Rayil nilayangalin thozhamai ரயில் நிலையங்களின் தோழமை

தோழர் பகவதி அவர்களின் அலுவலகப் பணி (நியூ இந்தியா அஸ்ஸுரன்ஸ்) ஓய்வு நிகழ்வில் பங்கெடுத்தவர்களுக்கு பரிசாக அளித்த புத்தகம் இது.

மதுரை – சென்னை ரயில் பயணத்தில் துவங்கி, சென்னை-கொல்கத்தா விமானப் பயணத்தில் படித்து முடித்தேன்.

பயணங்களை விரும்பும் மனதிற்கு இந்தப் புத்தகம் வண்ணமயமான இறகுகளை சேர்த்துவிடும். இது வெறும் பயணக் குறிப்பு கட்டுரைகளின் தொகுப்பு அல்ல இது. பயணங்களின் ஊடே, புத்தக ஆசிரியரின் மனம் மேற்கொள்ளும் பயணம் பற்றிய நூல். வரலாற்று, சமூக, அரசியல், தத்துவ, தனித்துவமான தலைவர்கள் பற்றிய கலை, கலாச்சாரம் என – இவற்றை எல்லாம் குறித்து பல்வேறு அரிய தகவல்களை எஸ்.ரா. தூவிக் கொண்டு செல்கிறார். முதல் கட்டுரையிலேயே பயணம் என்பது புறத்தேடல் மட்டுமல்ல, அகத்தேடல் என்கிறார் . அகத்தினுள் எவ்வளவு தூரம் பயணிக்கிறீர்கள்? என வாசகர்களைக் கேட்கிறார்.

சில ஊர்களை, சில அருங்காட்சியகங்களை, கண்காட்சி கூடங்களை எஸ்.ரா. விவரணை செய்யும் போது, நாம் அங்கே செல்ல வேண்டும் என்கிற தவிப்பை தந்துவிடுகிறார். டொராண்டோ நகரில் உள்ள பிகாசோவின் அசல் (original) ஓவியக் கண்காட்சி பற்றிய கட்டுரை அருமை. எல்லாவற்றையும் காணும் போது நம்மை கரைத்துக் கொள்ளுங்கள்; எல்லாவற்றின் ஊடாகவும் நாம் இருப்பதைக் காணத் துவங்குங்கள் என்கிறார் நூலாசிரியர். அதுவே ஓவியங்களைப் புரிந்து கொள்ள எளிய வழி என்கிறார். டொராண்டோவிற்கு செல்ல வேண்டும் என உந்துதல் ஏற்பட்டுள்ளது.S. Ramakrishnan - Wikipediaரயில் நிலையங்களின் தோழமை »

ஆர்.கே. நாராயணன் மற்றும் ராஷ்ட்ரகவி குவெம்பு (கேரளா) நினைவிடத்திற்கு அவர் சென்ற நினைவுகள் பற்றிய கட்டுரை படிக்க வேண்டிய முக்கியமான கட்டுரை. ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி என்கிற ஆர்.கே. நாராயண் தமிழகத்தில் பிறந்து கர்நாடகாவில் வாழ்ந்து மறைந்த அவருக்கு மைசூரில் நினைவில்லம் அமைக்கப்பட்டுள்ளது என்கிற தகவல் எனக்கு புதிது. பல முறை மைசூரு சென்று அங்கு செல்லவில்லையே என்கிற உணர்வு மிகுந்தது. எழுத்தாளர்களை கவிஞர்களை இந்திய மக்கள் இன்னும் இன்னும் கொண்டாட வேண்டும் என்ற அவரது ஆதங்கம் நம்மையும் தொற்றிக் கொண்டது.

அதே உணர்வு கம்பனின் நினைவிடம் குறித்து கட்டுரை‌. சோழ நாட்டில் பிறந்த கம்பன், சோழ மன்னனை, “மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ என்று பழித்து பாடிவிட்டு, சோழநாடு நீங்கி, தற்போது சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் வாழ்ந்து இறந்தான். அந்த பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவரது சமாதியில் இருந்து மண் எடுத்து சேனை வைப்பது வழக்கம்.

ஜப்பான் ஹைக்கூ கவிதைகளின் பிதாமகர் பாஷோ அவர்களின் டோக்கியோ நினைவிடத்தையும், தமிழ் சக்கரவர்த்தி கம்பனின் நினைவிடத்தையும் ஒப்பிடுகிறது எஸ். ராமகிருஷ்ணன் மனம். அவரது நினைவிடம் மியூசியமாக மாற்றப் பட்டுள்ளது. 1600 களில் பாஷோ பாடிய அனைத்து கருப்பொருட்களும்- தவளை, நீரோடை, வாழைமரம் என அனைத்தும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளதை கூறுகிறார். உடனேயே கம்பனின் நினைவிடம் இருப்பது தமிழக மக்களுள் எத்துனை பேருக்கு தெரியும் என வினா கொடுக்கிறார். நாட்டரசன் கோட்டை அருகே உள்ள கருதுபட்டி என்கிற ஊரை கண்டுபிடித்துப் போவதே ஒரு சவால் என்கிறார். வழியில் விசாரிக்கும் மக்களுக்கு, கம்பன் யாரென்று தெரியவில்லை என்பது சாபக்கேடு என்று சாடுகிறார். தகவல் பலகை கூட கிடையாது. விளக்கம் சொல்லக் கூட யாருமில்லை. தூக்கி உச்சி மோந்து கொண்டாட வேண்டிய கம்பனுக்கே இந்த நிலைமை. கம்பனுக்கு சித்திரங்களுடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டும். ஆண்டு தோறும் அங்கே கவிதை திருவிழா நடத்த வேண்டும் என்கிற எஸ்.ரா. வின் கோரிக்கையை நாமும் உரக்க பேச வேண்டும்.

சென்ற வருடம் 12 நாட்கள் ராஜஸ்தான் மாநில கிராமங்களில் நானும் என் இணையரும் சுற்றித் திரிந்தோம். அந்த மாநிலத்தைப் பற்றி, மக்களின் வாழ்நிலைப் பற்றி, பொருளாதாரம், பெண்களின் நிலை, கலை, கலாச்சாரம் பற்றி எனக்கு ஏற்பட்ட பல எண்ணங்கள், எஸ்.ரா. வின் கருத்தோடு ஒத்திசைவாக உள்ளது. கும்பல்கர் கோடடைக்கு அந்தி சாயும் மாலையில் தான் போய்ச்சேர முடிந்தது. அஜ்மீரில் இருந்து உதய்ப்பூர் செல்லும் வழியில் கற்பனைகளைக் கடந்த பிரம்மாண்டமான கோட்டை அது. சீனப் பெரும் சுவருக்கு அடுத்தபடி மிக நீண்ட மதில் சுவர் கொண்ட கோட்டை அது‌. 38 கி.மீ. நீளம். அதன் வாசலில் நிற்கும் போது என்னை நான் எறும்பைப் போல உணர்ந்தேன். ஆறேழு குதிரைகள் ஒரே நேரத்தில் செல்லும் அளவு அகலமானது. ஏறும் போது மூச்சு பலமாக வாங்கியது. அவ்வளவு உயரம். உச்சியில் இருந்து எதிரிகளை நடமாட்டம் எளிதாகத் தெரியும். சூரியன் மறையத் தொடங்கியதால் கோட்டையின் உச்சிக்கு செல்ல முடியவில்லை.

ஆரவல்லி மலைத்தொடரின் நடுவே அமைந்த கோட்டை எதிரிகள் கனவிலும் கோட்டைக்குள் வர இயலாது. கும்பல்கரில் இருந்து உதய்பூர் நோக்கி காரில் செல்லும் வழியில் இரவு ஏழு மணியளவில் ஆரவல்லி மலைக் காட்டில் புலி ஒன்று மெதுவாக நடந்து சென்றது‌. உடலில் தெம்பு உள்ள போதே மற்றொரு செல்ல வேண்டும். முழுமையாகப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் கோட்டைகளையும் கும்பல்கர் கோட்டையையும் ஒப்பு நோக்கக் கூட இயலாது. எஸ்.ரா.‌, கும்பல்கர் கோட்டையை வர்ணிக்கும் விதமே அலாதி.

கல்கத்தா – சென்னை விமான பயணத்தில் இந்த நூல் பற்றிய எனது கருத்தினை டைப் செய்து முடித்தேன். பயணம் குறித்த நூலை விமானப் பயணத்தின் போது விமர்சனம் எழுதியது ஒரு வித அனுபவம்.

அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல். ஒவ்வொரு கட்டுரையும் அந்தந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டும் வகையில் உள்ளது. நூலை தெரிவு செய்து கொடுத்த சுவாமிநாதன் – பகவதி குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்!

           

         நூலின் தகவல்கள் 

நூல் : “ரயில் நிலையங்களின் தோழமை”

ஆசிரியர் : எஸ் . ராமகிருஷ்ணன்

பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் (2018)

விலை : ரூ .125

              நூலறிமுகம் எழுதியவர் 

                         வெ.ரமேஷ்
                           மதுரை

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *