*பரிகாரம்* சிறுகதை – ஜனநேசன்

Remedy (பரிகாரம்) Short Story By Writer Jananesan. This Story About Velu Maiyil And Mullai. Book Day is Branch of Bharathi Puthakalayam.நிலவு ஒதுங்கிய நாள். கரும்போர்வையைக் கிழித்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அம்மைநோயால் பார்வை இழந்த பொன்னுதாய்க்கு இருட்டு ஒரு பொருட்டல்ல. கடந்த கால வெளிச்சங்களிலே அவளது உலாவல். தன்னைச் சுற்றி எழும் ஒலிகளைக் கொண்டு அது எது, யார், எவர் என்று அடையாளம் உணர்ந்து குரல் கொடுப்பாள். எதிர் குரலுக்கேற்ப அவளது அசைவு இருக்கும். ஜீரோ வாட்ஸ் குண்டு பல்பு மினுக்கும் தாழ்வாரத்தில் அவள் படுத்திருந்தாள். வீட்டின் உள்ளே கதவை மூடி பேத்தி வேலுமயில் படுத்திருந்தாள். அவரவர் நினைவுகளில் புரண்டபடிக் கிடந்தனர்.

சுவர்க்கோழிகள் ஓசையில் இரவு கால்பரப்பிக் கிடந்தது. மெதுமெதுவாய் பூனை மிதியில் ஓர் உருவம் அரவமில்லாமல் வெளிவாசல் கதைவைத் திறந்தது. பொன்னுத்தாய்க்கு உடல் சிலிர்த்து உணர்வுகள் விழித்துக் கொண்டன. ஊன்றுகம்பை கையருகே இருப்பதை உறுதிப் படுத்திக்கொண்டு அசையாமல் படுத்திருந்தாள். காலடியோசையை உற்றுக்கேட்டாள். அது இன்னார் என்று ஊகித்தபின் அசையாமல் கிடந்தாள். அந்த உருவம் கிழவியின் அசைவின்மையை உணர்ந்து மெல்ல நகர்ந்து உள்கதவைத் திறந்தது.

பாத்திரம் உருளும் ஓசை. “ஐயோ, அம்மத்தா “ என்ற அலறல். பொத்திய வாயிலிருந்து மீறும் ஒலிப்பிசிறல். “என்ன மயிலா, பூனையா… ஒரு கடுவன் பூனை இந்தப்பக்கம் அலையுது. உறியில உறையூத்தின பாலுக்கு வந்திருக்கும் போல. அதை அடிச்சிறாம விரட்டி விடு. பசித்த சீவனுக்கு படாத இடத்தில அடிபட்டிருச்சினா அந்த பாவத்தை எங்கே போய்த் தீர்க்கிறது. “கிழவி முணங்கினாள். உள்ளே இருந்து மீறலும், கிசுகிசுத்தலுமே கேட்டு, அடங்கியது. கிழவிக்கும் உறக்கம் போனது.

சடங்கான மகள் பார்வையிழந்த அம்மாவுக்கு துணையா இருக்கட்டும்; சமஞ்சபிள்ளை மலைக்காட்டில் இருந்தா உள்நாட்டில் மாப்பிள்ளை அமையறது கஷ்டமுன்னு அம்மாவிடம் விட்டுட்டு மகள் புருசனோடு ஏலத் தோட்டத்துக்கு வேலைக்குப் போனாள். மூணு வருசத்துக்கு முந்தி புயல்மழை வெள்ளத்தில் நேர்ந்த நிலச்சரிவில் சிக்கி அவுங்க ரெண்டுபேரும் இறந்து போனாங்க. அம்மைநோயால் பார்வை பறிபோனவளுக்கு பேத்தியை பாதுகாக்கும் சுமை தலையில் விழுந்தது.

கேரளா அரசாங்கம் நாலு லட்சமும், எஸ்டேட்காரங்க ஒரு லட்சமும் தந்தாங்க. காசால உயிரைத் திரும்பக் கொண்டாந்திற முடியுமா. இந்தக் காசைப் பிடுங்க சுத்தி சுத்தி வர்றாங்களே ஒழிய, சொந்தம் சுறுத்துன்னு உதவிக்கு யாரும் வரக் காணோம். கடுவன் பூனைக சுத்துதுக. பேத்தியை சூதானமா பாதுகாத்து ஒரு உறுத்தானவன் கிட்ட ஒப்படைகிற வரைக்கும் கிழவிக்கு உறக்கமில்லை . ‘ஐயோ கடவுளே, புத்தியைக் கடன் குடுத்திட்டேனே.. அவன் உள்ளே நுழையும்போதே காலில் ரெண்டு போடு போட்டு விரட்டிவிடாம உள்ளே நுழைய விட்டுட்டு இப்போ குத்துது குடையதுன்னு. கதற்றேன்னே….

அவன் வெளியே வரும்போது மண்டையில் ஒரே அடி போட்டு கீழே தள்ளி ஊரைக் கூட்டிடணும் ’ என்று மெல்ல எழுந்து நழுவுன சேலையை சரிசெய்து கொண்டு கதவருகே நகர்ந்தாள்.

உள்ளே இருந்து முரண்பட்ட அரவமில்லை. என்னதான் நடக்குது, கிழவிக்கு விளங்கவில்லை. வெளிச்சமே காணாத இருளில் தொங்கும் வவ்வாலாக உயிரை பிடிச்சுகிட்டு இருக்கிறாள். வெளியிலிருந்து வரும் அசைவுகள், ஒலிகளை வைத்தே அவளது இயக்கம். இந்த நிலையில் இந்த குமரைக் காப்பாத்தி ஒருத்தன் கிட்ட ஒப்படைக்கணுமே; கடவுளே உனக்கும் கண்ணவிஞ்சு போச்சா? கிழவியால் நிற்க முடிய வில்லை. மெல்ல ஊர்ந்து படுக்கையில் வந்து படுத்தாள்.

வாழ்க்கையில் பல படிகளைக் கடந்தவள் தனக்கு வாக்கப்பட்டவனோடு உடல்பசியைப் பகிர்ந்து மனம் நிறைந்த நிகழ்வுகள் நினைவில் வந்தன.’ பாவம் வேல்மயில் உட்கார்ந்து பத்து வருசத்துக்கு மேல் ஆகுது . எந்த ருசியும் அறியாதவள். அவள் ஆற்றைக் கண்டாளா; சுழன்று இழுக்கும் சுழலைக் கண்டாளா; முங்கி, முக்குளித்து கரை ஏறட்டும்னு விட்டுற முடியுமா? காமச்சுழல் எவ்வளவு ஆபத்தானது, எப்படியாப்பட்ட மனுஷரையும் உள்ளே இழுத்து திக்கு முக்காட வச்சிருமே…. இந்த வெள்ளச் சுழலில் மூழ்கி அவள் இழுத்துச் செல்லப்படாமல் காக்கும் சுரைகுடுக்கை மிதப்பானாக இருக்க வேண்டியது தன் பொறுப்பே… இவனை அடிப்பதைவிட வெளியே விட்டு அமுக்குவதே நல்லது.! ‘

முதல்கோழி கூவல். உடல் சிலிர்த்தது. வீட்டுக்குள் அசைவு. கிழவியின் அத்தனை திசுக்களிலும் கண்முளைத்தது போல, அந்த கால் தடங்களுக்குரியவன் யார் என்று மீண்டும் உறுதிப்படுத்தின. உருவம் வெளியேறியது. கிழவி மெல்ல வீட்டுக்குள் ஊர்ந்து குப்புறக் கிடந்தவளை தொட்டது. வேல்மயில் தீப்பற்றியது போல் பதறி எழுந்தாள். விம்மினாள். காலில் விழுந்தாள்.

“ஏண்டி, எனக்கு கண்ணுதான் அவிஞ்சு போச்சு. காது, மூக்குன்னு உடம்பில இருக்கிற அத்தனை அவயமும் இருக்குடி. என்ன நடந்துச்சு ? ஒளிக்காமா சொல்லு. இனி ஆகவேண்டியதைச் செய்யணுமில்ல. “

“எந்தத் தப்பும் நடக்கலை அம்மத்தா. அந்த மாமன் வந்து கெஞ்சியது. நான் இடம் கொடுக்கலை. ரெண்டாந்தாரமா கட்டிக்கிறேன்னு தலையில் அடிச்சு சத்தியம் செஞ்சது. நான் படியவில்லை. குப்புறப்படுத்தவள் தான். புரளல. நிமிரல. அது என் தலையைத் தடவிகிட்டே கெஞ்சியது. பக்கத்தில் படுத்தது. நான் இடம் கொடுக்கலை. கடைசியா ஒரு முத்தத்தை கொடுத்துட்டு எந்திரிச்சு போயிருச்சு. வேற ஒண்ணும் நடக்க இடம் கொடுக்கலை. நான் உன் பேத்தி. எனக்காக நீ எம்புட்டு கஷ்டப்படறேன்னு தெரியும்.” விசும்பினாள்.

கிழவி வேல்மயிலின் உடலைத் தொட்டாள். களித்த சூடோ, களைத்த துடிப்போ இல்லை. உடல் இறுகியிருந்தது. “சரி, உன்னை நம்புறேன். இனி அவனைக் கிட்ட நெருங்க விடாதே. தேன்ருசி கண்ட கரடி இன்னொரு நாள் கூட்டைக் கலைச்சு தேன் குடிக்க வரும். நீ சாக்கிரதையா இருந்துக்கோ.”

கிழவி தன்னிடத்துக்கு வந்து படுத்தாள். விடிஞ்சு வெள்ளக் கோழி கூவுனதுக்கப்புறம் எங்கே தூங்கிறது? காலை ஆகாரத்தை முடித்து வெளிவாசலருகே உட்கார்ந்து போவோர் வருவோர் பேச்சரவங்களைக் கிரகித்துக் கொண்டிருந்தாள். இந்த வழக்கமான கிரகிப்புகளும், மாரியம்மாள் போன்றவர்களின் புறனிகளும் அந்தக் கிராமத்தின் நடப்புகளை பொன்னுத்தாய்க் கிழவிக்கு உணர்த்தும். தன் அனுபவத்தைக் கொண்டே இப்பேச்சுக்களின் உண்மைத்தன்மையை உரசித் தெளிந்து மனதில் சித்திரங்களாகப் பதித்துக் கொள்வாள்.

அவள் மனதில் தோன்றிய பல எண்ணங்களை எழுதி எழுதி அழித்தபடி உட்கார்ந்திருந்தாள். அவள் காதுகள் சிலிர்த்தன. “யாரது, மாரியம்மாளா ..?”

“ஆமாத்தே. ரெண்டு வெத்தலை வாங்கிட்டு வந்திர்றேன்“

“ வெத்திலை நா தர்றேன் வாலா .”

“என்னத்தே, எதும் முக்கியமான தாக்கலா? “

“”ஒரு தாக்கலும் போக்கலும் இல்லை. உன்கிட்டே பேசறதே ஊரு தாக்கலுக்குத் தானே .” “மத்தவங்க கணக்கா என்னை புறனி மாரின்னு நினைக்காம நீதான்த்தே என்னை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கே“ என்றபடி அருகே வந்தாள். இருவரும் உள்ளே நகர்ந்தார்கள். கைகளைக் கீழே துழாவி வெத்தலைப் பையை எடுத்து நீட்டி , “

இந்தா நீ வேணுங்கிறதை எடுத்துகிட்டு எனக்கு ஒரு வெத்திலைல சுண்ணாம்பும் பாக்கும் வச்சு கொஞ்சம் இடிச்சுக் குடு.” வெற்றிலை இடி உரல் உலக்கையை நீட்டினாள்.

மாரியம்மாள் வெற்றிலையை இடித்துக் கொண்டே, ’அடுத்த வாரத்தில் இன்னின்னார் காட்டில் கடலை எடுப்பு இருக்கு. ஊரே கடலை ஆய்வதிலும், ஆய்ந்ததை, உலர்த்தி மூடைகளாக்கி வந்திருக்கும் ஏவாரிகளுக்கு லாரியில் ஏத்திவிட்டு கடன் போக மீதக் காசை வாங்குவதிலும் சம்சாரிக மும்முரமா இருப்பாக. கூலிக்காரக ஆஞ்சகூலிக்கு கிடைச்ச கடலைக, காட்டில பொறுக்கின தப்புகடலைகளை, கொஞ்சம் புழக்கத்துக்கு வச்சுகிட்டு மீதியை கடைகளில் கொடுத்து காசாக்குவாக. நல்லதை , பொல்லதை வாங்கி ஆக்கிச் சாப்பிடுவாக. காசு புழங்கிறதால ஊரே கொண்டாட்டமா இருக்கும். இளவட்ட கொண்டாட்டம் — இருட்டில் உரசிகிட்டே நிறை பிடிச்சு, கடலைச் செடி பிடிங்கி குவித்து, ஆய்ற வரை அது தனிக்கதை. ‘என்றபடி இடிபட்ட வெத்திலைத் தொக்கை கிழவியிடம் கொடுத்தாள். கிழவி வாயில் சப்பி, ஒதுக்கி, உமிழ்நீர் விழுங்கி தெம்பு ஏற்றிக் கொண்டாள்.

“நம்ம தெருவில யாரு தோட்டத்தில் கடலை எடுக்கிறாக.“

“நாட்டாமைக்காரக தோட்டத்தில, வகுறன்மாமன் வீட்டு தோட்டத்தில இப்படி மூணு நாலு பேர் தோட்டத்தில கடலை எடுப்பு இருக்கும்.“

“அந்த வகுறன்மகனுக்கு பிள்ளைகுட்டி உண்டுமா.“

“எத்தே அந்தக் கொடுமையை ஏன் கேட்கிற. வாக்கப்பட்டு வந்து ரெண்டு வருசமாச்சு அந்த வருசனாட்டுக்காரி வகுத்தில ஒரு புழு, பூச்சியைக் காணோம். அவளும் ஆளு குலை தள்ளாத வாழையாட்டம் தான் இருக்கா. புருசன்காரன் மணிவேலும் ஜல்லிக்கட்டு காளை கணக்காத்தான் திரியிறான். அவுங்க ரெண்டுபேரும் சந்தோசமாத்தான் மோட்டார் பைக்கில ஜோடி போட்டுகிட்டு ஆண்டிபட்டி சந்தைக்கு போய் வர்றாங்க. பிரச்சினை என்னுன்னு தெரியில. ம்..ம்… பூக்கிறது எல்லாமுமா காச்சிருது. போடற வெதை எல்லாமுமா முளைச்சிருது? “

“என்னா மருமவுளே அழிகதை போடறே…? என்ன பிரச்சினை? “

“எத்தே எனக்குத் தெரிஞ்சா உன்கிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்லப் போறேன். உன்கிட்ட சொன்னா எனக்கு எந்த வில்லங்கமும் வராது. உன்கிட்ட சொல்றது எதுவும் இந்த வாசலை விட்டு வெளியேறாது. உன்கிட்டவா மறைக்கப் போறேன் ? “

“சரி, நான் உங்கிட்ட ஒண்ணு சொல்றேன். யாருக்கும் தெரியாம சம்பந்தப்பட்டவக வாயைக் கிளறி நெசத்தை சொல்லீறனும். வேற யாருக்கும் தெரிஞ்சா பெறகு இந்த அய்த்தையை பார்க்க முடியாது. “ “என்னத்தே உனக்கு துரோகம் செஞ்சா எங்கண்ணு அவிஞ்சு போகுமே. நம்பி சொல்லுத்தே. நல்ல சேதி கொண்டாறேன்.”

“வகுறன் வீட்டுக் காளை நம்மூட்டு கிடேரியை நோங்கிற மாதிரித் தெரியுது. பொழுது விழுந்தா பயமா இருக்கு. ராத்திரி கூட அவன் நடமாட்டம் கேட்டது. அதை ஒரு முடிவுக்கு கொண்டாறணும் “

“அடப்பாவி பறப்பான். அவனா, நம்ப முடியலையே. ம்ம்ம் பால் குடிக்காத பூனை உண்டுமா… சரித்தே. இன்னைக்கே விசாரிச்சிரு வோம் “வெற்றிலையை மென்றபடி வெளிப்படலைத் திறந்து நடந்தாள். இந்த முடிச்சை அவிழ்க்கவில்லை என்றால் மாரியம்மாளுக்கு அன்னம் தண்ணி இறங்காது, கண்ணும் உறங்காது.

முல்லைக்கொடிக்கு அன்றைக்கு காலை கண் விழித்ததில் இருந்தே சித்தப்பா ஞாபகம் மனசில் பழைய பாட்டு கணக்கா சுத்தி சுத்தி வந்தது. சின்னப்பிள்ளையிலிருந்து ரொம்பப் பாசமாயிருப்பார். ஒவ்வொரு வகுப்பு பாசாகும்போதும் பிடிச்ச துணிமணிக எடுத்துக் குடுப்பார். பன்னிரெண்டாம் வகுப்புக்கும் மேலவும் படிக்கச் சொன்னார். வீட்டில் அம்மாவும் அப்பாவும் ஒத்துக் கொள்ளவில்லை. வீட்டு வேலையிலும் தோட்ட வேலையிலும் பழக்கினர். சித்தப்பா மூத்த சிநேகிதன் மாதிரி கேட்கிற சந்தேகங்களுக்கெல்லாம் எளிமையா பதில் சொல்லுவார். தவறுகளை பொறுமையாகச் சொல்லித் திருத்துவார். உலக நடப்புகளை தெரிஞ்சிக்கணுமுன்னு சொல்லித் தருவார்.

“பொம்பிள்ளைப் பிள்ளைகள் ஒல்லியாக இருக்கிறது அழகுதான்; அதுக்காக ஒரு இட்லி, ஒன்றரை இட்லின்னு, சாப்பிடறதைக் குறைக்க கூடாது. பசிகளில் வயிற்றுப் பசி, அறிவுப் பசி ரெண்டையும் அடக்கக் கூடாது. வயிறு நிறைய சாப்பிடனும். குனிந்து நிமிர்ந்து வேலைகள் செய்யணும். உடல் பலம் இருந்தாத் தான் பெண்களுக்கு ஹார்மோன் வளர்ச்சி தடைபடாது. மாத விலக்கு சிக்கல், பிரசவநேரப் பிரச்சினைகள் வராது. உன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் கவனிக்கணும். ஒவ்வொரு நடப்புக்கான காரண, காரியத்தை தெரிஞ்சிக்கணும். உன் பிரச்சினைகளுக்கு தீர்வை நீயே யோசிக்கும் பழக்கம் வரணும். எது வந்தாலும் பதறக்கூடாது. நிதானம் தவறாது முடிவெடுக்கணும். இந்த பழக்கமெல்லாம் உனக்கு வந்து விட்டால் உனக்கு தோல்வியே வராது. “இப்படி நிறைய சொல்லுவார். வேணுங்கிற துணிமணிகள், புத்ததகங்கள் வாங்கித் தருவார். சைக்கிள் ஓட்டவும், டிவிஎஸ் பிப்டி ஓட்டவும் கற்றுக் குடுத்தார். காலேஜுக்குப் போனா மொபெட் வாங்கித் தர்றேன்னு சொல்லி இருந்தார். சித்தப்பா சொல்லித் தந்ததில் தொன்னுறு சத மார்க் வாங்கியிருந்தாலும் காலேஜுக்கு அம்மா அப்பா அனுப்பலை. சித்தப்பா படிச்சு படிச்சு சொன்னார். நான் வல்லு வதக்குன்னு தின்னதில்லை. மாதா மாதம் தூரம் ஆவதில் பிரச்சினை. அந்த ஐந்து நாள் பெரும் அவஸ்தையாக இருக்கும். “ரத்த சோகை இருக்கு. கர்ப்பப்பையும் பலவீனமா இருக்கு. இன்னின்னதை சாப்பிட்டுட்டு மூணுமாசம் பாருங்க. பிரச்சினைனா வாங்க” என்று மருத்துவர் சொன்னார்.

Remedy (*பரிகாரம்* சிறுகதை) Short Story By Writer Jananesan. This Story About Velu Maiyil And Mullai. Book Day, Bharathi Puthakalayam.

கரு தங்கலை. பிள்ளை இல்லை, அதனால குடும்பத்தில் பிரச்சினைகள். கர்ப்பம் தங்க என்னென்ன வழிமுறைகள் என்று ஏகப்பட்ட வலிகளோடு கண்ணீர் கசிய பலர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். “மருத்துவர் சொன்னதெல்லாம் சாப்பிடு காலப்போக்கில் சரியாயிரும். நல்ல சம்பந்தம் வந்திருக்குன்னு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. புருஷன் மணிவேலு எந்தக் குறையுமில்லாமல் நல்லா வச்சுக்குது. வஞ்சகமில்லா உழைப்பாளி. எந்த சந்தோசத்துக்கும் குறைவில்லை. என் வகுத்தில ஒரு பிள்ளையும் தங்கலைங்கிறது தான் குறை. மாமியார் சாதகம், பரிகாரமுன்னு அலையுது. என்கிட்டதான் குறை. இதை எப்படி யார்கிட்ட சொல்றது? இந்தப் பிரச்சினையை எப்படி தீர்க்கிறது? திடீருன்னு புயல் மழை பெஞ்சு வெள்ளம் புரண்டு கால்மண்ணை அரிச்சிரக் கூடாதில்ல…. புதுசா களை முளைச்சிறக் கூடாதில்ல… கதவு திறக்கும் சத்தம். சிந்தனை மூடிக்கொண்டது.

மாரியம்மாள் உள்ளே வந்தாள். “முல்லை தங்கச்சி, அய்த்தை எங்கே. கொழுந்தன் எங்கே.. ஒருத்தரையும் காணோம்?”

“ஏக்கா, நான் தான் இங்கே குத்துக்கல்லாட்டம் இருக்கேனே. உனக்கு என்ன பிரச்சினை, என்ன வேணும் சொல்லு.”

“நீ குத்துக்கல்லாட்டம் எதையும் கண்டுக்காம இருக்கிறது தான் பிரச்சினையே.”

“எக்கா, மூடி மறைக்காமா உடைச்சுப் பேசு. நாம ரெண்டு பேருதான் இருக்கோம். எதுவா இருந்தாலும் தேங்கா உடைச்ச மாதிரி உடைச்சுரு. ஆனா ஒரு சில்லுகூட சிதறி வெளிய விழுகக் கூடாது. சாக்கிரதை“

மாரியம்மாள், சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு முல்லையின் காதில் கிசுகிசுத்தாள். முல்லைக்கொடி உடலெங்கும் தீப்பற்றியது போல் காந்தியது. மாரியம்மாளை எரிப்பது போல் பார்த்தாள்.

“எக்கா, உன்னை ஊருக்குள்ள பஞ்சாயத்து டிவின்னு சொல்லுவாங்க. அந்த வேலையை என்கிட்டே காமிக்கக் கூடாது. நீ சொன்னது பொய்யா இருந்தால் இந்த வருசனாட்டுக்காரி உன்னை சும்மா விடமாட்டேன், வயித்தை வகுந்து குடலை உருவி மாலை போட்டுருவேன். நீ சொல்றது நெசந்தானா..? “

“இங்க பாருத்தா முல்லை, உன்னை கூடப்பிறந்த பிறப்பா நினைச்சுதான் அந்தக் கிழவி சொன்னதும் மென்ன வெத்தலையைக் கூட துப்பாம பதறி நேரா ஓடியாறேன். என்னை நம்பு. நீ இந்த ஊருக்கு வாழவந்தவ, நீ நல்லா இருக்கணும். வெள்ளம் வர்றதுக்குள்ள அணை போடணுமுன்னு ஓடியாறேன் தாயி.“ மாரியம்மாள் வெலவெலத்த குரலில் சொன்னாள்.

“சரிக்கா. எங்கிட்டா சொன்னதோட இருக்கட்டும். மாமியார் ஊரில் இல்லை. வந்ததும், இதைப்பத்தி மூச்சுவிட்டுறக் கூடாது. நான் பாத்துகிறேன். இரு, ஒரு வாய் டீத்தண்ணி குடிச்சிட்டுப் போவே.“ ஆத்தாடி வயசில சின்னவளா இருந்தாலும் என்னமா மிரட்றா வருசநாட்டுக்காரி. மாரியம்மாளுக்கு கொளகொளன்னு தொண்டையில் ஒரு தம்ளர் டீ இறங்கினதுக்குப் பிறகுதான் படபடப்பு அடங்கியது. “சரிக்கா, இந்த விஷயம் நம்ம ரெண்டு பேரோடு முடிஞ்சு போகணும். மறந்தும் பழக்கதோசத்தில் வெளியே வந்ததுன்னா, அப்புறம் நான் மனுசியா இருக்க மாட்டேன் “தலையாட்டி மூச்சு விடாமல் மாரியம்மாள் பெட்டியில் இருந்து திறந்து விடப்பட்ட பாம்புபோல் வெளியேறினாள். ‘ஐயோ வேலப்பரே, வருசனாட்டுக்காரி என்ன வில்லங்கத்தில மாட்டிவிடப் போறாளோ… ‘புலம்பியபடி போனாள்.

‘இந்த வாரம் வெள்ளி சனியில கடலை எடுக்கணும். நாள் தள்ளினா, லேசா ஈரவாடை பட்டாகூட விளஞ்ச கடலை முளை விட்டுரும். கடலை எடுக்க ஆரம்பிச்சிட்டா, எல்லாத்தையும் ஓருசு பண்ண பதினஞ்சு நாளாகும். இக்கட்டான நேரத்தில், இந்த மனுஷன் புதுசா வில்லங்கத்தைக் கொண்டாந்திட்டானே. பாவப்பட்ட அப்புராணி குடும்பத்தில் கைவச்சிட்டானே. எப்போ இது வேலிதாண்டி மேய நோங்கிருச்சோ, உடனே தடுக்காட்டி தும்பை விட்டு வாலைப் பிடிச்ச கதையாயிருமே . மூக்கினாங்கயறு நம்ம கையிலதான் இருக்கணும். ரெண்டு நாளைக்குள்ளே எதாவது செஞ்சாகணும்.‘

முகத்தைக் கழுவி பொட்டையும் சேலையையும் சரி செய்து கொண்டு வீட்டைப் பூட்டினாள். அழுத்தமாய்க் கால்களை வைத்து நிதானமாய் நடந்தாள். தெருவில் நடமாட்டமில்லை. மேலே சூரியனைக் கடந்துபோகும் மேகங்கள், நிழலையும் ஒளியையும் மாறிமாறி தெளித்தன. அவளது முகத்திலும் சிந்தனை மேகங்கள் அலைந்தபடி இருந்தன. மனதில் பேசவேண்டியதை சீர்படுத்திக் கொண்டாள். சுவரோரம் படுத்திருந்த தெரு நாய்கள் கால் அதிர்வுகளை உணர்ந்து தலை தூக்கின. முல்லைக்கொடியைப் பார்த்ததும் தலையைக் கீழே போட்டு கண்களை மூடிக்கொண்டன. உச்சிவெயிலில் மரங்களின் இலைகள் எல்லாம் சிலிர்த்து சூரியக் கதிர்களோடு சரசமாடின. முல்லை மனதை ஒரு நிலைப் படுத்திக் கொண்டாள்.

பொன்னுதாய்க் கிழவியின் வீட்டு வெளிப்படலைத் திறந்து முல்லை உள்ளே நுழைந்தாள். தாழ்வார வாசலோரம் சாய்ந்து உட்கார்ந்திருந்த பொன்னுத்தாய் உடம்பெல்லாம் சிலிர்க்க முகத்தை ஏரெடுத்து, “யாரு வருசநாட்டு முல்லைக்கொடியா… வா தாயி, வா. நல்லா இருக்கியா.. உக்காரு. இந்தா இந்த செம்பு தண்ணியை எடுத்து குடி“

“ஆத்தாடி, அம்மத்தா. என் நடையரவத்தை வச்சே கண்டு பிடிச்சிட்டீயே. அம்மத்தா நாங்கதான் பார்வை கெட்டுத் திரியிறோம்.” ஒரு மடக்கு தண்ணியை குடித்து செம்பை வைத்தாள். பழைய செம்பு தான் என்றாலும் பளபளன்னு வேலுமயில் வச்சிருக்கிறாள். நல்ல வளமைக்காரி தான்.

“ என்னாத்தா வந்த காரியம்.“

“அம்மத்தா, உனக்கு தெரியாதது என்ன இருக்கு. அந்த புறனி மாரி பத்தவச்சிட்டுப் போனா. அணைக்கலாமுனு வந்திருக்கேன்.“

“உள்ளே ஒந்தங்கச்சி இருக்கா. அவகிட்ட பேசு. அவளுக்காகத் தானே இந்த உசிரு இன்னும் துடிச்சிகிட்டு கிடக்கு.”

“ஏன் அம்மத்தா, நாங்கெல்லாம் இல்லையா ..?”

“ஊரில ஆயிரம்பேர் இருந்தாலும் உறுத்தான ஒருசுரு இருக்கணுமில்ல “

“மயிலை பார்க்கிறேன் அம்மத்தா.“ முல்லை எழுந்து உள் கதவைத் திறந்தாள்.

‘அவப்பேரு வந்திருச்சே. இந்த ஊரு இனி மென்னு துப்பியிருமே. இதில இருந்து எப்படி மீள? அரவமில்லாம அரளிவிதையை அரைச்சு ரெண்டுபேரும் குடிச்சுட்டு நீட்டி நிமிந்திருலாமா… ‘ என்ற யோசனையில் வேலுமயில் உறைந்து போயிருந்தாள்.

கதவு திறந்த ஒலியும் முகத்தில் அறைந்த ஒளியும் வேலுமயிலை நடுக்கத்துடன் நிமிர்த்தியது. முல்லையைப் பார்த்ததும் கதறியபடி எழ முயற்சித்தாள். முல்லை ஓடிச்சென்று அவளை அணைத்து உட்காரவைத்து அமர்ந்தாள். மயில் முகத்தைப் பொத்திக்கொண்டு விம்மினாள்.

“மயில்தாயி அந்த மாரியம்மா சொன்னதெல்லாம் நெசமா. “அவள் உடைந்து அழுதாள். விகற்பம் இல்லா முகமெங்கும கண்ணீர் தாரைகள் உப்பு பரிந்து நத்தை நகர்ந்த தடமாக மின்னியது. “பாவி மனுசனைக் கடலைக் காட்டுக்கு காவலுக்கு அனுப்பினா… அப்பிராணி பிள்ளைகிட்டே வந்து விடலை விளயாட்டு ஆடிட்டானே , நான் என்னத்தச் சொல்ல. எதுல குறை வச்சேன்.? “முல்லை பேச பேச மயிலுக்கு விம்மலும் விசும்பலும் கூடியது. வாடிய பூச்செடியைப் போலக் கிறங்கி சாய்ந்தாள்.

“தாயி, அக்காவை நிமிர்ந்து பாரு. “வேலுமயில் குமுறியபடி முல்லையின் காலில் விழுந்தாள். முல்லை அவளது தோளைப் பற்றி நிமிர்த்தினாள். முல்லை கண்களில் கசிவு.

“சரி தாயி. இனி நடப்பதைப் பார்ப்போம். விடிஞ்சா புதன்கிழமை. நீயும் அம்மத்தாவும் வெள்ளன்னே குளிச்சு இருக்கிற நல்ல துணியுடுத்தி தயாரா இருங்க. சின்னக்காளை அண்ணன் ஆட்டோ சரியா ஏழுமணிக்கு வந்துரும். நீங்க ரெண்டுபேரும் ஏறி வந்திருங்க. நானும் மாமனும் பைக்கில ஊருக்கு வெளியே காத்திருப்போம்; நீங்க வந்ததும் நாம சேர்ந்து ஆண்டிபட்டிக்கு போறோம். விசனப்படாதே. இனி நீயும் நானும் ஒண்ணுதான்.! மறக்காம ரேசன் கார்டு, உங்க ரெண்டுபேர் ஆதாரட்டைகளை எடுத்துட்டு வந்துரு. “ முல்லை மயிலை அணைத்துக் கொண்டாள். இருவர் உடலும் குலுங்கியது.

இதையெல்லாம் உள்கதவு நிலையில் சாய்ந்து கேட்டுக் கொண்டிருந்த பொன்னுத்தாய், முன்னால் நகர்ந்து துழாவி முல்லைக்கொடியை அணைத்துக் கொண்டாள்.

“ முல்லை, எம் மவராசி, எனக்கு கண்ணைக் குடுத்திட்டே தாயி. இனி நிம்மதியாய் என் கட்டை வேகும்.“

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.