சிறுகதை: றெக்க – பிரசாந்த் வே

சிறுகதை: றெக்க – பிரசாந்த் வே

அதோ… அங்க வேப்ப மரம் தெரியுதா? அதுக்குள்ள நல்லாப் பாருங்க, ஒரு கூடு தெரியும்.
“கா… கா… கா…”
ஆமா… அது காக்கா கூடு தான். அதுல மூணு குஞ்சுகள் இருக்குது. அம்மா காக்கா இரை தேடிப் போயிருந்தது.
குட்டிக் குஞ்சுகள், அம்மா எப்போ வரும்னு எட்டி எட்டிப் பார்த்திட்டு இருந்துச்சு. அதுகளுக்கு றெக்க முளைச்சிருந்தது. அம்மா சொன்னபடி, கொஞ்ச கொஞ்சமா பறந்து பார்த்திருந்தன. அம்மா காக்கா இன்னிக்கு வெளியே சுத்திக்காட்ட போறோன்னு சொல்லியிருந்துச்சு. புது எடத்த பாக்கப் போறோம்னு ஆசையில குஞ்சுக இருந்துச்சு.
”கா… கா…” அம்மா காகம் பறந்து வந்துச்சு.
“அய்… ம்மா வந்தாச்சு” ஒரு குஞ்சு கத்தியது.
அம்மா காக்கா இரையை எக்கி எக்கி எடுத்து ஒவ்வொரு குஞ்சுக்கும் கொடுத்துச்சு. குஞ்சுகளுக்கு பசியாற, தெம்பு வந்தது.
“செல்லங்களா… நீங்க பறக்க கத்துக்கிட்டீங்க. இன்னிக்கு தூரமா பறந்து போகணும். சரியா?”
“ம்ம்”
”நா இன்னிக்கு உங்க கூட வரமாட்டேன். நீங்க தனித்தனியா போயிட்டு வரணும்”
“ம்மா… தனியா போக பயமா இருக்கு. நீயும் வாயேன்” ஒரு குஞ்சு சொல்லுச்சு.
”நீங்க மூணு பேரும் மூணு பக்கம் போவீங்க. நா ஒரு ஆளு. மூணு பேரு கூடயும் எப்படி வர முடியும்? தைரியமா போயிட்டு வாங்க”
“ம்ம்… சரிம்மா” வருத்தத்தோடு சொன்னது மற்றொரு குஞ்சு.
மூணு குஞ்சும் மூணு திசையில பறந்து போனது. அம்மா காக்கா கூட்டில் காத்திருந்துச்சு.
மீண்டும் குஞ்சுகள் கூடு திரும்புச்சு. அம்மா காக்கா சொன்ன நேரத்திற்குள் மூணும் வந்திருச்சு.
“செல்லங்களா… இன்னிக்கு என்னென்ன பாத்திங்கனு சொல்லுங்க”
“ம்மா… நான் போன பக்கம் ஒரு காடு இருந்துச்சு. அங்க நிறைய நிறைய மரங்களையும் விலங்குளையும்  பாத்தேன். அதுல ஒரு மிருகம் தலையில மரம் மாதிரி கொம்பு இருந்துச்சு. துள்ளிக் குதிச்சு ஓடுச்சு”
“அது மானுடா செல்லம்”
“ஓ… நா மானா பொறந்திருக்கலாம். துள்ளிக் குதிச்சி ஓடிட்டு இருந்திருப்பேன்”
அம்மா காகம் சிரித்தது. ”நீயென்ன பார்த்த?” அடுத்த குஞ்சிடம் கேட்டது.
“ம்மா… நான் போன பக்கம் ஒரு கடல் இருந்துச்சு. அங்க கண்ணுக்கு எட்டுன தூரம் வரீக்கும் தண்ணீ இருந்துச்சு. அதுல இருந்தது எல்லாம் ஜாலியா தண்ணீல நீந்தியும், குதிச்சும் விளையாடிட்டு இருந்துச்சு”
“அது மீன்கள்டா தங்கம்”
“ஓ… நா மீனா பொறந்திருக்கலாம். ஜாலியா நீந்திட்டு இருந்திருப்பேன்”
அம்மா காகம் மீண்டும் சிரித்தது. கடைசி குஞ்சு தான் பார்த்ததைச் சொல்லியது.
“ம்மா… நான் போன பக்கம் ஒரு ஊரு இருந்துச்சு. அங்க வீடுகளும் கட்டிடங்களும் இருந்துச்சு. அங்க இருந்தது எல்லா நடந்து அங்கயிங்க போயிட்டும், என்னென்னமோ பண்ணிட்டும் இருந்துச்சு”
“அது மனுசங்கடா”
“ஓ… நா மனுசனா பொறந்திருக்கலாம், அவீங்க மாதிரி நடந்திட்டு இருந்திருப்பேன்”
அம்மா காகம் மீண்டும் சிரித்தது. ”ஏம்மா சிரிக்குற?” மூணு குஞ்சும் ஒரே குரலில் கேட்டுச்சு.
”அது ஒன்னுமில்லடா… காட்டுல இருக்குற மிருகங்க காட்டைத் தாண்டி போனா பிரச்சனை. தண்ணீல இருக்குற மீனுக தண்ணீய தாண்டுனா அவ்வளவு தான். மனுசங்க
எல்லைய தாண்டி எல்லா பக்கமும் போக முடியாது. ஆனா நாம போக முடியும்”
“ஓ”
“ஏன்னா… அவீங்க கிட்ட இல்லாத றெக்க நம்மகிட்ட இருக்கு. அதனால எங்க வேணும்னாலும் பறந்து போயிட்டு வரலாம். யாராலும் தடுக்க முடியாது. எந்த எல்லையும் கிடையாது. நமக்கு வானமே எல்லை… இல்லாததை நெனச்சு கவலைப்படக்கூடாது. இருப்பதை வச்சு மகிழ்ச்சியா இருக்கணும். சரி… இன்னொரு ரவுண்டு போயிட்டு வருவோமா?”
”ம்ம்… சரிம்மா” உற்சாகமாக குஞ்சுகள் தலையாட்டுச்சு. நான்கும் நாலு திசையில சிறகை அடித்துப் பறந்தன.
“கா… கா… கா… கா…”
……………..
பிரசாந்த் வே
Show 2 Comments

2 Comments

  1. பா.திவ்யா செந்தூரன்

    ஒரு காக்கா கதை மூலம் நல்ல கருத்து படைத்துள்ளீர்கள். நானும் காக்காவாக மாரி காக்காவுடன் இருந்தது போல் தோன்றியது. வாழ்த்துக்கள் தோழர்.

  2. jananesan

    சின்னக்கதை பெரிய வாழ்வியல் உண்மை .வாழ்த்துகள் ,பிரபு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *