Rojin Thomas Malayalam Film Home Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.



இந்த ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று வெளியான மலையாள மொழித் திரைப்படம் ‘ஹோம்’ . ரோஜின் தாமஸ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் பாபு, ஸ்ரீநாத் பாசி, ஸ்ரீகாந்த் முரளி, இந்திரன், மஞ்சு பிள்ளை ஆகியோர் நடித்துள்ளனர்.

கால மாற்றங்களோடு மாறாததால் கேசட் கடை நடத்தி அதை மூட வேண்டிய ஆலிவர் ட்விஸ்ட், தன்னுடைய இரண்டாவது திரைப்படக் கதையை முடிக்க முடியாத அவரது மூத்த மகன் ஆண்டனி, வீடியோ காட்சிகள் எடுத்து வெளிவிடும் இரண்டாவது மகன் ஆகியோரை சுற்றி வரும் கதை.

நவீன தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள திணறும் சென்ற தலைமுறை, பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற ஊடகங்களில் மூழ்கி இருக்கும் இந்த தலைமுறை, சாதனை என்பது என்ன, குடும்பம் என்கிற நிறுவனத்தின் முக்கியத்துவம் என பல கோணங்களில் இந்தப் படத்தை ரசிக்கலாம். இது குறித்து களப்பிரன், வடமலை சேதுராமன், கருப்பு அன்பரசன் மற்றும் சிலரது பதிவுகள் முகநூலில் வந்துள்ளன.

Rojin Thomas Malayalam Film Home Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.
Indrans as Oliver Twist. YouTube

என்னுடைய கருத்தாக நான் சுட்டிக்காட்ட விரும்புவது இரண்டு பெண் கதாபாத்திரங்கள். ஒன்று ஆன்டனியின் தாயார் குட்டியம்மா. இன்னொருவர் அவனது காதலி பிரியா. எல்லாப் பாத்திரங்களையும் கதாசிரியர் இயல்பாக காட்டியிருந்தாலும் கதையில் ஆண் பாத்திரங்கள் முக்கிய இடங்களை எடுத்துக் கொண்டபோதும் இந்த இரண்டு பெண்களை நாம் கவனிக்க வேண்டும்.

குட்டியம்மா ஒரு நர்ஸ் என்பது ஒரு காட்சியில் அவர் காயத்திற்கு கட்டுப் போடும்போது நம்மை ஊகிக்க வைக்கிறார். இன்னொரு இடத்தில் குடும்ப புகைப்படங்களில் அவர் புகைப்படம் இல்லை என்று அவர் சாதாரணமாக சொல்லும்போது ‘நீ நர்ஸ் வேலைக்கு ஓடிக்கொண்டிருந்ததால் இல்லை’ என்று ஆலிவர் டுவிஸ்ட் கூறுவதிலிருந்தும் அவர் நர்ஸ் வேலை பார்த்தார் என்று புரிந்து கொள்கிறோம். ஆனால் மொத்த வீட்டு வேலைகளை செய்வது மட்டுமல்ல எல்லோருடைய மன வேதனைகளைப் பகிர்ந்து கொள்வது, எப்பொழுது தலையிட வேண்டும் எதில் தலையிடக்கூடாது என்று அந்தக் கதாபாத்திரம் அற்புதமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வளவு அமைதியான அந்தப் பெண்மணி, விருந்தினர் முன் தன் கணவரை மூத்த மகன் கோபித்துக்கொள்ளும்போது, இளைய மகனைக் கடிந்துகொள்வதுபோல் சீறும் இடம் சிறப்பாக இருக்கிறது. எல்லோரும் சாப்பிட்டபிறகு அவர் மட்டும் தனியாக சாப்பிடும் காட்சியும் குடும்பத்தில் தலைவிகளின் நிலையை காட்டுகிறது.

Rojin Thomas Malayalam Film Home Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.
Manju Pillai as Kuttiyamma. YouTube

இனியாவது நம் குடும்பங்களில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடும்போது குடும்பத் தலைவியையும் உட்காரவைத்து சாப்பிடுவோம். சில கேரளக் குடும்பங்களில் பெண்கள் உட்கார்ந்து சாப்பிடும்போது ஆண்கள் பரிமாறுவதைப் பார்க்கலாம்.புகைப்படங்களிலும் எல்லோரும் இருக்குமாறு பார்த்துக் கொள்வோம். இன்னொரு பெண் பாத்திரம் இதற்கு நேர் எதிராக உணர்ச்சி வசப்படுவதும் சட்டென்று அழுவதும் என ஒரு பலவீனமான ஆளுமை. ‘நீரஜா’ என்கிற இந்தித் திரைப்படத்தில் ‘மகளை அழக்கூடாது; தைரியமாக இருக்க வேண்டும் ‘என்று சொல்லி வளர்க்கிற தந்தையைக் காட்டியிருப்பார்கள். நாமும் அது போன்ற தந்தைகளாகுவோம்.

இந்தப் படத்தில் இன்னும் ஒரு காட்சியும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. ஆண்டனி கதை சொல்ல வேண்டிய திரைப்பட கதாநாயகன் கேரவானில் அமர்ந்திருக்கிறார். ஆண்டனியின் தந்தை தனது நண்பனின் தூண்டுதலினால் நடிகருடன் செல்பி எடுத்துக்கொள்ள கேரவானுக்குள் அனுமதி இல்லாமல் நுழைகிறார். நடிகருடன் சகஜமாகப் பேசி அங்குள்ள பழத்துண்டுகளை வாயில் போட்டுக்கொள்கிறார். செயற்கையான மரியாதை பழகாத மனிதர்கள் வெள்ளந்தியாக நடந்துகொள்வதை காட்டியிருக்கிறார்.

Rojin Thomas Malayalam Film Home Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.
Johny Antony and Indrans in a still from #Home. YouTube

நம்முடைய அதிகார மையங்களில் செயற்கையாக பவ்யமாக நடந்துகொள்வதைப் பார்க்க முடிகிறது. இதைத்தான் விவேக் அவர்கள் வானத்தில் போகும் மந்திரிக்காக தரையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு எல்லோரும் மரியாதை செய்வதை ஒரு படத்தில் கிண்டலடித்திருப்பார். மேலதிகாரிகள் போனில் பேசும்போது கீழ் அதிகாரிகள் எழுந்து நின்று பேசுவதும் ஒரு முறை எம்எல்ஏ ஆகவோ மந்திரியாகவோ இருந்துவிட்டால் அந்த ஊரில் அவரை எப்போதும் எம்எல்ஏ, மினிஸ்டர் என்று அழைப்பதையும் பார்த்திருக்கிறோம். இதற்கு மாறாக இடதுசாரி அரசியல்வாதிகள் மந்திரியாக இருக்கும்போதும் அதற்குப் பிறகும் சாதாரண மக்களோடு பேசுவதும் பழகுவதும் பயணிப்பதும் உண்பதையும் பார்க்க முடியும்.

ஒவ்வொரு நடிகரும் சிறப்பாக நடித்துள்ளனர். சூழ்நிலைக்கு ஏற்ற இரண்டு மூன்று பாடல்கள். முதல் முப்பது நிமிடங்கள் சற்று மெதுவாக நகர்வது பொறுமையை சோதிக்கலாம். அதுபோல் அந்த ப்ளாஷ் பேக்கும் இன்னும் சற்று சிந்தித்து எடுத்திருக்கலாம்.

Rojin Thomas Malayalam Film Home Movie Review By Era Ramanan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.
Sreenath Bhasi as Antony Oliver Twist. YouTube

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *