திரைவிமர்சனம்: ‘ராக்கெட்ரி’ – பொய்களின் அட்டகாசம் – ஆயிஷா. இரா. நடராசன்
‘ராக்கெட்ரி’ – பொய்களின் அட்டகாசம்
ஆயிஷா . இரா. நடராசன்

ஒரு கலைப் படைப்பு உண்மையை பேசாவிட்டால், அது செல்லரித்துப் போன ஓவியத்துக்கு சமானமாகி ஆகிவிடும்.
சத்யஜித்ரே

அறிவியலை அல்லது அறிவியலின் வரலாற்றை முன்வைத்து தயாரிக்கப்படும் திரைப்படங்கள் என்பவை குறைந்தபட்சம் பத்தாண்டு ஆண்டுகால ஆய்வுகளை மேற்கொண்டு – தொகுத்த முறையான ஆவணங்களை முன்வைத்து படமாக்கப்பட வேண்டியவை.

ஸ்டீவன் ஸ்பீல் பர்க்

(ஜீராசிக் பார்க் உட்பட திரைபடங்களின் இயக்குநர்)

ரொம்பவும் தயங்கி காலதாமதமாக நான் ராக்கெட்ரி படம் பார்த்தேன். இஸ்ரோ விஞ்ஞானி பற்றிய படம். எதுவும் தவறாக சொல்லிவிட வேண்டாம் என்று எவ்வளவு கட்டுப்படுத்தினாலும்… முடியவில்லை மனம் ஆற மறுக்கிறது.

ஏற்கனவே ‘மங்கள்யான்‘ மற்றும் ‘ராக்கெட் பாய்ஸ்’ எப்படி வரலாற்றை வளைத்து ‘அறிவியல் பூர்வமான‘ பக்தி அதிலும் தேசபக்தி பேசினவோ அதே வேலையைத்தான் ராக்கெட்ரி – நம்பி விளைவும் செய்கிறது. நம்பி விளைவா அல்லது நம்பிக்கை வாத விளைவா என்பதில் ‘உண்மை’ பேசியதற்காக நான் நடிகர் இயக்குனர் மாதவனை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன் இந்து மத அடிப்படை வாதத்திற்கும் நமது ‘இஸ்ரோ’ வுக்கும் என்ன சம்பந்தம் என்று கொதிப்பவர்களும் ஒன்றை நியாபகப்படுத்த விரும்புகிறேன். நம் நாட்டில் ராக்கெட் விண்வெளி நோக்கி பறந்த போதெல்லாம் அடுத்த நாளே ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுக்கு தலைமை வகித்தவர் திருப்பதி சென்று மொட்டை போடுவதே நடைமுறை. தினசரிகளில் ஒரு நாள் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது என்றும் மறுநாள் ‘இஸ்ரோ‘ தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம் மொட்டை என்றும் வாசித்து வளர்ந்த ஒரு தலைமுறை விண்ணில் ராக்கெட் பறப்பதற்கும் திருப்பதியில் மொட்டை போடுவதற்கும் ஒரு ‘அறிவியல் பூர்வ‘ தொடர்பு இருப்பதாகவே நம்பியது என்பதன் தொடர்ச்சியே மாதவனின் நம்பி- விளைவு என்பதாக நான் பார்க்கிறேன்.

தன்னையும் அறியாமல் இந்தத் திரைப்படம் நாம் விவாதிக்க தகுந்த சில விஷயங்களை ஆங்காங்கே காட்சிகளாக விட்டுச் செல்கிறது விக்ரம் சாராபாய் முதல் அப்துல்கலாம் வரை ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நாசா இஸ்ரோ, பிரெஞ்சு கியானா விண்வெளி நிறுவனம் என்று விரியும் அறிவியல் காட்சிகளில் கூட அறிவியலை விட, நம்பி நாராயணனின் பக்திக்கும், தேசபக்திக்கும் அதிகம் உரையாடல்கள் முக்கியத்துவம் தருகின்றன. நெற்றியில் விபூதி குங்குமம் கமழ கிரையோஜெனிக் ராக்கெட் இயந்திர தீவிர அறிவியல் சோதனையில் ஒரு விஞ்ஞானி ஈடுபடுவதை காட்டுவது நியாயமா என்று நீங்கள் கேட்க முடியாது நமது இஸ்ரோ, டி.ஆர். டி .ஏ இங்கெல்லாம் கோட் சூட்டு போட்ட விபூதி – நாயகர்கள் சகஜமாக இடம் பெற்றுள்ளது எதார்த்த சூழல் தான் என்றாலும் கேரளத்திற்கு 2013ல் விஜயம் செய்த தற்போதைய பிரதமர் (அப்போதைய குஜராத் முதல்வர்) திரு நரேந்திர மோடியுடனான விஞ்ஞானி நம்பி நாராயணனின் சந்திப்பிற்கு பிறகு தான் நம்பி நாராயணன் பொதுவெளியில் குங்குமப் பொட்டு வைத்து பிரவேசம் செய்தார் என்பதும் பாஜக மாநிலங்கள் அவை உறுப்பினர் ராஜூ சந்திரசேகர் முன்மொழிவின்படி நம்பி நாராயணன் 2018 இல் பத்மபூஷன் விருது பெற்றதையும் படம் பேசும் என்று நாம் எதிர்பார்ப்பது தவறுதான் அது சரி யார் இந்த நம்பி நாராயணன்.

இந்தியாவின் தலைசிறந்த ராக்கெட் தொழில்நுட்ப வாதிகளில் ஒருவர். அதில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. தமிழ்நாட்டுக்காரர். நாகர்கோவிலில் ஒரு தமிழ் குடும்பத்தில் 1941 இல் பிறந்தவர் நாகர்கோயில் டி.வி,.டி ஹை ஸ்கூலில் படித்து மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் பட்டப் படிப்பை இயந்திரவியல் பொறியியலில் முடித்தார். கல்லூரி மாணவராக அவர் வாழ்வின் கடும் சோதனை களை எதிர் கொண்டவர். பட்டப்படிப்பு முடிவதற்குள் தந்தையை தாயை இழந்து தங்கைகளை கரை சேர்க்கும் பொறுப்பை ஏற்று தவித்த போதும் 1966 இல் தும்பா ராக்கெட் தளத்தில் தொழில்நுட்ப உதவியாளராக இஸ்ரோ பணியில் சேர்ந்தார்

உடன் பணி செய்தவர்களில் ஒருவரான ஆராவமுதனின் வழிகாட்டுதலில் நாசாவின் உதவித்தொகையோடு (அதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று) பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டத்தை ராக்கெட் ஊர்தி இயலில் பெற சேர்ந்தார் . இத்தாலிய ராக்கெட் விஞ்ஞானி கணிதவியலாளர் லூயிகி குரோக்கோவின் கீழ் திரவ -எரிபொருள் வானூர்திகள் குறித்து ஆய்வு செய்தார் நம்பி நாராயணன்.

ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது பற்றிய இயலில் முதுநிலை பட்டம் வென்றவர் வெறும் திட- எரிபொருள் ராக்கெட் சார்ந்து இந்திய விண்வெளி ஊர்தி இயல் செயல்பட்ட ஆண்டுகளான 1969-1970 களின் தொடக்கம் அது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பணி செய்ய தேர்வு பெற்ற நம்பி நாராயணனை இந்திய விண்வெளி கனவுகளில் வந்து இணையுமாறு விக்ரம் சாராபாய் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கிறார். திரவ – எரிபொருள் ராக்கெட் தொழில்நுட்பம் அறிந்தவராக நம்பி நாராயணன் இந்தியா திரும்பியது இப்படித்தான்.

1970 களின் நம்பி நாராயணன் பற்றி நாம் அப்துல் கலாம் உட்பட பலரது கருத்துப் பதிவுகள் வழியே தேடி ஆராய முடியும் 1974 முதல் 1994 வரையிலான இருபது வருடங்கள் அவரது உழைப்பு காலம் என்று கருதலாம். முதல் பத்தாண்டுகள் – அதாவது 1974- 1985 வைக்கிங் காலகட்டம் என்று சொல்லலாம். வைக்கிங் எனும் ராக்கெட் எஞ்சின் பிரான்ஸ் நாட்டின் சோசியட் யுரோபினி டி புரொபல்ஷன் எனும் விண்வெளி அமைப்பு சார்ந்தது சதீஷ் தவான் எனும் மாமனிதர் இஸ்ரோவின் தலைவராக பம்பரமாய் சுழன்று பணியாற்றிய அந்த நாட்களில் திரவ எரிபொருள் ராக்கெட் இன்ஜினான வைக்கிங்கை இந்தியா பெறுவதற்கு பிரான்சோடு ஒப்பந்தம் போடப்பட்டது. யுரோபினி டி புரொபல்ஷன் அந்த தொழில் நுட்பத்தை இந்திய பொறியாளர்களுக்கு வழங்க 100 நாள் பணி திட்டத்தை அறிவிக்க மூன்று குழுக்களாக சதீஷ் தவான் தொழில்நுட்பத்தை பெற இஸ்ரோ தொழில் நுட்பவாதிகளை அனுப்புகிறார். அதில் ஒரு குழுவிற்கு தலைமை ஏற்றவர் நம்பி நாராயணன். வைக்கிங் ராக்கெட் இன்ஜினின் இந்திய வடிவம் விக்காஷ். மயிலாடுதுறை காரரான இஸ்ரோ விஞ்ஞானி சூரிய நாராயணன் சீனிவாசன், உடுப்பி ராமச்சந்திர ராவ் உட்பட பலரது உழைப்புதான் பிற்கால பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆக பரிணமித்தது. சிறந்த அந்த விக்காஷ் இஞ்ஜின் வடிவமைப்பு குழுவின் தலைவராக இருந்தவர் நம்பி நாராயணன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இப்போது கொஞ்சம் திரைப் படத்திற்கு திரும்பவோம். படம் நம்பி நாராயணன் மைய வாழ்க்கை கதை என்றாலும் நம்பி நாராயணனே விகாஷ் ராக்கெட் இன்ஜினை கண்டுபிடித்தார் என்று காட்டுகிறது. நாசாவிலிருந்து இந்தியாவுக்கு அவர் வந்தது தேசபக்தி காட்சியாகிவிட்டது. வெங்கடேச சுப்ரபாதம் ஒலிக்கும் பின்னணியில் விக்காஷ் பி எஸ் எல்வி ஆகி விண்ணில் பறக்கிறது தி பியூட்டிஃபுல் மைண்ட் (கணிதமேதை ஜான் நேஷ் வாழ்க்கை கதை) படத்தைப் போலவோ தி தியரி ஆஃப் எவரித்திங் – ( ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கைக் கதை) படத்தைப் போல மெய்சிலிர்ப்பு தருணமாக விகாஷ் இயந்திர காட்சிகள் மனதில் பதிய மறுக்கிறது. காரணம் வெறும் உரையாடல்களில் அறிவியலைக் கரைத்து கடந்து போய்விடுகிறார்கள். ஒரு அற்புத தொழில்நுட்பக் குழுவின் சாதனையை ஒரு மனிதரின் சொந்த சாதனையாக காட்டுவதால் போலித்தனம் வந்து விடுவதை பார்க்கிறோம். 1985இல் விகாஷ் விண்ணில் பிஎஸ்எல்வியாக பறந்தது சத்தீஷ் தவானின் இன்-சாட்(Ind-Sat) பெருந் திட்டம் அதை தனது (பெரிய திட்டத்தின்) ஒரு பகுதியாக கொண்டிருந்தது. ஆனால் வெங்கடேச சுப்ரபாதம் இசைக்க விக்காஷ் விண்ணில் பறக்கும் காட்சி என்ன சொல்ல வருகிறது. இன்றுவரை அந்த விக்காஷ் இஞ்ஜின் இஸ்ரோவின் பல நிபுணர்களால் பலவிதத்தில் மேம்பாடு கண்டுள்ளதை எந்தக் கணக்கில் சேர்ப்பது.

எ பியூட்டிஃபுல் மைண்ட் (A beautiful mind ) திரைப்படம் ஜான் நேஷ் எனும் கணிதமேதையின் வாழ்க்கை வரலாற்றை பற்றியது. கேம் தியரி (Game Theory)யில் ஒழுங்கின் மை கோட்பாட்டியலின் கண்டுபிடிப்பை பாதி நிகழ்த்தும்போது மனப்பிரழ்வு நோய் (ஸ்கிஸோஃபெர்னியா) ஏற்படுகிறது.

தன்னை சுற்றி மனிதர்கள் சிலர் இருப்பதாக கற்பனை செய்து கொள்வார் நேஷ். இருபதாண்டுகள் கழித்து அவருக்கு ஒரு நாள் ‘சரியாகிவிடும்’. காதலியும் மனைவியுமான ‘ரோஸ்’ (அலிஸியா) கதாபாத்திரம் மூலம் எவ்வளவோ செண்டில்மெண்ட் பேசி இருக்கலாம். ஆனால் அந்த பிரின்ஸ்டன் பல்கலைகழக நூலக கரும்பலகை காட்சியை மறக்கவே முடியாது. பாதிக்கணித வரையரைகளை எழுதி அத்தோடு நோய்வாய்படுவார் ஜான் நேஷ். அங்கே ஹான்சன் எனும் பேராசிரியர் ஜான்நேஷின் எதிரியாக இருப்பார். இருபதாண்டுகள் கழித்து நோய் குணமாகி ஜான்நேஷ் பிரின்ஸ்டன் திரும்பும்போது அதே ஹான்சன் கணிதத்துறை தலைவர் ஆகிஇருப்பார். நூலகத்திற்குள் நுழைவார் ஜான் நேஷ். இருபதாண்டுகளுக்கு முன் அவர் எழுதி முடிக்காமல் விட்ட கணித வரையரைகளை அழிக்காமல் பாதுகாத்திருப்பார்கள். அவர் விட்ட இடத்தில் இருந்து மீதியை எழுதுவார்…ஒழுங்கின்மை கோட்பாடு (KYOS Theory) பிறக்கும். பின்னே இருந்து ஹான்சன் வெற்றிப்புன்னகைபுரிவார். அடுத்த காட்சி நோபல் பரிசு.

கரும்பலகையில் அவர் எழுதுவது என்ன என்பது நமக்கு புரியாதுதான். ஆனால் நமது சிலிர்ப்பு அவரது ‘கண்டுபிடிப்பை’ கொண்டாடும் (இயக்குநர்.ரான் ஹவர்டு)

அதேபோல ‘தி தியரி ஆஃப் எவரித்திங் (The Theory of Everything) படம். அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் கருந்துளைகள் குறித்த தன் ஆய்வை சமர்ப்பிக்கும் காட்சி. கருந்துளைகள் பற்றிய தனது புரிதலையும் – மோட்டார் நியூரான் நரம்பியல் நோய் முழுதும் முடமாக்கியும் தன்னால் தான் நினைத்ததை வெளிப்படுத்த முடியும் என்பதையும் – ஒருங்கே ஸ்டீபன் ஹாக்கிங் சுயமாக அறியும் அந்தத் தருணம் நமக்கு ஏற்படுத்தும் விம்மல்கள் அலாதியானவை (இயக்குநர் ஜேம்ஸ் மார்ஷ்)

அப்படி ஒரு அறிவியல் பூர்வ உணர்ச்சிப்படமாக ராக்கெட்ரி இல்லை. சொல்லப்போனால் சில இடங்களில் ஒரு பள்ளிக்கூட மேடை நாடகம் போல போலித்தனம் வந்து விடுகிறது.

அடுத்து நாம் நம்பி நாராயணன் எனும் இஸ்ரோ விஞ்ஞானி மீதான குற்றச்சாட்டுகள் அவர் மீது தொடரப்பட்ட வழக்குகள் குறித்த காட்சிகளுக்குள் நுழைகிறோம். 1994 இல் நம்பி நாராயணன் திடீரென்று அவராகவே முன்வந்து இஸ்ரோவிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அது படத்தில் இல்லை ஆர்.பி. ஸ்ரீகுமார் எனும் காவல்துறை உயர் அதிகாரி மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையின் விக்ரம் சாராபாய் மைய இயக்குனராக இணைகிறார். நம்பிநாராயணின் கூற்றுப்படி இந்த ஸ்ரீ குமார் தனது உறவினர் ஒருவருக்கு இஸ்ரோவில் வேலை கேட்டு வருகிறார். நம்பிநாராயணன் தகுதி அடிப்படையில் தான் வேலை தர மறுப்பதால் ‘இதற்கு ஒரு நாள் வருத்தப்படுவீர்கள்’ என்று ஸ்ரீகுமார் எச்சரித்ததாக பதிவாகியுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன் தயவில் அவரது ஈடுபாட்டில் இந்தியா ராக்கெட் தொழில் நுட்பத்தில் உலக ‘சாம்பியன்’ அந்தஸ்து பெறுவதை தடுத்திட ‘அயல்நாட்டு’ சதி என்று ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது திரைப்படத்திற்கு தேவையான விறுவிறுப்பு தீனிக்கு இது போதும் நம்பி நாராயணன் உண்மையில் சிறையில் இருந்த்து ஒரே ஒருநாள் மட்டுமே என்கிறார் உடன் கைது செய்யப்பட்ட சக விஞ்ஞானி சசிக்குமார். அவர் சிறைக்கு வரும்போதே வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டிருந்த்து.

ஆனால் ஒரு அறிவியல் புனைவாக இத்திரைப்படம் பரிணமித்திருக்க முடியும். திரவ எரிபொருள் ராக்கெட் தொழில்நுட்பம் சார்ந்தும், தாழ்ந்த வெப்ப நிலை இயல் (கிரையோஜெனிக்ஸ்) பற்றியும் மிக சுவையான காட்சிகளை சேர்த்து அறிவியல் சார்ந்த இளைய தலைமுறை ஆர்வத்தை தூண்டி இருக்க முடியும். ஒரு தொழில்நுட்பக் குழு அதன் தலைவராக நம்பி நாராயணன். அது ஒரு சிறப்பு விஞ்ஞான குழுவாக எப்படி ஒரு தொழில்நுட்பத்தை இந்தியாவில் கிடைத்ததை வைத்து நம் மண்ணிற்கான தாக மாற்றியது என்பது மிக சுவையான விஷயமாகும் இக்குழு ஸ்விட்சர்லாந்தில் 1877-ல் ரவுல் பிக்டெட் – வாயுக்களை திரவமாக்கிட பயன்படுத்திய (பிறர் இந்த முறைப்படி முயன்ற போது) நீர் துளி முறையை தவிர்த்து, சிக்முந்த் வுரூபிளேஸ்கி என்பவரால் போலந்தில் 1883 ல் முயலப்பட்ட கெல்வின் வெப்பமானியின் ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் குறைவெப்ப திரவ ஆக்க முறையை ( அதாவது ஆக்சிஜன் 77 கே குறை வெப்பத்திலும் நைட்ரஜன் 90கே குறை வெப்பத்திலும் திரவமாக மாறும்) மாற்றி யோசித்தது இந்த விஷயம் நைட்ரஜனுக்கு பதிலாக ஹைட்ரஜனை பரிசோதித்த பிறகு முழுமை கண்டது.

நம் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்ட எல்லையில் நாகர்கோவில் நகருக்கு அருகே மகேந்திர கிரியில் திரவ இயக்கத்திட்ட மையத்தை அமைத்தவர் நம்பிநாராயணன் அல்ல. ஜி. எஸ். எல்.வி மார்க்-3 என்ற ராக்கெட் உருவாக்கத்தின் பின்னணியில் பல அடுத்தடுத்த தோல்விகள் உண்டு பிறகு முழுமையாக பல அடுக்கு முயற்சிகளுக்குப் பிறகு 2014(மோடி பதவி ஏற்பதற்கு பல மாதங்கள் முன்) ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் கதை மிக சுவாரசியமானது அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ரஷ்யா, சீனா, ஜப்பான் அதற்கடுத்து திரவ –குளிர் வெப்ப ராக்கெட் தொழில்நுட்பம் இந்தியாவிடம் மட்டுமே உள்ளது. 1991ல் ரஷ்யாவோடு ஏற்பட்ட ஒப்பந்தம் 1988 புஷ்-மன்மோகன் ஒப்பந்தம் என்று சர்வதேச அரசியலும் இதில் உண்டு.

இந்த கிரையோ ஜெனிக் ராக்கெட் இயந்திர சாதனைகளின் பின்னணி டாக்டர் ஏ. இ. முத்து நாயகம் எனும் (நாகர்கோவில்காரார்) மாபெரும் ராக்கெட் அறிஞரையும் அவருக்கு கீழே செயல்பட்ட நம்பி நாராயணன் உட்பட ஒரு தொழில்நுட்ப குழுவையும் சாரும். அந்த குழுவிற்கு சத்தீஷ் தவான் முதல் ராதாகிருஷ்ணன் வரை இஸ்ரோவின் தலைமை எப்படி உறுதுணையாக இருந்தது,
அவர்களது போராட்டம் என்ன வென்றது எப்படி என்று ஒரு அற்புத- அறிவியல் தொழில்நுட்ப போராட்டத்தை திரைக்காவியம் ஆக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

இயக்குநர் மாதவனின் பஞ்சாங்கம் குறித்த கருத்து படத்தை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தில் நம்பி நாராயணின் உறவினராக (அக்காள் மகன்) அருணன் என்று ஒரு பாத்திரம் வருகிறது. உண்மையில் மருமகனான அருணனும் இஸ்ரோ விஞ்ஞானி ஆனால் ஒரு காட்சியில் அருணன் பஞ்சாங்கத்தை காட்டி நம்பியிடம் பேசுவது போலவருவது வேதகால அறிவில் இல்லாததே இல்லை எனும் நம்பிக்கை வாதமே. பிராமண-அறிவு வாதம் எனும் திரிபை அறிவியல் இனிப்பு -கிரீம் –பூசி சந்தையில் இறக்கி இருப்பதற்கு வேறு சாட்சிகள் தேவையில்லை. அல்மனாக் எனும் வானியல் சார்ந்த வருட நாட்காட்டிகளைத்தான் மாதவன் பஞ்சாங்கம் என்று தவறாக குறிப்பிட்டு விட்டார் என பல வகை விளக்கங்கள் தரப்பட்டன. பாபிலோனியர் தொடங்கி வானின் நிகழ்வுகளை முன் அறிவிக்கும் ஆண்டுக் கணிப்புகளை பல நூற்றாண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம். சந்திர, சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்களின் (Constellation) வான் -அமைப்பு முதல் பருவ காலங்களின் மாற்றம் உட்பட அறிவியல் முறைப்படியானா அத்தொகுதிகளை நம் நாட்டில் வெளியிட ஜந்தர் மந்தர் உட்பட எவ்வளவோ வகையில் முயன்று வெற்றி கண்ட வானியல் துறை வேறு சடங்குகளை முன்னறிவிக்கும் மத அடிப்படைவாத பஞ்சாங்கம் வேறு என்பதை இயக்குனர் நடிகர் மாதவன் உள்ளிட்டவர்களுக்கு நாம் ‘வேலை மெனக்கட்டு’ விளக்க வேண்டியதாகிறது. வானிலை முன் அறிவிப்பு வரை பல அறிவியல் சார்ந்த ஆழமான- வரலாறு வானியல் பதிவுகளை ‘பஞ்சாங்கம்‘ எனும் சொல்லாக்கத்திற்குள் அடக்குவதற்கும் பிள்ளையார் உருவானதே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அன்றே இருந்ததற்கு சாட்சி என்று சொல்வதற்கும் வித்தியாசம் இல்லை.

நம்பி விளைவு இந்திய ராக்கெட் முன்னேற்றத்தை சாதிக்காமல் இருக்க –‘எதிரி நாடு சதி செய்து’ -கேரளத்தின் கருணாகரன் அரசு அவர் மீது- பாகிஸ்தானுக்கு ராக்கெட் ரகசியங்களை கடத்தியதாக தேச துரோக வழக்கு பதிவுசெய்து கைது செய்கிறது. 1994 இல் நடந்த சம்பவம். நம்பி நாராயணன் சக விஞ்ஞானி ஒருவரின் வீடியோ பதிவு முதலில் வெளிவந்தது மாலத்தீவின் மிரியம் ரிஷிதா பவ்சியா ஹசன் ஆகியோருக்கு ராக்கெட் வரைபடங்கள் சிலவற்றை ‘விலைக்கு‘ நம்பி விற்றார் என்பதே குற்றச்சாட்டு அதன் பின்னணி காரணம் நம்பிக்கும் சகாவுக்குமான டெண்டர் போட்டி சர்ச்சைகள் என்பது பின்னர் தெரிய வருகிறது முதல்வர் கருணாகரனின் காங்கிரஸ் கோஷ்டிக்கும் ஓமன் சாண்டி கோஷ்டிக்குமான பிரச்சினையாக அதை பார்ப்பதும் பிறகு அடுத்த 50 நாட்களில் அது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதும் இருக்கட்டும். சிறை வாழ்வின் காவல்துறை கொடுமைகளை நம்பி எனும் விஞ்ஞானி அனுபவித்த நாட்களில் இஸ்ரோவின் தலைவராக இருந்தவர் டாக்டர். கஸ்தூரி ரங்கன் என்பதும் சட்ட நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று அவர் அறிவித்ததையும் திரைக்கதை வசதியாக மறந்துவிட்டது இ.கே நாயனார் (கம்யூனிச) அரசு இந்த விஷயத்தில் எடுத்த நிலைப்பாடுகள் பற்றியும் சிபிஐ வழக்குமன்றத்திலும் மனிதஉரிமை ஆணையத்திலும் பிறகு நடந்த திருப்பு முனைகளையும் குர்ஷித் ஆலம்கான் சுக்தேவ் சிங் காங் என்று வரிசையாக கேரள கவர்னர்களின் பங்களிப்புகள் என நாம் நிறைய பேசலாம். இவற்றின் ஊடாக ‘ஜெய் பீம்’ போலவோ அல்லது குறைந்த பட்சம் ஒரு காலத்தில் வெளிவந்த (ஜெய்சங்கர் சுஜாதா படமான) ‘விதி’ போலவோ சட்ட போராட்டத்தையாவது படம் பேசியிருக்கலாம்.

ஆனால் அறிவியல், மனித உரிமை இவை பற்றி எந்த சொரணையும் நமக்கு ஏற்படவில்லை கோர்ட்டு நிரபராதி என்று நம்பி நாராயணனை அறிவிக்கும் காட்சி நேரடியாக படமாக்கப்பட்டிருக்கலாம். அதே நீதிமன்றத்தில் நம்பி- மன நிறைவு அடைவதையாவது காட்டி இருக்கலாம் ஆனால் அதை பூஜை அறை காட்சியாக்கி தான் நிரபராதி என்று நிரூபணமாகிவிட்டது. என தனக்கு போன் வந்தது என்று தன் மனைவி மீனா நம்பி (சிம்ரன்) யிடம் அவர் சொல்வது போல வருவதால் அது மீண்டும் பக்தி தேச பக்தி சம்பந்தப்பட்டே அமைகிறது. எனவே இப்படியான ஒரு திரைப்படம் ஒன்று அது சார்ந்து இயங்கும் அறிவியலை முழுமையாக பேசியிருக்க வேண்டும் அல்லது அரசின் மெத்தனம் சட்டப் போராட்டம் என்று விரித்துரைத்து இருக்க வேண்டும் இரண்டையுமே செய்யத் தவறி வெறும் அயல் சதி-பக்தி- மதவாத – சென்டிமென்ட் பேசுவதால் அந்த கடைசி காட்சியில் அவர் முன் சூர்யா (தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்) மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதும் கூட அத்தகைய தேச சென்டிமென்ட் பட்டியலிலேயே சேர்ந்து விடுகிறது.

கணினி உலக மேதை ஆலன் ட்ர்ரிங்கின் வாழ்க்கை வரலாற்று படம் தி இமிடேஷன் கேம் (2014) போலவோ உயிரியல் சூழலியல் விஞ்ஞானி டியான் ஃபோஸி அம்மையாரின் ருவாண்டக் காடுகளது சவால்களைப் பேசிய கொரில்லான் இன் மிஸ்ட் (1988) படம் போலவோ அல்லது குறைந்தபட்சம் சார்லஸ் டார்வினின்- படைப்புகள் பற்றிய மனப்போராட்டத்தை பேசும் கிரியேஷன் (2009) மாதிரியாவது ஒரு அறிவியல் படமாக ‘ராக்கெட்ரி’யை நாம்மால் பரிசீலிக்க முடியவில்லை- காரணம் அது பேசும் நம்பி – விளைவு எனும் நம்பிக்கை வாத (செண்டிமென்ட்) விளைவே ஆகும்.

இந்திய அறிவியலில் இருண்ட சரித்திரத்தை உண்மையான அறிவியல் வரலாற்று படமாக எடுக்கவேண்டுமாயின் இயற்பியல் அறிஞர் மெக்நாட் சாஹா முதல் மக்கள் விஞ்ஞானி ஜி.டி.நாயடு வரை பல துயர சகாப்தங்கள் காத்திருக்கின்றன. என்பதே உண்மை. அறிவியல் என்பதே ராக்கெட் செயற்கை கோள் ஏவுகணை சோதனை என்பது மட்டும்தான் என மக்கள் நம்பும்வரை நம்பி – விளைவுகளே எடுபடும்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.