"ஆண் பாவம் பொல்லாதது" திரை விமர்சனம் | Rio Raj's Aan Paavam Pollathathu Movie Review | Best Tamil Cinema Review | www.bookday.in

“ஆண் பாவம் பொல்லாதது (Aan Paavam Pollathathu)” திரை விமர்சனம்

ஆண் பாவம் அறியாதது
———————————–

ஐ.டி.துறையில் வேலை பார்க்கும் கதாநாயகனுக்கு பார்க்கப்படும் பெண் தான் கதையின் நாயகியாகிறாள் தான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக தனது தோழிகளிடம் ஆலோசனை கேட்கையில் அவர்கள் கதாநாயகனை பார்க்கும் பொழுது முரட்டுத்தனமாகவும், சாக்லேட் பையனாகவும் தெரியவில்லை கண்டிப்பாக அவன் ஒரு நடுநிலை நக்கியாகத்தான் இருப்பானென்றும் அவனைத் திருமணம் செய்து கொண்டு உனக்கு அடிமையாக்கி விடு என்று சொல்லும் பொழுது அங்கு ஒரு ஆண் அடிமையாக்கப்படுகிறான்.

பெண் பார்க்கும் சடங்கில் கதாநாயகியை அமர சொல்லும் வேளையில் கீழே அமரும் போது கதாநாயகனும் சோஃபாவிலிருந்து இறங்கி கீழே அமருகையில் ஆணும் பெண்ணும் சமம் என்பதே அக்காட்சி நமக்கு தெளிவுபடுத்துகிறது. உண்மையில் கதையின் நாயகி கதையின் நாயகனை பிடித்து தான் ஒப்புக் கொண்டாரா என்பது இங்கு கேள்விக்குறியே ? பெண்ணானவள் அவளது வீட்டில் கண்டிப்புடன் வளர்வதால் தனக்கு திருமணமான பின் அங்கு சுதந்திரமாக வாழலாமென்று நினைத்துக் கூட அத்திருமணத்துக்கு ஒப்புக் கொண்டிருக்கலாம்.

பெண்ணியம் என்றொரு பெயரில் கதாநாயகனுக்கு நிகராக அவனுடன் போட்டி போட்டு சிகரெட் அடிப்பது,மது குடிப்பது மற்றும் ரீல்ஸ் என்ற பெயரில் வீடியோ போடுவதற்கு நேரம் கிடைக்கையில் வீட்டில் சமையல் பண்ணுவதற்கு மட்டும் நேரம் கிடைக்கவில்லை உடம்பு வலிக்கிறது என்று கூறுகிற அப்பட்டமான வாதமும் பெண்ணியத்திற்குள் அடங்கி விடுகிறது.

திருமணத்திற்கு முன்பு ஆணிடம் வீடு,கார்,வேலை,சொத்து மதிப்பு இதெல்லாம் இருக்கிறதா என்று பார்த்து ஒரு சொகுசு வாழ்க்கை தேடும் பொழுது பெண்களுக்கு அவர்களின் வீட்டாரிடமிருந்து கொடுக்கப்படும் போது மட்டும் அது வரதட்சணையாக பார்க்கப்படுவதேன் ? இன்றுள்ள சூழலில் பெண்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே இங்கு நம்பப்படுகிறது அவர்களுக்கான சட்டமும் சாதமாக அமைகிறது.இங்கு ஆண் முழுவதும் செயலிழந்து விடுகிறான்.

"ஆண் பாவம் பொல்லாதது"  திரை விமர்சனம் | Rio Raj's Aan Paavam Pollathathu Movie Review | Best Tamil Cinema Review | www.bookday.in

தன் தந்தை தட்டி கேட்கும் போது மட்டும் எதுவுமே கேள்வி கேட்காத பெண் ஒரு கணவன் கேட்கும் போது மட்டும் அது பெண்ணியத்திற்குள் அடங்கி விடுகிறது.ஒரு பெண் நான் ஆடை இல்லாமல் வந்தாலும் என்னோட உரிமையின்றி என்னைப் பார்க்க கூடாது என்று சொல்லும் போது, அப்படி ஒரு ஆணின் முன்னால் உடையே இல்லாமல் வந்து பாலின உணர்ச்சியைத் தூண்டுவதற்கு அவர்களுக்கு யார் அதிகாரம் குடுத்தது.இதுவும் பெண்ணியத்திற்குள் அடங்குமா ? இப்படியென பல கேள்விகள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

திருமணத்திற்கு பின்பு கதாநாயகியோ எதற்கெடுத்தாலும் பெண்ணியமென்றால் ( feminism ) என்னவென்றே தெரியாமல் பேச, அதற்கு அப்பறம் தான் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது.இக்கருத்து வேறுபாட்டில் கதாநாயகி கர்ப்பம் தரித்திருப்பதை அறியாத கதாநாயகன் அவளின் அறியாமையே எடுத்துரைக்கவே கதாநாயகியோ வருத்தமாகி மயங்கும் தருவாயில் கரு கலைந்து விடுகிறது. அப்போது தான் கதாநாயகனுக்கு அவள் கர்ப்பம் தரித்திருப்பது தெரிய வர இதைப் புரிந்து கொள்ளாத கதாநாயகி இனிமே அவனிடம் வாழ முடியாதென்று முடிவு செய்து ஏற்கனவே விவாகரத்தான ஒரு பெண் வக்கீலிடம் சென்று விவாகரத்து வாங்க முன் வருகிறாள்.

கதாநாயகனோ என்ன செய்வதென்று அறியாமல் ஒரு வக்கீலை அணுகுகிறான். கதாநாயகனுக்கு அவளுடன் சேர்ந்து வாழவே முற்படுகிறான். ஆனால் கதாநாயகியோ அவனிடமிருந்து விலக அவன் மேல் இல்லாத குறைகளையெல்லாம் கூறி விவாகரத்து வாங்கவே முற்படுகிறாள்.

இதற்கிடையில் பெண்களின் சுதந்திரத்திற்காக போராடும் ஒரு தோழரை சந்திக்கும் வேளையில் அவர், அவரின் கணவருக்கு காஃபி போட்டு தரும் பொழுது,தோழர் இதெல்லாம் ஏன் நீங்கள் செய்கிறீர்கள்.ஆண்கள் பல ஆண்டு காலங்களாக நம்மை அடிமைப்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் செய்தால் நாம் இன்னும் அவர்களுக்கு அடிமைப்பட்டு தான் இருக்க வேண்டும் என்று கூறுகையில், ஆமாம் அடிமைப்பட்டு தான் இருந்தோம்.ஆனால் இப்போது நான் செய்தது அவர் மேல் இருந்த அன்பினால், ஏன் உங்களிடமும் கேட்கத் தான் செய்தேன் அதற்காக நான் உங்களுக்கு அடிமையா ? என்று கூறுகையில் அடிமைக்கும் அன்புக்குமான வித்தியாசம் அவர்களுக்கு புரிகிறது.

இறுதியில் நீதிமன்றத்தில் கதாநாயகன், கதாநாயகியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விவாகரத்து தருகையில் கதாநாயகியோ தன் தவறை உணர்ந்து விவாகரத்து இப்போது வேண்டாமென்று கூறுகிறாள். அதற்கு நீதிபதியான திருநங்கை மூன்று மாதங்கள் கழித்து இருவரும் நல்ல படியாக சேர்ந்து வந்தால் தான் தீர்ப்பளிப்பதாக உத்தரவிடுகிறார்.

ஆண்கள் எழுபது சதவீதமும் பெண்கள் முப்பது சதவீதமும், சில சமயம் ஆண்கள் முப்பது சதவீதமும் பெண்கள் எழுபது சதவீதமுமாக இருக்க வேண்டும் என்பது ஆகச் சிறந்த கருத்து.பெண்களும் ஆண்களுக்கு சமம் தான். அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து தான் வாழ்க்கையின் உலகம் சுழலும்.

ஆண் பாவம் பொல்லாதது – ஆண் பாவம் அறியாதது.

எழுதியவர் : 

✍🏻 கண்ணன்.க
வல்லம்பட்டி
விருதுநகர் மாவட்டம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *