red market tamil translated book reviewed by s.tamilraj நூல் அறிமுகம்: சிவப்புச் சந்தை - செ.தமிழ்ராஜ்
red market tamil translated book reviewed by s.tamilraj நூல் அறிமுகம்: சிவப்புச் சந்தை - செ.தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்: சிவப்புச் சந்தை – செ.தமிழ்ராஜ்

நூலின் பெயர்: சிவப்புச் சந்தை
நூலாசிரியர்: ஸ்காட் கார்னி
மொழிபெயர்ப்பாளர்: செ.பாபு ராஜேந்திரன்
பக்கம் 282
விலை 300
வெளியீடு : அடையாளம் பதிப்பகம்

இந்தப் புத்தகத்தை வாசிக்கின்ற எவரும் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. உங்கள் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட மனித உடலின் மீது தொடுக்கப்படும் மனிதாபமானமற்ற போர் எனலாம். ஒரு துப்பறியும் நாவலை படிப்பதுபோல் அத்தனை கட்டுரைகளும் அதிர்ச்சி ரகம். சுயநலமிக்க பணவெறிபிடித்த உலகமொன்று மனித உழைப்பை மட்டுமல்ல மனிதர்களையே சுரண்டித் தின்றுகொண்டிருக்கின்றது என்பதை அறிகையில் அதிர்ச்சியால் உறைந்துபோனேன்.

ஒரு மனித உடலுக்கு 1.5 கோடி அளவிற்கு செல்வம் இருக்கின்றது. அதை திருட உலகெங்கும் திருடர்கள் ரத்தவெறியோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சிவப்புச் சந்தை புத்தகம் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்திருக்கிறது. வாசித்து முடிக்கையில் என் உடல் உறுப்புகளை தடவி பார்த்துக்கொண்டேன். ஏதேனும் ஒரு உறுப்பு களவுபோயிருக்கிறதாவென வாருங்கள் சிவப்புச் சந்தையின் கருப்பு பக்கங்களுக்குள் நுழைவோம்.

எலும்புத் தொழிற்சாலை

இக்கட்டுரையின் தலைப்பே அதிர்ச்சியூட்டுகிறது. மனித எலும்புகளுக்கு இவ்வளவு விலை இருக்கின்றதா அதை தொழிற்சாலை வைத்து தயாரிக்கப்படும்போது அதன் தேவை குறித்து அச்சம் எழுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் குடிசைத் தொழில் போல் நடத்துகிறார்கள். இது எங்கெல்லாம் பயனாகிறது என பார்த்தால் மருத்துவ கல்லூரி மாணவர்களின் படிப்புகளுக்கு மிக முக்கிய தேவையாய் இருக்கிறது. அவர்களுக்கான மனித எலும்புக் கூடுகள் கிடைப்பதில் மிகுந்த சிரமம் இருப்பதால் அவர்கள் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கி பாடம் படிக்கிறார்கள்.

மனித எலும்புகள் எங்கிருந்து திருடப்படுகின்றன தெரியுமா கல்லறைகளிலிருந்து, சுடுகாடுகளிலிருந்து, பிணவறையிலிருந்து என கற்பனைக்கு எட்டாத தூரங்களில் எல்லாம் தோண்டி எடுத்து பதப்படுத்தி விற்பதாக இக்கட்டுரை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து பேசுகிறது. நீங்கள் புதைத்துவிட்டுப்போகும் கல்லறைக்குள் உறங்கிகொண்டிருப்பது உங்கள் உறவுகள் அல்ல வெறும் மண்குவியல் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தாலும் நிஜம் அதுதான்.

சிறுநீரகங்கள்

அறிவியல் வளர்ச்சியில் மாற்றுச் சிறுநீரகம் என்று பொருத்தத் துவங்கினோமோ அன்றிலிருந்து சிறுநீரகங்களை களவாடும் களவாணித்தனமும் பெருகிவிட்டன. பணக்காரர்கள் சக உறவுகளிடம் பெற முடியாத சிறுநீரகங்களை ஏழைகளிடம் விலை கொடுத்து பெற்றுக்கொள்கின்றன. வறுமையில் சிக்கி தவிக்கும் ஏழைகள் வாழ வழியின்றி உறுப்புகளை விற்று அரைகுறை ஜீவனங்களை நடத்தத்துவங்கிவிட்டனர்.

இந்தியாவில் மலிவு விலையில் சிறுநீரகங்கள் கிடைப்பதறிந்து வெளிநாட்டு நோயாளிகள் இங்கே படையெடுத்து வரத்துவங்கிவிட்டனர். மருத்துவத்துறையில் உறுப்பு தானங்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் சட்டம் இயற்றியும் எல்லாம் ஏட்டளவில்தான் இருக்கின்றன. வலுத்தவர்கள் எப்போதும் போல் ஏழைகளை சுரண்டித் தின்கின்றனர். தனியார் மருத்துவமனைகளும் தரகர்களும் சேர்ந்து ஏழைகள் வயிற்றில் அடிக்கும் கொடூரம் சொல்லுந்தரமன்று ஆதாரங்களுடன் விளக்கி சொல்கிறார் ஆசிரியர்.

கருத்தரிப்பு மையங்கள்

செயற்கைமுறையில் கருத்தரிப்பு மையங்களில் நிகழும் தகிடுதத்தங்களை தோலுரிக்கின்றார். ஓரளவு இத்துறை விமர்சிக்கப்படும் துறையாக இருந்தாலும் இதனுள் நுழைந்து அக்குவேறு ஆணிவேறாக இதன் மோசடித்தனங்கள் யாவற்றையும் மக்கள் முன்வைக்கின்றார். இச் சுரண்டலில் பெண்கள் படும் வேதனை சொல்லுந்தரமன்று சினைமுட்டைகளை களவாடுதல் விந்தணுக்களை சேகரிப்பதில் உள்ள ஏமாற்றுத்தனங்கள் வாடகை தாய்மார்கள் அவர்களை மோசடித்தனம் செய்யும் மருத்துவமனைகள் தரகர்கள் என யாவும் ஏழைகளை என்ன தான் செய்யுமுடியுமோ அத்தனையும் செய்கிறார்கள்.

பெண்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி ஹார்மோன்களை செயற்கையான முறையில் தூண்டி சினைமுட்டைகளை அறுவை சிகிச்சை மூலம் அறுவடை செய்கிறார்கள். வேதனைமிகுந்த இந்த செயல்முறை இந்தியாவில் மிக மலிவுவிலைக்கு கிடைப்பதும் பெருங்கொடுமை சில சமயங்களில் மரணமும் ஏற்படுவதாக ஆய்வாளர் கூறுகிறார். இத்துடன் வாடகை தாய்மார்கள் வறுமையில் உள்ள இளம்பெண்கள் குழந்தை பெற்றுக்கொடுக்கும் வாடகை தாயாகவும் பணியாற்றுகிறார்கள். குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு 10 மாதம் வரை அதாவது குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை மருத்துவமனைகளில் சிறைச்சாலைக்குள் சிறைவைக்கப்படுவது மாதிரி நடத்தப்படுகிறார்கள்.

ரத்ததானம்

உலகமெங்கும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பரவிக் கிடந்தாலும் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே நீளமான இடைவெளி இருக்கின்றது. தானமாக பெறப்படும் ரத்தம் தவிர்த்து விலை கொடுத்தும் பெருமளவு ரத்தம் எடுக்கப்படுகிறது. அடிமைகளைப்போல் ஆய்வகங்களில் படுக்க வைத்து ரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் படுபாதகமான மோசடிக்காரர்களை வாசித்துக் கடக்கையில் அய்யோ வென்று வாய் விட்டு அலறத்தோன்றுகிறது. ரத்தம் சிந்தி உழைக்கிறேன் என்பார்களே உண்மையில் இது ஒன்றுதான் அப்படி குறிப்பிட முடியும்.

பப்பு யாதவ் எனும் பால்பண்ணை முதலாளி ரத்தத் தொழிற்சாலையையும் நடத்தி வந்துள்ளது அங்கிருந்து தப்பித்து வந்த ஒரு ஏதிலி மூலம் வெளியே வந்து கோரக்பூர் நகரத்தையே கதிகலங்க வைத்துள்ளதை ஆய்வாளர் திகில் படக்கதை போல் விவரிக்கின்றார். ஆரோக்கியமான ஒரு மனிதர் ஆறுமாதத்திற்கு ஒரு முறை 350 மில்லி ரத்தம் கொடுப்பது மருத்துவ உலகம் ஏற்றுக்கொண்ட நடைமுறை. ஆனால் இங்கே மனிதர்களை ஆடுமாடு போல் அடைத்து வைத்து வாரத்திற்கு இரண்டு முறை ரத்தம் எடுத்து விற்றுள்ளான் இந்த ரத்தக் காட்டேறி ரத்தக் கொள்ளையை விவரிக்கும் பக்கங்கள் யாவும் பகீர் ரகம்.

பரிசோதனை எலிகள்

நீங்கள் நோய்மைக்காக உண்ணும் மருந்துகள் யாவும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தரப்பட்டு பல்வேறு பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த பரிசோதனை மனித எலிகள் மருந்தின் வீரியம் தாங்க முடியாமல் பல நேரங்களில் தங்கள் இன்னுயிரை இழந்துவிடுகின்றார். கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சிலர் ஏழ்மையான வாழ்வியல் காரணமாக படிப்பை தொடர இம்மாதிரியான பரிசோதனை எலிகளாக மாறிவிடுகின்றனர். ஆணுறுப்பு விரைப்புத்தன்மைக்காக மருத்து கண்டுபிடிக்கும் ஒரு மருத்துவ ஆய்வகத்தில் சிக்கி சீரழிந்த கதையை அவலச் சுவையோடு விவரிக்கிறார் மாணவரொருவர்.

கறுப்புத் தங்கம்

கறுப்புக் தங்கம் என்னவென்றால் பெரும்பாலோர் நிலக்கரியைச் சொல்வார்கள். மனித உடலில் கருப்புத்தங்கமென்றால் உங்களால் உதாசீனப்படுத்தப்படும் உங்கள் தலையில் உள்ள மயிரைத்தான் குறிப்பிடுகிறார்கள். இது ஒன்றுதான் வலுக்கட்டாயமாக உங்கள் உடலில் இருந்து உருவப்படுவதில்லை. கடவுளுக்கான நேர்த்திக்கடனென்று நீங்கள் மொட்டையடித்துசாமிக்கு காணிக்கையாக கொடுத்துவரும் மயிர் சர்வதேச மார்க்கெட்டில் இன்று கோடிக்கணக்கான டாலர்கள் விலைபோகின்றன.

என்று அழகுசாதனப்பொருள்களில் தலைமுடி முதலிடம் பெற்றதோ அன்றிலிருந்த இன்றுவரை பயங்கர கிராக்கிதான். நீங்கள் உதிர்க்கும் மயிர்க்கு 1960 இல் 1 கிலோ முடி 16 ரூபாய் இன்று சர்வதேச சந்தையில் அதன் விலை 200 ரூபாய். வெளிநாட்டு சந்தைகளில் இந்தியப் பெண்களின் ரெமி என்று அழைக்கப்படும் நீளமான முடிக்கு சந்தை மதிப்பு அதிகம். அமெரிக்க ஆப்பிரிக்க பாப்பிசை பாடகிகளின் தலைமுடியை அலங்கரிப்பது திருப்பதி பெருமாளுக்கு காணிக்கையாக கொடுத்த அலங்காநல்லூர் இளம்பெண்ணின் முடியாக கூட இருக்கலாம். உலகின் மிகப்பெரிய பணக்காரக் கடவுளான திருப்பதி ஏழைகளின் முடியையும் சுரண்டி தங்ககிரீடங்கள் தயாரித்து மணிமுடி சூடிக்கொள்கிறார் என்பது பொய்யில்லை.

இந்நூல் நெடுகிலும் பிணவறையில் நிகழ்த்தப்படும் கொடூரங்கள் குழந்தைகளை தத்தெடுப்பதில் உள்ள மோசடித்தனங்கள் தோல் களவாடுதல் விழி வெண்படலங்களை சுரண்டுதல் என மனித உடலின் உள்ளங்காலில் இருந்து உச்சம் தலை வரைக்கும் சர்வதேச மாபியாக்கள் நிகழ்த்தும் உடல் உறுப்புகளின் கொள்ளையை தெளிவாக ஆதாரத்துடன் படம்பிடித்துகாட்டுகிறார் நூலாசிரியர் ஸ்காட் கார்னி. அனைவரும் வாசித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டிய நூல். அருமையான தமிழில் பிறமொழிச்சொற்கள் கலக்காமல் மொழிபெயர்த்துள்ள செ.பாபு ராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

[email protected]

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *