தமிழ் குறும்படம். குகன் என்பவர் இயக்கியுள்ளார். ஜெஸ்ஸி ருக்மணி, கவிதா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். லடாக் வரை பைக்கில் சென்று திரும்பும் ருக்மணி தன் தந்தையுடன் பேசும்போது அவர் தான் பார்த்த திரைப்படம்’கடைசி விவசாயி’ பற்றி பாராட்டி பேசுகிறார். சென்னை புறநகர் திரையரங்கம் ஒன்றில் அந்தப் படம் ஓடுவது கண்டு ருக்மணி அங்கு செல்கிறார்.ஆனால் மூன்றே பேர்கள்தான் இருப்பதால் படம் ரத்தாகிவிடுகிறது.அதில் ஒருவர் போஸ்டர் ஒட்டும் முருகேஷ். வடபழனி தியேட்டர் ஒன்றில் அது ஓடுவதாகவும் தான் அங்கு போவதற்கு விரைவான வழி காட்டுவதாகவும் கூறுகிறார். முதலில் அவர் உதவி வேண்டாம் என்று சொல்லும் ருக்மணி பின் அவரை தன் பைக்கில் அழைத்துக்கொண்டு செல்கிறார். மறுநாள் தலைவர் வர இருப்பதாகவும் அதற்காக போஸ்டர்கள் நிறைய ஒட்ட வேண்டியதிருப்பதையும் புறக்கணித்து ருக்மணியுடன் போகிறார் முருகேஷ். அவர் லுங்கி அணிந்திருப்பதால் தியேட்டரில் அவரை உள்ளே விட மறுக்கிறார்கள். ருக்மணி வாதாடியும் பயனில்லை.பின் அவரின் ஒரு செயலினால் முருகேஷும் உள்ளே போக முடிகிறது. இதுதான் கதை.
படம் வெளியான காலம் தெரியாததால் அசோக் நகரில் குறவர் இனத்தை சேர்ந்த குடும்பத்தை தியேட்டர் உள்ளே விட மறுத்ததன் பின்னணியில் எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் மிக சிறப்பாக எடுக்கப்பட்ட படம். அளவான வசனங்கள்.சிறப்பான நடிப்பு. கதாநாயகியாக நடித்திருக்கும் ருக்மணி கம்பீரமாக இருக்கிறார். தேவையான இடங்களில் இறங்கி வந்து பேசுகிறது அந்தப் பாத்திரம். முருகேஷாக நடித்திருக்கும் நடிகரும் இயல்பாக நடித்திருக்கிறார்.
‘கடைசி விவசாயி’ படத்தை சில காட்சிகள் மட்டும் பார்த்திருப்பதால் முழுவதும் பார்க்க வேண்டும் என்கிற அவரது ஆர்வம், இரவு வந்து போஸ்டர்களை ஒட்டிக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை, ருக்மணி வேண்டாம் என்றாலும் சினிமா டிக்கட்டிற்கான பணத்தைக் கொடுப்பது, தான் ஏதாவது பஸ் பிடித்துப் போவதாகவும் ருக்மணியை படம் பார்க்கப் போக சொல்லும் இடம் ஆகியவை நமக்கு அவரிடம் ஒரு பிரியத்தை உண்டுபண்ணுகிறது.
முடிவு ஒரு விதத்தில் பாராட்டக்கூடியது என்றாலும் சற்று அதீதமானது.ஆனால் சினிமா என்பது யதார்த்தத்தை சற்று மிகைப்படுத்திக்காட்டுவதுதான். மேலும் இத்தகைய நிகழ்வுகள் நிஜத்திலும் நடக்கலாம். அதன்பின்னால் உள்ள உணர்வை பாராட்ட வேண்டும். குறும்படம் என்றால் மெதுவாக நகரும்; இருட்டில் நடக்கும்; மிகவும் துயரமான காட்சிகள் பெரும்பாலும் இருக்கும் போன்ற கட்டமைப்புகளை இந்தப் படம் தகர்க்கிறது.
தான் வெறும் முருகேஷ் இல்லை;’போஸ்டர் முருகேஷ்’ என்றும் முப்பது வருடங்களாக போஸ்டர் ஒட்டுகிறேன் என்று பெருமையாக சொல்கிறார். எந்த தொழில் செய்தாலும் அதில் ஒரு பெருமிதத்தை தொழிலாளி காண்கிறார். அதைத்தான் இது காட்டுகிறது.அதே சமயம் முப்பது வருடம் போஸ்டர் ஒட்டிக்கொண்டே இருக்கும் அவலமும் நம்மை தாக்குகிறது. பார்க்க விரும்புவர்களுக்கு இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்.
youtu.be/8UPsBzsHnRI