பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் அளித்த கோடி ரூபாய் நன்கொடையை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.எம்.கேர்ஸ் நிதிக்குத் திருப்பி விட்டுள்ளார்  – டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

அஜோய் ஆசீர்வாத் மகாபிரஷஸ்தா

தி வயர் இணைய இதழ், 2020 எப்ரல் 22

பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கென்று பல்கலைக்கழக ஊழியர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கு மேலான தொகையை டெல்லி பல்கலைக்கழகத் துணைவேந்தர் யோகேஷ் தியாகி, யாரிடமும் கலந்தாலோசிக்காமல் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நெருக்கடி நிலைக்கான நிவாரண பணி நிதிக்கு (பிஎம்-கேர்ஸ்) திருப்பி விட்டிருப்பதாக டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ரஜீப் ராய் மற்றும் செயலாளர் ராஜீந்தர் சிங் ஆகியோர் துணைவேந்தருக்கு எழுதிய கடிதத்தில், ’டெல்லி பல்கலைக்கழகத்தின் அனைத்து ஊழியர்களும் 2020 மார்ச் மாத சம்பளத்திலிருந்து ஒரு நாள் சம்பளத்தை துணைவேந்தரின் நிவாரண நிதிக்கு வழங்குமாறும், பின்னர் துணைவேந்தரின் நிதிக்கு வழங்கப்படுகின்ற ஒட்டுமொத்த பங்களிப்பும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் சேர்க்கப்படும்’ என்று பல்கலைக்கழகப் பதிவாளர் அனைத்து ஊழியர்களையும் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

DU Admission 2020: delhi university ba bcom bsc ug under graduate ...

’இருப்பினும், டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களுக்கு நீங்கள் விடுத்திருந்த செய்தியிலிருந்து ஒட்டுமொத்த பங்களிப்பும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்குப் பதிலாக பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நெருக்கடி நிலைக்கான நிவாரண பணி நிதிக்கு (பிஎம்-கேர்ஸ்) பல்கலைக்கழகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்த போது அதிர்ச்சியடைந்தோம்’ என்று டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மாணவர்களுக்கு துணைவேந்தரின் செய்தி

எங்கள் மதிப்புமிக்க முன்னாள் மாணவர்களே,

உங்களை சிறந்த ஆரோக்கியத்துடனும், எழுச்சியுடனும் இந்த செய்தி கண்டடையும் என்று நாங்கள் நம்புகிறோம்! மனிதகுலம் இதுவரையிலும் கண்டிராத வகையில், கோவிட்-19 தொற்றுநோயால் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில், உங்கள் அனைவரையும் எங்களுடைய எண்ணங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறோம்; உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினருக்காகவும் எங்களுடைய பிரார்த்தனைகள் இருக்கின்றன. இந்த முக்கியமான கட்டத்தில், தேச சேவையில் நீங்கள் தாரளமாகப்  பங்களிப்பீர்கள் என்ற  நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம்.

நீங்கள் பயின்ற இந்த பல்கலைக்கழகம் எப்போதும் தேசிய சேவைக்கு தனது பங்கை உறுதியளித்துள்ளது. தொற்றுநோயை எதிர்த்து நிற்கும் இந்த நேரத்தில், எங்களால் முடிந்த அனைத்தையும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மற்றும் உங்களைப் போன்ற உறுதியான நபர்களின் ஒத்துழைப்புடன் நாங்கள் செய்து வருகிறோம் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்வீர்கள்.

பொதுவான கல்வி நடவடிக்கைகள் – முக்கியமாக வகுப்பறை கற்பித்தல் மற்றும் ஆய்வக ஆராய்ச்சி – போன்றவை கட்டாய இடைவெளி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. அறிவு, ஆய்வு, புதுமை மற்றும் சமூக மேம்பாடு ஆகிய நோக்கங்களை அடைவதை இந்த தடைகள் தடுப்பதற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை.. உண்மையாகச் சொல்வதென்றால், இந்த் உலகளாவிய தொற்றுநோய் நாம் பணிபுரியும் முறையை மறுபரிசீலனை செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. கற்பித்தல்-கற்றல் செயல்பாட்டின் தொடர்ச்சியை உறுதி செய்யும் வகையில், நமது ஆசிரியர்கள் மெய்நிகர் வகுப்பறைகள் மற்றும் பிற டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதை வெற்றிகரமாக கண்டறிந்துள்ளனர். கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் மாணவர்களுக்கு தற்போதைய அமர்வுக்கான தேர்வுகளை நடத்துவதைப் பற்றி நாங்கள் சிந்தித்து வருகிறோம். அடுத்த அமர்வின்  சேர்க்கைக்கான தயாரிப்புகள் குறித்து நாங்கள் மதிப்பாய்வு செய்து வருகிறோம். இந்த ஆண்டும் நமது  மாணவர்களுக்கு ஒரு பயனுள்ள அமர்வு  இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், சிலர் உலகெங்கிலும் இருந்து வந்துள்ள பெரும்பான்மையான மாணவர்கள். விடுதிகளில் தங்கியிருந்து கற்று வருகின்றனர், அவர்களை நாங்கள் மிக நன்றாக கவனித்து வருகிறோம்.

தேசிய சேவைக்கான அழைப்பிற்கு பல்கலைக்கழகம் உடனடியாகப் பதிலளித்திருக்கிறது. பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நெருக்கடி நிலைக்கான நிவாரண பணி நிதிக்கு வழங்குவதற்காக பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து தங்களுடைய ஒரு நாள்  சம்பளத்தை –  நான்கு கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளனர். எதிர்காலத்திலும் இன்னும் நிறைய செய்ய நாங்கள் விரும்புகின்றோம்.

நமது வடக்கு மற்றும் தெற்கு வளாகங்களின் சுற்றுப்புறங்களில் உள்ள ஏழை அல்லது வீடற்றவர்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக, ‘டெல்லி பல்கலைக்கழகத்தின் அக்கம்பக்கத்தினருக்கான பராமரிப்பு’ திட்டத்தை தொடங்கியுள்ளோம். அந்தந்த சுற்றுப்புறங்களில் உள்ள பிரச்சனைகளை நமது உறுப்புக் கல்லூரிகள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள ஊக்குவித்துள்ளோம். பரவலான கோரிக்கைகளை மெய்நிகர் பயன்முறையின் மூலமாக கவனித்து, வரவிருக்கின்ற சவால்களைப் பற்றி விவாதிக்கவும், அவற்றிற்கான தீர்வுகளை வகுத்து, அவற்றை விரைவாகச் செயல்படுத்தவும் சிறப்பு பணிக்குழு ஒன்றை பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு ஆதரவான நிலையான தூணாகவும், இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப பெரும் பங்களிப்பாளராகவும் நீங்கள் இருந்துள்ளீர்கள். இன்று நீங்கள் எங்கிருந்தாலும், சமூகத்திற்கு சேவை செய்வதற்கான உங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் பயின்ற பல்கலைக்கழகம் உங்களைக் கேட்டுக்கொள்கிறது.

நாம் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும், ஒற்றுமையுடன் மனிதகுலத்தைப்  பேணவும், சிறந்ததொரு உலகத்தை  உருவாக்கவும் முடியும் என்று நம்புங்கள்..

இந்த வழியில் உங்களுடைய முயற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.  மேலும் உத்வேகம் பெறுவோம். உங்கள் முயற்சிகளைப் பற்றி எங்களுக்கு [email protected] வழியாகப் பதிவிடவும்.

பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்! வாழ்த்துக்கள்

யோகேஷ் தியாகி

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் பலரும், இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு பல்கலைக்கழகம் தங்களில் யாரையும் கலந்தாலோசிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றனர். ’தியாகி வேறு ஏதோ பல்கலைக்கழக நிதியிலிருந்து பிஎம்-கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளித்திருக்கலாம் என்றே நாங்கள் ஆரம்பத்தில் நினைத்தோம். ஆனால், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கென்று நாங்கள் அளித்த நன்கொடைகள் பிஎம்-கேர்ஸுக்கு அனுப்பப்பட்டன என்பதை முன்னாள் மாணவர்களுக்கு அவர் அனுப்பிய செய்தி உறுதிப்படுத்தியது’ என்று பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் மாணவர்களுக்கு விடுத்த செய்தியில், தியாகி ’தேசிய சேவைக்கான அழைப்பிற்கு பல்கலைக்கழகம் உடனடியாகப் பதிலளித்திருக்கிறது. பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நெருக்கடி நிலைக்கான நிவாரண பணி நிதிக்கு வழங்குவதற்காக பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து தங்கள் ஒரு நாள்  சம்பளத்தை, நான்கு கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளனர். எதிர்காலத்திலும் நாங்கள் இன்னும் நிறைய செய்ய விரும்புகின்றோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு டெல்லி பல்கலைக்கழகம் எவ்வாறு பல மட்டங்களில் பங்களிப்பு செய்திருக்கிறது என்பதை அவர்  தொடர்ந்து கூறியிருக்கிறார்.

Doubt cast on Modi's quest to find India's black money overseas ...

தேசிய துயரங்களின் போது டெல்லி பல்கலைக்கழக ஊழியர்கள் அடிக்கடி உதவிகளை (நிதி அல்லது வேறு வடிவத்தில்) வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கின்ற டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்,  எவ்வாறாயினும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து பிஎம்-கேர்ஸுக்கு நிதியை திருப்பி விடுவதற்கான தியாகியின் ஒருதலைப்பட்சமான முடிவு, ஊழியர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையில் உள்ள நம்பிக்கையை மீறுவதாகும் என்று கூறியிருக்கிறது.

’பிரதமரின் தேசிய நிவாரண நிதி அல்லது முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கங்கள் மூலமாகவோ அல்லது துணைவேந்தர் நிவாரண நிதியின் மூலமாகவோ (தற்போது நடந்திருப்பதைப் போல) நாங்கள் தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகின்றோம். ஊழியர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை காரணமாக, பெரும்பாலான நேரங்களில் இது வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறது. தற்போது இந்த வெளிப்படைத்தன்மை மீறப்பட்டுள்ளது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று  முறையீடு செய்யப்பட்டு விட்டு, அதற்கு மாறாக, இப்போது பிஎம்-கேர்ஸ் நிதிக்கு அதை பல்கலைக்கழகம் வழங்கியிருப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.  இதுபோன்ற தவறான வழிநடத்துதல்கள் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து எங்களிடம் இருக்கின்ற  நம்பிக்கையை உலுக்கியிருக்கின்றன. ஊழியர்களின் பங்களிப்புகள் பிஎம்-கேர்ஸுக்கு அனுப்பப்படும் என்று ஏன் முன்னரே தெரிவிக்கப்படவில்லை? பிரதமரின் தேசிய நிவாரண நிதி என்ற பேரால் பங்களிப்புகள் ஏன் சேகரிக்கப்பட்டன? பங்களிப்புகள் எந்த அமைப்பின் பெயரில் கோரப்பட்டனவோ, அந்த அமைப்பிற்கே வழங்கப்பட்டதா என்பதை குறைந்த பட்சம் அறிந்து கொள்வதற்கு அனைத்து ஊழியர்களுக்கும் உரிமை இருக்கிறது என்று டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறியுள்ளது.

பின்னணி

2020 மார்ச் 29 நாளிட்ட கடிதத்தின் மூலம், அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களும் ஒரு நாள் சம்பளத்தை, தன்னார்வ பங்களிப்பாக பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்குமாறு பதிவாளர்  வலியுறுத்தியதிலிருந்து இந்த சர்ச்சை ஆரம்பிக்கிறது. ஊழியர்களிடமிருந்து தன்னார்வ பங்களிப்புகளை மட்டுமே அந்தக் கடிதம் வலியுறுத்தியிருந்த போதிலும், பல கல்லூரிகள் அதைக் கட்டாயமாக்கியதாகக்  கூறப்படுகிறது என்று சில ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

No.Estab.II (i) / 27 / VC RF / 2020

நாள்: 29.03.2020

பெறுநர்  புலங்களின் தலைவர்கள்/ துறைத் தலைவர்கள் / இயக்குநர்கள் / டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளின் முதல்வர்கள்

பொருள் : கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப்  போராட பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு பங்களிப்பு செய்வது..

ஐயா / அம்மையீர்,

கோவிட்-19 பரவலால் எழுந்துள்ள உலகளாவிய தொற்றுநோய்  முன்னெப்போதுமில்லாத வகையில் மனிதகுலத்திற்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நெருக்கடிக்கு நம் நாடும் விதிவிலக்கல்ல. நமது நாட்டின் குடிமக்களின் கஷ்டங்களைத் தணிக்க இந்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் ஏற்கனவே மக்கள்நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சரியான மருத்துவ தலையீட்டால் நோய் பரவலை முடிந்தவரை கட்டுப்படுத்த மருத்துவ சகோதரர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்கள். .

உயர்நிலை நிறுவனமான டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள அனைவரின் முயற்சிகளையும் மிகவும் பாராட்டுகிறோம். மேலும் குறிப்பாக நம் நாட்டிலிருந்து, மற்றும் உலகளாவி கோவிட்-19 அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கம் அவ்வப்போது எடுக்கும் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளிக்கிறோம்.

அதிகரித்து வரும் சூழ்நிலையை எதிர்த்துப் போராடுவதற்கும், இந்த கடினமான காலகட்டத்தில் உதவி தேவைப்படுகின்ற சக குடிமக்களுக்கு உதவுவதற்குமான முயற்சிகளுக்காக இந்திய அரசாங்கத்திற்கு மிகாதிக அளவிலான நிதி ஆதாரங்கள் தேவைப்படும். எனவே  பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளத்தை வழங்குமாறு எனது சகாக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் அளித்துள்ள வேண்டுகோள் கடிதத்தின் நகல் தகவலுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு தன்னார்வ பங்களிப்பை வழங்குவதற்காக, ஊதியத்திலிருந்து எதைய்ம் பிடிக்க வேண்டாம் என்று தனிப்பட்ட அறிவிப்பை அளிப்பவர்களைத் தவிர, பிற டெல்லி பல்கலைக்கழக ஊழியர்களின் 2020 மார்ச் மாத சம்பளத்திலிருந்து ஒரு நாள் சம்பளத்தை (அடிப்படை  ஊதியம் பிளஸ்  டி.ஏ) கழிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒரு நாள் சம்பளத்தைப் பிடிக்க வேண்டாம் என்று கூற விரும்புபவர்கள்  பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் 02.04.2020 மாலை 5:00 மணிக்குள் தங்களுடைய விருப்பத்தை அனுப்பலாம்.

வடக்கு வளாகம் மின்னஞ்சல் முகவர்
ஆசிரியர்கள் [email protected]
ஆசிரியர்கள் அல்லாதவர்கள் [email protected]
தெற்கு வளாகம்
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் [email protected]

soaccount@south.du.ac.in

 

 

-2-

1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 (ஜி)இன் கீழ், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கப்படும் பங்களிப்புகளுக்கு, வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து 100% விலக்கு, அவ்வாறான வரி விலக்கு சலுகைகளைப்  பெறத் தகுதியான வரி செலுத்துவோருக்கு அறிவிக்கப்பட்டிருப்படதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

பல்கலைக்கழகத்தின் சார்பில் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ஒட்டுமொத்த பங்களிப்பை வழங்குகின்ற வகையில், கல்லூரிகளின் முதல்வர்கள் துணைவேந்தர் நிவாரண நிதியில் தங்கள் பங்களிப்புகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவாளர், டெல்லி பல்கலைக்கழகம் என்ற பெயரைக் குறிப்பிட்டு கணக்கு எண் 10851298468, எஸ்பிஐ, டெல்லி பல்கலைக்கழக கிளை, ஐஎஃப்எஸ்சி: எஸ்.பி.ஐ.என் 0001067க்கு, டெல்லி பல்கலைக்கழக நிதி அலுவலருக்கு அறிவிப்பு அளித்து, கல்லூரிகளின் பங்களிப்பு ஆன்லைன் மூலமாக மாற்றப்படலாம்.

தங்கள் உண்மையுள்ள

பதிவாளர் (பொறுப்பு)

இணைப்பு : மேலே குறிப்பிட்டள்ளவாறு

’டெல்லி பல்கலைக்கழகத்தின் பல கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களால், தவறாமல் தங்கள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளவே முடிவதில்லை. இவ்வாறு நன்கொடை அளிப்பது அவர்களைப் பொறுத்தவரை மிகவும் கடினமாக இருக்கிறது என்றாலும், பெரும்பாலான கல்லூரி நிர்வாகங்கள் பல்கலைக்கழகப் பதிவாளரின் பரிந்துரையை ஒரு உத்தரவு என்பது போல எடுத்துக் கொண்டனர்’ என்று டெல்லி பல்கலைக்கழக தெற்கு வளாகத்தில் பணிபுரிந்து வருகின்ற உதவிப் பேராசிரியர்  ஒருவர் தெரிவித்தார்.

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களை நிர்வகித்து வருகின்ற பல்கலைக்கழக மானிய குழு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கடிதத்தை அனுப்பிய அடுத்த நாள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டுமென்று பல்கலைக்கழகப் பதிவாளரின் அறிவுறுத்தல் வெளியானது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் டி.பி. சிங்கின் கடிதம் 2020 மார்ச் 28 அன்று, பிஎம்-கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்ட நாளில் வெளியிடப்பட்டது என்றாலும், அந்த நிதி அப்போது  செயல்படத் தொடங்கியிருக்கவில்லை.

பேராசிரியர் . D. P. சிங்

தலைவர்

பல்கலைக்கழக மானிய குழு (மனித வள மேம்பாட்டு அமைச்சகம்,இந்திய அரசு)

பகதூர் ஷா ஜாபர் மார்க், புது டெல்லி -110002

2020 மார்ச் 28

வேண்டுகோள் : கோவிட்-19 உடன் போராடுவதற்கான பங்களிப்புக்காக

அன்புள்ள சகாக்களே

கோவிட்-19 தொற்றுநோயால் இதற்கு முன்னேப்போதுமில்லாத  காலங்களை நமது நாடும் ஒட்டுமொத்த உலகமும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இந்த வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்கவும், கோவிட்-19 தொற்றுநோய்.தடுப்பு மற்றும் அதற்கு எதிராகப் போரிடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்துகின்ற வகையில் நிதி பங்களிப்பு செய்ய முன்வருவதிலும் கல்வி நிறுவனங்களாக நமக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.  

பல்கலைக்கழக மானியக் குழு பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பள பங்களிப்பை வழங்க முடிவு செய்துள்ளது. தங்கள் நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத சக ஊழியர்களை இந்த உன்னத நோக்கத்திற்காக முன்வந்து பங்களிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டுமென்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் நிறுவனங்களின் இயக்குநர்கள் / கல்லூரி முதல்வர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த தாழ்மையான பங்களிப்பு, நெருக்கடியின் தற்போதைய தருணங்களில் மனிதகுலத்திற்குச் சேவை செய்வதற்கு அதிக பயனளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்த சவாலான நேரத்தில் நமது நாட்டு மக்கள் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காக நாம் ஒன்றாக இணைந்து நிற்போம்.

வாழ்த்துக்கள்.

பேராசிரியர் டி. பி. சிங்

தலைவர்

இருப்பினும், சில நாட்களுக்குள்ளாகவே பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்குப் பதிலாக பிஎம்-கேர்ஸுக்கு தங்களுடைய பங்கை அளிக்குமாறு மத்திய பல்கலைக்கழக ஊழியர்களைக் கேட்டுக்கொண்டு, பல்கலைக்கழக மானியக் குழு நன்கொடைகளுக்கான தனது வேண்டுகோளை கமுக்கமாக மாற்றியமைத்தது.

மார்ச் 28 அன்று அனுப்பப்பட்ட முதல் வேண்டுகோளுக்குப் பிறகு,மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு மின்னஞ்சல்களை அனுப்பியதாக தி டெலிகிராப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அதனை உறுதிப்படுத்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் டி.பி.சிங் அந்த பத்திரிகையிடம், ’எனது வேண்டுகோளில், பல்கலைக்கழக மானியக் குழு ஊழியர்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், கோவிட்-19க்கு எதிரான போராட்டத்திற்காக நன்கொடை வழங்குமாறு பல்கலைக்கழக ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவித்திருந்தேன். பிஎம்-கேர்ஸ் நிதி அதற்குப் பின்னரே தொடங்கப்பட்டது’ என்று கூறினார்.

DU Teachers Allege VC Diverted Rs 4-Crore Staff Donations From PMNRF to PM CARES
Delhi University Vice-Chancellor Yogesh Tyagi. Photo: du.ac.in

பிஎம்-கேர்ஸுக்கு நிதியைத் திருப்பிவிடுவது என்ற டெல்லி பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஒருதலைப்பட்சமான முடிவு, பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த சுற்றறிக்கைக்கு முரணாக  இருக்கிறது. பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்குப் பதிலாக பி.எம்-கேர்ஸுக்கு பங்களிப்புகளை வழங்க பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு அழுத்தம் கொடுத்ததில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பங்கு இருப்பது தெளிவாகிறது.

பெயர் தெரிவிக்க விரும்பாத டெல்லி பல்கலைக்கழக அதிகாரி தி ஹிந்துவிடம் பேசிய போது, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே, துணைவேந்தர் தனது முடிவை மாற்றிக் கொண்டார் என்றார். ’டெல்லி பல்கலைக்கழகப் பதிவாளரின் வேண்டுகோள் வெளியான பின்னர், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து தகவல் வரப் பெற்றோம். பணத்தை பி.எம்-கேர்ஸுக்கு அனுப்பும்படி நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டோம்’ என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 4.04 கோடி ரூபாய் புதிய நிதிக்கு மாற்றப்பட்டது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். .

பல்கலைக்கழக கல்விப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் சாய்கத் கோஷ், கல்வி சமூகத்தின் பெரும் பகுதியினர் அந்த நிதி இவ்வாறு திசைதிருப்பப்பட்டதில்  மிகவும் சங்கடம் அடைந்துள்ளனர் என்று கூறினார். ’பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நாங்களாக முன்வந்து பங்களித்த பின்னர், பணத்தை பி.எம்-கேர்ஸுக்கு திருப்பிவிட துணைவேந்தர் எடுத்த முடிவு ஒருதலைப்பட்சமானது மட்டுமல்ல, நேர்மையற்றதுமாகும்.

நன்கொடைகளை புதிய நிதிக்கு அனுப்ப வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அல்லது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரைத்த புதிய உத்தரவுகள் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்திருக்கலாம், ஆனால் துணைவேந்தர் அதனை உத்தரவு போல பின்பற்றியுள்ளார்’ என்றார்.

இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் தியாகியின் பதிலைப் பெற முடியவில்லை.

1948ஆம் ஆண்டு பேரழிவுகளைச் சமாளிப்பதற்கான நோக்கத்துடன் துவங்கப்பட்ட பிரதமரின் தேசிய நிவாரண நிதியை மாற்றி, பிஎம்-கேர்ஸை உருவாக்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பெரும் பகுதியினரின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.

பிஎம்-கேர்ஸ் என்பது பொது தணிக்கைகளுக்கு உட்படுத்தப்படாத, தன்னார்வ தொண்டு நிறுவனங்களைப்  போன்ற தொண்டு நிதியாகும். பொது அறக்கட்டளைகளைப் போல அதைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த புதிய நிதி அரசியலமைப்பு சார்ந்த எந்த அமைப்பாலும் நிர்வகிக்கப்படுவதாக இருக்கவில்லை.

இந்த நிதிக்கு தலைமை தாங்கும் பிரதமரைத் தவிர, மற்ற மூன்று அறங்காவலர்களில் எவரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கவில்லை. பல கோடி ரூபாயை நன்கொடைகளாகக் கையாளுகின்ற நிதியானது, மிகவும் பலவீனமான சட்ட அடித்தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே இருந்து வருகின்ற பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் செயல்பாடுகள் மிகவும் வெளிப்படையானவை. அது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசாங்க நிதியாகும்.

https://thewire.in/rights/delhi-university-covid-19-donation-pmcares-yogesh-tyagi

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *