மீண்டுமோர் ஆயுள் வேண்டும் – ரிஸ்கா முக்தார்மீண்டுமோர் ஆயுள் வேண்டும்

அலைபேசிதனை நினைக்காமல்
புலனமதைத் திறக்காமல்
இணையமதை நெருங்காமல்
முகப்புத்தகமதைத் தீண்டாமல்
மின்னஞ்சல்தனைக் காணாமல்
வாழ்ந்திட
எனக்கோர் ஆயுள் வேண்டும்

தற்படங்கள் எடுக்காமல்
குறுஞ்செய்திகள் அனுப்பாமல்
கூகுள்தனில் தொலையாமல்
எச்செயலியையும் இயக்காமல்
வாழ்ந்திட
எனக்கோர் ஆயுள் வேண்டும்

பட்சிகளின் பாடல் கேட்டு
புத்தகங்களில் புதைந்து மீண்டு
உற்றாரின் முகம் பார்த்துச் சிரித்து
பிடித்ததெதையும் ருசித்து உண்டு

மழை
நிலா
கடல் வான் மலை
விண்மீனென
அத்தனையும்
ரசித்திருக்க
எனக்கோர் ஆயுள் வேண்டும்

இன்னும்
செல்பேசித் திரைகளுக்குள்
சிறையுண்டு நான் தொலைத்த
அத்தனையும்
மீட்டெடுக்கவேணும்
மீண்டுமோர் ஆயுள் வேண்டும்
எனக்கு
அவ்வளவே!!!

– ரிஸ்கா முக்தார்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)