ஊரடங்கும் உள்ளடங்க மறுக்கும் சிந்தனைகளும் – எஸ் வி வேணுகோபாலன் 

ஊரடங்கும் உள்ளடங்க மறுக்கும் சிந்தனைகளும் – எஸ் வி வேணுகோபாலன் 

லை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா என்பது என் பாட்டி மிக அதிகம் சொல்லிச் சென்ற பழமொழி. ஊரடங்கு அதைச் செய்து கொண்டிருக்கிறது. ஊர் வாய் என்ன, ஊடகத்தின் வாயையும் சேர்த்து மூடும் அதிகாரம் படைத்தோர் காலத்தில் கொரோனா வேறு வந்து சேர்ந்தால் கேட்பானேன். ஆட்சியாளர்களது மைண்ட் வாய்ஸ் தான், இப்போது மக்கள் கருத்தாக எடுத்துச் செல்லப்படுகிறது.
லாக் டவுன் மட்டும் அறிவிக்கப் படாது இருந்தால், 8.2 லட்சம் பேருக்கு மேல் கொரோனா நோய் தொற்று பரவி இருக்கும் என்று மத்திய சுகாதார  அமைச்சக  இணை  செயலாளர் லவ் அகர்வால் ஏப்ரல் 11ம் தேதி அன்று தெரிவித்தார். அதற்கு முதல் நாள் பத்திரிகையாளர் சந்திப்பில் அதே செய்தியை மறுத்தவர் அவர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு ஒன்று சொல்வதாக இந்தச் செய்தியை முதலில் வெளியிட்டவர், பா ஜ க.வின் ஐ டி துறை பொறுப்பாளர் அமித் மாளவியா.
அப்படி எந்த  ஆய்வையும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொள்ளவில்லை என்று மறுத்த லவ் அகர்வால், அவசர அவசரமாக   மறுநாளே  பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டினார். அதே 8.2 லட்சம் புள்ளிவிவரத்தை இப்போது அவர் வெளியிட்டார். புத்திசாலியான நிருபர்கள் அவரை மடக்கியபோது, கவுன்சில்தான் அப்படி ஆய்வு செய்யவில்லை என்று சொன்னதாகவும், வேறு சில ஆய்வுகள் இந்தப் புள்ளிவிவரத்தை உறுதி செய்வதாகவும் (அத்தகு ஆய்வுகள் எதையும் பெயர் குறிப்பிடாமல்) சொல்லி வணக்கம் போட்டு அனுப்பிவிட்டார்.
இவ்வளவு விரிவான விவரங்கள் இல்லாமல், இந்தப் புள்ளிவிவரங்கள் மட்டுமே ஊடகங்கள் வழியே மக்களை வேகமாகச் சென்று சேர்ந்துவிட்டன. லாக் டவுன் இருந்ததால், இத்தனை லட்சம் பேர் காப்பாற்றப் பட்டனர் என்று தலைப்பு செய்தி நாடு முழுவதும் போய்ச்சேர்ந்து விட்டது! நீங்கள் இதற்குமேல் கேள்வி கேட்க முடியாது. தேச பக்தர்கள் ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்பதில்லை. சாதாரண காலத்திலேயே கேள்வி கேட்பது அத்தனை நல்லதற்கில்லை.
One month of Covid-19 curfew in Punjab - cities - Hindustan Times
இந்தப் புள்ளிவிவரம், கிருமி தொற்று பரவல் தொடங்கிய காலத்திலிருந்த வேகத்தை அப்படியே தொடர்ச்சியான கதியில் நீட்டித்துக் கணக்கிட்டுச் சொல்லப்பட்டது. அதைக் கேள்விக்கு உட்படுத்திய ஒருவர், கிரிக்கெட்டில் முதல் ஓவரில் பத்து ரன்கள் அடிக்கப்பட்டிருந்தால், ஐம்பது ஓவர்களில் 500 ரன்கள் குவிக்கப்படும் என்று சொல்வதைப் போன்றது என்று அதை வருணித்தார். இதெல்லாம் எல்லோரது பார்வைக்கும், வாசிப்புக்கும் போகாது.
அடுத்து, அன்றாடச் செய்தி வெளியீட்டிலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொடுக்கும் புள்ளிவிவரம் ஒன்றாகவும், அரசு தரப்பில் சொல்லப்பட்டது மிகவும் குறைக்கப்பட்ட எண்ணிக்கையுமாக வழங்கப்பட்டு முரண்பாடு மீண்டும் வெளிப்பட்டது. ஆனால், அதற்கெல்லாம் பெரிய கேள்வி கேட்க முடியாது. கோவிட் சோதனையில் நெகடிவ் இருந்தால் தான் நல்லது, அரசாங்கத்தைப் பற்றி என்ன பேசினாலும் பாசிட்டிவ் ஆக இருந்தால் தான் மிக நல்லது. இரண்டுமே நாம் பத்திரமாக இருப்பதோடு சம்பந்தப்பட்டது என்பதை விளக்க வேண்டியதில்லை.
சென்னை மாநகராட்சி துப்புரவாளர் ஒருவர், மன்னிக்கவும், தூய்மைப் பணியாளர் (பேரு பெத்த பெரு தாக நீளு லேது – பெயருக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல, குடிக்க தண்ணிக்கு வக்கில்ல  – என்பது தெலுங்கு பழமொழி) எவ்வளவு பாதுகாப்பற்ற, ஆபத்தான சூழலில், உருப்படியான முக கவசம் கூட வழங்கப்படாமல், இடையறாது தங்கள் கடமையை ஆற்றுகிறோம் என்ற மெய்ப்பொருளை உரைத்தார் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்.
Photo Courtesy: OneindiaTamil
நாள் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் சம்பளம்.  ‘தங்கள் சம்பளத்தில் 30 சதவீதம் குறைத்துக் கொண்டதாக பெருமையாக ஆட்சியாளர்கள் பேசுகின்றனர், எங்கள் சம்பளம் என்ன என்று அவர்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.  வழக்கமாக வீதிகளில் எங்கேனும் வீட்டில் நின்று கேட்டால் குடிக்கத் தண்ணீர் தருவோரும் இந்த கொரோனா காலத்தில் விரும்புவதில்லை, அதற்கும் திண்டாடும் நிலைமை. முப்பது பேர், நாற்பது பேர் அடைத்துக் கொண்டு போய் வேலை இடங்களில் இறக்கி விட்டு, அங்கே இடைவெளி விட்டு நிற்கச்சொல்லி அதை புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்வார்கள் அதிகாரிகள் என்றார். உடன் அழைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி கிறிஸ்து தாஸ் காந்தி, இவர்கள் எல்லாம் கொத்தடிமைகளாக நடத்தப்படுபவர்கள் என்று விளக்கினார்.  ஆனால், இதெல்லாம் யாரும் கேட்க முடியாது.
டைட்டானிக் கப்பலில் எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருக்கும் வரையில் பணியாளர்கள் எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பார்கள். பாறையில் மோதி நொறுங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தப்பித்தலுக்கான பாதையில் அவர்களுக்கான முன்னுரிமை என்ன, உயிர் தப்பிக்க அவர்கள் எப்படி அடித்துக் கதறிக்கொண்டு நிற்பார்கள் என்பதை அடுத்த முறை அந்தத் திரைப்படம் பார்க்கையில் கவனியுங்கள். அந்த முறையில்தான் சாதாரண உழைப்பாளி மக்கள் இந்த லாக் டவுன் காலத்தில் நடத்தப்படுகின்றனர்.
வார்த்தைக்கு வார்த்தை சோசியல் டிஸ்டன்சிங் என்று பிரதமர் பேசியது பண்பலை வரிசை உள்பட எல்லா ஊடகங்களிலும் திரும்பத் திரும்ப உச்சரிக்கப் படும்போது  அழுவதா, சிரிப்பதா என்று புரிவதில்லை. புலம் பெயர்ந்து வேறெங்கோ பிழைக்கப் போனோர், சொந்த ஊரிலும் கதியற்றுக் கிடப்போர், எங்கே போவது என்று அலைமோதிக் கொண்டிருப்போர் என கூட்டம் கூட்டமாகக் காத்திருக்கிறது ஜனத்திரள்.  நோய்க்கிருமியா,, பட்டினியா –  எதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்பதைத் தவிர அவர்கள் தேர்வு செய்ய என்ன இருக்கிறது? பல்லாயிரக் கணக்கில் வீடற்றவர்கள், அடுத்த வேளைக்கு உணவு இல்லாதவர்கள், ஏற்கெனவே உடல் நலக்குறைவுகள் மிகுந்தவர்கள் பற்றிய நினைப்பே வராத ஆட்சியாளர்கள் எந்த உலகத்தில் வாழ்கின்றனர்?
ஆனால், நீங்கள் கேட்க முடியாது. இந்து நாளிதழ் முன்னாள் ஆசிரியர், சுதந்திர பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் அவர்களது ‘வயர்’ இணையதள இதழில் வந்த கட்டுரை மற்றும் அவர் டுவீட் செய்தவற்றுக்காக உத்தர பிரதேச காவல் துறை அவர் மீது FIR பதிவு செய்திருக்கிறது. மாற்றுக் கருத்துக்கான காலம் அல்ல இது என்று உரத்து அறிவிக்கின்றனர் ஆளும் கட்சி ஆதரவாளர்கள்.
ஆனால், வாட்ஸ் அப் குழுவில் அவர்கள் என்னமும் எழுதலாம், பரப்பலாம், பதிவுகள் போடலாம், அதை மறுத்தோ, அம்பலப்படுத்தியோ, கேள்விகள் எழுப்பியோ வேறு யாரேனும் பதிவு செய்தால் அத்தனை கோபம் பொத்துக்கொண்டு வருகிறது அட்மின்களுக்கு. அடுத்த நொடி, மாற்றுக் குரல் எழுப்பியவர் குழுவிலிருந்து வெளியேற்றப்படுவார். அவரை ஆதரிப்போர் வேறு யாரேனும் இந்தக் குழுவில் இருந்தால் அவர்களும் வெளியேறி விடலாம் என்று வெளிப்படையாகப் பதிவும் செய்யப்படுகிறது.
இந்திரா காந்தியின் நாட்டுடைமை நடவடிக்கைகள் உள்பட கடுமையாக எதிர்த்த சோ ராமசாமி, முகமது பின் துக்ளக் நாடகத்தை முக்கியமாக சோசலிச சிந்தனைகளுக்கு எதிராகவே எழுதி இருந்தார். ஒரு காட்சியில், அமைச்சர்களை பார்த்து, “ஆமாம் என்ற உங்கள் கருத்தைத் துணிந்து சொல்லுங்கள்” என்று கேட்பார், அவர்களும், ஆமாம் என்பார்கள். “ஜனநாயக முறைப்படி உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்” என்று ஆளும் கட்சியின் ஜால்ராக்களை அம்பலப்படுத்தி கரகோஷம் பெற்றுக் கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் உவப்பான ஆட்சியாளர்கள் காலத்தில்  ஜனநாயகம் என்னமாகச் சுடர் வீசிக்கொண்டிருக்கிறது, கருத்து சுதந்திரம் என்ன கதியில் இருக்கிறது  என்பதை எழுந்து வந்து சோவும் சொல்ல முடியாது. அவரது ஆடிட்டரும் கோடிட்டுக் காட்ட முடியாது.
ஸ்வச் பாரத் | நன்றி வினவு
ஸ்வச் பாரத் என்ற புதிய திட்டத்தை, அக்டோபர் 2 அன்றைக்கு அறிமுகப்படுத்தி, அந்தத் தேதியின் மீதான கவனத்தைத் திரும்பியவர்கள், மசூதி இடிப்பிற்கு, பாபாசாகேப்  அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ம்  தேதியைத் திட்டமிட்டுத் தேர்வு செய்தவர்கள், அண்மையில், அவரது 129வது பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று, சிந்தனையாளர் ஆனந்த் டெல்டும்ப்டே ,செயல்பாட்டாளர் கௌதம் நவ்லக்கா இருவரும் தேசிய புலனாய்வு நிறுவனத்தில் சரண் அடையும்படி நிர்பந்தித்து, அந்தத் தேதியையும் பறித்துக் கொண்டனர். ஏப்ரல் 30 வரை லாக் டவுன் என்று முதல் அமைச்சர்கள் கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்ட பிறகு, யோசித்து, லாக் டவுன் மே 3ம் தேதி வரை நீட்டிக்கவும் செய்தது கூட, ஒருவேளை, மே 1 உலகத் தொழிலாளர் தினத்தையும் சேர்த்து விழுங்கி விடவோ என்னவோ தெரியவில்லை..
லாக் டவுன், வசதியானவர்களுக்குத் தான் பாதுகாப்பு. உணவு, உறைவிடம், உடல் நலம் அற்ற கோடிக்கணக்கான மனிதர்களுக்கு அது வாழ்க்கையின் முடிவிற்குத் தள்ளும் பெரிய விசை என்று எழுதுகின்றனர் சமூக சிந்தனையாளர்கள். ஒரு குறிப்பிட்ட தேதியில் எல்லாம் சட்டென்று சரியாகி விடும், மீண்டும் இயல்பு வாழ்க்கை தொடங்கி விடும் என்று நம்ப வைக்க அறிவிப்புகள் நிகழ்த்தப் படுகின்றன. அபாயங்களை நேரிடையாகச் சொல்லி மக்களை மிரட்சியில் ஆழ்த்தக் கூடாது என்பது உண்மைதான். ஆனால், என்ன நடந்து கொண்டிருக்கிறது, என்னென்ன பாதுகாப்புகள் உத்தரவாதம் செய்யப்பட்டு வருகின்றன என்பதை ஆட்சியாளர்கள் மக்களுக்கு விளக்கக் கடமைப் பட்டுள்ளனர்.
அவசர அவசரமாக குதிரை பேரம் நடத்தி, ஊரடங்கு காலத்திலும் விடாது நாடகத்தைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றத் தெரிந்தவர்களுக்கு அங்கே சுகாதார அமைச்சரைக் கூட நியமித்துக் கொள்ள நேரமில்லை. சுகாதாரத் துறை முழுக்க கிட்டத்தட்ட கொரோனா பாதிப்பில் முடங்கிக் கிடக்கிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடரை விடாப்பிடியாக மார்ச் 23 வரை நடத்திக் கொண்டிருந்தனர். நாடாளுமன்ற செயலகங்களில் ஒன்றில் பணியாற்றியவருக்கு இப்போது கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறு எத்தனை பேருக்கு அது பரவி இருக்கக் கூடும் என்பதை நீங்கள் கேட்க முடியாது.
ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான விஷமமான பிரச்சாரத்தை மூச்சு விடாமல் செய்து கொண்டிருக்கலாம். அதற்கு உரிமை உண்டு. எந்தத் தேதியில் தில்லியில் தப்லீக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது, எப்போது அதில் கலந்து கொள்வோர் வந்தடைந்தனர், பிறகு ஊரடங்கு நேரத்தில் அங்கே சிக்கிக் கொண்ட நெருக்கடி நேரத்தில் அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததா என்பது உள்பட தெளிவாக விளக்கப்பட்ட பிறகும், திட்டமிட்ட முறையில், மிகக் குறுகிய காலத்தில் இதுவரை கற்பனை செய்யப்பட முடியாத பரிமாணத்திற்கு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான கசப்பை, அருவருப்பை, அவமதிப்பை வெறியர்களால் பரவலாக ஊட்டி விட முடிந்திருக்கிறது.
Soni Razdan: Not just Mahesh Bhatt's wife and Alia's mom, I am ...
பிரபல இந்தி திரை இயக்குநர் மகேஷ் பட்
2009 மார்ச் 29 அன்று ஆங்கில இந்து நாளிதழின் ஞாயிறு சிறப்பு இணைப்பில், பிரபல இந்தி திரை இயக்குநர் மகேஷ் பட் எழுதி இருந்த ஓர் அற்புதமான கட்டுரை வந்திருந்தது. அதை உடனே மொழி பெயர்த்து அனுப்ப, தீக்கதிர் வெளியிட்ட அந்தக் கட்டுரையின் தலைப்பு: உருது மொழியும் நானும்.
மகேஷ் பட் அவர்களது தந்தை இந்து,  தனது புகழ் பெற்ற திரைப்படத்தில் நடித்த இஸ்லாமியப் பெண்ணை வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்டவர். தேச விடுதலை, பிரிவினையை ஒட்டிய பதட்டமான அந்த நேரத்தில், தன்னை இஸ்லாமியராகக் காட்டிக் கொள்வதில் இருந்த அபாய சூழலில், குடும்பத்திற்கேற்பத் தம்மைத் தகவமைத்துக் கொண்டுவிட்ட தமது தாய் குறித்த பதிவு அது. மௌலானா அபுல் கலாம் ஆசாத் மறைந்தபோது தேசிய வானொலியான ஆகாஷ்வாணியின் உருது மொழி ஒலிபரப்பில் அந்த இறுதி யாத்திரை குறித்த நேர்முக வருணனையைக் கேட்டுக் கொண்டிருந்தாராம் அவர் தாய். உள்ளே வந்த கணவர், ரேடியோ பாகிஸ்தானா கேட்டுக் கொண்டிருக்கிறாய் என்று போட்ட அதட்டலில், மௌனமாக அதை நிறுத்திவிட்டு உள்ளே போய்விட்டாராம். தமது குழந்தைகளுக்கு மகாபாரத, இராமாயண இதிகாசக் கதைகளே சொல்லி வளர்த்தாராம். ஓர் இஸ்லாமியர் தமது தேச பக்தியைத் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது என்ற மகேஷ் பட் வரிகளில் வழியும் துயரம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது.
அந்தக் கட்டுரையின் முதல் சில வாக்கியங்களை மட்டுமே வாசியுங்கள், யாரும் புரிந்து கொள்ள முடியும்:
மனிதன் நினைவுகளால் ஆனவன்.  நினைவுகள் ஒலியால் பின்னப்பட்டவை. என் உள்ளத்தில் ரீங்காரமிடும் முதல்  ஒலி, “ஷிரீன்” என்கிற ஓர் உருதுச்சொல்.  இனிமையானது என்பது அதன் பொருள்.  எனது தாயின் பெயர் அது.  பிறப்பினால் ஷியா பிரிவைச் சார்ந்த பெண்மணியான அவள் தனது இறுதி நாட்கள் வரை அவ்வாறே வாழ்ந்தவர். இந்த இனிய நினைவுகள் மீது ஒரு கசப்பான நிழல் கவிந்திருக்கிறது.  
 
என்னுடைய தாய், என்னுடைய ‘இந்து’ தந்தையை மணந்துகொள்ள முடியவில்லை.  நாங்கள் வசித்த பகுதி மும்பையில் இந்துக்கள் அதிகம் நிரம்பியிருந்த சிவாஜி பார்க் என்பதால், அவள் தனது இஸ்லாமிய அடையாளங்களை ஒளித்துக் கொண்டாள். ஏனெனில், பன்முகத் தன்மையும், வெவ்வேறு வகைப்பட்ட கலாச்சாரங்களும் கொண்ட தேசமாக இந்தியா குறித்த நேருவின் பார்வை இருந்தாலும், வளர்ந்து வந்த இந்து வகுப்புவாதம் முஸ்லீம் சமூகத்தை உள்ளிருக்கும் பகைவனாகப் பார்த்தது.  
 
இந்து மதவாத பதிலடி ஏதும் தன்மீது வந்து தாக்கும் என்று அஞ்சி அவள் தனது சொந்த அடையாளத்தைக் கரைத்துக் கொண்டு வாழ தன்னால் முயன்றதெல்லாம்   செய்தாள்.  “என்னை எனது இஸ்லாமிய பெயரால் அழைத்து விடாதீர்கள்” என்று அவள் எங்களைத் தனியே அழைத்து எச்சரிப்பது வழக்கம்.  “எனது இஸ்லாமிய அடையாளத்தை உலகம் அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை” என்பாள்.  
ஆனால், இந்த மாதிரியான விவாதப் பொருள்கள் எதையுமே இப்போது எடுத்துக் கொள்ள ஊடகங்களில் இடம் இருக்காது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வழிபாடு, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் எல்லாவற்றைக் குறித்தும் வெறுப்பைத் தூவும் வேலை ஓய்வதில்லை. மாவீரன் பகத் சிங் தோழர் யஷ்பால் அவர்களது அற்புத புதினமான  ‘காம்ரேட்‘ நாவலில், ‘நாம் ரொட்டியை கல் மீது சுட்டு எடுத்தால், அவர்கள் அடுப்புக்குள் போட்டு சுடுகிறார்கள். நாம் இடமிருந்து வலம் எழுதினால், அவர்கள் வலப்பக்கம் தொடங்கி இடது வரை எழுதுகிறார்கள். ….. எல்லாம் நமக்கு எதிர்ப்படையாகத் தலை கீழாகவே நடந்து கொள்கிறார்கள்’ என்று கறுவும் மதவெறியை அடையாளப்படுத்தி இருப்பார். எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும், மத ரீதியான வெறித்தனத்தை ஏற்க முடியாது என்று நிறுவிப்போகும் தோழமையை மையப்படுத்தும் கதை அது.
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய ...
கிட்டத்தட்ட செம்பாதி மக்கள் வாழ்வாதாரம் மறுக்கப்பட்டுத் திண்டாடும் போது, அரசின் நடவடிக்கைகள் என்ன என்று நீங்கள் கேள்வி எழுப்பக் கூடாது . அதற்காகத்தான்,  நெருக்கடி காலத்திலும் மக்கள் மனங்களின் ஊடாக வெறுப்பைத் தூவிக் கொண்டே இருக்கின்றனர்.
எத்தனை பேருக்கு சோதனை நடத்தப்பட்டது, திடீர் என்று பெருகும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகள் உள்ளனவா, மருத்துவர்கள் உள்ளனரா, மருத்துவ டீம்களுக்கு கவச உடைகள் உள்ளிட்டு உரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறதா, ஆங்கில மருத்துவ முறையில் நிவாரணி இல்லை என்றான பிறகு, மாற்று மருத்துவ முறைகளையும் பரிசோதிக்கவோ, பயன்படுத்தவோ, மாற்றங்களை ஆய்வுக்கு உட்படுத்தவோ, மேம்பட்ட முடிவுகள் எட்டினால் அவற்றை பரவலாக்கவோ முனைப்பு உண்டா என்றெல்லாம் உங்களுக்கு கேள்வி தோன்றுகிறதா…
அப்படியே விழுங்கி விடுங்கள். ஏனென்றால், தொண்டையில் நிறுத்திக் கொண்டிருந்தால், கரகரப்பு ஏற்பட்டு, இருமினால் நீங்கள் ஆட்சிக்கு எதிராகச் செருமுவதாக வழக்கு தொடுக்கப்படலாம். யார் கண்டது, கோவிட் பாசிட்டிவ் வார்டு மருத்துவமனையில் இருப்பது போலவே, அரசியல் நெகட்டிவ் வார்டு என்று ஒன்றை காவல் நிலையத்திலோ, வேறெங்கோ உருவாக்கி அப்படியான ஆட்களுக்கு அங்கே உரிய சிகிச்சை(?) வழங்கப் படலாம். (ஏற்கெனவே அர்பன் நக்சல் வார்டு இருப்பதை அறிவீர்கள்).
சாதாரண காலத்தில் அன்றாட அவசரங்களில், அவஸ்தைகளில் ஆழ்ந்து போயிருக்கும் மக்களிடம் உள்ளடங்கிப் போயிருக்கும் அரசியல் உணர்வுகளை, தத்துவார்த்தக் கேள்விகளை, எது சரி, எது தவறு என்ற விவாதங்களை, எல்லோருக்குமான நல்வாழ்வு என்ற தேடலை, இந்த ஊரடங்கு நேரம் மேலெழுப்பிக் கொண்டு வருகிறது. அவரவர் முயற்சி, விருப்பம், ஆர்வம், அனுபவத்தின் தன்மைக்கு ஏற்ப இந்த விஷயங்கள் பிடிபடும். ஆனால், அது கூட நிகழ்ந்துவிடக் கூடாது என்ற பதட்டத்தை, டொனால்ட் டிரம்ப் எப்படி அமெரிக்க அரசியலில் பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாரோ, இங்கு அதன் இந்துத்துவ சாயலைப் பார்க்க முடியும்.
அராஜக லாப வெறி, சந்தைப்படுத்தலுக்கு ஆட்படுத்தப்பட்டு அடிமைப்படுத்தப்படும் பொருளாதாரங்கள், காவு வாங்கப்படும் சாமானியர்களது வாழ்க்கை, பேரம் பேசப்படும் வர்த்தக சூதாட்டம், சிதைக்கப்படும் மனித உறவுகள், பண்டமாக்கப்படும் கலை இலக்கியங்கள், ஆயுதக் குவிப்பு, இராணுவத் திமிர் எல்லாம் ஒரு கிருமி தாக்குதலுக்கு எதிராக என்னவும் செய்ய முடியாது எப்படி கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறது, அதற்கு மாற்று சக்திகள் நிலைமையை எப்படி கையாண்டு மக்கள் உயிர் காக்கும் வரிசையில் முன்னணியில் இயங்கி கொண்டிருக்கின்றனர்  என்பதன் பெரிய காணொளிக் காட்சியாக கொரோனா காலம் நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஊரடங்கு நேரத்தில், மக்கள் நடமாட்டம் இல்லை, சாலையில் வாகனங்கள் ஓடுவதில்லை, ஆலைகள், தொழிற்சாலைகள் இயங்கவில்லை, எனவே சுற்றுச் சூழல் தூய்மையாகக் காட்சி அளிக்கிறது, பறவைகள் உற்சாகக் குரல் எழுப்புகின்றன, இயற்கை தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது என்று இன்றைய சூழல் வருணிக்கப்படுகிறது. அதேபோல் மனங்களும் மாசற்று சமூகத்தை உற்று நோக்கவும், விடியலை நோக்கி சிந்திக்கவுமான சூழலும் இது. நம்பிக்கைக்கான காலமும் இது.
****************
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *