வண்ணதாசன் அவர்களின் சிறுகதை ‘சுத்தம்’ குறித்த விமர்சனக் கட்டுரை – இரா.இரமணன்

 

நெல்லையிலிருந்து வெளிவரும் காணி நிலம் காலாண்டிதழில்(ஜூலை-செப் 2020) ஐயா வண்ணதாசன் அவர்கள் ‘சுத்தம்; என்ற கதை எழுதியுள்ளார். அது பற்றிய சில கருத்துகளை முன்வைக்கிறேன்.

இரண்டு சகோதரர்கள். அண்ணன் வீரபத்திரன்;தம்பி சைலப்பன். தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவரை மயக்கி சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டுவிட்டதாக தம்பி மேல் அண்ணன் வசை பாடுகிறான். இருவருக்கும் பேச்சு வார்த்தை  இல்லை. இதில் தம்பி மனைவியையும் தந்தையும் இணைத்து அவதூறு செய்கிறான் அண்ணன். இப்பொழுது அவன் சாகக் கிடக்கிறான். தம்பியைப் பார்க்க வேண்டுமென்று உறவுக்கார மாமாவை தூது அனுப்புகிறான். தம்பி மட்டுமல்ல அவன் மனைவியையும் மகளையும் வர சொல்கிறார் மாமா. இதைக் கேட்டதும் சைலப்பன்  கொந்தளிக்கிறான். தன்னைவிட தன் மனைவிதான் அண்ணனின் வார்த்தைகளால் அசிங்கப்பட்டுவிட்டுவிட்டதாகவும் இப்பொழுது அதையெல்லாம் துடைத்துவிட்டு போய் நிற்க முடியுமா என்று கோபப்படுகிறான்.

‘எல்லாத்தையும் துடைச்சுப் போட்டுட்டா நல்லதுதானே? இனிமே ஒண்ணுமில்லாம சுத்தமாயிருமிலா’ என்கிறாள் தம்பியின் மனைவி மயிலாத்தா.

         சொத்தினால் வரும் சகோதர பகைமையும் அதில் இடையில் சிக்கித் தவிக்கும் பெண்களும் இப்படிப்பட்ட நிலைமைகளை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதையும் மிக அழகாக சித்தரிக்கிறார் வண்ணதாசன். தன் மனைவியையும் தந்தையையும் இணைத்து அண்ணன் பேசியதை சொல்லி கோபப்பட்டு அழும் ராமையாவின் ஆண் மனம் அது மனைவியை எப்படி பாதிக்கிறது என்பதை உணர்வதில்லை. ஆனால் மயிலாத்தா பளிச்சென்று சொல்லிவிடுகிறாள்.

‘அவ்வோ அண்ணன் இதை ஒரு தடவை சொன்னா,இவ்வோ ஒம்பது தடவை பார்க்கிற ஆளுககிட்ட எல்லாம் சொல்லுததே வழக்கமாப் போச்சு….நீங்க இதோட பத்தாவது ஆளு பெரியப்பா. எனக்குதான் கழுவில ஏத்தின மாதிரி இருக்கு ஒவ்வொரு தடவையும்’

சொத்துப் பிரிவினையில் வரும் சகோதர சண்டைகள் ராமாயண, மகாபாரதக் காலத்திலிருந்து இன்றுவரை தொடர்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் செம்மலரில் – சு.சமுத்திரம் என்று நினைவு- ஒரு கதை வந்தது. நாலைந்து சகோதரர்கள் ஒற்றுமையாக உழைத்து குடும்பம் நடக்கிறது. திருமணமாகி வரும் மனைவிகளில் ஒருத்தி தன் கணவனுக்காக ஒரு துண்டு மீனை எடுத்து தனியாக வைப்பதிலிருந்து சண்டை தொடங்குவதாக எழுதியிருந்தார். ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படத்தில் அண்ணன் தந்தையிடம் ‘ தம்பிய என்ஜினீயரிங்  படிக்க வச்சீங்க. என்ன பாலிடெக்னிக்தானே படிக்க வச்சீங்க?’

என்று கேட்பான். பொதுவாக கூட்டுக் குடும்ப சண்டைகளுக்கு பெண்களே காரணமாகக் காட்டப்படும். ஆனால் வண்ணதாசன் கதையில் ஆண்களுக்கு இடையில் நடக்கும் சண்டையில் பெண்களின் கவுரவம் சிக்கி சின்னாபின்னமாகிறது. 

அந்தப் பெரியவரின் பக்குவமான வார்த்தைகள் குடும்ப சிக்கலை தீர்த்துவைப்பது அருமை.

‘….நீ போய் பார்க்கிறதால அவனுக்கு நல்ல பேரு வரும்னா அது நிஜமாவே ஆயிட்டுப் போகட்டுமே. ஒண்ணும் யோசிக்காதே. வா. நான் கெடுத்த கெடுப்பாகவே இருக்கட்டும்.’

‘…சொல்லப்போனா, சைலப்பனைவிட உனக்குத்தான் சேதாரம் வீரபத்திரனால அதிகம்.நீ என்ன நினைக்க? ரொம்ப யோசிக்காத.ரொம்ப யோசிச்சா ஒரு முடிவுக்கும் வரமுடியாது. இந்த நிமிஷம் நான் கேட்கும்போது மனசுல சட்டுன்னு என்ன தோணுதோ அதைச் சொல்லு. அனேகமா அது சரியாத்தான் இருக்கும்.’          

யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: 2010

வண்ணதாசன் அவர்களின் வர்ணனை கதையின் சூழலுக்கு இன்னும் கனம் சேர்க்கிறது.

‘மழைத் தண்ணீரோடு தண்ணீராக இரைச்சல் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போய்விடுமோ என்னவோ? எங்கே போய் சேரும் அவ்வளவு சத்தமும்?’ 

இந்த வார்த்தைகளை அண்ணனின் சாவோடு இருவருக்கும் இருந்த பகைமையும் அடித்துக் கொண்டுபோய்விடும் என்பதாகப் பொருள் கொள்ளலாம். கோபத்தில் பேசும் வார்த்தைகளுக்கு கதாசிரியர் எந்தவித நாசூக்கும் பார்க்கவில்லை. 

‘எங்கே ரெண்டு பேர் மேலேயும் பீயைக் கரைச்சு ஊத்துகிட்டு இருக்கான்.’

‘புத்தி கழுதை விட்டையிலேயும் கேவலாமில்லா போயிட்டுது’ 

‘ராமையா தாத்தா ஒவ்வொன்றாக அப்பாவிடம் சொல்வது கம்பிக் கொடியில் மழைத் தண்ணீர் ஒவ்வொரு துளியாக நகர்ந்து கனத்து தொங்கிச் சொட்டுவது போல இருந்தது குமாரிக்கு. உள்ளங்கையை நீட்டி ஒவ்வொரு சொட்டையும் ஏந்தியதில் கன்னத்தில் ஈரம் தெறிப்பதாக நினைத்துக் கொண்டாள்.’ 

மழை  பெய்யும் சூழலையும் குடும்ப சூழலையும் எவ்வளவு அழகாக இணைக்கிறார்? 

இந்தக் கதை இரண்டு சித்தரிப்புகளை நினைவுபடுத்துகிறது. இரண்டு துறவிகள் நடந்து செல்லும்போது வழியில் பெண் ஒருத்தி நடக்க முடியாமல் விழுந்து கிடக்கிறாள். ஒரு துறவி அவளை தூக்கி சென்று அவள் வீட்டில் இறக்கிவிடுகிறார். ஆசிரமத்திற்கு சென்றவுடன் மற்றொரு துறவி இவரிடம் ‘என்ன நாம் துறவிகள் அல்லவா? நாம் போய் ஒரு பெண்ணை தொட்டு தூக்கலாமா?’ என்கிறார்.

இவர்’ நான் அந்தப் பெண்ணை எப்போதோ இறக்கிவிட்டேன். நீங்கள்தான் அவளை இன்னமும் தூக்கி சுமக்கிறீர்கள்’  என்றாராம். 

கல்லூரியில் எங்களுக்கு பாடமாக இருந்த ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தில் அரசன் டங்கனை கொலை செய்ய மேக்பத்தும் அவனது நண்பன் பேங்கோவும் திட்டமிடுகிறார்கள். கடைசி நேரத்தில் பேங்கோ பின்வாங்கிவிடுகிறான். ஆனால் மேக்பத்தைவிட பேங்கோவே அரியணைக்கு ஆசைப்பட்டதாக ஒரு தலைப்பு கொடுத்து எழுத சொல்வார்கள். ஆக செயலை செய்தவர்களைவிட அதை மனதிலேயே வைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் அதிகம் குற்றம் செய்பவர்கள். வண்ணதாசன் அவர்கள் கதையில் அவதூறைப் பேசிய அண்ணன் மோசமானவனா அல்லது அதையே நினைத்துக் கொண்டிருக்கும் தம்பி மோசமானவனா என்பதையே மயிலாத்தாளின் கேள்வி சுட்டிக் காட்டுகிறது.