வேளாண் சட்டங்களை ரத்து செய்து, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : கல்விசார் ஆய்வுக் குழு கோரிக்கை (தமிழில்: தா.சந்திரகுரு)

வேளாண் சட்டங்களை ரத்து செய்து, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : கல்விசார் ஆய்வுக் குழு கோரிக்கை (தமிழில்: தா.சந்திரகுரு)



இந்திய விவசாயிகளை வீதிக்கு அழைத்து வந்திருக்கின்ற மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு கோரி வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு உலகெங்கிலும் இருந்து சுமார் நாற்பது பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட கல்விசார் ஆய்வுக் குழு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

தொற்றுநோய்க்கு மத்தியில் அரசாங்கத்தால் அவசரமாக வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது, ‘மத்திய அரசாங்கத்தின் நோக்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்முறையின் நேர்மை’ மீதான  கேள்விகளை எழுப்புவதாக இந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. வேளாண் சட்டப் பிரச்சனைகள் குறித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பல்வேறு விவசாய குழுக்களுடன் முறையான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடிதத்தின் முழு உரை கீழே.

§

டிசம்பர் 22, 2020.

பெறுநர்

திரு. நரேந்திர சிங் தோமர்

மாண்புமிகு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்

இந்திய அரசு

பொருள்: சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோருதல்.

அன்புள்ள ஸ்ரீ நரேந்திர சிங் தோமர் ஜி,

வருமானம் மற்றும் நாட்டின் செல்வம் ஆகியவை நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்ற, இந்தியாவுடன் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருக்கும் பொருளாதார வல்லுநர்களாகிய நாங்கள் (இந்தியப் பொருளாதாரம் குறித்து பணிபுரியும் உலகெங்கிலும் உள்ள சுமார் நாற்பது பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழு) விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு வழிவகுத்திருக்கும் சமீபத்திய வேளாண் சட்டங்கள் குறித்து கவலை அடைந்திருக்கிறோம். இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆதாயமளிக்கின்ற விலை, வேளாண் உற்பத்திக்கான சிறந்த சந்தைகளைப் பெறுதல் போன்றவை தேவைப்படுகின்ற நிலையில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் அவற்றை உறுதி செய்து தருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் தற்போதைய சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கும் நேரம் (தொற்றுநோய்க்கு மத்தியில்) மற்றும் அவை பாராளுமன்றத்தில் மிக விரைவாக நிறைவேற்றப்பட்ட விதம் ஆகியவை, மத்திய அரசின் நோக்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்முறையின் நேர்மை மீது கடுமையான கேள்விகளை எழுப்புவதாக இருக்கின்றன. இந்தச் சட்டங்களில் பெரிய சிக்கல்கள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

(அ) ​​ஒப்பந்த விவசாயத்தின் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குத் தெளிவான பலன்கள் எதுவும்  கிடைக்கவில்லை என்பதை ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கல்விசார் ஆய்வுகள் காட்டுகின்றன. இந்திய விவசாய உற்பத்தியாளர்களில் சிறு மற்றும் குறு விவசாயிகளே பெரும்பான்மையாக உள்ளனர். இந்த சட்டங்கள் அவர்களின் நலனை மிகமோசமாகப் பாதிக்கும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு எதிராக மிகவும் அதிகாரம் கொண்ட தனியார் சந்தை இடைத்தரகர்களின் தன்னிச்சையான அதிகாரத்தைக் குறைக்கும் வகையில்  ஏற்கனவே வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது (ஒட்டுமொத்த சந்தையின் சிறுபகுதி மட்டுமே விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் (APMCகள்) மூலமாக விற்கப்பட்டு வருகிற போதிலும்).



பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, தற்போதைய சட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத சந்தைகள் என்ற ‘இரட்டை முறையை’ ஊக்குவிக்கின்றன. இந்த புதிய முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகின்ற  நிறுவனங்களைப் பலவீனப்படுத்த முயல்கின்றது. ஏபிஎம்சிகளைத் தவிர்த்து, சிறு மற்றும் குறு விவசாயிகளின் பாதிப்புகளை அதிகரிக்கும் வகையில் தனியார் ஒப்பந்தக்காரர்கள், சந்தை இடைத்தரகர்கள், பெரிய கார்ப்பரேட் அமைப்புகள் போன்றவற்றை மேலும் வலுப்படுத்த மட்டுமே இந்த இரட்டை முறை பயன்படும்.

கடந்த முப்பதாண்டு காலகட்டத்தில் இந்திய தனியார் கார்ப்பரேட் துறையின் ஆற்றல் மிகக் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த துறையை ஒழுங்குபடுத்துவது, கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் அடுத்தடுத்து வந்திருக்கும் இந்திய அரசாங்கங்களின் திறனும், விருப்பமும் மட்டுப்படுத்தப்பட்டே இருந்து வந்திருப்பது, பல மோசடி வழக்குகளின் மூலமாக அப்பட்டமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் போது, இந்த புதிய சட்டங்களின் மூலம் விவசாயத்தில் ஒப்பந்த வேளாண்மை, வேளாண் வணிகம், கார்ப்பரேட் துறையை ஊக்குவிப்பது போன்றவை சிறு மற்றும் குறு விவசாயிகளின் தன்னாட்சி மற்றும் பேரம் பேசும் ஆற்றலைக் குறைப்பதன் மூலம் அவர்களுக்கு நிச்சயம் பாதிப்பையே ஏற்படுத்தும். ஏற்கனவே அதிகரித்திருக்கும் கிராமப்புற-நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகளையும், ஒட்டுமொத்த அசமத்துவத்தையும் மேலும் மோசமாக்குவதாகவே இது இருக்கும்.

(ஆ) எந்தவொரு வலுவான ஜனநாயகமும் பல்வேறு சமூகங்களின் தேவைகளை அடிமட்டத்திலிருந்து நிவர்த்தி செய்கிறது. ஒழுங்காகச் செயல்படும் கட்டுப்பாடுகள் இருப்பதையும், பல்வேறு அரசியல் பிரிவுகளிடையே பணிகளைப் பிரித்துக் கொடுப்பதையுமே அது நம்பியுள்ளது. இதை நன்கு அறிந்திருந்த இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தவர்கள் மாநிலங்களுக்கும், மத்திய அரசாங்கத்திற்கும் என்று பல்வேறு உரிமைகள், பொறுப்புகளைப் பிரித்து வழங்கினர். இந்தப் பின்னணியிலேயே, மாநிலங்களுக்கிடையே சில பொதுவான தன்மைகள் இருந்த போதிலும், உள்ளூர் மக்களின் தேவைகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் விவசாயத்தை வித்தியாசமாகவே கையாண்டு வருகின்றன.

இந்த புதிய சட்டங்கள் கொள்கைகளையும், நிறுவனங்களின் எதிர்வினைகளையும் வகுப்பதில் மாநிலங்களுக்கு இருக்கின்ற ஒப்பீட்டளவிலான சுயாட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கே முற்படுகின்றன. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் இருக்கின்ற சிறுபான்மை மதக்குழுக்கள், தலித்துகளின் உரிமைகள் முடக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. ஊடக அறிக்கைகள் குறிப்பிடுவதைப் போல, தற்போது நடைபெற்று வருகின்ற போராட்டங்களில் பல பிராந்தியங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டுள்ள போதிலும், குறிப்பிட்ட பகுதிகள், மதக்குழுக்கள் (எடுத்துக்காட்டாக பஞ்சாபில் உள்ள சீக்கியர்கள்) மட்டும் தாங்கள் அந்நியப்படுவதான உணர்வைப் பெறுவதற்கு இந்தச் சட்டங்கள் பங்காற்றி இருக்கின்றன.

C:\Users\Chandraguru\Pictures\Farmers protest\The Wire 23122020\FL15SINGHUBORDER.jpg

பன்முகக் கலாச்சாரம் கொண்ட, பல பகுதிகளைக் கொண்ட இந்திய தேசத்தில் உள்ள மத்திய அரசின் விவசாயக் கொள்கைகள் பல்வேறு பகுதிகள் மற்றும் சமூகங்களைச் சார்ந்த மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு இடமளித்து அதற்கேற்ற வகையில் உருவாக்கப்பட வேண்டும் (அதாவது, அனைவருக்குமான ஒரே கொள்கைப் பரிந்துரைகளை விதிக்கக்கூடாது).

எனவே இந்த புதிய சட்டங்களை முதலில் ரத்து செய்யுமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம், அதற்குப் பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்திருக்கின்ற விவசாய குழுக்களுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாதை குறித்து முறையான பேச்சுவார்த்தைகளை நடத்திட வேண்டும். வேளாண் பிரச்சனைகளை (உற்பத்தி, சந்தைப்படுத்தல், கடன், விலை, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் போன்றவை) ஏற்கனவே கையாண்ட வல்லுநர்கள் பலர் களத்தில் உள்ளனர். மேலும் மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாக, அவர்களையும் விவாத மேஜைக்கு கொண்டு வர வேண்டும்.

உண்மையுள்ள,

சமத்துவத்திற்கான இந்திய பொருளாதார வல்லுநர்கள்

(இந்தியாவில் வருமானம், செல்வம் ஆகியவற்றின்  நியாயமான விநியோகத்தில் ஆர்வமுள்ள கல்விசார் ஆய்வுக் குழு).

கையொப்பமிட்டிருப்பவர்கள்:

ஸ்ரீபத் மோதிராம் (பொருளாதார இணைப் பேராசிரியர், மசாசூசெட்ஸ் பாஸ்டன் பல்கலைக்கழகம்)

ஸ்ரீஷா நாயுடு (பொருளாதார இணைப் பேராசிரியர், மிசோரி கான்சாஸ் நகர பல்கலைக்கழகம்)

ஸ்மிதா ராம்நாராயண் (பொருளாதார இணைப் பேராசிரியர், ரோட் ஐலேண்ட் பல்கலைக்கழகம்)

ஸ்மிருதி ராவ் (பொருளாதாரம் மற்றும் உலகளாவிய ஆய்வுகள் துறைப் பேராசிரியர், அசம்ப்ஷன் பல்கலைக்கழகம், மசாசூசெட்ஸ்)

வம்சி வகுலபரணம் (ஆசிய அரசியல் பொருளாதார திட்ட இணை இயக்குநர் மற்றும் பொருளாதார இணைப் பேராசிரியர், மசாசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகம்).

https://thewire.in/agriculture/academic-research-group-agriculture-narendra-singh-tomar-farm-laws

நன்றி: 2020 டிசம்பர் 23, தி வயர் இணைய இதழ் 

தமிழில்: தா.சந்திரகுரு

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *