பிருந்தா காரத் எழுதிய ரீட்டாவின் கல்வி (Ritavin Kalvi) - நூல் அறிமுகம் - பாரதிபுத்தகளயம் வெளியீடு - https://bookday.in/

ரீட்டாவின் கல்வி (Ritavin Kalvi) – நூல் அறிமுகம்

ரீட்டாவின் கல்வி (Ritavin Kalvi) – நூல் அறிமுகம

இலண்டனில் ஏர் இந்தியா நிறுவனத்தில் தான் பார்த்துவந்த வேலையை கம்யூனிஸ்டாக வாழ்வதற்காக உதறியெறிந்துவிட்டு வந்த தோழர் பிருந்தா காரத்தின் பத்தாண்டுகால நினைவுக்குறிப்புகளாக வெளிவந்துள்ளது ரீட்டாவின் கல்வி (Ritavin Kalvi) என்கிற நூல்.

கட்சிப்பணிக்கு வந்தபிறகும் தனக்கு வழங்கப்பட்ட – பீப்பிள்ஸ் டெமாக்ரஸி பத்திரிகைப் பணியில் மனநிறைவடையாமல், தொழிலாளர்களிடையே வேலை செய்வதையே பெரிதும் விரும்புகிறார். அதற்காக கட்சியின் தலைவர்களது வழிகாட்டுதல்படி பிருந்தா டெல்லிக்குச் செல்லும் தருணத்தில் நாட்டில் அவசரநிலை அமலுக்கு வந்து இரண்டுமாதங்கள் ஆகிவிட்டிருந்தது. தொழிலாளர் உரிமைகளும் தொழிற்சங்க நடவடிக்கைகளும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில் பிருந்தா டெல்லியின் பருத்தி ஆலைத் தொழிலாளர்களை அணிதிரட்டும் பணியைத் தொடங்குகிறார். பிருந்தா என்கிற இவரது பெயரை உச்சரிப்பதற்கு சிரமப்பட்ட ஒரு தொழிலாளர் இலகுவாக இவரை விளிப்பதற்காக ரீட்டா என்கிற பெயரைச் சூட்டுகிறார். அப்போதிருந்து 1985 நவம்பர் 11 வரையான பத்தாண்டுகாலமும் தோழர் பிருந்தா, ரீட்டா என்ற பெயருடனே செயல்பட்டிருக்கிறார். அந்த வாழ்வனுபவமே இந்தப் புத்தகம்.

தொழிலாளர்களது தனித்திறமைகளையும் ஆளுமைப்பண்புகளையும் கண்டுணர்ந்து அவர்களை முன்னிறுத்திச் செயல்படுவதையே தனது அணுகுமுறையாக கொண்டிருந்திருக்கிறார். “ஒரு போராட்டத்தில், குறிப்பாக வேலைநிறுத்தத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் தொழிலாளர்களின் குரல் வெளிப்பட வேண்டும் என்ற முக்கியபாடத்தை அதிலிருந்து நான் கற்றேன். அவர்களை முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் போல பாவிக்க மட்டும் செய்யாமல், அவர்களைப் பங்கேற்பாளர்களாகவும் உள்ளடக்க வேண்டும். சீர்திருத்தவாத தொழிற்சங்கங்கள் போல தலைமை மட்டத்தில் முடிவுகளை எடுத்துவிட்டு அதை தொழிலாளர்களுக்கு வெறும் கட்டளையாக சொன்னால் தொழிலாளர்கள் மனமுடைந்து உத்வேகமிழந்துப் போவார்கள். இது வர்க்கப் போராட்டத்திற்கே பின்னடைவாக அமையும்” என்கிற ரீட்டாவின் படிப்பினை முன்னெப்போதையும்விட இப்போது மிகவும் தேவையாகிறது.

தொழிலாளர்களிடம் காணப்படும் அன்னியவர்க்க கருத்தியல் – குறிப்பாக சாதியம் குறித்த அவரது அவதானிப்பும் மதிப்புமிக்க வழிகாட்டுதலாகும். தொழிலாளர்கள் தாமாகவே வர்க்கவுணர்வைப் பெற்றுவிடுவதில்லை. அது இனிமேல்தான் அரசியல் போதத்தின் மூலமாக உருவாக்க வேண்டிய உணர்வாக இருக்கிறது என்று அம்பேத்கர் குறிப்பிட்டதை இது நினைவூட்டுகிறது.

புத்தகத்தின் இயங்கெல்லை பத்தாண்டுகாலம் தான் என்றாலும் அதற்கு முன்னும்பின்னுமாக விரிந்து சமகாலம் வரை பேசுகிறது. அதுபோலவே தொழிற்சங்கப் பணிகள் சார்ந்ததாக மட்டுமன்றி அவரது குடும்பம், கல்வி, சர்வதேச, தேசிய, வங்க அரசியல் சூழலின் உயிர்ப்பான பகுதியின் சித்திரமாகவும் விளஙகுகிறது.

பிரகாஷ் காரத்தின் குடும்பப்பின்புலம், கல்வி, இயக்கச்செயல்பாடு, இவர்களுக்குள் காதல், தலைமறைவுக்காலத்தில் திருமணம், கட்சிப்பணிக்காக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாமென்கிற துணிச்சலான முடிவு என விரியும் பக்கங்கள் புனைவைப் போன்ற உணர்ச்சிகரமான திருப்பங்களுக்குள் நம்மை இழுத்துச்செல்கின்றன். தோழர் சுந்தரய்யா தனது இணையர் லீலா ஒத்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் அவரிடம் ஒப்புதல் பெறாமலே ஆண் கருத்தடுப்பு அறுவைச்சிகிச்சை செய்துகொண்டது பற்றியும் தன் இணையரிடம் கேட்காமல் எடுத்த இந்த முடிவு பற்றி சுந்தரய்யா தன்மீதான சுயவிமர்சனத்தோடு கூறியதும் இந்நூலில் பதிவாகியுள்ளது.

சுர்ஜித், பி.சுந்தரய்யா, பி.ராமமூர்த்தி, மேஜர் ஜெய்பால் சிங், ஏ.கே.ஜி உள்ளிட்ட தலைவர்களின் அன்பிலும் வழிகாட்டுதலிலும் வளர்ந்த பிருந்தா அந்த அனுபவ வெளிச்சத்தை சமகாலத்திற்குப் பாய்ச்சுகிறார்.

அவசரநிலைக்காலத்தின் கொடூரங்களை எதிர்கொண்டு உரமேறிய அவரது மனம் தற்காலத்தின் அறிவிக்கப்படாத அவசரநிலைக்காலத்திலும் வலுகுன்றாமல் இயங்குகிறது. துர்க்மான் கேட்டில் நுழைந்த சஞ்சய்காந்தியின் புல்டோசர்களை நேருக்குநேர் எதிர்கொண்ட அதே சீற்றத்துடன் இப்போது மோடி யோகிகளின் புல்டோசர்களையும் அவர் குறுக்கே பாய்ந்து முன்னேறவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்.

தன்வரலாற்றுக்குறிப்பினை இவ்வளவு உயிர்ப்புடனும் செறிவுடனும் எழுதமுடியும் என்பதை ரீட்டா@பிருந்தா மெய்ப்பித்துள்ளார். அவரது உணர்வோட்டத்துடன் ஒன்றி அபிநவ் சூர்யா ல.தி & சித்தார்த் கோ.மு இருவரும் மொழிபெயர்த்துள்ளனர். ஆங்கிலத்தில் வெளியான அச்சு ஈரம் காய்வதற்குள்ளாக பாரதி புத்தகாலயம் தமிழுக்கு கொண்டுவந்தமைக்கு பாராட்டுகள் (எழுத்துப்பிழைகளுக்கான குட்டுடன்).

நூலின் தகவல்கள் : 

நூல் : ரீட்டாவின் கல்வி (Ritavin Kalvi)
ஆசிரியர் : பிருந்தா காரத்
தமிழில் : L.T அபிநவ் சூர்யா & K.M சித்தார்த் பிருந்தா காரத்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

நூல் அறிமுகம் எழுதியவர்: 

ஆதவன்+தீட்சண்யா | Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan

– ஆதவன் தீட்சண்யா

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *