ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து எப்படி நிதிகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன? - சவெரா (தமிழில்: ச.வீரமணி) | RSS Organisations and Foreign Funding: An Investigative Report Article in Tamil | www.bookday.in

ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து எப்படி நிதிகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன? – சவெரா (தமிழில்: ச.வீரமணி)

ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து எப்படி நிதிகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன?

– சவெரா (தமிழில்: ச.வீரமணி)

ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கும் இரண்டு பெரிய அமைப்புகள் அமெரிக்காவின் லாப நோக்கமற்ற அமைப்புகளுக்கான சட்டங்களைப் பயன்படுத்தி, அவற்றை நன்கொடைகள் என்ற பெயரில் மறைத்து, இந்தியாவிற்குள் நிதிகளைக் கொண்டுவந்துகொண்டிருக்கின்றன என்று புலனாய்வு நிபுணர்கள் குழு ஒன்று வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஷ்டனைத் தளமாகக் கொண்ட ‘ஏகல் வித்யாலயா ஃபவுண்டேஷன் ஆஃப் யுஎஸ்ஏ’ (Ekal Vidyalaya Foundation of USA) என்னும் அமைப்பும், ‘சேவா இண்டர்நேஷனல்’ (Sewa International) என்ற அமைப்பும் 2020 முதல் 2024 வரையிலான வரி ஆவணங்களை ஆய்வு செய்து இவ்வாறு விவரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன.

இந்தக் காலகட்டத்தில், அமெரிக்காவில் உள்ள நன்கொடையாளர்களிடமிருந்து 48.4 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் 380 கோடி ரூபாய்க்கும்) அதிகமான பங்களிப்புகளையும் மானியங்களையும் பெற்றதாக ‘ஏகல் யுஎஸ்ஏ’ (Ekal USA) தெரிவித்துள்ளது. [2020-2024 வரையிலான காலத்திற்கு, 1 அமெரிக்க டாலருக்கு 78.58 இந்திய ரூபாய் என்ற சராசரி மாற்று விகிதம் கணக்கீட்டிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.] ‘ஏகல் யுஎஸ்ஏ’-வின் ‘படிவம் 990′ (Form 990) ஆவணங்களை ஆய்வு செய்ததில், அந்த அமைப்பு 33.7 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் 265 கோடி ரூபாயை) இந்தியாவில் உள்ள ‘ஏகல் வித்யாலயா’ (Ekal Vidyalaya) அமைப்பிற்கு அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தொகை இந்தியாவில் பள்ளிகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல், ’சேவா யுஎஸ்ஏ’ (Sewa USA) அமைப்பு 2020 முதல் 2024 வரை சுமார் 69.4 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் 545 கோடி ரூபாயை) பங்களிப்புகளாகவும் மானியங்களாகவும் பெற்றுள்ளது. அதன் செலவு அறிக்கைகளின்படி, ‘சேவா யுஎஸ்ஏ’ 29.7 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் 233 கோடி ரூபாயை) இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கு அனுப்பியுள்ளது. மேலும், சுமார் 622,613 அமெரிக்க டாலர் (சுமார் 5 கோடி ரூபாய்) அமெரிக்காவில் உள்ள பெறுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா அல்லது தெற்காசியாவிற்கு அனுப்பப்பட்ட இந்த நிதி, ஆர்எஸ்எஸ்-உடன் தொடர்புடைய இந்திய தொண்டு நிறுவனமான ‘சேவா பாரதி’ (Sewa Bharti)-க்குச் சென்றதா என்பது அந்த ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவ்வாறே நடந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

உலகளாவிய புலனாய்வு இதழியல் வலையமைப்பின் (Global Investigative Journalism Network) ஒரு பகுதியாக, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்தைத் தளமாகக் கொண்டு செயல்படும் பெல்லிங்காட் (Bellingcat) என்னும் அமைப்பு இந்த விசாரணையை மேற்கொண்டது.

இந்த விசாரணை, 2500க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொடர்புடைய அமைப்புகளின் மர்மமான வலையமைப்பு குறித்த கூடுதல் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. இவற்றில் 260 அமைப்புகள் 39 வெளிநாடுகளில் அமைந்துள்ளன. இது குறித்து ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ 2026 ஜனவரி 4 இதழில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருக்கிறோம். அமெரிக்காவிலேயே இதுபோன்ற 107 துணை அமைப்புகள் உள்ளன. அந்த முந்தைய ஆய்வில் குறிப்பிட்டபடி, அமெரிக்காவின் மேரிலாந்தை தளமாகக் கொண்ட, வரிவிலக்கு பெற்ற, இலாப நோக்கற்ற அமைப்பான ‘இந்தியா வளர்ச்சி மற்றும் நிவாரண நிதியம்’ (India Development and Relief Fund) போன்ற ஆர்எஸ்எஸ்-இன் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பல துணை அமைப்புகள், இந்தியாவில் உள்ள பல்வேறு ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகளுக்கு நிதி ஆதாரங்களாக உள்ளன. இந்தியா வளர்ச்சி மற்றும் நிவாரண நிதியம், சேவா பாரதி, ஏபிவிபி, வன்வாசி கல்யாண் ஆசிரமம் போன்ற நாடு தழுவிய அளவில் இயங்கும் அமைப்புகள் மட்டுமின்றி, நாடு முழுவதும் பரவியுள்ள பல சிறிய அரசு சாரா நிறுவன அமைப்புகளையும் உள்ளடக்கி குறைந்தது 200 நிறுவனங்களுடன் தொடர்புடையன. அதேபோல், விஸ்வ ஹிந்து பரிஷத் யுஎஸ்ஏ-உடன் இணைந்த ‘சப்போர்ட் எ சைல்ட் யுஎஸ்ஏ’ (Support a child USA) என்ற அமைப்பும், இந்தியாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கக்கூடிய மற்றொரு அமைப்பாகும்.

அநாமதேய நன்கொடையாளர்கள்

பெல்லிங்கேட் அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று, நிதியின் ஒரு பகுதி வெளிப்படுத்தப்படாத ஆதாரங்களிலிருந்து வருகிறது (undisclosed sources) என்பது ஆகும். ‘ஏகல் ஃபவுண்டேஷன் யுஎஸ்ஏ’ திரட்டிய மொத்த நிதியில், குறைந்தது 8.3 மில்லியன் டாலர் (சுமார் 65 கோடி ரூபாய்) ‘நன்கொடையாளர் ஆலோசனை நிதியம்’ (Donor Advised Fund – DAF) மானியங்கள் மூலம் பெறப்பட்டவை என்று புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ‘சேவா யுஎஸ்ஏ’ (Sewa USA) அமைப்பிற்கு வழங்கப்பட்ட மானியங்கள் குறித்த ஆவணங்களின்படி, குறைந்தது 16 மில்லியன் டாலர் (சுமார் 126 கோடி ரூபாய்) இத்தகைய ‘நன்கொடையாளர் ஆலோசனை நிதியத்’லிருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. ‘நன்கொடையாளர் ஆலோசனை நிதியத்’தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த முறையைப் பயன்படுத்தும் அமைப்புகள் நன்கொடைகள் எவரிடமிருந்து வந்தவை என்று வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும், நன்கொடையாளர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து, அநாமதேயமாக இருக்கவும் முடியும்.

அறிக்கையின்படி, அமெரிக்காவில் வரிச் சலுகை அல்லது நன்மைகளைப் பெற்றுக்கொண்டு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க விரும்பும் மக்களுக்கு, ‘நன்கொடையாளர் ஆலோசனை நிதியம்’ (Donor Advised Fund) ஒரு பொதுவான வழிமுறையாகும். நன்கொடையாளர்கள் தாங்கள் நன்கொடை அளித்தவுடன் அந்தப் பணத்தின் மீது கட்டுப்பாடு கொண்டிருப்பதில்லை, ஆனால் அந்தப் பணம் இறுதியில் எந்தத் தொண்டு நிறுவனங்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று ஆலோசனை வழங்கலாம். இந்த நிதிகள், இலாப நோக்கற்ற ஆதரவு அமைப்புகளால் சட்டப்பூர்வமாகப் பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. பொதுத் தொண்டு நிறுவனங்களாக, ‘நன்கொடையாளர் ஆலோசனை நிதியம்’ ஆதரவு அமைப்புகள், தங்கள் நன்கொடையாளர்களின் சார்பாக வழங்கும் மானியங்களின் தொகைகள் மற்றும் பெறுநர்களைத் தங்களின் படிவம் 990-களில் விவரிக்கின்றன.

“மற்ற தொண்டு நன்கொடைகளைக் காட்டிலும் ‘நன்கொடையாளர்-ஆலோசனை நிதியம்’ மானியங்கள் குறைவான ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுகின்றன என்றும், குறிப்பிட்ட பெறுநர்களுக்கான நன்கொடைகளைக் கட்டுப்படுத்துவதா அல்லது அனுமதிப்பதா என்பது குறித்து ‘நன்கொடையாளர் ஆலோசனை நிதியத்தின்’ ஆதரவு அமைப்புகளுக்கு விருப்ப அதிகாரம் உள்ளது” என்றும் ஆராய்ச்சியாளர்களிடம் நிபுணர்கள் கூறியதை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

“நன்கொடையாளர் ஆலோசனை நிதியத்தைப் பொறுத்தவரை, அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை (IRS) அமைப்பின் கண்காணிப்பு குறைவாகவே உள்ளது. ஏனெனில், இவை தனியார் அறக்கட்டளைகளாகக் கருதப்படாமல், பொது அறக்கட்டளைகளாகக் கருதப்படுகின்றன” என்று சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் சாமுவேல் பிரன்சன் கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஒரு தனியார் அறக்கட்டளை இந்தியாவில் உள்ள அமைப்புகளுக்கு நிதி வழங்கினால், அது சற்று சிக்கலான விஷயமாக இருக்கலாம். ஆனால், அதுவே ஒரு பொது அறக்கட்டளையாக (public charity) இருந்தால், அமெரிக்காவில் வரி விலக்கு பெற்ற அந்த அமைப்பு வழங்கும் நிதி அதன் அறப்பணி நோக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கும் வரை, அதன் மீது பெரிய அளவிலான கண்காணிப்பு எதுவும் இருப்பதில்லை.”

நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகவும், இலாப நோக்கமற்ற அமைப்புகள் குறித்த நிபுணராகவும் இருக்கும் லாயிட் ஹிதோஷி மேயர், ‘பெல்லிங்கேட்’ ஊடகத்திடம் கூறுகையில், அமெரிக்காவில் 501(c)(3) வரி விலக்கு அந்தஸ்து கொண்ட லாப நோக்கமற்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி, நற்பணிகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது என்று “மறுக்க முடியாத வகையில் ஊகிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

‘நன்கொடையாளர் ஆலோசனை நிதியத்தை’ நிர்வகிக்கும் 34 அமைப்புகளிடமிருந்து, ‘ஏகல் யுஎஸ்ஏ’ (Ekal USA) மற்றும் ‘சேவா யுஎஸ்ஏ’ (Sewa USA) ஆகிய அமைப்புகள் குறைந்தது 24.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 192 கோடி ரூபாயை) பெற்றுள்ளன என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது, குறிப்பிட்ட காலப்பகுதியில் அந்த அமைப்புகள் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட மொத்தம் 117.8 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 926 கோடி ரூபாய்) அளவிலான நன்கொடைகள் மற்றும் மானியங்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் மேலாகும் (20.7 சதவீதம்).

‘நன்கொடையாளர் ஆலோசனை நிதியம்’ மூலமான உண்மையான தொகை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று அந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கிறது. ஏனெனில், இந்த ஆய்வில் முழுமையான ஆண்டுகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டன, அதே சமயம் “குறிப்பிட்ட காலத்திற்கு வெளியே பகுதி ஆண்டுகளை உள்ளடக்கிய தாக்கல் விவரங்கள் – உதாரணமாக, ஜூன் 2019 முதல் ஜூன் 2020 வரையிலானவை – இதில் சேர்க்கப்படவில்லை”.

அமெரிக்காவில் இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கும், இந்தியாவில் இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கும் இடையே தெளிவான தொடர்புகள்

ஒருபுறம் ஏகல் யுஎஸ்ஏ மற்றும் சேவா யுஎஸ்ஏ-வுக்கும், மறுபுறம் இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ்-க்கும் இடையே தெளிவான மற்றும் மறுக்க முடியாத தொடர்புகள் உள்ளன என்பதை பெல்லிங்காட் அறிக்கை மிகுந்த சிரத்தையுடன் நிலைநாட்டுகிறது. இந்த முயற்சி இந்திய வாசகர்களுக்கு மிகையாகத் தோன்றலாம். ஆனால் ஆய்வாளர்கள் அமெரிக்க வாசகர்களை இலக்காகக் கொண்டுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பரந்த வலையமைப்பு குறித்தோ, அல்லது இந்தியாவில் அதன் செயல்பாடுகள் குறித்தோ அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

‘ஏகல் யுஎஸ்ஏ’ அமைப்பின் இணையதளத்தின்படி, “உலகெங்கும் பரவியுள்ள இந்திய வம்சாவளியினரைச் சென்றடைதல்” மற்றும் “ஒரு லட்சம் கிராமங்களுக்கு ‘ஏகல்’ அமைப்பின் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல்” ஆகிய இலக்குகளை நோக்கமாகக் கொண்டு, 2001ஆம் ஆண்டில் இது தொடங்கப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத் ஆஃப் அமெரிக்கா (‘Vishwa Hindu Parishad of America’-VHPA) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷியாம் திவாரி, ‘பெல்லிங்காட்’ நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், ‘ஏகல் யுஎஸ்ஏ’ என்பது 1990களின் பிற்பகுதியில், விஷ்வ இந்து பரிஷத் ஆஃப் அமெரிக்காவின் ஒரு திட்டமாகத் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது ஒரு சுதந்திரமான அமைப்பாக மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்த அறிக்கையின்படி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கடந்த பல ஆண்டுகளாக-2014-ஆம் ஆண்டு முதல் மிக அண்மையில் மே மாதம் வரை-இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு ‘ஏகல் வித்யாலயா’ நிகழ்வுகளில் கலந்துகொண்டு, இந்த முன்னெடுப்பை ஊக்குவித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், இந்தக் கிளை விஷ்வ இந்து பரிஷத்தின் அமெரிக்கக் கிளையாகும். இந்த அமைப்பு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஓர் அங்கமாகவே அறியப்படுகிறது. ஆர்எஸ்எஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்துக்களை ஒருங்கிணைப்பதற்காகவும், “தெரிந்தோ அல்லது தெரியாமலோ பிற மதங்களுக்கு மாற்றப்பட்ட, ஆனால் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்ப விரும்பும் நபர்களை மீண்டும் இணைப்பதற்காகவும்” விஷ்வ இந்து பரிஷத் தொடங்கப்பட்டது.

ஏகல் வித்யாலயா இயக்கம் என்பது, சகிப்பின்மை, சிறுபான்மையினர் மீதான பகைமை, பிராமண மேலாதிக்கத்திற்கான ஆதரவு மற்றும் தீவிர தேசியவாதம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா கொள்கையைப் பரப்பும் ஒரு கருவியாகும். “முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ‘இந்து மதத்தின் எதிரிகள்’ என்பது உட்பட, இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மற்றும் நலிவடைந்த இலட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இந்து தேசியவாத சித்தாந்தத்தைப் புகட்ட இந்தப் பள்ளிகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்காக ஏகல் வித்யாலயா விமர்சிக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஆய்வாளர்கள் அனுப்பிய கருத்துக்கான பல கோரிக்கைகளுக்கு இந்தியாவில் உள்ள ஏகல் வித்யாலயா பதிலளிக்கவில்லை.

சேவா யுஎஸ்ஏ

ஆய்வு அறிக்கையின்படி, ஹூஸ்டனைத் தளமாகக் கொண்ட ’சேவா யுஎஸ்ஏ’ (Sewa USA), தன்னை ஓர் “இந்து நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட, மனிதாபிமான, இலாப நோக்கமற்ற சேவை அமைப்பு” என்று கூறிக்கொள்கிறது. மேலும், இந்தியாவில் இயங்கும் தொண்டு நிறுவனமான ’சேவா இன்டர்நேஷனல்’ (Sewa International)-இன் இணையதளத்தில், இது “சேவா இயக்கம்” (Sewa Movement) என்ற தலைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ்-இடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் தங்களது வழக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து, சேவா யுஎஸ்ஏ-வின் மக்கள் தொடர்பு துணைத் தலைவர் ராகி இஸ்ரானி, பெல்லிங்காட்டுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், தங்கள் அமைப்பு “ஆர்எஸ்எஸ்-இன் ஒரு கிளையாகவோ அல்லது இணை அமைப்பாகவோ செயல்படவில்லை அல்லது அதன் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இது, ஆர்எஸ்எஸ்-இன் நன்கு அறியப்பட்ட ஒரு முன்னணி அமைப்பான சேவா பாரதியுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். ஆர்எஸ்எஸ் வலைத்தளமானது, அதன் பிரதான வழிசெலுத்தல் பட்டியில் உள்ள “சேவா” எனக் குறிக்கப்பட்ட ஒரு பகுதி வழியாக சேவா பாரதியின் பிரதான வலைத்தளத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்எஸ்எஸ்-இன் ஆண்டு அறிக்கைகளிலும் சேவா பாரதி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ்/பாஜகவின் திசைதிருப்பும் தந்திரங்கள்

இந்தியாவில், மோடி அரசும், மோடியின் வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பும், நாட்டின் கோபமும் அமைதியின்மையும் கொண்ட மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன. பல ஆண்டுகால பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, பெரும் பணக்காரர்களுக்கும் மற்ற மக்களுக்கும் இடையே வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வு, முஸ்லீம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் எதிராக நச்சுத்தனமான வெறுப்பைப் பரப்புதல், ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்துதல், அரசமைப்புச்சட்டத்தை சிதைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசின் தீவிரமான ஆர்எஸ்எஸ் தலைமையிலான செயல்திட்டம் ஆகியவை இந்த அதிருப்தியைத் தூண்டுகின்றன. தில்லி மற்றும் பிற இடங்களில் நடந்த போராட்டங்களில் காணப்படுவது போல, இந்த அதிருப்தி சமீபத்தில் ஒரு பெரும் எழுச்சியைக் கண்டுள்ளது. இதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப ஆர்எஸ்எஸ்/பாஜக முயற்சிக்கும் வழிகளில் ஒன்று, நாட்டில் ‘அராஜகத்தைப் பரப்புவதற்காக’ எதிர்க்கட்சிகளுக்கும் மற்ற போராட்டக்காரர்களுக்கும் ‘வெளிநாட்டு சக்திகள்’ நிதியுதவி செய்வதாகக் குற்றம் சாட்டுவதாகும். பாஜக தலைவர் நிதின் நபின் மற்றும் பாஜகவின் பல தீவிர ஆதரவாளர்கள் சமீபகாலமாக இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். பெல்லிங்கேட் அறிக்கை ஒரு யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்துகிறது. அதாவது, ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள்தான் உண்மையில் வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெறுகின்றன. ஆர்எஸ்எஸ்-ஆல் இரகசியமாக நடத்தப்படும் வலையமைப்பின் ஒரு சிறு பகுதியை மட்டுமே இந்த அறிக்கை கையாண்டாலும், இது ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் சூழ்ச்சிகள் குறித்த ஒரு சரியான நேரத்தில் வெளிப்பட்ட பார்வையை வழங்குகிறது.

‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ அக்.18, 2026

***********************************************

📚 எழுதியவர் : 

சவெரா
தமிழில்: ச.வீரமணி

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *