Revolutionaries are not imported goods Interview With Aadhavan Dheetchanya புரட்சியாளர்கள் இறக்குமதிச் சரக்குகளல்ல - ஆதவன் தீட்சண்யா

“இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை” சிறுகதையை முன்வைத்து ஆதவன் தீட்சண்யாவுடன் உரையாடல்
நேர்காணல் : கே. பாலமுருகன்

கேள்வி: தங்களின் இந்தக் கதையின் மூலம் சுதந்திரத்திற்கு முன்பான ஒரு வரலாற்றுச் சூழலையும் அக்காலத்து ஏகாதிபத்தியத்தின் கொடூரங்களையும் விடுதலைக்கு முன்பாகவே மரணித்த ஒரு போராளியின் இலட்சியவாதத்தைப் பற்றியும் சொல்வதாக நான் உணர்கிறேன். உங்களைப் பொருத்தவரையில் இந்தச் சிறுகதைக் குறித்தான புரிதலும் அனுபவமும் எங்கிருந்து தொடங்கி வளர்கிறது? அந்தக் காலக்கட்டத்தின் வரலாற்றைக் கொஞ்சம் சொல்ல முடியுமா?

பதில்: சென்னைக்கு சென்றிருந்தபோது பாரதி புத்தகாலயம் நாகராஜனும் சிராஜூம் “விடுதலைப்பாதையில் பகத்சிங்” என்கிற புத்தகத்தைக் கொடுத்தார்கள். அந்நூலுக்கு சிவவர்மா எழுதியிருந்த முன்னுரையைப் பேருந்தில் வரும்போது படித்துக்கொண்டு வந்தேன். “சிறையில் பகத்சிங் எழுதிய நான்கு முக்கியப் புத்தகங்களின் கையெழுத்துப் பிரதிகள் அழிக்கப்பட்டுவிட்டன என்பது மிகவும் துரதிருஷ்டவசமாகும்.
(1) சோசலிசத் தத்துவம் (The Ideal of Socialism),
(2) சுயசரிதை,
(3) இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு மற்றும்
(4) மரணத்தின் நழைவாயிலில் (At the Door of Death)
என்பவையே அந்நான்கு புத்தகங்களுமாகும். அவை நான்கும் சிறையிலிருந்து வெளியே கடத்தப்பட்டு ஜலந்தரிலிருந்து குமாரி லஜ்ஜாவதி என்பவரிடம் அனுப்பப் பட்டிருந்தது. அவர் அவற்றை 1938இல் விஜய்குமார் சின்ஹா என்பவரிடம் ஒப்படைத்திருந்தார்.

1939இல் உலகயுத்தம் வெடித்தப் பின்பு, சின்ஹா தான் கைது செய்யப்படலாம், தன் வீடு சோதனைக்குள்ளாக்கப்படலாம் என்று பயந்தார். அவ்வாறு சோதனைக்கு உள்ளானால் கையெழுத்துப் பிரதிகள் காவல்துறையினரின் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக தன் நண்பர் ஒருவரிடம் பாதுகாப்பாக வைத்திருக்கும்படிக் கூறி அவற்றை ஒப்படைத்திருந்தார். 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியபோது, அரசாங்கத்தின் அடக்குமுறை எந்திரம் முழு வீச்சிலிருந்த சமயத்தில் அந்த நண்பர் மிகவும் பயந்துபோய் அக்கையெழுத்துப் பிரதிகளை அழித்துவிட்டார்…” என்று சிவவர்மா எழுதியிருந்ததை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மிகுந்த மனத் தொந்தரவுக்கு ஆளாகி வாசிப்பதை நிறுத்திவிட்டிருந்தேன்.

அந்நேரத்திற்கு நாகராஜன் கைப்பேசியில் அழைத்தார்.”பகத்சிங் எழுதியப் புத்தகங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்கிற செய்தியை என்மனம் ஏற்க மறுக்கிறது தோழரே… அந்த வரிகளுக்கு மேல் படிக்கமுடியாமல் திணறுகிறேன். அந்தப் புத்தகங்களில் பகத்சிங் எதையெல்லாம் எழுதியிருப்பார் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்று மனம் தவிக்கிறது” என்று அவரிடம் சொன்னேன். படிக்கும்போது தனக்கும் இதே உணர்வுதான் ஏற்பட்டது என்று அவரும் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். சமாதானமடையாத என்மனம் பலவாறாக குழம்பிப் புரட்டியது. அழிக்கப்பட்டு விட்டதாய் சொல்லப்படுகிற அந்தப் புத்தகங்கள் இதோ என்னிடமிருக்கின்றன என்று திடுமென யாரேனும் வந்து சொல்லமாட்டார்களா என்றெல்லாம் அர்த்தமற்று யோசித்தேன். யாரேனும் வரக்கூடும் என்று கற்பிதமான ஒரு விருந்தாளியின் நற்செய்திக்காக காத்திருப்பதைவிடவும் அந்தப் புத்தகங்களை வைத்திருக்கிற ஒருவரை நாமே உருவாக்கினால் என்னவென்று தோன்றியது. அப்படி உருவானவள்தான் நந்தினி. புத்தகங்களை வைத்திருப்பவராக ஒரு நந்தினியை உருவாக்கிவிட முடியுமானால் புத்தகங்களையும் நானே உருவாக்க முடியும்தானே? வாசிக்கப்படாமலே அழிந்துவிட்ட அப்புத்தகங்களை பகத்சிங்கின் இடத்திலிருந்து நானே எழுதுவதெனத் தீர்மானித்தக்கொண்டேன். இன்னின்னதையெல்லாம் பகத்சிங் எழுதியிருந்தார் என்று நானாக எழுதிக் கொள்வதற்கான எல்லையற்ற சுதந்திரம் இருப்பதை உணர்ந்துகொண்டேன். புனைவின் சாத்தியமும் அதுதான். எனவே அடிப்படையான இந்த செய்தியை உட்பொருளாக வைத்துக்கொண்டு அதைச் சுற்றிவரப் புனைந்தேன்.

தலைமறைவுக்காலத்தில் பகத்சிங் ரஞ்சித் என்ற பெயராலேயே விளிக்கப்பட்டார். அந்தப்பெயரே ஒரு புனைவாய் இருக்கும்போது அதிலிருந்து புனைவின் வெவ்வேறு நிறங்களை வடிவங்களை சுவையை உருவாக்கமுடியும் என்றே தோன்றியது. அதற்குப்பிறகு நான் தாமதிக்கவில்லை. வாசிப்புகளினூடாக பகத்சிங் குறித்து எனக்கிருந்த மனப்பதிவுகளின் சித்திரமாக முதல்வரைவை ஒரேமூச்சில் எழுதிமுடித்தேன். பிறகான வேலைப்பாடுகளுக்குதான் சற்றே கூடுதலாக உழைப்பு தேவைப்பட்டது. கதையில் இடம்பெற்றுள்ள வரலாற்றுத் தகவல்களும் புனைந்து எழுதப்பட்டவையும் ஒன்றுக்கொன்று இசைமையோடு இழையும் வண்ணமாக எழுதுவதன் மூலம்தான் வரலாற்றை ஒரு புனைவாகவும் புனைவை வரலாற்றின் ஒரு பகுதியாகவும் நிலை மாற்றம் செய்யவைக்கமுடியும் என்பதை இக்கதையை எழுதியதனூடாக விளங்கிக் கொண்டேன் என்றே சொல்லவேண்டும்.

தவிரவும் ஒரு தொழில்முறை பட்டாளத்தானைப்போல காட்டப்படுகிற பகத்சிங்கின் உருவத்தை நான் எப்போதும் ரசித்ததேயில்லை. சிவகாசியில் காலண்டர் அச்சிடுபவர்கள் கண்டுபிடித்த அந்த பொம்மை முகத்தில் எவ்வித மனவோட்டத்தையும் நீங்கள் அறிய முடியாது. பகத்சிங்கின் அசலான புகைப்படங்களைப் பாருங்கள், அவனை நீங்கள் இதற்குமுன் எங்கோ சந்தித்திருப்பதைப்போன்ற உணர்வு வரும். நம்மில் ஒருவன் என்று அவனை நம்பத்தொடங்கிவிடுவீர்கள். புரட்சியாளர்கள் இறக்குமதிச் சரக்குகளல்ல, அவர்கள் இந்தச் சமூகத்தின் அழுத்தத்திலிருந்தும் தேவையிலிருந்தும் உருவாகி வருகிற நமது சொந்தப்பிள்ளைகள் என்பதனை விளங்கப்படுத்துகிற குறியீடாகவும்கூட நான் பகத்சிங்கை உருவகித்துக் கொள்வது இதனால்தான். வெகுசாமான்யனான ஒரு பஞ்சாபி இளைஞன்தான் பகத்சிங் என்ற மகத்தான வெல்லற்கரிய புரட்சியாளனாக உருவானான் என்று காட்டுவதன் மூலம்தான், நம்மாலும் முடியுமென்று எளியமக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அப்படியானதொரு பகத்சிங்கைத்தான் ரஞ்சித்தாக எழுத முயன்றிருக்கிறேன்.

கேள்வி: ஆக்க்ஷன் (Action) மூலம் சிறைப்போராளிகளை விடுவிப்பதும் கொடூர அதிகாரிகளைக் கொல்வதும் என நடந்த வேட்டையில் சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டார்களா?

உண்மையில் அன்று பயங்கரவாதிகள், அமிதவாதிகள் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பகத்சிங்கும் அவரது தோழர்களும் வன்முறை என்பதை மிகக்கடைசியான வழிமுறையாகவே நம்பினார்கள் – பயன்படுத்தினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் காயம் அல்லது உயிர்ச்சேதம் விளைவிக்கக்கூடிய சக்திவாய்ந்த குண்டினை பாராளுமன்றத்திற்குள் வீசியிருக்க முடியும். அவர்களது நோக்கம் அதுவல்ல. அந்த சபையினுடைய – அதன் வழியே உலகினுடைய கவனத்தை ஈர்ப்பது மட்டுமே அவர்களது நோக்கமாயிருந்த படியால் வெறுமனே சத்தம் எழுப்புமளவிலான குண்டையே வெடிக்கச் செய்தார்கள்.

இன்றைய ஆட்சியாளர்களே தம்மை எதிர்க்கும் சொந்தமக்களை கறுப்புச் சட்டங்களைக் கொண்டு விசாரணைகூட இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறைப்படுத்தி வைக்கும் ஒடுக்குமுறையாளர்களாக இருக்கிறார்கள். தமக்கு தொல்லையென்று கருதக்கூடியவர்கள்மீது தேசவிரோத முத்திரைகுத்தி உள்ளே தள்ளவோ அல்லது என்கவுண்டரில் போட்டுத்தள்ளுவோ இந்தத் தேசிய அரசுகள் தயங்குவதேயில்லை. இலங்கையின் ஆட்சியாளர்கள் செய்யாத அட்டூழியங்கள் என்று ஏதாவதுண்டா உலகத்தில்? கொன்ற பின்பு நுரையீரலை ஓட்டையாக்கி கடலுக்குள் வீசிவிட்டால் பிணம் மேலே வராது என்கிற கொடிய உத்திகளையெல்லாம் அவர்கள் தமிழர்களுக்கு எதிராகக் கையாண்டிருக்கிறார்கள். சானல் 4 வெளியிட்டிருக்கிற வீடியோக்களைப் பார்த்தால் நடந்திருக்கும் கொடுமைகளின் உண்மைநிலவரம் பற்றிய சிறுபகுதியையாவது உணரமுடியும். இதற்கு சற்றும் குறையாதவர்கள்தான் இந்திய ஆட்சியாளர்களும். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் அந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு எதிராக நிகழ்த்திவரும் கொடூரங்கள் மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்டவை. கனிமவளங்களை கொள்ளையடிக்க வருகிற பன்னாட்டு நிறுவனங்களுக்காக சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸா போன்ற பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் நரவேட்டையாடப்படுகின்றனர். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக நடைபெறுகிற நிலப் பறிமுதல், அந்த மண்டலங்களுக்குள் பணியாற்றும் தொழிலாளர்கள்மீதான உழைப்புச்சுரண்டல் ஆகியவற்றை எதிர்ப்பவர்களை ஈவிரக்கமற்று சுட்டுத்தள்ளி தமது இரும்புக்கரத்தின் பலத்தை சொந்த மக்கள்மீதே சோதித்துப்பார்க்கிற ஆட்சியாளர்களை பல திக்கிலும் கண்டுவருகிறோம்.

சொந்த மக்கள் என்று சொல்லிக்கொண்டே அவர்களது உயிரையும் உடைமையையும் சுயமரியாதையையும் அந்தந்த நாட்டு ஆட்சியாளர்களே பறிக்கிற கொடுங்கோலர்களாய் இருக்கிறபோது பகத்சிங் காலத்து அந்நிய – பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எவ்வளவு கொடூரமானவர்களாய் இருந்திருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.

உலகம் முழுதுமிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட தங்களது காலனிநாடுகளில் காப்பி தேயிலை ரப்பர் போன்ற பெருந்தோட்டத் தொழில்களுக்கும் சுரங்கம் வெட்டவும் ரயில் பாதை அமைக்கவும் துறைமுகம் உருவாக்கவும் இந்தியாவிலிருந்து பிடித்துச் செல்லப் பட்ட தொழிலாளர்களை பிரிட்டிஷார் எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை வரலாற்றுப்பிரக்ஞையுள்ள எந்தவொரு மனிதரும் மறந்துவிடவோ மன்னிக்கவோ முடியாது. ‘‘மலேயாவில் ஒரு தொழிலாளி மனிதக்கழிவை (பீ தான் சார்) உண்ணுமாறு பலவந்தப்படுத்தப்பட்டதால் அவன் வயிற்றோட்டத்தினால் மரணமானான். அதனை விசாரித்த வைத்தியர் அவன் உண்ட மலத்தில் தொற்றுநோய்க் கிருமிகள் இருந்ததாக நிரூபிக்க முடியவில்லை எனத் தீர்ப்புக் கூறினார்… இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு தொழிலாளி பட்டினி போடப்பட்டதால் தனது எஜமானனின் குதிரை லாயத்தில் மரணமடைந்தான்…’’ (மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகள் பக்-12). ஐந்து ஆண்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் பிடித்துப்போகப்பட்ட பெண்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா? எஸ்டேட்டுகளுக்கு செல்லும் மலைப்பாதையெங்கும் அழுகியப் பிணங்களும் எலும்புக்கூடுகளும் பெருகிக் கிடந்ததென்ற அச்சமூட்டும் தகவலை இலங்கையின் மலையகத்திற்கு சென்றவர்கள் பதிவுசெய்துள்ளனர். இதே கொடிய அனுபவம் தமிழகத்தின் ஆனைமலைப்பகுதிக்குச் சென்றவர்களுக்கும் இருந்ததை எரியும் பனிக்காடு நாவல் காட்டித்தருகிறது.

பெண்களை சாக்குப்பைக்குள் நிறுத்தி அதன் உள்ளுக்குள் ஒரு பூனைக்குட்டியையும் போட்டு இடுப்பில் கட்டிவிட, தப்பிக்கும் மூர்க்கத்தில் அந்தப் பூனைக்குட்டி அந்தப் பெண்ணின் அடிவயிறுவரை தன் கூரிய நகங்களால் பிராண்டிக் குதறிவிடுவதாக சிங்கப்பூர் இளங்கோவனின் நாடகம் ஒன்றில் காட்டப்படுவதைப் போன்ற சித்திரவதைகளை பிரிட்டிஷார் உலகெங்கிலும் அரங்கேற்றியிருக்கிறார்கள். சித்திரவதைகளின் கொட்டடியாகத்தான் அவர்கள் சிறைச்சாலைகளை வைத்திருந்தனர் என்பதற்கு அந்தமானின் செல்லுலார் சிறை இன்றைக்கும் சாட்சியமாய் இருக்கிறது. கைது செய்யப்பட்ட மாப்ளா போராட்டக்காரர்களை கூட்ஸ் வண்டிக்குள் அடைத்து மூச்சித் திணறி சாகவைத்து அவ்வளவு பேரையும் பிணமாகக் கொண்டுவந்து கொட்டியதை கேரளத்தின் திரூர் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது. இப்படி இந்தியப் பரப்பில் பிரிட்டிசார் நிகழ்த்திய அட்டூழியங்களின் பட்டியல் மிகநீண்டது. (அப்பேர்ப்பட்ட கொடுமைக்கார பிரிட்டனை இன்று மாபெரும் மனிதவுரிமைக் காவல்நாடென நம்பி சிலர் முறையிடும் அவலத்தை என்னென்று சொல்ல?)

ஆகவே, இப்படியான கொடுமைகளை நிகழ்த்திவந்த அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட அன்றைக்கு வேறுமார்க்கங்கள் இல்லாத நிலையில் ‘கணக்குத் தீர்க்கும்’ வழிமுறையை மேற்கொள்ள வேண்டிய தவிர்க்கமுடியாத நிலை போராளிகளுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். அப்படியான நடவடிக்கைகளை அன்றைய காலப் பின்னணிக்குள் பொருத்திப் பார்க்காமல் போனால் அது வெறுமனே கொலை என்பதாக குறுக்கிப் புரிந்து கொள்ளும் அபத்தத்திற்கு இட்டுச்சென்றுவிடும். மற்றபடி பொதுமக்களது உயிருக்கும் உடைமைக்கும் சேதத்தை ஏற்படுத்தி அதன்மூலம் ஆட்சியாளர்களை நிர்ப்பந்திப்பது அல்லது சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைத் தூண்டுவது என்ற இழிவான உத்தியை பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் செய்தாரில்லை. ‘‘…அதிகாரப்பூர்வமான பயங்கரவாதத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? புரட்சியாளர்களின் எதிர் பயங்கரவாதத்தால் மட்டுமே இந்த அதிகாரத்துவ அச்சுறுத்தலுக்கு உண்மையான தோல்வியைக் கொடுக்க முடியும்…’’ என்கிற புரிதலுடன்தான் அவர்கள் ஆயுதங்களை கையிலெடுத்தார்கள்.

‘‘ஒரு மனிதனின் இறப்பிற்காக வருந்துகின்றோம். ஆனால் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்த இவன், மிகக் கொடூரமானவன், கீழ்த்தரமானவன், கேவலமானவன், ஒழிக்கப்பட வேண்டியவனாவான். உலகில் உள்ள அரசாங்கங்களிலேயே மிகக்கொடுங்கோன்மை அரசாக விளங்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஏஜண்ட்டாகச் செயல்பட்ட இவன் இறந்துவிட்டான். ஒரு மனித உயிரின் ரத்தம் சிந்தப்பட்டதற்கு வருந்துகின்றோம். ஆனால் அனைவருக்கும் விடுதலையைக் கொண்டுவரக் கூடியதும் மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்றதாகக் கூடியதமான புரட்சியின் பலிபீடத்தில் தனிநபர்களின் உயிர்ப்பலி தவிர்க்க இயலாதவையே….’’ சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டது குறித்து பகத்சிங்கும் அவரது தோழர்களும் 1928 டிசம்பர் 18ம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் காணப்படுகிற இந்த வாசகங்கள் நமக்குப் போதுமான விளக்கங்களைத் தந்துவிடுகின்றன.

கேள்வி: “சனத்தொகையில் சரிபாதியாய் இருக்கும் நீங்கள் பங்கெடுக்காமல் எதைச் சாதிக்க முடியும்?” இந்த வார்த்தையை நீங்கள் யாரை நோக்கி முன் வைக்கிறீர்கள்?

பதில்: புரட்சிகரத்தன்மைக்கு உரிமைகோருகிற பல்வேறு இயக்கங்களும் கட்சிகளும் கூட ஆண்களின் சபைகளாக தேங்கிக் கிடப்பது குறித்த எனது அதிருப்தியை நான் பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறேன். மொழியால் செயலால் இது ஆண்களின் அமைப்பு என்கிற கருத்து தொடர்ந்து வெளிப்படுத்தப்படுகிறது. அவை ஆண்மையவாத சிந்தனைகளால் அழுகிப் போயிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே பெண்கள் அமைப்புகளுக்கு வெளியே இருக்கிறார்கள்.

கட்சிகளால் அணிதிரட்டப்பட்டிருக்கிற பெண்கள், கட்சியின்/ இயக்கத்தின் பொத்தாம் பொதுவான முடிவுகளை பெண்களிடம் கொண்டு செல்வதற்காகத் தான் பயன்படுத்தப் படுகின்றரே தவிர, பெண்களின் தனித்துவமான நிலைமைகளையும் தேவைகளையும் கட்சிக்குத் தெரிவித்து அவை குறித்து முழுகட்சியின் கவனத்தையும் செயல்பாட்டையும் கோருகிறவர்களாக செயல்படுவதற்கான சாத்தியங்கள் அரிதாகவே தென்படுகின்றன. இந்த ஒருவழிப்பாதை அணுகுமுறையால் பெண்களின் கருத்தியல் பங்களிப்பைப் பெறாமலே ஆண்வயப்பட்ட ஒற்றைத்தன்மையுடன் இயங்குகின்ற அமைப்புகளே பெரும்பான்மை. பெருவாரியான ஆண்களுக்கிடையில் பிரதிநிதித்துவ அடிப்படையில் போனால் போகிறதென்று அனுமதிக்கப்பட்டவர்களாக பெண்கள் நடத்தப் படுகின்றனர். இதனால் அவர்கள் மிகத் தாழ்ந்த ஸ்தாயியில் பேசுகின்றனர். அல்லது பெரும்பான்மைக்கு கீழ்ப்படிந்து / ஒத்துழைத்து பிரச்னையில்லாதவர்களாக சில மேடைகளை பகிர்ந்துகொள்கின்றனர்.

பெண்கள் பொதுவாழ்வில் பங்கெடுப்பதற்கரிய சாதகமான நிலைமைகளை உருவாக்குவதற்கான கருத்தியல் போராட்டத்தை ஆண்களிடம் நடத்துவதற்கோ பாலின சமத்துவத்துவம் என்பதில் உளப்பூர்வமான ஈடுபாடு கொள்வதற்கு தனது அணிகளை தயார்படுத்துவதற்கோ இங்குள்ள இடதுசாரி இயக்கங்களே வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்ற நிலையிருக்கும்போது மற்றக்கட்சிகளைப் பற்றி நான் சொல்வதற்கொன்றுமில்லை. மார்க்சீய சொற்றொடர்களையே பிரயோகித்து பாலின சமத்துவத்தை மறுக்கிற சில இடதுசாரிகளின் சாமர்த்தியம் குறித்து நான் அச்சம் கொண்டதுண்டு. ஆகவே பெண்கள் பங்கேற்காத எந்தப் புரட்சியும் முழுமையடையாது என்று லெனின் எச்சரித்திருப்பதை திரும்பத்திரும்ப சொல்லவேண்டியிருக்கிறது- நமக்கும் மற்றவர்களுக்கும். அதனால்தான் ‘‘பூமியின் மீதிலே அடிமையொருவன் இருக்கும் வரை/ நீங்கள் சுதந்திரமும் துணிச்சலும் கொண்டவர்கள் என்று கூறு இயலுமா…’’ என்கிற ஜேம்ஸ் ரஸ்ஸல் லொவல் என்பவரின் கவிதைவரிகளை தன் குறிப்பேட்டில் கவனப்படுத்தும் பகத்சிங் நிச்சயம் பாலின அடிமைத்துவத்திற்கும் எதிரானவனாகத்தான் இருப்பான்- இருக்கவேண்டும் என்று சொல்ல விரும்பினேன்.

பகத்சிங் தன் நண்பன் சகதேவுக்கு காதல் குறித்து எழுதிய கடிதத்தின் வாசகங்களும் கூட என்னை இம்முடிவுக்கு இட்டுச்சென்றதற்கு காரணமாய் இருக்கலாம். ஆகவே கதவுக்குப் பின்னிருந்து பேசும் பதுமைகளென பெண்களை உருவகப்படுத்தி ஒடுக்கிவந்தக் காலத்தில், அரசியல் போராட்டத்தில்- பொதுவாழ்வில் பங்கெடுக்க பெண்களும் முன்வரவேண்டும் என்ற பொருளில் “சனத்தொகையில் சரிபாதியாய் இருக்கும் நீங்கள் பங்கெடுக்காமல் எதைச் சாதிக்க முடியும்?” என்று ரஞ்சித் சொல்வதாக எழுதினேன். இது பகத்சிங் மற்றும் அவனது தோழர்கள்மீது வலிந்து கூறப்பட்ட எனது விருப்பமல்ல. 6.4.1928 அன்று வெளியிடப்பட்ட அவர்களது வெகுசன அமைப்பான ‘நவஜவான் பாரத் சபா என்னும் இளைஞர் அமைப்பின் கொள்கையறிக்கை இவ்வாறு நிறைவுபெறுகிறது- ‘‘ஒரு தேசத்தின் உருவாக்கம், தங்களது சொந்த சுகங்களையும் நலன்களையும் காட்டிலும் தங்களது சொந்த உயிர்களையும் தாம் நேசிப்பவர்களின் உயிர்களைக் காட்டிலும் தங்களது நாட்டுநலனையே பெரிதெனப் பேணும் ஆயிரக்கணக்கான பெயர் தெரியாத ஆண்கள் பெண்களின் தியாகங்களையே வேண்டுகிறது…’’

கேள்வி: “யங் இந்தியாவில் வெளியான கட்டுரைகளின் வழியே புரட்சிகர நடவடிக்கைகளை ஒடுக்கும் அரசின் அத்துமீறல்களுக்கு தனது ஒப்புதலை காந்தி பகிங்கரமாக வெளிப்படுத்தினார், இதன் மூலம் போலிஸின் அட்டூழியம் தொடங்கியது”. உங்களின் இந்தச் சிறுகதையின் ஒட்டுமொத்த பகுதியிலிருந்து காந்தி எவ்விதமான அடையாளத்தைப் பெறுகிறார்? அவரின் அரசியல் செயல்பாடுகள் மீதான தங்களின் மதிப்பீடு என்ன? மேற்கண்ட காந்தியின் ஒப்புதல் புரட்சிக்காரர்களை ஒடுக்கியதா?

பதில்: காந்தியின் அகிம்சாவழிக்கு முரணாக வெளிப்படும் வன்முறையைக் கையிலெடுத்ததால்தான் கடைசிவரை காந்தி பகவத் சிங் மீது எதிரான கொள்கையைக் கொண்டிருந்தார்? தாங்கள் கோரிய சீர்த்திருங்களும் ஏற்கப்படாத நிலையில் ‘‘ எரிச்சலடைந்தக் குழந்தை ஒன்றின் வீம்பான எதிர்ச்செயலைப்போலவே’’ காங்கிரஸ் பூரண விடுதலைக் கோரிக்கையை எழுப்பியது என்பதே புரட்சியாளர்களின் மதிப்பீடு. எனவே காங்கிரஸ் கோரிய விடுதலையின் எல்லைகள் மிக்குறுகியவை. இந்தியச் சுதந்திரம் எவ்வகைப்பட்டதாக இருக்கவேண்டும், அதற்கானப் போராட்டம் எத்தகைய வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும், போராட்டத்தின் தலைமை யார், நேசஅணிகள் எவை என்பவற்றின் மீதான நிலைப்பாடுகளில் பகத்சிங் உள்ளிட்ட புரட்சியாளர்கள் காந்தியிடமிருந்து வேறுபடுகின்றனர். ‘‘நாம் தொழிலாளர்களை விடுதலைப் போராட்டத்தினுள் திருப்பிவிடக்கூடாது. ஆலைத்தொழிலாளர்களை அரசியல்ரீதியாகப் பயன்படுத்துவது அபாயகரமானது’’ என்கிற கருத்து காந்திக்கு தொடக்கம் முதலே இருந்தது. ‘‘உண்மையான புரட்சிகர ராணுவத்தினர் கிராமங்களிலும் தொழிற்சாலைகளிலுமே உள்ளனர். விவசாயிகளும் தொழிலாளர்களுமே அவர்கள்…’’ என்பது பகத்சிங்கின் கருத்தாக இருந்தது. ஆகவே காந்திக்கும் பகத்சிங்குக்கும் இடையே விரிகின்ற முரண் அரசியல்ரீதியானது.

காந்தி என்றால் அகிம்சை என்கிற ஒரு சித்திரம் மட்டுமே திரும்பத்திரும்ப காட்டப்படுகிறது. அது இட்டுக்கட்டப்பட்டதொரு தோற்றம். இம்சை என்பது ஆயுதம் கொண்டு வதைப்பது மட்டுமல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால் காந்தியின் அகிம்சை எந்தளவிற்கு மற்றவர்களுக்கு இம்சையாக இருந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். தன்னையே வருத்திக்கொள்ளும் மனவலிமையின் மூலம் ‘‘எத்தனை ஓ’டயர்களையும் ரீடிங்குகளையும் இர்வின்களையும் அவரால் இந்தியாவின் நண்பர்களாக மாற்ற முடிந்தது?’’ என்கிற கேள்வி முக்கியமானது. அஹிம்சை என்பதில் தனக்கிருந்த உறுதிப்பாட்டை சோதித்துப் பார்ப்பதற்காக இந்தநாட்டின் கோடானகோடிப் பேரின் போர்க்குணத்தையும் தியாகத்தையும் உயிர்ப்பலிகளையும் வீணடித்து பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தை நீட்டிக்க வைத்தக் குற்றத்தில் காந்திக்குள்ள பங்கை நாம் பரவலாக பேசுவது கிடையாது.

‘மீரட் சதி வழக்கு, லாகூர் மற்றும் பெஷாவர் அட்டூழியங்களின் சூத்ரதாரியான வைஸ்ராய்’ இர்வின் 1929 டிசம்பர் மாதத்தில் சென்ற சிறப்பு ரயிலின் அடியில் ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. ஆனால் அவர் தப்பித்துவிட்டார். வைஸ்ராய் தப்பியதற்காகக் கடவுளுக்கு நன்றி சொன்ன காந்தி புரட்சியாளர்களைக் கண்டித்து வெடிகுண்டின் வழிபாடு என்று கட்டுரை எழுதினார். தொடர்ந்தும் அவர் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் புரட்சியாளர்களை தனிமைப்படுத்த முயற்சித்துக் கொண்டேயிருந்தார். புரட்சியாளர்கள் உள்ளிட்டவர்களாலும் இந்த நாட்டின் தலைவரென ஏற்கப்பட்ட அவரிடமிருந்து வெளியான இவ்வகையான கருத்துகள்தான் பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்கிலிடப்படுவதை தடுப்பதில் காந்திக்கு மனத்தடையை ஏற்படுத்தியிருந்தது. அவர் தன்குரலை உரிய தொனியில் உரிய நேரத்தில் ஏன் எழுப்பவில்லை என்பதற்கான பதில் வெற்றிடமாக உள்ளது. ஆனால் அதில் மர்மமொன்றும் இல்லை. புரட்சியாளர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தீர்த்துக்கட்டியதன் மூலம் தனது அரசியலுக்கு எதிரான- கடக்கமுடியாத தடைகள் நீங்கிவிட்டன என்கிற தற்காலிக நிம்மதிகூட அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

கேள்வி: ஆனால், ரஞ்சித் இந்தக் கதையில், அவனுடைய நான்கு புத்தகங்களும் அச்சாகிய பிறகு, அதைக் காந்திக்கும் அனுப்பி கருத்து கேட்குமாறு சொல்லும் இடம் நெருடலை ஏற்படுத்துகிறது. ரஞ்சித்திற்கு முற்றிலும் முரணான ஒரு காந்தியிடம் ஏன் ரஞ்சித் தனது புத்தகங்களைக் காட்டி கருத்துக் கேட்க வேண்டும் என்கிற ஆவலைக் கொண்டிருக்க வேண்டும்? அதன் அவசியம் என்ன?

பதில்: “ச்சே.. அந்தாள் மூஞ்சில ஜென்மத்துக்கும் முழிக்கமாட்டேன்..” என்கிற இன்றைய தலைவர்களின் வறட்டுகௌரவமும் வெற்றுவீம்பும் காந்திக்கும் பகத்சிங்குக்கும் இருந்திருக்க வேண்டுமா என்ன? தனிநபர்கள் என்ற வகையில் அவர்களுக்கிடையே எவ்விதப் பகைமையோ காழ்ப்போ இல்லைதானே? மாற்றுக் கருத்துள்ளவர்களையெல்லாம் போட்டுத்தள்ளுகிறவரல்ல பகத்சிங். அவர் மாற்றுக் கருத்துக் கொண்டோரிடம் தொடர்ச்சியாக உரையாடலை நடத்திக் கொண்டிருந்தார். ‘வெடிகுண்டின் வழிபாடு’ என்ற காந்தியின் கட்டுரைக்கு ‘வெடிகுண்டின் தத்துவம்’ என்று பகவதி சரண் வோரா எழுதிய மறுப்பாகட்டும் அல்லது காந்தி-இர்வின் ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவிருந்த நேரத்தில் சுகதேவ் காந்திஜிக்கு எழுதிய பகிரங்கக் கடிதமாகட்டும் – இவையெல்லாம் இந்த உரையாடலின் பகுதிகளே. புரட்சி என்பதன் பொருளை அதன் முழுஅர்த்தத்தில் வெகுமக்களும் இந்த சமூகத்தின் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பிய பகத்சிங் தன் நூல்கள் மீதான காந்தியின் அபிப்ராயத்தை எதிர்வினையை அறிந்துகொள்வதில் ஆர்வமுடயவராகவே இருந்திருப்பார் என்ற நம்பிக்கையிலேயே அவ்வாறு எழுதியிருக்கிறேன். எதிரும் புதிருமான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த அதேவேளையில் பரஸ்பரம் மரியாதையுடன் இருக்கிற நல்லமரபுகள் இந்திய அரசியலில் இருந்திருக்கின்றன.

கேள்வி: “கடவுளுக்கு முன்பே உலகம் இருந்தது என்பதைப் போல எனக்குப் பின்னும் இருக்கும் ஆனால் என் காலடியும் மூச்சுக்காற்றும் பட்ட பிறகு அது பழைய மாதிரியே சுழன்று கொண்டிருக்க முடியாது” வரலாற்றில் நாம் எத்தனையோ போராளிகளை இழந்துவிட்டோம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மக்கள் அரசியல்/அதிகாரப் பலத்தால் ஒடுக்கப்படும்போது ஒரு போராளி அந்தச் சமூகத்திலிருந்து பிறப்பான் எனச் சொல்லப்படுவதை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? ஒரு போராளியின் கனவு ஏகாதிபத்தியங்களை எந்த வகையில் உடைக்க நினைக்கிறது? அவனது உயிரைப் பறிப்பதிலா அல்லது அவனது அதிகாரத்தைப் பலவீனமாக்குவதிலா? ஏதாவது ஒரு வரலாற்றை முன்வைத்தும் சொல்லலாம்.

பதில்: “கடவுளுக்கு முன்பே உலகம் இருந்தது என்பதைப் போல எனக்குப் பின்னும் இருக்கும் ஆனால் என் காலடியும் மூச்சுக்காற்றும் பட்ட பிறகு அது பழைய மாதிரியே சுழன்று கொண்டிருக்க முடியாது” என்ற வரிகளை நானாகத்தான் எழுதினேன். பகத்சிங் மற்றும் அவனது தோழர்களைப் பொறுத்தவரை இந்த வரிகள் பொய்யில்லைதானே? அந்த ஆளுமைகளின் குறுக்கீடும் செல்வாக்கும் வெவ்வேறு தளங்களில் வெளிப்படையாகவும் மறைபொருளாகவும் இன்றளவும் நம்மை வழிநடத்தத்தானே செய்கின்றன? அவர்கள் உருவாக்கிய இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்ற முழக்கம் இந்திய உழைப்பாளி வர்க்கத்தின் உணர்வினில் கலந்துவிட்ட முழக்கமல்லவா?

“மாலைநேரத்தில் நெருப்புமூட்டிக் குளிர்காயும் விவசாயியுடன் வட்டமாய் அமர்ந்து அவ்விவசாயி என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்ள அவர் முயற்சி செய்திருக்கிறாரா? ஒரு மாலைப் பொழுதையாவது ஒரு ஆலைத்தொழிலாளியுடன் கழித்ததுண்டா? தனது உறுதிமொழிகளை அத்தொழிலாளியுடன் அவர் பகிர்ந்து கொண்டதுண்டா?” என்ற கேள்விகளை காந்தியைப் பார்த்து கேட்பதற்கும் முன்பாக பகத்சிங்கும் அவரது தோழர்களும் முதலில் தங்களைத்தாங்களே கேட்டுக் கொண்டார்கள். போராளிகள் அந்தரத்திலிருந்து வருவதில்லை, அவர்கள் தங்களைப் போன்ற சாமான்யர்களிலும் சாமான்யர்களிலிருந்துதான் உருவாகிறார்கள் என்பதை அறிந்தேயிருந்தனர். குறிப்பாக, தாங்கள் மகாத்மாக்கள் அல்ல என்பதில் தெளிவாயிருந்தனர். அவர்கள் சாமான்ய மக்களுக்குள் தண்ணிக்குள் மீனாகத் தங்கி, அவர்களது நலனுக்காகப் போராடுவதையே நோக்காகக் கொண்டிருந்தார்கள். உள்ளூர் மட்டத்திலான உணர்வுகளை சர்வதேசப் போக்குகளுடன் இணைக்கவும் அவர்கள் தவறவில்லை.

தனியொரு மனிதனாய் இருந்து தனது மூளையிலிருந்து உதிக்கிற குழப்பங்களுகேற்றபடியெல்லாம் மக்களை மந்தைபோல நடத்துகிறவர்களை போராளி என்பதாக வரலாறு பதிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு வேறுபெயர் இருக்கிறது. கண்ணியமானதொரு வாழ்வு குறித்த வெகுமக்களது விருப்பார்வங்களை உணர்ந்து அவற்றை ஒருங்கிணைத்து, அடைவதற்கான வழிமுறைகளையும் அமையவிருக்கும் புதிய சமூக அமைப்பிற்கான வரைவையும் வளர்த்தெடுப்பவர்களாகிய போராளிகள் எல்லாக்காலத்திலும் உருவாகித்தான் வருகிறார்கள். அப்படியான போராளிகள் தங்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் பின்னாளில் தகுந்த வெகுமானம் கிடைக்கும் என்று ஒருபோதும் ‘கணக்குப்பண்ணி’ போராடுவதில்லை. களத்திலே நிற்பதென்று முடிவான பிறகு சமரசமோ சரணாகதியோ இன்றி போராடுகிறார்கள். அதிலே உயிர்த்தியாகம் உள்ளிட்ட எதையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ‘தியாகிகள் சிந்தும் செங்குருதி உணவிலேயே இளம் சுதந்திரப்பயிர் செழித்து வளரும்’’ என்று நம்புகிற – போராடுகிற- தியாகம் செய்கிற பரம்பரை ஒன்று எப்போதும் இயங்கும்.

‘ஒரு நிராதரவான மனநிலை சமூகத்தைப் பீடித்திருக்கும்போது, அழிவைத் தரக்கூடிய அந்த மனச்சோர்வை வெற்றிகொள்வதற்காக – ஓர் உண்மையான தியாக உணர்வை ஊட்டுவதற்காக’ புரட்சியாளர்கள் போராட்டங்களின் முன்வரிசையில் நிற்கிறார்கள். முன்வரிசையில் என்றால், மக்களைத் திரட்டிக்கொண்டுதான்.

புரட்சியாளர்களின் நடவடிக்கை என்னமாதிரியான விளைவுகளை உருவாக்குகின்றன என்றால், ‘‘ஒடுக்குவோரின் மனதில் பயபீதியை உண்டாக்குகிறது. ஆனால், ஒடுக்கப்படும் மக்களிடத்திலோ அது பழிவாங்குவதற்கும் மீட்சிக்குமான நம்பிக்கையை விதைக்கிறது. ஊசலாட்டத்தில் இருப்பவர்களுக்குத் துணிவையும் தன்னம்பிக்கையையும் தருகிறது. பயங்கரவாதமானது ஆளும் வர்க்கமே வலிமை வாய்ந்தது என்ற மாயையைத் தகர்த்தெறிந்து உலகத்தின் பார்வையில் ஒடுக்கப்பட்ட இனத்தின் அந்தஸ்தை உயர்த்துகிறது…’’ இந்த அடிப்படைக்குள் பொருந்தி வருகின்றதா என்று உலகத்தின் எந்தவொரு அமைப்பையும் நீங்களே பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்.

கேள்வி: “ஏகாதிபத்தியத்திற்கு சற்றும் குறைவில்லாமல் ஒவ்வொரு இந்துவும் தனக்குக் கீழிருக்கும் சாதிகளை ஒடுக்குகிறான்” – சிறுகதையிலிருந்து. இதைப் பின்காலனிய மனோபாவம் எனச் சொல்லலாமா அல்லது காலனியக் காலக்கட்டத்தில் உக்கிரமாக உருவான சாதி அமைப்பு எனச் சொல்லலாமா? இந்து என்கிற அடையாளம் ஏகாதியபத்தின் இரண்டாம்தர அதிகார தரகர் என அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா? எது நீங்கள் கதையின் வழி முன்வைக்கும் இந்து?

பதில்: உண்மையில் இந்து என்று ஒருவர் எந்தகாலத்திலும் இருந்தது கிடையாது. அது இட்டுக்கட்டப்பட்டதொரு மாயை. எவரொருவர் பௌத்தவராகவோ சமணராகவோ பார்ஸியாகவோ இஸ்லாமியராகவோ கிறித்தவராகவோ இல்லையோ அவர்தான் இந்து. இப்படியொரு வெட்கங்கெட்ட விளக்கம் வேறு எந்த மதத்தவருக்காவது உண்டா என்று தேடித்தான் பார்க்க வேண்டும். புராதன இந்தியப்பரப்புக்குள் நிலவிய பன்முகப்பட்ட வழிபாட்டுமுறைகளின் தொகுப்பை ஒரு பூர்வீக மதம் என்று வகைப்படுத்துவதாயிருந்தால் ஆரியர்களது வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வைதீக மதம்தான் இந்தியாவிற்கு முதல் அன்னிய மதம். இந்த வைதீக மதத்திற்கு வெளியே வேறு வழிபாட்டு மரபுகள் இருந்தன. வைதீக மதத்தின் கொடுங்கோன்மைகளுக்கு எதிராக அவைதீக மதங்கள் தோன்றின. இவை எல்லாவற்றிலிருந்தும் சாத்தியமானதையெல்லாம் உறிஞ்சிக் கொண்ட ஒரு கலவைதான் இன்றைக்கு இந்துமதம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கு மதம் என்பது ஒருவருக்கு முற்றுமுடிவான அடையாளமல்ல.

நான் ஒரு இந்து என்று ஒருவர் சொன்னால், நாங்களும் அந்த மசுருதான். உன் சாதியச் சொல்லு… என்பதுதான் அடுத்தக் கேள்வியாக இருக்கிறது. அதாவது சாதிதான் இந்துமதத்திற்கு அடிப்படை. அந்த சாதியடுக்கு அமைந்துள்ள விதமே ஏற்றத்தாழ்வானது, சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. சாதியடுக்கின் உச்சியில் தம்மை இருத்திக்கொண்ட பார்ப்பனர்கள் எல்லாச்சாதிகளையும் சுரண்டுவதற்கான அதிகாரங்களும் உரிமைகளும் கொண்டிருந்தனர். அதாவது எவருடைய உழைப்பையும் உடைமையையும் அபகரித்துக்கொள்வதற்கான அதிகாரம். அவர்களுக்கு அடுத்த நிலையிலான சாதியினர் தமக்கு அடுத்த நிலையிலிருந்த சாதிகளைச் சுரண்டினர். இந்த சுரண்டல் அமைப்பின் மொத்தச்சுமையையும் இழிவையும் பூர்வகுடிகளாகிய தலித்துகள் ஏற்கவேண்டியுள்ளது.

சமூகவளங்களைப் பகிர்ந்துகொள்வதில் நிலவும் இந்த ஏற்றத்தாழ்வை / சுரண்டலை நியாயப்படுத்தவும் போட்டியாளர்களை அப்புறப்படுத்தவும் தீட்டு புனிதம் என்கிற கற்பிதங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கு ஒரு கடவுளாம்சம் தருகின்ற புராணங்களும் கட்டுக்கதைகளும் தேவைப்பட்டன. அவற்றை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதற்கான சட்டதிட்டங்கள் – உள்ளூர் கட்டப்பஞ்சாயத்து முதல் உச்ச நீதிமன்றம் வரை- நிறுவப்பட்டுள்ளன. எனவே இங்கு சுரண்டல் என்பதோ ஒடுக்கு முறை என்பதோ புதிதல்ல. அதிகாரப்பூர்வமான சிறைகள் உருவாகும் முன்பே இங்கு சேரிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. இப்படி ஒருவரையொருவர் ஒடுக்குவதற்கான தத்துவப் பின்புலத்தை வழங்கக்கூடியதாய் இந்துமதம் இருப்பதை மிகச்சரியாய் அம்பலப்படுத்திய அம்பேத்கர் அந்த இந்தமதத்தை விட்டு வெளியேறுவதுதான் சுதந்திரமாக வாழ விரும்பும் ஒருவர் செய்ய வேண்டிய முதற்பணி என்றார்.

இந்திய ஆதிக்கச்சாதியினர் ஒருபக்கம் இந்தியவாதம் பேசிக்கொண்டே மறுபக்கத்தில் காலனியாட்சியாளர்களின் இளையபங்காளிகளாகவும் சேர்ந்து கொண்டனர். காலனியாதிக்கம் தன்தேவையிலிருந்து உருவாக்கிய கல்வி, தொழில், அரசுப்பதவிகள் போன்றவற்றை கையகப்படுத்தி அதிகாரத்தின் ஒருபகுதியாகி நாட்டுமக்களை தம்பங்குக்கு சுரண்டினர். மக்களது போராட்டங்கள் ஏற்படுத்திய அழுத்தத்தால் காலனியாட்சியாளர்கள் வெளியேற நேர்ந்தபோது அவர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்ட இவர்கள் சுதந்திர இந்தியாவின் வளங்களைத் தின்று இன்று கொழுத்திருக்கிறார்கள். உலகமயம் என்ற போர்வையில் ஏகாதிபத்தியங்களுடன் சேர்ந்து சுரண்டலைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இந்தச் சுரண்டலுக்கு எதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக கொடிய கறுப்புச்சட்டங்களை வகுக்கிறார்கள். முதலாளித்துவமும் பார்ப்பனீயமும் நமக்கு முதன்மை எதிரிகள் என்ற அம்பேத்கர் சொன்னதன் முழுப்பொருளை முன்னெடுத்துச் செல்வதற்கான இயக்கங்கள் இன்றையத் தேவை.

கேள்வி: “இழப்பதற்கு ஒன்றுமில்லை என்னும் மார்க்சின் பிரகடனத்தை மறுப்பவர்களாக இந்திய உழைப்பாளிகளை இந்துமதம் பிறப்பிலேயே வடிவமைத்து விடுகிறது”- சிறுகதையிலிருந்து மார்க்சின் இந்தப் பிரகடனத்தின் அர்த்தம் என்ன? (இழப்பதற்கு ஒன்றுமில்லை). இந்திய உழைப்பாளிகள் இதை மறுப்பதனால் என்ன ஆகுகிறார்கள்? இந்துமதம் பிறப்பிலேயே எப்படி இந்த மனநிலையைக் கட்டமைக்கிறது?

பதில்: அடிமை விலங்குகளைத் தவிர இழப்பதற்கு வேறொன்றுமில்லை, அடைவதற்கோர் பொன்னுலகுண்டு என்பது மார்க்சின் பிரகடனம். அடையப்போகிற பொன்னுலகில் எங்கள் சாதிக்கு தனித் தெருவுண்டா தனி சுடுகாடுண்டா தனி கோயிலுண்டா என்பதுதான் இந்தியர்களின் பிரச்னையாக இருக்கிறது. பூகம்பத்திலும் சுனாமியிலும் போரிலும் வீடுவாசல் சொத்துசுகம் குடும்பம் அவ்வளவையும் இழந்துவிட்டப் பின்னும் சாதியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிற வேதாளமனம் இந்தியருக்கு இருக்கிறது. சாதிப்பெருமை என்ற கற்பிதத்தை துறக்கமுடியாத இந்த மனநோயாளிகள் ஒவ்வொரும் மற்றவருக்கு அடிமைவிலங்கைப் பூட்டிவிட்டு தம்மையும் கூண்டுக்குள் அடைத்து பூட்டிக்கொண்டிருக்கிறார்கள். மொத்த பேருக்குமான சாவிக்கொத்து பார்ப்பனர் இடுப்பில் தொங்கிக்கொண்டிருக்கிறது. எந்தச் சூழலிலும் இழக்கக்கூடாததென இவர்களுக்குள்ள சாதிப்பெருமிதம் இயல்பிலேயே மற்றவர்களோடு ஒரு வர்க்கமாக அணிதிரள முடியாமல் தடுத்துவிடுகிறது. சாதி அப்படியே இருக்கட்டும், இப்போதைக்கு வர்க்கமாக திரட்டிவிடுவோம் என்று எவரேனும் சொன்னால் அவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்று அர்த்தம்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் என்று ஒரு இடதுசாரிக் கட்சி இருப்பதை தாங்களும் அறிவீர்கள். அதன் தமிழ்நாட்டுப் பிரிவில் பெரும்பாலும் தேவர் சாதியினர்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அக்கட்சியின் அகில இந்திய நிர்வாகி ஒருவர் அங்கு குழுமியிருந்த தனது கட்சியினரைப் பார்த்து பழக்கதோஷத்தில் ‘டியர் காம்ரேட்ஸ்’ என்று விளித்திருக்கிறார். காம்ரேடாவது கத்திரிக்காயாவது, டியர் காம்ரேட்ஸ் என்பதை ‘தேவரினச் சிங்கங்களே…’ என்று தமிழில் மொழிபெயர்த்தார்களாம். மார்க்சீயத்திற்கும் அந்தநிலை வந்துவிடக்கூடாது என்று குறைந்தபட்சம் நாம் கூட்டாக கவலையாவது படுவோமே – ரஞ்சித்தைப்போல.

கேள்வி: காந்தி ஏன் தீண்டத்தகாதவர்களுக்குத் தனித்தொகுதி வழங்கக்கூடாது என சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்? (20.09.1932)? அவருடைய அரசியல் புரிதல் சிறுபாண்மை இனத்தை ஒடுக்கியது என நினைக்கிறீர்களா?

பதில்: யார் சாகும்வரை அவர் உண்ணாவிரதம் இருந்தார் என்று கேள்வியை சற்றே திருத்தினால் நமக்கு இதற்கான விடை மிகவும் எளிமையாகவே கிடைத்துவிடும். தலித்துகளை தொடர்ந்து இந்துக்களின் பிடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக – தலித்துகள் தமக்கான பிரதிநிதிகளைத் தாமே சுயமாக தேர்வு செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர் உண்ணாவிரதமிருந்தார். இந்துக்களின் தயவைப் பெறுகிற ஒருவர்தான் தலித்துகளின் பிரதிநிதியாக வரவேண்டும் என்ற சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்காக அவர் உண்ணாவிரதமிருந்தார். தலித்துகளின் அரசியல் உரிமைகளை இந்துக்களுக்கு கீழ்ப்பட்டதாக மாற்றியமைப்பதில் அவர் அடைந்த வெற்றி தேசத்தந்தை என்கிற முகமூடியை அணிந்துகொண்டிருந்த ஒரு இந்துசனாதனியின் நயவஞ்சகத்திற்கு கிடைத்த வெற்றி.

கேள்வி: உங்களின் இந்தச் சிறுகதை குறித்து எழுப்பப்பட்ட எதிர்வினைகள், வாசகப் பார்வையைப் பற்றி சொல்லுங்கள்.

பதில்: போதுமான கவனம் பெற்றிருக்கிறது அல்லது இல்லை என்று சொல்வதற்கு எந்த அளவுகோலும் இங்கு இல்லை. ஆனால் பல நண்பர்கள் கதையைப் பற்றி ஏதோவொரு வகையில் விவாதித்தார்கள். குறிப்பாக பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட விதம் குறித்து கதையில் வரும் பகுதியை சுட்டிக்காட்டி அது உண்மையா என்று பலரும் கேட்டார்கள். கதையை எழுதிக் கொண்டிருக்கும் போதே பகத்சிங் பற்றி மேலும் அறியும் ஆர்வத்தில் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது Hidden Facts: Martyrdom of Shaheed Bhagat Singh- “Secrets unfurled by an Intelligence Bureau Agent of British-India” என்ற புத்தகத்தைப் பற்றிய அறிமுகக்குறிப்புகள் வாசிக்கக் கிடைத்தன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஏஜெண்ட்டாக இருந்த தலிப்சிங் அலகாபாதி என்பவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களையும் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்திலுள்ள ஆவணங்கள் சிலவற்றைத் தரவுகளாகக் கொண்டும் குல்வந்த் சிங் கூனூர் மற்றும் ஜி.எஸ்.சிந்த்ரா ஆகியோர் எழுதிய இப்புத்தகம் 2005 அக்டோபர் 28ல் வெளியாகியுள்ளது. ( தற்போது இப்புத்தகம் மறுபதிப்பு செய்யப் பட்டுள்ளது. Unistar Books Pvt. Ltd, S.C.O. 26-27, Sector 34 A, Chandigarh – 160022, ph: 0172 5077427, 5077428)

‘‘பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவரையும் தூக்கிலிடும் நடவடிக்கைக்கு ஆபரேசன் ட்ரோஜன் ஹார்ஸ் என்ற சங்கேதப் பெயரிடப்பட்டிருந்தது. நாடு முழுவதும் மக்களிடமிருந்த பெரும் கொந்தளிப்பின் காரணமாக, காலை எட்டு
மணியளவில் தூக்கிலிடும் வழக்கத்திற்கு மாறாக 1931 மார்ச் 23 மாலை 7.15 மணிக்குதான் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்பட்ட மூவரும் உயிர் பிரியும் முன்பே கழுத்தெலும்பு முறிக்கப்பட்ட நிலையில் கீழிறக்கப்பட்டு மரக்கட்டைகள் நிரம்பிய ஒருலாரியில் ஏற்றப்பட்டனர். அவர்களுடன் ஒரு பிணமும் லாரிக்குள் ஏற்றப்பட்டது. அது அவர்களைத் தூக்கிலிட்ட தொழிலாளியினுடையது. தூக்கிலிடும் வேலையை முடித்ததற்கு சன்மானமாக அவரை பிரிட்டிஷார் கைது செய்த மிகக்கொடூரமான முறையில் கொன்றுவிட்டிருந்தார்கள். பிறகு லாரி லாகூர் கண்டோன்மென்ட்டுக்கு சென்றிருக்கிறது. அப்போதைய பஞ்சாப் கவர்னரின் தனிஉதவியாளராக இருந்த சாண்டர்சின் மாமனாரின் ஏற்பாட்டில் அங்கு காத்திருந்த சாண்டர்ஸ் குடும்பத்தார் மூவரையும் ஆத்திரத்துடன் சுட்டு பழிதீர்த்துக் கொண்டனர்… தூக்கிலிடப் பட்டவர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியக்கூடாது என்பதனால் அறிவிக்கப்பட்ட இடத்திற்கு மாறாக வேறொரு இடத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டன… ’’.

‘‘சாண்டர்ஸ் கொலை வழக்கு குறித்து தனது நினைவுக்குறிப்பில் எழுதிப்போகும் பஞ்சாப் குற்றப்புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் வி.என்.ஸ்மித் ‘‘மாலை 7 மணியளவில் சிறைக்குள்ளிருந்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் கேட்கத் தொடங்கியதை வைத்தே உள்ளுக்குள் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்து விட்டது’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நினைவுக்குறிப்பு பிரிட்டிஷ் நூலகத்தில் நுண்படச்சுருளாக இன்றும் இருக்கிறதென்கின்றனர் நூலாசிரியர்கள். இந்நூல் வெளியானதையடுத்து பகத்சிங்கின் சகோதரி பிரகாஷ் கவுர் தனது சகோதரர் தூக்கிலிடப்பட்ட விதம் குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய அரசைக் கோரியிருந்தார்.

-இப்படியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் அவ்வாறு எழுதியிருக்கிறேன் என்று விளக்க வேண்டியிருந்தது. ஓரிருவராவது அந்தப் புத்தகத்தை தேடிவாங்கிப் படித்திருக்கக்கூடும். இன்னும் சில நண்பர்கள் ‘‘கோபப்படும்போது அழகாய் தெரியவேண்டும் என்று அலங்காரம் பண்ணக் கிளம்பிகிறவனால் ஒருபோதும் கோபப்படவே முடியாது’’ என்ற பெட்டிச்செய்தியைக் காட்டி ‘‘இது எங்கள் தலைவரைக் கிண்டலடித்து எழுதியதுதானே?’’ என்று கோபப்பட்டார்கள். உங்கள் கண்ணுக்கு அப்படித் தெரிந்தால் நானென்ன செய்ய என்று நழுவிப்போவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்படி அலங்காரம் பண்ணிக்கொண்டிருப்பதிலேயே காலத்தையும் காசையும் வீணடிக்கிற தலைவர்கள் சிலர் எந்த இயக்கத்தில்தான் இல்லை என்று கேட்பதில் தவறொன்றும் இருப்பதாக நான் கருதவில்லை. போராளிகள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்கிற சிலர் விதவிதமான தோரணைகளில் தோன்றும் மெகாசைஸ் விளம்பரத்தட்டிகளைப் பார்த்து மனம் வெதும்பியே அவ்வாறு எழுதியிருந்தேன்.

தொண்டர்கள் கையில் இருக்கும் அற்பசொற்பத் தொகைகளையும் இப்படி தனது விளம்பரத்துக்காக செலவழிக்க வைக்கும் ஊதாரித்தலைவர்களை வேறு எப்படிதான் விமர்சிப்பது? சுவர் கண்ட இடமெல்லாம் இந்தத் தலைவர்களின் பெயரை ஆளுயரத்திற்கு எழுதிக்குவிக்கும் தொண்டர்கள் எத்தனை நாளைக்கு தங்களது சம்பாத்தியத்தை இதற்காக இழக்க முடியும்? எனவே அவர்கள் வேறுவழியின்றி நெறியற்றவகைகளில் இயக்கங்களின் பெயரைச் சொல்லி பணமீட்டும் நிலைக்குத் தாழ்கிறார்கள். அரசியலில் ஒருவரது இருப்பு ஆடம்பரத்தின் வழியாகத்தான் நிறுவப்பட முடியும் என்று ஒரு இயக்கம் நினைத்துவிடுமானால் அதற்குப்பிறகு அது தன் தொண்டர்களிடம் எப்படி தொண்டுள்ளத்தை எதிர்பார்க்க முடியும்? தலைவர்களின் இந்தச் சீரழிவு மனநோய்க்கு ஒத்துப்போகிறவர்களும் செலவழிக்கக்கூடியவர்களுமே பதவிக்கும் பொறுப்புக்கும் உயர்த்தப்படுவார்கள் என்றாகி விட்டால் பொதுவாழ்க்கை, அரசியல்பணி என்பதெல்லாம் மக்களுக்கானதல்ல என்றாகிவிடாதா? எனவே, போராளி தோற்றத்தில் இப்படி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு உபயோகமாக வேறு எதுவும் செய்யலாமே என்று அந்தத் தலைவர்களைப் பார்த்து கேட்காமல் ஏன் எழுதினாய் என்று என்னைப் பார்த்து கோவித்துக் கொள்ள எந்தத் தார்மீகமும் கிடையாது என்று பொறுமையாக சொல்லத்தான் வேண்டியிருந்தது.

குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றொரு விசயம், கதையில் வரக்கூடிய மெஹருன்னிசாவின் வயது குறித்த ஒரு காலக்குழப்பத்துடனேயே பிரசுரமாகிவிட்டது. கதையோட்டத்தில் நான் அதை கவனிக்கவேயில்லை. இதுவரை படித்த வேறுபலரும்கூட அதை கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. எழுத்தாளர் பிரியாதம்பி தான் நுணுக்கமாக வாசித்து அந்தப் பிழையை சுட்டிக்காட்டினார். சரிசெய்துகொள்வதற்கு உதவியாக இருந்தது. பகத்சிங்கை மையப்படுத்தி நாடகம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் அப்பணசாமி சமீபத்தில் இந்தக் கதையைப் படித்துவிட்டு வெகுவாகப் பேசினார். அவருக்கு தோழர் ஜீவசுந்தரி பரிந்துரைத்திருக்கிறார். இதோ இப்போது நீங்கள்…. இப்படியாக இந்தக்கதை ஒருவர்பின் ஒருவராக வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எழுத்தின் பயனும் அதுதானே?

நன்றி: vallinam.com.my

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *