ஸ்கூலில் இருந்து போன் வந்ததில் இருந்து ஹரிணிக்கு ஒன்றும் புரியவில்லை வாசலுக்கும் வீட்டிற்கு மாக சிறு குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு இங்குமங்கும் ஆக நடந்து கொண்டு கணவனுக்கு பேச முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
“எத்தன தடவ போன் செய்றேன் ஏன் போன் எடுக்கல“
” மீட்டிங்ல இருக்கிற மா என்ன அவசரம்“
” நிதி ஸ்கூல்ல இருந்து போன் பண்ணினாங்க ஊரெல்லாம் கலாட்டாவா இருக்காம் பஸ் எல்லாம் எரிக்கிறார்களாம் அதனால ஸ்கூல் பஸ் ஓடாது நீங்களே வந்து குழந்தையை கூட்டிட்டு போங்க ன்னு சொல்லிட்டாங்க“.
“பதட்டப் படாதே ஹரிணி நான் பெங்களூர் வர மிட்நைட் ஆயிடும் நீ வண்டி எடுத்துட்டு போகாத அது கர்நாடகா ரிஜிஸ்ட்ரேஷன் ஆகல இன்னும் பிரச்சனையாயிடும், ஒரு ஆட்டோ வச்சுகிட்டு போ நான் போன்ல ஃபாலோ பண்ணி கிட்டு இருக்கேன்,பாப்பாவை கீழ் வீட்டு ஆன்ட்டி கிட்ட விட்டுட்டு போ எனக்கு மீட்டிங் இன்னும் முடியலை நான் கூப்பிடுறேன் “என்று போனை கட் செய்தான் அகிலன்.
ஹரிணிக்கு கோபமும் பயமும் ஒன்று சேர்ந்தது “இவருக்கு வேற, மாசத்தில் பாதி நாள் வெளியூர்வெளி நாட்டுக்கு போயிறாரு தெரியாத ஊரில் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் தானே கஷ்டப்படுகிறேன்.”
அகிலன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறான் பொறுப்பான கணவன் ஊருக்கு செல்வதற்கு முன் வீட்டிற்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கி வைத்து விட்டு செல்வான். அலுவலகம் சென்று விட்டாள் கடமையை கண்ணாயிரம் ஆக வேலை செய்வான். வீட்டில் இருக்கும்பொழுது தான் இந்த வீட்டிற்கு சேவகன் என்பது போல அனைத்து வேலைகளையும் பார்ப்பான்.
தமிழகத்திற்கு காவிரி நீரை தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஊரில் ஒரே கலவரம் ஏற்பட்டது முன்பே தெரிந்திருந்தால் குழந்தையை ஸ்கூலுக்கு லீவு போட வைத்து வீட்டில் வைத்திருக்கலாம் என்று நெஞ்சம் படபடத்தது.
ஹரிணி உலகம் அறியாதவள் கணவன் குழந்தை குடும்பம் என்று தன் உலகமாக கொண்டு வாழ்பவள், எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டாள்.
வீட்டிற்கு பக்கத்திலேயே ஒரு சாதாரண ஸ்கூலில் படித்து கொண்டு இருந்தால் நிதி. நண்பர்கள் உறவினர்கள் குழந்தை நல்ல திறமையாக இருக்கிறாள் அவள் ஏன் இப்படி சின்ன ஸ்கூல் சேர்த்து இருக்கிறீர்கள் பெரிய ஸ்கூலில் சேர்த்தால் அந்த அளவிற்கு அறிவுக்கு ஏற்ற பாடத்திட்டம் இருக்கும்னு சொல்வதைக் கேட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமாக கட்டி சேர்த்து ஒரு ஆத்திர அவசரத்திற்கு கூட குழந்தைகளை பாதுகாப்பாக கூட்டிவந்து விடாம இப்படி ஊருக்கு வெளியில் பள்ளிக்கூடத்தை வச்சுகிட்டு வந்து கூட்டிட்டு போ ன்னு சொல்றாங்க என்று புலம்பல் உடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டை பூட்டி கீழ் வீட்டிற்கு சென்றாள் ஹரிணி.
வீடு பூட்டியிருந்தது அவ்வபோது ஆன்ட்டி அவரது மகள் வீட்டிற்கு சென்று விடுவார் அவ்வாறு சென்றிருக்கக் கூடும், இன்று நேரமே சரியில்லை என்று நினைத்துக்கொண்டு மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒன்றரை வயது குழந்தையை தூக்கிக்கொண்டு தெருவை விட்டு வெளியே சென்றாள், நிதியுடன் எல்கேஜி படித்த நிஷாவின் தாய் வழியில் பார்த்து இப்ப எங்க போறீங்க ஒரே கலவரமா இருக்கு அந்த பெரிய சர்க்குள்ள ஒரு காரை போட்டு எரிச்சி கிட்டு இருக்காஙக என்றார்.இல்ல நிஷா அம்மா நிதி ஸ்கூலில் இருந்து போன் பண்ணாங்க குழந்தையை கூட்டிட்டு போங்கன்னு சொல்லி இருக்காங்க, நிதி அப்பா வேற வெளியூர் போயிருக்காங்க அதான் குழந்தையை ஸ்கூலில் இருந்து கூட்டிட்டு வர போய்கிட்டு இருக்கேன் என்று அனைத்தையும் கூறி கண்கள் கலங்கிவிட்டது.
பெரிய ஸ்கூல் இன்னு சேர்த்தீர்கள் பாருங்க எப்படி நடந்துக்கிறாங்க சரி பார்த்து போங்க என்று விடைபெற்றார்.
அந்த சிறியது ஸ்கூலில் படித்தபோது குழந்தையை அழைத்துச் செல்ல அனைவரும் 10 நிமிடம் முன்சென்று உரையாடுவார்கள் அவ்வாறு பல சினேகிதிகள் ஹரிணிக்கு கிடைத்தார்கள், இந்தப் பெரிய ஸ்கூலுக்கு பஸ்ஸில் சென்று வருவதால் யாருடனும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. இதனால் பள்ளியை பற்றி ஆசிரியர்களை பற்றி நிர்வாகம் பற்றி எந்த ஒரு நல்லது கெட்டதையும் பேச முடியவில்லை.
ஆட்டோ பிடிக்க மெயின் ரோடு சென்றால் போகும் வழியெல்லாம் அக்கறையுடன் கூடிய விசாரிப்பு ஏன் இப்ப போறீங்க என்று…
எந்த ஆட்டோவும் நிற்கவில்லை அனைத்தும் அவரவர் வாகனத்தை பத்திரப்படுத்த வீட்டிற்கு விடுவதில் விரைந்தார்கள்.
திவ்யா அம்மா மட்டும் எப்பொழுது இருந்திருந்தால் எவ்வளவு துணையாக இருந்திருக்கும்.
திவ்யாவும், நிதியும் இணைபிரியா தோழிகள் இருவரும் எல்கேஜி ஒன்றாக சேர்ந்தார்கள். இருவரும் அந்த வகுப்பில் தமிழ் என்பதால் இணக்கம் அவர்களுக்குள் அதிகமாக ஏற்பட்டது. வகுப்பு நடக்கும் பொழுதும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்று வேறு வேறு பெஞ்சில் உட்கார வைத்தார்கள் என்று, பள்ளி முடிந்து வந்து அழுதார்கள் இருவரையும் சேர்த்து தான் இந்த பெரிய ஸ்கூலில் சேர்த்தார்கள். ஆனால் அவர் அப்பாவிற்கு தொழில் மாற்றம் ஆகி சென்ற ஆண்டு சென்னைக்கு சென்றுவிட்டார்கள்.
இல்லையென்றால் இந்நேரம் அவர்களாவது துணைக்கு இருந்திருப்பார்கள்.
“ஆட்டோ என் இடி ஸ்கூல்“
” பரலா பரலா “
பத்து நிமிஷம் ஆட்டோவிற்கு காத்திருக்கும் பொழுது அகிலன் இடமிருந்து போன் வந்தது.
“ஸ்கூல் போயிட்டியா“
” இல்ல ஆட்டோவே கிடைக்கல“
“ஆட்டோகாரர் எவ்வளவு கேட்டாலும கொடுத்திடு கன்னடாலே பேசு” தைரியமாக இரு என்று சொல்லி போனை வைத்தான்.
“அவருக்கு என்ன ஏசி ரூம்ல உட்கார்ந்துகிட்டு ஈசியா சொல்லிடுவாரு கையில் பச்சைக் குழந்தையை வைத்து கொண்டு நான் படுற கஷ்டம் எனக்குத்தானே தெரியும்” என்றும் மனதிற்குள் நொந்து கொண்டாள்
“ஆட்டோ என் இடி ஸ்கூல்“
“பரலா மா…..”
ப்ளீஸ் அண்ணா சின்ன பாப்பா ஸ்கூல்ல இருந்து அழைச்சிட்டு வர வேண்டும் என்று கன்னடத்தில் கூறினாள்.
” 500 கொடு ரீ“
அடப்பாவி மீட்டர்போட்டோ அம்பது ரூபா கூட வராது 500 ரூவா கேட்கிறாரே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு சரி என்று ஆட்டோவில் உட்கார்ந்தாள்.
எந்த ஊர், குடும்பம் ,ஸ்கூல் பற்றிய தகவல் என தேவையில்லாததை கேட்டுக் கொண்டே சென்றார்.
முடிந்தவரை அமைதியாகவும் ஒரு வார்த்தையில் பதிலும் சொல்லிக் கொண்டு சென்றாள் கன்னடம் பேசுவதை வைத்தே தமிழர் என்று கண்டுபிடித்துவிட்டார்.
இந்த நேரத்தில் ஏன் வெளியில் வருகிறீர்கள் வேறு யாரும் குழந்தையை கூட்டிட்டு வரத்துக்கு இல்லையா என்று அக்கறையுடன் கேட்டார்.
போகும் வழியெல்லாம்
” நம் காவேரி நம் தே”
என்ற முழக்கமும் டயர்களை எரிப்பதும் ஆக இருந்தது கலவரம் என்று செய்திகளில் பார்க்கும் பொழுது படிக்கும் பொழுதும் அதை எளிமையாக கடந்து விடுவோம் ஆனால் அதை சந்திக்கும் பொழுது ஏற்படுகிற உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
ஒரு வழியாக பள்ளியை அடைந்ததும் பள்ளி வளாகத்தில் வெளிப்புறம் முழுவதும் ஒரே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது பெற்றோர்கள் பைக்கிலும் கார்களில் வந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல இடமே வாகன நெரிசல் ஆக காணப்பட்டது .பள்ளி வளாகத்தினுள்பகுதி அனைத்து பள்ளி வாகனமும் காணப்பட்டது நிதியை அழைத்துச் செல்லும் வண்டி ஓட்டுனர் ஓடிவந்து.
வந்துட்டீங்களா அக்கா என்று அக்கறையுடன் கேட்டார். இக்கட்டான சூழ்நிலையில் இப்படித்தான் செய்வீர்களா என்று கோபமாகக் கேட்டாள் ஹரிணி.
நாங்க என்ன பண்றது ஸ்கூல் நிர்வாகம் என்ன சொல்லுதோ அதானே கேட்கமுடியும். அவங்க அவங்க கஷ்டம் அவங்க அவங்களுக்கு என்றார்.
ஆயிரம் இருந்தாலும் ஒரு மனிதாபிமானம் வேண்டாமா, எத்தனை பேரன்ட்ஸ் எவ்ளோ கஷ்டப்பட்டு வந்து கூட்டிட்டு போறாங்க பாருங்க.
நிர்வாகத்திடம் சென்று இரண்டு கேள்விகளைக் கேட்டு விட்டு வரலாம் என்று சென்றால் அவளுக்கு முன் பத்து பதினைந்து பேர் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள் சரி நிதி அப்பா வந்ததும் வந்து கேட்க சொல்லலாம என்று நினைத்துக்கொண்டுகுழந்தையை அழைத்துக்கொண்டு அதே ஆட்டோவில் ஏறினாள்., வந்த வழியில் முன்பைவிட பிரச்சனை அதிகமாகிவிட்டது என்று ஆட்டோ ஓட்டுநரின் நண்பர் போனில் தகவல் தெரிவித்திருந்தார்.
ஆட்டோ ஓட்டுனர் கர்நாடகாவின் மஞ்சள், சிகப்பு கலந்த கொடியை ஹரிணியின் கையில் கொடுத்து, ஒன்னும் பயப்படாத அம்மா பத்திரமா வீட்டுக்கு போயிடலாம் பதட்டத்துடன் ஆட்டோவை எடுத்தார், அதே பதட்டம்
ஹரிணிகும் ஏற்பட்டது என்னாகும் இறைவா நல்லபடியா வீடு போய் சேர வேண்டும் என்று இரண்டு குழந்தைகளையும் இருக அணைத்துக் கொண்டாள்.
நிதி ஆட்டோவில் ஏறியதும் அப்பாடா ஸ்கூல் லீவு விட்டுட்டாங்க அடுத்த பீரியட் கன்னடா டெஸ்ட் இருந்துச்சு நல்ல வேலைக்கு லீவு விட்டாங்க என்று குஷியாக கூறினாள்.
நிதியைப் பார்த்து முறைத்து “அப்படி சொல்ல கூடாது நிதி”
என்று மிரட்டினாள்.
“ஏன்மா ஸ்கூல் லீவு விட்டாங்க? “
“காவிரி ரிவர் இருக்கில்ல அத பாட்டி ஊருக்கு தண்ணீர் கொடுக்காதீர்கள் என்று சண்டை போடுறாங்க அதனாலதான் லீவு.”
“ஏன் கொடுக்கக் கூடாது”
“இங்கே இருக்கிறவங்களுக்கு வேணுமா”
ஷேர் பண்றது தான் குட் ன்னு சொல்லுவீங்க அப்ப…என்று வாய் திறந்தால் ஹரிணி நிதியின் வாயை பொத்தி “வீட்டுக்கு போற வரைக்கும் அமைதியா வா”
நாங்க ஷேர் பண்ணா நீங்க கடலில் கலந்து வேஸ்ட் பண்றீங்க பாப்பா தான் எங்களுக்கு கஷ்டம் என்று ஆட்டோ ஓட்டுனர் கூறினார்.
போகும் வழியெல்லாம் வரும்பொழுது இருந்ததைவிட
பதட்டம் அதிகரித்திருந்தது.
“யாராவது ஏதாவது கேட்டால் நீங்கள் எதுவும் பேச வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் “என்றார். ஆட்டோ ஓட்டுனர்
பிரச்சினைக்குரிய அந்தப் பகுதி போகும்பொழுது முன்பு இருந்த கூட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகரித்து இருந்தது.ஒருவர் தடாலென்று ஆட்டோவின் முன் கண்ணாடியில் கையை வைத்து நிறுத்தினார். நாளைக்கு செய்தித்தாளில் நாம் தான் தலைப்புச் செய்தியாகி விடுவோம் ஆனால் அதை படிக்க நாம் இருக்க மாட்டோம் என்று பயத்துடன் கூட்டத்தை பார்த்தால் ஹரிணி.
அந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் கன்னட தேசத்தின் கொடியை கையில் பிடித்துக் கொண்டு கோஷங்கள் எழுப்பி கொண்டு இருந்தார்கள்.
“நம் காவிரி நம் தே”
ஆட்டோ ஓட்டுனர் கன்னடத்தில் என் தங்கச்சியை ஸ்கூலில் இருந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறி லாவகமாக கூட்டத்தைக் கடந்து வந்தார்.
“இனி ஏன் பய இல்லரீ”
என்று சொன்னதும் உயிர் போய் உயிர் வந்தது போல் இருந்தது.
கன்னடர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல சிலரது அரசியல் செய்வதற்காக பிரச்சனைகளை அதிக படுத்துகிறார்கள் என்று உணர்வோடு ஆட்டோ அண்ணனின் மனிதநேயத்திற்கு நன்றி சொல்லி விடை பெற்றாள்.
பெங்களூரில் இருந்து ராதிகா விஜய்பாபு
நல்ல சிறுகதை.. வாழ்த்துகள் தோழர் 💐
இது போன்ற போராட்டங்கள் நடப்பதால் எப்போதும் பாதிப்பு போது மக்களுக்கு தான்… நல்ல கதை அருமை வாழ்த்துக்கள் பா
Good story. Keep writing Rathika mam