‘தே’ ஒரு இலையின் வரலாறு
ஆசிரியர் : ராய் மாக்ஸம்
தமிழில் : சிறில் அலெக்ஸ்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
ஆண்டு : 2021 முதல் பதிப்பு
விலை : ரூ 325
பக்கம் : 272
தேயிலை இது நமக்கு ஓர் உற்சாகம் தரும் பானம் என்பது மட்டுமே தெரியும். ஆனால் இத் தேயிலை உலகை புரட்டிப்போட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் பிரிட்டிஷ் இந்தியாவை அடிமைபடுத்தியது தெரியும். ஆனால் தேயிலைக்காக கொலை, கொள்ளை, கடத்தல், கலப்படம், வியாபாரத்தை தன்வசப்படுத்த வேண்டும் என்பதற்காக உலகின் கிழக்கு மேற்காக கடலில் ஊடுருவி நாடுகளை பிடித்த வரலாற்றைச் சொல்கிறது இத்தேயிலை.
இதோ இதோ நமக்கு அருகாமையில் இருக்கும் இலங்கையில் நடந்த இனமோதலுக்கு ஆரம்பமே தேயிலையே. அது இன்று வரை தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் வேரோடு பிடுங்கி எறிவதற்கு இத்தேயிலை காரணமாக இருந்துள்ளது.
ஆம் பிரிட்டிஷாரால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சத்தால் தென்னிந்திய மக்கள் குறிப்பாக தமிழர்கள் தேயிலைத் தோட்டத்திற்கு கூலிகளாக வந்து சேர்ந்தனர்.
கி.பி 1900ல் 3லட்சம் தமிழர்கள் இருந்துள்ளனர். ஆனால் அப்போது இலங்கையின் மக்கள் தொகை 40 லட்சம் மட்டுமே. இன மோதல் இங்கிருந்துதான் ஆரம்பமானது என்று ஆசிரியர் கூறுகிறார். பிரிட்டிஷார் மேலே வரவேண்டிய கோபம் பிழைக்க வந்த மக்களிடம் வெளிப்படுத்தியதுதான் துயரமானது. வரலாறு எப்போதும் வலுத்தவனுக்கே அடங்கிப்போகும் ஏற்பாடாய் அமைக்கப்பட்டுள்ளதே என்ன செய்ய.
கி.மு முதலாம் நூற்றாண்டில் வடஇந்தியாவிலிருந்து சிங்களவர்களாகவும், தென்னிந்தியாவிலிருந்து தமிழர்களும் முதன்முதலில் இலங்கையில் குடியேறியுள்ளனர் என்கிறார் ஆசிரியர். இரண்டுமே இப்படி வந்தேறிகளாக இருக்கும்போது தமிழர்களை மட்டும் துரத்த நினைப்பது எதன் வெளிப்பாடு?
சொல்லப்போனால் இன்று உலகம் முழுவதுமே எல்லாரும் வந்தேறிகளே ஆப்பிரிக்காவைத் தவிர. ஆனால் பிறரை வந்தேறி என்கிறது வலுத்த வந்தேறி.
சீனாவில் மட்டுமே நூற்றுக்கணக்கான வருடங்கள் பயன்பாட்டிலிருந்த ஒரு பானம், பின்னர் ஐரோப்பிய வியாபாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு உலகப்புகழ்பெற்ற தேயிலை, சென்ற இடமெல்லாம் ரத்தப்பலிகளையே அது கேட்டது. மலைகள் உள்ள இடமெல்லாம் பிணங்கள் சிதறிய காட்சிகளாகவே தேயிலை உருவாக்கியது.
ராய் மாக்ஸம் ஏற்கனவே உப்புவேலி நூலால் இந்திய மக்களுக்கே மறந்துபோன, தெரியாத வரலாற்றை வழங்கி அது இன்றும் நம்மை அதிர்ச்சியிலிருந்து மீள விடவில்லை. அடுத்ததாக இந்நூல். ஏராளமான வரலாற்றுப் பொக்கிஷங்களை, அரசியலை தேயிலை தன் உற்சாக பானத்தில் ஒளித்து வைத்திருப்பதை வாசியுங்கள் நண்பர்களே!
வாசிப்போம்! விவாதிப்போம்!!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.