நூல்: நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்
ஆசிரியர்: ரவிசுப்பிரமணியன்
வெளியீடு: போதிவனம் பதிப்பகம்
அகமது வணிக வளாகம்,
12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை,
சென்னை – 14.
விலை: ரூ.150

நினைவென்னும் ஆழியில் அலையும் கயல்களுக்கும் ஏரிகளிலும் ஆறுகளிலும் அலையும் உண்மையான கயல்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் வசீகரமானவை. உண்மையான கயல்கள் முட்டையிலிருந்து, குஞ்சாக வெளிவந்து, வளர்ந்து, நீந்தி விளையாடி, நொடி நேர அரைவட்டத்தில் நீருக்கு வெளியே இருக்கிற உலகத்தைப் பார்த்து, முட்டையிட்டு, இனத்தைப் பெருக்கி, முதுமையடைந்து மறைந்துபோகின்றன. ஆனால் நினைவென்னும் ஆழியில் அலையும் கயல்களோ பிறப்பு இறப்புக்கணக்குக்கு அப்பாற்பட்டவை. அவை எப்போதுமே நீந்தி விளையாடும் கயல்கள். கனவுகள். காட்சிகள். எண்ணங்கள். சொன்ன சொற்கள். சொல்ல நினைத்த சொற்கள். நினைக்க நினைக்க களிப்பூறும் அபூர்வமான தருணங்கள் எல்லாம் கயல்களே. ரவிசுப்பிரமணியன் தம் நெஞ்சில் படிந்திருக்கும் அபூர்வத் தருணங்களையே கயல்களாக தம் கவிதைகளில் உருமாற்றி முன்வைத்திருக்கிறார்.

அனைத்தையும் இசையோடு இணைத்துப் பார்க்கும் பார்வை ரவிசுப்பிரமணியனிடம் இருக்கிறது. அவருடன் உரையாடியவர்கள், மிக இயல்பான வகையில் ராகங்களைப்பற்றியும் ஆலாபனைகளைப் பற்றியும் அவர் பகிர்ந்துகொள்ளும் குறிப்புகளை அறிந்திருப்பார்கள். அவருடைய மனத்தில் வற்றாத அருவியென இசை பொழிந்தபடி இருக்கிறது. நதியென இருகரை தொட்டு புரண்டோடுகிறது. கடலென அலைவீசியபடி நடமிடுகிறது.

இந்தத் தொகுப்பின் முதல் கவிதையிலேயே அந்த இசை தொடங்கிவிடுகிறது. நாதவெளி என்னும் அக்கவிதை சங்கப்பாடலின் காட்சிக்கு இணையான நிகழ்காலக் காட்சியொன்றைச் சித்தரிக்கிறது. எங்கோ ஒரு கோவில் வளாகம். பிரகார மண்டபத்தில் அமர்ந்து கண்களை மூடி ஒருவர் நாதசுரம் வாசிக்கிறார். ஆலயத்திலிருந்து ஓதுவார் குரல் கேட்கிறது. ஆலயவளாகத்தில் ஓங்கி உயர்ந்து நின்றிருக்கும் அரசமரக் கிளைகளிலிருந்து பறவைகள் பாடும் குரலும் கேட்கிறது. சிரிப்போசையோடும் பேச்சுச் சத்தத்தோடும் பலர் அந்த மண்டபத்தைக் கடந்து செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் நாதமும் பறவையின் ஓசையும் மானுடனின் சிரிப்போசையும் ஒன்றே என்னும் கருத்தோடு மிக இயல்பாகக் கடந்து செல்கிறார்கள். அந்த மாபெரும் மானுடக் கூட்டத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் அந்த நாதத்தில் மயங்கி அங்கேயே நிற்கிறாள். கோவில் வளாகத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான சிலைகளிலொன்று உயிர்கொண்டு வந்து நிற்பதுபோல இருக்கிறது அவள் தோற்றம். வாசிப்பை முடித்தபிறகு கண் திறந்து பார்க்கும் கலைஞன் அவளைக் கண்குளிரப் பார்க்கிறான். யாராலும் பார்க்கமுடியாத அற்புதமான ஓர் உலகத்திலிருந்து மண்ணுலகத்தின் கதவுகளைத் திறந்துகொண்டு வந்ததுபோல அவன் கண்கள் பார்க்கின்றன. அருமையான வாசிப்பு என கைச்சைகையால் உணர்த்திவிட்டுத் தாழ்ந்து பணிந்து வணங்கும் அவள் கண்களை அப்போது பார்க்கிறான். ஒரு கலைஞன். ஓர் ஆராதகன். கொடுக்க ஒருவர். ஏற்க ஒருவர். அந்த வட்டம் முழுமையடைகிறது.

தரிசனக்கணங்கள் இசையின் மகத்துவத்தை உணர்த்தும் மற்றொரு கவிதை. மாதவிலக்காகி, அதிகரித்த உதிரப்போக்கின் வலியை மறக்க இரவு நேரத் தனிமையில் கஜல் பாடும் ஓர் இளம்பெண்ணின் சித்திரத்தை இக்கவிதையில் தீட்டிக் காட்டுகிறார் ரவிசுப்பிரமணியன். ஒரு முறையீடுபோல திரும்பத் திரும்ப முன்வைக்கும் சொற்களை உருக்கமுடன் பாடும் தருணத்தில் எப்போதோ ஒரு கணத்தில் அவள் மனம் தன் வலியை மறந்து இசையைத் தொடர்ந்து சென்றுவிடுகிறது. இசையால் நிகழும் இந்தத் தளமாற்றம் அவளை எங்கோ விண்ணில் மிதக்கவைக்கிறது. உடல் வேதனையை மறக்க வைக்கிறது. பெருங்கருணை கொண்ட தாயைப்போல இசை அவளைத் தொட்டு அணைத்து மடியிலிருத்தி அமைதிப்படுத்துகிறது. அவள் குரலின் கனிவும் பெருகியபடி செல்கிறது. அவளை மட்டுமன்றி, அவளைச் சூழ்ந்திருக்கும் உலகத்தையும் இசை அமைதிப்படுத்துகிறது. இசையே அமைதியென விஸ்வரூபமெடுத்து எங்கெங்கும் நிறைந்திருக்கிறது.

எது சொன்னாலும் குற்றம் கண்டு பிணக்குறும் ஓர் இளம்பெண்ணிடம் இசையின் மகத்துவத்தை அறியும் வழிகளை உணர்த்த விழையும் ஆடவனின் குரலாகத் தொனிக்கும் பரிமாற்றம் கவிதையும் இவ்வரிசையில் வைக்கத்தக்கது.

பாடிப்பாடி இழைகைகளில்

இனம்புரியாமல் வந்து கவ்வுமே

சில பிரயோகங்கள்

அப்போது உனக்குப் புலப்படும்

அந்த ராகத்தில் நீ பிடிக்கும்

உனக்கே உனக்கான சில அபூர்வப்பிடிகளில்

பாதி இலைகள் உதிர்ந்த

அந்தக் கடம்பமரக் கிளையில் அமர்ந்திருக்கும்

சாம்பல் நிறப்பறவையின்

ஆதுரக்குரல் போலொன்று எதிரொலிக்குமே

அதுதான் அதுதான் நான் சொல்ல வந்தது

இசையடுக்குகளுக்குள் மறைந்திருக்கும் ரகசியப்பாதைகளைப்பற்றிய குறிப்புகள் மிகமுக்கியமானவை. அவற்றைப் பின்தொடர்ந்து செல்பவர்களுக்கே அபூர்வ கணங்கள் சாத்தியப்படும்.



அபூர்வ கணங்களைச் சென்றடைய முடியாத மற்றொருத்தியின் விசித்திர எதிர்வினையைச் சித்தரிக்கும் மனசு கவிதையும் மிகமுக்கியமான கவிதை. இசையின் ரகசியப்பாதைகளை அறியாத அறியாமையினால் தனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட வீணையை என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. நாதத்தின் அபூர்வப் பிடியை வசப்படுத்த முடியாத இயலாமையில் அவள் அந்த வீணையை வாகனங்கள் பறந்தோடும் நெடுஞ்சாலையில் வைத்துவிட்டுச் செல்கிறாள். இசையின் இனிய பாதையை அறிந்துகொள்ள முயற்சி செய்யாமல், தன்னுடைய அறியாமையை அவனுடைய குற்ற உணர்வாக மாற்றிவிட முயற்சி செய்கிறாள்.

திருவிளையாடல் கவிதையில் இசை சார்ந்த ஒரு சித்திரம் இடம்பெற்றிருக்கிறது. சிறியதொரு மேளத்தைத் தட்டி இசையெழுப்பி ஏதோ ஒரு பாட்டை ஓங்கி உயர்ந்த குரலில் பாடியபடி சில்லறை குலுங்கும் கிண்ணத்தை ஏந்தி யாசிக்கும் பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் மின்சார ரயில் பயணத்தில் பலரும் பார்த்திருப்போம். அவர்களைப்பற்றிய பல கவிதைகளையும் படித்திருக்கலாம். அவ்வகையான கவிதைகளிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட கவிதையொன்றை இத்தொகுதியில் வழங்கியிருக்கிறார் ரவிசுப்பிரமணியன்.

இந்தக் கவிதையிலும் மின்சார ரயில் இருக்கிறது. தாளமிசைத்து சில்லறைக்காகக் கிண்ணத்தை ஏந்தும் யாசகரும் இருக்கிறார். மனமிளகி சில்லறை கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். பார்த்தும் பாராத முகத்துடன் வெளியே வேடிக்கை பார்ப்பவர்களும் எதையுமே கவனிக்காமல் கைபேசியில் மூழ்கியவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கு நடுவில் கடவுளும் பயணம் செய்கிறார். ஒருவனை யாசிக்கவும் ஒருவனை வழங்கவும் வைத்த கடவுள் அடுத்த நிறுத்தம் வந்ததும் பெட்டியைவிட்டு இறங்கிச் செல்கிறார். நிறுத்தம் வந்ததும் வழக்கமாக யாசிப்பவரோ, தானமிட்டவரோ இறங்கிச் செல்வதுதான் இயற்கையானது. ஆனால் ரவிசுப்பிரமணியன் அவர்களைப் பெட்டியிலேயே நிற்கவைத்துவிட்டு அவசரமாக இறங்கிச் செல்லும் கடவுளைக் காட்டுகிறார். அவ்வளவு அவசரமாகக் கடவுள் எங்கே செல்லக்கூடும்? அலகிலா திருவிளையாடலில் ஈடுபட்டிருப்பவர் அவர். அவர் ஆடலுக்கு முடிவே இல்லை. அடுத்த பெட்டியில் அடுத்த யாசகரை நோக்கி அவர் சென்றிருக்கவேண்டும். அவரே வரித்துக்கொண்ட கடமையிலிருந்து அவருக்கு விடுதலையே இல்லை. திருவிளையாடல் நிகழ்த்தும் கடவுள் பாத்திரம் ஒருபோதும் எளிமையானதல்ல.

மென்முறுவல் ரவிசுப்பிரமணியன் கண்டெடுத்திருக்கும் மற்றொரு அபூர்வத்தருணம். இதில் இடம்பெற்றிருக்கும் சிறுவன் யாசகனைவிடச் சற்றே மேலானவன். ஆனால் யாசகனைப் பார்ப்பதுபோலவே அனைவராலும் பார்க்கப்படுபவன். கிழிந்த சாக்குப்பையோடு தெருக்களில் அலைந்து பழைய தாள்களைச் சேகரிப்பவன் அவன். எங்கோ மரத்தடியில் படுத்து உறங்குபவன். பிளாஸ்டிக் பாட்டிலில் சேகரித்துவைத்த தண்ணீரையே முகம் கழுவவும் அருந்தவும் பயன்படுத்துபவன். முதுகில் சாக்குப்பையைச் சுமந்தபடி தெருத்தெருவாக நடப்பவன். ஊசிக்கம்பு கொண்டு தாள்களைக் குத்திக் குத்தி எடுத்துச் சேகரித்துக்கொள்பவன். காவலர்கள் விளையாட்டாக லத்தித்தடியால் கெண்டைக்காலில் அடிக்கும் அடியை எதிர்ப்பேச்சு பேசாமல் ஏற்றுச் சகித்துக்கொள்பவன். தன் கால் சட்டைப்பையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் தம்ளரில் பணம் கொடுத்து தேநீர் வாங்கி அருந்துபவன். இந்த உலகத்தில் அவனை ஒரு பொருட்டாக மதிப்பவர்கள் யாருமே இல்லை. அவனை ஏற்றுக்கொள்பவர்களும் இல்லை. அவனைப் பார்க்கும் அனைவருடைய பார்வையிலும் அருவருப்பே தெரிகிறது. தற்செயலாக அவன் தேநீர் அருந்தும் கடையில் ஒரு யானையை ஓட்டிவந்து நிற்கும் யானைப்பாகனும் தேநீர் அருந்துகிறான். பாகன் தன் போக்கில் தேநீர் அருந்த, அருகில் நின்றிருக்கும் யானை துதிக்கையை நீட்டி அவனைத் தொட்டுத் தொட்டு விளையாடுகிறது. ஒரு குழந்தையின் உமிழ்நீர்போல துதிக்கையின் ஈரம் பட்டு அவன் உடல் சிலிர்க்கிறது. அன்றைய பொழுதில் முதல் முறுவல் அவன் முகத்தில் பூத்துப் படர்கிறது. மனிதர்களின் அன்பும் மரியாதையும் மறுக்கப்பட்டபோதும், மாபெரும் விலங்கான யானையின் தீண்டலும் அன்பும் கிடைக்கும் தருணத்துக்கு என்ன பெயரிடுவது? எப்படி அதை எதிர்கொள்வது? ஒரே ஒரு மென்முறுவல்தான் அவன் எதிர்வினை. அது யானை தீண்டிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மென்முறுவலா? அல்லது யானைக்கு அவன் வழங்கும் பாராட்டு மென்முறுவலா? அவன் மட்டுமே அறிந்த ரகசியம் அது.

அண்மை இத்தொகுப்பின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று. ஒரே ஒரு மரம் மட்டுமே நிற்கிற காட்சியை இக்கவிதையில் ரவிசுப்பிரமணியன் சித்தரிக்கிறார். ஆனால் அந்த மரத்தின் வழியாக அவர் வெகுதொலைவு நம்மை அழைத்துச் செல்கிறார்.

பல ஆண்டுகள் கழித்து

ஊர் எல்லைக்குள் நுழைந்ததும்

ஆளற்ற பொட்டலின் வேகாத வெயிலில்

எல்லோரும் கைவிட்ட பித்தனைப்போல்

தாறுமாறான கிளைகளுடன்

மடங்கி வளர்ந்த அந்த மரம்

தன்னந்தனியே நின்றது

என்னவோ போலிருந்தது


பறவைகளுமற்ற அதனருகில்

ஆறுதலாய் கொஞ்ச நேரம் சாய்ந்துநின்றேன்

அப்படியொரு சந்தோஷம்.



எல்லோரும் கைவிட்ட பித்தனைப்போல வெட்டவெளியில் தனிமையில் நிற்கும் மரத்தைப் பார்க்கும் முதல் கணத்தில் என்னவோ போலிருக்கிறது. அதன் மீது சாய்ந்த அடுத்த கணத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது. ஒருகணத்தில் முகத்தில் அறையும் வெறுமை. மறுகணமே மகிழ்ச்சி. வெறுமையிலிருந்து மகிழ்ச்சியை நோக்கி நகர்ந்துசெல்லும் பாதையில்தான் கவிதை அமைந்திருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து ஊருக்குள் நுழையும் அந்த நாடோடிக்கு அந்த மரமும் தானும் வேறுவேறல்ல என்ற எண்ணம் எப்படியோ படிந்துவிடுகிறது. கைவிட்ட மரமென்றாலும் தாறுமாறான கிளைகளுடன் செழித்து வளர்ந்து அது காற்றில் சிலிர்த்தாடுவதுபோல தானும் செழித்து வளர்ந்து மகிழ்ச்சியில் திளைக்கமுடியும் என்னும் நம்பிக்கையை அந்த மரத்தின் தோற்றம் அவனுக்கு அளிக்கிறது. அது வெறும் மரமல்ல. நம்பிக்கை ஊட்டிய தோழன். நண்பனின் தோளில் சாய்வதுபோல அவன் மிக இயற்கையாக மரத்தின்மீது நெருக்கத்துடன் சாய்ந்து நிற்கிறான்.

 

இந்த நட்டநடு இரவில்

உன் அறைக்கதவைத்

தட்டி எழுப்பியிருக்கக் கூடாதுதான்

ஆனாலும் வேறு வழியில்லை

உண்மையெனும்

இந்த வட்ட வடிவ வெளிச்சத்தை

உன் கைகளில் தரவே நான் வந்தேன்

இப்போதைக்கு

இந்த வெண்ணிற ஒளி

உன்னறையில் மிதந்தபடி இருக்கட்டும்

வருகிறேன்

 

ஒளி என்னும் தலைப்பிலான இக்கவிதை எதிர்பாராத சிலிர்ப்பையும் ஒருவித மகிழ்ச்சியையும் வழங்கும் கவிதை. எதிர்பாராத தருணம். எதிர்பாராத மனிதன். எதிர்பாராத வருகை. ஆனால் நம் மொத்த வாழ்க்கைக்கும் என்ன வேண்டுமோ, எது உற்ற துணையாக இருக்குமோ, எது நம் ஆழ்நெஞ்சுக்குப் பிடிக்குமோ, எது நினைக்க நினைக்கக் கரையவைக்குமோ, அதை அவன் கொண்டுவந்து கொடுத்துவிட்டு மறுகணமே மறைந்துபோகிறான். ஒருவகையில் இச்சொற்களை, ரவிசுப்பிரமணியன் நம் தமிழுலகத்திடம் தெரிவிக்கும் அறிவிப்பாக அல்லது வேண்டுகோளாக அல்லது வாக்குமூலமாகவே எடுத்துக்கொள்ளலாம். அவர் அளிக்கும் வட்டவடிவ வெளிச்சம் நம் அறைகளில் மிதந்தபடி இருக்கட்டும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *