“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் –இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.”
–1960களில் தமிழகமெங்கும் ஒலிக்கத் தொடங்கிய திரைப்பாடல் இது. மக்களின் விடுதலை, சமத்துவம் பற்றிய அக்கறை உள்ள நெஞ்சங்களில் இன்றளவும் உணர்வூட்டிக்கொண்டிருக்கிறது. அடைய வேண்டிய பொன்னுலகமாகிய பொதுவுடைமைச் சமுதாயத்தின் அடிவாரம் பொருளாதார சமத்துவமே என்ற செய்தியைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இடைக்கால வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாமல் அந்த இலக்கிற்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்டவர்கள் உலகம் முழுவதும் சோர்வில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அதே வேளையில், எல்லாருக்கும் எல்லாமும் சமமாகக் கிடைப்பது மட்டுமே சமத்துவ சமுதாயம் அல்ல. எல்லாருக்கும் எல்லா மரியாதைகளும் சமமாக உறுதியாவதே முழுமையான சமத்துவ சமுதாயம். பொருளாதாரநீதி, சமூகநீதி, பாலினநீதி என அனைத்திலும் அந்தச் சம மரியாதை நிலை பெறுவதே மெய்யான பொதுவுடைமைப் புரட்சி.
இந்தியச் சமுதாயத்தில், அந்த இலக்கை அடைவதற்கான பயணத்தில் தவிர்க்கவே முடியாத ஒரு பாதைதான் தலித் கலகம். இதை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தவர் எழுத்தாளர், ஆய்வாளர் ராஜ். கௌதமன்.
1950ல் அன்றைய முகவை (இன்று விருதுநகர்) மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் பிறந்த புஷ்பராஜ்தான் நாமறிந்த ராஜ் கௌதமன். அங்கேயே தொடக்கப் பள்ளிக் கல்வியும், மதுரையில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் பயின்றார். பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் சேர்ந்து விலங்கியல், இலக்கியம் இரண்டு துறைகளிலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். எழுத்தாளர் ஏ. மாதவையா படைப்பாக்கங்கள் குறித்த ஆய்வில் முனைவர் பட்டமும் பெற்றார்.
புதுச்சேரி அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய அவர், பிற்காலத்தில் முதுகலைப் படிப்புகளுக்கான காஞ்சி மாமுனிவர் மையத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று, 2011ல் பணிஓய்வு பெற்றார். அவரது இணையர் பேராசிரியர் பரிமளா, மகள் மருத்துவர் நிவேதா. சகோதரி பாமா தமிழ் எழுத்துலகம் அறிந்த ஒரு முதன்மைப் படைப்பாளி.
ஆய்வெழுத்து, புனைவெழுத்து இரண்டிலுமே ஈடுபட்டவர் ராஜ் கௌதமன். ‘ஒரு மாதவையா’, ‘எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம்’, ‘தலித் பண்பாடு’, ‘தலித் பார்வையில் தமிழ்ப் பயன்பாடு’, ‘ஆரம்பகால தலித் ஆர்வலர் அயோத்திதாசர் பற்றிய ஆய்வு’, ‘அறம் அதிகாரம்’, ‘தலித்திய விமர்சனக் கட்டுரைகள்’, ‘தமிழ் சமுதாயத்தில் அறமும் ஆற்றலும்’, ‘ஆகோல் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’, ‘ஆரம்பகட்ட முதலாலியமும் தமிழ் சமுதாய உருவாக்கமும்’, ‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக’, ‘பொய் – அபத்தம் – உண்மை’, ‘பெண்ணியம்: வரலாறும் கோட்பாடும்’, ‘வள்ளலாரின் ஆன்மீகப் பயணம்’ ஆகிய வரலாறும் சமூகவியலும் சார்ந்த ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். ‘கலித்தொகை பரிபாடல் – ஒரு விளிம்பு நிலை நோக்கி’, ‘புதுமைப்பித்தன் எனும் பிரம்மராட்சசன்’, ‘பதிற்றுப்பத்து ஐங்குறுநூறு’, ‘பழந்தமிழ் அகவல் பாடல்களின் பரிமாத்திரம்’, ‘சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்’ ஆகியவை அவர் எழுதிய இலக்கியம் சார்ந்த ஆய்வு நூல்கள். ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘காலச்சுமை’, ‘லண்டனில் சிலுவைராஜ்’ ஆகிய நாவல்கள் அவரது புனைவுப் படைப்புகள். பிற மொழிகளில் தான் படித்தவற்றில் அரிதானவை என்று கருதிய நூல்களான ரணஜித் குஹா, சுசி தாரு எழுதிய ‘விளிம்பு நிலை மக்களின் போராட்டங்கள்’, சுகசப்ததி எழுதிய ‘கிளிக்கதைகள் எழுபது’, எரிக் ஃபிராம் எழுதிய \அன்பு என்னும் கலை’ ஆகியவையும் ‘கதா கோஸ: சமண கதைகள்’ என்ற நூலும் அவரது மொழிபெயர்ப்புப் பங்களிப்புகள்.
தலித்தியம் தொடர்பான ஆய்வுகளில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததை இந்தப் பட்டியலிலிருந்தே புரிந்துகொள்ளலாம். குறிப்பாக 1980களில் நாடு தழுவிய அளவில் எழுந்த தலித்திய அரசியல் கோட்பாடுகளில் அவர் நெருக்கமான தொடர்புகொண்டிருந்ததைப் பல சிந்தனையாளர்கள் தெரிவிக்கிறார்கள். அப்போது ஒரு புதுவெடிப்பாகப் பல்வேறு தளங்களில் தலித்திய ஆய்வுகள் புறப்பட்டன. மார்க்சிய அடிப்படையில் இயங்கியல் பொருளியம் வரலாற்றுப் பொருளியம் என்ற தளத்திலிருந்து இயங்கினார் ராஜ் கௌதம். ஆய்வுக் கட்டுரைகளில் மார்க்சியக் கண்ணோட்டத்துடன், கூடவே ஒரு நையாண்டி கலந்த விமர்சனக் கலையைக் கையாண்டவர் என்ற அடையாளமும் அவருக்குரியதாக இருந்ததை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தமிழ்ச் சமுதாயத்தில் தலித்தியம் தொடர்பான ஆய்வுகளில், இங்கேயும் முற்காலத்திலிருந்தே சாதியம் புரையோடிவிட்டிருந்தது என்று நிறுவியது அவரது முக்கியமான பங்களிப்பாகும். இங்கே நிலவிய சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு வைதீக அரசியல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதையும், ஒடுக்கப்பட்டோர் அல்லாத பிற பிரிவுகளைச் சேர்ந்தோர் அதைத் தங்களுக்குமானதாக வரித்துக்கொண்டதையும் தமிழ் இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்துக்காட்டியிருக்கிறார். இங்கே நிலவுடைமைச் சமுதாயமும், அதன் அடிப்படையில் அரசாட்சிகளும் கட்டமைக்கப்பட்டபோது சமூகப் பாகுபாடுகளும் உருவம் பெற்றன என்று வாதிட்டிருக்கிறார். மார்க்சியப் பார்வையே இவற்றைக் காண வைத்தது என்றால் மிகையில்லை.
சாதியப் பாகுபாடுகள் தொடர்பான வாதங்களை உரையாடல் வடிவில் எழுதுகிற நடையையும் ஆய்வு நூலாக்கத்தில் கையாண்டவர் அவர். இந்த நடையில் பெரியாரின் நையாண்டி வழிமுறையைக் காணலாம். அதேவேளையில், பிராமணியத்துக்கு எதிரான சமூக அணித்திரட்சியில், பிராமணர் அல்லாத, தலித்துகளும் அல்லாத, உயர் சாதிகள் என்று கூறிக்கொள்ளும் பிரிவுளைச் சேர்ந்தோரே குவிந்திருந்தார்கள் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.
பண்பாடு பற்றிப் பேசுகிறபோது, ஒதுக்கப்பட்ட சமூகங்கள் மீதான அதிகாரத்தை நிறுவுகிற அடிப்படையிலேயே அறம், பண்பு போன்ற கருத்தாக்கங்கள் வகுக்கப்பட்டன என்று கூறுகிறார் ராஜ் கௌதமன். தமிழகத்தை ஆண்ட பேரரசர்கள், தங்களுடைய அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்வதற்கு அந்தக் கருத்தாக்கங்களைப் பயன்படுத்திக்கொண்டதைச் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய அன்றைய சமூக, அரசியல், பண்பாட்டு வளர்ச்சிப்போக்குகளோடு இணைந்ததுதான் சாதியம் என்கிறார். வர்க்க அடையாளத்துடன் இணைவதற்கு மாறாக, சாதித் தூய்மையைப் பாதுகாப்பதே தலையாய அறமாக இருந்திருக்கிறது. அது ஒட்டுமொத்தத்தில் தலித் சமூகங்களுக்கு எதிரான பகைமையாகப் பதியமிடப்பட்டுவிட்டதை எடுத்துக் காட்டுகிறார்.
தலித் எழுச்சி குறித்த ஆய்வுகளில் அவர் டாக்டர் அம்பேத்கர் கையைப் பற்றிக்கொள்ளத் தவறவில்லை. நிறைவாக இந்திய மண்ணில் மார்க்சியமும் அம்பேக்தரியமும் பெரியாரியமும் கைகோர்த்து அணி வகுப்பது வரலாற்றுத் தேவை என்ற புரிதலோடும் தனது வாதங்களை முன்வைத்தார். இன்று சமூக மாற்றத்திற்கான போராளிகளிடையே சிவப்பு–நீலம்– கறுப்பு என்ற கருத்தியல் பரவலாகியிருப்பதற்குத் தொடக்கப்புள்ளி வைத்தவர் என்ற பெருமைக்கு உரியவர் ராஜ் கௌதமன்.
தான் சேர்த்துவைத்திருந்த அரிய நூல்கள் புதிய ஆய்வாளர்களுக்கும், களச் செயல்பாட்டாளர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று ஆசைப்பட்டவராக, அண்மையில் அவற்றை ரோஜா முத்தையா நூலகத்திற்கு வழங்கினார்.
“பழந்தமிழ் இலக்கியத்தில் தோய்ந்தறிந்த உண்மைகளையும் சமகால நடப்புகளை உற்றுநோக்கும் கூர்த்த மதியும் கொண்டவரான ராஜ் கெளதமன் தமிழ்ப் பண்பாடு, கலை இலக்கியம், வரலாறு, அரசியல் போக்குகள், சமூக அசைவியக்கம் முதலானவற்றை மார்க்சிய ஆய்வுமுறையியிலில் ஆழங்கால்பட்ட தலித் பார்வையில் விளக்கியும் விமர்சித்தும் தொடர்ந்து எழுதியவர். வள்ளலார், அயோத்திதாசர் ஆகியோரது எழுத்துகளையும் செயல்பாடுகளையும் குறித்த அவரது மதிப்பீடு கவனங்கொள்ளத்தக்கது,” என்று கூறி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது இரங்கல் அறிக்கையில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.
இத்தகைய பங்களிப்புகள்தான் தமுஎகச சார்பில் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு உரியவராக அவரை முன்னிறுத்தின. உடல் நலம் பெரிதும் சரிவடைந்து கடைசி மணித்துளிகளை விழுங்கிக்கொண்டிருந்தபோது, நவம்பர் 12 அன்று காலையில் அந்த விருதினை நேரில் சென்று வழங்கினார்கள் தமுஎகச தலைவர்கள். கண் திறக்காமல் இருந்தவர் தோழர்களின் பெயர் கேட்டதும் விழித்துக்கொண்டதைக் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் கையிலேயே விருதினை ஒப்படைத்ததில் நிறைவோடும் அவரது நிலை கண்டதில் கனத்த இதயத்தோடும் திரும்பிய பிறகு, நவம்பர் 13 அதிகாலையில் அவர் காலமாகிவிட்ட செய்தி வருகிறது.
முன்னதாக 2018ல் கனேடிய, அமெரிக்க புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் புதுமைப்பித்தன் நினைவு விருதும், அதே ஆண்டில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் விஷ்ணுபுரம் விருதும், அண்மையில் நீலம் பண்பாட்டு மையத்தால் வேர்ச்சொல் இலக்கிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
சமுதாய மாற்றத்திற்காகக் களம் காண்பவர்கள் வரலாற்றுப் புரிதலோடு முன்னேறிச் செல்வதற்கு அவருடைய எழுத்தாக்கம் வலுவான அறிவாயுதமாகப் பயன்பட்டிருக்கும். வருங்காலத்தில் சமத்துவ சமுதாயப் போராட்டத்திற்கு மென்மேலும் கூரிய ஆய்வுடன் அறிவாயுதங்களைத் தீட்டித் தருகிறவர்களும் உருவாவார்கள். அவர்கள் ராஜ் கௌதமனின் தோளில் நின்றே அதைச் செய்வார்கள். அந்தப் பரந்த தோளாக அவருடைய படைப்புகள் விரிந்திருக்கும்.
தனிப்பட்ட முறையில் எனக்கோர் ஏக்கம் உண்டு. நான் அவரோடு இணைந்து பயணித்ததில்லை. சில கருத்தரங்குகளில் அவரது உரைகளைக் கேட்டிருக்கிறேன். கைகுலுக்கியிருக்கிறேன். அவரது இந்தப் பங்களிப்புகள் குறித்து, இணையத்தில் கிடைக்கிற பலரது கட்டுரைகள் வழியாகவே அறிந்துகொண்டேன். தமுஎகச விருது அறிவிக்கப்பட்டபோது அவரைச் சந்திக்க வேண்டும், நேர்காணலில் உரையாட வேண்டும், ஆழமான உண்மைகளை நான் தெரிந்துகொள்வதோடு வாசகர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுமெனப் பேரவா கொண்டேன். உடல் நிலை உள்ளிட்ட சூழல்கள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை. இனி அந்த வாய்ப்பு கிடைக்கவே போவதில்லை என்ற உண்மை மனதில் அறைகிறது.
செவ்வணக்கம் தோழர் ராஜ் கௌதமன்.
கட்டுரையாளர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Good information 👍