இருக்கும்.
வெளியூருக்குப் புறப்படும் போதெல்லாம் உயிரை கையில் வைத்துக்கொண்டுதான் போவான். போகும் முன் மனைவியிடம் “ரஜனி! திரும்பி வருவேனோ இல்லையோ. வரவில்லை என்றால் என்னுடைய ஸ்கூட்டரை நீ எடுத்துக்கொண்டு விடு” என்று பரிகாசம் பண்ணுவான்.
பாவம் அந்தப் பெண்! அழாத குறையாக வருத்தப்படுவாள். “சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். விட்டுத்தள்ளு” என்பான்.
“அதென்ன விளையாட்டு?” முகம் சுருங்கி விடும் ரஜனிக்கு.
விமானம் தரையைத் தொட்டு அதிலிருந்து வெளியே வந்ததும், ‘அப்பாடா! பிழைத்து விட்டேன்’ என்று நினைத்துக் கொண்டதாக சொல்வான் வீட்டுக்கு வந்தபிறகு.
சில சமயம் இதயத்துடிப்பு நின்று விடும் போல் இருக்கும். சில சமயம் சொல்ல முடியாத இரக்கம் ஏற்படும். நேரத்திற்கு உணவு இருக்காது, உறக்கம் இருக்காது. சம்பளத்தை பார்த்தால் ஆயிரக்கணக்கில்!
பிரமோஷன் என்பான். அவார்டுகள் என்பான். அப்போதைக்கப்போது ஏதாவது ஒரு இரையைக் காண்பித்து பைத்தியமாக மாற்றி விடுகிறார்கள்.
கை நிறைய சம்பளம், பதவி உயர்வும் மேலும் மேலும் வந்து கொண்டே இருந்தால், கம்பெனியுடன் ஈஷிக் கொண்டு இருக்காமல் என்ன செய்வான்? நாளுக்கு நாள் அப்படித்தான் மாறிக் கொண்டு வருகிறான்.
திடீரென்று ஊருக்குக் கிளம்பச் சொன்னால், போகத்தான் வேண்டுமா என்று நினைக்க மாட்டான். கம்பெனி வேலை! அவசரமான வேலை! ட்யூட்டிக்கு போகவில்லை என்றால் எப்படி?
எங்கே போனாலும் போட்டோக்கள் எடுத்துக்கொண்டு வருவான். அதென்ன கம்பெனியோ? என்ன வேலையோ? ஆண் பெண் எல்லோரும் பேஷன் அணிவகுப்புக்கு வந்தாற்போல் தென்படுவார்கள். ஆபீசில் கூட விலை உயர்ந்த ஆடைகள்தான். பெண்பிள்ளைகள் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து, தலைவிரிகோலமாக, மேக்கப்புடன் பளபளவென்று காட்சி தருவார்கள். ஆண் பெண் பாகுபாடு இன்றி தோளில் சாய்ந்து நிற்பார்கள். அதுபோன்ற புகைபடங்களை பார்க்கும் போது ருக்மிணிக்கு கவலையாக இருக்குது.
“முரளி! நீ இதுபோன்ற கம்பெனியில் இல்லாமல் ஏதாவது சிறிய வேலையில் இருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். என்ன வேலை இது?” சலித்துக் கொள்வாள் தாய்.
முரளி சிரிப்பான். “இப்போ என் சம்பளம் எவ்வளவு என்று நினைக்கிறாய்? ஐம்பதாயிரம்! டாக்ஸ் நிறைய போகும் என்று வைத்துக் கொள்.”
“சம்பளம் உயர்ந்து என்ன பயன்? எப்படி மாறிக்கொண்டு இருக்கிறாய் என்று ஒரு முறை திரும்பிப் பார். என்றாவது நாளேட்டை பொறுமையாக படித்தாயா? நூலகத்திற்கு சென்று எத்தனை நாளாகிறது? புத்தகங்களை படிப்பதை அறவே விட்டு விட்டாய். பாட்டு கேட்பதை விட்டு விட்டாய். ஒரு காலத்தில் எங்கே இலக்கியக் கூட்டம் இருந்தாலும் ஓடிப் போவாய். இப்போ அதைப்பற்றிய நினைப்பு கூட இல்லை. போகட்டும், வீட்டில் ஒரு மணி நேரமாவது தங்கி இருக்கிறாயா?”
“இந்த சீசனில் நான் கொஞ்சம் பிசி அம்மா.”
“எப்போதும் சொல்கிற வார்த்தைதானே இது. நாளுக்கு ஏழெட்டு மணி நேரத்தை விட அதிகமாக கம்பினியில் எதற்காக இருக்கணும்? அதற்கு தகுந்த சம்பளம் கொடுத்தால் போதும் என்று சொல்லு. ஆயிரமாயிரமாக சம்பாதித்து என்ன செய்யப் போகிறாய்?
தாயின் பேச்சை கேட்டு சிரித்து விட்டு சும்மா இருந்து விடுவான்.
சாதாரண வேலையில் இருந்த நாட்களில் மாலை ஆனதுமே வீட்டுக்கு ஓடி வந்து விடுவான். தாய் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தால், “நீ துணிகள் மடித்து வைக்கும் வேலையை பார். இல்லையா, புத்தகத்தைப் படி. நான் சமையலை முடித்து விடுகிறேன்” என்று கை காரியத்தை பிடுங்கிக் கொள்வான்.
இப்போ எல்லா சந்தோஷங்களும் கம்பெனிக்குதான். புத்தகம் படிக்கும் நேரம் முழுவதும் கம்பெனிக்குதான். குடும்பத்தாருடன் உரையாடும் நேரம், சேர்ந்து சாப்பிடும் நேரம் எல்லாம் கம்பெனிக்குதான். வாழ்க்கையே கம்பெனிக்குதான்!
“பதவி உயர்வு தருவார்கள் என்றும், சம்பளத்தை உயர்த்துவார்கள் என்றும் நாள் முழுவதும் வேலைதானா? வீடு, குடும்பம் எதுவும் இல்லையா உனக்கு? அந்தப் பெண்ணைப் பார். மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடுவாள். நீ ஏன் வருவதில்லை? மீதி இருக்கும் வேலையை மறுநாள் பார்த்துக்கொள். மாலை முதல் உனக்காக எதிர்பார்த்துக் கொண்டு இருப்பாள். நள்ளிரவு ஆகும் போது வந்து சேருவாய். ஒரு நாளா இரண்டு நாளா? எத்தனை நாட்கள் யார்தான் சகித்துக் கொள்வார்கள்? வேலை வேலை என்று வீட்டை லட்சியம் செய்யாமல் சுற்றிக்கொண்டு இருந்தால், வீட்டில் இருப்பவள் என்னதான் செய்வாள்? பார்த்துப் பார்த்து சலிப்படைந்து வெளியில் கம்பெனி தேடிக் கொள்வாள். என்றாவது வீட்டை விட்டு வெளியேறி விடுவாள். அப்படி நடந்தால் தவிர உனக்கு புத்தி தெளியும் என்று தோன்றவில்லை.”
தாய் அவ்வளவு கடுமையாக கடிந்து கொண்டாலும், சிரித்து விட்டு, “உனக்கு எதைப் பார்த்தாலும் பயம்தான்” என்பான்.
“எனக்கு எல்லாமே பயம்தான். ஐம்பதாயிரம் சம்பளத்தைப்பார்த்து உனக்கு தைரியம்! எனக்கு அவ்வளவு தைரியம் எங்கிருந்து வரும் சொல்லு?” என்பாள் ருக்மிணி.
இதுபோன்று கடுமையான உரையாடல் நிகழ்ந்த பிறகு நான்கு நாட்கள் சீக்கிரம் வீட்டுக்கு வருவான். அதன்பிறகு வழக்கம்போல்தான்.
அர்ஜென்ட் மீட்டிங், தவிர்க்க முடியவில்லை என்பான். பிராஜெக்ட் முடியும் நேரம், டார்கெட் அடைய வேண்டும் என்பான்.
ரஜனியின் மனம் வருத்தப்படக்கூடும் என்று ருக்மிணிக்கு கவலையாக இருக்கும். அவளானால் எது நடந்தாலும் கோபம் கொள்ளத் தெரியாதவள் போல் இருப்பாள்.
அதுபோன்ற மெத்தனமான சுபாவம் கொண்டவள் கூட சிலசமயம் சோம்பிப் போன முகத்துடன் மௌனமாக வளைய வந்துக் கொண்டிருப்பாள்.
எப்படி சமாதானப் படுத்துவானோ, எப்படி கெஞ்சுவானோ தெரியாது. சிறிது நேரம் கழித்து ரஜனி சிரித்த முகத்துடன் தென்பட்டு, மாமியாரின் பயத்தை எல்லாம் பொய்யாக்கி விடுவாள்.
மற்ற எரிச்சல் எல்லாம் ஒரு பாடு, ஸ்ரீலதா விவகாரம் ஒரு பாடு! இதற்கு எப்படி தீர்வு காண்பது?
தானே தேர்ந்தெடுத்து, தன்னுடைய விருப்பத்தின் பேரில் ஒருத்தியை தன் வாழ்க்கையில் அழைத்து வந்தான். அவளிடம் எந்த அளவுக்கு சிரத்தையுடன் இருக்கிறான் என்றும், இன்னொருத்தியிடம் எந்த அளவுக்கு ஆர்வத்துடன் இருக்கிறான் என்றும் பார்த்தால் தெரியவில்லையா?
ஆரம்ப காலத்தில் கணவன் மனைவி இருவரும் இரவு நேரத்தில் சிரிப்பும் பேச்சுமாக உரையாடியபடி சேர்ந்து சாப்பிடுவார்கள்.
ரஜனி ஏதாவது நாவலை வாசித்துக் காண்பித்தால், முரளி ஆனந்தமாக கேட்டுக் கொண்டிருப்பான். தான் சேர்த்து வைத்த பாடல்களை போட்டு காண்பிப்பான். ரஜனியுடன் பேசுவதற்கு துடிப்பாக இருப்பது போல் தென்படுவான்.
எப்படி மாறினான்? எப்போது மாறினான்?
அவனுள் வந்த மாற்றத்தை ரஜனி கவனித்ததாகவே தெரியவில்லை.
“சாப்பிடுவோமா?” என்று ரஜனி கேட்டால், பிசினெஸ் ஜர்னலில் முகம் புதைத்து, “நீ சாப்பிட்டு விடு” என்பான்.
அவள் ஏதாவது படித்துக் காண்பிக்கும்போது கேட்டுக் கொண்டிருப்பவன், போன் ஒலித்ததுமே ஓட்டமாக ஓடிவிடுவான்.
ஸ்ரீலதா தான்! பொழுது போக்கு உரையாடல்கள் கால்மணிநேரம்! ரஜனி எப்போதும் போல் மறுபடியும் புத்தகம் படிப்பதைத் தொடங்குவாள்.
‘புத்தகத்தை விட்டெறிந்து விட்டு அந்தப் பெண் ஏன் எழுந்து போகவில்லை?’ ருக்மிணிக்கு தோன்றும்.
நேற்று வரையில் ருக்மிணிக்கு மகன் மீது சந்தேகம் வரவில்லை. ஆனால் கண் முன்னால் இத்தனை நடக்கும்போது கூட சந்தேகப்படவில்லை என்றால்… அவ்வளவு கண்மூடித்தனமான பாசம் யாரைக் காப்பாற்றப் போகிறது?
டாக்ஸியை விட்டு இறங்கியதுமே, “ரஜனி! நான் வந்து விட்டேன். என் ஸ்கூட்டர் எனக்குத்தான்” என்பான்.
நல்லபடியாக வந்து சேர்ந்து விட்டான் என்ற சந்தோஷத்தில் ரஜனி சிரிப்பாள். ஊருக்கு போய் வந்த விசேஷங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பான். ஒருமுறை அப்படிச் சொல்லும்போது…
“கடற்கரைக்கு போனோம். சினிமாவுக்கு போனோம், கப்பலில் சுற்றினோம்” என்று சூட்கேஸ் திறந்து முந்திரிப் பருப்பு பாகெட்டை உணவு மேஜைமீது போட்டான்.
“அம்மா! உனக்குத்தான்.” மெத்தென்று இருக்கும் செருப்புகளை கொண்டு வந்து தாயின் காலடியில் வைத்தான். ரஜனியின் மீது புடவை பாக்கெட் ஒன்றை வீசினான் பரிகாசமாக. “எடுத்துப் பார். லதா தான் செலெக்ட் செய்தாள். அடடா! மறந்தே போய் விட்டேன்” என்று போன் அருகில் ஓடினான். லதாவின் வீட்டுக்கு போன் செய்து “வந்து சேர்ந்து விட்டாளா?” என்று விசாரித்தான்.
“இன்னும் வரவில்லையா?” என்று பதற்றமடைந்தான். “வந்ததுமே கூப்பிடச் சொல்லுங்கள்” என்று போனை வைத்து விட்டான்.
“உடனே குளிக்கப் போயாகணும்” என்று குளியலறைக்கு ஓடினான். வெளியில் வந்துமே “யாராவது போன் செய்தார்களா?” என்று பதற்றத்துடன் கேட்டான்.
“இல்லை.” சுருக்கமாக சொன்னாள் ரஜனி.
“இல்லையா?” திரும்பவும் போன் அருகில் ஓடினான். மறுமுனையில் அந்தப் பெண்தான் பேசினாள். “இப்பொழுதுதான் பண்ணணும் என்று நினைத்தேன்” என்றாள்.
“நான் எவ்வளவு பதற்றமடைந்து விட்டேன் தெரியுமா? உன்னை வீட்டில் இறக்கி விட்டு வந்திருக்கலாம் என்று நினைத்தேன். நல்லபடியாக சேர்ந்து விட்டாய் இல்லையா. போனை வைத்து விடுகிறேன்” என்று வைத்து விட்டான்.
“சாதம் பரிமாறட்டுமா?” அதுவரையில் காத்திருந்த ரஜனி கேட்டாள்.
அதற்கு பதில் சொல்லாமல், “அம்மா! உனக்கு ஜுரம் குறைந்து விட்டதா?” என்று தாயின் அறைக்குள் போனான்.
ருக்மிணி எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள், மகனின் நடவடிக்கையை கவனித்துக்கொண்டுதான் இருந்தாள்.
நெற்றியைச் சுளித்து விட்டு, “ஜுரம் வந்தது எனக்கு இல்லை, ரஜனிக்கு. சாப்பிட்டு விட்டு வா! நாம் பேசுவோம்” என்றாள்.
ஹாலுக்குள் ஓட்டமெடுத்தான். “சாரி ரஜனி! மறந்து போய் விட்டேன். இப்போ உடல்நிலை சரிதானே? சாப்பாடு பரிமாறுகிறாயா?” உணவு மேஜை முன்னால் உட்கார்ந்தான்.
ரஜனி முறுவலுடன் பரிமாற தொடங்கினாள்.
“அடுத்த வாரம் மறுபடியும் போக வேண்டியிருக்கலாம். இன்னும் முடிவாகவில்லை. ஒருநாள்தான்.”
“கோவா தானா?”
“இல்லை, சேலம். புடவை பிடித்திருக்கிறதா?”
ரஜனி லேசாக முறுவலித்தாள். “நன்றாக இருக்கு.”
“பிடிக்காமல் எப்படி இருக்கும்? லதாவின் தேர்வு பெஸ்ட் ஆக இருக்கும். இன்று ஆபீசுக்கு போனாயா?”
“நேற்று கூட போனேன்.”
“ஜுரத்துடனேயா?”
“குறைந்து விட்டதே.”
“இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளாமல் போனாயா? விடுமுறை எடுத்திருக்கலாம் இல்லையா? உன் உடல்நலனை விடவா?”
ரஜனி முறுவலித்து விட்டு பேசாமல் இருந்தாள். எவ்வளவு அல்ப சந்தோஷி!
சாப்பிடும் கால்மணி நேரத்திற்குள் இரண்டு போன்கள். வேறு யாரோ.
சாப்பிட்டு முடித்து விட்டு தாயின் அறைக்கு வந்தான். “அம்மா! ஏதோ பேசணும் என்று சொன்னாயே. தூக்கம் கண்களைச் சுழற்றிக்கொண்டு வருகிறது. இரண்டு நாட்களாக சரியான தூக்கம் இல்லை” என்று கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த நாற்காயில் உட்கார்ந்து கொண்டான்.
“அப்படி என்றால் போய் தூங்கு.”
“இல்லை இல்லை நீ சொல்லு.”
“சும்மாதான் சொன்னேன். திரும்பவும் எங்கேயாவது போகணுமா?”
“இப்போ இல்லை. அடுத்த வாரம்.”
“சரிதான்!”
தாயின் முகத்தில் சின்ன மாற்றம் இருந்தாலும் முரளிக்கு உடனே புரிந்து விடும். “அம்மா! ஏன் எப்படியோ இருக்கிறாய்? உடல்நிலை சரியாக இல்லையா?” பதற்றத்துடன் கேட்டான்.
“அப்படி எதுவும் இல்லை.” மகன் வருவதற்கு முன்னால் இருந்த கோபம் தணிந்து விட்டாற்போல் இருந்தது.
“நேற்று முதல் ஏதோ கவலையாக இருக்கிறது. என்றோ மறந்து போன நிகழ்ச்சிகள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. உன் சிறுவயதில் உன் அப்பாவின் விஷயம் தெரிந்தபோது நாமிருவரும் இரவு முழுவதும் வாசற்படியில் அமர்ந்திருந்தது, என்ன செய்யலாம் என்று யோசித்தது… நினைவு இருக்கிறதா?”
முரளி திகைத்துப் போனான். “அதெல்லாம் இப்போது எதற்கு?” என்றான்.
“அப்படி இல்லை. சொல்லு, நினைவு இருக்கிறதா?”
“இல்லாமல் என்ன? நன்றாகவே நினைவு இருக்கிறது.”
“அப்போ நாமிருவரும் சேர்ந்து யோசித்தோம். இன்று நான் மட்டும் தனியாக யோசிக்கிறேன், என்ன செய்ய வேண்டும் என்று.”
“எதைப்பற்றி? எதற்காக யோசிக்கணும்?”
“எதைப் பற்றியாவது? நம்மைப் பற்றிதான். அன்று அந்த நபர் செய்த கொடுமைக்கு நாமிருவரும் ஒரே வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவனுடன் உறவை துண்டித்துக் கொண்டு விட்டோம். இன்று நீயே அதுபோன்ற காரியம் செய்வதற்கு உட்பட்டால், நான் என்ன செய்ய வேண்டும்? முரளி! நன்றாக யோசித்து சொல்.”
“நானா? நான் என்ன செய்து விட்டேன்? அம்மா! நான் என்னதான் செய்து விட்டேன்?” திகைத்துப் போனவன் போல் பார்த்தான் முரளி.
“நீ என்ன செய்கிறாயோ, என்ன செய்துகிட்டு இருக்கிறாயோ உனக்கே தெரியும். அவ்வளவு ஆச்சரியப் படுவானேன்? உன் தந்தை நமக்கு செய்த துரோகத்தைத்தான் நீ ரஜனிக்கு செய்கிறாய். ஸ்ரீலதாவுடன் உன் விவகாரத்தை நான் கவனிக்கவில்லை என்று நினைத்தாயா? என்னையும் சிறு பிள்ளை என்று நினைத்து விட்டாயா?” ருக்மிணி மகனை தீவிரமாக பார்த்தாள்.
முரளி வாய்வார்த்தை வராதவன் போல் ஆகி விட்டான். தடுமாறிக்கொண்டே, “அம்மா! அதென்னது? ஸ்ரீலதாவுடன் என் விவகாரமா? அப்படி பேசுகிறாயே, ஏன்?” வியப்புடன் பார்த்தான்.
ருக்மிணி நெற்றியைச் சுளித்தாள். “எப்படி பேசுகிறேன்? இருக்கும் விஷயத்தைத்தான் பேசுகிறேன். இல்லாத விஷயத்தை கற்பித்து பேசுகிறேனா? காரணமில்லாமல் உன்னை சந்தேகப்படுவதற்கு என் மனம்தான் ஒப்புமா? ஆனால் கண்களை மூடிக்கொண்டு எத்தனை நாட்கள் இருப்பேன்? ரஜனியுடன் ஒவ்வொரு நிமிடமும் நீ எத்தனை அலட்சியமாக நடந்து கொள்கிறாயோ, ஸ்ரீலதாவிடம் எவ்வளவு மோகத்துடன் இருக்கிறாயோ நான் கவனிக்கவில்லை என்று நினைத்து விட்டாயா?”
“ஐயோ! அப்படி எதுவும் இல்லை அம்மா. சத்தியம்! என்னை நம்பு. கொஞ்சம் ஜாலியாக பழகுகிறோம். அவ்வளவுதான். அதைவிட வேறு எந்த உறவும் இல்லை அம்மா. அவ்வளவுதான்… எதுவும் இல்லை.”
“முரளி! அந்தப் பெண்ணுடன் உனக்கு என்ன உறவு இருக்கிறதோ, எது இல்லையோ… பெற்ற தாயுடன் பேச வேண்டிய வார்த்தைகள் இல்லை. மனைவியுடன் பத்து நிமிடம் பொறுமையாக உன்னால் பேச முடியாது. அந்தப் பெண்ணுடன் மணிக்கணக்காக போனில் பேசிக்கொண்டு இருப்பாய். ஆபீசில் பேசுவது போறாது என்று வீட்டில் போனைப் பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பாய். எவ்வளவு மோகம் இல்லை என்றால் அந்தப் பெண்ணின் தலைக்கு மசாஜ் பண்ணி விடுவாய்? கையைப் பற்றி இழுத்துக் கொஞ்சுவாய்? உன் தந்தை போன்றவனுக்கு வேறு குடித்தனம் வைத்தால் தவறு இல்லை. உன்னைப் போன்றவனுக்கு ஜாலியாக பழகினால் தவறு எதுவும் இல்லை. எது தவறு எது சரி என்று நீங்களே முடிவு செய்து விட்டால் போறாது. அந்த கஷ்டம் கட்டிய மனைவிக்குதான் தெரியும். ரஜனியை விரும்பி பண்ணிக் கொண்டாய். யாரும் வலுக்கட்டாயமாக அவளை உன் தலையில் கட்டவில்லை.
“அதனான் என்ன? உன் மனம் மாறி விட்டது. உன் ஈர்ப்புகள் மாறிவிட்டன. உன் கையில் இல்லாதவற்றுக்கு உன்னால் என்ன செய்ய முடியும்? அதான் உன்னிடம் ஒரு வார்த்தை சொல்ல நினைக்கிறேன். எத்தனை நாட்கள் இந்த சிறையில் இருப்பாய்? துணிந்து செயல்படு! உன் மனதில் இருக்கும் எண்ணத்தை ரஜனியிடம் சொல்லிவிடு. ‘உன்னிடம் எனக்கு விருப்பம் நசிந்து விட்டது’ என்று சொல்லி விடு. உன் வழியைப் பார்த்துக்கொண்டு போய் விடு. புதிய மோகம் எத்தனை நாட்கள் வரையில் இருக்குமோ, அதுவரையில் அங்கே சந்தோஷமாக இரு. அதுவும் மாறிவிட்டால் இன்னொன்று கிடைக்காதா? ஜாலியாக இருப்பதற்குப் பஞ்சமா என்ன? ஜாலியாக இருக்க உலகத்தில் எத்தனையோ வழிகள்!
“ரஜனி பற்றியா? அவள் விஷயத்தை அவள் பார்த்துக் கொள்வாள். நீ என்ன அவளுக்கு பாதுகாவலனா? நீ இல்லை என்றால் அந்தப் பெண் செத்துவிடுவாளா? என்னைக் கல்யாணம் செய்து கொண்ட மனிதன் என்னைக் கைவிட்டபோது நான் செத்து விட்டேனா? அது போலவே அந்தப் பெண்ணும் தன் வாழ்க்கையை தான் பார்த்துக் கொள்வாள். அந்த கவலை உனக்கு தேவையில்லை. உன் வழியில் நீ போய்விடு. ஸ்ரீலதாவுடன் பேசி சீக்கிரமாக ஏற்பாடு செய்துகொள்.”
முரளி கீழ் உதட்டைக் கடித்தபடி தலைகுனிந்து உட்கார்ந்து இருந்தான்.
“தாலி கட்டியவன் கிஞ்சித் அன்பு காட்டவில்லை என்று நானும், பெற்ற தந்தை ஒரு நாளும் அன்பு செலுத்தவில்லை என்று நீயும் எவ்வளவு மனம் வெதும்பிப் போனோம் என்று மறந்து விட்டாய். அந்த ஸ்டேஜ் வந்தபோது நீயும் அதுபோலவே தயாராகி விட்டாய். அந்த மனிதன் செய்தது துரோகம் என்றால், நீ செய்வது நன்மை என்றாகி விடுமா? அந்த நபருடன் எதற்காக உறவை துண்டித்துக் கொண்டோமோ, அதே காரியத்தை நீ செய்தால், உன்னுடன் சமாதானமாக இருப்பேன் என்று நினைத்து விட்டாயா? கணவனை எதிர்த்து வாழ்க்கையில் நிலைத்து நின்றது, மகனுடன் சமாதானமாகப் போவதற்காகவா?
“நீ என்ன செய்கிறாய் என்றும், என்ன செய்துகிட்டு இருக்கிறாய் என்றும் உனக்கு தெரியும். அவ்வளவு வியப்பு அடைவானேன்? இதையெல்லாம் பார்த்துக்கொண்டு எஞ்சிய வாழ்கையைக் கழிக்கச் சொல்கிறாயா? அப்படி நடக்காது முரளி! அவரவர் வழியை அவரவர்கள் பார்த்துக் கொள்வோம். என் தையல் வேலை எனக்கு இருக்கிறது. ஆயா வேலையும் எனக்கு கிடைக்காமல் போகாது. சாப்பாட்டுக்கு சம்பாதித்துக் கொள்வது கஷ்டம் இல்லை. உன் வழி உன்னுடையது. என் வழி என்னுடையது. இதைச் சொல்லணும் என்றுதான் நேற்றுமுதல் யோசித்து வந்தேன். கேட்டாய் இல்லையா?”
முரளி பதில் சொல்லும் முயற்சி கூட செய்யவில்லை.
ரஜனி திகைத்துப் போனவளாய் கதவு அருகில் நின்றபடி கேட்டுக் கொண்டிருந்தாள். மாமியாரை இவ்வளவு கோபத்துடன் என்றுமே பார்த்தது இல்லை. கணவனை அவ்வளவு இயலாமை நிலையில் ஒரு நாளும் பார்த்தது இல்லை.
“ரஜனி! வந்து உட்கார். உன்னிடம் கூட பேசணும்” என்றாள் ருக்மிணி. ரஜனி மறுபேச்சு இல்லாமல் மேஜை விளிம்பில் உட்கார்ந்து கொண்டாள்.
“முரளியுடன் பேசியதெல்லாம் கேட்டாய் இல்லையா? ஸ்ரீலதாவின் விவகாரம் உனக்கு எப்படி இருக்கிறதோ தெரியாது. என்னால் மட்டும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“உன்னுடன் பேசுவதற்கு இரண்டு நிமிடங்கள் கூட ஒதுக்க மாட்டான். அவளுக்காக போன் அருகில் தவம் கிடக்கிறான். நீ விருப்பத்துடன் புத்தகத்தை படித்துக் காட்டும்போது, போன் மணி ஒலித்தால் போதும், உன்னைத் தள்ளிவிட்டு, அவளுடன் பொழுது போக்குவான்.
“அது போறாதா, உன் உடல் தகித்துப் போவதற்கு? உன் ரத்தம் கொந்தளிப்பதற்கு? இதெல்லாம் உன் கண் முன்னாலேயே நடந்து கொண்டிருக்கும். ஆனாலும் பார்ப்பதற்கு நீ விரும்ப மாட்டாய். நீ வருத்தப்பட்டு ஒருநாளும் நான் பார்த்தது இல்லை. எருமை மாட்டின் மேல் மழை பெய்தாற்போல் இவ்வளவு மெத்தனமாக எப்படி இருக்கிறாய் என்று எனக்குப் புரிபடவில்லை. முரளிக்கு உன்மீது காதல் நசிந்து விட்டது என்று உனக்குப் புரியவில்லையா ரஜனி? மனங்கள் ஒத்துப் போகாத தாம்பத்தியம் எதற்கு என்று அவனிடம் சொல்லக்கூடாதா? அவன் வழியில் அவன் போகட்டும் என்று விட்டுவிடக் கூடாதா? உனக்கு இன்னொரு வழி ஏற்படும் வரையில் நான் உனக்கு உறுதுணையாக இருக்கிறேன். என்னை நம்பு. முரளியை இந்த சிறையிலிருந்து அனுப்பிவிடு. யாருடன் இருந்தால் அவனுக்கு சந்தோஷமாக இருக்குமோ அவர்களுடன் சந்தோஷமாக வாழச்சொல். உன்னுடன் சந்தோஷமாக இல்லை இல்லையா? அப்படிப்பட்ட மனிதனுடன் வாழ்க்கை உனக்கு எதற்கு? உன்னால் அதுபோல் நடந்து கொள்ள முடியாதா? ஏன் முடியாது? முரளியின் நடத்தை உனக்கு பிடித்து இருக்கிறதா? இதுபோலவே சகித்துக் கொண்டு இருக்கப் போகிறாயா? உன் சம்பளத்தை விட அவன் சம்பளம் இருபது அல்லது முப்பது மடங்கு அதிகம். அவன் உனக்காக வாங்கித் தராத பொருள் இல்லை. நாளையோ மறுநாளோ கார் கூட வாங்கப் போகிறான். ஆனால் என்ன? நீ அவனை கண்டும் காணாதது போல் விட்டு விடவேண்டும். கை நிறைய சம்பாதிக்கும் கணவன். பெரிய கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கிறான். அவனுடைய பொழுது போக்குகள் அவனுக்கு இருக்கும். உன் கோப தாபங்கள் அவனுக்கு விலங்குகளாக மாறக் கூடாது. அந்த ஒரு சுதந்திரத்தை அவனுக்குக் கொடுத்து விட்டால், உனக்காக எத்தனை பொருட்களை வேண்டுமானாலும் வாங்குவான். அவற்றுக்காகத்தான் நீ இத்தனை பணிவாக இருப்பது போல் தெரிகிறது. உங்கள் இருவரையும் பார்க்கும்போது எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல் இருக்கிறது. இனியும் எத்தனை நாட்களுக்கு இப்படி? இருவரும் சேர்ந்து முடிவு செய்து விட்டு சொல்லுங்கள்!
“எப்போதும் போல் நாம் மூவரும் சேர்ந்து இருப்போமா? இல்லை என்றால் ரஜனி! நாமிருவரும் சேர்ந்து இருப்போமா? அதுவும் இதுவும் இல்லை என்றால் என் வழியில் நான் போய்க் கொள்ளட்டுமா? ஏதோ ஒன்றை முடிவு செய்தாக வேண்டும் நாம். உங்களுடன் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போவது எனக்கு சாத்தியம் இல்லை. அது மட்டும் முடிந்திருந்தால் என் வாழ்க்கை வேறு விதமாக கழிந்திருக்கும். அவனுடைய மனைவிகளில் ஒருத்தியாக அங்கேயே விழுந்து கிடந்திருப்பேன். அது முடியாத போது, என் மகன் வீட்டில் விழுந்து கிடக்க எப்படி முடியும்? என்னால் முடியாத காரியம்.”
ரஜனியின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. தலை குனிந்து விசும்பி விசும்பி அழத் தொடங்கி விட்டாள்.
முரளி சட்டென்று எழுந்து ரஜனி அருகில் சென்று “ச்ச… ச்ச… அழாதே . எதுவும் நடக்கவில்லை” என்று கைக்குட்டையால் அவள் கண்ணீரை ஒற்றினான்.
ரஜனி இன்னும் அழுது கொண்டிருந்தாள். முரளியின் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது. தாயைப் பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தான்.
முற்றும்
(ஆந்திரஜியோதி தீபாவளி மலர் 1999)
தெலுங்கில்: ரங்கநாயகம்மா
தமிழில்: கௌரி கிருபானந்தன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


A very sensitive subject dealt with justijication.
Brilliant translation feels like original!
சிறப்பான கதையும் மொழிபெயர்ப்பும் .
தன் மகனையே துலாபாரத்தில் நிறுத்தும் தாய்.மிகவும் உணர்வு பூர்வமான கதையோட்டம்.
மிகவும் அருமை.. மொழிபெயர்ப்பு என்பதே தெரியாத… அழுத்தமான கதை நடை.. எப்போதுமே மிக அழகு. இதில் ஒரு அம்மா… பெண்ணின் கோணத்தில். நின்று மகன் நடவடிக்கைகள் மூலம் அவன் குணத்தை judge பண்ணுவது… மருமகளுக்கு ஆதரவாக… அவளே சிந்திக்காத கோணத்தில் மகனைப் பார்த்து… கேள்விகள் கேட்பது… 👌👌கதைநடை… உரையாடல்… சில ஆழ்ந்த வரிகள்.. எல்லாம் கதை… அந்தத் தாயின் உணர்வுகளை… நமக்கு… எளிதாகக் கடத்தி விடுகின்றன.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சிறுகதையா இது! இன்றைக்கும் இது தொடர்கிறதே! தெலுங்கு மொழிக் கதையாகத் தெரியவில்லை. தமிழிலேயே எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது. அருமை . திருமதி கெளரி கிருபானந்தனுக்கு பாராட்டு!
மிக்க நன்றி க்ளிக் ரவி சார். ரங்கநாயகம்மா அவர்களின் பெண்ணியப் பார்வை சற்று வித்தியாசமானது. கதை மற்றும் மொழிபெயர்ப்பு தங்களுக்குப் பிடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.