வாசிப்பு அனுபவம் – 58 | 1729 | நூல் மதிப்புரை

1729
1729நூல் : 1729
ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 80
விலை : ₹ 65
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/1729-ayisha-era-natrasan/

புற்றுநோய் பாதித்த 27 குழந்தைகள் (இதில் ஒரு குழந்தை நாவல் தொடங்குவதற்கு முன்பே இறந்து விடுகிறது. நாவலில் பெயராய் மட்டுமே வருகிறான்) இணைந்து நடத்தும் ஒரு கணித இணையதள பக்கம் தான் 1729 டாட் காம்.

நாளும் ஒவ்வொரு புதிர் கணக்குகளை அதில் அவர்கள் பதிந்து மூன்று நாட்கள் கழித்து அதற்கான விடைகளையும் பதிவேற்றுகிறார்கள். உலகமே அவர்களின் இணையதளத்தை ஆவலோடு உற்றுநோக்கி வினாக்களுக்கு விடையளிக்க முயற்சிக்கிறது.

புற்றுநோய் பாதித்த குழந்தைகளின் வாயிலாய் அந்நோய் குறித்த தகவல்களை ஆசிரியர் விவரிக்கிறார்.

அத்தோடு பல்வேறு வகையான புற்றுநோய்களால் அக்குழந்தைகள் படும் அவஸ்தைகளை வாசிக்கையில் கண்களில் நீர் வழிகிறது. இத்தகையதொரு நிலையில் வாழும் குழந்தைகளை எண்ணிப் பார்க்கையில் மனம் பதைக்கிறது. இனி எந்தவொரு குழந்தைக்கும் இது போன்றதொரு நிலை வரக்கூடாது என உள்ளம் பிரார்த்திக்கிறது.

மிஸ்டர் எக்ஸ், மேடம் ஒய், மிஸ்டர் இசட் இவர்கள் மூவரும் 27 குழந்தைகள் தவிர்த்து நாவலில் வரும் முக்கிய, நெகிழ்ச்சியூட்டும் கதாபாத்திரங்கள்.

பட்டப் படிப்பு வரை படித்திருந்தாலும் நாம் கற்றிருக்கும் கணிதமென்பது அன்றாட வாழ்வியலுக்கு உதவாத வெறும் ஏட்டுச் சுரைக்காய் தான் என்பதனை மிஸ்டர் எக்ஸ் வாயிலாய் நூலாசிரியர் உணர்த்துகிறார்.

1729 என்ற ராமானுஜன் எண்ணிற்கு இதுவரை நாம் “இரு வகையில் இரு வேறு எண்களின் கணங்களின் கூடுதலாய் எழுத முடிந்த மிகச் சிறிய எண்” என்ற விளக்கத்தினை மட்டுமே மாணவர்களுக்கு சொல்லி வருகிறோம். ஆனால் இந்நூலில் அதையும் தாண்டி 1729 இன் சிறப்பாய் வேறொரு தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்னவென்பதை நூலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்..1729 டாட் காம் இணையதளம் மூலமாய் கவரப்பட்ட சில அமைப்புகள் இணைந்து புற்றுநோய் பாதித்த இக்குழந்தைகளுக்கு ஆளுக்கு ரூ. 30000 வழங்க முன்வருகிறது. ஆனால் அதனை இவர்கள் தங்களின் சொந்த செலவுக்கு உபயோகிக்காமல் வேறொரு காரியம் செய்கின்றனர். அதைப் பற்றி வாசிக்கையில் மயிர் கூச்செரிகிறது. அற்புதமான குழந்தைகள்!!!

பொதுவாக ஒரு நூலின் அத்தியாங்களுக்கு 1,2,3…. என்று தொடர்ச்சியாக எண்கள் இடுவதே வழக்கம்.
நூலாசிரியர் இந்நூலில் அத்தியாயங்களுக்கு பெயர்கள் இடுதலில் ஒரு புதுமையைக் கையாண்டுள்ளார். அது என்னவெனில், 2,3,5,7,11….. என்று பகா எண்களையே அத்தியாங்களின் தலைப்புகளாய் சூட்டியுள்ளார்.

சோஃபி ஜெர்மெய்ன் என்ற பெண் கணித மேதை, இந்தியாவின் மிகப் பழமையான கணித நூல் பாக்சாலி, பிதாகரஸின் துணைவியார் பெயர் தியானோ, தன் இறப்பினையும் சரியாய் கணித்த கணிதமேதை பெர்னாலி போன்ற பல ஆச்சரியமான பாட புத்தகங்களில் நாம் படிக்காத பல கணித தகவல்களைத் தந்து நம் வாசிப்பை வசீகரமாக்குவதில் திரு. ஆயிஷா நடராசன் அவர்கள் என்றுமே முன்னோடி தான்.

இறுதியாய், நூலிலுள்ள சில புதிர்கணக்குகளை உங்களின் மூளைக்கு சவாலாய் விடுத்து இவ்வாசிப்பு அனுபவத்தை முடிக்க நினைக்கிறேன்.

1. 6 என்பது ஒரு கச்சித எண் (Perfect number) என அறிவோம். அது போல் 26 என்பது ஒரு சிறப்பு எண். எவ்வாறு?

2. தந்தை மற்றும் மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை 66. தந்தையின் வயதைத் திருப்பிப் போட்டால் மகன் வயது வரும். தந்தை மகன் வயதுகள் என்ன?

3. ரத்தினாவுக்கு நேற்று முன் தினம் 10 வயதானது. ஆனால் அடுத்த ஆண்டு 13 வயது ஆகிவிடும். எப்படி? ரத்தினா பிறந்த தேதி என்ன?

4. 1729 இன் பிறந்த தினம் எது?

~ திவாகர். ஜெ ~