நூல் அறிமுகம்: ராசத்தியும் ஒரு பக்கிரியும் (சிறுகதைகள்) – பெ.அந்தோணிராஜ்

    நூலாசிரியர் தாமரை செந்தூர்பாண்டி ஏறத்தாழ எழுநூறு சிறுகதைகள், ஐம்பது நாவல்கள், நாடகங்கள், திரைப்படக்கதைகள், வசனங்கள் சுமார் 45வருடகாலமாக எழுத்துப்பணியில் தன்னை இணைத்துக்கொண்ட பள்ளி ஆசிரியராயிருந்து ஓய்வுபெற்றவர். இவருடைய கதைகள் வெகுஜனபத்திரிகைகளான ஆனந்தவிகடன், குமுதம், ராணி போன்ற வார இதழ்களில் வெளிவந்தவை. நூலில் 11 கதைகள் உள்ளன. இவருடைய கதைகள் சமுதாய பிரக்ஞையுடன், மண் வாசனையும் கலந்து இருக்கும்.கதையின் இறுதிப்பகுதியில் ஒரு பத்தியிலோ அல்லது ஒரு வரியிலோ வாசகரை தழுதழுக்க வைத்துவிடுவார், கதைகள் எளிமையான வாசகர்களுக்கானவை.
மல்லி  என்ற கதையில் வரும் மல்லிகா அவள் வீட்டில் இருக்கும் மல்லிகை பந்தலோடு மிகவும் உணர்வுபூர்வமாய் இருப்பாள். இவளுடைய மனதில் உள்ளவற்றை மல்லிகை கொடியுடன் பகிர்ந்துகொள்வாள். காலை மதியம் மாலை என்று மூன்று நேரமும் அப்பந்தலுக்குள்ளேயே இருப்பாள். அம்மாவிடம் இதற்காகவே வசவும் வாங்கிக்  கட்டிக்கொள்வாள். ஒரு நாள் நகரத்திலிருந்து உறவினர் குடும்பம் இவர்கள் வீட்டிற்கு வந்து தங்கியிருப்பர். வந்தவர்கள் மல்லிகாவை அவர்கள் மகனுக்கு பெண் கேட்பார்கள். மல்லிகாவின் குடும்ப நிலையை நினைத்து எல்லா செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். ஊரில் உள்ள எல்லோரும் மல்லிகாவிற்கு வந்த வாழ்வை நினைத்து வாழ்த்துவர். திருமணம் முடிந்து மாப்பிள்ளையுடன் ஊருக்கு கிளம்பும் சமயத்தில் திடீரென வீட்டிற்கு பின்னால் ஓடுவாள், மாப்பிள்ளை வீட்டார் தவிர மற்றவர் அனைவரும் பின்னால் செல்வர். மாப்பிளைக்கு அதிர்ச்சி, அவரும் அங்கே செல்வார். அங்கு மல்லிகைப்பந்தல் அடியில் நின்று கண்ணில் நீர் சொரிய அம்மாவிடம் தன் வேண்டுகோளை வைப்பாள், மல்லிகைப்பந்தலை காட்டி அம்மா இவளை நல்லாபார்த்துக்கோம்மா என்று மன்றாடுவாள். அம்மாவும் மகளை அனைத்து கட்டாயம் நன்கு பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளிப்பாள்.
இந்தக்கதையைப் படித்தவுடன் சங்கப்பாடல் ஒன்று நினைவில் வந்தது. அதில் வீட்டிற்கு பின்னால் இருக்கும் புண்ணை மரத்தைக் காட்டி மகளே இது உன் அக்கா என்பாள். சிறுவயதில் சொன்னதை நினைவில் நிறுத்தி தினமும் தன்னுடைய மனதை அந்தபுண்ணை மரத்திடம் பகிர்ந்துகொள்வாள், சில ஆண்டுகள் கழியும். அந்தப்பெண் காதல் கொள்வாள். களவு சங்ககால பண்பாடு. ஒருநாள் அந்த காதலன் இவளை கட்டியணைத்து முத்தமிட வருவான். அவள் விலகிச்செல்வாள். ஊடலோ என்று ஒரு நிமிடம் தாமதித்து அவ்விடம் செல்வான். மீண்டும் முத்தமிட முயல, எந்த எதிர்ப்பின்றி அவள் உடன்படவும், அவன்,”அங்கே நான்தானே இருந்தேன், இங்கேயும் நான்தான் இருந்தேன் உனக்கு என்ன குழப்பம் விலகி வந்தாய்” எனக்கேட்க, அவள் அந்தபுண்ணை மரத்தைச்  சுட்டிக்காட்டிஅவள் என் தமக்கை . அவள்முன்பு என்னை நீங்கள் நெருங்கியதும் எனக்கு வெட்கம் வந்தது, அதனால் விலகினேன் என்று பதில் கூறினால், சங்கத்தமிழரின் மாண்பை பாராட்டாமல் இருக்கமுடியுமா. ஒரு மரத்தையும் தன் தமக்கையாக நினைத்த அந்த சங்கத்தமிழச்சியை பிரதிபலித்தாள் மல்லிகா.
எழுத்தில் ஜெயிச்ச நான் ...
தாமரை செந்தூர்பாண்டி
ஞானாசிரியன் என்ற கதை யில் ஒரு பிச்சைக்காரனுக்கு ஒருவன் தர்மமாக ஒரு ரூபாய் நாணயத்தை கொடுப்பான். வாங்கிய அவன் இவனைப்பார்த்து, “எச்சில் கையெடுத்து காக்காய் ஓட்டத்தவன்டா நீ. உன் மனசுல நீதான் பெரிய தர்மப்பிரபுன்னு நினைச்சுக்கிர !தர்மமான என்னானு தெரியுமா உனக்கு? என்று கேட்டதோடு அந்தக்காசைத்தூக்கி எறிந்தான். அதிர்ந்து போனான் இவன். இவனாக மனதில் நினைத்துப்பார்ப்பான்.அவன் கூறிய மாதிரி நான் ஒன்னும் கெட்டவனில்லையே, மேடை மேடையாக மனிதம் பற்றி பேசுகிறேன், நெகிழ்வான சம்பவங்களுக்கு கண்ணீர் விடுகிறேன், அக்கிரமத்தை காணும்போதெல்லாம் மனதில் கொதித்து எழுகிறேன் அப்படியிருந்தும் இந்த பக்கிரி என்னைப்பார்த்து மிகவும் இகழ்ந்து பேசிவிட்டானே என்று பலவாறு மன உளைச்சல் அவனுக்கு ஏற்படும். சிறிது நேரத்தில் அருகில் உள்ள சாலையை கடப்பதற்காக நின்றிருந்தான். அப்போது சாலையைக்கடக்க முயன்ற ஒரு மூதாட்டி விபத்தில் சிக்குவாள். லேசான அடி. அவளை மீட்டு அருகில் உள்ள ஒரு இடத்தில் அமர்த்தி அவளிடம் கருணையாக நடந்துகொள்கிறான், அவளுக்கு பசி என்று அறிந்ததும் அருகில் இருந்த ஒரு பெட்டிக்கடையில் பன்னும் டீயும் வாங்கித்தருவான். மனமாற இவனை வாழ்த்துவாள். சிறிது நேரம் கழித்து ரயில்வே ஸ்டேஷனுக்கு போவான், அலுவலகம் சென்று மாலையில் வீடு திரும்ப அதே ஸ்டேஷனுக்கு வந்திறங்குவான். அப்போது ஒரு சின்னபெண்குழந்தை பிச்சையெடுத்துக்கொண்டிருப்பாள். அப்படியே நடந்தவன் ரயில்வே மேம்பாலத்தருகில் வருவான். மடிப்படியின் கீழ் காலையில் நான் சந்தித்த அந்த முதியவளும், அந்த சின்னக்குழந்தையும் அமர்ந்திருப்பதைப்பார்த்து அவர்களை உற்றுநோக்குவான். அந்த சின்னப்பெண் முதியவளிடம் பசிக்கிறது என்று அழுவாள். உடனே அந்த முதியவள் தன்னிடமிருந்த, நான் காலையில் வாங்கிக்கொடுத்த அந்தப் பன்னை எடுத்து அக்குழந்தையிடம் கொடுத்து சாப்பிடச்சொல்வாள், அவளின் பசியாறியதும் முதியவளை வாழ்த்துவாள். அதற்கு அந்தக்கிழவி எனக்கு எதுக்கு வாழ்த்து சொல்ற, காலையில் ஒரு மகாராசன் வாங்கிக்கொடுத்தாரு, அவருக்குத்தான் நீ நன்றி சொல்லணும் என்றாள். விக்கித்துப்போனேன், தனக்கு அடுத்தவேலைக்கான உணவை தானம் செய்கிற அந்த முதியவள்தான் உண்மையிலேயே தர்மம் செய்கிறாள். இப்போது புரிந்தது காலையில் அந்தபக்கிரி சொன்னது எவ்வளவு நிஜமான வார்த்தை. அவன் சாதாரண ஆள் இல்லை, மற்றவர்களுக்கு இரங்கி உதவி செய்ப்பவன் என்ற கர்வம் என்னிடம் இருந்தது. அது இப்போது என்னை விட்டு அகன்றது. கொஞ்சம் வசதியோடு இருந்து, மற்றவர்களுக்கு உதபுவர்களை விட அடுத்தவேளை உணவுக்கு இல்லாதவர்கள் செய்யும் உதவியே மிக உயர்ந்தது. என் கண் திறந்த அந்தபக்கிரி எனக்கு ஞானாசிரியன்.
     இப்படி எல்லாக்கதைகளும் வாசிக்க அருமையானவை. வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்.
அன்புடன் =பெ. அந்தோணிராஜ் 
தேனி.
நூல் =ராசத்தியும் ஒரு பக்கிரியும் (சிறுகதைகள் )
ஆசிரியர் =தாமரை செந்தூர்பாண்டி 
பதிப்பு =NCBH
விலை =ரூ. 60/