பிடிபடாத வாழ்க்கை
*************************
பெங்களூர்லருந்து
பேத்தி வந்துட்டா
எடுத்துடலாம்னு பேசறாங்க
ஐசு பொட்டிக் கிட்டயே
உக்காந்துக்குனு
ரம்ப நேரமா உத்து உத்து பாக்குறாரு
ஒம் மொவத்துல
இத்தினி வரியா காமாட்சினு
மனசு வெதும்புது
பெருசுக்கு பொண்டாட்டி மேல இன்னமும்
ஒரு இதுதான்
யாரோ சொல்லவும்
ஏ ஆத்தா
வெறும்
பொண்டாட்டிதானா நீ எனுக்கு
இன்னும் கொஞ்ச நேரந்தான்
கூட இருப்பியானு
ஒடம்பு தளும்புது அவுருக்கு
மொவத்துல பூசுன மஞ்ச காஞ்சி
பூத்துக்குனு வருது
ஒன்னும் புடிபடல
ஏ ஆத்தானு
மனுசன் வெடிச்சி சரிய
ஒன்ன உட்டுட்டு போறதுதான்
மனசு தாங்கலனு
சொல்றதாட்டம் உழுது
பொட்டி மேலருந்த மால ஒன்னு.
ஊன்றுகோல்
*****************

அத்தி பூத்தாப்பல கெடைக்கும்
நாலு கண்ணு பனங்காவ
உனுக்குனு எடுத்து வெச்சேன்
கழட்டிபோட்ட
ஒங்கப்பாவோட சைக்கில் டயரை
நீ எனுக்குனு கொண்ணாந்த
அப்பலருந்து
என் டவுசர்ல தபால் போட யாரையும்
உம்மேல இன்கியடிக்க எவனையும்
உட்டதில்ல நாம
இதான் மொததடவ
முடிலனு எனுக்கு கை நடுங்கசொல்ல
நீம் பாட்டுக்குனு படுத்துங்கீறது
ஏண்டா வவுத்துமுட்டி
மால போட்டு படுத்துக்குனா
பெரிய இவுனா நீ
கிழக்குன்றாங்க
மேக்குன்றாங்க
சொத்துன்றாங்க
சொகமின்றாங்க
பாகமின்றாங்க
சீன்றதுக்கு ஆளில்லாம
ஒக்காந்துங்கிறன்
ஒங்கூட்டு வாசல்ல
கொற காலத்துக்கு
நொண்டியடிக்க
ஒன்து
பூனு போட்ட ஊனுகோலு
கெடச்சா போதும் எனுக்கு.
மொகம்
**********

அப்ப
நானும் எந்தங்கச்சியும்
கை கோத்துக்குனு நிப்போம்
ஒரு கொடந் தண்ணி ஊத்தி
ஒரே பூ பூத்தது
ரெண்டு கொடந் தண்ணி ஊத்தி
ரெண்டே பூ பூத்தது
மூனு கொடந் தண்ணி ஊத்தி
மூனே பூ பூத்தது…
உள்ள பூந்து வந்து ஒவ்வொருவாட்டியும்
என்னதான் நிமுந்து பாப்ப
இன்னாத்துக்குனு வெளங்கலனாலும்
எனுக்குந்தான் அது புடிச்சிச்சி.
தோ
செத்துட்டுதா
சேதி வந்து ஊரே கெளம்புது
ஙொப்புரான
என்னெல ஆவாது
நா வர்லன்னுட்டன்
சாவற மொகமா அது
ஒரு கொடம்
தண்ணி
ஊத்தி…
மிக்க அன்பும் நன்றிகளும்.
– இயற்கை 9941116068
சிறப்பான வட்டார மொழிக் கவிதைகள் வழங்கியிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள் இயற்கை.
இதே தடத்தில் பயணித்ததுதான்
மொழி”
வாழ்வின் உயிர்…!!
அருமை-வாழ்த்துக்கள்🍃🙏