ரஃப் நோட்டு – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர்: ரஃப் நோட்டு
ஆசிரியர் : ஆயிஷா. இரா.நடராஜன்
வெளியீடு :பாரதி புத்தகாலயம்
விலை: 80
ராஃப் நோட்டு என்பது பள்ளி பருவத்தில் அனைவரும் பயன்படுத்திய முக்கியமான ஒன்றாகும்.அதில் கதைகள், கவிதைகள், மற்றும் கட்டுரைகளை எழுத பழக பயன்பட்டன.
ஓவியங்கள், வரைபடங்கள் மற்றும் வகுப்பில் பேசக்கூடிய மாணவர்களின் பெயர் எழுத மற்றும் ஆசிரியர்கள் கையொப்பங்களை போல பழகிக்கொள்ள இப்படியே பல நோக்கங்களுக்கு பயன்படும் ஒன்றாகும் என்பதை அனைவரும் அறிந்ததே. அப்படியாக இந்த புத்தகத்தில் ஆசிரியர் ரஃப் நோட்டின் சிறப்பை விளக்கும் விதத்தில் அமைந்த அருமையான நூல்.
” ராஃப் நோட்டு” இப்புத்தகத்தில் பேசப்படும் முக்கிய கதாபாத்திரமாக திகழும் பாபு என்ற மாணவன், பள்ளியில் சக மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் அனைவராலும் மக்கு, பைத்தியம், சரியாக எழுத படிக்கத் தெரியாதவன் என்று கூறப்பட்ட சிறுவன். சரி பள்ளியில் தான் அப்படி பெயர் பெற்றவன் என்றால் பரவாயில்லை, தன் வீட்டிலும் பாபுவை எதுக்கும் உதவாத பயன்படாத மக்கு என்று பெற்றோர்களும் எண்ணினர்.பாபு எதை செய்தாலும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தனர்.இதனை நன்கு அறிந்த பாபு மனதில் தாழ்வு மனப்பான்மையை மரம் போல் வளர்த்தான்.
பாபு, ஒரு முறை தன் ரஃப் நோட்டை தொலைத்து விடுகிறான்.அந்த நோட்டு காணாமல் போனதிலிருந்து பள்ளியிலும், வீட்டிலும், தெரிந்தவர்களிடமும் எனது ராஃப் நோட்டை பார்த்தீர்களா? அதனை கண்டால் என்னிடம் தாருங்கள் என்று மிகவும் மனம் வருந்தி தேடிக்கொண்டே அலைந்தான். அந்த நோட்டில் என்ன எழுதியிருந்தான் என்பதை கூட மறந்து விடுகிறான். காரணம் ஞாபகம் வருதியும் அவனிடம் மிகுதியாக இருந்தது.
பாபுவிற்கு பிடித்தவன், பேசக்கூடியவன் நண்பன் பிலிசிங். ஒரு நாள் பாபு பிலிசிங்கைத் தேடிச்செல்கிறான். தனது ரஃப் நோட்டு தொலைந்து போனது கூறுகிறான்.பிறகு அவனுடன் கடற்கரைக்குச் செல்கிறான். அங்கு தன்னையுமறியாமல் ஒரு கதை சொல்லத் தொடங்குகிறான் பாபு.
பாபுவின் கதையை கேட்க கூட்டம் கூடுகிறது.அப்படி என்ன கதைகள் சொன்னான்? ஒட்டகத்திற்கு எப்படித் திமில் வந்தது?
என்ற கதையோடு தொடங்குகிறான். கடலில் தண்ணீர் எப்படி உப்பானது? நண்பர்களை காப்பாற்றிய ஷீமோ கதை, தமிழ் மாதங்கள் ஆங்கில மாதங்கள் திருமணம் செய்தது எப்படி? அவர்களின் பிள்ளைகள் யார்? இந்த மாதிரியான சுவாரசியமான கதைகள்.
மீக்கா பூச்சி என்ற அரசனின் கோமாளித்தனம், ஆட்சியில் விவசாயம் செய்த விவசாயிகளை சிறை பிடித்தல் கதைகளை தொடர்ந்து.
துன்பம் மற்றவர்கள் துன்பத்தை விட குறைந்தது தான் என்பதை உணர்த்தும் கடவுளின் கதை, சோம்பேறி ராஜாவைத் திருத்திய ராஜாவின் அம்மா பற்றிய கதை, கழுதைக் காது கொண்ட சேனாதிபதியின் கதை,
உன்னைத் தெரியாதா மகனே என்ற கதையில் உருவம் மாறி இருந்தாலும் தன்னுடைய மகனின் வாசம் மூலம் தெரிந்து கொண்ட தாய். இப்படி மொத்தம் பத்துக்கு மேற்பட்ட குட்டி கதைகள் படிக்க படிக்க மிகமிக புதிய பார்வையை தருகிறது.
அனைவரும் மக்கு என அறிந்த இவனுக்குள், இப்படி ஒரு கதை சொல்லும் திறன் ஒளிந்துள்ளதா என ஆச்சரியத்தோடு பாபுவின் கதைகளை கேட்க ஆச்சரியத்தோடு ஆசைப்பட்டனர்.
கடற்கரையில் பாபு கதைகளை கேட்க பயங்கரமான கூட்டம். அந்த கூட்டத்துக்குள் பாபுவின் பெற்றோர் அவனது ஆசிரியர்கள் இருந்தனர்.
இறுதியாக அனைவரும் பாபுவை நன்கு புரிந்து கொண்டன. படிப்பு மட்டும்தான் சரியாக வரவில்லை ஆனால் கதை சொல்லும் திறன் இவனுக்கு மிகுந்து உள்ளது என புரிந்து கொண்டு பாபுவை கொண்டாட தொடங்கினர்.
பாபுவின் கதை கேட்க மாவட்ட ஆட்சியர் ஓடோடி வந்து அவனை பாராட்டி பரிசு கொடுத்தார்.
தன்னிடமிருந்து தன்னையுமறியாமல் வாய்விட்டு மனதில் நினைப்பதையெல்லாம் பேசும் பாபு அதை எப்படி மாற்றிக் கொள்கிறான் என்பது மிக அருமையான உளவியல் ரீதியாக கொடுக்கப்பட்ட விளக்கம். இறுதியாக பாபுவின் ராஃப் நோட்டு கிடைத்திடும்.
இப்புத்தகத்தின் மூலம் நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால் ஒருவரிடம் ஒரு திறமை இல்லாவிட்டாலும், மற்றொரு திறன் ஏதோ ஒன்று ஒழிந்து இருக்கும். ஏதோ ஒரு சூழலில் ஏதோ ஒரு காரணத்தால் ஒளிந்திருந்த திறனும் வெளிவரும்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
தி. தாஜ்தீன்
முதுகலை ஆசிரியர்
அரசு உதவி பெறும் தி கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி
ஆவணியாபுரம்,ஆடுதுறை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

