நூல் அறிமுகம்: ரெட் பலூன் – மதன் குமார். இராஇந்த புத்தாண்டின் முதல் புத்தகமாக நான் வாசித்த புத்தகம் ஆல்பர்ட் லாமொரிஸ் அவர்கள் பிரெஞ்சு மொழியில் எழுதி தமிழில் கொ. மா.கோ. இளங்கோ அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட உலகின் புகழ்பெற்ற சிறுவர்கதையான “ரெட் பலூன்” என்ற நூல்.
சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருது போன்ற பல விருதுகளை அள்ளிக்குவித்த கதை இது. இந்த பிரம்மாண்டமான அறிமுகமே புத்தகத்தை வாசிக்கத் தூண்டியது. பிரெஞ்சு நாட்டின் பாரீஸ் நகரில் வசிக்கும் சிறுவன் “பாஸ்கலுக்கும், அவனிடம் தற்செயலாக அடைக்கலமான ஒரு சிவப்பு நிற பலூனுக்குமான உறவு தான நூலின் மையக்கரு.
உயிரில்லாத பொருளையும் அன்பினால் வசப்படுத்த முடியும் என்று கூறும் இந்நூலின் பயணம் அற்புதமானது. பலூனுக்கும் , பாஸ்கலுக்கும் இடையில் உண்டான உறவே வாசிப்பாளனுக்கு பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.


இருவருக்கும் இடையிலான அன்பு, நட்பு, பாசம், தியாகம், கோபம், அர்ப்பணிப்பு என்ற உணர்வுடன் நாமும் இந்த இருவருடன் பயணிக்க வேண்டியதாகிறது. குறிப்பாக தலைமையாசிரியரை பலூன் படுத்தும் பாடு, சிறுவர்களிடம் மாட்டிக்கொண்ட பலூனை காப்பாற்ற பாஸ்கல் படும் பாடு. பாஸ்கல் பலூனைக் காப்பாற்ற இறுதியில் எடுக்கும் முடிவு. பாஸ்கலை காப்பாற்ற பலூன் செய்யும் தியாகம் என வாசிப்பாளனை உலுக்கி எடுக்கும் ஒரு பயணமாக அமைகிறது இந்த நூல்.
மொத்தத்தில் சிறுவர் நூலுக்கான அத்தனை சாராம்சங்களுடன் இருக்கும் இந்நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூலாகவே நான் பார்க்கிறேன்.
வாசிப்பு சவாலின் முதல் நூலே பாரதி புத்தகாலயம் வெளியிட்ட நூலாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி.
தொடர்ந்து வாசிப்போம்.
மகிழ்வுடன்
– மதன் குமார். இரா

நூல்: ரெட் பலூன்
ஆசிரியர்: ஆல்பர்ட் லாமொரிஸ் (தமிழில் கொ. மா.கோ. இளங்கோ)
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 35
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/red-balloon-ko-ma-ko-elango/