காயிலே கசப்பதென்ன..! கனியிலே இனிப்பதென்ன..!
– இரா.இரமணன்
ரோமானிய அரசர் அகஸ்டஸ் ஒரு வகை பெர்ரி பழத்தால் இறந்தார் என்று வதந்தி ஒன்று உண்டு. பெர்ரி வகை பழங்கள் உண்மையிலேயே மிகவும் நச்சுத்தன்மை கொண்டவையே. இவை சொலனேசியே தாவர குடும்பத்தை சேர்ந்தவை.
தங்களை பூச்சிகள் மற்றும் விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அவை கிளைகலாய்ட்ஸ் (glycoalkaloid ) எனும் நச்சுப் பொருளை உண்டுபண்ணுகின்றன. இந்த வேதிப்பொருள் விலங்கினங்களின் செல் சவ்வை சிதைத்து அவற்றை அழித்து விடுகின்றன.
மனிதர்களைப் பொறுத்தவரை, அவை கடுமையான கசப்பு தன்மை கொண்டது. அதிக அளவு உண்ணும்போது வாயில் எரியும் உணர்வு ஏற்படும். அதை தொடர்ந்து தலைசுற்றல், தசைப்பிடிப்பு, நாடித்துடிப்பும் சுவாசமும் குறைதல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்தக் கசிவு மற்றும் குடல் புண்கள் ஏற்படுமாம். நாம் அன்றாடம் உண்ணும் தக்காளியும் சொலனேசியே (Solanaceae) எனும் இந்த தாவர குடும்பத்தை சேர்ந்ததுதான்.
ஆனாலும் நமக்கு எதுவும் ஆவதில்லை. ஒரு காலத்தில் தக்காளியும் நச்சுத்தன்மை கொண்டதாக கருதப்பட்டது. ஆனால் அவை கசப்பான நச்சுப் பொருளை சுவையானதாகவும் நச்சுத்தன்மை இல்லாததாகவும் மாற்றுகின்றன. இது எவ்வாறு நடைபெறுகிறது என்பதை சிசுவான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியலாளர் ஃபெங் பாய் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தாவரங்களுக்கு விதை பரவுதலும் தேவை. அதை விலங்குகள் சிறப்பாக செய்கின்றன. எனவே சில தாவரங்களில் விதைகளைக் கொண்ட காய் பழுக்கும்போது கசப்பான நச்சு பொருள் உண்ணத்தகுந்ததாக மாற்றபடுகிறதாம்.
காயாக இருக்கும்போது கசப்பாகவும் நச்சுத்தன்மை கொண்டதாக இருப்பதால் அதை விலங்குகள் உண்ணுவது தடுக்கப்படுகிறது. அவை பழுப்பதும் உறுதி செய்யப்படுகிறது.
இந்த மாறுதல் மீதைல் வெளியேற்றம் (demethylation) எனும் நிகழ்வின் மூலம் நடைபெறுகிறது. இதற்கு DML2 எனும் புரதம் உதவுகிறது. தக்காளி வீட்டு உபயோகத்திற்கு வந்தபோது இந்த நிகழ்வு அதிகரித்துள்ளது. சிறிய வகை பழங்களை உண்டு பண்ணிய இந்த தாவரங்கள், பெரிய, சிவப்பு பழங்கள் காய்க்கும் தாவரமாக மாறுவதற்கு அது காரணமானது.
தக்காளிப் பழத்தை சிவப்பாக, மென்மையானதாக, இனிப்பானதாக மாற்றும் அதே வேதிப்பொருட்கள் நச்சுத்தன்மை வாய்ந்த கிளைக்கலாய்டை குறைந்த நச்சுத்தமை கொண்ட எஸ்குலோசைடாக மாற்றுவதையும் இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புரதம் உண்டாவதை சோதனை சாலையில் மரபணு மாற்றம் மூலம் தடுத்த போது தக்காளியில் இப்போதும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் இருப்பது காணப்பட்டது.
காலப்போக்கில் காய் நிலையிலும் நச்சு வேதிப்பொருள் குறைந்து, நாம் பச்சை தக்காளியையும் ஓரளவிற்கு எடுத்துக் கொள்ளலாம் எனும் நிலை உண்டானது. இந்த மாறுதல்கள் குடலை பாதுகாக்கும் ஆரோக்கியமான தக்காளியை நாம் அதிக அளவில் உண்ணும் நிலைக்கும் புதிய கண்டங்களுக்கும் பரப்பவும் செய்யும் நிலை வந்துள்ளது.
உருளைக்கிழங்கும் இதே நச்சுக்குடும்பத்தை சேர்ந்தது தான். அதிலும் இந்த வேதிப்பொருட்கள் பாதுகாப்பான அளவு உள்ளதாக மாறியுள்ளது. ஆனாலும் அவை கெட்டுப்போகும் போதும் அல்லது அதிக அளவு வெளிச்சம் படும் போதும் இந்த வேதிப்பொருட்களை வெளித்தள்ளுமாம்.
இந்த ஆய்வு ‘Science Advances’ எனும் இதழில் வெளிவந்துள்ளது.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.