ரொமிலா தாப்பர் – நூல் அறிமுகம்
இந்நூலின் ஆசிரியர் மருதன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் இயங்கி வருபவர். ஆனால் நான் ஒரு ஆய்வாளன் அல்ல . சொல்லிக் கொள்ளும்படி எதுவும் எழுதியதில்லை என்றாலும் அப்படி ஒன்றை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது என்பதில் அவரின் உள்ளம் தெளிவாக… கடந்த சில ஆண்டுகளாக பண்டைய இந்திய வரலாற்றில் கவனம் செலுத்தி வரும் பட்சத்தில் ரொமிலா தாப்பர் ஓர் அறிமுகம், அசோகர் , இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை ஆகிய நூல்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
யார் இந்த ரொமிலா தாப்பர் ….?
என்பவற்கான பதில் இது.
சமீபகால வரலாற்றில் ரொமிலா தாப்பர் அளவுக்கு அதிகம் கொண்டாடப்பட்ட , அதிகம் விமர்சிக்கப்பட்ட , அதிகம் தாக்கப்பட்ட இன்னொரு வரலாற்று ஆசிரியர் இல்லை எனலாம் . இருந்தும் அவர் நூல்கள் விற்பனையாகும் அளவுக்கு அவர் புகழ் பரவி படர்ந்திருக்கும் அளவுக்கு அவர் குறித்து சர்ச்சைகள் விவாதிக்கப்படும் அளவுக்கு அவர் வாசிக்கப்பட்டு இருக்கிறார் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.
ரொமிலா தாப்பரின் வாழ்வையும் பணிகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துவதே இந்த நூலின் நோக்கம் என்ற போதும் …
எத்தனை எளிமையாக அவரின் மிக கடினமான கேள்விகளை ஆசிரியர் முன்வைக்கிறார் எனும் பொழுதும்…
இவர் ஒரு வரலாற்று ஆசிரியர் என்ற இடத்தையும் தாண்டி “கேள்வியின் நாயகி” என்று சொல்லும் அளவிற்கு ஒரு கருத்தை எந்தெந்த கோணத்தில் எல்லாம் பார்க்க வேண்டும் என்று நமக்கு பாடம் எடுக்கிறார்.
ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையை புதிய கனவுகளோடு மாற்றி அமைத்த அனுபவத்தை பல இடங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தியாவில் உள்ள பிற வகுப்பறைகள் போல் ஜேஎன்யு இருக்கக் கூடாது . மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவுமுறை கீழ்/ மேல் நிலைகளில் இருக்கக் கூடாது . வழக்கமான கற்பித்தல் முறையை , பாடத்திட்டங்களை மாணவர்கள் மீது திணிக்க கூடாது என்பதை திட்டவட்டமாக கடைபிடிக்கும் இவர் ‘சிந்தனை தான் செயல் ; செயல் தான் சிந்தனை ‘ என்பதால் மக்களுக்கான “அறிவுஜீவி” என்று அழைக்கப்படுகிறார்.
தன் வாழ்வைப் பற்றி குறைவாகவும் வரலாற்றைப் பற்றி அதிகமாகவும் எப்போதும் பேசும் விருப்பமுள்ளவராக இருக்கும் இவர் நடுத்தர வர்க்க பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் . இதுதான் என் பூர்வீகம் என்ற சொல்லும் அளவுக்கு நிரந்தர வசிப்பிடம் இல்லாமல் தன் தந்தையின் உத்தியோகம் காரணமாக வெவ்வேறு இடங்களுக்கு சென்றபோது சிறுவயதிலேயே காந்தி , நேரு , கான் அப்துல் கபார்கான் என்று பன்முகத்திறன் கொண்ட பெருந்தலைவர்களை சந்தித்திருக்கிறார்.
இவருடைய தேடல் பெரும்பாலும் புதிய தேசத்தின் தேடலாகவே இருந்துள்ளது. தன் தந்தையின் வாசிப்பின் ஈர்ப்பால் தானும் ஈர்க்கப்பட்டு மெல்ல மெல்ல வரலாறு பக்கம் இவர் மனம் சாய்கிறது. ஒரு மாணவராக தன்னை நிராகரித்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒரு ஆய்வாளராக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி வரவேற்கும் அளவுக்கு தன்னை மெருகேற்றி இருக்கிறார். ஒரு வரலாற்று ஆசிரியர் பிரதிகளுக்குள் முடங்கிவிடக் கூடாது, கள ஆய்வு தான் முதுகெலும்பு என்று வலியுறுத்திய கோசாம்பி அவர்களை வழிகாட்டியாக கொண்டுள்ளார்.
வம்சாவளியை அடுக்குவதோ காலவரிசையை ஒப்பிப்பதோ வரலாறு இல்லை. எது இந்தியா என்பதை கண்டறிவதற்கு முன்னால் எதுவெல்லாம் இந்தியா அல்ல என்பதை விவரிக்கிறார். மதம் என்பது வெறுமனே நம்பிக்கை சார்ந்தது மட்டுமல்ல ; சடங்குகளின் வாயிலாக அது தன்னை சமூகத்தில் வெளிப்படுத்திக் கொள்ளவும் செய்கிறது என்பதை தெளிவாக புரிய வைக்கிறார்.
அடையாளத்துக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் ஒரு கதை உதாரணத்திற்கு ராமாயணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை வரலாறு சுட்டிக்காட்ட வேண்டும் என்று கூறுவதன் மூலம்..
ரொமிலா இறை நம்பிக்கையற்றவர் என்றாலும் தனது ஆய்வின் ஒரு பகுதியாக அவர் தொடர்ச்சியாகவே வெவ்வேறு மத நம்பிக்கைகளோடு உரையாடவும் செய்கிறார்.
வேளாண்மைக்கு தொழிலாளர்கள் தேவைப்படும் பொழுது வர்ணமுறையை சமூகத்தில் நிலைநாட்டி அதனை ஈடு செய்வதை கூறி , இதன் மூலம் பேரரசுகளின் உருவாக்கம் அதன் பின்னால் சடங்குகள் குறித்து விவரித்து, சடங்குகள் பெருகும் பொழுது அவற்றை முன் நின்று நடத்தி வைக்க யார் தேவைப்படுகிறார்கள்..? செல்வம் எப்படி குறைகிறது ? என்பதை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி நம்மை கேள்வி மேல் கேள்வி கேட்க வைக்கின்றார்.
இவற்றிற்கெல்லாம் மேலாக வேதம் , உபநிடதம், இதிகாசம் ,புராணம், கீதை என்ற சமூகத்தின் மேலடுக்குகளில் இருந்தவர்கள் பரிந்துரைத்த பிரதிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை அனைத்தையும் உருட்டி திரட்டி இந்துயிசம் எனும் மதம் உருவாக்கப்பட்டது. அந்த மதம் ஒற்றை கல் சிற்பம் போல ஒற்றைத் தன்மை மட்டும் கொண்டதாக மாற்றப்பட்டு இறுதியில் அது இந்து என்று பெயர் பெற்றது என்கிறார்.
ராமர் மட்டுமல்ல சகுந்தலையும் வெவ்வேறு வடிவங்களில் இந்தியா முழுவதும் வாழ்ந்து கொண்டிருப்பதாக கண்டறிகிறார் . இதன்மூலம் 300 வகையான ராமாயணங்கள் உலவுவதையும் அவை எந்த காரணத்திற்காக ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் தம்மை மாற்றிக் கொண்டன என்பதற்கான காரணங்களை அடுக்குகிறார். சோமநாதர் கோயில் சிதிலங்களை குறிப்பிடும் பொழுது ஒரு ஆட்சியாளரை வெல்ல வேண்டுமானால் அவருடைய பெருமிதத்திற்குரிய அடையாளத்தை கொள்ளை கொள்ள வேண்டும் . அதுதான் இங்கே நடந்திருக்கிறது ஒழிய இந்துவுக்கும் இஸ்லாத்துக்கும் இடையேயான போராட்டமாய் அதை அவர் பார்க்கவில்லை.
வரலாற்றில் எந்த ஒரு காலத்திலும் இந்தியா அமைதி பூங்காவாக இருந்திருக்கவில்லை. அது பொற்காலம் என்று நிலவியிருக்கும் சூழலிலும் என்பது ஏற்புடையதாகவே இருக்கிறது. சிறுவயதிலேயே மதம் நம் அனைவருக்கும் அறிமுகம் ஆகிவிடுகிறது . நம் வாழ்வின் சிந்தனையின் ஒரு பகுதியாக அது மாறவும் செய்கிறது. அது நம்மைப் பற்றிக் கொள்வது போய் நாம் அதனை பற்றி கொண்டு விடுகிறோம். உளவியல் ரீதியில் பாதுகாப்பையும் மீட்சியையும் நமக்கு அளிப்பதாக நம்புகிறோம். அதனால் தான் அரிதாகவே அதனை கேள்விக்கும் உட்படுத்துகிறோம் . சரியான “கல்வி” ஒன்றே நம் மயக்கங்களை போக்கும் என்கிறார் ரொமிலா தாப்பர்.
அரசு எப்போது வகுப்பறைக்குள் ஊடுருவுகிறதோ அப்போதே அந்த வகுப்பறையின் சுதந்திரம் பறிபோய் விடுகிறது . பாடத் திட்டங்கள் வகுக்கும் பணியில் அரசும் தலையிடக்கூடாது என்பதை அழுத்தமாகவும் தொடர்ச்சியாகவும் அவர் வலியுறுத்துகிறார் . ஒரு நாட்டின் வரலாறு குறித்த வகுப்பறையில் என் சி ஆர் டி போன்ற அமைப்புகள் சுதந்திரமாக இயங்குவது முக்கியம் . அதற்கு அச்சுறுத்தல் நேரும்போது மாணவர்களும் ஆசிரியர்களும் கரம் கோர்த்து நிற்க வேண்டும் என்கிறார்.
கேள்வி கேட்குமாறு ஒரு குழந்தையை ஊக்குவிப்பது தான் மெய்யான கல்வியாக இருக்க முடியும். அவர்கள்தான் கேள்வி கேட்க தெரிந்த குடிமக்களாக வளர்வார்கள் ஜனநாயகத்தை உறுதி செய்வார்கள்.
எதேச்சதிகாரத்துக்கு எதிராகத்தான் எப்பொழுதும் குரல் கொடுப்பேன் எனும் இவர் 21 ஆண்டுகள் ஜேஎன்யுவில் பயணித்து இருக்கிறார் . ஓய்வுக்குப் பிறகும் மதிப்பிறு பேராசிரியராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். பத்மபூஷன் விருதை மட்டும் இரண்டு முறை மறுத்து விட்டிருக்கிறார் . துறையிலிருந்து வரும் அதிகாரத்தை மட்டுமே பெறும் தன்மையுடையவராய் இவர் உலா வருகிறார்.
ஒரு வரலாற்றாசிரியராய் வரலாற்றை குறுகளாகவும் பிழையாகவும் புரிந்து கொள்ளும்போது தவறான முடிவுகளுக்கு நாம் ஆட்கொள்ளப்படுகிறோம் என்று உணர்த்துவதிலிருந்து இவர் தீவிரமாக வரலாற்றை நுண்ணிய ஆய்வுப் புலத்தில் ஆராய்வது தெரிகிறது. ஆரியர் மிலேச்சர்களுக்கான விளக்கங்கள் , யார் இந்தியர் ? யார் ஆரியர் ? நம் எல்லோர் உடலிலும் ஓடுவது எவ்வகையான ரத்தம் ? என ஆழ்ந்த கேள்விகளை நம்மில் எழுப்புகிறது இப்புத்க வாசிப்பு.
மேலும் இப்புத்தகத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள உரையாடல்கள் பரந்துபட்ட அறிவை நம்முள் ஏற்படுத்துகிறது. புத்தகத்தின் பெயர் என்னவோ ரொமிலா தாப்பர் – ஒரு எளிய அறிமுகம் . ஆனால் எத்தனை சிக்கலான வினாக்களை நம் முன் அவர் விட்டுச் செல்கிறார் என்பதை நாம் சிந்தனையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நிச்சயமாக முற்கால இந்திய வரலாற்றின் மீது புத்தொளி பாய்ச்சியவரில் குறிப்பிடத்தக்கவர் என்றும் , பொதுமக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அறிவு ஜீவியாகவும் இவர் திகழ்கிறார் என்பதில் ஐயமில்லை. இந்திய வரலாறு குறித்து வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் தேட வேண்டிய ஒரு வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பர். அதற்கு ஆசிரியர் மருதன் அவர்களின் இப்புத்தகம் வழிகோலும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர்: ரொமிலா தாப்பர் – ஒர் எளிய அறிமுகம்
ஆசிரியர் : மருதன்
விலை : 200
பக்கங்கள் : 176
வகைமை : வரலாறு
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா விமலா தேவி
பட்டுக்கோட்டை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
“கேள்வி கேட்குமாறு ஒரு குழந்தையை ஊக்குவிப்பது தான் மெய்யான கல்வியாக இருக்க முடியும்.”
அழகு🌹
நூல் அறிமுகம், நூலைப் படிக்கத் தூண்டுகிறது. நன்றி.