ரவீந்திரநாத் தாகூர் (1861-1941) கவிஞர், ஓவியர், இசை அமைப்பாளர், கல்வியாளர், தத்துவவியலாளர், நாடகங்கள், புனைகதைகள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் படைத்த எழுத்தாளர் என்பதுடன் 1913இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற புகழையும் ஈட்டியவர். தாகூர் இயற்றிய பாடல்களே இந்தியா, வங்கதேசம் இரு நாடுகளுக்கும் தேசிய கீதங்களாக ஒலிக்கின்றன. தாகூர் நிறுவிய சாந்திநிகேதனும், விஷ்வபாரதி பல்கலைக்கழகமும் இந்தியாவின் உன்னதமான கல்வி, கலாச்சார மையங்களாக இன்றும் நிலவுகின்றன. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் மிக உயர்வாகப் பேசப்பட்ட ’தேசியம்’ மனித இனத்தை குறுகிய எல்லைக்குள் அடைத்து வைக்கும் சிந்தனையாகும் என்ற வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார். தான் வாழ்ந்த எண்பதாண்டுகளில் முப்பது நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதோடு அன்றிருந்த ஆளுமைகள் பலருடனும் நட்பு பாராட்டியவர்.
நாடக இலக்கியத்தில் தாகூர் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டிருந்தார். ’வால்மீகி பிரதிபா’, ’விசர்ஜன்’, ’முக்தா தாரா’, ’தி போஸ்ட் ஆபிஸ்’ நாடகங்களையும், ’சித்திராங்கதா’, ’சாண்டிலிகா’, ’சியாமா’ ஆகிய நாட்டிய நாடகங்களையும் எழுதி நாடக உலகில் தாகூர் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார்.
1912இல் வங்காளத்தில் எழுதப்பட்ட ’தி போஸ்ட் ஆபிஸ்’ நாடகம் முதன் முறையாக 1913இல் அயர்லாந்து நாட்டில் தாகூரின் நண்பரும், அயர்லாந்து நாட்டுக் கவிஞருமான W.B.ஏட்ஸ் அவர்களின் முன்முயற்சியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு முதன் முறையாக அரங்கேறியது. ஜெர்மனி. பிரான்சு என அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு நாடகம் அரங்கேறியது. ஜெர்மனியில் 105 முறை அரங்கேறியது. இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் ஃபாசிச கொடுங்கோல் ஆட்சிக் காலத்தில் போலந்து நாட்டின் வதைமுகாமிலேயே கைதிகளால் ’தி போஸ்ட் ஆபிஸ்’ நாடகம் நடிக்கப்பட்டது. வதைமுகாமில் மரணத்தின் விளிம்பில் இருந்தவர்களுக்கு ஆறுதலை அளித்த நாடகமாக இருந்தது.
‘தி போஸ்ட் ஆபிஸ்’ இரண்டு அங்கங்களைக் கொண்ட மிகச் சிறிய நாடகம். மேலெழுந்தவாரியாகப் பார்ப்பதற்குக் குழந்தைகளுக்கான நாடகம் போல் தெரியும் இந்நாடகம் ஆழ்ந்த பொருள் கொண்டது. ஆங்கிலத்தில் ‘Allegory’ என்றழைக்கப்படும் இலக்கிய வகைமை போல் எளிமையான கதையின் மூலம் பிறிதொரு ஆழமான தத்துவம் அல்லது அரசியலை உணர்த்தும் ’உருவக நாடகமாக’ தாகூர் இதனை இயற்றி வெற்றி கண்டுள்ளார். மரணம் வாழ்வியல் துயரங்களிலிருந்து பெறும் விடுதலை என்பதே நாடகம் உணர்த்த வரும் பாடமாகும். பரபரப்பான நிகழ்வுகள் ஏதுமின்றி உணர்வு நிலையில் மட்டுமே நாடகம் நகர்ந்து செல்கிறது. நாடகத்தின் ஒவ்வொரு பாத்திரமும் ஏதேனும் ஒரு குறியீடாக இருந்து பிறிதொரு பொருளை உணர்த்துகிறது.
அமல் எனும் அனாதைச் சிறுவன் கொடிய நோய்க்கு ஆளாகி கிராமத்து மருத்துவரின் தீவிர பராமரிப்பிலிருக்கிறான். வீட்டுக்குள் அடங்கியிருந்து முழு ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர் கடுமையாக எச்சரிக்கிறார். கிராமத்தில் சிறு வணிகம் செய்யும் மாதவ் தன்னுடைய பிள்ளை இல்லாத குறையைத் தீர்க்க மனைவியின் தூரத்து உறவான அமலை தத்தெடுத்து வளர்க்கிறார். தத்தெடுத்த குழந்தையென்றாலும் அமலை அளவு கடந்த அன்புடன் மாதவ்வும் அவரின் மனைவியும் வளர்க்கின்றனர். அமல் நோயுற்றதும் சொல்லொண்ணாத் துயரடைகின்றனர். ஓடித்திரிந்து விளையாட வேண்டிய வயதில் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்க மனமின்றி அமல் வாடுகிறான்.
இன்னும் ஓராண்டு காலம் இவ்வாறு வெளிக்காற்றே படாமல் இருந்தால் மட்டுமே உடல் நலம் பெறலாம், இல்லையேல் மரணம் நிச்சயம் என்ற மருத்துவரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து மாதவ் கெடுபிடியாக இருக்கிறார். தான் ஏன் வீட்டுக்குள் அடைந்து கிடக்க வேண்டும் என்பதை அமலால் புரிந்துகொள்ள முடியவில்லை. வீட்டுக்குள் அடைந்திருப்பதனால் நன்கு படித்து அறிவாளியாகலாம் என்று மாதவ் சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பரந்த வெளியில் சுற்றித் திரிந்து உலகியல் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று அமல் விரும்புகிறான். தூரத்தில் தெரியும் மலையையும் கடந்து சென்று பரந்து விரிந்திருக்கும் உலகைக் கண்டு களிக்க வேண்டும் என்கிறான். மலை ஓங்கி உயர்ந்து நிற்பதே அதனைத் தாண்டிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் என்று மாதவ் கூறுகிறார். பணி நிமித்தம் வெளியில் செல்லும் போது காவல்காரனை அழைத்து அமலை கவனமாக கண்காணிக்குமாறு சொல்கிறார்.
அமல் சோகமே உருவாக ஜன்னல் வழி வெளி உலகைப் பார்த்தவாறு பொழுதைக் கழிக்கிறான். காணும் ஒவ்வொரு காட்சியும் பரவசம் ஏற்படுத்துகிறது. கேட்கும் ஒவ்வொரு ஒலியும் மன எழுச்சி தருகின்றது. ”தயிர்! தயிர்!” என்று கூவி பக்கத்து கிராமத்திலிருந்து ஒரு பெரியவர் தயிர் விற்று வருகிறார். வீட்டுக்குள் இருந்தபடியே அவரிடம் ஆசையுடன் அளவளாவுகிறான். சியாமலி நதிக்கரையில் பஞ்சமுரா மலையடிவாரத்தில் மரங்கள் சூழ அழகுடன் அமைந்துள்ள அவரின் கிராமத்தை தான் பார்க்க விரும்புவதாகவும், நோயிலிருந்து குணமானதும் மருத்துவர் அனுமதி பெற்று தயிர் விற்பவரின் கிராமத்தைச் சுற்றிப் பார்க்க வருவதாகச் சொல்லி மன ஆறுதல் அடைகிறான்.
அடுத்து தெருவில் தென்படும் கிராமத்துக் காவல்காரரைக் கூப்பிடுகிறான். ”மணி அடிக்கவில்லையா” என்று கேட்கிறான். ”அதற்கான நேரம் வரும் போது மணி அடிப்பேன். நீ வீட்டுக்குள் அமர்ந்து படிக்க வேண்டும். வெளியில் தலை காட்டக்கூடாது. மருத்துவர் சொன்னபடி நடந்து கொள். களைப்புடன் காணப்படுகிறாய். உன் உடல் வெளுத்துப் போயுள்ளது. கண்களைச் சுற்றி கருவளையங்கள் தென்படுகின்றன. உன் கை நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. நீ ஓய்வெடுக்க வேண்டும். ஜன்னலை மூடிவிட்டு வீட்டுக்குள் செல்” என்கிறார். வரவிருக்கும் மரணத்தை உணர்த்துவதாக உள்ளது காவல்காரரின் எச்சரிக்கை. ”மணி அடித்துக் கொண்டிருப்பதுதான் என் வேலை. காலம் கடந்து செல்வதை நான் மக்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். காலம் யாருக்காகவும் காத்திருக்காது. காலம் கடந்து செல்லுமிடம் எதுவென்று யாருக்கும் தெரியாது. நான், நீ, எல்லோரும் ஒரு நாள் காலத்தைக் கடந்து செல்லத்தான் போகிறோம்” என்று காலத்தின் தத்துவத்தோடு மரணத்தின் தத்துவத்தையும் காவல்காரர் பேசுகிறார். “என்னைத்தான் மருத்துவர் பார்த்துக்கொள்கிறாரே. நான் ஏன் காலத்தைக் கடந்து செல்ல வேண்டும்?” என்று அமல் கேட்டதும். ”நீ மட்டுமல்ல உன் மருத்துவரும் சேர்ந்து என்றேனும் ஒரு நாள் காலம் கடந்து செல்லத்தான் போகப் போகிறீர்கள். அந்தக் காலம் வரும்போது உன் மருத்துவரால் ஒன்றும் செய்ய முடியாது” என்ற காவல்காரரின் பேச்சினை அச்சிறுவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அமல் வீட்டுக்கு எதிரில் தெரியும் புதிய கட்டிடம் பற்றியும் காவல்காரரிடம் கேட்கிறான். “அது போஸ்ட் ஆபிஸ். அங்கிருந்துதான் மன்னர் அனுப்பும் கடிதங்கள் மக்களுக்கு வரும். உனக்கும் கூட மன்னரிடமிருந்து கடிதம் வரும். கடிதங்களைக் கொண்டு வருவதற்கு தபால்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாகச் சென்று கடிதங்களைக் கொடுப்பார்கள்” என்கிறார் காவல்காரர். “ஆகா! அப்படியா! நான் மன்னரின் கடிதங்களை எடுத்துச் செல்லும் தபால்காரர் ஆக விரும்புகிறேன். கடிதங்களை எடுத்துக் கொண்டு கிராமம் முழுவதும் சுற்றி வர எனக்குப் பிடிக்கும்” என்கிறான் அமல். தயிர் விற்பவர், காவல்காரர், தபால்காரர் அனைவரும் அமலின் பார்வையில் சிறப்பான வேலைகளைச் செய்யும் விநோத மனிதர்கள்.
கிராமத் தலைவரின் தலை தென்பட்டதும் ”இதோ! இந்த ஆள் பொல்லாதவர். ஏதாவது தொந்திரவு கொடுப்பார். நான் போகிறேன். நாளை சந்திப்போம்’ என்று சொல்லி காவல்காரர் மெல்ல நழுவுகிறார் இளங்கன்று பயம் அறியாதல்லவா! அமல் கிராமத் தலைவரைக் கூப்பிட்டு “அய்யா! மன்னரிடமிருந்து எனக்கு கடிதம் எப்போது வரும்” என்று கேட்கிறான். வணிகர் மாதவ்வின் வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட கிராமத் தலைவர், ”ஆமாம்! மாதவ்விற்கு உண்மையில் மன்னரிடமிருந்து ஓலை வரத்தான் போகிறது. நான் மன்னரிடம் அவரைப் பற்றி போட்டு வைத்திருக்கிறேன்” என்கிறார்.
அந்நேரத்தில் பூக்கூடையைச் சுமந்து கொண்டு சிறுமி ஒருவள் தெருவில் செல்கிறாள். “ஏய்! பெண்ணே! நீ யார்? எங்கே இவ்வளவு வேகமாகச் செல்கிறாய். சற்று நில்” என்கிறான் அமல். “நான் சுதா, பூ வியாபாரம் செய்யும் சசியின் மகள். நான் பூ சேகரிக்கச் செல்கிறேன். நீ வெளியே வா! ஜன்னலில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறாய். எனக்கு அவசரம் நான் போகிறேன்” என்று சொல்லி விரைந்து செல்கிறாள். “ஆகா! பூப்பறிக்கப் போகிறாயா? எனக்கும் பூப்பறிக்க ஆசையாக இருக்கிறது. என்னை மருத்துவர் ஓய்வெடுக்கச் சொல்லியுள்ளார். குணமானதும் நான் உன்னுடன் வந்து உனக்கு மரங்களின் உயரத்தில் இருக்கும் பூக்களையெல்லாம் பறித்துக் கொடுப்பேன். பூப்பறித்து விட்டுத் திரும்பும் போது எனக்குக் கொஞ்சம் பூ கொடுப்பாயா? என்று அமல் கேட்கிறான். “கட்டாயம் பூ கொண்டு வருகிறேன். நீ மருத்துவர் சொன்னபடி ஓய்வெடு. வெளியே வராதே” என்று சொல்லி சுதா விரைந்து செல்கிறாள்.
சுதா அங்கிருந்து சென்றதும் ஐந்தாறு சிறுவர்கள் அமல் வீட்டு வாசலில் விளையாட வருகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து விளையாட முடியாமல் இருக்கும் தன் நிலைமை குறித்து அமல் வருந்துகிறான். அவர்களை ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து விளையாடச் சொல்கிறான். வீட்டுக்குள் சென்று தனது விளையாட்டுச் சாமான்கள் அனைத்தையும் கொண்டு வந்து கொடுக்கிறான். தன்னுடைய விளையாட்டுச் சாமான்களைக் கொண்டு சிறுவர்கள் விளையாடுவதைக் கண்டு அமல் மகிழ்கிறான்.
மாலையில் பணி முடிந்து மாதவ் வீடு திரும்புகிறார். அமல் கட்டிலில் படுத்திருக்கிறான். நாள் முழுவதும் அமல் ஜன்னலில் உட்கார்ந்து தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பது கேட்டு வருத்தமடைகிறார். மாதவ்வின் நண்பர் காஃப்ர் வருகிறார். அமலுடன் வயது வேறுபாடின்றி காஃப்ர் சரிசமமாகப் பழகிப் பேசுபவர். குழந்தைகளுடன் நீண்ட நேரம் உரையாடுவதற்கு எல்லோராலும் சாத்தியப்படாது. காஃப்ருடன் கழிக்கும் நேரங்கள் அமலுக்கு அலாதியானவை. இருவரும் வழக்கம் போல் கற்பனை உலகில் பயணிக்கிறார்கள். காஃப்ர் சொல்லும் ’கிளிகளின் தீவு’ பற்றிய அழகிய வர்ணனையைக் கேட்டு அமல் மகிழ்ச்சி அடைகிறான். இவர்களின் அர்த்தமற்ற பேச்சைக் கேட்க சகிக்காமல் மாதவ் அறைக்குள் சென்றுவிடுகிறார்.
அமலைச் சோதிப்பதற்கு மருத்துவர் வருகிறார். நிலைமை இன்னும் மோசமாக இருப்பதாகவும் மருந்தை மாற்றிக் கொடுக்கப் போவதாகவும் சொல்கிறார். ஜன்னல் கதவைக் கூட மூடிவைக்க வேண்டும். காற்றும், சூரியக் கதிர்களும் அமல் மீது படாமல் பாதுகாக்க வேண்டும் என்று எச்சரித்து விட்டுச் செல்கிறார். அமல் சற்று கண் மூடி மௌனமாய் இருக்கிறான். கிராமத் தலைவர் வந்து மாதவ்வைப் பயமுறுத்துகிறார். ”மன்னர் உங்களைக் கண்காணிக்கவே போஸ்ட் ஆபிஸை உங்கள் வீட்டுக்கு எதிராகக் கட்டியுள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றதும், மாதவ் உண்மையில் பயந்து விடுகிறார்.
சற்றும் எதிர்பாராத வண்ணம் மன்னரின் உதவியாளரும், அரண்மனை வைத்தியரும் வருகின்றனர். அரைத் தூக்கத்தில் இருக்கும் அமல் விழித்துக் கொள்கிறான். அரண்மனை வைத்தியர் “ஏன் இப்படி கதவுகள், ஜன்னல்களை எல்லாம் பூட்டி வைத்திருக்கிறீர்கள்? அனைத்தையும் திறந்து வையுங்கள். காற்றும், வெளிச்சமும் முக்கியமல்லவா என்று திட்டுகிறார். எப்போதும் இரண்டு மருத்துவர்கள் ஒத்துப்போவதில்லை தானே! மன்னரின் உதவியாளர், ”இன்று மன்னர் உன் வீட்டுக்கு வருகிறார். நீ அவரிடம் வேண்டியதைக் கேட்டுக்கொள்”, என்று அமலிடம் சொன்னதும் அமல் உற்சாகம் அடைகிறான். ”மன்னரிடம் நீ என்ன கேட்கப் போகிறாய்? நமது நிலைமை உனக்குத் தெரியும் தானே! மன்னரிடம் பெரிய உதவியைக் கேள்” என்று மாதவ் சொன்னதும், அமல் “நான் மன்னரிடம் எனக்கு தபால்காரர் வேலை கொடுக்கச் சொல்லி கேட்கப் போகிறேன்” என்றதும் அதிர்ந்து போகிறார். ”அரண்மனை மருத்துவர் ”விளக்கை அணையுங்கள்! நட்சத்திர ஒளி மட்டும் வீட்டுக்குள் வரட்டும்! சிறுவன் தூங்கட்டும்! அமைதி!” என்று கட்டளையிடுகிறார். அமல் கண் அயர்கிறான். வாக்குக் கொடுத்தபடி பூ விற்கும் பெண் சுதா அமலிடம் கொடுப்பதற்கு பூக்களுடன் வருகிறாள். அமல் தூங்குவதறிந்து, ”இப்பூக்களை அமலிடம் கொடுங்கள். நான் அமலை மறக்க மாட்டேன் என்பதையும் சொல்லுங்கள்” என்று சொல்லி அச்சிறுமி போகிறாள். கட்டிலில் அமைதியுடன் தூங்கிக் கொண்டிருக்கும் அமலை அனைவரும் பார்த்தபடி நிற்கிறார்கள். அதுவொரு நீள் உறக்கம் என்பது சற்று நேரத்தில் தெரிய வருகிறது.
நூறாண்டுகளைக் கடந்தும் நாடகம் இன்றும் அரங்கேற்றப்படுவதற்கு அதன் எதிர்பாராத முடிவும் ஒரு காரணம். நாடகம் அமலின் சாவுடன் சோகமாக முடிவடைந்திருக்கக் கூடாது என்பது சிலரின் கருத்து. ஆனால் மரணம் மனித வாழ்வின் துயரங்களிலிருந்து கிடைக்கும் விடுதலை என்பதே நாடகம் உணர்த்த விரும்பும் மையக் கருத்து. எனவே சோக முடிவுதான் நாடகத்தின் வெற்றிக்குக் காரணம் என்பர் சிலர். வேறுபட்ட கதாபாத்திரங்கள் மூலம் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நாடகாசிரியர் மேடையில் காட்டி விடுகிறார். நாடகத்தின் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒன்றின் குறியீடாக இருப்பது நாடகத்தின் சிறப்பாகும். தயிர் விற்பவர் உழைப்பின் அடையாளமாகத் தெரிகிறார். எளிமையான, கபடங்களற்ற கிராம வாழ்க்கையின் குறியீடாகிறார். காவல்காரர் காலத்தின் அடையாளமாய் காணப்படுகிறார். நேரத்தைத் தெரிவிப்பதற்காக மட்டும் அவர் மணியை அடிக்கவில்லை. சுழன்றோடும் காலச் சக்கரத்தில் மனிதர்களின் வாழ்வு அற்பமானது. கண் இமைக்கும் நேரத்தில் அழிந்து விடும் மனிதவாழ்வு என்பதை உணர்த்தும் குறியீடாகக் காவல்காரர் தென்படுகிறார். கிராமத்து மருத்துவர் புத்தகங்களின் வழி பெறப்படும் அறிவின் அடையாளமாகிறார். ஏட்டில் எழுதியதைத் தாண்டி எதையும் புரிந்து கொள்ள முடியாத புத்தகம் சார்ந்த அறிவுலகத்தின் அடையாளம் அவர். குழந்தை சுதா அன்பின் அடையாளம். அமல் மீது அவள் கொண்டிருக்கும் பரிவும், கருணையும் ஆழமானது. அன்பெனும் அச்சைக் கொண்டு இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம் சுதா. கிராமத் தலைவர் அதிகாரத்தின் அடையாளம். பதவி தரும் அதிகாரம் மனிதனை எவ்வாறெல்லாம் ஆணவம் கொள்ளச் செய்கிறது என்பதன் அடையாளமாகிறார் கிராமத் தலைவர். அமலின் வளர்ப்புத் தந்தை மாதவ் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தினருக்குரிய அடையாளத்துடன், அற்ப ஆசைகளுடன் காணப்படுகிறார். அமல் தேவதை போல் வந்திருந்து அற்ப ஆயுளில் மறையும் மானிடனாய் அடையாளம் ஆகிறான்.
உலகளாவிய தொற்று நோய் ஏற்படுத்தியுள்ள ஊரடங்கு காலத்தில் ’தி போஸ்ட் ஆபிஸ்” நாடகம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. வீடடங்கிய வாழ்க்கைமுறையில் சிக்கித் தவிக்கும் அமலிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. வெளியில் சென்று வேலை செய்ய முடியாத காலத்தில் அமல் போல் ஜன்னல் அருகில் அமர்ந்து வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ள வேண்டியுள்ளது. இதுவொரு உணர்வு ரீதியான உழைப்பாகும். சிறுவன் அமலைப் போல் ஊரடங்கு கால மாற்று வாழ்க்கை முறைக்கு நம்மைப் பழக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
ஊரடங்கு காலத்தில் சமூகம் இரு வேறு துருவங்களாகப் பிரிந்து நிற்பதைப் பார்க்கிறோம். தொற்றுநோய் காலத்தில் நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வீடடங்கி கிடக்காமல் வாழ்வாதாரங்களுக்காக வெளியில் சென்று பிழைக்க வேண்டிய ஏழை உழைப்பாளிகள் ஒரு புறமும், வெளியில் சென்று அன்றாடம் பணம் ஈட்ட வேண்டிய கட்டாயம் இல்லாத வசதியானவர்கள் மற்றொரு புறமும் இருப்பதைக் காண்கிறோம். வசதி பெற்றவர்களின் கடமை இந்த உழைப்பாளி மக்களை மரணத்தின் விளிம்பிற்குத் தள்ளிவிடாமல் பாதுகாக்க வேண்டியதாகும். அமல் தன்னிடம் இருக்கும் விளையாட்டுச் சாமான்களை எல்லாம் கிராமத்துச் சிறுவர்களுக்குக் கொடுத்து அவர்கள் விளையாடுவதைப் பார்த்து இன்பம் அடைகிறான். ஊரடங்கு காலத்தில் பிறருக்குக் கொடுப்பதில் கிடைக்கும் இத்தகு இன்பத்தைப் பெறுவதற்கு நாம் தயாராக இருந்தோமா? இருக்கிறோமா? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் கோடானுகோடி புலம் பெயர் உழைப்பாளிகள் வேலையிழந்து உணவின்றி, உறைவிடமின்றி நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற கொடுமையைப் பார்த்தோம். ஊரடங்கு காலத்தில் புலம் பெயர் உழைப்பாளிக்கு உணவையும், உறைவிடத்தையும் கொடுக்கத் தவறிய; அவர்களைக் காப்பாற்றத் தவறிய இந்திய அரசை வரலாறு மன்னிக்காது. அதன் மௌன சாட்சியங்களாய் இருந்த நம்மையும் தான். தாகூரின் ‘தி போஸ்ட் ஆபிஸ்” ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதுப்புது அர்த்தங்களைத் தரும் அற்புதமான நாடகம் என்பதில் ஐயமில்லை.
—– பெ.விஜயகுமார்
————————————————————————–
தி போஸ்ட் ஆபிஸ் எனும் ரவீந்தரநாத் தாகூரின் நாடகத்தை மீண்டும் அறிமுகப்படுத்த்தி, இந்த கொரோனா ஊரடங்கு காலச்சூழலுக்கு இந்நாடகம் எவ்வளவு பொருத்தமானது, அந்நாடகம் கூறும் செய்திகள் எவைஎவை என்பதை பேரா. விஜயகுமார் சொன்னவிதம் அருமை. போஸ்டாபிஸ் என்பது ஒர் அரசு நிறுவனத்தின் அங்கம் என்றாலும் , அது சமுக உறவாடலுக்கும், உரையாடலுக்கும் உதவும் கருவியல்லவா, ஆகவே அந்தத் தலைப்பே ஒரு குறியீடாகவும் இருக்கிறது.வாழ்த்துகள்.
Thanks brother viji for the re-creation of Tagore’s post office. It is a very necessary for the present times. MUTA RK