நூல் அறிமுகம்: பிளாக் வாரண்ட் – ச.சுப்பாராவ்

நூல் அறிமுகம்: பிளாக் வாரண்ட் – ச.சுப்பாராவ்



தங்களது அலுவலக வாழ்க்கை அனுபவங்களை படைப்பாக்குவது இலக்கியத்தில் ஒரு முக்கியமான வகைமை. மேலைநாடுகளில் இது மிகவும் பிரபலம். வெள்ளை மாளிகையில் பட்லராக இருந்தவரின் அனுபவம் தி பட்லர், ய விட்னஸ் டு ஹிஸ்டரி என்று வந்து புகழ் பெற்றது. அமெரிக்க ராணுவத்தின்  3 நட்சத்திர அந்தஸ்துள்ள ஜெனரலாக முதன்முதலாக பதவி உயர்வு பெற்ற பெண்மணியான கிளாடியா ஜே. கென்னடியின் ராணுவ அனுபவங்கள் ஜெனரலி ஸ்பீக்கிங் என்று புத்தகமாக வந்தன. இவ்வாறே 911 அவசர உதவி வீரரின் அனுபவங்கள், ஆப்ரிக்க சஃபாரி வழிகாட்டி, அகழ்வாராய்ச்சி ஆய்வாளர், ஜாக்குலின் கென்னடியின் மெய்க்காப்பாளர், பனிமனைகளில் புதைந்து விடுவோரை மீட்டும் புத்திசாலி மோப்ப நாய்களைப் பயிற்றுவிப்பவர், ஆப்கன் மலைகளில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பவர் என்று நாம் நினைத்தே பார்க்க முடியாத பல்வேறு விதமான தொழில்களைச் செய்வோரின் அனுபவங்களும் புத்தகங்களாக மேலைநாடுகளில் வந்துள்ளன. இப்போதும் தினந்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் இது போன்ற அலுவல் அனுபவப் பதிவுகள் மிகவும் குறைவு.  இப்போதுதான் சில வர ஆரம்பித்துள்ளன. இப்படி வந்துள்ள ஒரு விறுவிறுப்பான புத்தகம்தான் சுமார் 35 ஆண்டுகள் திஹார் சிறையில் ஜெயிலர் முதல் பல்வேறு பதவிகளை வகித்தவரான சுனில் குப்தாவின் “பிளாக் வாரண்ட்“ என்ற புத்தகம். கட்டுரை நூல் என்றாலும், புனைவை விட அதி சுவாரஸ்யமாக இருக்கிறது. உண்மை அப்படித்தானே இருக்கும் !

சுனில் குப்தா வேலைக்குச் சேரும் அனுபவமே ஒரு தனி கதைதான். அன்றைய திஹாரின் தலைமை அதிகாரி இவரது பணி நியமனக் கடித்த்தில் ஏதோ சில குறைகளைச் சொல்லி இவரை பணியில் சேர அனுமதிக்க மாட்டேன் என்கிறார். அப்போது அவரது அறையில் அவரோடு டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு வெள்ளைக்காரர், அந்த நியமன உத்தரவைப் படித்துவிட்டு, சரியாகத்தான் இருக்கிறது என்று அதிகாரி கூறிய ஆட்சேபங்களுக்கு விளக்கம் அளித்து சுனில் குப்தா பணியில் சேர உதவுகிறார். அந்த வெள்ளைக்கார்ர் சார்லஸ் சோப்ராஜ் மூத்த வாசகர்களுக்கு அவர் யார் என்று தெரியும். மிகப் பெரிய சர்வதேச அளவிலான குற்றவாளி. ஏகப்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் அவர் மீத பல நாடுகளிலும் இருந்தன. பல முறை திஹாரிலிருந்து தப்பி, பின்பு பிடிபட்ட படு கெட்டிக்கார குற்றவாளி. அப்படிப்பட்டவர் சிறையின் தலைவருடன் டீ சாப்பிட்டுக் கொண்டு, நியமனக் கடிதத்தை சரி பார்த்து, புதிய ஜெயிலருக்கு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் அடிக்கிறார் ! இதுதான் திஹார் !

புத்தகத் தலைப்பான பிளாக் வாரண்ட் என்பது தூக்குத் தண்டனை கைதிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனைக்கான உத்தரவு. குப்தாவின் பணிக்காலத்தில்  பில்லா, ரங்கா, இந்திராகாந்தி படுகொலை குற்றவாளியான சத்வந்த்சிங், அப்சல் குரு என்று ஏகப்பட்ட  முக்கிய குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைகள்… அவற்றையொட்டிய பரபரப்புகள்… அந்தக் கைதிகளின் வினோத நடத்தைகள் என்று ஒவ்வொன்றிலும் எத்தனை எத்தனையோ கதைகள்… தகவல்கள்….

Black Warrant’: Confessions of Tihar ex-Jailer | Tripuraindia

குப்தாவின் பதவிக்காலத்தில் தான் நெருக்கடி நிலையின் போது விஜய ராஜே சிந்தியா, நானாஜி தேஷ்முக், சரண்சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, பிரகாஷ் சிங் பாதல் எல்லோரும் திஹார் சிறையில் இருக்கிறார்கள். திஹார் சிறையில்தான் ஜனதா கட்சி பிறக்கிறது. திஹார் சிறையின் தலைமைப் பொறுப்பிற்கு கிரண் பேடி வந்த பிறகுதான் கிரண் பேடி புகழ் பெற ஆரம்பிக்கிறார். இன்று நாம் பார்க்கும் கிரண் பேடி வேறு. அன்று இருந்த கிரண் பேடி வேறு. நிஜமாகவே சிறையில் பல நல்லவிதமான மாறுதல்களை அவர் காலத்தில் கொண்டு வருகிறார். முன்பு சொன்ன சார்லஸ் சோப்ராஜிற்கு டைப் அடிக்கும் வேலை தருகிறார். அவர் அதை வைத்து தனது வீர சாகசங்களை புத்தகமாக எழுதிவிட, அதைக் காரணம் காட்டி அன்றைய டில்லி முதல்வர் மதன்லால் குரானா கிரண் பேடியை அந்தப் பதவியிலிருந்து தூக்குகிறார்.

அன்னா ஹசாரேயுடன் கைதியாக வந்து, சிறையில் போராட்டங்கள் நடத்திய அரவிந்த் கேஜ்ரிவால்,  பின்னாளில் டில்லி முதல்வராகிறார், திஹார் சிறை தனது முன்னாள் கைதியின் அதிகாரத்தின் கீழ் வரும் காலமும் வருகிறது. 

சிறை பற்றிய மக்களின் மூடநம்பிக்கைகள் பற்றி ஒரு அத்தியாயமே இருக்கிறது. தூக்கிலிடப் பயன்படும் மரத்தின் சிறு துண்டை தாயத்தாக அணிந்தால் எந்த கெட்ட சக்தியும் நெருங்காது என்று நினைக்கிறார்கள் பான்பராக் வாயர்கள். சிறைக்காவலர்கள் அந்த மரத்தின் துண்டுகளை சின்னச் சின்னதாக அநியாய விலைக்கு விற்கிறார்கள். சிறையின் மண்ணை விபூதி போல் பூசிக் கொண்டால் சிறுவர்களுக்கு பயந்த கோளாறு சரியாகும். பரிட்சை பயம் நீங்கும் என்றும் ஒரு நம்பிக்கை. சிறையின் மண்ணை பொட்டலம் போட்டு விற்கிறார்கள் காவலர்கள். ஆற்றுமணல் கொள்ளை போல் சிறைமண் கொள்ளை ! அதைவிட பெரிய மூட நம்பிக்கை, சிறையில் குழந்தை பிறந்தால், கிருஷ்ணன் போல் வருவான் என்று கர்ப்பிணிகள் பலரும்  ஏதேனும் ஒரு குற்றம் செய்து கைதியாக திஹார் வாசம் செய்யும் கொடுமையும் நடந்துள்ளது. சிறையில் எந்த நேரத்திலும் குறைந்தது 50 கர்ப்பிணிகள் இருப்பார்களாம். இந்த மூடநம்பிக்கை பற்றி பத்திரிகைக்காரர்களிடம் சொல்லி நிறைய கட்டுரைகள் எழுத வைக்கிறது சிறை நிர்வாகம். ஆனால், சிறையில் பிள்ளை பெற வரும் எந்தப் பெண்ணிற்கும் படிக்கத் தெரியாது என்பதால் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவே முடியவில்லை.

Black Warrant Takes Us Inside Asia’s Largest Prison: An Excerpt

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் திஹாருக்கு வரும் போது சிறையின் தலைவர் விம்லா மெஹ்ரா என்ற பெண் அதிகாரி. அவர் பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் புலனாய்வு செய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.  நிர்பயா வழக்கு குறித்து பேச்சு வந்தாலே அழுது விடுவாராம். நிர்பயா குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் போது முதல் குற்றவாளியான ராம்சிங்கை பாதுகாப்பாக தனியான அறையில் அடைக்க வேண்டும் என்று அவரது கீழ்நிலை அதிகாரிகள் சொல்கிறார்கள். இல்லை. எல்லோருடனும் சேர்ந்தே இருக்கட்டும் என்கிறார் விம்லா. அதனால் ராம்சிங்கின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்கிறார்கள் அதிகாரிகள். ஸோ வாட் ? என்கிறார் விம்லா. எல்லோருடனும் அடைக்கப்படும் ராம்சிங் தூக்கில் தொங்குகிறான். உண்மையில் சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான். இது விம்லா என்ற பெண் போலீஸ் அதிகாரி அவனுக்குத் தந்த தண்டனை !

எனினும், இந்த நூலின் மையக் கருத்து மிகப் பெரிய கோடீஸ்வரக் குற்றவாளிகளுக்கும் சிறையின் மூத்த அதிகாரிகளுக்கும் இருக்கும் நெருக்கம், அதை யாராலும் எதுவும் செய்ய முடியாத்து, பெரிய அளவில் விஷயம் தெரிந்தால், ஏதேனும் கீழ்நிலை அதிகாரியை பலிகடா ஆக்குவது என்ற நடைமுறைதான். ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கின் குற்றவாளி மனு சர்மா சிறையின் மற்றொரு கண்காணிப்பாளராகவே இருக்கிறான். அவனது அரசியல்வாதி அப்பா அவனுக்கு தினமும் உணவு கொண்டு வந்து தருவதற்காகவே சிறைக்குப் பக்கத்திலேயே ஒரு 5 நட்சத்திர ஹோட்டலை ஆரம்பிக்கிறார். சிறையின் கண்காணிப்பாளர் பி.சி.சர்மாவின் மகன் நீரஜ் சர்மா உட்பட,  சிறை அதிகாரிகள் சுமார் ஐம்பது பேரின் உறவினர், வாரிசுகளுக்கு அந்த ஹோட்டலில் வேலை போட்டுத் தரப்படுகிறது. ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீர்ர் சுஷீல் குமார் மனு சர்மாவின் நண்பர். அடிக்கடி அவரைப் பார்க்க சிறைக்கு வந்து விடுவார். மனுவின் செல்வாக்கில் திஹாரின் கைதிகளுக்கான விளையாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சுஷீல் குமார் வரவழைக்கப்படுகிறார்.

சஹாராவின் சுபத்ரா ராய் திகாரில் அடைக்கப்படுகிறார். அப்போது திஹாரின் தலைவர் அலோக் வர்மா. இவர் பின்னாளில் சிபிஐ இயக்குனர்.  முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர சுபத்ரா ராய் தன் தொழிலை நடத்தினால்தான் முடியும் என்கிறார்கள் அவரது வழக்கறிஞர்கள். உச்சநீதி மன்றம் சரி என்கிறது. திஹார் சிறை அவரது அலுவலகமாக மாறுகிறது. அவருக்கு ஏசி அறை. இணையம், வைஃபை.. எல்லாம் தரப்படுகின்றன. காலை ஆறு முதல் இரவு எட்டு மணி வரை அவரது செயலாளர்களும் உதவியாளர்களுமாக சிறைக்கு வந்து பணியாற்றுகிறார்கள். பிசினஸ் கூட்டங்கள் நடக்கின்றன. அந்தக் கூட்டங்களில் மது ஆறாக ஓடுகிறது. பெண்களுடன் கும்மாளம் போடுகிறார்கள். உச்ச நீதி மன்றம் 57 நாட்கள் அவர் சிறையில் அலுவலகம் நடத்தலாம் என்றும், அதற்கு அவர் திஹார் சிறைக்கு வாடகையாக ரூபாய் 1.23 கோடி கட்ட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், அவர் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் திஹாரில் தன் அலுவலகத்தை நடத்துகிறார். சுனில் குப்தா இது பற்றி நேராக கேஜ்ரிவாலிடமே போய் புகார் தருகிறார். கேஜ்ரிவாலாலும் அலோக் வர்மாவையோ, சுபத்ரா ராயையோ ஒன்றும் செய்ய முடியவில்லை.

When Afzal Guru was hanged, I broke down and cried says then Tihar's law officer Sunil Gupta – Sikh24.com

மாறாக, கேஜ்ரிவாலிடம் போட்டுக் கொடுப்பாயோ? என்று அலோக் வர்மா இவரைக் கடிந்து கொள்கிறார். என்றோ பல வருடங்களுக்கு முன் வாங்கிய கணினி தொடர்பாக சுனில் குப்தா மீது ஒரு ஊழல் புகார் சுமத்தப்படுகிறது. 35 வருடம் எந்த புகாரும் இன்றி வேலை பார்த்த அந்த மனிதர் ஒரு குற்றவாளியாக பணியிலிருந்து துரத்தப்படுகிறார். 

குப்தாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. செய்ய முடிந்தது இப்படி புத்தகம் எழுதுவதுதான். எழுதி விட்டார்.

இயலாமையோடு அவர் எழுதியதை இயலாமையோடு நாமும் படிப்பதாகத்தான் நாட்டு நடப்பு இருக்கிறது. என்று இவை எல்லாம் மாறுமோ? என்ற கவலையோடு புத்தகத்தை மூடி வைக்க நேர்கிறது.

புத்தகம்: பிளாக் வாரண்ட்

ஆசிரியர்: திகார் முன்னாள் சிறைத்துறை அதிகாரி சுனில் குப்தா

              மற்றும் சுனேத்ரா சவுத்திரி 

வெளியீடு: ரோலி புக்ஸ் 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *