கவிஞர் ரத்னா வெங்கட் எழுதிய “இசலி@டன்பார்-151 (Isali@Dunbar-151)” புத்தகம் | Rathna Venkat's Isali@Dunbar-151 Tamil Book Review | கமலாலயன் | www.bookday.in

கவிஞர் ரத்னா வெங்கட் எழுதிய “இசலி@டன்பார்-151 (Isali@Dunbar-151)” – நூல் அறிமுகம்

“இசலி@டன்பார்-151 (Isali@Dunbar-151)” – நூல் அறிமுகம்

வாசிப்பின் வசப்படல்: தொடரும் அனுபவங்களின் பதிவு 

மனிதர்களின் வாழ்க்கை எப்போதும் துயரங்கள் மட்டுமே நிறைந்ததாக இருப்பதில்லைதானே?எப்போதேனும் கொஞ்சம் இனிமையும் இருந்தால் தானே அது கொஞ்சமேனும் சகித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது?

ஏற்கெனவே சில ஆண்டுகளாகவே ரத்னா வெங்கட் அவர்களுடன் ஒரு நட்பு அமைதியான நீரோடை போல ஓடிக்கொண்டிருந்தது.’கின்ட்சுகி’ ஸ்ரீ   என். ஸ்ரீவத்சா அவர்களுடைய ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஜூலை 2022-இல் புஸ்தகா பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது.சங்க இலக்கிய ஆர்வத் தின் மீதான விருப்பம் காரணமாக ‘முல்லை முறுவல்’ என்ற முல்லைப் பாடல்கள் தொகுப்பு, நட்புகளின் தொடக்கத்தோடு ஆரம்பமானது.

‘காலாதீதத்தின் சூழல்’ என்ற தனித்தொகுப்பு 2021 மார்ச் மாதம் படைப்பு குழுமத்தின் மூலம் வெளியானது.பரிதி பதிப்பகத்தின் படித்துறை அறக் கட்டளையின் சிறந்த கவிதைத்தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.இரண் டாவது தொகுப்பான ‘மீச்சிறு வரமென…’ பரிதி பதிப்பகம் மூலம் 2022 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.நான்காவது தொகுப்பான ‘மாற்றேலோர்’ கோதை பதிப்பக வெளியீடாக ஜனவரி,2023 இல் வந்தது.ஐந்தாவது தொகுப்பான ‘மெல்லச்சிதறு…’ பரிதி பதிப்பகம் மூலம் 2024 டிசம்பர் மாதம் வெளியிடப் பட்டது.

முதுகலை வணிகவியல்,இளங்கலை கல்வியியல் படித்தவர்.ஆசிரியராக ஆக வேண்டுமென்ற கனவு,கனவாகவே ஆனது. குடும்பப்பொறுப்புகளில் காலம் உருண்டோடியது.பிறிதொரு கணத்தில்,’இந்தா,பிடித்துக்கொள்’ என சிறு விரல் நீட்ட,விடாது பற்றிக்கொண்டு தனக்கென முகவரி தேடி எழுத கனவு நனவான கதை.இயற்பெயர் ரத்னா.பிறப்பிடம் புதுக்கோட்டை. கணவரின் பணி காரணமாகப் பல நகரங்களில் வசித்தவர்.கடந்த எட்டு ஆண்டுகளாக வசிப்பது பெங்களூருவில்.

முக்கியமான இவரின் இயல்புகள்:அமைதி,தனிப்பட்ட குணம். தனிமை விரும்பி. புத்தகங்களே உற்ற நட்பு.இந்த இயல்புதான் ரத்னா வெங்கட்டை    ஏராளமான நண்பர்களுடன் பிணைத்திருக்கிறது எனலாம்.புத்தகங்களை விட உற்ற நண்பர்கள் யார் இருக்க முடியும்? இந்த உலகமே கைவிட்டு விட்ட போதிலும்,நாம் மிக விரும்புகிற புத்தகங்கள் ஒரு போதும் நம்மைக் கைவிட்டு விடுவதில்லை.அவ்வளவுதான்.இங்கு,நான் ரத்னா வெங்கட்டின் கவிதை நூல் குறித்து ஓர் எளிய வாசகன் என்ற வகையில் கொஞ்சம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள முற்படுகிறேன்.அவர் அதற்கு அனுமதி அளிப்பார் என்பதுவும் என் நம்பிக்கை.ஏற்கெனவே இவருடைய மூன்று நூல்களை வாசித்து ஓரளவு அவருடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருப்பவன் என்பதையும் சொல்லிக் கொள்வதில் தவறில்லை!

எப்போதும் ஒரு நூலை அறிமுகம் செய்கையில்,பின் அட்டை,முன்னால் உள்ள அறிமுகக் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வது என் வழக்கம்.அந்த வகையில்,அங்கிருந்தே ஆரம்பிக்கலாம்.கவிஞர் பழநி பாரதி எழுதியுள்ள அணிந்துரையின் ஒரு பகுதி இது: “பெண்மைக்கே உரிய பேரன்பின் உடன்பாடுகளாலும்,முரண்பாடுகளாலும் இணங்கியும்,பிணங்கியும்,வெயிலி யாகவும்,நிழலியாகவும்,ஆணையிடுகிறவளாகவும் வாழ்வு நெடுக அலைந்து திரிகிற ஒருவள்தான் ரத்னாவின் ‘இசலி’. இதில் அநேகமாக யாருக்கும் பெரிய கருத்து வேறுபாடு இருக்காது.அப்படியே இருந்தாலும், பழநிபாரதி யின் கருத்துகள் அவருடையவை.

‘கண்ணீரால் சிரிக்கிறவள்’ என்ற அந்த அணிந்துரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!   “ஆழ் கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல

என்னிடத்தில் ஒரே ஒரு நினைவு மட்டும்! அதை நான் போக்க முடியாது; போக்க விரும்புவதும் இல்லை!அது ஓர் உவகை; அது வேதனையும் கூட!” -“ரஷ்யப் பெண் கவிஞர் அன்னா அக்மதோவாவின் வரிகள் இவை.ரத்னா வெங்கட்டின் இந்த ‘இசலி’ கவிதைகளை நான் அக்மதோவாவின் வெளிச்ச நிழலில் நின்றே வாசிக்க விரும்புகிறேன்..” பழநிபாரதி தன் அணிந்துரை யில் சொல்லியிருக்கும் மேற்கண்ட வரிகளைப் படித்ததிலிருந்து நான் திரும்பத் திரும்ப வாசித்து நெகிழ்ந்து நினைவுகூரும் வரிகள் இவை.

‘ரஷ்யப்பெண் கவிஞர்களின் பல்வேறு கவிதைத் தொகுதிகளைப் படித்த நினைவுகளுக்குள் இப்போது எந்தக்காரணம் கருதியும் தவறிப் போய்க் கூட நுழைந்து விடக்கூடாது’ என்பதில் மிகுந்த விழிப்புணர்வோடு இருந்தாக வேண்டுமே என்று என்னுள் ஓர் எச்சரிக்கையுணர்வு ஓடிக்கொண்டே இரு க்கிறது.இது என் அனுபவம் மட்டுமன்றி,எத்தனையோ பேரின் அனுபவமும் கூடத்தான்.காரணம்?

வேறு எதையும் மீண்டும் நினைக்கவே முடியாமல் புதை மணலுக்குள் மாட்டிக்கொண்டு உள்ளேயே அமிழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரின் நிலைக்கு ஆளாகி விடுவோமே என்ற அச்சம்தான்!எனவே,பழநிபாரதியின் அணிந்துரைக்குள் நுழைந்த நொடியிலேயே மேற்கண்ட எச்சரிக்கையுணர்வு என்னுள் பெல் அடித்து விட்டது!அன்னாவும்,அவரைப்போன்ற எண்ணற்ற கவிப்புயல்களும் உலகம் முழுவதும் அலைக்கழிந்து கொண்டிருக்கும் சூறாவளிப்புயல் அல்லவா அது?எனவே, ‘ரத்னாவின் கவிதைத்தொகுதி யைப் பற்றிய என் வாசிப்பு அனுபவப் பகிர்வு இது’என்ற எச்சரிக்கை பெல்லையும் உள்ளூர ஒலிக்க விட்டுக்கொண்டே தொடர்கிறேன்!

“மொழியால் உயிர்ப்பவள்;அவளை எப்படித்தான் அழிப்பீர்கள்?” என்ற கேள்வியை இசலி கேட்டிருக்கிறாள்;பழநிபாரதி வேறு மேற்கோள் காட்டுகிறார்.இங்கு எனக்கு அடிப்படையிலேயே எழும் கேள்வியே வேறாக அல்லவா இருக்கிறது?அது இதுதான்: “அவளை ஏன்,எதற்கு அழிக்க வேண்டும்?அவளை அழித்து விட்டு எந்த அன்பைப்பற்றி,யாரிடம்,என்ன பேச முடியும்?பகிர முடியும்?”

இந்தப் பாழாய்ப்போன அன்பைப் பற்றி இசலி வேறு வாக்குமூலம் தருகிறார்;பழநிபாரதியும் மேற்கோள் காட்டுகிறார்.நமக்குப் பிடித்த ஒரு பெயரை எந்த ஊரில்,எந்த நதியின்,எந்தக்கடலின் கரையில் எழுதிப் பார்க்காமல் இதுவரை யாரால்,எப்போது முடிந்திருக்கிறது?இந்த அழைக் கழிவுதான் அன்பின் அழகையும்,வலிமையையும் உணர்த்துகிறது.கடல் என்பது ஒரு கணம் நினைவாக இருக்கலாம்;அதன் ஆழங்கள் அவை  எத்தனை பாதாளங்களுக்குக் கீழே,நுழைய முடியாத இரும்புக் கற்  கோட்டைக்குள் சிறைப்பட்டுக் கிடப்பனவாயினும் அவை திரும்ப இயலாத கனவுலகு மட்டுமே  என்று அமைதி கொள்ள வேண்டியிருக்கிறது.

பித்துப் பிடித்துக் கிடக்கும் இந்த மனம்,உள்ளிருந்து செலுத்துகிறது;பின் தொடரப் பணிக்கிறது.எந்த ஒரு கணத்துளிக்குள் அந்த விழிகள் போனால் போகிறதென்று கருணையின் உச்சத்தில் உயருமோ என்று எத்தனை காலமாய்த் தவங்கிடந்திருக்கிருக்கிறோம்?அந்தக் கணத்தில் கூட, கவசங்க ளின்றித் தென்பட்டுத்தொலைந்து விடாதே என்கிற எச்சரிக்கை மட்டும் தான் நமக்கு அருளப்பட்டிருக்கிறது எனும் போது என்னதான் செய்ய? கடைசியில்,மிஞ்சியிருப்பதென்னவோ இந்த ஓர் உணர்வெழுச்சி மட்டுந்தான் போலும்!

அடுத்தடுத்துக் கவிதா ஆவேசத்தின் உச்சகட்டத் தாண்டவ வெளிப்பாடுகள் ஒரு கணமும் இமைக்க விடாதிருக்கும் நொடிகளில்,தொடர்வாசிப்பில் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறேன் நான்.முரண்களின் களியாட்டத்தைக் கணமும் மிஞ்சாமல் உள்வாங்கிக் கரைந்து போகையில்,வெற்றிடமானது மீதிக்கோப்பை.வானெங்கும் நீலமாகக் கிடக்கும் நிர்மலமான பொழுதைக் கூடற்ற கிளைகள் சலசலத்து அதிர முயலும் வேளை!தொலைந்தவை ஏராளம்;தொலையாதிருப்பது என ஏதேனும் ஒரு துளியேனும் எஞ்சுமோ எனத்தேடுதலுக்கான விழைவு அழைக்கழித்துக் கொண்டிருக்கிறது.அந்தத் தேடலில் உண்மையில் நிறைவைத் தரப்போவது எது என ஒரு துளியும் புரியாதிருக்கும் வேளையில்,எங்கோ ஓரிதழ் மலர்ந்தும் மலராத மொட் டென அலகு தீட்டும் சிறு பறவை!அதன் நாசியின் கூர் நுனி தொட்டு சுவாசத்தில் மணக்கிற மகிழம்பூ வாசம் மயக்கும் வைகறை!

தொகுதி முழுக்க ரத்னா வெங்கட்டின் சொற்கள்,கவிதைகளுக்குள் ஒரு கலைடாஸ்கோப் மொழியைச் சுழல விடுகின்றன என்கிறார் பழநிபாரதி. உடைந்த ஒரு மனதின் துண்டுகள்,உள்ளுக்குள்ளேயே உழன்று உழன்று தம்மைத் தாமே அடுக்கியும்,கலைத்தும் புதுப் புதுப் படிமங்களை உருவாக் கிக் கொண்டே இருக்கின்றன.

பெண்களின் மனங்கள் மட்டுமன்று;உடல்களும்,அவர்தம் மொழியும் கூட எல்லையற்ற அன்பின் சோதனைக் களங்களாகவே திகழ்கின்றன என்கிறார் பழநிபாரதி.எவ்வளவோ ஓர் எச்சரிக்கை மணியொலியை மிகத்தொடக்க நொடியிலிருந்தே நமக்கு நாமே நினைவூட்டிக் கொண்ட பிறகுதான் இந்த  அறிமுகக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே ரஷ்யப்பெண் கவிஞர் அன்னா  அக்மதோவாவையும்,தஸ்லிமா நஸ்ரினையும் நினைவுகளின் அடியாழத்தி லிருந்து மீள் திளைப்பில் அசை போட்டுக் கொண்டு அசலியை வாசிக்க முற்படுகிறோம்.எனினும்,கண்ணீராலான அன்பு,கடலென உள்ளிழுத்துக் கொள்கிறது.நாம் கை சோர்ந்து,மெய் சோர்ந்து மூழ்கும் நொடியிலும் ஒரு கணம் நினவு மீள்கிறது.நமக்கு அந்த நொடியில்தான்,கண்ணீரால் சிரிக்கிற பெண்,பேரழகியாயிற்றே என்பதுவும் உறைக்கிறது.மீண்டும் வாசிக்கத் தொடங்கிய அந்த முதல் நொடிக்கே வந்து பதைபதைப்புடன் நின்று விடுகிறோம்.எத்தனைதான் சிரமப்பட்டே அந்தப் பரவச நொடிகளை எழுத்தில் பதிவு செய்து விட்டேன் என்ற நிறைவோடு கடக்க முற்படும் போது,சட்டெனக் கடந்த அந்த முந்தைய நொடிக்கு முன்னதான ஒன்று,எத்தனை நிறைவானதாக இருந்தது என்று ஒரு கழிவிரக்கம் அலைக்கழிவிக்கிறதே!

தடவிச்செல்லும் காற்றின் குளுமையும் ஓடும் நதியில் கை நனைத்த நொடி உணரும் சில்லிப்புச் சிலிர்ப்பின் இதமும் மெய் மறக்கச் செய்து விடுகிறதே!நமது ஆர்வங்கள்,இசலிகளிடம் நமக்குத் தோன்றும் ஒவ்வொன் றையும் மட்டுமே எதிர்பார்த்துத் தவித்துகிடக்கையில்,ஒரு குறும்புச்சிரிப்பு டன் இசலி விரல் சுட்டி எச்சரிப்பதென்னமோ  இதுதான்: “இசலிகள் தங்களுக்குத் தோன்றுவதைத் தங்களுக்கு உகந்த நேரத்தில் மட்டுமே செய்து முடிப்பார்கள். அவர்களின் பயணம் அவர்களின் விருப்பங்களின்படி மட்டுமே தொடரும்!”

இனி,இதற்கு மேல் சொல்லுவதற்கு என்னவாவது மிஞ்சியிருக்குமா?

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:இசலி@டன்பார்-151 (Isali@Dunbar-151)
தொகுப்பாசிரியர்:கவிஞர் ரத்னா வெங்கட் (Rathna Venkat)
வெளியீடு:
பரிதி பதிப்பகம்
விலை:
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 கமலாலயன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *