சென்னையின் புறநகரான எண்ணூரில் புளூரோசிஸ் நோய்த்தொற்று அறிவியல் ஆராய்ச்சியும் புளூரைட் பற்றிய சூழியல் ஆய்வும் (1993-97)
கரையோரம் கடலரிப்பு அதிகமாயிருந்தது. பெரும்பாறைக் கற்களைத் திருவெற்றியூர் கடற்கரையோரம் அடுக்கி கடல் உள் நுழைவது தடுக்கப்பட்டிருந்தது. தற்காலிகக் குளிர்காப்புப் பெட்டி, மண் மற்றும் நீர் பரிசோதனைக்கான வேதிமாற்றம் நிகழ்த்தாத பிளாஸ்டிக் குவளைகள், குப்பிகள், முகவுறை, கையுறை மற்றும் மாதிரி சேகரிக்கும் உபகரணங்களுடன் வண்டியின் பின்னால் சக ஆராய்ச்சி மாணவர் பயணிக்க பேசியபடி சென்றுகொண்டிருந்தோம். எண்ணூர் கடற்கழிமுகம் வடக்கிலிருந்து பழவேற்காடு, பூண்டி நீர்வரத்தாலும், தெற்கே, தென்மேற்கே கற்றளியாறு, ஆரணியாறு ஆகிவற்றாலும் நிரப்பப்பட்டு எண்ணூர் அருகே கடலில் கலக்கிறது. மணலியினூடே வருகையில் ஆலைக்கழிவுகளோடு ஒன்றாகக் கலந்து கருமைப்பட்டுவிடும் ஆறு. அங்கே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக் கழிவுகள்தான் பெருமளவில் இருந்தன. எண்ணெய்யாலும் அனல்மின் நிலைய சுடுநீராலும் நீரில் பிராணவாயு அற்றுப்போக மீன்கள் செத்து மிதக்கும். அவற்றில் ஒன்றிரண்டைக் காகங்களும் நாரைகளும் கொத்தித் தின்னும். அவையும் விரைவில் செத்துப்போகக்கூடும். உணவுச்சங்கிலி நஞ்சாகிப் போயிருந்தது. ஆனால் அதுவொரு இயற்கையான நிகழ்வாகவே பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
தேர்வு செய்யப்பட்ட ஆய்வுக்களம் புளூரைட் ஆராய்ச்சி. எண்ணூர் கடற்கழிமுகம்த்திற்கு வெகு முன்னதாக அமையப்பெற்ற கத்திவாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சின்னக்குப்பம் மற்றும் எர்ணாவூர் குப்பங்கள் மீனவக் குடியிருப்புகளாகப் பல காலமாய் இருந்து வருகின்றன. எண்ணூர் நெடுஞ்சாலையின் வலப்பக்கம் கடலையொட்டி இடதுப்பக்கம் தொழிற்சாலைகளும் அவற்றின் முடிவில் மக்கள் அண்டிப் பிழைக்க வந்தமைந்த வசிப்பிடங்களான சத்யவாணிமுத்து நகர், காமராசர், வ.உ.சி நகர்கள் உலகநாதபுரம் ஆகியவையும் அமைந்திருந்தன. சென்னையின் சூழியல் மாசுபற்றியும், சூழல்சார்ந்த அறிவியல் கருத்தரங்கொன்றில் பங்குகொள்ளவுமென ஆய்வுத் தாள் தயாரிப்பதற்காக ஆராய நண்பர்களுடன் எண்ணூர் வர நேர்ந்தது. சத்யவாணிமுத்து நகரில் நுழைந்தபோது எதிரே இருகால்களும் முடமாகிப் போன வாலிபன் ஒருவனைச் சந்தித்தோம். வேதனையாய் இருந்தது. பிறவியிலேயோ அல்லது நோயினாலோ அல்லாமல் அவ்வூர் நிலத்தடி நீரினுள் புளூரைடு எனும் வேதிக்கழிவால் அவன் முடமாகியிருக்கக்கூடுமென ஆய்வறிக்கைகள் மூலம் தெரியவந்தது. பெருநகர் குப்பை மேலாண்மை, உயிர்வழி வேளாண் பூச்சித்தடுப்பு, இயற்கைவழி வேளாண்மை போன்ற தலைப்புகளை ஆய்வுக்களமாக முயன்று கொண்டிருந்த வேளையில் எண்ணூரிலுள்ள புளூரைடு பிரச்சினை எதிர்கொண்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்கெனவே அப்பிரச்சினையைப் பற்றி பல் மருத்துவர் ஒருவரின் துணையோடு சில அடிப்படை முடிவுகளை ஆராய்ந்து அறிக்கையொன்றை 1990-ல் சமர்ப்பித்திருந்தது. ‘பிரன்ட் லைன்’ பத்திரிகையில் கூட வெளியாகி இருந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் அவ்வாய்வுக்கெனத் தன்னுழைப்பைத் தந்திருந்தது. திருவொற்றியூர் பொதுவுடைமைக்கட்சி அலுவலகம் சென்று, அங்குள்ள தோழர் ஒருவரின் துணையோடு அனைத்து நகர்களையும் குறிப்பாக அப்பிரச்சினையுடன் ஊடுபரவியோடிய சமூக-பொருளாதார, அரசியல் கூறுகளையும் புரிந்துகொள்ளமுடிந்தது. உலகளவில் புளூரோசிஸ் பிரச்சினையின் இருப்பை, குடிநீரில் அதிகளவான புளூரைடு காணப்படுவதை யூனிசெப் அமைப்பின் பிரசுரம் காட்டுகிறது (படம் 1).
படம் 1: உலகளவில் நீர்வழி புளூரோசிஸ்
கடற்கரையோரம் சூப்பர் பாஸ்போட் உரம் தயாரிக்கும் கோத்தாரி மற்றும் பாரி நிறுவனங்கள் அந்நகர்களையொட்டி அமைந்துள்ளன. உரத்தயாரிப்பின் இரண்டாம்பட்ச திடக்கழிவுகள் முழுவதும் வெறுமனே வெளியேற்றப்படுகின்றன. ஆலைகளின் பின்பக்கத் திடலில் குன்றுகளாய் மண்டிக்கிடக்கும் வெண்திடக்கழிவுகள். அத்திடலின் சுவருக்குப் பின்தான் பொதுமக்களின் வசிப்பிடங்கள் உள்ளன. முதலிலிருந்தது சத்யவாணிமுத்து நகர் என்பதால் பாதிப்பும் அங்குதான் அதிகம். ஏனிந்த பிரச்சினையை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தோழர் விவரித்தார். எண்பதுகளின் இறுதியில் பிரச்சினை, போராட்டம், உண்ணாவிரதம், குடி நீர்த்தட்டுப்பாட்டால் பானை உடைப்பு வரையில் சென்றிருக்கிறது. உள்ளூர் இளைஞர் விளையாட்டு, உடற்பயிற்சிக் குழுக்கள் அதிதீவிரம் காட்டியிருக்கின்றன. ஆலை நிர்வாகமும், அரசியல் பிரமுகர்களும், பொது அமைப்புகளும் தீர்வுகாண முனைந்திருக்கின்றனர். அரசியல் பிரமுகர்களுடன் உள்ளூர் இளைஞர் குழுக்களின் சில உறுப்பினர்கள் கைகலப்பில் இறங்கிவிட தீர்வு ஏற்படும் நேரம் பிரச்சினை திசை திரும்பிப் போய்விட்டது. உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவு இளைஞர் குழுக்களுக்குக் குறையவே ஆலை நிர்வாகங்கள் முன்னெப்போதும் போலவே தன் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் மக்களுக்கு எதிரான தமது உயர் கடமையைத் தொடர்ந்தன.
புளூரைடால் ஏற்படும் பல் மற்றும் எலும்பு சம்பந்தமான பாதிப்புகள் அதிகமாயின. இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் வளர்பிராயப் பள்ளிப்பருவத்துப் பிள்ளைகள்தான். சுற்றுச்சூழலில் உள்ள புளூரைடு பெரும்பாலும் குடிநீர் மூலமே நம்முடலில் சேர்கிறது. பல், எலும்பு போன்ற சுண்ணாம்புத் தாது அதிகமுள்ள உறுப்புகளில் செறிவுகொள்கிறது. எலும்பு தடித்துப் போகிறது. மூட்டு இணைப்புகளில் படிந்து கெட்டியாகி மூட்டியக்கம் தடைப்பட்டு முடம்கொள்ளச் செய்கிறது. அதேபோல் தண்டுவடத்தில் பருத்து கூன்விழச் செய்கிறது. பற்களில் படிந்து நாளடைவில் அவை கரும்பழுப்பாகி விடுகின்றன. இதை ‘டென்டல் புளூரோஸிஸ்’ என்பர். பல்லில் புளூரைடு பாதிப்பை பூச்சியம் முதல் 4 வரையென, குறைவான பாதிப்பிலிருந்து அதி தீவிர பாதிப்பென மதிப்பிடலாம்.
மிக அதிகளவில் நீடித்த புளூரோஸிஸ் உட்கொள்ளல் எலும்புப் புற்று நோயை உண்டாக்கலாம் என்பதை சர்வதேச ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ஆய்வெலிகள் மூலமும் நிருபிக்கப்பட்டுள்ளது. பல்லும் எலும்பும் வேகமாக வளர்ச்சியடைவது பள்ளிப்பருவமென்பதால் வளர்பிராயத்துப் பிள்ளைகளே உலகமெங்கும் மிக அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. யூனிசெப் கூட. இன்னொரு முக்கிய கூற்றென்னவென்றால், அதே புளூரைடு பற்பசையிலும் பயன்படுத்தப்படுகிறது, பற்சொத்தையைத் தடுக்கவென. ஒரே பொருள் தனது அளவு மாற்றத்தால் நோயுண்டாக்குவதாகவும் நோய்க்கு மருந்தாகவும் இருக்கலாம். இதுவொரு ஹார்மேடிக் அல்லது வேதி முரண் விளைவு என்பர்.
படம் 2: புளூரோசிஸ் பாதிப்பு
பல்லில் புளூரோசிஸ் | கால்மூட்டில் புளூரோசிஸ் | கால்நடையில் புளூரோசிஸ் |
புளூரைடு ஆராய்ச்சிக்கான சூழல்சார்ந்த முதல் மாதிரிகளைச் சேகரிக்க சத்யவாணிமுத்து நகரின் முதல் தெருவில், அதாவது ஆலையின் பின்புறச் சுவரினருகில், ஆய்வுப் பொருட்களுடன் நானும் நண்பரும் நுழைந்தோம். அருகே காலியாகக் கொஞ்சம் புல்தரைத் திடலிருந்தது. மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. கோழிகள் கிளறியவாறு அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தன. எங்களின் வருகை உள்ளூர் மக்களுக்கு ஆச்சர்யம் தந்தது. தக்கதொரு இடத்தில் மண், நிலத்தடிநீர் மாதிரிகளைச் சேகரிக்க முனைந்தோம். சிறுவர்கள் சிலர் சூழ்ந்து கொண்டனர். மண்ணைத் தோண்டி மாதிரியைச் சற்றே வெட்டியெடுத்தோம்.
நடுத்தர வயதுள்ள ஒரு பெண் தன் குடிசை வாசற்கதவோரம் நின்றபடி சற்றே கோபமாய் ‘என்ன செய்கிறீர்கள்’ என்று கேட்டாள். ஆராய்ச்சிக்கான மாதிரிகள் என்றதும், “அதெல்லாம் இங்கே யாரும் எடுக்கக்கூடாது, போங்கள்” என்றாள். புளூரைடு பிரச்சினை சம்பந்தமான போராட்டத்தின் பின்விளைவுதான் இது என்றுணர கொஞ்ச நேரம் பிடித்தது. ஊர்த்தலைவர் யாரெனக் கேட்டறிந்து, மறுநாள் காலை அவரைச் சந்தித்தோம். நட்பானவர், படிப்பறிவு குறைவு. ஆராய்ச்சி விபரங்களையும் அதன் பயன்களையும் எடுத்துக் கூற, அவர் தந்த தகவல்களால் மேலும் தீவிரமும் வலுவுமடைந்தது ஆய்வுத் திட்டம்.
அரசியல் ஆதரவற்ற நிலையில் உள்ளூர் வாலிபர் சங்கத்தவர்களும் ஊர்ப்பெரியவர்களும் இணைந்து உள்ளூர் பஞ்சாயத்தை நாடினர். ஆனால் பாதிக்கப்பட்ட ஊர்களுக்குக் குடிநீர் வழங்குவது, ஆலையின் பின்பக்கத்தில் திடக்கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்ப்பது போன்ற நிபந்தனைகள் மட்டுமே இறுதியில் தீர்ப்பாக அமைந்தன. அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருந்தன. வழக்கு நடைபெற்று வந்த வேளையில் தீவிரமாயிருந்த சில உள்ளூர் இளைஞர்களையும் பிரதான உறுப்பினர்களையும் அடையாளங்கண்டு அவர்களுக்கு அண்மையிலுள்ள வேறுபல தொழிற்சாலைகளில் நிரந்தர வேலை வாங்கித்தரப்பட்டது. வழக்கின் வலிமை இதனால் குன்றுபட்டது. இரண்டாவது முக்கிய காரணம், அறிவியல் சம்பந்தப்பட்டது. தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு முன்னரே பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மண்ணில் இயற்கையாகவே புளூரைட் அதிகமிருந்ததாக நிரூபிக்கப்பட்டதால் தான் அதற்குப் பொறுப்பல்ல என்று தப்பித்தது தொழிற்சாலை நிர்வாகம். சில கடல் மற்றும் பாறைப் பகுதிகளில் இயற்கையாகவே மண்ணில் புளூரைட் காணப்படுவது அறிவியல் உண்மை. அதுவும் 1940-ல் பிரசுரிக்கப்பட்ட ஆய்வொன்றில் அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியில் அக்கடற்கரையொட்டிய நீராய்வில் புளூரைடு 10 பிபிஎம் (பத்துலட்சத்தில் ஒரு பாகம்) இருந்ததாக தரவுகள் உள்ளன. ஆனால் இப்படி நூறு மடங்கு அதிகமாக காணப்படுவது மிக அரிதானது. அது தொழிற்கூட மாசுபாடால் விளைவது.
இன்னும் தீவிரப்பட்டது ஆராய்ச்சி. அக்கம்பக்கத்து பள்ளிக்கூடங்களில் சூழல் அக்கறை கொண்ட குறும்படங்களை, சூழியல் நட்பு நிறுவனங்களின் மூலம் காண்பிக்க ஏற்பாடு செய்து, வாலிபர் சங்கத்தின் பழைய உறுப்பினர்களைச் சந்தித்து மேலும் தகவல்களின் உண்மைகளை, பிரச்சினையின் ஆழத்தை அறிந்துகொண்டோம். தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் ஆராய்ச்சிக்கு உதவுவதாக உறதியளித்தனர் சிலர். ஊர்த்தலைவர், சில பள்ளியாசிரியர்கள், தலைமையாசிரியர், உள்ளூர் பெரியோர்கள், வாலிபச் சங்கத்தவர் அனைவரிடமும் கலந்து பேசி பரஸ்பர தீர்மானமொன்று ஒருமித்து வரைவு செய்யப்பட்டது.
இப்பகுதியில் இயற்கையாகவே புளூரைட் மண்ணில் இருந்தால் நிலத்தடி நீரிலிருக்கும். அங்குள்ள தாவரங்களில் இருக்கும். ஆனால் காற்றுமண்டலத்தில் இருக்காது. இத்தொழிற்சாலைகளின் புகைபோக்கிகளில் இருந்து வெளியேறும் புகை நெஞ்சையடைப்பதாக பலர் நேர்முகத் தகவல் சேகரிப்பின் போது முறையிட்டனர். இருட்டிய பின்னரே புகை வெளியேறவதாகக் கூறினர். சந்தேகம் வலுத்தது. உற்சாகம் பிறந்தது, தடய அறிவியல் போன்று பிரச்சினையை ஆராய வேண்டியிருந்தது. காற்றிலிருந்து பரிசோதனைக்கான மாதிரிகளைச் சேகரிக்கத் திட்டமிடப்பட்டது. அதில் புளூரைட் இருப்பின் தொழிற்சாலைகளே பாதிப்புக்குக் காரணம் என்பதை நிருபித்து விடலாம் என்று ஆர்வம் வலுத்தது. அப்படி நிருபணமானால் ஆராய்ச்சிக்கான எல்லாவித ஒத்துழைப்பையும் செய்வதாக உள்ளூர் மக்கள் உறுதியளித்தனர். காற்று மண்டல மாதிரிகளில் ஊகித்தது போலவே புளூரைட் காணப்பட்டது. எட்டு மணிநேர காற்றுமாதிரி சேகரிப்பைத் தொடர்ந்து இருபத்து நான்கு மணிநேர ஆராய்ச்சியில் புகைபோக்கிக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில், புகை வானேறி வளைந்துபின் தரைச்சேரும் பகுதியின் ஒரு டீக்கடை மொட்டைமாடியில் யாருமறியா வண்ணம் ஆய்வு தொடர்ந்தது. காற்றுமாதிரியில் புளூரைன் எட்டு மணிநேரத்திற்கு 24 மணி நேரத்திற்குமென அளவிடப்பட்டது (அட்டவணை 1). வாயு நிலையில் புளூரைனாக இருக்கும். அது நிலையற்றதென்பதால் உடனுக்குடன் புளூரைடு என வேறெந்த வேதிமூலக்கூறுடன் சேர்ந்துவிடும். காற்றில் ஏற்புடைய புளூரைடு அளவு 1 மைக்கிரோகிராம் / சதுரமீட்டர். புளூரைடு அளவுடன், சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகளும் மிதவைத் துகள்களும் பரிசோதிக்கப்பட்டன. இதில் மிதவைத் துகள்களின் அளவு ஏற்புடைய 200 மில்லிகிராம் / சமீ அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகக் காணப்பட்டது; காரணம் பெரும்பாலும் அனல்மின் நிலையத்தாலாகும்.
சில மண் மாதிரிகளைச் சேகரிக்க எள்ளளவும் முன்பு அனுமதிக்காத அவ்வூரில் பிற்பாடு பெரும்பாலும் சிறுவர்களும் வாலிபர்களுமாய் சுமார் 120 பேர் சிறுநீரும் இரத்தமும் ஆர்வத்துடன் அளித்தனர். ஆனால் மக்களின் சம்மதம் பெற ஒரு வருடம் பிடித்தது. அரசு பொதுமருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ ஆலோசகரின் உதவியுடன், சக ஆராய்ச்சி நண்பர்களின் தளராத ஆதரவுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மண், நிலத்தடி நீர், தாவரம் என எல்லா மாதிரிகளும் வேறுபட்ட காலநிலைகளில் சேகரிக்கப்பட்டது. எல்லா உயிரியல் மாதிரிகளும் பருவநிலைக்கு ஏற்பவும், பல எண்ணிக்கையில் எடுக்கப்பட்டு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப் பரிசோதிக்கவென அமெரிக்காவிலிருந்து படப்பையில் உள்ள பிரெடரிக் ஆய்வு நிறுவனம் மூலம் எலக்ட்ரோட் பெறப்பட்டது. மிகவும் பாதிக்கப்பட்ட இருபது பேரின் இரத்தத்தில் மரபுக்கூறுகளில் ஏற்பட்ட பாதிப்பை கல்பாக்கம் அணுமின் நிலைய மரபணுவியல் து றையின் ஆய்வகத்தில் ஆரய்ந்துபின், அனைத்து ஆய்வு முடிவுகளின் ஒரு பிரதி ஊர்த்தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எந்த வழக்காடு மன்றத்திற்கும் வந்திருந்து சாட்சியளிக்கவும் உறுதியளிக்கப்பட்டது. ஊர் கூடி ஆலோசித்து அரசியல் பொருளாதார பிரச்சினைகளால் முடிவெடுக்க முடியாமல் நின்றது.
அட்டவணை 1: காற்றுமாதிரியில் புளூரைடு
புளூரைடு அளவு | 8 மணிநேர காற்று மாதிரியில், மைக்கிரோகிராம் / சதுரமீட்டர் | 24 மணிநேர காற்று மாதிரியில், மைக்கிரோகிராம் / சதுரமீட்டர் |
குறைந்தபட்சமாக | 0.73 | 3.25 |
அதிகபட்சமாக | 1.54 | 3.10 |
அட்டவணை 2: நீர்நிலைகளில் புளூரைடு
நீர்நிலைகள் | கோடைக்காலத்தில், பிபிஎம் | மழைக்குப்பிறகு, பிபிஎம் |
கிணறுகளில் | 27.33 | 19.47 |
கைப்பம்பில் | 38.8 | 19.3 |
நகராட்சிக் குடிநீரில் | 3.05 | 1.7 |
அட்டவணை 3: கத்திவாக்கத்தின் சில ஊர்களின் நீர்நிலைகளில் புளூரைடு
ஊர்கள் | நிலத்தடி நீரில், பிபிஎம் | குடிநீரில், பிபிஎம் |
சாத்தியவாணிமுத்துநகர் | 1.9 – 53.4 | 1.2 – 2.32 |
தாழங்குப்பம் | 0.5 – 0.9 | 1.59 – 1.8 |
காமராஜ் நகர் | 2.17 – 4.44 | 0.46 – 3.5 |
பெரியகுப்பம், நெட்டுக்குப்பம் | 1.77 – 2.59 | 0.18 – 0.94 |
உலகநாதபுரம் | 1.4 – 6.62 | 0.36 – 2.52 |
வஉசி நகர் | 0.39 | 0.39 |
நேரு நகர் | 0.8 – 0.18 | 0.46 – 3.5 |
நீர்நிலைகளில் புளூரைடு இருப்பு அட்டவணை-2-ல் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குடிநீருக்கான கார அமிலத்தன்மை, கடத்துப்பண்பு, கலங்கள்தன்மை, கடினத்தன்மை, கரைவுற்ற மொத்த திடப்பொருட்கள் கால்சியம், மெக்னீசியம், குளோரைடு, இரும்பு, பாஸ்பேட், நைட்ரைட்டு போன்ற பிற 12 வேதிக்கூறுகளும் ஆராயப்பட்டன. ஊர்கள் வாரியாக நிலத்தடி நீரிலும் குடிநீரில் புளூரைடு அளவு அட்டவணை 3-ல் காணலாம். உலக சுகாதார நிறுவனத்தின் குடிநீருக்கான மாசு நிர்ணயப்படி புளூரைடு அதிகபட்சம் 1.5 பிபிஎம் மட்டுமே இருக்கலாம். மழைநீரால் மாசுக்கள் மேலும் கரைந்து குறைவாகக் காணப்படுவது இயல்பானதே. இதில் வேடிக்கை என்னவென்றால் உள்ளூர் குடிநீரில் புளூரைடு மாசுபட்டிருப்பதால் மாற்றாக நகராட்சி மூலமும் பிறகு குழாய்வழியும் ‘பாதுகாப்பான’ குடிநீர் வழங்கிற்று. ஆனால் அதிலும் புளூரைடு இருந்தது.
அட்டவணை 4: தாவர மாதிரிகளின் சாம்பலில் புளூரைடு
தாவரங்கள் | கோடைக்காலத்தில், பிபிஎம் | மழைக்குப்பிறகு, பிபிஎம் |
பாதாம் மரம் | 187 | 90.33 |
முருங்கை | 40.27 | 100.61 |
புங்கம் | 97.58 | 197.58 |
பூவரசு | 155 | 200.5 |
அதேபோல தாவர மாதிரிகளின் சாம்பலில் புளூரைடு இருப்பானது பாதாம் மரத்தில் கோடையில் அதிகமாகவும், மழைக்குப்பிறகு குறைவாகவும் இருந்தது (அட்டவணை 4). முன்பு கூறியதுபோல இது இயல்பானதுதான். ஆனால் இதற்கு மாறாக முருங்கையில், புங்கமரத்தில், பூவரசு மரத்தில் குறைவாகவும் மழைக்குப்பிறகு அதிகமாகவும் காணப்பட்டது. இதற்குக் காரணம், இம்மரங்களின் கால்சியம் தாது அதிகமிருப்பதால் அத்துடன் புளூரைடு இறுகபற்றிக் கொள்கிறது. கால்சியம் புளூரைடாக மாறி தாவரத்திசுக்களில் உறுதியாகப்படிந்து விடுகிறது.
டென்டல் புளூரோசிஸ் எனும் பற்களின் பாதிப்பைப் பொறுத்தவரையில், சற்றே பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 62.2 %, பெண்க ள் 61.4 %, அதிதீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 37.8 %, பெண்கள் 39.6%. மேலும் 7 – 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். பொதுமக்களில், குறிப்பாக இளம்பிராயத்தவரின் இரத்தம், சிறுநீர் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டன.
புளூரைடு இருப்பானது சிறுநீரில் 1 – 24 பிபிஎம் காணப்பட்டது. ஆண்களில் 40%, பெண்களில் 35% புளூரைடை 6 பிபிஎம் வரை சிறுநீர் மூலம் வெளியேற்றினர். இதில் பெண்களுக்கு குறைவாக வெளியேறியதற்கு காரணம் அவர்களுக்குக் கழிவறை வசதியின்மையாய் இருந்தது. பொதுக்கழிப்பிடத்தையே நம்பி இருந்ததால் பெண்கள் சிறுநீர் கழிக்கும் விகிதம் குறைவாகிவிட உடலிலுள்ள புளூரைடு வெளியேற்றமும் குறைவுற்றிருந்தது. எனவே பொதுவில் புளூரோசிஸ் பாதிப்பில் புள்ளியியல் அடிப்படையில் ஆண்களைவிட பெண்கள் சற்று அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இரத்தத்தில் அயனி புளூரைடானது சிறுவர்களின் மத்தியில் 4.64 – 19.04 மைமோ / லி ஆக இருந்தது. பெரியவர்களில் 7.02 – 19.09 ஆகவும், மொத்த புளூரைடானது 21.42 – 55 மைமோ / லி ஆகவும் இருந்தது.
மேலும் இரத்தத்தில் கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளின் செயலியக்கம் பற்றிய நொதிகளின், இரத்த அணுக்களின் ஆய்வில், கல்லீரல் டிரான்ஸமைனேஸ் நொதிகளான ஏஎஸ்டி, ஏஎல்டி, ஏஎல்பி ஆகியவை கூடுதலாகவும், ஹீமோகுளோபின், மொத்த இரத்தப்புரதம் குறைவாகவும் காணப்பட்டன. இவை ஒருபுறம் புளூரைடின் நச்சுத்தன்மையை உறுதிசெய்ததோடு, உடற்கூறு பாதிப்பானது குறை புரதம், இரும்புச்சத்துக் குறைபாடு, தாதுக்களின் குறைபாடும் பாதிப்பை மேலும் கூட்டி இருப்பதைத் தெளிவாகக் காட்டின.
மரபணுவில் புளூரைடின் தாக்கத்தை அறிய பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வாழ்ந்துவந்த ஆண் பெண்களின் இரத்த அணுக்களை கல்பாக்கம் அணுமின் நிலைய மரபணுத்துறையின் உதவியுடன் ஆராய்ந்தோம். யுடிஎஸ் எனும் ‘அன்ஷெட்யூல்டு டிஎன்ஏ சின்தெசிஸ்’ எனும் முறையில் ஆய்வு நடத்தினோம். பொதுவாக நமது மரபணுவில் அகம் புற தாக்குதலால், வேதிப்பொருள், கதிரியக்கம், மரபணு மறுஉருவாக்கம் போன்ற செயல்பாடுகளால், சில மரபணு பிறழ்வுகள் நிகழும். எப்படி ஒரு புறக்காயம் மெல்ல மெல்ல உடலின் உயிர்வேதி வினைகளால் ஆறி குணமாகிறதோ அதேபோல மரபணுவில் உண்டாகும் பழுதுகள் அப்படி சீர் செய்யப்படும். அப்படி சீர் செய்ய உடலின் அதே மரபணுக்களில் சில தகவுகள் காணப்படும். அத்தகவுகளே பாதிக்கப்பட்டால் மரபணு பிறழ்வு ஏற்பட்டு புற்றுநோய் போன்ற பிற விளைவுகள் உண்டாகலாம். இந்த யுடிஎஸ் ஆராய்ச்சியில் அதிக, நீடித்த புளோரைடு பாதிப்பால் மரபணுக்களின் சீர் செய்திறன் குறைவுபட்டிருப்பது உறுதியானது.
முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கை சமர்ப்பித்தாகிவிட்டது. ஒரு வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாய் மீண்டும் பணியிலமர வேண்டியதாயிற்று. புளூரைட் சம்பந்தமாக ஆய்வுகளை அங்கே தொடர முடிந்தது. மண்ணிலிருக்கும் புளூரைடை சில தாவரங்கள் உறிஞ்சிக்கொள்ளாததால் அது எப்படி நிகழ்கிறது என்று ஆராய சில தாவர வகைகளைக் கண்ணாடிக்கூண்டுக்குள் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சில களைச்செடிகள் புளூரைடைத் தடுத்தன என்பதும் அறியமுடிந்தது.
சென்னை அரசு பொதுமருத்துவமனை சென்று எலும்பியல் துறை மருத்துவர்களிடம் அவ்வூர் புளூரைட் பிரச்சினை பற்றி விவாதித்ததில் மிக ஆர்வம் காட்டினர். வாரமொருமுறை பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து சிகிச்சையளிக்க ஒப்புக்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புளூரைடு உடலில் சேரா வண்ணம் தவிர்க்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் பணியாற்றிய ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் பெரிய சுவரொட்டி வெளியிட்டோம். அதில் நூறு பிரதிகளை ஊர்த்தலைவரின் உதவியுடன் மக்களுக்கு விநியோகித்து விழிப்புணர்வுக்காக வித்திடப்பட்டது.
மேலும், அப்போது நல்கொண்டா நுட்பம் எனும் அலுமினியம் கொண்ட படிகம், குளோரின் கொண்டு குடிநீரிலுள்ள புளோரைடு பிரிக்கப்பட்டு வடிகட்டும் முறை பின்பற்றப்பட்டது. ஆந்திரத்தின் நல்கொண்டா எனும் பகுதியில் மிக அதிக புளூரோசிஸ் பாதிப்பு இருந்தது. ஆனால் அதிலும் அலுமினியம் இருப்பதால் அதுவும் பாதுகாப்பான நுட்பமாக இருக்கவில்லை. ஒரு மாசுக்கு இன்னொரு மாசு தீர்வாகாது. எனவே தமிழ்ச்சங்கப் பாடலில் தேற்றான்கொட்டை நீரைச் சுத்திகரிக்குமென ஒரு தகவல் இருந்ததன் அடிப்படையில் அவ்விதையையும் முருங்கை விதையையும் பயன்படுத்தி புளோரைடை வெளியேற்ற முயன்றோம். முருங்கை விதை 25% புளோரைடை அகற்றியது அல்லது அதிலுள்ள கால்சியம் புளூரைடுடன் ஒட்டிக்கொண்டது எனலாம். ஏற்கெனவே முருங்கை மரம் புளோரைடை தன்னுள் தேக்கிக்கொள்கிறது என்பதை கண்டறிந்தால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வு முடிவை சர்வதேச புளோரைடு கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அக்குடிநீர் பருக உகந்ததாக இல்லை.
அப்போது அங்கிருந்த எலும்பு நிபுணரான சீனிவாசன் என்பவருடன் பேசி அவ்வூர் மக்களுக்கென புளூரைட் சிறப்புச் சிகிச்சை அளிக்கவென தனி குழுவை அமைக்க உதவமுடிந்தது. மருத்துவ அடிப்படையில் வைட்டமின் டி, புரத ஊட்டம் அளிக்கப்பட்டால் புளூரைடு பாதிப்பை ஓரளவுக்குத் தடுக்கலாம். வாராவாரம் சனிக்கிழமை பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்று சிகிச்சைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. சூப்பர் பாஸ்பேட்டில் புளூரைட் தங்கி இருப்பதால் புளூரோசிஸ் உள்ள இடங்களில் அதற்குப் பதிலாக கால்சியம் கலந்த சூப்பர் பாஸ்பேட் உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டது. புளூரோசிஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேலும் பல பாதுகாப்பு முறைகள் சிபாரிசு செய்யப்பட்டன.
1) வசதியான கழிப்பறைகள் அரசு கட்டித்தருவது 2) மழைநீர் சேகரிப்பு மூலம் உள்ளூர் குடிநீரை தவிர்ப்பது 3) நிறைய ஊருணிகளை அமைத்து நிலத்தடி நீரை சுத்தமாக்குவது 4) நில மேற்புற நீரையன்றி ஆழ்துளை நீரைப் பயன்படுத்துவது 5) புளூரோசிஸ் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள், கீரைகளை அவர்கள் உட்கொள்ளாதவாறு தவிர்க்கவும் கூறப்பட்டது. 6) அங்கு கிடைக்கும் விறகுகளைத் தவிர்ப்பது அல்லது புகையில்லா அடுப்புக்கொண்டு பயன்படுத்த வழிவகுக்கப்பட்டது.
அதற்கும் பிறகு, அப்பிரச்சினையை ஐநா சபையின் அங்கமான உலக நீதிமன்றத்திற்கு எடுத்துப்போகாத் திட்டமிடப்பட்டது. நெதர்லாந்திலுள்ள ஹேக் நகரத்தில் மன்றம் அமைந்திருந்தது. சுவிட்சர்லாந்தில் பாசல் நகரத்தில் நிகழ்ந்த ஒரு உலகளாவிய தொழிற்சாலைகளின் அபாயகரமான திடக்கழிவுகள் சம்பந்தமான கருத்தரங்கில் பயிற்சிப் பட்டறையிலும் கலந்துகொண்டு, எண்ணூர் சுற்றுச்சூழல் கேடு, அதில் பாதிக்கப்பட்ட மக்களின் இரத்தம், சிறுநீர் சார்ந்த உயிர்வேதி மாற்றத் தகவல்கள், தரவுகள், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடத்திய சில மரபணு மூலக்கூறுகளில் ஏற்படும் பாதக விளைவுகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஆகிய முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்மூலம் சர்வதேச ஆதரவும் நீதியும் எண்ணூர் மக்களுக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இறுதியில் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இவை உள்ளூர் சட்ட விதிமுறைகட்கு உட்பட்டவை, பொதுவாகவன்றி குறிப்பிட்டதொரு பகுதியில் நிகழ்ந்தவை என்றும் மேலும் இப்படி எல்லா தொழிற்சாலைகளையும் மூடுவது தீர்வாகாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
புளூரோசிஸ் ஆராய்ச்சியில் மேலுமொரு விந்தை அடங்கியுள்ளது. இத்தனை பேர் புளூரைடால் பாதிக்கப்பட்டிருந்தனர் எனக் கண்டறிந்தாலும் அப்பகுதியிலேயே சிறுபிராயமுதல் வாழ்ந்துவரும் சுமார் 10 சதவிகிதத்தினர் எந்த பாதிப்புமற்று திடகாத்திரமாக இருந்தனர். அவர்களின் இரத்தத்தில், சிறுநீரில் புளூரைடு உள்ளது. ஆனால் பல்லில் கறையில்லை. எந்த பாதிப்புமில்லை. அதன் ஆதாரம் அவர்களின் மரபணுவில் இருக்கலாம். தற்போது சமூக அறிவியல் ஆராய்ச்சி திட்டத்தின் (இம்ப்ரஸ், ஐசிஎஸ்எஸ்ஆர், 2019-2021) மூலம் மீண்டும் தமிழகத்தில் புளூரோசிஸ் பற்றியும் அதற்கான விடையைத் தேடியும் போய்க்கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு அத்திட்டம் சம்பந்தமாக எண்ணூரின் தற்போதைய நிலமையைக்காணச் சென்றோம். நல்வாய்ப்பாக 1994 -ல் நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்ற மூன்று சந்தித்தோம். அங்கிருந்த குழந்தைகளை பரிசோதித்தோம். யாருக்கும் புளூரோசிஸ் காணப்படவில்லை. ஊர்களே மாறிப்போய் இருந்தன. குடிசைகள் மாறி கான்கிரீட்களாக காணப்பட்டன. அவ்விரு தொழிற்சாலைகளின் புகைப்போக்கி இன்னும் உயர்ந்திருந்தது. திடக்கழிவுகள் கொல்லைப்புறத்தில் காட்டப்படவில்லை. முன்னேற்றம் காணப்பட்டதால் மகிழ்ச்சி கிடைத்தது. அந்நாளைய படங்களைக் கீழே காணலாம் (படம் 3).
அறிவியல் என்பதே விந்தையும் அதை அறியும் முயற்சியும்தானே. அதுதானே அறிவியலாளர்களின் சாதிப்பும் பெருமிதமும்.
படம் 3: ஆய்வுக்களப் படங்கள்
Open Ground with Industries Behind | Industries’ Backyard with Solid Waste Dump |
Resident Hutments behind the Industry | Map of Kathivakkam |
வி அமலன் ஸ்டேன்லி
இலயோலா கல்லூரியில் பிஎஸ்சி உயிரியலில் (1986) தங்கப்பதக்கம். தரமணி ஐபிஎம்எஸ்ஸில் சுற்றுச்சூழல் நச்சுயியல் (1988). பிஎச்டி ஆராய்ச்சி 1993 -1997 ஆம் ஆண்டுவரை ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 1998-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் அளிக்கப்பட்டது. முப்பதிற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்பீடுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. பதினான்கு புத்தகங்களும் நச்சுயியல் ஆய்வக ஆராய்ச்சி, தொழிலக மூலிகை மருந்துகள் தயாரிப்பு பற்றிய நூல் அத்தியாயங்கள் உள்ளன. அத்துமீறல்’ எனும் ஆய்வக சுண்டெலி சார்ந்ததொரு அறிவியல் புனைவு நூல் வெளிவந்துள்ளது. கவிதை, கட்டுரை, நாவல், ஆராய்ச்சி, தியானமென பயணம். புதிய மருந்து ஆராய்ச்சி, மருந்துகள், பூச்சிக்கொல்லிகள், மருத்துவக் கருவிகள், தொழிலாக இரசாயனங்கள் ஆகிவற்றின் பாதுகாப்பு, திறன் பற்றிய ஆராய்ச்சியில் குறிப்பாக நச்சுயியல் ஆய்வு, ஆய்வகங்களுக்கான சர்வதேச நல்லாய்வு முறைகள் குறிப்பாக ஓஇசிடி தரநிர்ணயங்களில் நிபுணத்துவம். தற்போது நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆலோசகராகப் பணி.
Sir, congratulations for your great effort on this issue. I admire your work. And may I pray to God for give a full support to your further movement and
Best wishes to you and your team.
And may our God , please save the ennore people