ஆகஸ்ட் 5-ஆம் தேதி அயோத்தியாவில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது குறித்து மூன்று வெவ்வேறு கருத்துக்கள் எதிரொலிக்கின்றன. இந்நிகழ்வை ஆதரிப்பவர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கின்றனர். மதச்சார்பற்றவர்கள், அம்பேத்கரிய வாதிகள், இடதுசாரி ஆதரவாளர்கள் ஆகியவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எதிர்க்கும் முதல் இரு பிரிவினர்களின் எதிர்ப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அடிக்கல் விழாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மற்றொரு பிரிவினர் இந்து குருமார்கள் என்பது தான் குறிப்பிடத்தக்கது. சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து இந்து மதத்தை விடுவிக்க முயலும் இந்துத்துவாவை எதிர்த்த இந்து மக்களின் எதிர் குரலின் ஒரு பகுதியாகவே இது உள்ளது.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழாவிற்கு பொருத்தமற்ற நாளாக ஒரு சங்கராச்சாரியார் உட்பட பல மதகுருமார்கள் கருதுகின்றனர். ஜோதிடத்தின் படியும் அதேபோல் காலம் தழுவி வந்துள்ள வழக்கத்தின் படி ‘பத்திராபத’ மாதத்தில் (ஜூலை- ஆகஸ்ட்) தேய்பிறை என்று அறியப்படுகின்ற பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை கணக்கிடப்படும் கிருஷ்ண பக்ஷத்தின் இரண்டாவது நாளான ‘துவிதியை’ சுப காரியங்களுக்கான நாளாக அவர்கள் ஏற்பதில்லை. அன்றைய தினம் தெய்வங்கள் ஓய்வெடுப்பதாகவும், பக்தர்கள் அழைப்பு விடுக்கக்கூடாதெனவும் நம்புகிறார்கள். இருந்தும் பாரதிய ஜனதா கட்சி அடிக்கல் நாட்டு விழாவை அன்றைய தினம் நடத்திட முடிவு செய்துள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை உத்திரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக் நகரிலுள்ள திரிவேணி சங்கமத்தில் கொண்டாடப்படும் அர்த்த கும்பமேளா இதுவரையில் பின்பற்றப்பட்டு வந்துள்ள கலாச்சார மரபுகளை மீறி கடந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி அவர்கள் துப்புரவு பணியாளர்களின் கால்களை கழுவிடும் காட்சிகளும் இந்த கொண்டாட்டங்களின் போது தான் பிரபலமாயின. அந்தக் கொண்டாட்டங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றினாலும் ஜோதிட சாஸ்திரங்களை அனுசரித்து கொண்டாட்டங்களுக்கான தேதிகள் நிர்ணயிக்கப்படவில்லை என்பதனால் மதகுருமார்கள் கடுமையாக அதிருப்தி அடைந்தனர்.

சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து இந்து மதத்தை விடுவிக்க நினைக்கும் இந்துத்துவா-வின் நடவடிக்கைகளுக்கு சில எடுத்துக்காட்டு இவை. இதனால் இந்துமத நிர்வாக மையத்தின் ஒரு பகுதி மத குருமார்களை எதிர்த்து நிற்கும் கட்டத்திற்கு இந்துத்துவா தள்ளப்பட்டுள்ளது. பக்தி இயக்க காலம் தொட்டு பரவியுள்ள சடங்கு சம்பிரதாயங்கள் மீது இந்து மத மக்களின்
கோபுரத்தின் கீழ் அடுக்குகளில் உள்ள ஏராளமானவர்களின் எதிர்ப்பை ஒருங்கிணைத்து இந்தச் சூழலை எதிர்கொள்ள முயல்கிறது இந்துத்துவா. கீழ் அடுக்குகளில் உள்ள பெரும்பான்மையான இந்து மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டும் சமகாலத்தில் எதிர்த்து நிற்கும் பிராமணிய மதத் தலைவர்களைக் கடைந்தெடுத்த பழமைவாதிகள் என்று மக்களை நம்ப வைத்திடவும் முடியும்.
மதத்தையும் அரசியலையும் கலப்பது ஒன்றும் புதிதல்ல. வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக விநாயகர் சதுர்த்தி உர்சவத்தை பாலகங்காதர திலகர், துவக்கியதும், மத மேற்கோள்களை காட்டி சுதந்திரப் போராட்டத்திற்கு வலு சேர்த்த தேசபிதா மகாத்மா காந்தி அவர்கள் மற்றும் சுதந்திர இந்தியாவில் 1948 ஆண்டில் ராம்ராஜ் பரிஷத் என்ற அரசியல் கட்சியை துவங்கிய சுவாமி கர்பத்திரி அவர்களும் இதனை ஏற்கனவே செய்துள்ளனர். உலகளவில் இஸ்லாமிய சார்புள்ள அரசியல் கட்சிகளும் அதையே தான் செய்கின்றன. ‘விடுதலை இறையியல்’ என்ற கிருத்துவ பிரிவின் நடவடிக்கைகளுக்கும் இது பொருந்தும். இத்தகைய முன்மாதிரிகளை இந்துத்துவாவும் பின்பற்றுவதாக தோன்றினாலும் அது இவை அனைத்தையும் கடந்து நடைமுறையில் முன்னேற முனைகிறது.
அரசியலில் மதத்தை கலக்கின்றது என்பதல்ல. இந்துத்துவா கட்டமைக்கும் அரசியல் வியூகத்தில் மதத்திற்கு அளிக்கப்படும் இடம் என்ன என்பதுதான் முக்கியம். இதுவரையில் அரசியல் தளத்தில் இருந்து வந்துள்ள இந்திய மற்றும் சர்வதேச அனுபவத்தில் அரசியலுக்கு நிகரான அல்லது மேன்மையான ஒரு படிநிலை மதத்திற்கு அளிக்கப்பட்டு வந்துள்ளது. அரசியல் வரலாற்றில் புனித நூல்களிலிருந்து இயக்கங்களுக்கு வலு சேர்த்த தலைவர்கள் அந்த நூல்களின் அடிப்படையை ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கியது இல்லை.

‘ராமசரிதமானஸ்’ மற்றும் ‘மனுஸ்மிருதி’ போன்ற நூல்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதை ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் கோருவது பெரும்பான்மை மக்களின் அரசியல் செல்வாக்கை வென்றெடுக்கும் இந்துத்துவாவின் திட்டத்தைக் குறிப்பதாக உள்ளது.
மனுஸ்மிருதியில் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிராக உள்ள பாகங்களை நீக்கிட வேண்டும் என்று சன்ஸ்கார் பாரதி என்கின்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் திரு.அமீர் சந்த் அவர்கள் கூறுகிறார். இந்த பகுதிகளில் உள்ள சாராம்சங்களை சுட்டிக்காட்டி இந்துத்துவத்தின் பதில் கோரப்பட்டுவந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ராமரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கின்ற சில வாக்கியங்களை ராமாயணத்தில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்-ன் மற்றுமொரு அமைப்பான அகில் பாரதிய இதிஹாஸ் சங்கலன் யோஜனா-வின் தலைவரான திரு.பால் முகுந்த் பாண்டே என்பவர் கூறுகிறார். இந்த கூற்றுக்கள் இந்து மதத்தின் நூல்களையும் பழக்கங்களையும் பன்முக வடிவில் புரிந்துகொள்ளும் மரபிற்கு எதிர்மறையான முயற்சிகளாகும்.
பங்கிம் சந்திர சாட்டர்ஜி கங்காதர திலகர் விவேகானந்தர் மகாத்மா காந்தி ஆகிய தேசிய தலைவர்கள் பகவத் கீதையிலிருந்து பன்முகப் படிப்பினைகளை புரிதல்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவை அனைத்துமே மக்களை ஒன்று திரட்டிடப் பயன்பட்டன. ஆனால் அந்த நூலின் அடிப்படையை யாரும் கேள்விக்குட்படுத்த வில்லை, மாற்றக் கோரவில்லை. வெவ்வேறு புரிதல்களை வெளிப்படுத்துவதோடு அரசியல் நிறுத்திக்கொண்டது. இந்துத்துவாவின் அரசியலுக்கு அவ்வாறு நிறுத்திக்கொள்ளும் உத்தேசம் இல்லை.
அதிகார அடுக்கில் முதன்மை இடத்தைப் பெறுவதற்கான போட்டியில் மதமும் அரசியலும் மோதிக்கொள்வது புதிய சூழலை உருவாக்குகிறது. அரசியலை காட்டிலும் தாழ்ந்த நிலைக்கு மதம் தள்ளப்பட்டுள்ளது மட்டுமல்ல மதம் முறியடிக்கப்பட்டு வெறும் அரசியல் தேவைக்கான கைப்பாவையாக மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் இந்துத்துவாவின் எதிரணியில் உள்ள வலுவான அங்கங்கள் இடதுசாரிகளோ, அம்பேத்கரிய வாதிகளோ மத சிறுபான்மையினரோ அல்ல. இவர்களை எல்லோரையும் இந்துத்துவா எதிர்கொண்டு விடும்.
சொல்லப் போனால் இவர்களின் எதிர்ப்பு இந்துத்துவாவிற்கு அரசியல் ஆதாயத்தை தேடித்தருகின்றது. நவீன இந்துத்துவா வெளிப்படையாக பிரகடனம் செய்வதில்லை என்றாலும் அதற்கு மிகவும் சிக்கலான விஷயம் இந்து மதத்தின் உள்ளேயே அது ஓயாமல் சந்தித்து வரும் எதிர்ப்பு தான்.

அடித்தட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்து மத ஆதரவாளர்களை திரட்டுவதன் மூலம் உச்ச பீடத்தில் அமர்ந்து பக்தர்களிடையே ஆதிக்கம் செலுத்தி வரும் மதகுருமார்களை அப்புறப்படுத்த விழைகிறது இந்துத்துவா. இந்த முயற்சியில் ஈடுபடுவதால் தனது ஆதரவாளர்களில் மிக நெருக்கமான ஒரு பகுதியினரை இழக்கும் அபாயத்தையும் அது சந்திக்க வேண்டியுள்ளது.
இந்துத்துவா அயோத்தியாவில் நடைபெற உள்ள விழாவை எந்த அளவு முன்னெடுத்து செல்ல உள்ளது? பிராமணிய மதவாத ஆதிக்கத்தை எதிர்க்கும் அம்பேத்கரிய வாதிகளின் உறுதிக்கு இணையாக இந்த விழாவினை முன்னெடுத்துச் செல்வதில் அது முனைப்புக் காட்டி வருகிறது. இந்துத்துவா விரும்பும் வெளித்தோற்றத்திற்கும் இது மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்து மதச் சடங்கு சம்பிரதாயங்களை எதிர்ப்பதால் ஏராளமான அடித்தட்டு பக்தர்களை அதன்வசம் ஈர்க்க முடியும். இது எங்கு இட்டுச் செல்லும்? மதச் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி இந்து மதம் மாறுமே ஆனால் அது அரசியல் தலைமையின் தேவைக்கு ஏற்ப நடனமாடும் பொம்மையாக மாறி விடும்.
சடங்கு சம்பிரதாயங்கள் நீக்கப்படுவதால் பெரும்பான்மை மக்களை தன் வசம் வென்றெடுப்பதில் இந்துத்துவா வெற்றி கண்டு விட்டால் சமூக நோக்கத்துடனான அரசியல் பொருளாதார கொள்கைகளுக்கு அதற்கு பின் இடம் இருக்காது. இந்து மதத்தின் ஏகபோக பிரதிநிதியாக உருவெடுப்பதில் இந்துத்துவாவிற்கு சிம்ம சொப்பனமாக இருப்பது மதப் பழமைவாத குருமார்கள் வகிக்கின்ற உயர்வான நிலை தான். மதகுருமார்களின் ஆதிக்கத்தை அகற்காமல் பெரும்பகுதி பக்தர்கள் மத்தியிலும், தொழில்நுட்ப அறிவு பெற்றுள்ள இளைய தலைமுறையினர் இடத்திலும் தனது அரசியல் வியூகங்களுக்கான வலுவான ஒரு ஆதரவு தளத்தை அமைத்திடுவதற்கு அதற்கு சாத்தியமில்லை.
மத நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பகுதியானவர்களும் கல்வி பெற்றுள்ள இளைய தலைமுறையினரும் மதப் பழமை வாதத்தை ஆதரிப்பவர்கள் அல்ல. இந்துத்துவா அமைப்பினருக்கு வலுவான எதிர்க்குரல் எழுப்புவது மதச்சார்பற்ற சக்திகள் அல்ல என்று சொல்லுவது எதிர்மறையாகத் தோன்றலாம். ஆனாலும் மதப் பழமைவாதிகளை முறியடிப்பது தான் இந்துத்துவா சந்திக்கும் முதன்மையான பிரச்சனை. இந்த போராட்டத்தில் இந்து மத வாதிகள் வலுவிழந்து வருகின்றனர். இரண்டு விதமான மக்கள் பிரிவினர் இந்துத்வத்தில் இணைந்து கொண்டு அதற்கு வலு சேர்த்துள்ளதுதான் இதற்கான காரணம். உலக மயத்தினால் பயன்பெற்று அதிரடி மாற்றத்தை விரும்பும் கணிசமான நடுத்தர வர்க்கமும் சமூக அடுக்கின் கீழ் தட்டுகளில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் தலித் மக்களும் தான் இவ்விரு மக்கள் பிரிவினர்.

மதப் பழமைவாதத்தில் இருந்து எவ்விதப் பலனையும் பெறாததால் பிற்படுத்தப்பட்ட தலித் பகுதி மக்கள் இயல்பாகவே எதிர்வினை ஆற்றுகிறார்கள். உலகமயத்தின் பயனாளிகள் மதப் பழமை வாதத்தை அப்புறப்படுத்தத் துடிக்கின்றனர். “குழப்பத்தை விரும்புபவர்களாக” உலகமயப் பயனாளிகள் சிலர் மாறியுள்ளதாகக் குறிப்பிடுகிறார் டென்மார்க் நாட்டின் அரசியல் விமர்சகர் மைக்கேல் ஜான் பீட்டர்சன். இந்துத்துவா முறியடிக்க விரும்பும் இறுதிச் சவாலாக மதப் பழமைவாதம் விளங்குகிறது என்றே நாம் சொல்ல வேண்டும்.


திரு சஜ்ஜன் குமார் நன்றாகவே வேதம் ஓதுகிறார். இந்திரா காந்தி மறைந்த தருணத்தில் தீவிரமாக செயல்பட்ட நரவேட்டைக்காரர்களில் இவரும் ஒருவர் என்பதை நான் இன்னமும் மறக்கவில்லை. இதைத்தான் பிபன் சந்திரா சுட்டிக் காட்டுகிறார். காங்கிரஸ் மதவாதம் பற்றி கூர்மையான பார்வையை வரலாற்று ரீதியாகவே கொண்டிருக்க வில்லை. இது ஒவ்வொரு கட்டங்களில் ஒவ்வொரு நிலைப்பாட்டை மேற்கொள்ளச் செய்கிறது.