ரெட் இங்க் (Red Ink) – நூல் அறிமுகம்
இந்தப் புத்தகத்தின் தலைப்பே எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஏனென்றால் நிறத்தில் சிவப்பு என்பதே தனித்துவமானது, முதலில் வருவது இரத்தத்தின் அடையாளமாக இருக்கிறது. அதன்பிறகு ஆசிரியர் சட்டை பைகளிலும், தேர்வுகளில் மாணவர்களின் திருத்தும் தாள்களிலும், மாணவர்களை மதீப்பீடு செய்வதிலும் “ரெட் இங்க்” தான் இருக்கும். இந்தப் புத்தகத்தில் ரெட் இங்க் என்று பெயர் வைக்க காரணம், இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் ஒரு ஆசிரியர்தான் என்று புரிதலோடு படிக்க ஆரம்பித்தேன். முதல் பக்கத்தில் ச.தமிழ்செல்வன் தோழருக்கு என்று இருந்ததை பார்த்தவுடன் கூடுதல் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
மொத்தத்தில் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக ரெட் இங்க் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. எழுத்தாளர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களைச் தொகுத்து சிறுகதைகளாக எழுதியுள்ளார்.
முதல் சிறுகதையில் வண்ணதாசன் கதைகளைத்தான் எழுத்தாளர் வாசித்துக் கொண்டிருப்பது போல் தொடங்கும். எழுத்தாளர் ஒரு ஆசிரியர் என்பதால் பணிமாறுதலாக ஒரு கிராமத்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு மாடி வீட்டில் வசித்து வரும்போது கீழ் வீட்டில் இருக்கும் மனிதர்களை உறவுகளாக நினைத்துப் பேசுகிறார். அதில் பார்வதி அக்காவின் மகன் ஐந்து வயது சிறுவன் முருகேசும் இருக்கிறான். அந்த முருகேசு என்ற சிறுவனுக்கும், எழுத்தாளருக்கும் இடையில் உரையாடல்கள் தான், இந்த அவனே சொல்லட்டும் கதையின் முடிவாக இருக்கும்.
” ஆசிரியர்களுக்கு இன்று மட்டும் டீ இலவசம்” என்று எழுத்தாளரும், நண்பன் குமாரவேலும் ஒருவரை ஒருவர் உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டு டீ அருந்தினார்கள். ஆசிரியர் தினம் என்றால் ஒவ்வொரு பள்ளிகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனால் டீக்கடையில் ஆசிரியர் தினம் கொண்டாடுவது, இந்தப் புத்தகத்தின் மூலமாகத் தான் அறிந்து கொண்டேன். மாதா,பிதா,குரு தெய்வம் என்று பழமொழிகளுக்கு வரிசைகளில் ஆசிரியர் மூன்றாம் இடத்தில் இருப்பதாக நம்பிக்கையை இன்னும் மக்களிடம் இருக்கிறது. குமாரவேலும், எழுத்தாளரும் ஒன்றாக பி.எட் வரை படித்த நண்பர்களாக இருக்கிறார்கள். குமாரவேல் ஆசிரியாக பணிக்குச் சென்றால் அரசு வேலைக்குத் தான் செல்வேன் என்று உறுதியாக இருக்கிறார். அதற்காக ஒரு ஆசிரியர் வீட்டிற்கு கூடப் பெயிண்ட் அடிக்க இன்னொரு ஆசிரியர் குமாரவேல் செல்வதுபோல் ஒரு காட்சியும் இருக்கிறது. முதலில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வி அடைந்த குமாரவேல், கடைசியில் வெற்றி பெற்றாரா? என்பது தான் வாத்தியார் தினம் கதையாகும். அதில் எழுத்தாளர் ஒவ்வொரு ஆசிரியர் தினத்திற்கும் குமாரவேல் நினைப்பதாகவும், அன்றைய தினத்தில் குமாரவேல் என்ற மாணவன் வழங்கிய கடலை மிட்டாயில், கண்ணீர் நீர் பூத்துக்கொண்டது என்ற வார்த்தையில் புத்தகத்தில் இருக்கிறது.
” டேய் என்னோடது செத்ருச்சிடா”
” நீ பிடிக்கும்போதே தெரியும்டா. உங்குஞ்சாயிருந்தா அமுக்கி புடிப்பியா? என்று பேசிவிட்டு வீட்டிற்கு வரும்போது கலர் பூசியக் கோழிக்குஞ்சுகள் இறந்திருக்கும். இப்படி தொடங்கும் ” கீச் கீச் ” என்ற கதையும் இருக்கிறது. பள்ளி மாணவர்கள் கோழிக்குஞ்சு வாங்குவதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள். அதற்கு எழுத்தாளர் எப்படி மாணவர்களிடம் பேசிகிறார் என்பதுதான் கதையாக இருக்கும். கடைசியாக பள்ளிக்கூடத்தில் பழையபேப்பர் மூட்டைகளைப் எடைத்தட்டில் போடும்போதும் கூட “கீச் கீச்” என்று கேட்பதாக எழுத்தாளர் சொல்லிக் கதையை முடிப்பார்.
” இவ்வளவு நடந்திருக்கு அவன் ஏன் கிளம்பி ஸ்கூலுக்கு வந்தான்” என்று பாமா டீச்சர் கேள்விதான் இத்தக்கதையின் முக்கியமானதாகவும் இருக்கிறது. எப்போதும் குடிபோதையில் இருக்கும் அப்பாவின் மகனாக கார்த்திக் என்ற பத்து வயது சிறுவனின் கதையாக இருக்கிறது. கார்த்திக் தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்வில் இருந்து விடுபட பள்ளிக்கூடம் மட்டுமே அவனுக்கு மாற்றாக இருந்தது. அவன் கைகள் ஆசிரியரைநோக்கி நீட்டிக்கொண்டே போனது மீண்டும் எப்போது பள்ளிக்கு வருவான் என்று நினைத்ததுபோல் எனக்குள் உணர்வு இருந்தது.
” மு.ராசா யாரு? ” கைகளை தூக்கினான்.
” நீ நாலுப்பு பெயிலு இங்க வந்து நில்லு என்று கதையும் தொடங்கியது. முந்தைய காலங்களில் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதியில் பாஸ், பெயில் என்று கூறி அடுத்த வகுப்பிற்குள் அனுப்புவார்கள். அதுபோல் ராசாவையும் அடுத்த வகுப்பிற்குச் செல்ல முடியாமல் போனதால், அவனுடைய வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் நீலப்பந்தின் கதை இருக்கிறது. ராசாவும், கண்ணனும் நண்பர்களாக பள்ளிக்குச் செல்வது, இருவரும் சேர்ந்து புல் ரவுண்டு விளையாடுவது என்று சந்தோஷமாக சென்றார்கள். அந்த நீலப்பந்து தான் புல்ரவுண்டு விளையாட்டில் முக்கியானதாகவும் இருக்கும். பின்பு கண்ணன் கையில் நீலப்பந்து வரும்போது, ராசா என்ன ஆனான்? என்பதை பற்றி கதையாக புத்தகத்தில் இருக்கிறது.
மாணவர்கள் இளம் வயதில் பருக்கள் வருவது, ” மாப்பிள்ளை வயசுக்கு வந்துடாம்ல” என்று நக்கலாக பேசுவது சகமாணவர்களிடம் இருக்கும். இப்படி அகமது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். மிகவும் உயரமாக, முகம் நிறைந்த பருக்களோடு அழகாக இருப்பான். அங்கு மெர்லின் என்ற மாணவியும் பள்ளிக்கு வருகிறாள். அதன்பின்பு பள்ளிக்கூடத்தில் என்ன நடந்தது என்பது தான் புத்தகத்தில் இருக்கிறது.” ஏன்டா.. அந்த மேட்டர் இன்னுமா வச்சு ஓட்டுவிங்க, அது லவ் இல்லடா, ஒரு அபெக்சன் ” என்று சொல்லிக் கதையும் முடியும்.
” ஜெயந்தி சின்ன ஸ்கூல்லயே மைப் பேனால எழுதுனவ, அதான் எழுத்து இவ்ளொ அழகா இருக்கு” என்று தேன்மொழி டீச்சர் அடிக்கடிக் ஜெயந்தியை பார்த்து சொல்கிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் ஜெயந்தியின் எழுத்துகள் எழுதும்போது அவ்வளவு அழகாக இருக்கும். முதல் ரேங்க், கிளாஸ் லீடர், ப்ரேயரில் செய்தி வாசிப்பர், வினாடி வினா, கோலப்போட்டி பங்கேற்பது என்று பன்முகத்தன்மை கொண்ட மாணவியாக பள்ளிக்கூடத்தில் பேசுகிறார்கள். ஜெயந்தி வயதுக்கு வந்து ஒரு வாரம் கழித்து பள்ளிக்கு வரும்போது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்களை அவள் உணர்கிறாள். அதன் பின்பு ஸ்கூல் ஹெச்சம் சார் பாசத்தோடு “ஜெயந்தி டீச்சர்” என்று அழைத்துப் பேசுவது எனப் புத்தகத்தில் இருக்கிறது. பள்ளிச்செல்லும் பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் நேரங்களில், ஆசிரியர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று இந்தப் புத்தகம் கூறுகிறது.
“அவங்கப்பன் ஒரு கிறுக்கன் சார். குடிகாரப்பய. யாரும் பேச முடியாத சார் அவர்ட” என்று ஜீவிதா அப்பாவை பற்றி பன்னீர் சார் சொன்னார். ஆனால் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் ஜீவிதாவை பற்றி தவறாகப் பேசி வாக்குவாதம் செய்தார். ஜீவிதா பத்தாம் வகுப்பில் 456 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தாள். மிகவும் மோசமான வீட்டின் சூழ்நிலையைக் கடந்து, ஆசிரியர்கள் உதவியோடும், தோழர்.மோகனா உதவியுடன் எப்படி வாழ்க்கையில் அடுத்தகட்டத்திற்குச் செல்கிறாள். குளவி இருக்கும் கொள்ளைபுறத்தில் இருந்து எப்படி சிலிப்பு கொண்டு வெளியே வருகிறார் என்பதுதான் கதையாக புத்தகத்தில் இருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் மிகவும் முக்கியமானதாக நான் பார்ப்பது வெள்ளைப்பூக்கள் கதைத்தான் என்று கூற முடியும். தாச்சி போன்ற பெண்கள் இந்த உலகத்தில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறார். தாச்சி போன்றவர்களை காப்பாற்ற போஸ் அண்ணனும் போன்ற டீ மாஸ்டரும், ஒரு ஆசிரியரும் வருவார்கள். ஆனால் பன்னீர் டீ கடைக்காரர் போல் பெண்கள் மீது சுடுதண்ணீரை ஊற்றும் மனிதாபிமானமற்ற மனிதர்களும் இந்த உலகத்தில்தான் இருக்கிறார்கள். இந்த இடத்தில்தான் எழுத்தாளரைப் பாராட்டியாக வேண்டும். கையில் ஐந்து ரூபாய் காய்ன்களை வைத்துக்கொண்டு தாச்சியை தேடும் உங்களைப் போன்ற ஆசிரியர்கள் தான், இந்த சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் சிறந்த ஆசிரியராக திகழ்வதாக நான் பார்க்கிறேன்.
இதில் இருக்கும் கதைகள் அனைத்தும் பள்ளிக்கூடத்தில் நடக்கும் நிகழ்வாகவும், மாணவர்கள், மாணவிகள் மீதான அக்கறையும் நிறைந்து இருப்பதாக நான் நினைக்கிறேன். உங்கள் “ரெட் இங்க்” பரவட்டும் அன்பும், வாழ்த்துகள் தோழனே!
தோழர்.முத்துகண்ணன் செவ்வணக்கம்!
நூலின் தகவல்கள் :
நூல் : ரெட் இங்க்
ஆசிரியர் : சக. முத்துக்கண்ணன்
விலை : ரூ . 95
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/red-ink/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சு.வினோத்குமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.