முஸ்லீம் மாமியார் – ஹிந்து மருமகள் என்பதாக இருந்த அந்த தனிஷ்க் விளம்பரம், அவர்களுடைய மற்ற விளம்பரங்களைப் போலவே மிக அழகாக இருந்தது. அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதன் மூலம், உண்மையில் அந்த வகையான உறவுகள் நம்மிடம் இருக்கவில்லை என்ற அதிகப்பிரசங்கித் தனமான கதையை நாம் நம்புகிறோம் என்றே பொருள்படுகிறது. அவ்வாறான உறவுகள் இருக்கவே செய்கின்றன. நானே அதற்கான வாழும் சாட்சியாக இருக்கின்றேன். நானே அந்த விளம்பரத்தில் வருகின்ற பிறக்காத குழந்தையாக இருக்கின்றேன்.

C:\Users\Chandraguru\Pictures\Tanishq’s Ekatvam\Sameena\Sameena-Dalwai.jpg

1971இல் சந்தித்தபோது, இந்த ‘லவ் ஜிஹாத்’ என்ற வார்த்தைகளை என்னுடைய பெற்றோர் கேள்விப்பட்டதே இல்லை. அவர்கள் இருவரும் மகாராஷ்டிராவில் உள்ள சோசலிச மாணவர் அமைப்பான யுவக் கிராந்தி தளத்தைச் சேர்ந்தவர்கள். அந்த அமைப்பு தொழிலாளர் சுரண்டல், சாதி ஒடுக்குமுறை, பழங்குடி மக்களை ஓரங்கட்டுதல் போன்ற பிரச்சனைகளைத் தன்வசம் எடுத்துக் கொண்டு வேலை செய்து வந்தது. அந்த அமைப்பில் சேர்ந்தபோது, ​​என் அம்மாவிற்கு 18 வயது. அவர் அழகான, பச்சை நிற கண்கள் கொண்ட சற்றே குண்டான பெண். அவரைச் சுற்றியிருந்த பெரும்பாலான ஆண்கள் அவரைவிட வயதானவர்கள். அவர்கள் அனைவரும் கிராமப்புறம், ஏழைகள், தலித்துகள், முஸ்லீம்கள் என்று மாறுபட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர் மீது விருப்பம் கொண்ட பலரும் உடனடியாக அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களாகவே இருந்தனர். அம்மாவின் குடும்பப் பின்னணி எவரையும் தயங்க வைப்பதாக இருந்ததால் பேச்சைத் தவிர்க்க விரும்பிய இளைஞர்களுக்குப் பதிலாக, அப்பாவிடமிருந்து திருமணத்திற்கான விருப்பத்தை அம்மா பெற்றார். புகழ்பெற்ற மார்க்சிய காந்திய அறிஞரான நளினி பண்டிட்டின் மகளாக அம்மா இருந்தார். பணம் படைத்ததாக, மிகவும் பிரபலமானதாக அந்த பண்டிட் குடும்பம் இருந்தது. தாதரில் மிகப்பெரிய வீடு, கார்கள், தொலைபேசி என்று அனைத்தும்  அவர்களிடம் இருந்தன.

சிப்லூனைச் சேர்ந்த கொங்கணி முஸ்லீமாக இருந்த தனது தோழர்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள அம்மா முடிவு செய்தபோது, இருதரப்பிலும் மதவெறி தலை தூக்கியது. அம்மாவிற்கு ஏற்கனவே  அறிமுகமாகி இருந்த வயதான பெண்கள் சிலர் தாதர் வீதிகளில் அவரை நிறுத்தி, ‘நீ ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா? கவனமாக இரு ஹான். அவர்களிடம் முத்தலாக் இருக்கிறது’ என்றார்கள். அப்பாவின் மூத்த சகோதரரிடம் ‘அரே, அவர் ஏன் ஹிந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்?’ என்று சிலர் கேட்ட போது, முஸ்லீம் சீர்திருத்தவாதியாக இருந்து வந்த அந்த மூத்த சகோதரர் ஹமீத் தல்வாய் சற்றே அதிர்ச்சியடைந்தார். சோசலிச காந்திய கொள்கையின் பேரில் சிறிய அளவிலான திருமணங்களை விரும்பாத அவர் – அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும் வகையில் திருமணத்தை மிகப்பெரிய கொண்டாட்டமாக வைக்க வேண்டும் என்றார். அதன் காரணமாக திருமண அழைப்பிதழ்களை அதிக எண்ணிக்கையில் அச்சிட்டு, தான் சந்தித்த அனைவருக்கும் அவர் கொடுத்தார்.

என்னுடைய பாட்டி சொன்ன கதைகளில், அந்த திருமணத்திற்கு எத்தனை பேர் வந்திருந்தார்கள் என்பது குறித்த எண்ணிக்கை இருக்கவில்லை. ஆனாலும் திருமண மண்டபம் சிறியதாக இருந்ததால், அங்கே குழப்பம் ஏராளமாக இருந்தது. அனைவருக்கும் கிடைத்த வகையில் பார்த்தால், அங்கே மூவாயிரம் கிளாஸ் கோகம் சர்பத் அருந்தப்பட்டிருந்தது. பலரையும் பார்த்து புன்னகைத்து, என்னுடைய பெற்றோர் கைகளைக் குலுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.  அவர்களிருவரின் கன்னங்களும், கைகளும் வலிக்க ஆரம்பித்தன. பின்னர் என் அம்மாவிடம், ‘பாப் ரீ, உங்கள் திருமணத்தில் இதுபோன்று அடிப்படைக் குழப்பங்கள் இருந்தாலும், நாம் எந்தக் குறையுமின்றி தப்பித்தது மிகவும் அதிர்ஷ்டம்!’ என்று அவர்களுடைய நண்பர்கள் கூறினர். அந்த திருமணம் மர்ஜோலி கிராமத்திலும் கொண்டாடப்பட்டது. மும்பையிலிருந்து கார்களில் அங்கே வந்த பண்டிட் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தல்வாய் குடும்பத்தினர் நல்ல பிரியாணி விருந்து சமைத்து அளித்தனர்.தனிஷ்க் பாணி தங்க நகைகள் எதுவும் மாமியாரிடமிருந்து என் அம்மாவிற்கு அப்போது கிடைக்கவில்லை. உண்மையில், என் அம்மா முதன்முறையாக அந்தக் கிராமத்திற்குச் சென்றபோது, ​​வெள்ளியிலான காதணிகளே அவருக்குத் தரப்பட்டன. சரஸ்வத் சமூகத்தில் நடைபெறும் தீபாவளி விருந்துகளை நினைத்துக் கொண்ட அவர் ‘வெள்ளி பானைகளுக்கும் தட்டுகளுக்குமானது’ என்று தன்னுடைய மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டார். வர்க்க இடைவெளி அவ்வாறு இருந்தது. ஆனால் ‘கொடுக்க முடிந்ததைக் கொடுங்கள், தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையிலான கூட்டுக்குடும்பத்தை என் அம்மாவால் அங்கே உருவாக்கிக் கொள்ள முடிந்தது. தொழிலாளர்கள் பேரணிகள், பழங்குடி கூட்டங்கள் என்று எனது தந்தை வெளியே சுற்றுகின்ற முழுநேர ஆர்வலராக இருந்த போது, மும்பை கல்லூரியில் விரிவுரையாளர் என்பதற்காகக் கிடைத்த தன்னுடைய சம்பளத்திலிருந்து, கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு அம்மா பணம் கொடுத்து வந்தார். கல்விக்காக பணம் அனுப்பி வந்த அவர், அவசர மருத்துவ சிகிச்சை, திருமணத்திற்கான பொருட்கள் வாங்குதல் என்று வருகின்ற உறவினர்களை எங்கள் பம்பாய் பிளாட்டுக்கு அழைத்து வந்தார். அவர் அந்தக் கூட்டுக்குடும்பத்தின் தலைவியானார்.

மெலிதாக நட்சத்திரம் போன்று மின்னுகின்ற கண்களைக் கொண்ட அந்த மருமகள், பெண்களுக்கு மட்டுமே முடிகின்ற வகையிலே அந்த முஸ்லீம் குடும்பத்திற்குள் ஊடுருவியுள்ளது இந்த தனிஷ்க் ட்ரோல்களுக்குப் புரியப் போவதில்லை. அது லவ் ஜிஹாத் அல்ல. முஸ்லீம்களின் கர் வப்சி. ஆனால் இந்த ட்ரோல்கள் முஸ்லீம்களுக்கு எதிராக மட்டுமல்லாது, பெண்களுக்கு எதிராகவும் இருக்கின்றனர். மகளை அவர்களுக்கு  ‘கொடுப்பது’ தோல்வி என்றே அவர்கள் நம்புகிறார்கள். அந்த விளம்பரத்தில் உள்ள முஸ்லீம் குடும்பம் அப்போது ஹிந்து சடங்கு ஒன்றைக் கொண்டாடிக் கொண்டிருந்தது என்ற உண்மையைப் பார்க்க அவர்கள் மறுக்கிறார்கள். இருதரப்பு உறவினர்களுடன் சேர்ந்து ஈத் மற்றும் தீபாவளியை என்னுடைய குடும்பத்தினர் இன்னும் கொண்டாடி வருகிறார்கள். சாப்பிடுவதற்கும், வண்ணங்களுடன் விளையாடுவதற்கும், பண்டிகைக்கான ஆடைகளை அணியவும் அவர்கள் அனைவருமே விரும்புகிறார்கள். அவர்கள் விரும்பாதது என்று எதுவுமில்லை.

C:\Users\Chandraguru\Pictures\Tanishq’s Ekatvam\Sameena\931345763124adbe4f29eab817f67d3e.jpg

என் அம்மா இன்னும் ஹிந்துவாகவே இருக்கிறார். அதுபோல் என் தந்தை முஸ்லீமாகவே இருக்கிறார். அவர்கள் இருவருமே மதச் சடங்குகளைப் பின்பற்றுவதில்லை என்றாலும், கலாச்சார விழாக்களை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்கள். இளமையில் என் அம்மாவிடம், ஜன்னத் கிடைக்கும் என்பதால் இஸ்லாத்திற்கு மாறி விடுமாறு வயதான உறவினர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். அம்மா சிரித்துக் கொண்டே, ‘நான் ஒரு பொருள்முதல்வாதி. இப்போது இந்த வாழ்க்கையில் நான் அதனால் எவ்வாறு பயனடைவேன் என்று நீங்கள் சொல்லுங்கள்’ என்பார். திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், பெரிய சிவப்பு பொட்டை அவர் நெற்றியில் இட்டுக் கொள்ள ஆரம்பித்தார். பொருளாதாரம் கற்பிக்கத் தொடங்கிய போது, தன்னுடைய மாணவர்களைப் போலவே அவரும் மிகவும் இளமையாக இருந்ததால், தன்னை மிகத் தீவிரமானவராகவும், பேராசிரியராகவும் காட்டிக் கொள்வதற்கு அந்தப் பொட்டும், சேலையும் அவருக்கு உதவின. தனது புரட்சிகரப் போரைத் தொடர்ந்த அவர் மாற்று விழுமியங்களுடனே எங்களை வளர்த்தார்.

அதிக அளவில் வகுப்புவாதம் நிறைந்துள்ள இந்தச் சூழ்நிலையை தங்களுடைய குழந்தைகள் எவ்வாறு சமாளிப்பார்கள் என்பது குறித்து அவர்களுக்குச் சந்தேகம் இருந்தது. ரஷ்ய புத்தகங்கள், பிற கலப்பு குடும்பங்கள், நண்பர்கள் மூலமாக எங்களுக்கான உலகத்தை வழங்க அவர்கள் கடுமையாக முயன்றனர். ஆயினும் கலவரம், விரோதம், பாதிப்பு ஆகியவற்றிலிருந்து அவர்களால் எங்களைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனாலும் அந்த பிளவுக்கோட்டில் இருப்பது எங்களுக்குப் பலத்தையே தந்திருக்கிறது. வெளிநாடுகளுக்குச் சென்று, எங்கள் உறவினர்களைக் கண்டோம். எங்களுடைய படிப்புகளையும், புத்தகங்களையும் மகிழ்வுடன் அனுபவித்த நாங்கள் அவற்றை எங்கள் குடும்பத்துடன் கலந்தோம்.

C:\Users\Chandraguru\Pictures\Tanishq’s Ekatvam\Sameena\thequint_2020-10_20246163-dca2-4c44-83a8-25431a4b9409_1.jpg

என்னுடைய சகோதரர் ஹைனான் மாகாணத்தைச் சார்ந்த சீனரை மணந்தார், நான் தெலுங்கானா ரெட்டியுடன் இணை சேர்ந்தேன். நாகாலாந்தில் உள்ள மோனைச் சேர்ந்த மகளை நான் தத்தெடுத்திருக்கிறேன். இப்போது பாதி சீனச் சிறுவன், மராத்தி-தெலுங்கு பெண், சின்னஞ்சிறு நாகா போர்வீரன் என்று எல்லா குழந்தைகளும் பூங்காவில் ஒன்றாக விளையாடும்போது, மக்கள் எங்களை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். எங்கள் குடும்பம் ஒன்றாக, ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, மாண்டரின் மற்றும் கொங்கணி என்று பேசிக் கொண்டிருக்கிறது.

ஒற்றைக் கற்பனைகளைக் கொண்ட ‘சாதாரண’ மக்கள் எங்களிடம் கேட்கும்போது, ​​‘ஆனாலும் எப்படி சரியாக வரும்…?” என்றோ அல்லது ‘இது…?’ என்றோ ஆரம்பிப்பார்கள். நாங்கள் சிரித்துக் கொள்வோம்.

எங்கள் வாழ்க்கையே இந்த ட்ரோல்களுக்குப் பதிலளிப்பதாக உள்ளது. நாங்கள் இங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறோம். இந்தக் கலப்பு இனம் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்ல, அது நன்கு செழித்து வளர்ந்திருக்கிறது. அது உங்கள் அனைவரையும் முற்றிலும் சலிப்படையவும் செய்திருக்கிறது.

C:\Users\Chandraguru\Pictures\Tanishq’s Ekatvam\Sameena\cbdd369d-2d30-45fa-84e6-c15d51f0fe39.jpg

2020 அக்டோபர் 15 அன்றைய அச்சுப் பதிப்பில் ‘நான் பிறக்காத குழந்தை…’ என்ற தலைப்பிலே இந்தக் கட்டுரை வெளிவந்திருந்தது.

சமீனா தல்வாய் 

பேராசிரியர், ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளி 

https://indianexpress.com/article/opinion/columns/tanishq-hindu-muslim-ad-boycotted/

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

தமிழில்:தா.சந்திரகுருOne thought on “விளம்பரத்தைத் திரும்பப் பெறுவது நம்மிடையே இருந்து வருகின்ற யதார்த்தத்தை மறுப்பதாகும் – சமீனா தல்வாய் (தமிழில்:தா.சந்திரகுரு)”
  1. ஆம் வாழ்ந்து கொண்டிருக்கும் உதாரணங்கள் தல்வாயின் குரல் போல் உரக்க ஒலிக்க வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *