ஜல்லிக்கட்டு போராட்டம், சி.ஏ.ஏ.வுக்கு ஏதிரான போராட்டங்களின்போது கோலமிட்டு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழிமுறை பிரபலமானது. அதேவகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோலமிடும் போராட்டம் நடத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை, 2020 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்து தெரிவிக்க ஆகஸ்ட் 11 கடைசி நாள். இந்நிலையில் ஆகஸ்ட் 11 அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஈ.ஐ.ஏ.வுக்கு எதிராகவும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் பலர் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை மக்கள் பதிவுசெய்தனர். இந்தப் போராட்டத்தை சென்னை கிளைமேட் ஆக்ஷன் (சென்னை பருவநிலை மாற்ற செயல்பாட்டு அமைப்பு) என்ற இளைஞர் அமைப்பு ஒருங்கிணைத்திருந்தது. 20 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

Image may contain: 1 person, standing

கரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் ஓரிடத்தில் திரண்டு போராட்டம் நடத்துவதில் சிக்கல் உள்ளது. இந்நிலையில் பெரும்பாலான செயல்பாடுகள், போராட்டங்கள் இணையம் வழியாகவே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்தப் போராட்டமும் அதே வகையில் கோலத்தின் படங்களை சமூகஊடகங்கள் வழியாகப் பகிர்ந்துகொள்வதன் மூலம் நடத்தப்பட்டது. அதேநேரம், பல்லாண்டு காலமாகத் தொடர்ந்துவரும் பண்பாட்டு அம்சமான தெருவில் கோலமிடுவதை இந்தப் போராட்ட வழிமுறை கையாண்டிருந்தது.

Image may contain: 1 person, outdoor

புள்ளிக்கோலம், கம்பிக்கோலம், ரங்கோலி ஆகிய பல்வேறு கோல வடிவங்களில், ஈ.ஐ.ஏ. வரைவு அறிவிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி இந்தக் கோலங்கள் இடப்பட்டிருந்தன. பலரும் தங்கள் படைப்புத்திறனை வெளிக்காட்டியிருந்தனர். இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் குழந்தைகள், இளைஞர்கள், ஆண்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரும் கோலமிட்டிருந்தனர். கோலமிட்டவர்களில் வயது வேறுபாட்டை உணர முடியவில்லை.

“கோலம் என்பது வெறும் அலங்கார வடிவமல்ல. கோலங்கள் மூலம் சாலையில் போவோர் வருவோரிடம் ஒரு கலந்துரையாடலை உருவாக்குகிறோம். அதேநேரம் நம் கருத்தை, எதிர்ப்பை வெளிப்படுத்தவும் கோலங்களைப் பயன்படுத்த முடியும் என்பதை இந்தப் போராட்டங்கள் காட்டுகின்றன” என்கிறார் சென்னை கிளைமேட் ஆக்ஷன் அமைப்பைச் சேர்ந்த விஷ்வஜா சம்பத்.

No photo description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *