நூல் அறிமுகம்: ரவி சுப்பிரமணியன் அவர்கள் எழுதிய *“ஆளுமைகள் தருணங்கள்”* – உஷாதீபன் 

நூல்: “ஆளுமைகள் தருணங்கள்”
ஆசிரியர்: ரவி சுப்பிரமணியன்
வெளியீடு: காலச்சுவடு, நாகர்கோவில்
விலை: ரூ.95

தமிழின் குறிப்பிடத் தக்க ஆவணப் பட இயக்குநர் திரு ரவி சுப்பி்ரமணியன். சில இலக்கிய ஆளுமைகளைச் சந்தித்த, பழகிய அனுபவங்களையும் நாடக, திரைப்பட ஆளுமைகளுடன் பழக நேர்ந்த அனுபவங்களையும் இப்புத்தகத்தில் மிக மிக நுணுக்கமாகவும், நெருக்கமாகவும் விவரிக்கிறார்.

எம்.வி.வி., கரிச்சான் குஞ்சு, கவிஞர் அபி, தேனுகா என்று எழுத்தாளர்களையும், மதுரை சோமு, பி.பி.ஸ்ரீநிவாஸ் என்று பாடகர்களையும், பாலு மகேந்திரா, ருத்ரய்யா என்று இயக்குநர்களையும், எஸ்.வி.சகஸ்ரநாமம்பற்றியும், ஓவியர் மருது, ஓவியர் ஜே.கே. ஆகியோரைப்பற்றியும் ஆவணப்படுத்தும் முகமாக மிக நுணுக்கமாக அவர்களது ஒவ்வொரு சிறு சிறு அசைவுகளையும் கவனப்படுத்தி இப்புத்தகத்தில் வடித்திருக்கிறார்.

வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படாததினால் ஏற்படும் சோகம் போல வேறு எதுவும் இருக்க முடியாது என்று ஆரம்பிக்கையிலேயே அது எம்.வி.வி.பற்றித்தான் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடிகிறது. எம்.வி.வி.யின் படைப்புலகம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கின் இறுதியில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். அந்த இறுதி வரிகள் மிகவும் நெகிழ்ச்சியானவை என்று பதிவு செய்கிறார் ரவி சுப்ரமணியன் அவர்கள்.

“நான் கல்லாப் பெட்டியை மூடி விட்டேன். விளக்கையும் அணைத்தாயிற்று. என் கடையைக் கட்டிப் பூட்டிவிட்டேன். சூடமும் கொளுத்தியாகிவிட்டது. அதுவும் கொஞ்ச நேரத்தில் அணையும். இப்போது நான் என் குருநாதனின் (முருகனின்) சொல்லுக்குக் காத்திருக்கிறேன்”

மரணத்திற்குத் தயாரான ஒரு மனநிலையில் அவர் இப்படிப் பேசியது நமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கேட்காத காதுகள்…பார்க்க முடியாத குளுக்கோமா விழிகள், பிறழ்வான மனக் கொதிப்பு…இது அவரது கடைசி வருட வாழ்க்கை.

சரி…அது ஒரு பக்கம் என்றால், கரிச்சான் குஞ்சுவின் வாழ்க்கையாவது நிம்மதியாய் இருந்திருக்கிறதா என்றால் இல்லை. க்ரியாவுக்காக மொழி பெயர்த்த “த்வன்ய லோகம்” என்ற நாவல் க்ரியா ராமகிருஷ்ணனுக்கும், அவருக்கும் ஏற்பட்ட சிறு மனத்தாங்கலில் நின்று போகிறது. மூத்தவளுக்கு மணம் முடித்தே ஆக வேண்டும்.வயது இருபத்தி ஒன்பது. அவமான உணர்ச்சியுடனேயே நடமாடிக் கொண்டிருக்கிறேன்…இறையருள் எப்படியோ! மனசை இம்சிக்கும் தீய கனவுகளை நான் பெரிதுபடுத்திக் கொண்டால், மங்கிக் கிடக்கும் ஆத்ம விலாசமும் மாய்ந்தே போகும் என்று துக்கப்படுகிறார் கரிச்சான் குஞ்சு.மனித மனத்தின் அடியில் படிந்து போயிருக்கும் தன் முனைப்பு, காமம், பொருந்தாக் காமம், செல்வம் சேர்ப்பதில் உள்ள வேட்கை, அதன் பொருட்டு நடக்கும் கேவலங்கள்,பக்தியின் பெயரால் நடக்கும் போலித்தனங்கள் என்று எல்லாவற்றையும் மறைக்காமல் ஒளிக்காமல் தன் படைப்பில் கொண்டு வந்தவர் கரிச்சான் குஞ்சு என்கிற ரவி சுப்பிரமணியத்தின் பதிவு ஒவ்வொருவரைப்பற்றியும் எத்தனை நெருக்கமாக அணுகியிருக்கிறார் என்பதை நமக்குப் புலப்படுத்துகிறது.

அபி என்கிற கவிஞரை நாம் அறிவோம். மதுரையைச் சேர்ந்தவர். அமைதி தவழும் அவரின் சிந்தனா முகமே அவர் மீது நமக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்தும். அவரின் அழுத்தமான, அமைதியான, ஆழமான பல கவிதைகள் நம் மனதைப் பெருத்த சங்கடத்துக்கு ஆளாக்கி விடும். தன்னை முன்னிறுத்தி எதிலும் காட்டிக் கொள்ளாதவர். இப்படி ஒருவர் இருக்கிறார் என்பதையே யாரும் அறிய வேண்டும் என்கிற அவசியமில்லை என்பது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர். கவிதையின் மூச்சு ஒன்று கவிதையை மறுத்தும் கடல்வெளி முழுவதையும் கரைக்கத் தொடங்கிற்று

இந்த வரிகள் போதுமென்று நினைக்கிறேன் அவரை உணர்த்த. விஷ்ணுபுரம் விருது பெற்று, ஜெயமோகனால் கௌரவிக்கப் பெற்றவர். வெளியில் தெரியாத இயற்கையின் உள்ளியக்கங்களை இவர் படிமப்படுத்தும்பொழுது, மானிடமும் இயற்கையும் ஒன்று கலந்து பரவச பிம்பங்கள் எழுகின்றன என்று மெச்சி மகிழ்கிறார் ஆசிரியர்.

ரவி சுப்பிரமணியன் இலக்கிய நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் பாடுவதை நாம் கேட்டிருப்போம். சிறிய பாடலாய் இருப்பினும், இறை வணக்கமாயினும், பிசிறு தட்டாமல், சீரான ஸ்தாயியில், எங்கும் இம்மியும் ஸ்ருதி கெடாமல் தன் குரலை முன் வைப்பார். இசையின் மீதும், இசை ரசனை மீதும் அவ்வளவு ஆழ்ந்த ஈடுபாடு அவருக்கு. அந்த ரசனை கர்நாடக சங்கீத வித்வான் மதுரை சோமுவின் குரலை ஆழ்ந்து சிலாகிப்பதில், செவ்வியல் இசையின் மேன்மையை விதந்தோதுவதில் எவ்வளவு பெருமையுறுகிறது பாருங்கள்….

தோடியைப் பாடும்போது திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம்பிள்ளை பற்றியும், அவர் அந்த ராகத்தைக் கையாண்ட விதம் பற்றியும், அதன் குறிப்புகளையும் சொல்வார். மோகனம் பாடுகையில் மகாராஜபுரம் மோகனம் விஸ்வநாதய்யரை நினைவு கூர்வார். அதுபோல் தனது குருநாதர் சித்தூர் சுப்ரமணிய பிள்ளை ராகம் பாடும் விதம் பற்றிப் பேசியும், பாடியும் காண்பிப்பார். கேட்க அரிதான காழியன், சந்திரமௌலி ராகங்களை மதுரை சோமு பாடிக் காண்பிப்பார். ஃபுல் பெஞ்ச் கச்சேரி செய்தவர் மதுரை சோமு. அதாவது அனைத்துப் பக்கவாத்தியங்களும் புடை சூழ நடுநாயகமாய் அமர்ந்து அவர் பாடி அமர்க்களப்படுத்தும் விதம்….ஒருவர் தன்னை மறந்து கழுத்துச் சங்கிலியைக் கழற்றி அவருக்குப் போட்ட நிகழ்வெல்லாம் கூட உண்டு. இதே மதுரை சோமு அவர்கள் என்னோட மருத மலை மாமணியே பாட்டுக் கேட்டிருக்கியாம்மா…? என்றுதான் தன்னை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருந்தது என்பதுதான் அவரது குழந்தை உள்ளத்தின் அடையாளமான சோகம்.

பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸின் குரல்தான் மென்மையென்றால் அந்த மென்மையை உளமுருகி ரசித்த ரவி அவர்களின் சிலாகிப்பு நம்மை அதற்கு மேலும் உருக வைக்கிறது. எந்த மெட்டுக்கும் குரல் ஒரு வண்ணம் சேர்க்கும்தான். பி.பி.ஸ்ரீ.யோ தன் தனித்த குரலின் ஆளுமை வழியே சாந்தமெனும் வண்ணம் குழைத்த சித்திரங்களை அவர் நமக்கு வரைந்து தந்த வண்ணமிருக்கிறார்..என்று பெருமைப் படுத்துகிறார். கேட்கும்போது சாதாரணமாக ஒலித்து, எளிய தோற்றம் தரும் பாடலிலும் அவர் செய்த நுட்பமான விவரங்கள் ஒளிந்து கிடக்கும் அழகு திரும்பத் திரும்பப் பலமுறை கேட்டும், கசிந்தும்தான் உணர முடியும்….காலங்களில் அவள் வசந்தம்…என்கிற எளிய பாடலாய்த் தோன்றுவதை நாமும் பாடிப் பதிவு செய்து அவர் குரலோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும்…அவரின் ஆளுமை எந்தெந்தப் புள்ளிகளிலெல்லாம் பரிணமிக்கிறது என்று எனப் புகழ்ந்துரைக்கிறார். கோவைக்கு வந்திருக்கிற டி.கே.எஸ்.நாடகக்குழுவில் சேர வீட்டை விட்டு வெளியேறுகிறார் அவர். தேடி வருகிறார் தந்தை. நடிப்பா படிப்பா என்று கேட்க, இவர் நடிப்பே என்று சொல்ல, உன் தலையெழுத்துப்படியே நடக்கட்டும் என்று சொல்லி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டுக் கிளம்பி விடுகிறார் தந்தை. அப்படித் தன் நடிப்பு வாழ்க்கையைத் துவங்கியவர்தான் எஸ்.வி.சகஸ்ரநாமம் என்கிற கலைஞர். நாலுவேலி நிலம் படம் எடுத்து நஷ்டம் அடைந்ததும், பண்டரிபாய்க்கும், மைனாவதிக்கும் பைசா நிலுவையில்லாமல் கணக்குத் தீர்த்ததும், வீடு ஏலத்திற்கு வந்து வாசலில் அமீனா நிற்கையில், உள்ளே மாடியில் எந்தச் சலனமுமில்லாமல் நாடக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்ததும்….கலையையும், நாடகத்தையும் எத்தனை உயிர் மூச்சாய் நேசித்திருக்கிறார் எஸ்.வி.எஸ்….என்பதை நமக்கு நிறையச் செய்திகளோடு விளக்குகிறார்  எழுத்தாளர் ரவி. 

நம்பியாரைப்பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கணும் ரவி என்று அன்போடு தெரிவிக்கும் பாலு மகேந்திரா ஜெயகாந்தனைப் பற்றிய ரவி சுப்ரமணியனின் ஆவணப்படத்தைப் பார்த்து வியந்துவிட்டே இந்தக் கோரிக்கையை அவரிடம் வைக்கிறார். அஞ்சு தலைமுறையைப் பார்த்தவர் எம்.என்.நம்பியார்…என்கிற அபூர்வக் கலைஞன்….வரலாற்றின் சில பக்கங்களை அவர்தான் நேர்மையாச் சொல்ல முடியும் என்றாராம் இவரிடம். ஆனால் என்ன காரணத்தினாலோ அது சாத்தியமில்லாமலே போனது என்று வருந்துகிறார். 

நீங்கள் என்னிடம் எழுதிக் காண்பிக்கிற எதுவும் கவிதை இல்லை ரவி. அதை எல்லாம் நிறுத்துங்கள். உங்கள் வாசிப்பு முறையை முதலில் மாற்றுங்கள்…நீங்கள் படிப்பவர்களுக்கும், உண்மையான இலக்கியத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர்கள் நோக்கங்கள் வேறு. உங்கள் அசட்டு உலகத்திலிருந்து வெளியே வாருங்கள்…என்று சொல்லி எனக்கு சரியான இலக்கியத்தை அணுகும் முறையைக் கற்றுக் கொடுத்தார் எழுத்தாளர் தேனுகா…என்று பெருமைப்பட மெச்சியுரைக்கிறார் ரவி சுப்ரமணியன். இசை, ஓவியம், சிற்பம், கட்டிடம், இலக்கியம், சமூகம், தத்துவம் என்று பல துறைகளை எனக்குப் பரிச்சயமாக்கிய பெருந்தகை என்று நன்றியோடு தேனுகாவைப்பற்றி நினைவு கூர்கிறார். 

காத்திரமான பங்களிப்பைச் செய்துவிட்டு தன்னை முன்னிறுத்தும் யத்தனங்கள் இல்லாத சில உன்னத கலைஞர்களையும் சிந்தனையாளர்களையும் தமிழ்ச் சமூகம் கடைசி வரைதனித்தே வைத்திருக்கிறது உலகமே வியாபாரிகள் கையில் இருக்கும்போது எல்லாமே ஒரு வகையில் பொருள்கள்தானே…! என்று வேதனையோடு முடிக்கும் ரவி சுப்ரமணியத்தின் இந்தப் புத்தகத்திலான கட்டுரைகள் படைப்பிலக்கியத்தின் அத்தனை இயல்புகளையும் தன்னகத்தே கொண்டு வரலாற்று ஆவணம் போல் திகழ்கிறது என்பதே உண்மை.

————————————.