ஆய்வுத்தடம்: தமிழ் நாவல்களில் – தற்கொலை (உளப்பகுப்பாய்வு நோக்கு) – முனைவர் சு.கணேஷ்

 

(மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2005 முதல் 2008 வரை முழுநேர முனைவர்ப் பட்ட ஆய்வாளராக ஒப்பிலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் செ.சாரதாம்பாள் அவர்களின் நெறியாளுகையின் செய்யப்பட்ட ஆய்வு. 2010 ஆண்டு ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டு, 2011ஆம் ஆண்டில் பொதுவாய்மொழித் தேர்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.)

தமிழ் நாவல்களில் – தற்கொலை

உளப்பகுப்பாய்வு நோக்கு

தற்கொலை (Suicide) என்பது உலகின் பெரும்பாலான நாடுகளில் தற்போது பெரும் கவலையளிக்கும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தற்கொலைகளின் விகிதம் ஆண்டுதோறும் அதிகரிப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தற்கொலை என்பது பொதுவாகத் தனிமனிதப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு மனிதன் தன்னுடைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்குச் சாவை நாடுவதில் அவன் சார்ந்த சமூகத்திற்கும் பெரும்பங்கு உண்டு. அதாவது தற்கொலை என்பது தனிமனித உளவியல் பிரச்சினை மட்டுமன்று; அது சமூகப் பிரச்சினை.

Freud and penis envy – a failure of courage?
Sigmund Freud | The Psychologist

உலகம் முழுவதும் தற்கொலை குறித்த ஆய்வுகள் தொடர்நது நடைபெற்றுள்ளன. பெரும்பாலும் உளவியல், மருத்துவவியல் மற்றும் சமூகவியல் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுப் பல்வேறு உண்மைகள் கண்டறியப்பட்டு வந்துள்ளன. உளவியல் துறையில் தற்கொலை குறித்து தனிக் கவனத்துடன் ஆய்ந்த அறிஞர்களுள் சிக்மன்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud) குறிப்பிடத்தக்கவர். தன்னுடைய உளப்பகுப்பாய்வு (Psychoanalysis) எனும் உளவியற் கோட்பாட்டில் சாவை நாடும் மனநிலைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார் ஃப்ராய்ட். சாவுணர்ச்சி (Death instinct) என்பதை மனிதனுடைய நனவிலி மனத்தில் அடங்கியிருக்கும் அடிப்படை உணர்ச்சி என்று அவர் குறிப்பிடுகிறார். மனிதன் சாவை நாடுவதில் இந்த உணர்ச்சியின் பங்கு அதிகமிருப்பதாக அவர் கருதுகிறார்.

சமூகவியல் அடிப்படையில் தற்கொலை குறித்த ஆய்வினை நிகழ்த்தியவர்களில் எமிலி துர்க்கெய்ம் (Emile Durkheim) எனும் சமூகவியல் அறிஞர் குறிப்பிடத்தக்கவர். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே பரந்த அளவில் தற்கொலை குறித்த தகவல்களைச் சேகரித்து மிகப்பெரும் ஆய்வை நிகழ்த்தினார். அந்த வகையில் அவர் எழுதிய ‘தற்கொலை  ஒரு சமூகவியல் ஆய்வு’ (Suicide – A Sociological study) எனும் நூல் மிகக் குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.

சமயங்கள் அனைத்துமே பொதுவாக தற்கொலை செய்து கொள்வதை எதிர்த்தே வந்துள்ளன. ஆனாலும் சமய இலக்கியங்களில் இறைப்பற்று சார்ந்த சாவு விழைவு பரவலாக இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. இலக்கியப் படைப்புகளில் சாவு மற்றும் தற்கொலை குறித்த சிந்தனைகளை இருத்தலியம் (Existentialism) பெரிதும் முன்வைத்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் படைப்புகளில் பெரும் ஆதிக்கம் செலுத்திய தத்துவமான இருத்தலியம் சாவையே மையமாகக் கொள்கிறது. சாவு குறித்தும் தற்கொலை குறித்தும் படைப்புகளில் விரிவாகச் சிந்திப்பதற்கான தாக்கத்தை இருத்தலியம் வழங்கியது.

The Psyscholinguistic Semiotics and Metanormative Ethics of ...
Existentialism

தமிழ்ச் சூழலில் தற்கொலை குறித்த ஆய்வுகள் பெருமளவில் நிகழ்த்தப்படவில்லை. தமிழ் இலக்கியங்களில் பரவலாகத் தென்படும் சாவு பற்றிய சிந்தனைகள் குறித்த ஆய்வு இன்னும் வளர வேண்டியுள்ளது. அதற்கான ஒரு பங்கீடாக தமிழ் நாவல்களில் இடம்பெற்றுள்ள தற்கொலை நிகழ்வுகள் குறித்த இந்த ஆய்வு அமைகிறது.

ஆய்வின் நோக்கம்:

சாவு என்பது தமிழ்ச்சூழலில் எதிர்மறையான கருத்தமைவாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அது ஒவ்வொரு மனிதனின் வாழ்வோடும் இணைந்த ஒன்றாகவே உள்ளது. எனவே தமிழ் இலக்கியங்களில் சாவு சார்ந்த நிகழ்வுகள் புறக்கணிக்கப்படவில்லை. ஆனால் சாவு குறித்த விவரணைகள் பொதுவாகத் தவிர்க்கப்பட்டே வந்துள்ளன. அதாவது படைப்புகளில் சாவு குறித்த சிந்தனைகள் அதிகம் இடம்பெறுவது அமங்கலமானதாகவும் எதிர்மறையானதாகவும் கருதப்பட்டு வந்தது. இதனால்தான் சாவு, கொலை, தற்கொலை போன்றவை இலக்கியங்களில் வெறும் சம்பவங்களாக மட்டுமே அதிகம் இடம்பெற்றுள்ளன. அவை பற்றிய விரிவான சித்திரிப்புகள் இல்லை. படைப்புகளில் இடம்பெறும் சாவு குறித்த ஆய்வுளும் இங்கு பெரிய அளவில் நிகழ்த்தப்படவில்லை. அந்த வகையில்  தற்கொலை பற்றி விரிவான ஒரு ஆய்வை மேற்கொள்ளும் நோக்குடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்மறைச் சிந்தனைகளாகக் கருதப்படும் சாவு, தற்கொலை, இருத்தலியம் போன்றவை குறித்த ஆய்வுகள் இன்னும் அதிகளவில் நிகழ்த்தப்படுவதற்கு ஒரு தூண்டுகோலாக இந்த ஆய்வேடு அமையக்கூடும்.

ஆய்வுத் தலைப்பு:

இந்த ஆய்வேட்டில் தற்கொலை பற்றி ஆராய்வதற்கான களமாகத் தமிழ் நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாவல்களில் இடம்பெறும் தற்கொலை நிகழ்வுகளை ஃப்ராய்ட் தோற்றுவித்த உளப்பகுப்பாய்வுக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆராய்வதாக இந்த ஆய்வேடு அமைகிறது. எனவே ‘தமிழ் நாவல்களில் தற்கொலை: உளப்பகுப்பாய்வு நோக்கு’ எனும் தலைப்பில் இந்த ஆய்வேடு அமைந்துள்ளது.

ஆய்வின் பயன்கள்:

தமிழ் ஆய்வுலகில் பொதுவாக தவிர்க்கப்பட்டு வந்துள்ள தற்கொலை குறித்த ஆய்வாக இது அமைந்துள்ளது. தனிமனித மற்றும் சமூகச் சிக்கலான தற்கொலை குறித்தும் சாவு குறித்தும் இன்னும் பல விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கான ஒரு தூண்டுகோலாக இந்த ஆய்வு அமையக்கூடும். அப்படி நிகழ்த்தப்பட்டால் அதுவே இந்த ஆய்வேட்டின் பயனாக இருக்கும்.

tharkolai seithu kolvathan arikurikal: இந்த ...

ஆய்வின் எல்லை

தமிழ் நாவல்களைக் ஆய்வுக்களமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஆய்வின் கால எல்லையாக 1950ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டு வரையிலான ஐம்பது ஆண்டுகள் அமைகிறது. இக் காலகட்டத்தில் வெளியான பல நூறு நாவல்களிலிருந்து தற்கொலைக்கு முக்கியத்துவம் உள்ள 27 நாவல்கள் மட்டும் இந்த ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஆய்வு அணுகுமுறை:

சாவுணர்ச்சியை அடிப்படை உணர்ச்சிகளுள் ஒன்றாகக் கொண்டு மனிதனுடைய உளச் செயல்பாடுகளையும் நடத்தைகளையும் விளக்கும் உளப்பகுப்பாய்வு இந்த ஆய்வேட்டின் முதன்மையான அணுகு முறையாக அமைகிறது. தற்கொலை செய்து கொள்வதில் தனிமனித உளவியல் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பொதுவான உளவியல் அணுகு முறையும் இந்த ஆய்வேட்டில் மேற்கொள்ளப்படுகிறது. அதே சமயம் தற்கொலை செய்து கொள்வதில் சமூகத்தின் பங்கினையும் முற்றாகத் தவிர்த்துவிட முடியாது. அந்த வகையில் சமூகவியல் அணுகுமுறையும் இந்த ஆய்வேட்டில் இடம்பெறுகிறது.

ஆய்வின் பகுப்பு:

அறிமுகம் மற்றும் விவாதங்கள் நீங்கலாக இந்த ஆய்வேடு ஏழு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

‘உளப்பகுப்பாய்வும் சாவுணர்ச்சியும்’ எனும் முதல் இயலில் சிக்மன்ட் ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வுக் கோட்பாடுகளும் அவை உருவான பின்னணியும் தரப்பட்டுள்ளன. அத்துடன் உளப்பகுப்பாய்வில் நனவிலி மனத்தின் அடிப்படை உணர்ச்சிகளாகக் கொள்ளப்படும் இரண்டு உள்ளுணர்ச்சிகளில் தற்கொலை நோக்கி மனித மனத்தைச் செலுத்தும் சாவுணர்ச்சிக்கு முதன்மை தரப்பட்டு அதற்கான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஃப்ராய்ட் மட்டுமின்றி, ஆல்பிரட் அட்லர், யூங் போன்றோரின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகளும் தரப்பட்டுள்ளன.

‘தற்கொலை: விளக்கங்களும் வரையறைகளும்’ எனும் இரண்டாவது இயலில் தற்கொலை குறித்து சமயவியல், தத்துவவியல், சமூகவியல், உளவியல், மருத்துவவியல் போன்ற துறை சார்ந்த விளக்கங்கங் தரப்பட்டுள்ளன. தற்கொலை குறித்த கீழை, மேலை நாடுகளின் பார்வைகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பழங்காலம் தொட்டு இருந்து வரும் தற்கொலை சார்ந்த நிகழ்வுகளான வடக்கிருத்தல், உடன்கட்டை ஏறுதல், வழிபாட்டிடம் சார்ந்த தற்கொலைகள் போன்றவை குறித்த உளவியல் மற்றும் சமூகவியல் அடிப்படையிலான விளக்கங்களும் இந்த இயலில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் தற்கொலை குறித்த சில புள்ளி விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

‘தமிழ் நாவல்களும் சாவுணர்ச்சியும்’ எனும் மூன்றாவது இயலில் தமிழ் நாவல்களில் சாவுணர்ச்சியின் தாக்கம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. நாவல்களில் உளப்பகுப்பாய்வு ஏற்படுத்திய தாக்கம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. 1950களில் நாவல்களில் இடம்பெற்ற சாவுச் சிந்தனைகளின் பின்னணி குறித்து விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்து ஐரோப்பிய நாடுகளில் உண்டான இருத்தலியம் சாவை முதன்மைப்படுத்தியது. இது சற்று தாமதமாக 1960களுக்குப் பின்னர் இந்திய இலக்கியங்களில் தாக்கம் செலுத்தியது. குறிப்பாக நாவல்களில் இதன் தாக்கம் குறிப்பிடத் தக்கது. தமிழ் நாவல்களில் இருத்தலியம் ஏற்படுத்திய தாக்கம், அதனால் நாவல்களில் தென்பட்ட சாவுணர்ச்சியின் தீவிரம் போன்றவை குறித்தும் இந்த இயலில் ஆராயப்பட்டுள்ளது.

நாவல்களில் தற்கொலை முடிவை நாடும் மாந்தர்களின் சிக்கல்களில் முதன்மையான பங்கு வகிப்பது பாலுறவுச் சிக்கலேயாகும். இந்த ஆய்வேட்டின் நான்காம் இயல் அது குறித்தே ஆராய்கிறது. ‘பாலுறவுச் சிக்கல்களும் சாவு விழைவும்’ எனும் இந்த இயலில் நாவல்களில் இடம்பெறும் மாந்தர்களின் பாலுறவு சார்ந்த சிக்கல்கள் மணவுறவு சார்ந்த பாலுறவுச் சிக்கல்கள், மணவுறவு சாராத பாலுறவுச் சிக்கல்கள் என வகைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டுள்ளன. பாலுறவுச் சிக்கல்கள் தோன்றுவதன் பின்னணி குறித்தும் அது உச்சநிலை அடைந்து தற்கொலை வரை செல்வதற்கான காரணங்களும் உளப்பகுப்பாய்வு நோக்கில் ஆராயப்பட்டுள்ளது.

tharkolai seithu kolvathan arikurikal: இந்த ...

தற்கொலைக்கும் உளநோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக உளவியல் மருத்துவம் கூறுகிறது. ‘உளப்பாதிப்புகளும் சாவு விழைவும்’ எனும் ஐந்தாம் இயலில் உளப்பாதிப்புடைய மாந்தர்களிடம் காணப்படும் சாவுணர்ச்சியின் ஆதிக்கம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. பித்த மனநோய், தாய்க்காம மனநிலை எனப்படும் ‘எலக்ட்ரா’ மனச்சிக்கல், தாய்க்கொலை மனநிலை எனப்படும் ‘எலக்ட்ரா’ மனச்சிக்கல் போன்ற உளநிலைகள் குறித்து உளப்பகுப்பாய்வின் அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது.

மனிதன் சாவை நாடுவதற்கான பின்னணியை வெறும் தனிமனித உளவியல் பிரச்சினையாக மட்டுமே கொள்ள முடியாது. அதற்கு சமூக, பொருளாதாரக் காரணங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆய்வேட்டின் ஆறாம் இயல் இது குறித்தே ஆராய்கிறது. ‘சமூக, பொருளாதாரச் சிக்கல்களும் சாவு விழைவும்’ எனும் இந்த இயலில் நாவல் மாந்தர்கள் சாவு நோக்கி உந்தப்படுவதன் பின்னணியில் இருக்கும் மான இழப்பு போன்ற சமூகச் சிக்கல்கள் குறித்தும் தாங்க முடியாத பொருளாதார நெருக்கடிகளால் சாவு நோக்கித் தள்ளப்படும் மனநிலை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

நாவலில் இடம்பெறும் மாந்தர்களின் உளவியற் பின்னணியை மட்டும் ஆராய்வதோடு ஆய்வு நிறைவு கொள்ளாது. அவற்றை உருவாக்கும் படைப்பாளிகளின் உளவியலும் ஆராயப்பட வேண்டியது அவசியமான ஒன்று. நாவல்களில் இடம்பெறும் மாந்தர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவைத் தேர்ந்தெடுப்பதில் அந்தந்த நாவல்களின் படைப்பாளிகளுக்கும் பங்குண்டு. எனவே தற்கொலை குறித்த படைப்பாக்க உளவியலை ஏழாவது இயலான எனும் இயல் ஆராய்கிறது. ஆண், பெண் மாந்தர்களை தற்கொலை நோக்கிச் செலுத்தும் படைப்பாளியின் உளவியற் பின்னணி குறித்து கலை, இலக்கிய உளப்பகுப்பாய்வு குறித்த ஃப்ராய்டின் கோட்பாடுகளின் உதவியுடன் இந்த இயல் ஆராய்கிறது.

இறுதியாக இடம் பெறும் ‘விவாதங்கள்’ எனும் பகுதியில் ஆய்வின் மூலம் கண்டடையப்பட்ட முடிவுகளும் அவை குறித்த விவாத முன்னெடுப்புகளும் இடம்பெறுகின்றன.

இதனையடுத்து ‘துணைநூற்பட்டியல்’ எனும் பகுதியில் ஆய்வுக்குத் துணையாய் இருந்த நூல்கள், இதழ்கள், இணையத் தளங்கள் போன்றவை குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன.

இறுதியாக இடம்பெற்றுள்ள ‘பின்னிணைப்பு’ பகுதியில் ஆய்வேட்டில் இடம்பெறும் சில கலைச்சொற்கள், உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விளக்கும் படங்கள், தற்கொலை விகிதாச்சாரம் குறித்த சில வரைபடங்கள் போன்றவை தரப்பட்டுள்ளன.

ஆய்வின் முடிபுகள்:

AGRAHARAM: உடன்கட்டை ஏறுவது (சதி) தமிழர் ...

 • தமிழ்ச் சமூகத்திற்கும் தற்கொலைக்குமான உறவு குறிப்பிடத்தக்கதாகவே இருந்து வந்துள்ளது. கணவன் இறந்ததும் அவனுடைய ஈமத்தீயில் விழுந்து இறக்கும் (உடன்கட்டை ஏறுதல்) பெண்களைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. இது ஓர் உயர்ந்த அறமாகத் தமிழ்ச் சூழலில் பரவலாகப் போற்றப்படவில்லை என்றாலும், உயர்குடிப் பெண்களிடம் இந்தப் பழக்கம் இருந்துள்ளதாக அறிய முடிகிறது. குடும்பப் பொருளாதாரத்துக்கு ஆணை மட்டுமே நம்பியிருக்க வேண்டியவளாகப் பெண்கள் கருதப்பட்டதால் ஆண் இறந்ததும் பெண் வாழத் தகுதியற்றவளாகக் கருதப்பட்டாள். இதுவே கணவனுடன் இறந்துபடுவதைச் சிறந்த கற்புக்குரிய ஒழுக்கமாக வலியுறுத்தியுள்ளனர். பக்தி இலக்கியங்களில் சமயச் சடங்குகளுடன் கூடிய தற்கொலை நிகழ்வுகளைக் காணமுடிகிறது. இறையுணர்வில் திளைப்பவர்களின் பாடல்களில் சாவுணர்ச்சியின் தீவிரத்தைக் காண முடியும். கோபுரங்களிலிருந்து குதித்து உயிர் துறக்கும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளதையும் அறிய முடிகிறது.
 • தற்கொலை நிகழ்வுகள் படைப்புகளில் வெளிப்படும் பாங்கு விரிவான ஆய்வுக்குரியது. நனவிலி மனத்தில் அடங்கியிருக்கும் அடிப்படை உணர்ச்சிகளான வாழ்வுணர்ச்சிக்கும் சாவுணர்ச்சிக்கும் இடையிலான போராட்டம் படைப்புகளில் இடம்பெறும் தற்கொலை நிகழ்வுகளில் பெரும்பங்கு வகிக்கிறது. தமிழ் நாவல்களைப் பொறுத்த வரை, தொடக்கக் காலத்தில் நாவல் இங்கு அறிமுகமானபோது, அதனைப் படித்தவர்களும் படைத்தவர்களும் பெரும்பாலும் கல்வி கற்க வாய்ப்புள்ள உயர், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். இதன் தாக்கம் நாவல்களில் தென்படுவதைப் பார்க்க முடியும். இந்நாவல்களின் படைப்புக் களமாகப் பெரும்பாலும் நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கமே இருந்தது. இவர்களுக்கு வாய்க்க்ப் பெற்றிருந்த ஆங்கிலக் கல்வியின் மூலம் மேலை நாட்டு இலக்கியச் சிந்தனைப் போக்குகள் தமிழில் ஆதிக்கம் செலுத்தின. தொடக்கத்திய நாவல்கள் காப்பிய மரபுகளை உள்வாங்கியவையாக இருந்தன. அதன் பின்னர் நவீனத்துவம், இருத்தலியம், மார்க்சியம், உளப்பகுப்பாய்வு, பின்னை நவீனத்துவம் போன்றவை படைப்புகளில் தாக்கம் செலுத்தத் தொடங்கின.
பிரபல ...
எழுத்தாளர் ஜெயகாந்தன்
 • வாழ்வுணர்ச்சி எனப்படும் பாலுணர்ச்சியை முதன்மைப்படுத்துவதில் உளப்பகுப்பாய்வும், சாவுணர்ச்சியை முதன்மைப்படுத்துவதில் இருத்தலியமும் பெரும்பங்காற்றின. உலகப் போர்களால் பெரும் பாதிப்பைச் சந்தித்த ஐரோப்பிய நாடுகளில் 1950களில் இருத்தலியம் பெரிய அதிர்வுகளை உண்டாக்கியது. ஆனால் உலகப் போர்களால் நேரடியான பாதிப்புகளைச் சந்திக்காத இந்தியாவில் அதன் பாதிப்பு அவ்வளவாக இல்லை. 1970களுக்குப் பின்னரே இந்தியச் சூழலில் இருத்தலியம் போதிய கவனம் பெற்றது. இதற்குக் காரணம் விடுதலைக்குப் பின்னர் நீங்காமல் தொடர்ந்த துயரங்களால் மக்களின் மனத்தில் ஏற்பட்ட வெறுமை நிலைக்கு இணக்கமாக இருத்தலியத்தின் கூறுகள் இருந்தன. மனிதனுடைய விரக்தி, வெறுமை, அபத்தம், அன்னியமாதல், சாவு விழைவு போன்ற எதிர்மறைக் கூறுகள் வெளிப்படத் தேவையான களத்தை இருத்தலியம் தந்தது.
 • உளப்பகுப்பாய்வின் தாக்கத்துடன் நாவல்களைப் படைத்தவர்களாகத் தமிழில் தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், மு.வரதராசன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, பாலகுமாரன், வாஸந்தி, போன்றவர்களைக் குறிப்பிடலாம். ஈடிபஸ் எனப்படும் தாய்க்காம மனச்சிக்கல், எலக்ட்ரா எனப்படும் தந்தைக்காம மனச்சிக்கல், போன்றவை இவர்களின் நாவல்களில் பேசப்பட்டன. இதற்கு எதிர்நிலையில் இருத்தலியத்தின் தாக்கத்தால் வாழ்வின் அர்த்தமின்மை, அபத்தம், சாவு போன்றவையும் பேசப்பட்டன. இவ்வாறானா சாயலுடன் நாவல்களைப் படைத்தவர்களாக க.நா.சுப்ரமணியம், நகுலன், சம்பத், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி போன்வர்களைச் சொல்லலாம்.
 10 | ஜி.நாகராஜன் 10 - hindutamil.in
ஜி.நாகராஜன்
 • தமிழ் நாவல்களில் தற்கொல முடிவை நாடும் மாந்தர்களின் மனநிலை விரிவான ஆழமான ஆய்வுக்குரியது. இவர்கள் சாவைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களில் முதன்மையானதாகப் பாலுறவுச் சிக்கல்கள் விளங்குகின்றன. மனிதனுடைய நனவிலி மனத்தில் அடங்கியிருந்து அவனுடைய செயல்பாடுகள் அனைத்திலும் பெரும் ஆதிக்கம் செலுத்தும் பாலுறவு உந்தல்கள் (இட்) தன்னுடைய வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்ள தொடர்ந்து முயற்சித்தபடியே இருக்கின்றன. ஆனால் அந்த வேட்கை உண்டான கணத்திலேயே தீர்க்கப்பட்டுவிடாமல் சில கட்டுப்பாடுகளை விதித்து சூப்பர் ஈகோ தடுக்க முயல்கிறது. இந்த இரண்டு நிலைகளையும் சமன்படுத்தும் முயற்சியில் ஈகோ ஈடுபடுகிறது. இதில் உண்டாகும் முரண்களே பாலுறவுச் சிக்கல்களாக உருவெடுக்கின்றன.
 • மணவுறவு மீறிய பாலுறவுச் சிக்கல்களின் பின்னணியில் இருப்பது பெரும்பாலும் பாலுறவு வேட்கைத் தடையே. குடும்பம், திருமணம் போன்ற சமூக அமைப்புகள் நனவிலி மனத்தின் பாலுறவு வேட்கைகளைத் தன்னிச்சையாக நிறைவெற்றம் கொள்ள விடாமல் தடுக்கின்றன. இந்த வேட்கைகளை ஏதேனும் ஒருவர் பால் மட்டுமே செலுத்தும்படி அவை சமூகக் கருத்தியல்கள் மூலம் கட்டாயப்படுத்துகின்றன. ஆனால் இந்த அமைப்புகளுக்குள் இருந்து பாலுறவு வேட்கைகள் நிறைவேற்றம் கொள்ள இயலாமற் போகும் சூழ்நிலையில் மணவுறவு மீறிய பாலுறவு (Extra marital sex) உண்டாவது இயல்பாகிறது. ஆனால் இவ்வாறான செயல்பாடுகள் சமூகத்தால் குற்றமாகவும், பாவமாகவும் கருதப்பட்டு ஒடுக்கப்படும்போது அங்கு பாலுறவுச் சிக்கல்கள் தோன்றுகின்றன.

தோப்பில் முகமது மீரான்: தடையை ...

 • நாவல்களில் மணவுறவு மீறிய பாலுறவுச் சிக்கல்களினால் பாதி்கப்பட்டுச் சாவை நாடும் மாந்தர்களாக கெளசலை (வேள்வித்தீ), வள்ளி (அகல்விளக்கு), தங்கம்மாள் (மோகமுள்), ஆயிஷா (ஒரு கடலோர கிராமத்தின் கதை), பழனிவேலு (உயர்த்தேன்), ரஞ்சிதம் (சிறகுகள் முளைத்து), காஞ்சனை (மலர்விழி) ஆகியோர் விளங்குகின்றனர். இவர்களில் வள்ளியும் கெளசலையும் வள்ளியும் மணவுறவு மீறிய பாலுறவில் ஈடுபடவில்லை. ஆனால் அவர்களின் கணவர்கள் அவ்வாறான பாலுறவுச் செயல்பாடுகளில் ஈடுபடுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்கள் சாவை நாடுகிறார்கள்.
 • தி.ஜானகிராமன் நாவல்களில் வரும் பழனிவேலு (உயிர்த்தேன்), ரங்கன் (அன்பே ஆரமுதே) ஆகிய இருவரும் தாழ்வு மனச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள். இருவருமே பெண்களின் முன்னால் ஆளுமை பலவீனம் கொண்டவர்களாக உள்ளனர். இதனால் ஏற்படும் உள் ஒடுங்கல் மனநிலையில் தவிக்கின்றனர். இந்நிலை உச்சம் பெறும் போது சாவை நாடுகிறார்கள்.
 • மணவுறவு சாராத பாலுறவுச் சிக்கல்களினால் பாதிப்படைந்து சாவை நாடும் மாந்தர்களாக தினகரன் (இடைவெளி), ரங்கன் (அன்பே ஆரமுதே), அகல்யா (பாலும் பாவையும்), செங்கமலம் (கண் திறக்குமா?), மோகினி (பொன் விலங்கு), தாமோதரன் (வெந்து தணிந்த காடுகள்), முத்தாயாள் (அழியாக்கோலம்), டானியல் (ஆனந்தாயி), தனம் (ஆனந்தாயி), மேரி தங்கம் (சத்திய வெள்ளம்) ஆகியோர் படைக்கப்பட்டுள்ளனர்.

No photo description available.

 • தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கும் உள நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக உளவியல் மருத்துவம் கூறுகிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்ய முயற்சிப்பது அல்லது தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதற்குக் காரணம் அவர்களின் நனவிலி மனத்தில் அடங்கியுள்ள சாவுணர்ச்சியே ஆகும். இவர்களின் மனப்பாதிப்புகளை அவர்களின் நோய்க்கூறுகளைக் கொண்டுதான் அளவிட முடியும். அதாவது இவர்களின் உளப்பாதிப்பில் சாவுணர்ச்சியின் தாக்கம் பெற்ற நோய்க்கூறுகள் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ அமையலாம். த்யாகு (ஒரு மனிதனின் கதை), ஸ்வர்ணா (தீவுகள்), யாமினி (இரவுச் சுடர்), தினகரன் (இடைவெளி) போன்ற மாந்தர்கள் உளப்பாதிப்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

Read Oru Manithanin Kathai Online by Sivasankari | Books

 • தற்கொலை செய்து கொள்வதன் பின்னணியில் சமுக, பொருளாதாரக் காரணிகளின் பங்கீட்டினைப் புறந்தள்ளிவிட முடியாது. அதாவது, சமூக மதிப்பீடுகள், பொருளாதார நெருக்கடிகள் போன்றவையும் தற்கொலைக்கான மனநிலையைத் தூண்டும் காரணிகளாக அமைகின்றன. சமூகத்தின் முக்கிய அங்கமான குடும்ப அமைப்பின் இருத்தல் என்பது பொருளாதாரத் தன்னிறைவு மற்றும் பாலுறவு ஒழுக்கம் ஆகிய இரண்டு கூறுகளில்தான் அடங்கியுள்ளது. இவற்றில் ஏற்படும் சிக்கல்கள் குடும்ப அமைப்பைச் சிதைவுறச் செய்பவை. இவற்றைப் பேண வேணடிய பொறுப்பு சமுகத்தின் அங்கத்தினர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே பிரித்துத் தரப்பட்டுள்ளன. பொருளாதாரத் தன்னிறைவுப் பொறுப்பைப் பேண வேண்டியது ஆணின் கடமையாகவும், பாலுறவு ஒழுக்கப் பொறுப்பைப் பேண வேண்டியது பெண்ணின் கடமையாகவும் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடமைகளிலிருந்து தவறுபவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் என்பதான சமூகக் கருத்தியல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கைலாச முதலியார் (பஞ்சும் பசியும்), திருமுர்த்தி (பொன்மலர்), கோபாலன் (உள்ளக்கடல்) ஆகியோர் பொருளாதாரச் சிக்கல்களினால் தற்கொலையை நாடுபவர்களாக உள்ளனர்.

File:பஞ்சும் பசியும்-புதினம்.pdf - Wikimedia ...

 • படைப்பாக்கம் என்பது விருப்ப நிறைவேற்றம் எனும் உளச்செயல்பாட்டின் வெளிப்பாடு என்பதும் ஃப்ராய்ட் குறிய முக்கியக் கருத்தமைவாகும். அதன்படி நனவிலி மனத்தில் அடங்கியிருக்கும் விருப்பங்கள் நடைமுறை வாழ்வில் நிறைவேற வழியில்லாமற் போகும் நிலையில் கற்பனைகளின் வழியாகப் படைப்புகளில் நிறைவேற்றம் கொள்கின்றன. இதனால் நனவிலி மன விருப்பங்கள் ஓரளவுக்கு திருப்தியடைகின்றன. படைப்பாளியின் இந்த நனவிலி விருப்பங்கள் படைப்புகளில் எவ்வாறு நிறைவேற்றம் கொள்கின்றன என்பதை உளப்பகுப்பாய்வின் வழியாக ஆராய முடியும்.
 • பெண் கதை மாந்தர்களைப் படைப்பதில் படைப்பாளியின் உளவியல் பெரும்பாலும் ஆணாதிக்கச் சமுகம் உருவாக்கிய கருத்தியல்களிலிருந்து விலகாததாகவே உள்ளது. பெண் மாந்தர்களுக்குச் சாவை முடிவாகத் தருவதில் படைப்பாளியின் மரபுவழிப்பட்ட உளவியல் வெளிப்படுகிறது. செங்கமலம் (கண் திறக்குமா?), புவனா (எங்கே போகிறோம்?), தங்கம்மாள் (மோகமுள்), ஸ்வர்ணா (தீவுகள்), ரஞ்சிதம் (சிறகுகள் முளைத்து), வத்சலா (மூலதனம்), லட்சுமி (ஆனந்தாயி) போன்ற பெண் மாந்தர்கள் பாலுறவு சார்ந்த சமூக அறங்களை மீறும் பாத்திரங்களாக உள்ளனர். இவர்கள் அனைவருமே தற்கொலை செய்து கொள்வதாகப் படைக்கப்பட்டுள்ளனர். அதே நேரம், மணவுறவுக்கு வெளியில் பாலுறவு கொள்ளும் பெரியண்ணன் (ஆனந்தாயி), கண்ணன் (வேள்வித்தீ) ஆகிய ஆண் மாந்தர்களுக்குத் தற்கொலை தீர்வாகத் தரப்படவில்லை. இதற்குக் காரணம் பாலுறவு சார்ந்த சமுக அறங்களை மீறாமல் பேண வேண்டிய கடமை பெண்ணுக்கு மட்டுமே உண்டு என்கிற படைப்பாளியின் நனவிலியில் உள்ள மரபுவழிப்பட்ட கருத்தியல்தான். அதே போல் பொருளாதாரத் தன்னிறைவைக் குடும்பத்திற்கு அளிக்க வேண்டிய கடமையிலிருந்து தவறும் கைலாச முதலியார் (பஞ்சும் பசியும்), திருமூர்த்தி (பொன்மலர்), கோபாலன் (உள்ளக்கடல்) போன்ற ஆண் மாந்தர்களுக்குத் தற்கொலையைத் தீர்வாக அளிக்கிறது படைப்பாளியின் நனவிலி.

ஆனந்தாயி - சிவகாமி - அடையாளம் ...

 • படைப்பாளியின் குடும்பச் சுழலும் ஆளுமையும் படைப்பு வெளிப்பாட்டில் பங்கு வகிக்கும் என்பதை தி.ஜானகிராமனின் ஆண் மாந்தர்களின் உருவாக்கத்தில் காணமுடிகிறது. பெண்களின் தாக்கம் நிறைந்த குடும்பச் சுழலில் வளர்ந்த தி.ஜானகிராமனின் நாவல்களில் வரும் பெண் மாந்தர்கள் ஆளுமை பலமிக்கவர்களாக உள்ளனர். ஆனால் ஆண் மாந்தர்கள் பலவீனமானவர்களாகப் பெண்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறவர்களாக உள்ளனர். குற்ற உணர்ச்சி, தாழ்வு மனச்சிக்கல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுச் சாவை நாடுபவர்களாக உள்ளனர். படைப்பாளியின் வாழ்வனுபவம், பொருளாதார நிலை போன்றவையும் நாவல்களின் மாந்தர்களில் வெளிப்படுகிறது. வறுமையான நிலையில் வளர்ந்த விந்தன் படைப்புகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் சாவுணர்ச்சியின் தாக்கத்துக்கு உள்ளானவர்களாகத் தென்படுகின்றனர். படைப்புக்கும் படைப்பாளியின் உடல் மற்றும் உளப்பாதிப்புக்குமான உறவுநிலை சூடாமணியின் நாவல்களில் தென்படுகிறது. உடற்குறையுடன் பிறந்த சூடாமணியின் படைப்புகளில் அவரின் மனப்பாதிப்பு தெரிகிறது. இரவுச்சுடர் நாவலில் வரும் யாமினி கருப்பாகப் பிறந்ததால் பெரும் மனப்பாதிப்புற்றுச் சாவை நாடுவதில் இந்த மனநிலை வெளிப்படுகிறது. படைப்பாளியின் சமூகச் சூழலுக்கும் படைப்புக்குமான உறவு பற்றி அறிந்துகொள்ள இந்திரா பார்த்தசாரதியின் நாவல்கள் உதவுகின்றன. வேற்றுக் கலாச்சாரச் சூழலில் வாழ்ந்த அவரின் நாவல்களில் அன்னியமாதல் மனநிலை நன்கு வெளிப்படுகிறது. அவரால் ஏற்றுக்கொள்ள முடியாத நெறி மீறல்களில் ஈடுபடும் பெண் மாந்தர்கள் கொல்லப்பட்டும், தற்கொலை செய்தும் இறந்து போவதாக அவர் படைப்பதில் அவருடைய நனவிலி மன விருப்பம் நிறைவேற்றம் கொள்கிறது.
பசு, பால், பெண் : .
தி. ஜானகிராமன்
 • நாவல்களில் இடம்பெறும் தற்கொலை நிகழ்வுகளுக்கும் நடைமுறையில் தற்கொலை குறித்த புள்ளிவிபரங்களுக்கும் இடையே சில முரண்பாடுகள் தென்படுகின்றன. இதற்குக் காரணம் நாவலாசிரியர் படைத்துக் காட்டும் படைப்புலகம் என்பது அவரது சொந்த மனவிருப்பத்தின் அடிப்படையில் உருவாவது. இது சில சமயங்களில் நடைமுறையுடன் பொருந்தாதாக அமைகிறது. சான்றாக, நாவல்களில் பெண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் நடைமுறையில் பெண்களை விட ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்வதாகப் புள்ளி விபரங்கம் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் நாவல்களில் தற்கொலைக்கு முக்கியக் காரணமாக அமையும் பாலுறவுச் சிக்கல்களில் ஆண்களை விடப் பெண்களையே சாவு நோக்கித் தள்ள வேண்டும் என்பது படைப்பாளியின் நனவிலி மன விருப்பமாக உள்ளது.
 • தற்கொலை செய்யும் முறைகளிலும் இந்த முரண்பாடுகள் தென்படுகின்றன. இந்தியாவில் தீக்குளித்துச் சாவது அதிகம் என்கின்றன ஆய்வுகள். ஆனால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாவல்களில் யாருமே தீக்குளித்துச் சாவதாகப் படைக்கப்படவில்லை. ஆண் படைப்பாளிகளின் நாவல்களில் பெண்கள் பெருமளவு நீரில் மூழ்கி இறப்பதாகப் படைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்கள் யாருமே நீரில் மூழ்கி இறப்பதாகப் படைக்கப்படவில்லை. நீச்சல் திறன் இல்லாமல் ஆண்கள் நீரில் முழ்கி இறப்பதாகப் படைக்க ஆண் படைப்பாளிகளுடைய மனம் விரும்பவில்லை. ஆனால் பெண் படைப்பாளியான சூடாமணி இரண்டு ஆண் மாந்தர்களை (சாரநாதன், கோபாலன்) நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொள்வதாகப் படைக்கிறார். அவருடைய நனவிலி மனத்தில் பெண்களைப் போல் ஆண்களும் நீரில் மூழ்கி இறப்பது இயல்பான ஒன்றாகப் பதிந்திருக்கிறது.

சுயவிபரக் குறிப்பு

Image

பெயர்:                  முனைவர் சு.கணேஷ்

பணிநிலை:       உதவிப் பேராசிரியர்

பணியிடம்:       தமிழ்த்துறை

அருள் ஆனந்தர் கல்லூரி

கருமாத்தூர், மதுரை மாவட்டம்.

கல்வித் தகுதி:   M.A., M.Phil., Ph.D., PGDJMC, Dip. In Linguistics

முகவரி:              ஜீவமித்ரா சிற்றில்

2/295, வடக்கு ஏழாவது தெரு

ராஜம்பாடி

மதுரை – 625021

அலைபேசி:      9942430077

மின்னஞ்சல்:   [email protected]

வலைப்பக்கம்: nedumpunal.blogspot.com

பணிகள்:

 • 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி
 • 40க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்
 • 1 திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூல்
 • இணையத் தளங்களில் 25க்கும் மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள்
 • 30க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் பங்கேற்று ஆய்வுத்தாள் அளிப்பு