திலீஷ் போத்தன், ரோஷன் மேத்யூ நடித்த "ரோந்து (Ronth)" மலையாள திரைப்பட விமர்சனம் | Ronth Malayalam Movie Review - www.bookday.in

திலீஷ் போத்தன், ரோஷன் மேத்யூ நடித்த “ரோந்து (Ronth)” மலையாள திரைப்பட விமர்சனம்

“ரோந்து (Ronth)” மலையாள திரைப்பட விமர்சனம்

ஜூன் 2025இல் திரையரங்குகளில் வெளிவந்து ஜுலை மாதம் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது. ஷஹி கபீர் எழுதி இயக்கியுள்ளார். திலீஷ் போத்தன், ரோஷன் மேத்யூ முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யோஹண்ணன் எனும் காவல் அதிகாரியும் டின்னத் எனும் காவலரும் (ஓட்டுநர்) இரவு ரோந்துக்கு காவல் வாகனத்தில் செல்கின்றனர். அந்த இரவில், ஒரு தற்கொலை, குழந்தையை அடைத்து வைக்கும் சைக்கோ தந்தை, காதலனுடன் வீடை விட்டு போன பெண், மனைவியையும் குழந்தையையும் அடித்து துன்புறுத்தும் குடும்ப வன்முறை என பல்வேறு விஷயங்களை அவர்கள் சந்திக்கிறார்கள்.

இறுதியில் அன்று இரவு நடக்கும் ஒரு கொலையில் குற்றவாளிகளை தப்புவிக்க, உயர் அதிகாரி ஒருவர் இவர்களையே மாட்டிவிடுகிறார். அனுபவம் இல்லாத, சற்று பயந்த சுபாவம் உள்ள டின்னத் தப்பிக்க முயற்சி செய்து ஒரு வாகனத்தில் அடிபட்டு இறக்கிறான். இத்தனை ஆண்டுகள் கூட பணிபுரிந்தவர் என்கிற முறையில் முடிந்தால் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்குமாறும் இல்லையென்றால் நீதிமன்றத்தில் தான் பார்த்துக் கொள்வதாகவும் யோஹண்ணன் கூறுவதுடன் கதை முடிகிறது.

தொடக்கத்தில் யோஹண்ணன் தன் கீழ் பணி புரியும் காவலரை அவமதிப்பதும் பாதிரியாரிடம் பணத்தை பறித்துக் கொள்வதும் என அவரை எதிர்மறையாக காட்டுகிறது. போகப் போக அவரது அனுபவமும் அவரது மனைவியின் மனப் பிறழ்வுக்கிடையில் அவர் பணிபுரிவது, டின்னத்தின் குழந்தைக்கு அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனும்போது அவரே வாகனத்தை ஓட்டி செல்வது, இறுதியில் காவல்துறை எப்படி விளையாடும் என்பதை டின்னத்துக்கு எச்சரிப்பது என அவரது பாத்திரம் மிகச் சிறப்பாக உள்ளது. சாலையில் விழுந்து கிடந்த மாம்பழங்களை பொறுக்கி எடுத்து மனைவிக்காக கொண்டு செல்வது, தன்னை கைது செய்து விடுவார்கள் என்று தெரிந்ததும் மனைவியை பத்திரமாக பாதிரியாரிடம் ஒப்படைப்பது என ஒரு கணவனாக அவரது செயல்பாடுகள் நம்மை உருக்குகின்றன.

காதலர்களுக்கு உதவும் நண்பன் கொலை செய்யப்படுகிறான். அவர் தலித் வகுப்பை சேர்ந்தவர். இந்த இடத்தில் ‘ஆணவக் கொலை’ என்கிற சொல்லை பயன்படுத்தியிருப்பது பாராட்டிற்குரியது. யோஹண்ணனையும் டின்னத்தையும் தனித்தனியாக ஸ்டேட்மென்ட் எழுதி தர சொல்லி அவர்களையே ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்த முயலும் காவல்துறையின் தந்திரம் சில்லிட வைக்கிறது. கூட வேலை செய்யும் அதிகாரியே யோஹண்ணனை மாட்டி விடுவது எல்லா துறையிலும் இருக்கும் போட்டி பொறாமைகளை காட்டினாலும் காவல்துறையில் அதன் விளைவுகள் கடுமையாக இருப்பதை காண முடிகிறது.

யோகண்ணனின் மனைவி சலோமி ஒரு சிறிய பாத்திரம் என்றாலும் அதில் நடிப்பவரின் முக பாவங்கள் அருமை. யோகண்ணன் ஒரு கிறித்துவர். ஒரு நட்சத்திர வடிவ கலைப் பொருளை காவல் வாகனத்தில் மாட்டுகிறார். அரசாங்க வாகனத்தில் மத சின்னங்கள் வைக்கக் கூடாது என்று ஓட்டுநர் ஆட்சேபிக்கிறார். ‘ அது சிலுவை இல்லை; நட்சத்திரம்தான். உன் கையில் கருப்பு கயிறை சுற்றியிருக்கிறாய். அது என்ன?’ என்று கேட்கிறார். இது போன்ற சின்ன சின்ன அரசியல் உரையாடல்களையும் வைத்திருக்கிறார். கர்நாடகாவில் இசுலாமிய பெண்கள் அணியும் முக்காட்டிற்கு மட்டும் தடை விதித்த சம்பவத்தை நினைவூட்டுகிறது.

பத்திரிகைகளின் பாராட்டை இப்படம் பெற்றுள்ளது. வசூலும் நன்றாக இருந்ததாக தெரிகிறது. பலவீனமான இதயம் படைத்தவர்களை சங்கடப்படுத்தும் காட்சிகள் சில உள்ளன. மற்றபடி ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. பல கேரள திரைப்படங்களில் காவல் துறையில் பணி புரிபவர்களின் தனிப்பட்ட கோணங்கள் காட்டப்படுகின்றன. அதன் பொதுத் தன்மை என்ன என்பது விவாதிக்கப்பட வேண்டாமா?

எழுதியவர் : 

✍🏻 இரா. இரமணன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *