அமெரிக்கா கண்டத்தின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்து அவர்களின் நிலப்பரப்பை ஆக்கிரமித்து தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்தது அன்றைய பிரிட்டிஷ் அரசு என்ற வரலாற்று உண்மை நாமறிந்ததே. பிரான்சு, ஸ்பெயின், போர்ச்சுக்கீஸ் போன்ற மற்ற ஐரோப்பிய நாடுகளும் தங்களுக்கான பங்கை அமெரிக்கா கண்டத்தில் எடுத்துக்கொள்ளத் தவறவில்லை. ஐரோப்பியர்கள் அவரவர் சக்திக்கும், தேவைக்கும், வாய்ப்புக்கும் தகுந்த அளவுக்கு அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தனர். செவ்விந்தியர்களைக் கண்டத்தின் மேற்கு நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக விரட்டிவிட்டு அமெரிக்கா முழுவதும் குடியேறினர்.

செவ்விந்தியர்களிடமிருந்து பறித்த வளமிகு நிலப்பரப்பில் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவந்த கறுப்பின மக்களின் உழைப்பைக் கொண்டு வளர்ந்த நாடே இன்று உலகின் வல்லரசாகத் திகழும் அமெரிக்க ஐக்கியக் குடியரசு. ஆப்பிரிக்காவிலிருந்து கோடிக்கணக்கான கறுப்பின மக்களை விலங்குகளைப் பிடிப்பதுபோல் பிடித்து அமெரிக்கச் சந்தையில் அடிமைகளாக விற்றனர். பதினெட்டாம் நூற்றாண்டில்  அமெரிக்காவில் நடந்த மிகப் பெரிய வியாபாரம் அடிமை வியாபாரமே. இரு நூறாண்டுகளுக்கும் மேலாக கறுப்பின மக்கள் அமெரிக்கா கண்டத்தில் பட்ட துயரம் சொல்லித் தீராதது. கறுப்பின மக்கள் இன்றும் நிறம் மற்றும் இன ரீதியான பாகுபாட்டிற்கு ஆளாவதை  அன்றாடம் காண்கிறோம். கறுப்பின மக்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுக்கும் ‘Black Lives Matter’ போன்ற இயக்கங்களின் இருப்பே இக்கொடுமைகள் இன்றும் நீடிப்பதற்கான சாட்சியமாகும்.

கறுப்பின மக்கள் அமெரிக்காவில் அனுபவித்து வரும் கொடுமைகளை கவிதைகளாக, கட்டுரைகளாக, புனைகதைகளாகப் பலரும் பதிவு செய்த வண்ணமே உள்ளனர். அமெரிக்க இலக்கிய வரலாற்றில் ‘கறுப்பின இலக்கியம்’ தனித்துவமானதாகக் கொண்டாடப்படுகிறது. முதன் முதலாக ஃபிள்ளிஸ் வீட்லி என்ற கறுப்பினப் பெண் தன்னுடைய கவிதைத் தொகுப்பை வெளியிட்டபோது வெள்ளையின எழுத்துலகம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஒரு கறுப்பினப் பெண்ணால் இது எப்படி சாத்தியமாகும் என்று சந்தேகம் கொண்டனர். கவிஞர் ஃபிள்ளிஸ் வீட்லி  நீதிமன்றம் சென்று தன்னுடைய எழுத்தின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டியிருந்தது. இதுவே அமெரிக்க எழுத்துலகில் நிலவிய நிற வெறிக்கான சான்று.

தொடர்ந்து பலரும் கறுப்பின மக்களின் சொல்லொண்ணா சோகங்களைத் தங்களின் படைப்புகளில் பதிவு செய்த வண்ணமே இருந்தனர். ஜேம்ஸ் பால்டுவின் எழுதிய ‘Go, Tell it on the Mountain’ நாவல் கறுப்பின இலக்கியத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தியது. 1920-40 களுக்கு இடைப்பட்ட பகுதியிலான காலம் ‘ஹார்லெம் மறுமலர்ச்சி’ காலம் என்றழைக்கப்படுகிறது. (ஹார்லெம், நியூயார்க்கின் ஒரு பகுதியாகும்) ஜோரா ஹர்ஸ்டன் எழுதிய ‘Their Eyes were Watching God’(1937), ரிச்சர்டு ரைட் எழுதிய ’Native Son’, ரால்ஃப் எல்லிசன் எழுதிய ’Invisibe Man’(1952) போன்ற நாவல்கள் வெற்றிகரமாகத் தடம் பதித்தன. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பினப் பெண் எழுத்தாளரான டோனி மாரிசனின் ‘Beloved’ உட்பட பல நாவல்களும் கறுப்பின மக்களின் மன வலிகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அலிஸ் வாக்கர் தன்னுடைய ‘Colour Purple’ போன்ற நாவல்களில் கறுப்பினப் பெண்கள் இன ரீதியிலும், பாலியல் ரீதியிலும் படும் துயரங்களைச் சித்தரிக்கிறார்.

Roots: The Saga of an American Family: Haley, Alex: 9780306824852 ...

அமெரிக்காவில் அடிமைகளின் துயரங்களை முதன் முதலாகப் பேசிய நூல் ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் என்ற பெண்மணி 1852இல் எழுதிய ’Uncle Tom’s Cabin’ என்ற நாவலாகும். இந்நாவல் அடிமை முறை ஒழிப்பு குறித்த  வித்தை விதைத்து மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுவெளிவந்து 120 ஆண்டுகள் கடந்து அலெக்ஸ் ஹேலியின் ‘வேர்கள், ஒரு குடும்பத்தின் வரலாறு’ நாவல் 1977இல் வெளிவந்து  உலகையே உலுக்கியது. லட்சக்கணக்கான பிரதிகள் விற்றன. கறுப்பின மக்கள் ஒவ்வொருவரும் அதனை வாங்கிப் படித்து பைபிளைப் போல் பாதுகாத்தனர். ஹேலியின் பனிரெண்டு ஆண்டு கால உழைப்பிற்குக் கிடைத்த வெற்றியாகும். பல்லாயிரம் மைல்கள் பயணித்து, பல்துறை அறிஞர்களுடனும் கலந்துரையாடி, நிறைய நூலகங்களில் மணிக்கணக்காக ஆய்வுகள் மேற்கொண்டு, பல அலுவலகங்களின் பதிவேடுகளிலும் தேடுதல் வேட்டை நடத்தி எழுதப்பட்ட நாவல்.

அலெக்ஸ் ஹேலி கடற்கரையோரக் காவற்படை ஊழியராக  இருபதாண்டுகள் பணியாற்றினார். கப்பல் நூலகத்தில் இருந்த புத்தகங்களை எல்லாம் படித்து எழுத்தாளராக வேண்டும் என்ற உந்துதல் அடைந்தார். ரீடர்ஸ் டைஜஸ்ட், ப்ளே பாய் பத்திரிக்கைகளில் பணியாற்றியபோது மால்கம் எக்ஸ் போன்ற மிகப் பெரிய ஆளுமைகளின் நேர்காணல்களை நடத்தி பிரபலமானார். கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மால்கம் எக்ஸ் அவர்களுடன் மூன்றாண்டுகள்  நேர்காணல் நடத்தி அவரின் வாழ்க்கை வரலாற்றை (1965) எழுதினார். இது அலெக்ஸ் ஹேலியின் முதல் வெற்றியாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து ‘வேர்கள்’ என்ற தன்னுடைய குடும்ப வரலாற்றை எழுதி எண்ணற்ற பரிசுகளும்,. பெரும் புகழும் பெற்றார்.

புகழுடன் சேர்ந்து பிரச்சனைகளும் வந்தன. ஹெரால்டு கூர்லாண்டர் என்ற எழுத்தாளர் தன்னுடைய ’தி ஆப்ரிகன்ஸ்’ நாவலின் சில பக்கங்களைத் திருடி ‘வேர்கள்’ நாவல் எழுதப்பட்டுள்ளது என்று சொல்லி வழக்குத் தொடுத்தார். ஹேலி மறுப்பேதும் தெரிவிக்காமல் ஒத்துக்கொண்டு பல லட்சம் டாலர்களைக் கொடுத்துப் பிரச்சனையை முடித்துக் கொண்டார். ஆனால் இந்நிகழ்வு ஹேலியின் புகழையும், நூலின் விற்பனையையும் பாதிக்கவில்லை. ஹேலி தான் எழுதியது தன் குடும்பத்தின் வரலாறு என்று பிரகடனப்படுத்தினாலும், ஆய்வாளர்களும், விமர்சகர்களும் இதனை வரலாற்று நூலாக ஏற்க மறுத்து புனைவிலக்கியமாகவே கருதுகின்றனர். ‘வேர்கள்’ புனைவும், உண்மையும் இரண்டறக் கலந்த அருமையானதொரு நாவல் என்பதில் ஐயமில்லை.

அலெக்ஸ் ஹேலி தன்னுடைய மூதாதையர்களைத் தேடிச் சென்ற பயணத்தில் தோற்றிருக்கலாம். ஆனால் ஹேலியின் பயணம் நேர்மையானது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்நாவல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பின் காரணமாக இன்று புலம் பெயர்ந்து வாழும் பலரும் தங்களின் வேர்களைத் தேடி பயணிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது ஹேலிக்கு கிடைத்த வெற்றிதானே!            ‘வேர்கள்’ ஆங்கிலத்தில் எழுநூறு பக்கங்களுக்கும் மேலாக எழுதப்பட்ட உணர்ச்சிமிகு நாவல். தமிழில் பொன்.சின்னத்தம்பி முருகேசனின் அருமையான மொழிபெயர்ப்பில் (911 பக்கங்களில்) ’எதிர் வெளியீடு’ பதிப்பகம் நூலை பாங்குடன் கொண்டுவந்துள்ளது. ’வேர்கள்’ நாவலின் சுருக்கிய வடிவத்தை ’ஏழு தலைமுறைகள்’ என்ற தலைப்பில் ஏ.ஜி.எத்திராஜூலு கொண்டு வந்துள்ளார்.

14 Things You Didn't Know About the Original 'Roots' Miniseries ...

’வேர்கள்’ நாவல் ஆப்பிரிக்காவின் காம்பியாவில் இருக்கும் ஜுஃப்யூர்  கிராமத்தில் தொடங்குகிறது. கதையின் நாயகன் குண்டா கின்டே தன் பாசமிகு பெற்றோர்களுடன் அமைதியுடனும், அல்லாவின் மீதான ஆழ்ந்த பக்தியுடனும் வாழ்ந்து வருகிறான். அவனுடைய வளர்ச்சி கண்டு வீட்டுப் பெரியவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். பதினாறு வயது நிரம்பியதும் அவனுக்கான பயிற்சிகளையெல்லாம் கொடுத்தபின் தனியாக நிலம் கொடுத்து வாழ்வைத் தொடங்கச் சொல்கின்றனர். காம்பியாவின் அடர்ந்த காடுகளில் ஒளிந்து நின்று கிடைப்பவர்களைக் கடத்திச் செல்வதற்காக பரங்கியர்கள் திரிவதால் குண்டாவைக் கவனமாக இருக்கச் சொல்கிறார்கள்.

ஒரு நாள் மத்தளம் செய்யத் தேவையான மரத்தை வெட்டுவதற்காக குண்டா காட்டுக்கு வருகிறான். அவன் சற்றும் எதிர்பாராத தருணத்தில் நான்கைந்து பரங்கிகள் உள்ளூர் கறுப்பர்களின் உதவியுடன் குண்டாவை அடித்து குண்டுக்கட்டாகக் கட்டித் தூக்கிச் செல்கின்றனர். கடற்கரையில் தயாராக நிற்கும் கப்பலில் ஏற்றுகின்றனர். கப்பலில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 98 பேர் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறான். அனைவரையும் நிர்வாணப்படுத்தி, சங்கிலிகளால் பிணைத்து கப்பலின் அடித்தளத்தில் அடைத்துவைக்கிறார்கள். “பைத்தியம் பிடித்துவிட்டதோ! குண்டா மருண்டான்! அம்மணமாக, சங்கிலியால் பிணைக்கப்பட்டு, விலங்கிடப்பட்டு மற்ற இரு அடிமைகளுக்கு இடையே மல்லாந்தபடி விழித்தான்.

கும்மிருட்டு! தகிக்கும் வெப்பம்! குடலைப் புரட்டும் துர்நாற்றம்! ஓலமும், அரற்றலும் வாந்தியெடுத்த சத்தமும் பைத்தியக்கார விடுதியைக்காட்டிலும் கொடூரமான சூழல்! மார்பின் மீதும் வயிற்றின் மீதும் அவனுடைய வாந்தி! உறுத்தியது! மூக்கைத் துளைத்தது! சிறை பிடிக்கபட்ட நான்கு நாட்களாக அவன் மீது விழுந்த அடிகளால் உடல் முழுவதும் ரண வேதனை! தோள்களுக்கிடையே சூட்டுக் கோலால் போடப்பட்ட கோடுகள் நரக வேதனையால் துடிக்கச் செய்தன”. இத்தகு கடுமையான பயணத்திற்குப்பின் 1767 செப்டம்பர் 29 அன்று கப்பல் அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் அனாப்பொலிஸ் நகரின் கடற்கரையை வந்தடைகிறது. பயண வழியிலேயே பாதிக்கும் மேலானோர் இறந்து கடலில் வீசி எறியப்பட்ட பின்னர் 42 பேர் மட்டுமே சந்தையில் விற்பனைக்கு வருகின்றனர்.

குண்டா 850 டாலருக்கு விற்கப்படுகிறான். எப்படியாவது தப்பிச் சென்றுவிட வேண்டும் என்று நான்கு முறை முயற்சிக்கிறான். நான்காவது முறை தப்பிக்கும்போது கொடூரமாக தண்டிக்கப்படுகிறான். அவன் வலது பாதத்தின் முன்பகுதி கோடாரியால் வெட்டி எடுக்கப்படுகிறது. அவனுடைய முதலாளி வீட்டில் இருக்கும் பெல் என்ற அடிமைப் பெண் அன்புடன் பராமரித்து, வெட்டுண்ட காலுக்கு மருந்திட்டு அவனை குணமாக்குகிறாள். தப்பிக்கும் முயற்சிகளைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறாள். தப்பிச் செல்லும் அடிமைகளை சுட்டுத்தள்ளவும் அமெரிக்கச் சட்டத்தில் இடமுள்ளது என்றும், அடிமைக்கு மரணம் மட்டுமே விடுதலை அளிக்கும் என்றும் விளக்குகிறாள். குண்டா ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஒரு குடுவையில் கல்லைப் போட்டுவைக்கிறான். காலத்தைக் கணக்கிட அவனுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டது.

TV One Sets Airing of Original 'Roots' Miniseries – Variety

அமெரிக்கா வந்து பதினேழு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவனுக்கு இப்போது 37 வயது என்பதை உணர்ந்தான். பெல்லின் அன்பும் அரவணைப்பும் மட்டுமே அவனுக்கு இதமாக இருந்தது. இருவரும் முதலாளியின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக வருபவர்கள் நாளடைவில் தங்கள் மொழி, மதம், கலாச்சாரம் அனைத்தையும் மறந்து அமெரிக்கச் சூழலுக்குத் தக்கவாறு தங்களை தகவமைத்துக் கொள்வர். பெல்லும் கிறித்துவ பெண்ணாகவே மாறியதுடன் ஆங்கிலம் சரளமாகப் பேசக் கற்றுக் கொள்கிறாள். குண்டாவால் தன்னுடைய நாட்டையும், மொழியையும், கலாச்சாரத்தையும், அல்லாவையும் மறக்க முடியவில்லை.  இருப்பினும் இருவரும் அன்பினால் கட்டுண்டு வாழ்கின்றனர்.  அழகான பெண் குழந்தையையும் பெறுகிறார்கள்.

குண்டா தன் செல்ல மகள் கிஜ்ஜிக்கு தன்னுடைய பிறந்த மண்ணைப் பற்றியும், தன் தாய்மொழியிலிருந்து சில வார்த்தைகளையும் சொல்லிக் கொடுக்கிறான். கிஜ்ஜி என்றென்றும் இவ்வார்த்தைகளை மறக்கக் கூடாது என்றும், அவளின் குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிறான். அப்பாவின் பாசத்தில் திளைக்கும் கிஜ்ஜி அவர் சொல்லிக்கொடுத்த எதையும் மறக்கவில்லை. முதலாளி வீட்டில் நோவா என்ற கறுப்பின இளைஞன் வேலையில்  சேருகிறான். கிஜ்ஜிக்கும் அவனுக்கும் காதல் ஏற்படுகிறது. இருவரும் தப்பி ஓடும்போது பிடிபடுகின்றனர். பெல்லும், குண்டாவும் எவ்வளவு கெஞ்சியும் முதலாளி இரக்கம் காட்டவில்லை. கிஜ்ஜியை அடிமைச் சந்தையில் விற்றுவிடுகிறான். குண்டாவும், பெல்லும் அதற்குப்பின் கிஜ்ஜியை பார்க்க முடியாமலேயே அவர்கள் வாழ்நாள் முடிகிறது. கிஜ்ஜியை விலைக்கு வாங்கிய முதலாளி ஒரு குடிகாரன்.

கிஜ்ஜியை தினமும் பாலியல் வன்முறை செய்கிறான். அவளுக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு ஆப்பிரிக்க மொழியில் பெயர்வைக்க வேண்டும் என்று கிஜ்ஜி ஆசைப்படுகிறாள். ஆனால் முதலாளி குழந்தைக்கு ஜார்ஜ் என்று பெயரிடுகிறான். கிஜ்ஜி தன் மகனுக்கு அவன் தாத்தா குண்டா சொல்லிக்கொடுத்த ஆப்பிரிக்கா வார்த்தைகளைக் கற்றுக்கொடுக்கிறாள். கிஜ்ஜியின் முதலாளி சேவல்களை சண்டைக்குப் பழக்கிப் போட்டிகளில் பங்கேற்பவன். ஜார்ஜ் தன் முதலாளியுடன் சேர்ந்து எந்நேரமும் சேவல்களைப் பழக்குவதில் ஆர்வம் காட்டுகிறான். இருவரும் சேவல் சண்டையில் ஈடுபாடோடு இருக்கிறார்கள். ஒரு நாள் கிஜ்ஜி அவன் முதலாளிதான் அவனுடைய தந்தை என்ற உண்மையைச் சொல்கிறாள். தான் பெற்ற மகனையே அடிமையாக நடத்தும் தகப்பன் மீது ஜார்ஜ் கோபம்கொள்கிறான். குடிகாரத் தந்தையிடமிருந்து விடுதலை பெற விரும்புகிறான். பக்கத்துப் பண்ணையில் வேலைபார்க்கும் அடிமைப் பெண் மெடில்டாவை ஜார்ஜ் காதலிக்கிறான். இருவரும் திருமணம் செய்துகொண்டு எட்டு பிள்ளைகள் பெறுகின்றனர்.

அலெக்ஸ் ஹேலியின் வேர்கள் - பிரியா ...

அதில் ஒரு குழந்தைக்கு முதலாளியின் பெயரான டாம் என்று வைக்கப்படுகிறது. பேரக் குழந்தைகளுக்கு  கிஜ்ஜி தன் தந்தை குண்டா சொல்லிக் கொடுத்த ஆப்பிரிக்க வார்த்தைகளைச் சொல்லிக் கொடுக்கிறாள். குழந்தைகள் அனைவரும் பாட்டி சொல்லும் ஆப்பிரிக்கா பற்றிய செய்திகளை ஆவலுடன் கேட்டு மனதில் கொள்கின்றனர். இச்சமயத்தில் ஆபிரகாம் லிங்கனின் அடிமை ஒழிப்பு இயக்கம் வெற்றி பெறுகிறது. அடிமைகளின் வாழ்வில் ஒளி பிறக்கிறது. விடுதலை பெற்றதும் ஜார்ஜ்-மெடில்டா தம்பதிகள் கடினமாக உழைத்து வாழ்வில் வளம் பெறுகின்றனர். ஜார்ஜின் குழந்தைகளில் ஒருவனான டாமின் வழி அவன் மகள் சிந்தியாவையும், சிந்தியாவின் வழி அவள் மகள் பெர்த்தாவையும், பெர்த்தாவின் வழி அவள் மகன் அலெக்ஸ் ஹேலியையும் தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வந்த ஆப்பிரிக்கச் செய்தி எட்டுகிறது.

ஏழாவது தலைமுறையைச் சேர்ந்த ஹேலி எழுத்தாளர் என்பதால், தனது தாய்வழி மூதாதையரைப் பற்றிய செவிவழிச் செய்திகளில் பொதிந்திருந்த உண்மைகளைத் தேட முற்பட்டார். தன்னிடமிருந்த செவிவழிச் செய்தியைப் பற்றிக்கொண்டு  காம்பியாவிலிருக்கும் கிராமம் ஜுஃப்யூர் வந்தடைகிறார். அந்தக் கிராமத்தில் நிலவிடும் வாய் மொழி வரலாறும், தன்னிடமிருந்த செவிவழிச் செய்தியும் ஒன்றிணைவதைக் கண்டு பெருமிதம் அடைகிறார். தன்னுடைய வேர்களைக் கண்டுபிடித்துவிட்டதாக நம்புகிறார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மகிழ்ச்சி அடைகிறார். அந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் சிதைப்பதற்கு நாம் யார்?

   —-பெ.விஜயகுமார்.

        —————————————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *