இங்கிலாந்து கவிஞர் ரோல்ட் டால் எழுதிய சிண்ட்ரெல்லா பாடல் குறித்த கட்டுரை | Roald Dahl Famous Poems Cinderella Oriented Article in Tamil |

இங்கிலாந்து கவிஞர் ரோல்ட் டால் எழுதிய சிண்ட்ரெல்லா (Cinderella) – ஒரு மறு வாசிப்பு

சிண்ட்ரெல்லா (Cinderella) – ஒரு மறு வாசிப்பு

– ரோல்ட் டால்

‘நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் — என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை. — புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின், — என்னை
சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? ‘

இது பாஞ்சாலியின் குரலாக பாரதி மகாபாரதத்தை செய்த மறுவாசிப்பு.

‘அவர் உன்னை தீக்குளிக்க சொன்னாரா?

ஆவன் உன்னை தீக்குளிக்க சொன்னானா?’

இது அகலிகை சீதையிடம் கேட்பதாக புதுமைப்பித்தன் ராமாயணத்தை மறுவாசிப்பு செய்தது.

இதைப்போல் பிரகலாதன் புராணத்தை சாருவாகனன் மறு வாசிப்பு
செய்திருக்கிறார். சுப்பாராவ் முருகன்- அவ்வை கதையை புதிய கோணத்தில்
எழுதியிருக்கிறார். இதேபோல் மேலை நாட்டிலும் மறுவாசிப்புகள்
நடந்திருக்கின்றன. ஃபாஸ்ட்டின் கதையை கதேயும் மார்க்ஸும் மறுவாசிப்பு
செய்திருக்கிறார்கள். இதெல்லாம் புராணங்கள், காப்பியங்கள் குறித்த
மறுவாசிப்புகள். சிறுவர்களுக்கு எழுதப்பட்ட இன்றும் பல்லாயிரக்கணக்கான
குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிற ஒரு கதையை ரூவால் தால் எனும்
இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் மறுவாசிப்பு செய்துள்ளார். இருண்மையான
பகடி கொண்ட இவரது சுதந்திரமான கற்பனைக் கதைகள் 60க்கும் மேற்பட்ட
மொழிகளில் மொழியக்கம் செய்யப்பட்டதுடன் 250 மில்லியன் பிரதிகளுக்கு மேல்
விற்பனையாகியுள்ளதாம்.

இவரது சிண்ட்ரெல்லா (Cinderella) கதையின் மறுவாசிப்பை பார்க்கலாம். நாம் எல்லோரும்
படித்துள்ள கதையில் சிண்ட்ரெல்லா (Cinderella) தன் சித்தியினாலும் ஒன்றுவிட்ட
சகோதரிகளினாலும் கொடுமைப்படுத்தப்படுகிறாள். அந்த நாட்டு இளவரசரின்
நாட்டிய விழாவிற்கு அவர்கள் அழகான ஆடைகள் அணிந்து செல்வார்கள். அத
விழாவில்தான் இளவரசன் தனக்கான மணமகளை தேர்ந்தெடுக்கப் போகிறான்.
சிண்டரெல்லாவை வீட்டு வேலைகளை செய்யுமாறு பணித்துவிட்டு
சென்றுவிடுகிறார்கள். தன்னால் அந்த விழாவிற்கு செல்ல முடியவில்லையே என்று
சோகமாக இருக்கும் சிண்டரெல்லா முன் ஒரு தேவதை தோன்றி அவளுக்கு அழகிய
ஆடைகளும் காலணிகளும் வழங்கி அரண்மனைக்கு செல்லுமாறு கூறுகிறது. அவளும்
அங்கு சென்று இளவரசனுடன் நடனம் ஆடுகிறாள். அவன் அவள் அழகில்
மயங்குகிறான். இரவு பனிரெண்டு மணிக்கு மேல் தன் மந்திரம் வேலை செய்யாது
என்று தேவதை கூறியிருப்பதால் சிண்ட்ரெல்லா (Cinderella) அவசரமாக அரண்மனையைவிட்டு
ஓடுகிறாள். அப்போது அவளது ஒரு காலணி கழன்று விழுந்து விடுகிறது. அதை
வைத்து மறுநாள் இளவரசன் அவளைக் கண்டுபிடித்து மணமுடிக்கிறான்.

இப்போது ருவால் தாலின் கதையை பார்ப்போம். தேவதை கொடுத்த ஆடையில்
சிண்ட்ரெல்லா (Cinderella) அரண்மனைக்கு சென்று இளவரசனுடன் ஆடுவது, காலணியை விடுவது,
இளவரசன் அந்தக் காலணிக்குரியவளை மணப்பேன் என்று கூறுவது வரை எந்த
மாற்றமும் இல்லை. இளவரசனின் வார்த்தைகளை கேட்ட சிண்டரெலாவின் ஒரு சகோதரி
அந்தக் காலணியை கழிவறைக்குள் தூக்கி வீசிவிட்டு அந்த இடத்தில் தன்
காலணியை வைத்து விடுகிறாள். இளவரசனிடம் தனக்கு அந்தக் காலணி
பொருந்துகிறது என்கிறாள். பருக்கள் நிறைந்த அவளது முகத்தைப் பார்த்த
இளவரசன் கோபமடைந்து அவளை மணக்க மறுக்கிறான். ‘நீ ஒரு வாக்குறுதி
கொடுத்திருக்கிறாய். அதை நிறைவேற்ற வேண்டும் ‘ என்று வற்புறுத்துகிறாள்.
சினம் கொண்ட இளவரசன் அவள் தலையை வெட்டி வீழ்த்துகிறான். இரண்டாவது
சகோதரியும் இதே முடிவை அடைகிறாள். தலைகள் உருளும் சத்தம் கேட்டு
சிண்ட்ரெல்லா (Cinderella) வெளியே வந்து பார்க்கிறாள். அவளது அழுக்கான கோலத்தைக் கண்ட
இளவரசன் “யாரிந்த பிச்சைக்காரி? இவளை துரத்தி அடியுங்கள்’ என்கிறான்.
இப்போது தேவதை சிண்டரெலா முன் தோன்றி ‘இப்போதும் உனக்கு ஏதாவது
வேண்டுமென்றால் கேள். தருகிறேன்’ என்கிறது. ‘இந்த முறை நான்
எச்சரிக்கையாக இருப்பேன்’ என்று சிண்ட்ரெல்லா (Cinderella) முடிவெடுக்கிறாள்.’தலைகளை
வெட்டி வீசும் ஓருவனை யார் மணப்பார்கள்? எனக்கு ஒரு கவுரவமான ஆளை
தேர்ந்தெடுத்துக் கொடு. அவர்கள்தான் கிடைப்பதில்லை.’ என்கிறாள்.
தேவதையும் ஒரு இனிப்புப் பண்டங்கள் செய்யும் அழகான எளியவன் ஒருவனை
காட்டுகிறது. அவனையே சிண்ட்ரெல்லா (Cinderella) மணம் முடிக்கிறாள். அவர்கள் வீடு
சிரிப்பும் களிப்பும் நிறைந்து காணப்படுகிறது.

பாடலில் பல இடங்கள் ரசிக்கும்படியாக உள்ளன. தொடக்கத்திலேயே ‘இந்தக் கதை
தெரியுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
உண்மையான கதை இதையெல்லாம் விட கொடூரமானது” என்கிறார். ‘நீங்கள்
கேல்விப்பட்ட கதை போலியானது. பல்லாண்டுகளுக்கு முன்னால் குழந்தைகளை
மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென்பதற்காக மென்மையாகவும் ருசியாகவும்
உண்டாக்கப்பட்ட ஒன்று.’ என்கிறார்.

சிண்டரெல்லவின் பரிதாப நிலமையை சொல்லும்போது சகோதரிகளும் சித்தியும் அவளை
ஈரமான பரணில் விட்டு செல்கிறார்கள். அங்கே எலிகள் பசியில் அவளது காலை
சுரண்டுகின்றன.

இளவரசனுடன் நடனமாடும்போது சிண்ட்ரெல்லா (Cinderella) அவனை இறுக்கி அணைக்கும்பொது
அவனுக்கு மூச்சு திணறுகிறதாம். அதேபோல் பனிரெண்டு மணியானதும் அவள் ஓட
முயற்சிக்கிறாள். அவன் அவள் ஆடையை பற்றி இழுக்கிறான். அவள் ஆடை கிழிந்து
ஓடுகிறாள். இதெல்லாம் வழக்கமான குழந்தைகள் கதையில் வராது. இன்னொரு
இடத்தில் சிண்டரெல்லாவின் சகோதரி தன்னைத்தான் அவன் மணக்க வேண்டும் என்று
வற்புறுத்தும்போது அவன் இந்தக் காதிலிருந்து அந்தக் காது வரை வெளிறிப்
போகிறானாம்.

ரோல்ட் டாலின் இந்தப் பாடல் வழமையான தேவதைக் கதைகளின் முடிவுகளிலிருந்து
மாறுபடுகிறது. இளவரசனின் கொடூர இயல்பையும் வெளிக்காட்டுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் குறித்த வார்ப்பட பார்வையை உடைக்கிறது.
சிண்ட்ரெல்லா (Cinderella) சிந்திப்பவளாகவும் சுதந்திரமானவளாகவும் காட்டப்படுகிறாள்.
அவரது மற்ற பாடல்களைப் போலவே இதுவும் இருண்மையான பகடியும் சமூக
விமர்சனமும் கொண்டதாக விளங்குகிறது. (Cinderella by Roald Dahl – Famous
poems, famous poets. – All Poetry)

கட்டுரையாளர்:

இரா.ரமணன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *