வேளாண் சட்டங்களை ரத்து செய்திடுக – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச. வீரமணி)மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே டிசம்பர் 30 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், எந்தப் பிரச்சனைகளுக்காக விவசாய அமைப்புகள் அனைத்தும் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்களோ அந்தப் பிரதான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் மீண்டும் ஒருமுறை தோல்வி அடைந்திருக்கிறது. அரசாங்கம் மின்சார திருத்தச் சட்டமுன்வடிவை மறுபரிசீலனை செய்வதாகவும், மாசுக் கட்டுப்பாடு சட்டத்திலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பதற்கும் ஒப்புக்கொண்டுள்ளதுபோன்று தோன்றுகின்ற அதே சமயத்தில், வேளாண் சட்டங்களை ரத்துசெய்திடுவதற்கு மறுத்துள்ளது.  அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை 2021 ஜனவரி 4 அன்று நடைபெறவிருக்கிறது.

பாஜக மத்திய அரசாங்கம், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யமுடியாது என்று பிடிவாதம் பிடிப்பது தொடர்வதால், மிகவும் பெரிய அளவில் அமைதியான முறையில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நீடிக்கிறது. தில்லியின் எல்லைகளில், தில்லியை நோக்கிவரும் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தின் எல்லைகளிலும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவரும் அதேசமயத்தில் தங்களின் கோரிக்கைகளை வென்றெடுக்காமல் திரும்புவதில்லை என்கிற அவர்களின் உறுதியும்  குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

விவசாயிகள் தில்லியைச் சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்திருக்கிறார்கள் என்பதுடன் மகாராஷ்ட்ரா, குஜராத், உத்தர்காண்ட் போன்று தொலைதூர மாநிலங்களிலிருந்தும் வந்திருக்கிறார்கள். அநேகமாக  எல்லா மாநிலங்களிலும், பாட்னா, ராய்பூர், குல்பர்கா மற்றும் தஞ்சாவூர் என விவசாயிகள் கிளர்ச்சிப் போராட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விவசாயிகள் போராட்டம், போற்றத்தக்கவிதத்தில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் அதன் தொழிற்சங்க இயக்கத்தின் முழுமையான ஒருமைப்பாட்டுடனும் ஆதரவுடனும் நடந்து வருகிறது. சமூகத்தின் இதர பிரிவைச் சேர்ந்தவர்களும், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துப்பிரிவினரும் நாடு முழுதும் நமக்கு உணவு அளித்துவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அணிதிரண்டிருக்கிறார்கள்.

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவைகளாகும். பகுத்தறிவுள்ள எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் இவற்றை ஒப்புக் கொண்டிருக்கும். போராடும் விவசாயிகள் இது தொடர்பாக மத்திய அரசாங்கத்திடம் கோருவது என்ன?  நாடாளுமன்றத்தின் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை மீறி நிறைவேற்றப்பட்ட இந்த வேளாண் சட்டங்களை இப்போதைக்கு முதலில் ரத்து செய்திடுங்கள் என்பதுதான். (இதுபோன்ற நிர்ப்பந்தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் வரும் என்பதைத் தவிர்ப்பதற்காகவும், மக்கள் பிரதிநிதிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலிருந்து தப்பித்திடும் நோக்கத்தோடும் மத்திய அரசு, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரையே ரத்துசெய்துள்ளது.) பின்னர் இவை தொடர்பாக விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வாருங்கள் என்பதுதான். இவ்வாறு நடத்திடும் பேச்சுவார்த்தைகளின்போது விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் அனைவரும் உட்கார்ந்து விவாதித்து, நல்லதொரு முடிவு எடுப்போம் என்கிறார்கள். அதன்பிறகு அவ்வாறான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உருவான அம்சங்களுடன் சட்டமுன்வடிவைத் தயார் செய்து, நாடாளுமன்றத்தின் முன் தாக்கல் செய்து, அதனை நிறைவேற்றுங்கள் என்று கோருகிறார்கள்.  இதனைச் செய்திட பிரதமர் மோடி பிடிவாதமான முறையில் மறுத்து வருகிறார்.

துஷ்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருத்தல்

தில்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, மிகப் பெரிய அளவில் பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றுபட்டு, மிகவும் அமைதியான முறையிலும், ஒழுங்கு-கட்டுப்பாட்டுடனும் போராடுவதை, இழிவுபடுத்தும் நோக்கத்தோடு, அவர்களுக்கு எதிராக பாஜகவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கமும் விஷமத்தனமான முறையில் துஷ்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. முதலாவதாக, அவர்கள் போராடும் விவசாயிகள் அனைவரையும் காலிஸ்தானிகள் என்றார்கள், பாகிஸ்தானியர் என்றார்கள், சீன ஏஜண்டுகள் என்றார்கள், அர்பன் நக்சல்கள் என்றார்கள், பிரிவினை வாதிகள், பிளவுவாதிகள் என்றார்கள். இதுபோல் இழிவுபடுத்திட முயன்றார்கள்.  பின்னர், போராடும் விவசாயிகளின் மதிப்பைக் குலைக்கும் விதத்தில் அவர்களை எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுகிறார்கள் என்றார்கள்.  ஆனால் உண்மை என்ன? நாட்டில் உள்ள 500 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (‘அனைத்து விவசாயிகள் முன்னணி’) என்ற பதாகையின்கீழ் அணிதிரண்டு இந்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் எந்தவொரு அரசியல் கட்சியும் சம்பந்தப்படவில்லை.

இத்தகைய துஷ்பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடியே தலைமைதாங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் என்ன கூறுகிறார்? விவசாய சீர்திருத்தங்கள் தேவை என்று தங்கள் தேர்தல் அறிக்கைகளில் கூறிவந்த எதிர்க்கட்சியினர், இப்போது விவசாய சீர்திருத்தங்கள் கொண்டுவந்துள்ளபோது அதனை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே எதிர்க்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்.  ஆம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினராகிய எங்களைப் பொறுத்தவரையில், இதர கட்சியினரைப் போலவே நாங்களும் விவசாய சீர்திருத்தங்கள் தேவை என்றுதான் எப்போதும் கூறி வந்திருக்கிறோம். ஆனால், என்ன வகையான சீர்திருத்தங்கள்? இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதத்தில், நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் முறையான விதத்தில் சத்துணவும், சுகாதாரத்தையும் அளிப்பதை உத்தரவாதப்படுத்தி, அவர்களுக்கு உணவூட்டும் விதத்தில் போதிய அளவிற்கு தானியங்களை உற்பத்தி செய்யக்கூடிய விதத்தில், சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கோருகிறோம். நம் விவசாயிகள் உற்பத்தி செய்திடும் வேளாண் பொருள்களுக்கு, அவர்களுக்குப் போதுமான அளவிற்கு வருமானம் ஈட்டக்கூடிய விதத்திலும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதன் மூலம் நுகர்வோருக்கான விலை நியாயமான விதத்தில் இருக்கக்கூடிய விதத்திலும் மற்றும் விவசாயத் துறையை மேலும் வளர்த்திடக்கூடிய விதத்திலும் சீர்திருத்தங்கள் தேவை என்று கோருகிறோம்.

எனினும், பிரதமர் மோடி இப்போது நிறைவேற்றியிருக்கிற வேளாண் சட்டங்கள் மூலமாக, செய்திருக்கும் சீர்திருத்தங்கள் என்ன? இந்தியாவின் வேளாண் துறையை, இந்தியாவின் வேளாண் சந்தையை, வேளாண் உற்பத்திப் பொருள்களை, பன்னாட்டு வேளாண்-வர்த்தக ஜாம்பவான்களிடம், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளிடம், ஒப்படைத்திடும் விதத்தில் சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார். இதனால் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு கடுமையான முறையில் ஆபத்திற்கு உள்ளாகும். அத்தியாவசியப் பொருள்கள் மிகப்பெரிய அளவில் பதுக்கி வைத்திட அனுமதிக்கப்படும். இதன்மூலம், செயற்கையான முறையில், உணவுப் பற்றாக்குறை உருவாக்கப்படும். விளைவு? விலைவாசிகள் விண்ணை எட்டும். பொது விநியோக முறை கைவிடப்படும். உணவு தான்யங்களை மக்கள் கட்டுப்படியாகக் கூடிய விலையில் வாங்குவது இயலாமல் போய்விடும். இந்த வேளாண் சட்டங்கள் இந்தியாவின் விவசாயத்தையே அழித்துவிடும். இவற்றின் விளைவாக நம் மக்கள் மிகப்பெரிய அளவில் வறுமைக்குழிக்குள் தள்ளப்படுவார்கள்.  இதனால்தான் நாட்டில் உள்ள பல மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டங்களை எதிர்க்கின்றன. போராடும் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவித்திருக்கின்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று மத்திய மோடி அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன. அவற்றின் மூலம், கொள்ளை லாபம் அடித்திட அந்நிய மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு உதவிடும் விதத்தில் அல்லாமல், நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கையை அளிக்கக்கூடிய விதத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வாருங்கள் என்று கூறுகின்றன.சாமினாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்துவது தொடர்பாக…

குறைந்தபட்ச ஆதார விலையைப் பொறுத்தவரை, தன்னுடைய அரசு சாமினாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்திக்கொண்டிருப்பதாக, பிரதமர் மோடி கூறிக்கொண்டிருக்கிறார்.  குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரை என்ன?

விவசாய உற்பத்திக்கு ஆகும் செலவினத்துடன் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சாமினாதன் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது.

சாமினாதன் ஆணையம்அளித்திடும் பரிந்துரை, C2 + 50 சதவீதம் என்பதாகும். C2 என்கிறபொழுது, பயிரிடப்படும் இடம் சொந்தமானதாகவே இருந்தாலும் அந்த நிலத்தின் வாடகை மதிப்பு, சொந்த நிர்ணய மூலதன சொத்துக்களின் மதிப்பு மீதான வட்டி ஆகியவையும் உள்ளடக்கமாகும். (C2 includes rental value of own land and interest on value of own fixed capital assets.) இதுமட்டுமல்ல, விவசாய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயி மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் உழைப்புக்கும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு அதுவும் உற்பத்திச் செலவினத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு கணக்கிட்டு அதனுடன் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்வது என்பதுதான் C2 + 50 சதவீதம் என்பதாகும்.

ஆனால், மோடி அரசு அளிப்பது என்பது A2 + 50 சதவீதமாகும்.  விவசாய உற்பத்திக்கு செய்யப்பட்ட செலவினத்துடன் ஒன்றரை மடங்கு என்ற அடிப்படையில் (Actual paid out of cost) கொடுக்க முன்வந்துள்ளது. இவ்விரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் குறிப்பிடத்தக்க அளவிற்கு இருந்திடும்.  C2 + 50 சதவீதம் என்ற முறையில் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திடாமல், சாமினாதன் ஆணையத்தின் அறிக்கையை மத்திய அரசு மறுதலித்திருக்கிறது. இதேபோன்றே மத்திய அரசாங்கம் சாமினாதன் ஆணையத்தின் அறிக்கையின் இதர பரிந்துரைகளையும் கண்டுகொள்ளவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 2019 தேர்தல் அறிக்கையில், ‘வேளாண் சீர்திருத்தங்கள்’ தொடர்பாக வெளியிட்டுள்ள பகுதியில், முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனை, அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையில் விற்பனை செய்வதற்கு சட்டரீதியான உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதாகும். 2017இல் இந்தப் பிரச்சனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. ஆனாலும், இதுநாள்வரையிலும் மத்திய அரசாங்கம் இதுபோன்றதொரு சட்டத்தை நிறைவேற்ற முன்வரவில்லை.  மேலும் குறைந்தபட்ச ஆதார விலை என்பது, விவசாயிகள் விளைவித்திடும் அனைத்துப் பொருள்களுக்கும் கொண்டுவரப்பட வேண்டும். தற்சமயம், இது விவசாயிகளில் ஆறு சதவீதத்தினரை மட்டுமே சென்றடைகிறது. மேலும், விவசாய விளைபொருள்களைக் கொள்முதல் செய்வதற்காக ஒரு திறமையான கொள்முதல் நிர்வாக அமைப்பு (efficient procurement mechanism) இல்லாதபட்சத்தில், பலவகையான விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை என்பதே அர்த்தமற்றதாகிவிடுகிறது. ஆகவேதான், கொள்முதல் அமைப்புமுறையை, நாடு முழுவதும் அனைத்து விவசாய விளைபொருள்களுக்கும் அது தனியார் கொள்முதல் செய்வதாக இருந்தாலும் சரி, அல்லது அரசாங்கம் கொள்முதல் செய்வதாக இருந்தாலும் சரி, அனைத்துக்கும் கொண்டுவரப்பட வேண்டும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசாங்கங்கள் குறிவைக்கப்பட்டிருப்பது குறித்து…

பிரதமர் மோடி, முற்றிலும் தவறான தகவல்களுடன் எதிர்க்கட்சியினர் ஆளும் அரசாங்கங்களை, அதிலும் குறிப்பாக கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தைத் தாக்கிக் கொண்டிருக்கிறார். அவர்கள் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்காமல், மத்திய அரசாங்கத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறிக்கொண்டிருக்கிறார். பிரதமரின் பொய்ப் பிரச்சாரத்தை அகில இந்திய விவசாயிகள் சங்கம் மிகவும் வலுவானமுறையில் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. கேரளம் நெல், காய்கறிகள், பருப்பு வகைகள், நேந்திரம் பழம் முதலானவற்றிற்கு ஒவ்வொரு ஹெக்டேருக்கும் தாராளமாக மான்யங்கள் அளித்திருக்கிறது.  கேரளத்தில் 82 சதவீத அளவிற்கு பணப் பயிர்கள் பயிர்செய்யப்படுகின்றன. இவற்றின் விலைகள் கேரள மாநில அரசாங்கத்தின்கீழ் உள்ள உணவுப் பண்டங்கள் வாரியங்களினால் ஏலம் விடப்படுவதன் மூலம் உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கின்றன.

மக்களின் கவனத்தைத் திசை திருப்பிட மதவெறித் தீ விசிறிவிடப்படுகிறது

விவசாயிகள் இவ்வாறு மிகவும் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, பாஜக, தன்னுடைய மாநில அரசாங்கங்களின் மூலமாக, மத வெறித் தீயை மிகவும் வெறித்தனமாக விசிறிவிட்டுக் கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநில அரசாங்கங்களால் நிறைவேற்றப்பட்டிருக்கும் ‘புனித ஜிகாத்’ (‘Love Jihad’) சட்டங்கள் மற்றும் ‘பசுப் பாதுகாப்பு’ சட்டங்கள் மக்களிடையே மதவெறித் தீயை விசிறிவிட்டு, அவர்களைத் துன்புறுத்திடவும், மிரட்டவும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில், உஜ்ஜையினிலும், இந்தூரிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் மதவெறிப் பதற்றநிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இவை மிகப்பெரிய அளவுக்கு நாட்டைப் பலவீனப்படுத்திட இட்டுச்சென்று பேரழிவினை ஏற்படுத்திடும்.நவீன தாராளமயக் கொள்கையை முரட்டுத்தனமாகப் பின்பற்றுதல்

உலகில் பொருளாதார மந்தம் தொடர்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகள், இந்நெருக்கடியிலிருந்து மீளத் தீர்வு எதனையும் அளிக்க முடியாமல் அசிங்கப்பட்டு, திவாலாகிவிட்டன. இதன் விளைவாக  முதலாளித்துவத்தின் கீழ் கொள்ளை லாபம் ஈட்டும் நடவடிக்கைகள் உக்கிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. பாஜக மத்திய அரசாங்கம் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கைகளை முரட்டுத்தனமாகப் பின்பற்றுவதன் மூலம், கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட பெரிய அளவில் வாய்ப்புகளை அளித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக அது, பொருளாதார நடவடிக்கைகளில் புதிய பகுதிகளையும், புதிய சந்தைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தக் குறிக்கோளை எய்துவதற்காகவும்தான், அதன்மூலம் அந்நிய மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகவும்தான், புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இவ்வாறாக, பாஜக மத்திய அரசாங்கம், இந்தியாவில் ஆளும் வர்க்கங்களின் நலன்களை ஒருமுகப்படுத்துவதற்கான பிரதான ஏஜண்டாக இருந்து, அவர்கள் கொள்ளை லாபம் ஈட்டும் விதத்தில் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதன் மூலம்  அவர்களின் வர்க்க நலன்களுக்கு சேவை செய்துகொண்டிருக்கிறது.

வர்க்க தாக்கங்கள்

உலகப் பொருளாதார நெருக்கடியுடன், இந்தியாவின் பொருளாதாரமும், மத்திய அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் போன்றவை மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இதன் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் கடந்த சில ஆண்டுகளாக கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதன் காரணமாகவும், கோவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனைத் தொடர்ந்து எவ்விதத் திட்டமிடலுமின்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தின் காரணமாகவும், இந்திய ஆளும் வர்க்கங்கள், கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக புதிய வாய்ப்பு வாசல்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் முதலாளிய-நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்கள், நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளைப் பயன்படுத்திக்கொண்டு, கொள்ளை லாபம் ஈட்டும் தங்கள் முயற்சிகளை மேலும்  ஒருங்கமைத்துக்கொண்டிருக்கின்றன. நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுதல், பொதுத்துறை நிறுவனங்களைப் பெரிய அளவில் தனியார்மயமாக்குதல், கனிம வளங்கள் நிறைந்த அனைத்துப் பொது சுரங்கங்களையும் தனியாரிடம் தாரை வார்த்தல், அதேபோன்று பொது சேவைகள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்த்தல், இவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின்போது தொழிலாளர்களின் எதிர்ப்புகளை சமாளிப்பதற்காகவே, தொழிலாளர் நலச் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு இருந்த உரிமைகள் அனைத்தையும் பறித்து, அவற்றை முதலாளிகள் நலச் சட்டங்களாக – தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றியமைத்தல் முதலான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது.

இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாயிகளின் வரலாறு படைத்திடும் போராட்டமானது, கார்ப்பரேட்டுகள் தாங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, வேளாண்மைத்துறையையும் கைப்பற்றிக்கொள்ள, இந்திய ஆளும் வர்க்கங்களின் தலைமையின்கீழ் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சிகளை, கூர்மையான முறையில்  தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு, சர்வதேச நிதி மூலதனத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ள பெரு முதலாளிகளுக்கும். பணக்கார விவசாயிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் உட்பட ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இடையே புதியதொரு வர்க்க மோதல் உருவாகிக் கொண்டிருக்கிறது.

இரண்டாவதாக, ஒரு பக்கத்தில், ஆளும் வர்க்கக் கூட்டாளிகளாக இருக்கின்ற  பெரு முதலாளிகளுக்கும், மறு பக்கத்தில் பெரு முதலாளிகள் அல்லாத, குறிப்பாக நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளைச் சார்ந்த (MSME sector) முதலாளிகளுக்கும் இடையேயும் மோதல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

மூன்றாவதாக, பாஜக, அரசமைப்புச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள கூட்டாட்சிக் கட்டமைப்பை அழித்துவிட்டு, அந்த இடத்தில்  நாட்டில் தன்னுடைய முழுமையான அரசியல் மேலாதிக்கத்தை நிறுவிடவும், மேற்கொண்டுவரும் முயற்சிகள், மத்திய அரசாங்கத்திற்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களுக்கும் இடையிலேயும் மோதல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும்  சில மாநிலக் கட்சிகள், நாடாளுமன்றத்தில் பாஜக-விற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவை, நாடாளுமன்றத்தில் பாஜக-வின் நிலைப்பாட்டை எதிர்க்கத் துணிவின்றி ஊசலாட்டத்துடன் இருந்தவை,  மிகப் பெரிய அளவிற்கு நடுநிலை வகித்து வந்தவையெல்லாம், இப்போது பாஜக மேற்கொண்டுவரும் மேலாதிக்க நடவடிக்கைகளின் விளைவாக, குறிப்பாக, இப்போது விவசாயப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், அதனை எதிர்த்திட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன.

இவ்வாறாக ஆளும் வர்க்கக் கூட்டாளிகளின் மத்தியில் உருவாகியுள்ள மோதல்களை, இவர்களால் இதுநாள்வரையிலும் சுரண்டப்பட்டு வந்த வர்க்கங்களால், குறிப்பாக தொழிலாளர் வர்க்கம், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், முதலாளிய-நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் ஆட்சிக்கு எதிராக, தங்களுடைய வர்க்கப் போராட்டங்களை உக்கிரப்படுத்திட, பயன்படுத்திக்கொள்ளப்பட வேண்டிய சாத்தியக்கூறுகளை உருவாக்கி இருக்கிறது.

வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான இத்தகைய சாத்தியக்கூறுகள்,  தொழிலாளர் வர்க்க தொழிற்சங்க இயக்கம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்திருப்பதன் மூலம் வளர்ந்துகொண்டிருக்கிறது. இத்தகைய வளர்ச்சிப்போக்குகள் இதற்கு முன்பே தொடங்கிவிட்டன. 2018க்குப்பின்னர் இப்பிரிவினருக்கிடையே கூட்டு இயக்கங்கள் மூலமாக கணிசமான அளவிற்கு முன்னேற்றங்களும் ஏற்பட்டிருந்தன. மத்தியத் தொழிற்சங்கங்களால் அறைகூவல் விடுக்கப்பட்டு நடைபெற்ற நவம்பர் 26 அகில இந்தியப் பொது வேலை நிறுத்தம், நவம்பர் 26-27 தேதிகளில் விவசாய சங்கங்கள் மேற்கொண்ட போராட்டங்களுடனும்,  ‘தில்லி செல்வோம்’ அறைகூவலுடனும் இணைந்தது.  போராட்டங்களில் இவ்வாறு அதிகரித்துள்ள ஒற்றுமை, நிச்சயமாக, வரக்சுகூடிய காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும்.

அதேபோன்று, ஆட்சியாளர்களால் கூர்மைப்படுத்தப்படும் மத வெறி நடவடிக்கைகள் மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை அரித்துவீழ்த்திட மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் ஆளும் வர்க்கங்கள் மேற்கொண்டுள்ள தீவிரமான வர்க்கத் தாக்குதல்கள், இந்தக் காலத்தில் பாஜக மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக வெகுஜனப் போராட்டங்கள் அதிகரிப்பதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.  இத்தகைய ஒன்றுபட்ட கூட்டுப் போராட்டங்களும், இத்துடன் பெண்கள், மாணவர்கள், வாலிபர்கள், தலித்துகள், பழங்குடியினர் போன்ற பல்வேறுபட்ட பிரிவினர்களின் கோரிக்கைகளுக்கான சுயேச்சையான போராட்டங்களும் வரவிருக்கும் காலங்களில் தீவிரமடையவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன.   இவை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு எதிராக பாஜக மேற்கொண்டுள்ள வர்க்கத் தாக்குதல்களை, இதுநாள்வரையிலும் சுரண்டப்பட்ட வர்க்கங்களாலும், நம் மக்களின் பல்வேறு பிரிவினராலும் எதிர்த்து நின்று, முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

(தமிழில்: ச. வீரமணி)