சிறுகதை: *ஈகை* – எம் ராதிகா விஜய்பாபு“தண்ணி பாட்டிலை எடுத்துகிட்டியா, சாப்பாடு பைய எடுத்துட்டியா? ”

“எல்லாம் எடுத்துக்கிட்டாச்சு. நீங்க டிக்கெட் மறந்துடாதீங்க” .

“அது ஃபோன்லயே இருக்கு கவலைப்படாத”.

அப்பார்ட்மெண்ட் லிஃப்டில் வயதான கணவனும் மனைவியும் பதட்டத்துடன் வெளியே வந்தார்கள்.

” சரவணன் ரயில் ஏத்தி விட்டு ஆபீஸ் போயிருக்கலாம் சரளா”

” சரி விடுங்க அவனுக்கு வேலை அதிகம். கார் அதாவது புக் பண்ணினானே.”

இருவரும் காரில் ஏறி ரயில் நிலையத்தை அடைந்தார்கள். நடக்க முடியாமல் பேக்கை தூக்கிக்கொண்டு நான்காவது பிளாட்பார்ம் இருக்கு படிக்கட்டுகளை ஏறி இறங்கினார்கள்.

“ரயில் வரதுக்கு இன்னும் 20 நிமிஷம் இருக்கு. உனக்கு ஏதாவது வாங்கி வரட்டுமா?

“இல்லை. எனக்கு ஒண்ணும் வேண்டாம்.”

இருவர் முகத்திலும் ஒரு இறுக்கமும் வேதனையும் தெரிந்தது அமைதியாக பிளாட்பார்ம் இருக்கையில் அமர்ந்தார்கள்.

சரளா பெரிய பண்ணை வீட்டில் வளர்ந்த பெண். ஆடு, மாடு, வயல்வெளி, ரைஸ்மில், சினிமா தியேட்டர் என சகல வசதியுடன் வாழ்ந்தவள்.தினமும் ஒரு மரக்கால் அரிசியை வடித்து வீட்டு வாசலில் வைத்து விடுவார்கள். அதனுடன் ஒரு குழம்பு அல்லது சாம்பார் ஏதாவது ஒன்றை பானையில் ஊற்றி மதியம் 12 மணிக்கு எல்லாம் வைத்து விடுவார்கள். ஊரில் இருக்கும் வயதானவர்கள், உடல் நலம் முடியாதவர்கள், சிறு குழந்தைகளுக்கு என எல்லோரும் வந்து அவர்கள் விருப்பத்திற்கும் தேவைக்கும் தேவையானதை எடுத்துச் செல்வார்கள். 12 மணிக்கு வைக்கும் பாத்திரம் 3 மணிக்கெல்லாம் காலியாகிவிடும். ஊர் மக்கள் எந்த பாகுபாடுமின்றி வந்து உணவு அருந்தி பசியாறுவதை பார்க்கவே மனம் நிறைவடைந்துவிடும். தன் சிறுவயது ஞாபகங்களில் மூழ்கி இருந்த சரளாவை, சரளாவின் கணவன், ‘என்ன யோசனை, ரயில் வந்து விட்டது வா’ என்று அழைத்ததும் நிகழ்காலத்திற்குத் திரும்பினாள்.

“எஸ் ஃபோர் தானே !”என்றாள்.

“ஆமாம், என் பின்னாடியே வா!” என்று வெயிட்டான ஒரு பேக்கை அவர் எடுத்துக்கொண்டு கூட்டத்தில் இடித்து சிரமப்பட்டுக் கொண்டு இருப்பவர்களைப் பார்த்து, ‘எல்லோரும் ஏறத் தான் போகிறோம் ஏன் தான் இந்த அவசரமோ’ என்று சொல்லிக்கொண்டே கடைசியில் ஏறினார்.ஒருவழியாக அவர்களது இருக்கை எண்ணைக் கண்டுபிடித்து சீட்டில் சென்று அமர்ந்தார்கள்.

“ஹலோ பாலன் சார் எப்படி இருக்கீங்க? எங்க ஊருக்கு போறீங்களா?” என்று குரல் கேட்க, திரும்பிப் பார்த்தால், சக ஆசிரியர் எஸ் எம் சார் நின்று கொண்டிருந்தார்.

“ஆமா சார் பேரப் பசங்களை பார்க்கணும்னு மிஸஸ் ஆசை பட்டாங்க, அதான் ஒரு நாலு நாள் தங்கி பாத்துட்டு ஊருக்குப் போய்க்கிட்டு இருக்கோம். பார்த்து ரொம்ப நாள் ஆச்சு நீங்க எப்படி இங்க?”

“பொண்ணு வீடு இங்குதான் சார், பொண்ணு பாத்துட்டு ஒரு வாரம் தங்கிட்டு கிளம்புறேன். மிஸஸ் இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு வர்றேன்னு சொல்லிட்டாங்க. அவ உட மாட்டேங்குறா. மேடம் எங்க சார்? ”

“ரெஸ்ட் ரூம் போய் இருக்காங்க.”

” சரவணன் வீடுதானே இங்கே இருக்கு.”

“ஆமா சார், பெரியவ இங்கே ஒரு கம்பெனியில மேனேஜரா இருக்கான். அவனுக்கு ரெண்டு பசங்க. சின்னவன் துபாய்ல இருக்கான் இப்பதான் கல்யாணமாச்சு.”

“ஆமா ஆமா நான் தான் கல்யாணத்துக்கு வந்தேனே, சரவணன் கல்யாணத்துக்குத் தான் வர முடியல, சின்னவன் கல்யாணத்துக்கு வந்தேனே.”

இதற்குள், சரளா இருக்கைக்கு வரவும், அவளிடம்,

“எஸ் எம் சார் வந்திருக்காரு பாரு,அவருக்குப் பக்கத்து கம்பார்ட்மென்டாம்.” என்றார் கணவர்.

“நல்லா இருக்கீங்களா சார் கவனிக்கல… ” என்று சுருக்கமாக விசாரித்தாள் சரளா.

“நல்லா இருக்கேன் மேடம், உங்க சமையல் சாப்பாடு பத்தித் தான் என் மிஸஸ் கிட்ட எப்பொழுதும் சொல்லிக்கிட்டே இருப்பேன் உங்களுக்கு சரளா ன்னு பேரு வச்சதுக்குப் பதிலா அன்னபூரணி தான் வச்சிருக்கணும்” என்றார் எஸ் எம்.

பெருமையுடன் கூடிய ஒரு நமட்டு சிரிப்புடன் கணவனைப் பார்த்தாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்” என்று பரஸ்பர விசாரிப்புகளை முடித்து இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தாள்.பாலன், பள்ளியில் ஆசிரியர். மிகவும் தன்மையுடனும் நட்புடனும் அனைவரிடம் பழகுபவர். உயர் பதவியில் இருப்பவர்கள் நண்பர்களாக இருப்பதால் இவர் வீட்டில் எப்பொழுதும் ஆசிரியர்கள் வருகையும் அரட்டையும் விவாதமும் என கலகலப்பாக இருக்கும். வருபவர்களுக்கு எல்லாம் விருந்து உபசரிப்பதில் சரளாவிற்கு மகிழ்ச்சியுடன் செய்வார், ஒரு ஸ்வீட் காரம் இல்லாமல் காபி கொடுத்தது இல்லை. டிபன் என்றால் குறைந்தது மூன்று பதார்த்தங்கள் இருக்கும். பாலனின் பணி நிறைவு விழாவில் அனைவரும் சரளாவை புகழ மறக்கவேயில்லை, ஃபாஸ்ட் ஃபுட் ஐ விட அதிவிரைவாக விருந்தோம்பல் செய்வதில் சரளாவிற்கு நிகரில்லை என்று அனைத்து ஆசிரியர்களும் புகழ்ந்து தள்ளினார்கள்.

சரளா பேரக்குழந்தைகளைப் பார்க்க வேண்டுமென்று விருப்பத்தால், மகன் சரவணன் வீட்டிற்கு ஒரு வாரம் பத்து நாள் இருக்கலாம் என்று புறப்பட்டார்கள். ஆனால் மருமகள் கவிதாவின் சிக்கன நடவடிக்கை தாங்கமுடியாமல் நான்கு நாட்களிலேயே புறப்பட்டு விட்டார்கள். கவிதா நல்லவள் தான், புதிதாக வீடு வாங்கியிருக்கிறார்கள். நிலம் வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும் என பல கனவுகளுக்கு சாப்பாட்டில் போய் கணக்கு பார்க்கிறாள் . இன்னைக்கு இருக்கிறவர்கள் நாளைக்கு இருப்பது இல்லை இருக்கிற வரைக்கும் சந்தோசமா இருக்கலாம் என்று இல்லாமல் நாளைக்கு நாளைக்குன்னு எல்லாத்தையும் விட்டுட்டு என்ன வாழ்க்கைங்க என்று சலிப்புடன் சரளா வேடிக்கை பார்த்து வந்தாள்.

‘மகனுக்கு கேசரி பிடிக்கும், செய்கிறேன்’ என்றதற்கு, ‘குழந்தைகளுக்கு மட்டும்தான் நெய் இருக்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் அத்தை’ என்று சொன்னதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கண்களில் நீர் கசிந்தது.

“என்ன ஏதோ நினைப்பில் இருக்க, மதியம் ஆகிவிட்டது சாப்பிடலாம் சரளா” என்று பாலன் சொன்னதும், சாப்பாட்டுப் பையை எடுத்து பார்த்தாள். ஆளுக்கு நாலு இட்லி என்று எண்ணி மிளகாய்ப் பொடியைத் தடவி வைத்திருந்தாள் கவிதா.

இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். அந்த நேரம் பார்த்து, கைக்குழந்தையுடன் ஒரு பெண் அம்மா என்று கை நீட்டிக் கேட்கவும், ‘எனக்கு பசி இல்லை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று கணவனிடம் கூறிவிட்டு, அந்த நான்கு இட்லியையும் அந்தப் பெண்ணிற்கு கொடுத்துவிட்டாள் சரளா.

எம் ராதிகா விஜய்பாபு

பெங்களூரு