இருமொழிக் கொள்கையே ஏற்புடையது:
● கல்வியியல் செயல்பாட்டில் மொழியின் பயன்பாட்டை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும்.
● தாய் பேசும் மொழி அல்லது குழந்தை பிறந்து வளரும் சூழலில் பேசப்படும் மொழியே குழந்தையின் கற்றல் செயல்பாடு தொடங்கும் மொழி. அதே மொழியில் பள்ளிப் பாடங்களும் படிக்க வாய்ப்பு கிடைத்தால் அதுவே குழந்தைக்கு எந்த இடர்பாடும் இல்லாமல் கற்றல் செயல்பாட்டில் விரும்பி ஈடுபடும் ஆர்வத்தைத் தந்திடும். உடனடி பயன்பாடு என்ற வகையில் குழந்தைகள் ஆங்கிலமும் கற்கின்றனர். இதுவே, பரவலாக அறியப்படும் இருமொழி கொள்கையின் அடிப்படை.
● இவற்றைக் கடந்து, தான் வாழும் சூழலியலில் பயன்படுத்தப்படாத ஒரு மொழியை, கூடுதல் மொழிப்பாடமாக படிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தினால், அத்தகைய நிர்பந்தம் குழந்தைக்கு கூடுதல் சுமை.
● கூடுதலாக ஒரு மொழியில் எழுத்தறிவு மட்டுமே ஒரு குழந்தை பெறும். பின்னர் அந்த மொழி எந்தளவு அந்த குழந்தைக்கு பயன்படும் என்று யாராலும் உறுதியாக சொல்ல இயலாது.
● தேவையில்லாத ஒரு சுமையை குழந்தைப் பருவத்து மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே மூன்று மொழிகள் கற்க வேண்டும் என்று வலியுறுத்தும் பள்ளிப் பாடத்திட்டக் கோட்பாட்டை ஏற்க இயலாது என்று உறுதியுடன் கூறுகிறோம்.
தேசியக் கல்விக் கொள்கை 2020 நிராகரிப்பிற்கான காரணங்கள்:
● இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கும் அதன் கூறுகளுக்கும் நேரெதிராக அமைந்துள்ளதால் தேசியக் கல்விக் கொள்கை 2020 ஏற்புடையதல்ல என்று தெளிவுபட கூறுகிறோம். தேசியக் கல்விக் கொள்கை 2020 பள்ளிக் கட்டமைப்பில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கு பதிலாக பள்ளிக் கல்வியில் பாகுபாட்டை நிலைப் பெறச் செய்கிறது.
● பி எம் ஶ்ரீ பள்ளிகள் என்று சில நூறு பள்ளிகளையும், அரசு பள்ளிகள் என்று பல ஆயிரம் பள்ளிகளையும், அரசுப் பள்ளி கட்டமைப்பிற்குள்ளேயே பாகுபாட்டை உருவாக்குகிறது தேசியக் கல்விக் கொள்கை 2020. பி எம் ஶ்ரீ பள்ளிகள் தான் ஆகச் சிறந்த பள்ளிகள் என்றால் மற்ற அரசுப் பள்ளிகள் நிலை என்ன? பி எம் ஶ்ரீ பள்ளித் திட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14 மற்றும் 21 க்கு நேரெதிரானது.
● குழந்தைப் பருவத்தில் மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்குவது குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கவே பயன்படும். அரைகுறைத் திறன் கொண்ட கூலித் தொழிலாளர்களாக வேலைச் சந்தையில் இளைஞர்கள் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகும்.
● பெற்றோரும் மாணவர்களும் விரும்புவது குழந்தைப் பருவத்தில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுகளில் தடம் பதிக்கும் அளவிற்கு பயிற்சி மேற்கொள்ள உரிய உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி ஆசிரியர்களை நிரந்தரப் பணியிடத்தில் நியமிக்க வேண்டும். கணினி அறிவியல் கற்றுக் கொள்ள தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை கணினி ஆசிரியர்களை நிரந்தரப் பணியிடத்தில் நியமிக்க வேண்டும்.
● பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணி, காவல் பணி, நிர்வாகப் பணி, நூலகர் பணி ஆகிய பணியிடங்கள் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை அனைத்துப் பள்ளியிலும் உருவாக்கி நிரந்தரப் பணியிடத்தில் உரிய ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
● பள்ளியில் கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை முழுமையாக கற்க நடுநிலைப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை ஆய்வகங்கள் அமைத்து, ஆய்வக உதவியாளர் (Lab Assistant), செய்முறை ஆசிரியர் (Laboratory Demonstrator) பணியிடங்கள் உருவாக்கி நிரந்தர பணியில் நியமிக்க வேண்டும்.
● பள்ளி வளாகம் அல்லது வேறு எந்த வடிவத்திலும் பள்ளிகளை இணைக்கிறோம் என்ற பெயரில் பள்ளிகளை மூடக்கக்கூடாது.
● பெற்றோரின் இத்தகைய எதிர்பார்ப்புகள் எதையும் நிறைவேற்றாமல், அரசுப் பள்ளிகளை பலவீனப்படுத்தவும், தனியார் பள்ளிகள் தங்களின் செலவுகளை ஈடுகட்டும் அளவு கல்விக் கட்டணம் பெறவும், ஒரு பள்ளியில் உருவாகும் உபரி பணத்தை வேறு கல்வி நிறுவனம் தொடங்க முதலீடு செய்ய அனுமதிக்கவும் வழிச் செய்வதனாலும், மொத்தமாக அரசிப் பள்ளிகளை அழித்துவிட்டு, இறுதியாக, தற்போது சைனிக் பள்ளிகளின் நிர்வாகப் பொறுப்பு எவ்வாறு தனியாரிடம் தரப்பட்டுள்ளதோ அதே போல, பி எம் ஶ்ரீ பள்ளிகள் தனியாரிடம் ஒப்படைக்கும் சூழ்ச்சி நிறைந்தது தேசியக் கல்விக் கொள்கை 2020. இத்தகைய ஆபத்துக்கள் நிறைந்தது என்பதனாலேயே இக்கல்விக் கொள்கையை ஏற்க இயலாது என்று உறுதியுடன் கூறுகிறோம்.
உயர்கல்வியைச் சிதைக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020:
● உயர்கல்வியில் இன்றுள்ள சமூகநீதியின் அடிப்படையிலான கட்டமைப்பை முற்றிலுமாக சிதைத்து, பெரும் பகுதி மாணவர்களை உயர் கல்வி முழுமையாக முடிக்க முடியாத நிலையை உருவாக்குகிறது தேசியக் கல்விக் கொள்கை 2020.
● தேசிய அளவில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) மூலமே இளநிலைப் பட்டப்படிப்பில் சேர இயலும் என்ற நடைமுறை, வெளிப்பாட்டின் அடிப்படையிலான கல்வி (Outcome Based Education), கலவை கற்றல் (Blended Learning), எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம், எப்போது வேண்டுமானாலும் உள்ளே வரலாம் (Multiple Exit Multiple Entry) என்ற திட்டம், ஆசிரியர் பயிற்சியும், ஆசிரியர் அனுபவமும் இல்லாதவர்கள் கூட ஆசிரியர் பணியை மேற்கொள்ளலாம், கல்வியியல் செயல்பாடு இல்லாதவர்களையும் துணை வேந்தர் பணிக்கு நியமிக்கலாம் என்பதும், மாநில அரசிற்கு அதன் உயர் கல்வி நிறுவனங்களில் எந்த முடிவெடுக்கும் அதிகாரமும் இல்லை என்ற கோட்பாடு உள்ளிட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020 முன்வைக்கும் அனைத்தும் மாணவர்கள் நலனுக்கு எதிராகவும், இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமத்துவக் கோட்பாட்டிற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் நேரெதிராக அமைந்துள்ளதால் தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ ஏற்க இயலாது.
மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பது மக்களாட்சி மாண்புகளுக்கு ஏற்புடையதல்ல:
● மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிதியை, ஒன்றிய அரசு தர மறுப்பது சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் செயலாகும்.
● இந்திய அரசமைப்புச் சட்டம், எட்டாம் வகுப்பு வரை கல்வியை அடிப்படை உரிமையாக அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்கியுள்ளது. மாணவர்களின் பள்ளிக் கல்வி செயல்பாட்டிற்கு உரிய நிதியை, உரிய காலத்தில் ஒன்றிய அரசு தர மறுப்பது, குழந்தைகளின் கல்வி உரிமையை மறுக்கும் செயலாகும். மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரிப் பணம் மக்களின் பயன்பாட்டிற்கு உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும். உரிய காலத்தில் வரியைக் கட்டவில்லை என்றால் அதற்குரிய தண்டனை வழங்கும் அரசு, பெற்ற வரியை உரிய காலத்தில் மாநிலத்தின் மக்களுக்கு பயன்பட வழங்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கும் ஒன்றிய அரசிற்கும் எத்தகைய முரண்பாடு உருவானாலும், அதை பேசித் தீர்க்கத்தான் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உருவாக்கப்பட்டுள்ளது. சட்டப்படி தீர்க்க வேண்டிய சிக்கல் இருந்தால் உச்சநீதிமன்றம் உள்ளது.
● கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் மக்களாட்சியில் பேசித் தீர்க்க பல்வேறு வாய்ப்புகள் உள்ள போது, நிதியை தர மறுத்து, மாநில அரசை அடிபணிய வைக்க ஒன்றிய அரசு முற்படுவது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம், மக்களாட்சி மாண்புகளுக்கு ஏற்புடையது அல்ல.
● மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க எந்த அதிகாரமும் ஒன்றிய அரசிற்கு இல்லை. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.
இந்திய உயர்கல்வி ஆணைய வரைவு மசோதா (Draft HECI Bill) உருவாக்கப் பணிகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்:
● உயர்கல்வியில் தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ நடைமுறைப்படுத்தவே இந்திய உயர்கல்வி ஆணைய வரைவு மசோதா உருவாகிறது. இந்த மசோதா சட்டமானால் மாநில அரசிற்கு கல்வித் துறையில் எந்த அதிகாரமும் இருக்காது என்பதுடன், மாநில அரசுக் கல்லூரிகள் முழுவதுமாக செயல்பட முடியாமல் போகும் பெரும் அபாயம் உள்ளது.
● இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 246 யின் கீழ் அட்டவணை 7 பட்டியல் 2 வரிசை 32ல் பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது. மாநில அரசின் அதிகார எல்லையில் ஒன்றிய அரசு தலையிடுவது இந்திய அரசுக் கட்டமைப்பையே சிதைக்கின்ற ஏற்பாடாக அமையும்.
● மாநிலத்தின் அனைத்து அதிகாரமும் ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டு, ஒன்றிய அரசின் முடிவுளை நடைமுறைப்படுத்தும், ஒன்றிய அரசின் நிர்வாக அலகுகளாக (administrative units of the Union Government) மாநிலங்கள் சிறுமைப்படுத்தப்படும்.
● இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா உருவாக்கப் பணிகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து இந்த மசோதா நிறைவேறுவதைத் தடுக்க வேண்டும்.
“தமிழ்நாடு மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் 2021” க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை விரைந்து பெற்றிட அனைத்துக் கட்சிகளும்
இணைந்து போராட வேண்டும்:
● 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் மிகவும் தெளிவாக “நீட்” நடைமுறையை நிராகரித்தும், இளநிலை மருத்துப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசு பின்பற்றும் மேல் நிலைப் பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே வாக்களித்தனர்.
● இந்திய மக்கள் வெறும் வாக்காளர்கள் அல்ல. இறுதி இறையாண்மை இந்திய மக்களிடமே உள்ளது. மக்களிடம் இருந்துதான் ஒன்றிய அரசும், மாநில அரசும் இறையாண்மை பெறுகின்றன.
● மக்களிடம் இருந்து இறையாண்மையைப் பெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவை, இந்திய அரசமைப்புச் சட்டத்தால் தனக்கு வழங்கப்பட்ட அதிகார எல்லைக்கு உட்பட்டு, இயற்றி அனுப்பிய சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க பரிந்துரைக்காமல், மசோதாவை ஒன்றிய அரசு முடக்கி வைத்துள்ளது.
● இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 246 வகுத்துள்ள அதிகாரப் பகிர்வின் படி, அட்டவணை 7 பட்டியல் மூன்றில் உள்ள பொருளில் சட்டம் இயற்றப்பட்டால், அந்த சட்டம் இயற்றப்பட்ட மாநிலத்தில் மட்டும் செல்லத்தக்க வகையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க கூறு 254 (2) வழிவகுத்துள்ளது.
● இந்த நடைமுறையை பயன்படுத்தி ஒன்றிய அரசும் மாநில அரசும் தங்களின் சட்டங்களுக்கு இடையே உருவாகும் முரண்பாட்டை களைந்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபட கூறியுள்ளது.
● ஒன்றிய உள்துறை அமைச்சகம், மசோதாவை இன்றையத் தேதி வரை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஏன் அனுப்பவில்லை?
● ஒன்றிய அரசிற்கும் மாநில அரசிற்கும் இது தொடர்பான கடிதத் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்ன? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசிற்கு உள்ளது.
● தமிழ்நாடு சட்டமன்றம் தனது மசோதா குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும்.
● நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தியா கூட்டணிக் கட்சியின் (Parties in the INDIA Bloc) உறுப்பினர்கள் மாநிலங்களுக்கு உள்ள சட்டம் இயற்றும் உரிமையை ஒன்றிய அரசு பறிக்க இயலாது என்பதை வலுவாக எடுத்துரைக்க வேண்டும்.
● தமிழ்நாடு அரசின் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விவாதிக்க மக்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை இந்தியா கூட்டணிக் கட்சிகளின் (INDIA Bloc Parties) முழு ஆதரவோடு மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் கொண்டுவர வேண்டும். ஒன்றிய அரசு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுத் தர முன்வரவில்லை என்றால், விவாதத்தை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தக் கோர வேண்டும்.
● இது ஒரு மசோதா சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசின் அதிகார எல்லையை ஒன்றிய அரசு மதிக்கத் தவறும் செயலாகும். இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடாக அமைந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தையே சிதைக்கின்ற செயல். இந்திய அரசுக் கட்டமைப்பு சிதைந்துபோவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற தீவிர தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்தக் கல்வி ஆண்டு மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள சட்டத்தின் படி நடப்பதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கையை விரைந்து அறிவிக்க வேண்டும்:
● மாநிலக் கல்விக் கொள்கை வகுக்க உரிய பரிந்துரைகள் வழங்கிட தில்லி உயர்நீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த குழு தனது அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் தந்துள்ளது. அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
● பாகுபாடுகள் நிறைந்த பள்ளிக் கல்வி முறையை சீர் செய்து, சமமான கற்றல் வாய்ப்பை சீராக அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே தமிழ்நாடு அரசின் சமச்சீர்க் கல்விக் கொள்கை.
● பள்ளிக் கல்வி முதல் உயர் கல்வி வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மூலம் கட்டணமில்லா கல்வி அனைவருக்கும் வழங்கிட வழிச் செய்யும் சமூகநீதியின் அடிப்படையிலான மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு விரைந்து அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு விரைந்து தீர்க்க வேண்டிய சிக்கல்கள்:
● பள்ளிக் கல்வித் துறையில் அடுத்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்திற்கு முன்பாக பள்ளிக் கல்வித் துறையில் உள்ள சிக்கல்களைத் தமிழ்நாடு அரசு தீர்க்க வேண்டும்.
● தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளின் விவரங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.
● 2000ம் அண்டு முதல் மூடப்பட்ட உள்ளாட்சித் துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைப் பள்ளிகளின் விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.
● அரசுப் பள்ளிகளை இனி எந்த காரணத்தைக் கொண்டும் மூடக் கூடாது. அரசு உதவிபெறும் பள்ளிகளை சுயநிதிப் பள்ளிகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது.
● பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் கோரிக்கை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு நிதி காரணமா? அல்லது வேறு என்ன காரணம்? என்பதை அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.
● பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி நெருக்கடி உள்ளது என்றால் வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்களிடம் நிதி கோர வேண்டும்.
● அடுத்தக் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக பள்ளிக் கல்வித் துறையில் உள்ள தகைசால் பள்ளி (School of Excellence), மாதிரி பள்ளி (Model School) போன்ற பாகுபாடுகளை நீக்கி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் சம அளவில் வலுப்படுத்தி, அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பபை உறுதிப்படுத்த அரசு முன்வர வேண்டும்.
● அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை பாகுபடுத்தக் கூடாது. இரண்டிலும் படிக்கும் மாணவர்களின் குடும்பங்கள் சமூக மற்றும் கல்வி பின்தங்கலுக்கு உள்ளானவை. பொருளாதாரத்திலும் மிகவும் நலிந்த பிரிவு மக்களின் குழந்தைகளே பயில்கின்றனர். எனவே, அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு தரப்படும் அனைத்து உரிமைகளும், வாய்ப்புகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் வழங்கிட வேண்டும்.
● சமீபத்தில் சென்னை மாநகராட்சி நிர்பயா நிதி மூலம் வேலைத் திறன் பயிற்சி அறிவித்துள்ளது. இது முற்றிலுமாக ஏற்புடையதல்ல. நிர்பயா நிதி, பட்டியலின மக்களுக்கான நிதி ஆகியவை குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட நிதி. அத்தகைய நிதி மடைமாற்றம் செய்யப்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது.
● பள்ளியில் பயிலும் மாணவர்கள் குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள் என்பதை உணர்ந்து எந்த வடிவத்திலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அனுமதிக் கூடாது.
● துணைவேந்தர் இல்லாததாலும், அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியை முழுமையாக அரசு வழங்காத காரணத்தாலும், நிரந்தரப் பணியிடத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படாததாலும் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு நிதி வழங்குவதில் உருவாகி உள்ள நிர்வாக ரீதியான சிக்கல்களை களைந்து, நிதியை முழுமையாக அரசு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களில் நிரந்தர பணியில் உரிய நபர்களை நியமிக்க அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கவும், “நீட்” நடைமுறை இல்லாமல், மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறவும் தமிழ்நாடு மக்கள் வழங்கியுள்ள வாக்கினை (Political Mandate) மதித்து அதை நிறைவேற்ற தீவிரமாக செயல்பட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
தொகுதி சீரமைப்பின் விளைவாக மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை குறையும் பெரும் ஆபத்து உருவாகிறது என்றவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டது போல, அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பை உறுதி செய்யவும், தமிழ்நாடு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறவும் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
கட்டுரையாளர் :
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை
சென்னையில் 10.03.225 அன்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைப்பின் தலைவர் முனைவர் பி. இரத்தினசபாபதி மற்றும் பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்ட அறிக்கை.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.