ரெட்டைக் கொம்பனும் 13 இதயங்களும் (Rettai Kombanum 13 Idhayangalum) – நூல் அறிமுகம்
பல முற்போக்கு அமைப்புகளில் நீண்ட காலமாக பணியாற்றிக் கொண்டிருப்பவர். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அனுதினமும் பல நூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்து போராடிக் கொண்டிருப்பவர். இரும்புப்பெண்மணி என்று புகழ்பெற்றிருக்கும் பேராசிரியர் சோ மோகனா (Prof.S.Mohana) அவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் தமிழின் வழியே மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை விதைத்துக் கொண்டே இருக்கின்றன. மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என அனைவரையும் கவரும் வகையில் எழுதும் பேராசிரியர் சோ மோகனா (Prof.S.Mohana) அவர்களின் மற்றொரு அறிவியல் நூல் இது.
வானவியல் கணிதம் விடுதலைப் போராட்ட வரலாறு புவியியல் என இவர் தொடாத துறைகளே இல்லை எனலாம். ஒவ்வொரு துறையிலும் ஆழ்ந்த வாசிப்பு அனுபவமும் அருமையான சொற்களைக் கொண்ட எழுத்துத் திறமையும் இவரது ஆகச் சிறந்த பலம். அதை எளிய வகையில் அனைவருக்கும் விளக்கும் புத்தகங்களாக மாற்றுவது மிகச் சிறப்பு.
ஓர் ஒற்றைக் கேள்வி ஒரு மிகப்பெரிய நூலாக உருவெடுக்குமா? என்ற வினாவிற்கு அழகான பதிலாக அமைகிறது இந்த நூல். நமக்கெல்லாம் அடிக்கடி எழும் சந்தேகம் ஒரே ஒரு வினாவாக மாற்றி கேட்கும்போது அறிவியலின் அத்தனை கலைச் சொற்களையும் அறிவியல் துறையில் விளக்கங்களையும் ஒட்டுமொத்தமாக தொகுத்து வாசிப்போருக்கு சலிப்பு தட்டாத வகையிலும் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுக்கும் வகையிலும் எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல்.
நாம் ஓடி வந்தால் ஏன் மூச்சு வாங்குகிறது? என்ற சாதாரண வினாவின் வழியாக உலகில் பிறந்து உயிர் வாழும் அனைத்து உயிரினங்களின் இதயத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் போகிற போக்கில் மாணவர்களுக்கு அவர்களது மொழியில் எழுதிக் செல்கிறார் எழுத்தாளர்.
இங்கே ரெட்டை கொம்பன் என்று அழைக்கப்படுவது நாமெல்லாம் எதிர்பார்த்த யானை என்ற பிரம்மாண்டத்தை அல்ல. யானை காதில் புகுந்து அதை வீழ்த்தி விடும் கண்ணுக்கு புலப்படாத எறும்பு தான் ரெட்டைக் கொம்பன.. கால் தூசிக்கும் சமமில்லாத எறும்பை கதாநாயகனாக நிறுத்தி அவரது தோழர்களாக பூனை பசு மற்றும் மாணவர்களை உலவ விட்டு எறும்பின் வாயிலிருந்து இதயத்தின் கதையை எழுதி இருக்கும் எழுத்தாளரின் கற்பனையை வியந்து போற்றும் அதே வேளையில் இதயப்பூர்வமாக எல்லோரும் நூலில் உள்ள இதயத்தை வாசித்து மகிழ்ந்தால் இதயம் சிறப்பாக இயங்குவதற்கு நமக்கு நாமே வழி வகைகளை அமைத்துக் கொள்ள முடியும் என்பதையும் உணரமுடிகிறது.
மனித உடல் அமைப்பு தொடர்பாகவும் ஒவ்வொரு உயிரியின் உடலும் எவ்விதமான செயல்பாடுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாகவும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாக அமைந்திருக்கும் இதயத்தின் செயல்பாட்டை மிகச் சிறப்பான முறையில் விளக்கும் அறிவியல் நூலாக ஒளிர்கிறது இந்த 13 இதயங்கள். ஒரே நூலில் பலப்பல சந்தேகங்களுக்கு தொடர்ச்சியான தொய்வில்லாத பதில்களை எழுதி இருக்கும் இந்த இரும்புப் பெண்மணியின் இதயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் குருதிகளுக்குள்ளும் ஒளிந்திருக்கலாம் ஓராயிரம் அறிவியல் துணுக்குகள்.
சிறுவர்களுக்கே இயல்பான குறும்புத்தனத்துடனும் எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடனும் எழுப்பப்படும் சந்தேகங்கள் இதயம் தொடர்பான துணுக்குகளையும் செயல்பாடுகளையும் வெகு ஆச்சரியத்துடனும் அதே சமயம் அறிவியல் பூர்வமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.
நூலின் ஆகச்சிறந்த நடையாக நாம் கைக்கொள்ள வேண்டியது நகைச்சுவை பானியையும் அதை சிறுவர்கள் மற்றும் விலங்குகளை வைத்து நமக்குள் எளிமையாக உணர்த்த எடுத்துக்கொண்ட முயற்சியும் எனலாம். நாம் ஒன்றைப் பார்த்து வியந்து நிற்கையில் மூக்கின் மேல் விரலை வைத்தான் என்று ஆச்சரியப்படுவோம். நூலில் ஓரிடத்தில் பசு ரெட்டைக் கொம்பன் கூறும் தகவல்களை எண்ணி வியந்து நிற்கையில் “லட்சுமி அக்கா(பசு) மூக்கின் மேல் தன் காலைத் தூக்கி தொட்டு ஆச்சரியப்பட்டது” என்று எழுதியிருக்கும் ஆசிரியரின் குறும்புத்தனத்தையும் நகைச்சுவை உணர்வையும் நாம் ரசிக்க முடிகிறது அதுவே நூலோடு நம்மைப் பிணைத்தும் விடுகிறது.
நூலில் ரெட்டைக்கொம்பன் வாயிலாக கூறப்படும் அறிவியல் தகவல்களை தனியே எடுத்து எழுதும் போதும் வாசிக்கும் போதும் அவை தொடர்பான அடுத்தடுத்த நூல்களை வாசிப்பதற்கு நம்மைத் தூண்டுகின்றன. நிறைய விலங்கியல் தொடர்பான அறிவியல் தகவல்கள் எவ்விதமான சலிப்புத் தன்மையையும் ஏற்படுத்தாமல் நமக்குள் பதிய வைக்கப்படுகிறது. நூலாசிரியர் விலங்கியல் துறையில் பல ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்த அனுபவத்தையும் இந்த நூலில் விதைத்திருக்கும் அதே வேளையில் அவற்றை மாணவர்களுக்கு எழுதுகிறோம் என்ற அடிப்படை உணர்வை மனதில் நிறுத்தி எழுதியிருப்பதாலேயே நூலின் கருத்துகள் நமக்குள் திறம்பட புகுந்து கொள்கின்றன.
நூலில் உள்ள சில அறிவியல் துணுக்குகள்:
17 கோடி வருடங்களுக்கு முன் உலகத்தின் தோன்றியது எறும்பு இனம். அதில் 12 ஆயிரம் வகை இனங்கள் உள்ளன. எறும்புக்கு 13 இதயங்கள் உள்ளன 13 இதயத்தில் 13 அறைகள் என்று சொல்லலாம். மார்பில் 3 வயிற்றுப் பகுதியில் 10 என 13 இதயங்கள். எறும்புக்கு எலும்புகளே இல்லை.
120 கோடி ஆண்டுகளுக்கு முன் உலகத்தில் பிறந்த உயிரினம் மண்புழு.
முதுகெலும்பில்லாத விலங்குகளில் சிவப்பு ரத்தம் உடைய ஒரே ஒர் இனம் மண்புழு.
மனித இதயம் ஒரு முறை சுருங்கி முடிந்ததும் 75 மில்லி லிட்டர் ரத்தம் வெளியேறுகிறது. அதுவே ஒரு நிமிடத்தில் நான்கு முதல் ஐந்து லிட்டர் ரத்தத்தை வெளியேற்றுகிறது. ஒரு நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 28 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை இதயம் இரைக்கிறது.
மனித கருவின் அளவு சிறு பட்டாணி அளவு.
பிறந்த குழந்தையின் இதயம் நிமிடத்திற்கு 160 முதல் 170 முறை துடிக்கிறது
மனிதக் கருவில் முதல் உயிர் உருவான பின்பு உருவாகும் முதல் உறுப்பு மற்றும் செயல்படும் முதல் உறுப்பு இதயம்.
மனித இதயத் தசைக்கு நரம்புகள் கிடையாது
4 முதல் 8 கிராம் எடையுள்ள சுண்டெலியின் இதயம் நிமிடத்திற்கு 600 முதல் 800 முறை துடிக்கிறது.
இரண்டு கிராம் எடையுள்ள தேன்சிட்டின் இதயம் நிமிடத்திற்கு ஆயிரம் முறை துடிக்கிறது.
உலகத்திலேயே மிகப்பெரிய விலங்கான நீலத்திமிங்கிலத்தின் இதயம் நிமிடத்திற்கு ஆறு முதல் எட்டு முறை துடிக்கிறது.
நீலத்திமிங்கிலத்தின் இதயம் ஒரு சாதாரண காரை விடப் பெரியது
டைனோசரின் இதயம் சுமார் 2000 கிலோ எடை உடையது
தவளையின் இதயம் மனிதனை விட எட்டு மடங்கும் முயலின் இதயம் ஆறு மடங்கு வெள்ளை சுண்டெலியின் இதயம் 12 மடங்கும் அதிகமாக வேலை செய்கின்றது.
அம்புப்புழுக்கள் என்ற முதல் முதுகெலும்பு இனத்தில் சுமார் 57 கோடி ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் இதயம் உருவானது.
எகிப்தியர்கள் இறந்த அரசர்களின் உடலை மம்மியாக மாற்றும் போது இதயத்தை தவிர மற்ற அனைத்து வயிற்றுப் பகுதி உறுப்புகளையும் வெட்டி எடுத்து விடுவார்கள்.
மனித இதயத்தின் அமைப்பு அது வேலை செய்யும் விதம் அதில் ரத்தம் எவ்வாறு பரவுகிறது என்பதையும் அது ஒரு நாளைக்கு எவ்வளவு அளவு இதயத்திற்குள் சென்று வெளி வருகிறது என்பது தொடர்பான சிறப்பான விளக்கத்தை அளிக்கும் நூலின் வழியே நம் இதயத்தை பாதுகாக்கும் செயல்முறைகளையும் நாம் அறிந்து கொள்வதற்கு நூல் உறுதுணையாக இருக்கிறது.
அறிவியல் மேதையாக உலாவரும் ரெட்டைக்கொம்பனின் வழியே நாமும் நம் உடலைப் பற்றியும் இதயத்தை பற்றியும் மனப்பூர்வமாகவும் இதயப்பூர்வமாகவும் வாசித்து அறிந்து கொள்ள முடிகிறது. நம்மை, நம் உடலமைப்பை நாம் நேசிக்கவும் இந்த நூல் கற்றுத் தருகிறது.
நூலின் தகவல்கள் :
நூல் : ரெட்டைக் கொம்பனும் 13 இதயங்களும் (Rettai Kombanum 13 Idhayangalum)
ஆசிரியர் : பேராசிரியர் சோ மோகனா (Prof.S.Mohana)
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
முதல் பதிப்பு : டிசம்பர் 2024
பக்கம் : 64
விலை : ரூபாய் 60
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/rettai-kombanum-13-idhayangalum/
நூல் அறிமுகம் எழுதியவர் :
இளையவன் சிவா
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.